எங்கே எனது கவிதை

 

கல்லூரியில் முதலாம் ஆண்டு அடி எடுத்து வைத்திருந்த ஹாசினிக்கு வாழ்க்கை வண்ணமயமாகத் தோன்றியது.

பள்ளிப்பருவம் முடிந்து ஆரம்பித்த இந்த வாழ்க்கை சிறகடித்துப் பறப்பது போல் அவளை உணரச் செய்தது. இனி யாரும் எவ்வளவு மார்க் வாங்கியிருக்கிறாய்… இந்த வருடம் பாஸாகி விடுவாயா போன்ற கேள்விகளை எல்லாம் கேட்டு தொல்லை பண்ண மாட்டார்கள்.

‘ஷ்… அப்பா… இந்த ப்ளஸ்-டூ முடிப்பதற்குள் தான் எத்தனை தொல்லை? படி படி என்று ஒரு பக்கம் உயிரை வாங்குவது மட்டுமில்லாமல்… அங்கே டியூசன் போனால் நல்ல மார்க் வாங்கலாம், இல்லையில்லை இங்கே போ… அது தான் பெஸ்ட் என்று ஆளாளுக்கு இலவசமாக அட்வைஸ் செய்து நம்மை ஒரு வழி ஆக்கி விடுவார்கள். ஓடி களைத்து வரும் என் போன்ற மாணவர்களுக்கு கல்லூரி தான் சொர்க்க பூமி!’ என்று எண்ணி குதூகலித்தாள்.

குறுகிய காலத்திலேயே நல்ல நட்பு வட்டம் அமைந்து, மகிழ்ச்சியாக கல்லூரிக்கு சென்று வந்து கொண்டிருந்தாள் ஹாசினி.

அவளுக்கு பிடித்த பாடம் கணிதம் தான், பக்கம் பக்கமாக தியரி எழுதுவதை விட கால்குலேஷினில் ஸ்ட்ராங்காக இருந்து விட்டால் போதும், கணிதம் மிகவும் சுலபமான பாடம் என்று கல்லூரியிலும் அதை தான் பேச்சுலர் டிகிரியில் எடுத்திருந்தாள்.

பிடித்த பாடங்கள், நண்பர்கள் என்று சென்று கொண்டிருக்கும் பொழுது தான் அவள் மனதை பாதிக்கின்ற விஷயமாக ஒன்று நடந்தது.

தோழிகள் அனைவரும் மதிய இடைவேளையில் ஒன்றாக அமர்ந்து கேலிப் பேசிக் கொண்டிருக்கும் பொழுது தான் அப்பேச்சு வந்தது, அதாவது எதிர்கால கணவரைப் பற்றிய தங்களின் கனவுகளை பகிர்ந்துக் கொள்ள ஆரம்பித்தார்கள்.

இவள் உட்பட ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக தங்கள் எதிர்பார்ப்புகளை சொல்ல, ஒருத்தி மட்டும் லேசாக வாடிப் போய் தெரிந்தாள்.

என்னவென்று விசாரித்ததற்கு, “இல்லை… எனக்கு அக்கா ஒருவள் இருக்கிறாள், அவளுக்கு வயது இப்பொழுது இருபத்தியெட்டு. எனக்கும் அவளுக்கும் கிட்டத்தட்ட பத்து வயது வித்தியாசம். அவளுடைய ஜாதகத்தில் தோஷம் இருப்பதால் வருகின்ற வரன்கள் எல்லாம் அமையாமல் தட்டிப் போகிறது. அவளை விட இரண்டு வயது சிறியவன் என் அண்ணன் தற்பொழுது காதல் திருமணம் செய்து கொண்டு அண்ணியை வீட்டிற்கு அழைத்து வந்து விட்டான். அது எங்களுக்கு சங்கடம் என்றால் அக்காவின் நிலை தான் இன்னும் பரிதாபம், தனக்கென்று ஒரு வாழ்க்கை அமையாதா என்ற ஏக்கத்தில் ஏனோதானோவென்று வேலைக்குச் சென்று வந்து கொண்டிருக்கின்றாள். அதையெல்லாம் பார்க்கும் பொழுது நம்மை மனதார நேசிக்கின்ற ஒருவர் வந்து காலாகாலத்தில் திருமணம் செய்துக் கொண்டால் போதும் என்று தோன்றுகிறது!” என்று பெருமூச்சு விட்டாள் அவள்.

அதை கேட்டு பையன் அப்படி இருக்க வேண்டும், இப்படி இருக்க வேண்டும் என்று அதிக எதிர்பார்ப்புகளை கூறியவர்கள் கூட, அவள் சொல்வது சரி தான் என்று ஆமோதித்தனர்.

ஹாசினியின் முகம் யோசனையில் வீழ்ந்தது.

‘திருமணம் மிகவும் வயது கடந்து தள்ளிப் போகிறது அல்லது திருமணமே நடக்காமல் போகிறது என்றால் ஒரு பெண்ணின் நிலை எப்படி இருக்கும்?’

அவளைச் சுற்றியுள்ளவர்கள், தான் தங்கள் குடும்பம் என்று சந்தோசமாக இருப்பார்கள். அவளை மருந்து கூட தங்கள் உலகில் சேர்த்துக் கொள்ள முயல மாட்டார்கள். தாங்கள் வாழ்கின்ற வாழ்க்கையை பார்த்து அவள் கண்திருஷ்டி பட்டுவிடும் என்று எதிலும் அவளை ஒதுக்கி வைக்கவே விரும்புவார்கள். ஆனால் தங்களுக்கென்று பணத்தேவை வரும்பொழுது மட்டும், அவளுக்கென்று குடும்பமா… குழந்தையா… தனியாக இருக்கின்ற அவள் தங்களுக்கு பணம் தர வேண்டும் என்பதை மட்டும் உரிமையாக எதிர்பார்ப்பார்கள். கொஞ்சம் ஸ்டப்பார்ன் ஆன பெண்கள் என்றால் ஒரளவு சமாளித்து விடுவார்கள், மற்றவர்கள் அவர்களின் போலியான பாசத்திற்கு அடங்கி தான் போவார்கள். இதில் ஒன்று மட்டும் உறுதி எப்படிப்பட்டவர்களாக இருந்தாலும் தாங்கள் ஆறுதலை தேடிக் கொள்ள ஆதரவின்றி தவிப்பார்கள். வயதான காலத்தில் போட்டி போட்டுக் கொண்டு பணத்திற்கு முன் நிற்கும் அனைவரும் பின்னே போய்விடுவார்கள். தங்கள் பெயரில் சொத்து சேர்த்து வைப்பவர்கள் மட்டும் சற்று பிழைத்துக் கொள்வார்கள்.

ஏதேதோ யோசனையில் இருந்தவளின் மனதில் ஒரு நெருடல் உண்டானது. இது வரை வாழ்ந்த வாழ்க்கையில் எல்லாம் சுயநலமாய் தோன்றியது.

மாலை சோர்வாக வீட்டை அடைந்த ஹாசினி, தன் அம்மாவை பார்த்தாள்.

எந்த கவலையுமின்றி எதையோ வாயில் போட்டு நொறுக்கி கொண்டு ஜாலியாக டிவி பார்த்துக் கொண்டிருந்தாள்.

‘இவளுக்கு எந்த ஒரு சிறு வருத்தமோ… பரிதாபமோ மனதின் மூலையில் கூட தோன்றாதா? நான் தான் சிறு பெண், இதுவரை அந்த உணர்வுகள் புரியவில்லை!’ என்று தவித்தவள் சென்று தன் அறையில் அடைந்து கொண்டாள். மனம் அமைதியின்றி அலைப்பாய துவங்கியது.’

இரவு எட்டு மணியை நெருங்கியதும், வேக வேகமாக நான்கு வீடு தள்ளி இருக்கும் தன் பாட்டி வீட்டிற்குச் சென்றாள்.

வீட்டில் யாரும் இருப்பதற்கான அடையாளம் இல்லாமல் அமைதியாக இருந்தது. ஆனால் கதவு திறந்திருக்கிறதே என்று உள்ளே சென்று பார்த்தால், சித்ரா டீ கலந்து கொண்டிருந்தாள்.

எதுவும் பேசாமல் அமைதியாக நிலையில் சாய்ந்து நின்று அவளை அளவெடுத்தாள் ஹாசினி.

மெலிந்த தேகம் முப்பத்தியாறு வயது நடக்கிறது, ஆனால் பார்ப்பவர்கள் முப்பதை தாண்டி சொல்ல மாட்டார்கள். நல்ல லட்சணமான முகம், இத்தனை வருட வேலை அனுபவம் உள்ளதால் வெறும் ப்ளஸ்-டூ என்றாலும் மாதம் பதினைந்தாயிரம் சம்பாதிக்கின்றாள்.

சித்ரா! வேறு யாருமில்லை, ஹாசினியின் பெரியம்மா… அதாவது அவளுடைய தாயின் மூத்த சகோதரி.

டீ கலந்து கொண்டு திரும்பியவள் அவளை அங்கே கண்டு ஆச்சரியமாகி, “ஹேய்… நீ எப்பொழுது வந்தாய்? பூனை போல் ஓசையின்றி வந்து நிற்கின்றாய்? சரி இந்தா டீயை பிடி, நான் வேறு கலக்குகிறேன்!” என்றாள் புன்னகையுடன்.

அவள் முகத்தையே கூர்ந்து பார்த்தாள் ஹாசினி, “என்ன இன்று அப்படி புதிதாக பார்க்கிறாய்?” என்றாள் கேலியோடு.

“இன்றைக்கு தான் எல்லாம் புரிகிறது, டீ வேண்டாம் குடித்து விட்டேன்!” என்று அவளிடம் மறுத்தபடி சென்று சேரில் அமர்ந்தாள்.

“ஏன்மா… என்ன பிரச்சினை? ஏன் இவ்வளவு டல்லாகத் தோன்றுகிறாய்? கல்லூரியில் ஏதாவது பிரச்சினையா?” என்று கவலையோடு விசாரித்தாள் சித்ரா.

“எங்கே மற்றவர்களை காணோம்?” என்றாள் அவள் கேள்விக்கு பதில் சொல்லாமல்.

ஹாசினியின் பாட்டி வீட்டில், அவளுடைய சித்தியின் குடும்பம் தாத்தா பாட்டியுடன் வசிக்கிறது. சித்ரா திருமணம் ஆகாத முதிர்கன்னி, வீட்டில் மூத்தவள்.

“ம்… இன்று ஏதோ புதுப்படம் ரிலீசாகிறது போலிருக்கிறது… நேற்றே அதற்கு போக வேண்டும் என்று எல்லோரும் பேசிக் கொண்டிருந்தார்கள், அநேகமாக அதற்கு போயிருப்பார்கள் என்று நினைக்கின்றேன்!”

“நீங்கள் போகவில்லையா?”

” ப்ச்… இன்ட்ரஸ்ட் இல்லை…” என்று தோள்களை குலுக்கியபடி டீயை அருந்தினாள் சித்ரா.

“உங்களுக்கு வேறு எதில் இன்ட்ரெஸ்ட் இருக்கிறது?” என்று அமைதியாக கேட்டாள் ஹாசினி.

ம்… என்று சற்று நேரம் யோசித்தவள், “ப்ச்… அப்படி எதுவும் தோன்றவில்லை!” என்றாள் சலிப்புடன்.

“இதை நான் எதிர்ப்பார்த்தேன்!”

“எதை?” என்று சித்ரா புருவம் சுருக்கினாள்.

“உங்கள் சலிப்பை… ஏன் என்றால் உங்களுக்கான வாழ்க்கையை நீங்கள் வாழ்ந்து கொண்டிருந்தீர்கள் என்றால் உங்களுக்கு வாழ்க்கையின் மீது சுவாரஸ்யம் இருக்கும். நீங்கள் தான் மற்றவர்களுக்காக வாழ்ந்து கொண்டிருக்கிறீர்களே… அப்புறம் எப்படி எதிலும் ஆர்வம் இருக்கும்? பார்ப்பவை எல்லாம் விரக்தியையும், சலிப்பையும் தான் தரும்!” என்றாள் நேரடியாக.

“ஹாசு…” என்று சித்ரா திகைப்பாய் பார்க்க.

“என்ன உண்மை திகைப்பை தருகிறதா? உங்களை சுற்றியுள்ளவர்கள் தாத்தா, பாட்டி, அம்மா, சித்தி என்று அனைவரும் தங்களின் சுயநலத்திற்காக உங்களை பயன்படுத்திக் கொண்டுள்ளார்கள்!” என்றாள் காட்டமாக.

“அதில் அவர்கள் தவறு எங்கிருந்து வந்தது? எனக்கென்று யாருமில்லை என்பதால் எதிர்பார்க்கிறார்கள்!” என்றாள் அமைதியாக.

“ஓ… சரி, அந்த தனிமையை கொடுத்தது யார்?”

“என் ஜாதக தோஷம்!”

“மண்ணாங்கட்டி… ஏன் இப்படி ஏமாளியாக இருக்கிறீர்கள்? திருமணம் ஆன அனைவரும் என்ன சுத்த ஜாதகம் உள்ளவர்களா? என் அம்மா தன் பதினேழாவது வயதிலேயே என் அப்பாவை காதல் திருமணம் செய்துக் கொண்டார், உங்களுக்கும் அவங்களுக்கும் ஒன்றரை வயது தான் வித்தியாசம். சித்தியும் விவரமாக வாழ்க்கையில் செட்டில் ஆகி விட்டார்கள், நீங்கள் மட்டும் தான் இப்படி… பாட்டி, தாத்தாவும் தங்கள் வசதிக்காக உங்களுக்கென்று எந்த முயற்சியும் எடுக்காமல் விட்டு விட்டார்கள்!” என்றாள் ஹாசினி கோபமாக.

“ஷ்… முடிந்து போனதை பேசி என்னவாகப் போகிறது? விடு அதை. ஆமாம்… இன்று என்னவாயிற்று உனக்கு, என்னை பற்றிய ஆராய்ச்சியில் இறங்கி இருக்கின்றாய்?” என்று கேலியாக கேட்டாள் சித்ரா.

“இதுவரை இந்த உணர்வுகள் எல்லாம் எனக்கு புரியவில்லை. இப்பொழுது தான் புரிகிறது, உங்களை சுற்றி நாங்கள் அனைவரும் எவ்வளவு சுயநலமாக வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்று…” என அவள் கையைப் பற்றிக் கொண்டு கவலையோடு சொன்னாள்.

“ச்சே… அதெல்லாம் இல்லைடா, எனக்காக நீ இவ்வளவு யோசிப்பது எத்தனை மகிழ்ச்சியை தருகிறது தெரியுமா?” என்றாள் கண்கள் கலங்க அவள் தலையை வருடியபடி.

“ஆனால் எனக்கு மனம் ஆற மாட்டேன் என்கிறது… இந்த வயதிலேயே எங்கள் துணை எப்படி இருக்க வேண்டும் என்று நாங்கள் எதிர்பார்க்கின்றோமே… உங்களுக்கும் அப்படிப்பட்ட எதிர்ப்பார்ப்புகள் இருந்திருக்கும் தானே?” என்றாள் அவள் அருகில் அமர்ந்து தோள்களில் சாய்ந்தபடி.

“ம்… இல்லையென்று பொய் சொல்ல மாட்டேன், இருந்தது தான். ஆனால் இருபத்தியேழு வயதை கடக்கும் பொழுது அனைத்தையும் விழுங்கிக் கொள்ள பழகி விட்டேன்!” என்றாள் சித்ரா விரக்தியான புன்னகையோடு.

“நீங்கள் இப்படியே விழுங்கிக் கொண்டு உங்கள் வாழ்க்கையை தொடருங்கள், அதற்கு நான் விட மாட்டேன்!” என்றாள் அவள் உறுதியாக.

ஹஹாவென்று சிரித்த சித்ரா, “ஏன்… என்ன செய்யப் போகிறாய்?” என்றாள்.

“உங்கள் திருமணத்திற்கு நான் ஏற்பாடு செய்வேன்!” என்றாள் ஹாசினி அழுத்தமாக.

“ச்சீய்… பைத்தியம் போல் உளறாதே…” என்று அவளை அதட்டினாள் சித்ரா.

“ஏன் முடியாதா? கண்டிப்பாக முடியும். எனக்கு அந்த நம்பிக்கை இருக்கிறது. உங்களை நேசத்துடன் ஏற்றுக் கொள்ளும் நல்ல மனிதரை, நான் நிச்சயம் கண்டுப்பிடிப்பேன். அதுவரை நான் ஓய மாட்டேன்!” என்றாள் தீர்க்கமாக.

அவளின் உறுதியைக் கண்டு, இதெல்லாம் முடியுமா… என்று சித்ரா மலைப்புடன் அவளை பார்த்தாள்.

நாட்கள் சிறகை விரித்து பறந்து கொண்டிருக்க ஹாசினி தன் பெரியன்னைக்கு ஏற்ற பொருத்தமான வரனை அலசுவதில் குறியாக இருந்தாள்.

இப்படியே மூன்று மாதங்கள் கடந்திருந்த நிலையில், அன்று அவளுடைய காலேஜுக்கு மற்றொரு காலேஜிலிருந்து புது லெக்ட்சரர் ஒருவர் வேலையில் மாற்றலாகி வந்திருந்தார்.

இன்டகிரல் மற்றும் டிஃப்ரன்ஸியல் கால்குலஸ் பாடத்தில் மிக திறமையானவராக இருந்தார். அதை மாணவர்களுக்கு கற்பிப்பதில் அவருடைய அனுபவம் வெளிப்பட்டது. எந்தளவுக்கு முடியுமே அந்தளவுக்கு எளிமையாகவும், அவர்களுக்கு புரியும்படியும் சொல்லி கொடுத்தார்.

அவர் நடத்துவது புரியவில்லை என்று மாணவர்கள் எதுவும் வாயை திறந்து அவரிடம் சொல்லவே தேவையிருக்காது, அவர்களின் முகத்தை வைத்தே புரியவில்லையா என கேட்டு மீண்டும் அவர்களுக்கு தெளிவாக புரியுமாறு சொல்லித் தர முயற்சிப்பார்.

லெக்ட்சரர் என்கிற எந்தவித அலட்டலும் இன்றி மாணவர்களிடம் அவர் மிகவும் பிரெண்ட்லியாக மூவ் பண்ண, வெகு விரைவில் அனைத்து மாணவர்களின் அபிமான பேராசிரியராக மாறி விட்டார் அவர்.

ராமச்சந்திரன் எடுக்கும் வகுப்புகள் பாடத்தில் மட்டும் இல்லாமல் பொது விஷயங்களை அலசும் நேரமாகவும் இருந்ததால், மாணவர்கள் அவர் வகுப்பை மிகவும் ஆர்வமாக எதிர்பார்க்க தொடங்கினர்.

ஹாசினி கணிதத்தில் ஆர்வமுள்ள மாணவியாக இருந்ததால், அவர் வகுப்பிலும் திறமையாக திகழ்ந்தாள்.

இந்நிலையில் தான் ஒரு நாள் அவர் மணமாகதவர் என்ற விவரம் அவளுக்கு தெரிய வந்தது. அவருடைய தூரத்து உறவினர் பெண் ஒருத்தி ஹாசினி கல்லூரியிலேயே வேறு பாடப்பிரிவில் படித்துக் கொண்டிருந்தாள்.

அவள் மூலம் விஷயம் கேள்விப்பட்டு, அவரை பற்றி மற்ற விவரங்களை மெல்ல சேகரிக்க ஆரம்பித்தாள். சிறு வயதிலேயே தாய், தந்தையை இழந்தவர் தங்கையின் வாழ்வை தன் பொறுப்பில் ஏற்றுக் கொண்டு, அவளை நன்றாக படிக்க வைத்து நல்ல இடத்தில் திருமணம் செய்து கொடுத்தார்.

அவள் கடமைகளை முடிக்கும் பொழுதே அவருக்கு முப்பத்துமூன்று வயதை தாண்டி விட்டதால், அதற்கு மேல் பெரிதாக திருமணத்தில் ஆர்வம் எதுவுமின்றி அப்படியே விட்டுவிட்டார்.

ஒரே தங்கையும் திருமணமாகி வெளிநாட்டில் செட்டிலாகி விட்டதால், அவளும் போனில் தான் அவர் திருமணத்தை பற்றி வற்புறுத்தினாலே தவிர நேரில் வந்து எந்த நடவடிக்கைகளையும் எடுக்க இயலவில்லை. தன் அண்ணன் அதில் ஆர்வம் காட்டாததால் ஒரு கட்டத்தில் அவளும் சலித்து போய் விட்டு விட்டாள்.

தற்பொழுது நாற்பது வயதை தாண்டி சென்று கொண்டிருக்கும் அவர் இன்றளவும் பிரம்மச்சாரி என்கிற விஷயம் ஹாசினிக்கு பெரிய எதிர்பார்ப்பை உண்டு பண்ணியது.

பழகிய வரையிலும், கேள்விப்பட்ட வரையிலும் மிகவும் கண்ணியமானவராக தெரிந்த அவரை தன் பெரியம்மாவுக்கு ஜோடி சேர்த்தால் என்ன? என்று கணிதத்தை விரும்பும் அந்த மூளை கணக்கு போட ஆரம்பித்தது.

ராமச்சந்திரனை தொடர்ந்து வேவு பார்ப்பதே தன் தலையாய கடமையாக நினைத்து தினமும் கல்லூரிக்கு சென்று வந்தாள் ஹாசினி.

இரண்டு மாதங்களில் தன் பெரியன்னைக்கு ஏற்ற பெரியதந்தை இவர் தான் என்ற ஹாசினியின் நன்மதிப்பை வென்றார் அவர்.

மாணவர்களிடம் அவர் இயல்பாகவும், கலகலப்பாகவும் பழகுவதால் தங்களுக்கு பாடத்தில் தனிப்பட ஏற்படும் சந்தேகங்களை ஓய்வு நேரத்தில் அவரிடம் தனியாக கேட்டறிந்து கொள்வர்.

கணிதத்தில் திறமையான மாணவி என்பதால் அந்த போர்வையில் அவரிடம் நெருங்கி பழகி, அவரின் தனிப்பட்ட அபிமானத்தை பெற முயன்றாள் அவள்.

ஒரு நாள் மதிய இடைவேளையில் ராமச்சந்திரன் அவளை அழைப்பதாக மாணவன் ஒருவன் சொல்லிச் செல்ல, அவரை காண ஸ்டாஃப் ரூமிற்கு விரைந்தாள்.

“எக்ஸ்கியூஸ்மி சார்!”

“ம்… உள்ளே வா!”

அறையில் அவரை தவிர வேறு யாருமில்லை, யோசனையுடன் உள்ளே நுழைந்தவளை உட்கார் என எதிரே இருந்த நாற்காலியை காட்டினார்.

“இட்ஸ் ஓகே சார் பரவாயில்லை சொல்லுங்கள்!” என்றவளை அழுத்தமாக பார்த்தார்.

“மரியாதை மனதில் இருந்தால் போதும் வெளிப்பூச்சுக்கு ஒன்றும் நடிக்க தேவையில்லை, முதலில் உட்கார். நான் உன்னிடம் கொஞ்சம் பேச வேண்டும்!” என்றார் சற்றே காட்டமாக.

தான் என்ன தவறு செய்தோம் என தெரியவில்லையே என்று சிறிது அச்சத்துடனேயே சேரின் நுணியில் அமர்ந்தாள் ஹாசினி.

அவளை நேர்ப்பார்வையாக பார்த்தவர், “நானும் சில நாட்களாக உன்னை கவனித்து கொண்டு தான் இருக்கிறேன். உன் நடவடிக்கைகள் எதுவும் சரியாக இல்லை, கண்ட படங்களை பார்த்தும் கதைகளை படித்தும் மனதை அலைப்பாய விடாதே. நிழலுக்கும் நிஜத்துக்கும் கற்பனைக்கும் நிதர்சனத்துக்கும் ஏக வித்தியாசம் உண்டு. கண்டதே காட்சி கொண்டதே கோலம் என்று கனவுகளை வளர்த்துக் கொண்டு வானில் பறந்தாய் என்றால் கீழே விழும் பொழுது இழப்பு உனக்கு தான். தினமும் எத்தனை செய்திகள் வருகிறது அதைப் பார்த்து அறிவை வளர்த்து கொண்டு வாழ்வில் எதற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும், எதை விட்டு ஒதுங்கி இருக்க வேண்டும் என்பதையெல்லாம் பகுத்தறிய தெரியாதா உனக்கு? மற்றவர்களுக்கு ஏற்படும் பிரச்சினையை பார்த்து கூட உன் போன்ற பெண்கள் திருந்தாதால் தான் அவனவன் இன்னமும் வயது வித்தியாசம் இல்லாமல் தனக்கேற்றபடி ஏமாற்றி வளைத்து கொண்டிருக்கிறான். எதையும் பட்டு அவமானப்பட்ட பின் தான் திருந்துவீர்களா? எல்லாம் போன பின் திருந்தி என்ன பிரயோஜனம்!” என்கிற ரீதியில் அடுத்தடுத்து பேசி அவளிடம் சீறினார் ராம்.

அவர் கூறுவதையே கேட்டபடி பரிதாபமாக அமர்ந்திருந்தவள், “நீங்கள் நினைப்பது போலெல்லாம் இல்லை சார்… நான் மனதை அலைப்பாய விடுபவள் இல்லை, என்னை பற்றி உங்களிடம் யாரோ தவறாக சொல்லியிருக்கிறார்கள்!” என்றாள் விளக்கமாக.

“போதும் நிறுத்து… மற்றவர்கள் யாரும் சொல்லவில்லை, நானே தான் கண்ணால் பார்த்தேன்!” என்று முறைத்தார்.

‘நோ வேண்டாம்… அழுதிடுவேன்!’ என்கிற ரீதியில் மனதினுள் புலம்பியவள் தவறு செய்தால் தானே கவலைப்பட வேண்டும், நான் ஒன்றும் அப்படி எதுவும் செய்யவில்லையே பின் என்ன? என்று நிமிர்வாய் அமர்ந்தாள்.

அவரை போலவே நேராக பார்த்து, “நீங்கள் கண்ணால் பார்த்தது என்னவென்று தெளிவாக சொல்கிறீர்களா? என்னவென்று எனக்கு புரியவில்லை!” என்று அவரையே கேள்வி கேட்டாள் ஹாசினி.

அதில் கடுப்பானவர், “ஏய் என்ன ஆதாரம் எதுவும் இல்லை என்கிற திமிரா? நீ அவ்வப்பொழுது என்னை ஒரு மாதிரி பார்ப்பதில்லை, அடிக்கடி தேவையே இல்லாமல் என்னிடம் பேச முயற்சி செய்வதில்லை?” என்றார் கோபமாக.

உடனே ஸ்விட்ச் போட்டது போல் பிரகாசமானவள், “வாவ்… ரியலி… ரியலி யூ ஆர் அ ஜெம் சார்! நான் இந்த டிவிஸ்டை சற்றும் எதிர்ப்பார்க்கவே இல்லை… எதற்காகவோ திட்டிக் கொண்டிருக்கிறீர்கள் என்று நினைத்தேன். நீங்கள் உண்மையிலேயே சூப்பர் பெர்ஸன் ஒட்டுமொத்தமாக இன்று நூற்றுக்கு இருநூறு மதிப்பெண்களை அள்ளி விட்டீர்கள்!” என்று குதூகலித்தாள்.

அவள் உற்சாகத்தை பார்த்து என்ன? என்று அதிர்ந்த ராம், அவள் பேசப் பேச இந்த பெண்ணுக்கு மறை எதுவும் கழன்று விட்டதா? என சந்தேகமாக பார்த்தார்.

“என்ன சம்பந்தமே இல்லாமல் உளறிக் கொண்டிருக்கிறாய் நீ?” என்றவர் முறைக்க, வேகமாக எழுந்து அவரருகில் சென்றாள் ஹாசினி.

“ஐயோ… சம்பந்தம் இல்லாமல் இல்லை நிறைய சம்பந்தம் இருக்கிறது. நீங்கள் கெஸ் பண்ணியது எல்லாம் சரி தான் நான் உங்களை பார்ப்பது மட்டுமில்லை, உங்களுடைய பர்ஸனல் ப்ளஸ் பேமிலி விவரங்களை எல்லாம் ஓரளவுக்கு விசாரித்து சேகரித்து வைத்திருக்கிறேன்!” என்று புன்னகைத்தாள்.

ராமுக்கு ஒரே திகைப்பாக இருந்தது, ‘என்ன பெண் இவள்? தனக்கு அவளைப் பற்றிய விவரம் தெரிந்து விட்டதே என அஞ்சி நடுங்குவாள் ஒரு மிரட்டு மிரட்டி அனுப்பலாம் என்று பார்த்தால், இவள் என்னவோ தன் நண்பனிடம் பேசுவது போல் சகஜமாக சிரித்து கொண்டு பேசுகிறாள்!’ என குழம்பினார்.

அதற்குள் வேக வேகமாக பதறியபடி இடைப்புகுந்தவள், “அச்சோ… வேண்டாம் வேண்டாம், நீங்கள் பாட்டுக்கு உங்கள் இஷ்டத்துக்கு எதையாவது கற்பனை செய்து என்னை கேவலமான பிறவி என்று எதுவும் முடிவு செய்து விடாதீர்கள். நாளைப் பின்னே நாம் எல்லாம் ஒரே குடும்பம் என்று ஆகின்ற பொழுது ஒருவரோடு ஒருவர் இயல்பாக உரையாட சங்கடமாக போய் விடும்!” என்று தடுத்தாள்.

‘ஒரே குடும்பமா? என்ன உளறுகிறாள் இவள்? ஐயோ… முதலில் இவளை இங்கிருந்து அனுப்ப வேண்டும், தேவையில்லாத சிக்கலை இழுத்து விட்டு விடுவாள் போலிருக்கிறது!’ என்றெண்ணினார் ராம்.

“இதுவரை நீ பேசியதே போதும், அதுவே அதிகப்படி உடனே உன்னுடைய கிளாஸுக்கு போ, உன்னை அப்புறம் கவனித்து கொள்கிறேன்!” என விரைப்பாக எழுந்து அறையை விட்டு வெளியேற முயன்றார்.

ஒரு நிமிடம்… ஒரு நிமிடம்… என குறுக்கே வந்து தடுத்தவள், “நான் உங்களிடம் கொஞ்சம் தனியாக பெர்சனலாக பேச வேண்டுமே, எப்பொழுது எங்கே பேசலாம்…” என்றவள் முடிப்பதற்குள் குறுக்கே கர்ஜித்தார் ராம்.

“ஹாசினி… திஸ் ஈஸ் யுவர் லிமிட்! இதற்கு மேல் வாயை திறந்தாய் என்றால் வாயில் ஒரு பல் இருக்காது. தேவையில்லாத பிரச்சினையில் மாட்ட வேண்டாம் ஸ்டூடன்ட் அதுவும் ஒரு பெண் என பொறுமையாய் இருக்கிறேன், அதை உனக்கு அட்வான்டேஜ்ஜாக மாற்ற முயற்சிக்காதே… விளைவுகள் மோசமாக இருக்கும்!” என்று எச்சரித்தார்.

“அச்சோ… இல்லை வேண்டாம் வேண்டாம், இதற்கு மேலும் என்னை எதுவும் திட்டி விடாதீர்கள் என்ன விவரம் என்பதை முழுவதுமாக சொல்லி விடுகிறேன். நான் உங்களை பற்றி விசாரித்தது என் பெரியம்மாவிற்காக தான்!” என்று ஹாசினி தெளிவாக எடுத்துரைத்தாலும், பாவம் ராமச்சந்திரன் தான் முன்னிலும் மோசமாக குழம்பி போனார்.

“ஏய் ஹாசினி… எதற்கு என்னை இப்படி போட்டு படுத்துகிறாய்? என்ன தான் பிரச்சினை உனக்கு?” என்றார் எரிச்சலுடன்.

“இது அவசரமாக பேசுகிற விஷயமும் இல்லை கோபத்தோடு இருக்கும் பொழுது தீர்மானிக்கிற விஷயமும் இல்லை. இதை பொறுமையாக தான் பேச வேண்டும், நான்… சரி ஒன்று செய்கிறேன். இது தொடர்பான விவரங்களை உங்கள் மெயில் ஐடிக்கு அனுப்புகிறேன். நீங்கள் கோபமெல்லாம் குறைந்து மனதில் அமைதி நிலவும் பொழுது படித்து பாருங்கள் ப்ளீஸ்… தயவுசெய்து தவறான கண்ணோட்டத்தில் தொடங்காமல் நல்ல விதமாக யோசித்து பாருங்கள். தாங்க் யூ சார்!” என ஓடி விட்டாள்.

பற்ற வைத்த சரவெடி கணக்காக படபடவென்று வெடித்து விட்டு ஓடியவளை மலைப்புடன் பார்த்த ராம், தந்தியில் வரும் செய்தி கணக்காக பெரியம்மா திருமணம் என கூறி சென்றவளின் எண்ணத்தை மெதுவாக ஊகித்தறிந்தார்.

இத்தனை வயதிற்கு மேல் தனக்கென்று ஒரு திருமணமா என மனதில் சலிப்புடன் எண்ணியவர், இது தொடர்பாக அவள் மீண்டும் பேசினால் ஒரே முடிவாக வேண்டாம் என்று மறுத்து விடலாம் என முடிவு செய்தார்.

மறுநாள் ராம்மை ஆவலுடன் எதிர்கொண்ட ஹாசினி, வழக்கம் போல் பாடத்தில் சந்தேகம் என்ற போர்வையில் அவருடைய அறையில் தனிமையில் சந்தித்து முடிவை வேண்டினாள்.

முதல் நாள் மறுத்து விடலாம் என தன் முடிவில் தெளிவாக இருந்தவர், ஹாசினி தன் பெரியம்மாவை குறித்து அனுப்பிய கட்டுரையில் சற்று குழம்பி போயிருந்தார்.

ஒரு வயதிற்கு மேல் ஆணோ பெண்ணோ தங்கள் மனதிலிருப்பதை பகிர்ந்து கொள்ளவும்,தங்கள் தனிமையை போக்கி கொள்ளவும் எந்த சார்புமின்றி தங்களுக்கு மட்டுமே என ஓர் உறவு இருப்பது அவசியம் என்று சமீப காலமாக தோன்றினாலும் திருமண வயதை தாண்டி விட்டதால் அதை பற்றி மேலே யோசிக்காமல் முளையிலேயே கிள்ளி எறிந்திருந்தார் அவர்.

இப்பொழுது ஹாசினியின் வார்த்தைகளில் லேசாக குழம்பினாலும் திருமணம் என்கிற அளவுக்கு உறுதியாக முடிவு எடுக்க முடியவில்லை.

அவர் தயக்கத்தை உணர்ந்து கொண்ட ஹாசினி, “எங்கள் பெரியம்மாவை போல் தான் உங்களுக்கும் மிகவும் தயக்கமாக இருக்கிறது என்று நினைக்கிறேன். ஒன்று செய்யுங்களேன், நீங்கள் இரண்டு பேரும் தனிமையில் சந்தித்து பேசினால் ஒரு தெளிவு கிடைக்கும்!” என்று யோசனை கூறினாள்.

திடுக்கிட்டவர், “ஏய் என்ன விளையாடுகிறாயா?” என்று பதறி விட்டார்.

“ஹய்யோ… இதில் விளையாடுவதற்கு என்ன இருக்கிறது?”

“என்னவா? நாங்கள் என்ன உன்னை மாதிரி டீனேஜில் இருக்கிற ஸ்டூடன்டா தனிமையில் சந்தித்து ஒருவரை ஒருவர் புரிந்து கொள்வதற்கு, மிடில் ஏஜ்ஜை ரீச்சாகி விட்டோம் அசிங்கமாக இருக்கும்!” என்று பிடிவாதமாக மறுத்தார்.

“சார்… எந்த காலத்தில் இருக்கிறீர்கள் நீங்கள்? காதலுக்கு வயது ஒரு தடையே இல்லை… திருமணம் முடிந்து பிள்ளைகள் பெற்று ஐம்பதை தாண்டியவர்களுக்கு கூட காதல் இருக்கும். என்ன அதை உணர்ந்து இருக்கின்ற குடும்ப பொறுப்பில் தங்களுக்கென்று நேரம் ஒதுக்கி செலவு செய்ய அவர்களுக்கு வாய்ப்புகள் கிடைக்காது அவ்வளவு தான். மற்றபடி நேசமும், பாசமும் வயதுகளை கடந்து பகிர்ந்து கொள்ள கூடியது அதுவும் உங்கள் இருவரின் விஷயத்தில் இது போல் கூட இல்லை, இருவருமே முதல் முதலாக திருமணம் செய்து கொள்ளப் போகிறீர்கள் அப்புறம் என்ன? ஓ… இப்பொழுது புரிகிறது, முதல் முறை என்பதால் தான் இப்படி வெட்கமெல்லாம் வருகிறது!” என்று ராம்மை கேலி செய்து சிரித்தாள்.

“ஓ காட்! உன்னையெல்லாம்… உனக்கு இருக்கின்ற வாய்க்கு பாவம்… எந்த பரிதாபத்திற்குரிய ஜீவன் வந்து உன்னிடம் மாட்டிக் கொண்டு அவஸ்தைப்பட போகிறதோ தெரியவில்லை!” என்று பதிலுக்கு வாரியவர், “ஆமாம்… உன் பெரியம்மாவும் இப்படி தானா?” என மெல்ல நூல் விட்டு பார்த்தார்.

“அடக் கடவுளே… என்னை பார்த்து தான் என் பெரியம்மாவும் இப்படியோ என்று பயப்புடுகிறீர்களா? டோன்ட் வொர்ரி… என் பெரியம்மா ரொம்ப அப்பிராணி, அதற்கு நான் கேரன்டி. இத்தனை வயதாகியும் எந்த ஆணிடமும் சட்டென்று பேச தயங்கும் ஓல்டு ஜெனரேஷன்!” என்று சித்ராவை வர்ணித்து புன்னகைத்தாள் ஹாசினி.

லேசாக புன்னகைத்தவர், “அப்பொழுது எப்படி இந்த திருமணத்திற்கு ஒத்துக் கொள்வார்கள் என்று நினைக்கிறாய்?” என்றார் யோசனையோடு.

“அது கொஞ்சம் கஷ்டம் தான், எப்படியாவது லாக் பண்ண வேண்டும். இது வரை உங்களை பற்றி எதுவும் நான் அவர்களிடம் சொல்லவில்லை, சில மாதங்களுக்கு முன் மேலோட்டமாக திருமண விஷயம் குறித்து பேசியதற்கு நம்பிக்கையில்லாமல் அலட்சியப்படுத்தி விட்டார்கள்!” என்றாள் வருத்தத்துடன்.

ம்… என்று ராம் அமைதியாக, “எனக்கென்னவோ நீங்கள் இருவரும் நேரில் சந்தித்தால் ஒருவரையொருவர் நிச்சயம் பிடிக்கும் என்று தோன்றுகிறது. உங்களை பார்த்தவுடனே எப்படி நாற்பது வயதுடையவர் என்று யாரும் நம்ப மாட்டார்களோ அதே போல் தான் பெரியம்மாவையும் யாரும் முப்பது வயதை கடந்தவர் என்றால் நம்ப மாட்டார்கள்!” என்றாள் ஆர்வமாக.

“ஆனால் என்னை சந்திக்க உன் பெரியம்மா சம்மதிக்க வேண்டுமே?”

“அதைப் பற்றி நீங்கள் கவலைப்படாதீர்கள், நான் பார்த்து கொள்கிறேன். உங்களுக்கு சம்மதமா எங்கே மீட் பண்ணலாம் என்று மட்டும் சொல்லுங்கள் அவர்களை நான் அழைத்து வருகிறேன்!” என்றாள் உறுதியாக.

“சரியான கேடியாக இருப்பாய் போலிருக்கிறதே எத்தனை தகிடுதத்தம் செய்கிறாய்? உன் லைஃப்பிலும் இப்படி தான் ஏதாவது ஓடிக் கொண்டிருக்கிறதா?” என்று கூர்மையாக பார்த்தார்.

“அச்சோ… நிச்சயமாக இல்லை, முதலில் நன்றாக படித்து லைஃப்பில் செட்டிலாக வேண்டும். அப்புறம் கல்யாணம் பண்ணிக்கலாம் அது எப்படி என்றாலும் சரி!” என்று அசால்டாக கூறினாள்.

“ரொம்ப தெளிவாக தான் இருக்கிறாய் சரி, நாளை மறுநாள் விடுமுறை தானே பொதுவான இடத்தில்… ம்… ஆங்… மைலாப்பூர் கோவிலுக்கு அழைத்து வந்து விடேன். அப்புறம் இன்னொரு முக்கியமான விஷயம் நாங்கள் இருவரும் கலந்து பேசிய பின்பு தான் என்னவென்று ஒரு உறுதியான முடிவெடுக்க முடியும். அதற்குள்ளாக நீயாகவே ஏதாவது எதிர்பார்ப்பை வளர்த்து கொள்ளாதே!” என்றார் ராம் முடிவாக, சம்மதமாக தலையசைத்து சென்றாள் ஹாசினி.

மைலாப்பூர் கோவிலில் ஹாசினி, சித்ராவிற்காக காத்திருக்க நேரிடாமல் ராம் வண்டியை வாயிலில் நிறுத்தும் பொழுதே சித்ராவின் வண்டியும் எதிர்புறத்தில் வந்து நின்றது.

எதேச்சையாக திரும்பிய ராமின் விழிகளில் ஹாசினி விழுந்து விட, அவள் சித்ரா அறியாமல் ராமை பார்த்து குதூகலமாக கையசைத்தாள்.

அவளின் குழந்தைதனத்தை எண்ணி ரகசியமாக புன்னகைத்தபடி நடக்க ஆரம்பித்தார். ஏற்கனவே திட்டமிட்டிருந்தபடி ஒருவருக்கொருவர் அறிமுகம் ஆகாமல் சுவாமி தரிசனம் செய்து பிரஹாரத்தை வலம் வந்தனர்.

சித்ராவை நேரில் பார்த்ததும் ராமிற்கு மிகவும் பிடித்து விட்டது. ஹாசினி குறிப்பிட்டிருந்ததை போல் நிமிர்ந்த நடை நேர் கொண்ட பார்வையாக அக்கம்பக்கம் பாராமல் ஒவ்வொரு சன்னதியாக சென்று கொண்டிருந்தாள். விழிகளில் எந்த ஒரு அலைப்புறுதலும் இல்லாமல் வதனத்தில் சாந்தமே குடி கொண்டிருந்தது.

“பெரியம்மா இவர் தான் உங்களை பார்க்க வேண்டும் என்று கூறிய என்னுடைய காலேஜ் லெக்ட்சரர்!” என்று சித்ராவிற்கு ராமை அறிமுகப்படுத்தி வைத்தாள் ஹாசினி.

“வணக்கம் சார்!” என்று கைகளை குவித்தவள், “நீங்கள் என்னிடம் பேச அழைத்ததாக கூறினாள், இவளால் எதுவும் பிரச்சினையா படிப்பிலா அல்லது வேறு ஏதாவது தொந்திரவா?” என்று கவலையுடன் வினவினாள் சித்ரா.

“நோ… நோ… யு டோன்ட் வொர்ரி, ஷீ ஈஸ் பக்கா இன் ஹெர் ஸ்டடிஸ் அன்ட் டிசிப்ளின். ஆக்ட்சுவலி பிரச்சினை அவள் தொடர்பானது இல்லை, நீங்கள் சம்பந்தப்பட்டது தான்!” என்றார் ராம் அமைதியாக.

“என் சம்பந்தமானதா… என்ன?” என்றாள் குழப்பத்துடன்.

“ஹாசினி நீ கொஞ்சம் கோவிலை சுற்றி வருகிறாயா? அதுவரை நாங்கள் பேசிக் கொண்டிருக்கிறோம்!” என்று அவளை அனுப்பி வைத்தவர், சித்ராவிடம் திரும்பினார்.

ஒன்றும் புரியாமல் திருதிருவென விழித்தபடி நின்றவளை அழைத்து கொண்டு அருகிலிருந்த மண்டபத்தில் அமர்ந்தவர் தன்னை பற்றியும், ஹாசினி தன்னிடம் வைத்த வேண்டுகோளையும் தெரிவித்தார்.

அதை கேட்டு திகைத்தவள், “இல்லை வந்து… அவள் கல்லூரி செல்ல ஆரம்பித்ததிலிருந்து கொஞ்சம் ஒரு மாதிரி பிஹேவ் செய்கிறாள். நான் அவளை கண்டித்து வைக்கிறேன் இனி அவளால் உங்களுக்கு எந்த தொந்திரவும் ஏற்படாது!” என்றாள் அவசரமாக.

“அவளால் எனக்கு தொந்திரவு என்று இதுவரை நான் சொல்லவேயில்லையே?” என்றார் ராம் கேலியாக.

“அப்பொழுது எதற்கு என்னை பார்க்க வேண்டுமென்று சொன்னீர்கள்? ஹாசினி அப்படி தானே கூறினாள்!” என்றாள் தடுமாறியபடி.

“இதென்ன கேள்வி வீட்டில் பெரியவர்கள் திருமணத்திற்கு ஏற்பாடு செய்தால் மாப்பிள்ளையும், பெண்ணையும் ஒருவரையொருவர் பார்க்க வைப்பார்கள் அல்லவா… அது போல் தான் அவள் உன்னை அழைத்து வந்திருக்கிறாள். அதாவது நம் திருமணம் தொடர்பாக நாம் மனம் விட்டு பேச தான் இந்த ஏற்பாடு!” என்று விளக்கினார்.

முகம் சட்டென்று பதட்டத்தை தத்தெடுக்க, ‘அடிப்பாவி மகளே… சும்மா விளையாட்டுக்கு பேசிக் கொண்டிருக்கிறாய் என்று நினைத்தால் நிஜமாகவே மாப்பிள்ளை பார்த்து என்னிடம் விவரம் சொல்லாமல் அவரிடம் அழைத்து வந்து மாட்டி விட்டு விட்டாயே…!’ என மனதிற்குள் ஹாசினிக்கு அர்ச்சனை செய்தாள் சித்ரா.

ராம்மை நிமிர்ந்து பார்க்க முடியாமல் அவள் தலைக்குனிந்திருக்க, “ஹாசினி இது தொடர்பாக பேசும் வரை எனக்கு எந்த எண்ணமுமில்லை. ஆனால் உங்களை பற்றிய விவரம் அறிந்து பார்த்ததிலிருந்து எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. உங்களை திருமணம் செய்து கொள்ள எனக்கு பரிபூரண சம்மதம். இதுவரையான நம் வாழ்க்கை எப்படி இருந்ததோ இதற்கு மேலும் இப்படியே தொடர்ந்தோம் என்றால் ஒரு கட்டத்தில் நமக்கென்று யாருமில்லாமல் தனிமையே மனதை விரக்தியாக்கும். நம் உடன்பிறப்புகளுக்கு அவரவர்கென்று குடும்பம் உண்டான பிறகு அவர்களை குறை கூறியும் பயனில்லை. ஓகே இரண்டு நாள் டைம் எடுத்து கொள்ளுங்கள், நன்றாக யோசித்து உங்கள் பதிலை சொல்லுங்கள் கிளம்பலாமா?” என்றார்.

அதுவரை குனிந்திருந்தவள் வேகமாக நிமிர்ந்து சம்மதமாக தலையை ஆட்ட, அவருக்கு புன்னகை அரும்பியது. அதன் பிரதிபலிப்பாக லேசான கன்னச் சிவப்போடு அவருடன் இணைந்து நடக்க ஆரம்பித்தாள்.

எதிரே வந்த ஹாசினி, “என்ன பேசி விட்டீர்களா?” என்றாள் ஆவலாக.

“ம்… இரண்டு நாளில் யோசித்து சொல்ல சொல்லியிருக்கிறேன்!”

“என்ன இரண்டு நாட்களா?” என்று அலுப்போடு கூறியவள் திரும்பி சித்ராவை பார்க்க, முகமெல்லாம் சிவந்திருக்க தவிப்புடன் நின்றிருந்தாள் அவள்.

“ப்ச்… இரண்டு நாளெல்லாம் வேஸ்ட் சார் சாரி… சாரி பெரியப்பா,என் பெரியம்மாவின் மனம் இப்பொழுதே எனக்கு தெரிந்து விட்டது!” என்று பரிகாசித்தாள் ஹாசினி.

வேகமாக ஹாசினியின் கரம் பற்றி இழுத்தபடி, “நாங்கள் வருகிறோம் சார்!” என பதற்றத்தோடு விலகி விரைந்து நடக்க ஆரம்பித்தாள் சித்ரா.

ராம் யோசனையோடு நின்றிருக்க, “பாவம் பெரியம்மா அவர், இதற்கு மேலும் எதற்கு டைம் வேஸ்ட் செய்து கொண்டு உங்கள் சார்பாக நானே ஓகே சொல்லிடவா?” என்றாள்.

“இல்லை… இந்த வயதில்… எனக்கென்னவோ பயமாக இருக்கிறது!”

“உப்ஃபோ… சரி அவரை பிடித்திருக்கிறதா இல்லையா?”

ஒரு சின்ன தயக்கத்திற்கு பிறகு ம்… என்று முனகினாள் சித்ரா, “அப்புறம் என்ன மற்றதை விட்டு தள்ளுங்கள், நான் பார்த்து விசாரித்த வரை மிகவும் நல்ல மனிதர் அவர். உங்களுக்கு நல்ல துணையாகவும், தோழனாகவும் அமைவார்!” என்றாள் ஹாசினி தீர்க்கமாக.

பின் சட்டென்று திரும்பி, “பெரியப்பா! எல்லாம் ஓகே உங்கள் தங்கைக்கு போன் செய்து விரைவில் நல்ல முகூர்த்த தேதி குறியுங்கள்!” என்றாள் அவரிடம் உரக்க.

ராமின் விழிகள் வியப்புடன் சித்ராவை நோக்க, அவள் கூச்சத்துடன் நிமிர்ந்து மெல்லிய புன்னகையை வெளிப்படுத்தினாள்.

*END*

4 thoughts on “Yenge Yenathu Kavithai – Deepababu”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *