*45*

 

அகிலன் அருகில் தான் உரிமையுடன் இருக்க வேண்டிய இடத்தில் வேறொருப் பெண்ணா? அதுவும் இத்தனை காதலுடன் என்ற புகைச்சல் அடிவயிற்றில் இருந்து கிளம்ப, அதற்குமேல் தன் பொறுமையை இழந்த ஹிரண்மயி, கைமீறிய சினத்துடன் டேபிள் இருந்த கேக்கை பட்டென்று கீழே தள்ளி விட்டாள்.

அதில் முற்றிலுமாக அதிர்ந்த அகில், “ஏய்… என்னடி செய்கிறாய்?” என்று சேரை தள்ளிவிட்டு வேகமாக எழுந்தான்.

உடல் முழுவதும் கட்டுக்கடங்காத ஆத்திரம் ஆக்கிரமித்து இருந்ததால் மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்கியவள் அவனை தீப்பார்வை பார்த்து விட்டு மடமடவென்று கதவை நோக்கி நடந்தாள்.

அவளிடம் தன் காதலை தெரிவிப்பதற்காக ஆசை ஆசையாக ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து ஏற்பாடு செய்து அலங்கரித்து வைத்தால் அதை ஒரே நொடியில் அவள் கீழே தள்ளி கெடுத்து விட்டதில் அகிலுக்கு ஜெட் வேகத்தில் கோபம் கன்னாபின்னாவென்று எகிறியது.

கதவின் பிடியை திறந்து வெளியேற முயன்றவளை நான்கே எட்டில் நெருங்கி அவளின் கரத்தை அழுந்தப் பற்றி தடுத்தான் அகில்.

“என் கையை விடுங்கள், என்னை தொடுகிற வேலை எல்லாம் வைத்துக் கொள்ளாதீர்கள்!” என்று நெருப்பை கக்கியபடி அவன் பிடியிலிருந்து தன் கரத்தை உருவ முயன்றாள்.

அவனோ இரும்பு பிடியாக தன் கரத்தை மேலும் அழுத்த, லேசாக வலியெடுத்தது அவளுக்கு. அதில் மேலும் இயலாமையால் அவளின் சீற்றம் அதிகரிக்க, மறுகரத்தால் அவனை தன்னிடமிருந்து தூர தள்ள முயன்றாள்.

அதை சுலபமாக தடுத்து அடக்கியவன், அவளை முறைத்துப் பார்த்தான். உண்மையில் ஹிரணி எதற்காக இப்படி பிஹேவ் செய்கிறாள் என்பது அவனுக்கு புரியவேயில்லை. தற்பொழுது அவன் ஏற்பாடு செய்திருக்கும் இந்த ஏகாந்த சூழ்நிலையை அவள் அகமகிழ்ந்து ரசிப்பாள் என்ற கனவில் மிதந்துக் கொண்டிருந்தவன் ஹிரணியும், மயூவும் வேறு என்கிற கற்பனையில் அவள் உளவுவதை தற்காலிகமாக மறந்திருந்தான்.

அவளின் காதலுக்காக என்று ஒவ்வொன்றையும் மெனக்கெட்டு தான் ஏற்பாடு செய்திருக்க, அவளோ தன்னுடைய காதலை அலட்சியபடுத்தியது மட்டும் இல்லாமல் சற்றும் மரியாதையின்றி கேட்கின்ற கேள்விக்கு பதிலளிக்காமல் வெளியேற முயல்வதை கண்டு மேலும் உக்கிரமானான்.

“முதலில் எனக்கு பதில் சொல்லடி, எதற்காக அவ்வளவு அழகான கேக்கை அப்படி கீழே தள்ளி வீணாக்கினாய்?” என்றவனின் வார்த்தைகள் சீறலாக வெளிவந்தது.

‘ஓஹோ… அவளுக்காக அவ்வளவு கோபம் வருகிறதா? வருபவள் எந்த லோகத்து சுந்தரியாக இருந்தாலும் சரி, உங்களை நெருங்க விடாமல் பின்னங்கால் பிடறியில் பட ஓட வைப்பேன் நான்!’ என ஆங்காரத்துடன் எண்ணமிட்டுக் கொண்டிருந்தாள் ஹிரணி.

“உன்னிடம் தானே கேட்கிறேன் வாயை திற!” என்று அகில் பல்லிடுக்கில் வார்த்தைகளை துப்பியவாறு பலமாக அவள் கரத்தை அழுத்த, அதில் உண்டான வலியை தாங்க முடியாமல், ஸ்… ஆ… என தன்னையும் மீறி முகத்தை சுளித்தாள் அவள்.

அப்பொழுது தான் குனிந்து இருவரின் கரத்தையும் நோக்கியவன் திகைத்து வேகமாக தன் கரத்தை விலக்கினான்.

விழிகளை இறுக மூடி பல்லைக் கடித்து வலியை அடக்கியவள் சிவந்திருந்த தன் கரத்தை மெல்ல தேய்த்து விட்டாள். புருவத்தை சுளித்தபடி அதைப் பார்த்திருந்தவன், அலுப்புடன் மறுப்பக்கம் திரும்பிக் கொண்டான்.

தான் ஒன்று நினைத்து ஆசையுடன் செய்த முயற்சியெல்லாம் விழலுக்கு இறைத்த நீராக வீணாகிப் போனதில் அவன் மனதில் வெறுப்பு ஏற்பட்டது.

இருந்தும் அவளிடமிருந்து காரணம் அறியாமல் விடக்கூடாது என்ற வைராக்கியம் பிறக்க, அவளின் முகத்தை வலுக்கட்டாயமாக நிமிர்த்திய அகில், “கேட்டதற்கு பதில் சொல்!” என்று அழுத்தமாகப் பார்த்தான்.

ஹிரணியும் வீம்பில் குறைந்தவள் அல்லவே பதிலுக்கு அவனை எரிச்சலுடன் நோக்கியவள், “இப்பொழுது என்ன தெரிய வேண்டும் உங்களுக்கு?” என்றாள் கடுப்புடன்.

“எதற்காக அந்த கேக்கை கீழே தள்ளி விட்டாய்?” என்று மீண்டும் பொறுமையாக வினவினான்.

முகத்தை சுளித்தபடி, “எனக்கு பிடிக்கவில்லை!” என்றாள் சுவற்றை பார்த்தபடி.

அகிலுக்கு ஒன்றும் புரியவில்லை, அந்த கேக்கை பிடிக்கவில்லை என்றா அப்படி தள்ளி விட்டாள்.

‘அது அழகாக தானே இருந்தது!’

“ஏன்… அதில் என்ன பிடிக்கவில்லை?” என்றான் குழப்பத்துடன்.

மீண்டும் ஆத்திரம் வெடித்துக் கிளம்ப, “எவளோ ஒரு கண்டவள்… கண்டவளுக்காக என் புருஷன் அதுப் போன்ற கேக்கை வடிவமைத்தது எனக்கு பிடிக்கவில்லை!” என்றவளின் விழிகளில் மின்னல் தெறித்தது.

அவள் முகத்தையே பார்த்திருந்தவனுக்கு மெல்ல விஷயம் புரிய, அதுவரை இருந்த கோபமும், இயலாமையும் மாறி உற்சாகம் பொங்கியது.

‘இந்த லூசு அது வேறு ஏதோ ஒரு மயூவிற்காக தயாரித்தது என்று தான் ஆங்காரம் கொண்டதா?’

விழிகள் ஆவலில் மின்ன குனிந்திருந்த அவளின் சுருங்கிய முகத்தை ஆசையுடன் ரசித்தவன் அவளை தொட்டு வருடி அணைக்க தோன்றிய உணர்வை சிரமப்பட்டு கட்டுப்படுத்தினான். இந்த அளவுக்கு தன்னை வெளிப்படுத்துகிறாள் என்றால் காதலையும் சொல்வாளா என்ற எதிர்ப்பார்ப்புடன் அவளிடம் அடுத்த கேள்வியை தொடுத்தான்.

“எதற்காக பிடிக்கவில்லை என்கிறாய்?”

“அதுதான் சொன்னேனே… வேறு ஒருத்திக்காக நீங்கள் அவ்வாறு செய்வது எனக்கு பிடிக்கவில்லை!” என்று கோபத்துடன் நிமிர்ந்தவள் அவனுடைய மலர்ந்த முகத்தில் திகைத்து விழித்தாள்.

“என்ன சொன்னாய் நீ, வேறு ஒருத்திக்காக நான் எதுவும் செய்ய கூடாதா ஏன்?” என்றான் மீண்டும்.

‘இதற்கு என்ன பதிலளிப்பது?’ என்று தடுமாறியவள், “அது எனக்கு தெரியாது!” என மழுப்பலாக பதிலளித்து விட்டு விரைவாக திரும்பி அங்கிருந்து நழுவிச் செல்ல முயன்றாள்.

அதை தடுத்து அவளை தன்புறம் திருப்பியவன், “என்ன ஏனென்று உனக்கு தெரியாதா… பரவாயில்லை உனக்கான பதிலை நான் சொல்கிறேன்!” என்று அவள் முகத்தை நிமிர்த்தி தன் விழிகளை காணச் செய்தான்.

அவனுடைய நெருக்கம் பதட்டத்தை தந்தாலும், இவன் ஏன் இப்படி நடந்துக் கொள்கிறான் என்று புரியாமல் பார்த்தாள் ஹிரண்மயி.

“ஐ லவ் யூ மயூ!” என்று கிசுகிசுத்தவன், அவளின் விரிந்த விழிகளை ரசித்தபடி, “புரிகிறதா மயூ என்கிற ஹிரணி என்கிற ஹிரண்மயி!” என மேலும் நெருங்கி அழுத்தமாக மொழிந்து கண்சிமிட்டி புன்னகைத்தான் அகில்.

சுவாசிக்கவும் மறந்து தன்னை பிரமிப்புடன் நோக்கியவளின் இதழ்களை தீண்டியவன் கண்ணிமைக்கும் நேரத்தில் அவளை தன் ஆளுமைக்குள் கொண்டு வந்து மேலும் இறுக்க ஆரம்பித்தான். மேனி சிலிர்த்து அடங்க விழிகளை இறுக மூடிக் கொண்டவளின் இமைகளிலிருந்து அவளுடைய அனுமதி இல்லாமலேயே நீர் வெளியேற ஆரம்பித்தது.

தனது இத்தனை நாள் குழப்பத்திற்கான விடை தற்பொழுது அவன் வாய் மொழியாகவே தெளிவாக கிடைக்க, எதிர்பாராத உணர்ச்சி கொந்தளிப்பால் இதயம் விம்மி வெடித்து அழ துவங்கினாள் ஹிரண்மயி.

அவளின் அழுகையில் அதிர்ந்த அகில் வேகமாக அவளை தன்னிடமிருந்து பிரிக்க முயல, விலக மறுத்து அவனை இறுக்கியபடி தேம்பினாள் அவள்.

“ஏய் மயூ… என்னடாம்மா இது?” என்று வருத்தத்துடன் அவள் முதுகை வருடினான்.

“உங்களை நேசிக்காமல் ஆதாயத்திற்காக தான் மணந்தேன் என்று நீங்கள் என்னை நன்றாக பழிவாங்கி விட்டீர்கள் இல்லை…” என்றாள் மூக்கை உறிஞ்சியபடி.

“ப்ச்… என்ன உளறுகிறாய்?” என்று அவன் அதட்ட, “ஆமாம் அப்படித்தான்… இல்லையென்றால் முதலிலேயே என்னை விரும்புகிறேன் என்று நீங்கள் என்னிடம் சொல்லி இருப்பீர்கள் அல்லவா?” என நிமிர்ந்து அவனை குற்றஞ்சாட்டினாள்.

“என்னது… அப்படியே ஓங்கி ஒரு அறை விட்டேன் என்று வைத்துக் கொள் மென்று சாப்பிடுவதற்கு வாயில் ஒரு பல் இருக்காது. சொல்லியிருந்தால் மட்டும் அப்படியே ஐ லவ் யூ டா டார்லிங் என கட்டிப்பிடித்திருப்பாயா, ரப்பர் பாலாட்டம் எதற்கெடுத்தாலும் துள்ளிக் குதிப்பவள் தானே நீ?” என முறைத்தான் அகில்.

பின்னதை ஒதுக்கி முன்னதை மட்டும் தனக்கு சாதகமாக எடுத்துக் கொண்டவள், “ஆங்… அதுவரை நான் சும்மா இருப்பேன் என்று நினைத்தீர்களா?” என்று தானும் எகிறினாள்.

உடனே காதல் மன்னன் ஆனான் நம் நாயகன், “வேண்டாம்… சும்மா இருக்க வேண்டாம், சட்டென்று கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்து விடு!” என்று அவளை தன்னருகில் இழுத்து கண்ணடிக்க, “எப்படி இப்படியா?” என வினவி அவனை இறுக கட்டிக்கொண்டு முத்தமிட்டாள் அவனுடைய மயூ.

ஐந்து மாதங்களுக்கு பிறகு, அயர்ந்து உறங்கி கொண்டிருந்த அகிலின் காதில் குறுகுறுப்பு மூட்டிக் கொண்டிருந்தாள் ஹிரணி.

“ப்ச்… ஏய் சும்மா இரு!” என அவள் கரத்தை தட்டி விட்டான்.

“தூங்கியது போதும் எழுந்திருங்கள் கோவிலுக்கு போக வேண்டும்!” என அவன் காதில் இதழ் பதித்து முத்தமிட்டு மொழிந்தாள்.

“ஷ்… அப்பா… டைம் என்னடி, ஒன்பது மணிக்கு தானே கோவிலுக்கு போக வேண்டும்!” என்று அவளை விலக்கி கவிழ்ந்துப் படுத்தான் அகில்.

“மணி ஏழு ஆகிறது எழுந்திருங்கள் எனக்கு தூக்கம் போய்விட்டது ஒரே போராக இருக்கிறது!” என்று அவன் மீது சரிந்தாள்.

“ஏழு மணியா… அப்பொழுது இன்னும் இரண்டு மணி நேரம் இருக்கிறதா?” என திரும்பி படுத்து சோம்பல் முறித்தவன் அவள் முகத்தையே பார்த்தான்.

“ம்… ஆமாம்!” என்று அவன் அருகில் குனிந்தவளை கைகளால் வளைத்துக் கொண்டவன், “சரி உனக்கு வேறு தூக்கம் வரவில்லை போராக இருக்கிறது என்கிறாய், அதனால் கொஞ்ச நேரம் விளையாடலாம்!” என்று ஹிரணியை தனக்கு கீழே புரட்டினான்.

“என்னது ஹேய்… நோ… நோ, கோவிலுக்குப் போக வேண்டும்!” என்று அவன் நெஞ்சில் கை வைத்து தடுத்தாள் மயூ.

“அப்பொழுது போடி… நான் மறுபடியும் தூங்குகிறேன்!” என்று திரும்பி படுத்து விழிகளை மூடிக்கொண்டான் அகில்.

ம்ஹும்… என்று சிணுங்கியவள், “எனக்கு போரடிக்கிறதுடா!” என அவனை பின்னிருந்து இறுக்கி அவனுடைய தோளில் தாடையை வைத்து அழுத்தினாள்.

“உன்னை நம்பியெல்லாம் நான் எழ மாட்டேன், பாவமே என்று கம்பெனி கொடுக்கப் பார்த்தால் ரொம்ப தான் அலட்டுகிறாய்!”

‘ஐயோடா… பாவம் பார்க்கிற ஆளைப்பார்!’ என்று நகைத்து அவன் மீது முன்னேறியவள், “சரி நான் வேண்டுமென்றால் தலைக்கு குளித்து விடுகிறேன்!” என்றபடி அவன் கால் மீது தன் காலை தூக்கிப் போட்டாள்.

“தேவையே இல்லை…” என்றவனை திருப்பி அழுந்த முத்தமிட்டு விலகியவள், “இப்பொழுது நீதான்டா மிகவும் அலட்டுகிறாய்!” என்று முறைத்தாள்.

“இல்லையென்றால் உன்னை வழிக்கு கொண்டு வர முடியாதே!” என தனது சில்மிஷத்தால் அவளை துள்ளி விழ வைத்தவன் அவள் முகத்தோடு தன் முகத்தை சேர்த்தான்.

விமல் ஹர்சுவின் ஐந்து மாத குழந்தை முகிலனுக்கு இன்று குருவாயூர் கிருஷ்ணன் கோவிலில் முதல் முறையாக அமுது ஊட்டுகிறார்கள். அனைவருக்கும் ஒன்றாக இந்த மாதத்தில் விடுமுறை ஒத்து வரவும் சரி ஃபார்மலாக இன்று ஆரம்பித்து விட்டு பின்பு ஆறு மாதத்தில் இருந்து குழந்தைக்கு முறையாக தினமும் சாதம் ஊட்டிக் கொள்ளலாம் என்று முடிவெடுத்திருந்தனர்.

குழந்தை பசியில் அழவும் ஒரு ஓரமாக அமர்ந்து ஹர்சிதா குழந்தைக்கு பால் புகட்டிக் கொண்டிருக்க, ஹிரண்மயி சந்நிதானத்தில் விளக்கேற்றிக் கொண்டிருந்தாள்.

உடன் நின்றிருந்த விமலிடம், “அச்சோ அண்ணா… பாருங்கள் மறந்தே போய் விட்டேன். அம்மா கொண்டு வந்திருந்த நெய்யிலிருந்து தீபம் போட்டு விட்டேன், பூஜைக்கு வேறு வாங்க சொல்ல வேண்டும் என்று நினைத்தேன் ஞாபகமேயில்லை சரியான மறதி. நீங்கள் உங்கள் தம்பிக்கு போன் செய்யுங்கள்!” என்றாள்.

குடும்பத்தில் அனைவரும் ஹர்சு உட்பட அம்மா, தம்பி என்று நெருங்கிய முறையில் உறவு கொண்டாட, தான் மட்டும் விலகியிருப்பதாய் எண்ணிய ஹிரண்மயி அகிலுடன் மனம் ஒன்றிய பிறகு பவானியை அம்மா என்றும் விமலை அண்ணா என்றும் அழைக்க ஆரம்பித்தாள்.

“அவனிடம் சொல்கிற நேரம் நானே போய் வாங்கி வருகிறேன்!” என்று அவன் நடக்க ஆரம்பிக்க, “அடடே… இது பவானியின் மூத்த மகன் விமல் தானே!” என்று அருகில் ஒரு குரல் வியப்புடன் ஒலிக்க திரும்பினாள் ஹிரணி.

“ஆமாம்… அது எங்கள் விமல் அண்ணா தான், உங்களுக்கு அம்மாவையும் தெரியுமா?” என்று அவரிடம் ஆவலுடன் வினவினாள்.

“ஓ… என்னுடைய பழைய சிநேகிதி அவள்…” என்றவர் குழப்பத்துடன், “அம்மா என்கிறாய்… நீ அவள் பெண்ணா? எனக்கு தெரிந்து அவளுக்கு இரண்டும் பையன் தானே…” என யோசனையுடன் இழுத்தார்.

“ஆமாம்… அவருக்கு பசங்க மட்டும் தான், நான் அவர் மருமகள்!” என்று முறுவலித்தாள் மயூ.

“என்ன மருமகளா அப்புறம் புருஷனை அண்ணா என்கிறாய்?”

“சீச்சீ… அவர் எனக்கு அண்ணா தான், அவருடைய தம்பி தான் எனக்கு புருஷன்!” என்று தெளிவாக உரைத்து நகைத்தாள் ஹிரணி.

அவளுடைய பதிலில் ஙே… என விழித்தவரின் கரத்தை இழுத்து, “ஏய்… மலர் எப்படியடி இருக்கிறாய் பார்த்து பத்து வருடங்களுக்கும் மேல் இருக்கும் இல்லை?” என்று அப்பொழுது அங்கே வந்த பவானி குதூகலமாக வினவினார்.

“ஆங்… ஆங்… இருக்கிறேன்!” என்று வினோதமாக உடனிருந்தவர்களை பார்வையிட்டார் மலர்.

அதற்குள் ஹர்சுவும் குழந்தையோடு அருகில் வந்தாள்.

“ம்… இவர்கள் தான் விமல் அண்ணாவுடைய மனைவி என்னுடைய செல்ல ஹர்சு அக்கா!” என்று மேலும் அழகாக மலருக்கு அறிமுகப்படுத்தினாள் ஹிரணி.

ஓ… ஓ… என்று சமாளிப்பாக புன்னகைத்து விட்டு, “சரி பவானி, என் வீட்டினர் அந்த பக்கமாக உட்கார்ந்து இருக்கிறார்கள் காணவில்லை என தேடுவார்கள் சொல்லி விட்டு வந்து விடுகிறேன். உன்னிடம் நிறைய பேச வேண்டும்!” என சின்னவளை பார்த்தவாறு கூறி சென்றார்.

“இவள் ஏன் ஒரு மாதிரி பேயறைந்த மாதிரி இருக்கிறாள்?” என்று யோசித்தார் பவானி.

பக்கென்று வெடிச்சிரிப்பு சிரித்தாள் ஹிரண்மயி, “ஏய் வாலு என்ன செய்தாய்?” என்று விமல் காதை திருக, “ஐயோ அண்ணா இருங்கள் சொல்கிறேன்!” என அவன் கரத்தை விலக்கி விட்டு நடந்ததை கூறி கண்சிமிட்டினாள்.

“அடிப்பாவி… என் தோழியை இப்படியாடி கலாட்டா செய்வாய்!” என்று அவள் முதுகில் செல்லமாக ஒன்று வைத்தார் பவானி.

“அத்தான்… பாருங்கள் அத்தான் உங்கள் முன்னாடியே அம்மா என்னை எப்படி அடிக்கிறார்கள்!” என்று அகிலிடம் செல்லம் கொஞ்சினாள் அவன் மனையாள்.

“அதுதானே… என்ன தைரியம் அம்மா உங்களுக்கு? என் முன்னாலேயே என்னுடைய ஸ்வீட் ஹார்ட்டை அடிப்பீர்களா… வேண்டுமென்றால் என் கண்மறைவாக  தனியாக அழைத்து சென்று வெளுத்து வாங்குங்கள்!” என்று அகில் காலை வாரியதும் இடுப்பில் கரம் வைத்து அவனை முறைத்தாள் அவனின் மயூ.

“ஹஹா… தம்பி… இன்று தனிமையில் உங்கள் மயூ தான் உங்களை வெளுத்து வாங்கப் போகிறாள்!” என்று அங்கே ஒரு சிரிப்பு வெடியை பற்ற வைத்தாள் ஹர்சிதா.

💞சுபம்💞

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *