*24*

 

ஹர்சிதாவின் மனநிலை தனக்கு சாதகமாக இருப்பதை உணர்ந்த பின் தான் விமலன் துணிந்து அவளது அலைபேசியில் தனது எண்களை அவ்வாறு பதிவு செய்திருந்தான்.

தற்பொழுது நீளும் அவளது மௌனத்தை எவ்வாறு எடுத்துக் கொள்வது என்று குழம்பியவன் லேசாக தொண்டையை செறுமி விட்டு அவளிடம் பேச ஆரம்பித்தான்.

“ஹலோ ஹர்சிதா… லைனில் இருக்கிறாயா?”

அவன் குரலில் தன்னை சுதாரித்து ம்… என்று பதிலளித்தவள் மேலே பேச இயலாமல் தடுமாற, இவன் எந்தவொரு தடுமாற்றமும் இல்லாமல் அவளிடம் தெளிவாக பேச ஆரம்பித்தான்.

“எதுவும் பிரச்சினையா ஏன் அமைதியாக இருக்கிறாய்?”

“அது…” என்றவளின் கரம் பெட்ஷீட்டை இறுக்க, “கால் அட்டென்ட் செய்ய ரொம்ப நேரமானதே தூங்கி விட்டாயோ?” என்று அடுத்த கேள்வியை தொடுத்தான் விமல்.

“இல்லை… விழித்து தான் இருந்தேன்!” என்று பதிலளிக்கும் பொழுதே குரல் உள்ளே சென்றது.

“ஆஹான்… அப்புறம் ஏன் அவ்வளவு நேரம்?”

அவள் இதழ் கடித்தபடி அமைதியாக, “ஹர்சு…” என்றவனின் கிசுகிசு அழைப்பில் இதயம் உருக படபடப்புடன் விழிகளை மூடிக்கொண்டாள்.

மூச்சுக்காற்றின் வேகம் அதிகரித்து அவனுடைய, “ஐ லவ் யூ!” வில் விழிகள் நீரைப் பொழிய ஆரம்பித்தது.

லேசான விசும்பல் சத்தத்தில் பதறியவன், “ஹர்சும்மா… தயவுசெய்து அழாதே பிடிக்கவில்லை என்றால் நான் வற்புறுத்த மாட்டேன். நீ… ” என்க, “ஐ ஆம் சாரி!” என்றாள் அவள்.

ஒன்றும் புரியாமல், “எதற்கு?” என்று வினவினான்.

“உங்கள் மனதில் இப்படியொரு தவிப்பை உண்டாக்கியதற்கு!”

“தவிப்பு…?”

“அது… எனக்கு பிடிக்காமல் தான் அழுகிறேனோ என்று…”

அவளின் வார்த்தைகளில் ஒளிந்திருந்த பதிலை கண்டுப்பிடிக்க அவனுக்கு சில நொடிகள் தேவைப்பட்டது.

விடை கண்டதும் முகம் மலர, “யூ… என்னையே ஒரு நிமிடம் ஆட்டம் காண வைத்து விட்டாயே ஃபிராடு!” என்றவனின் குரலில் வெளிப்படையாகவே உற்சாகம் குமிழியிட்டது.

“நான் ஃபிராடா? உங்களின் அழைப்பு வரும்பொழுதே தெரிந்துவிட்டது யார் ஃபிராடென்று?”

“ஓஹோ… அதனால் தான் மேடம் பயந்து போய் போனை எடுக்கவில்லையோ?”

முகம் செம்மை நிறம் கொள்ள வார்த்தைகளின்றி மௌனித்தவளை, அவன் காதலுடன் அழைத்தான்.

“ஹர்சு… உனக்கு என்னை பிடித்திருக்கிறதா? என்னை திருமணம் செய்து கொள்ள சம்மதம் தானே?” என்றான் எதிர்ப்பார்ப்புடன்.

விமலின் கேள்விக்கு உடனே சம்மதம் தெரிவிக்க தூண்டிய மனதை வாட்டத்துடன் பின்னுக்கு தள்ளியவள் அதுவரை இருந்த தடுமாற்றம் மாறி அவனிடம் தெளிவாக பேச ஆரம்பித்தாள்.

“உங்கள் மனதில் இப்படியொரு பாதிப்பை நான் ஏற்படுத்தி இருக்கிறேன் என்பதை என்னால் இன்னமும் நம்ப முடியவில்லை. முதலில் நான் என்னை பற்றிய விவரங்களை உங்களிடம் முழுவதுமாக தெரிவித்து விடுகிறேன். பிறகு நான் உங்களுக்கு தகுதியானவளா இல்லையா என்பதை அலசி ஆராய்ந்து…”

“பெயர் ஹர்சிதா, வயது இருபத்தியேழு, ஆசிரமத்தில் வளர்ந்தாய், படிப்பு பி.காம்…” என்று அவள் வார்த்தைகளை முடிக்கும் முன்னரே இவன் விவரித்து கொண்டே போக, இமைக்க மறந்து சிலிர்த்து போய் அமர்ந்திருந்தாள் ஹர்சு.

“ம்… உன்னை பற்றி எனக்கு தெரியாத விஷயம் எதுவும் உன்னிடம் இருக்கிறதா?” என்றான் துள்ளலோடு.

“இதெல்லாம் எப்படி?” என்றாள் வியப்புடன்.

லேசாக நகைத்தவன், “ஓகே… ரொம்ப குழம்ப வேண்டாம். நான் நேரிடையாகவே விஷயத்தை கூறுகிறேன்!” என்று மீனாவின் குழந்தை காதுகுத்து விசேஷத்தில் முதன்முதலாக அவளை சந்தித்தது காதலில் விழுந்தது, கடந்த சில நாட்களாக இடைவிடாமல் அவளை பின்தொடர்வது என்று அனைத்தையும் விவரித்தான்.

சுமித்ரா கூறிய வார்த்தைகளை மட்டும் முக்கியமாக மறைத்து விட்டான். அது தெரிந்து தன்மேல் அவனுக்கு பரிதாபமோ என்ற கழிவிரக்கம் எதுவும் அவளுக்கு தோன்றி விடக்கூடாது என்று நினைத்தான்.

இங்கே விமலின் காதலில் உள்ளம் மலர்ந்த இவளுக்கோ மெல்லிய உறுத்தல் தோன்றி, “ஓ…” என்று மட்டும் கூற வைத்தது. அவன் மறைத்தாலும் மீனாவின் உறவினன் என்றதிலேயே சுமித்ராவின் வார்த்தைகளை மீட்டெடுத்திருந்தாள் அவள்.

“இன்னும் என்ன?”

அவனை திருமணம் செய்து கொண்டு அவனோடு வாழ வேண்டுமென்று அவளுக்கு மனம் முழுக்க ஆசைதான் இருந்தாலும் அவளுக்குள் இருக்கும் நேர்மை அவளை இடித்துரைக்க மேலும் தெளிவுப்பெற விரும்பினாள் ஹர்சிதா.

“உங்களை பொறுத்தவரை எல்லாம் சரி, ஆனால் உங்கள் வீட்டில் உள்ளவர்கள் என்னை மருமகளாக ஏற்றுக் கொள்வார்களா? என்ன இருந்தாலும் நான் ஒரு அநாதை!”

“ப்ச்… என் வீட்டில் அம்மா, நான், தம்பி மூவர் மட்டும் தான். எங்களில் யாருமே அப்படி குறுகிய மனம் படைத்தவர்கள் இல்லை. உனக்கு சம்மதமா இல்லையா என்று அதை மட்டும் சொல்!” என்றான் அழுத்தமாக.

“இல்லை நான் சொல்ல வருவதை முதலில் தெளிவாக புரிந்து கொள்ளுங்கள். என்னுடைய சம்மதம் இரண்டாம்பட்சம் தான் முதலில் உங்கள் வீட்டினரின் சம்மதம் தான் முக்கியம். குடும்பம், உற்றார், உறவினர் யாருமில்லாத தனிமையில் வளர்ந்த எனக்கு உங்களுடன் இணைந்து உங்கள் குடும்பமும் வேண்டும். நாளைப்பின்னே எதுவும் பிரச்சினை தோன்றி உங்களை அவர்களிடமிருந்து பிரித்த பாவியாக நான் மாற விரும்பவில்லை!” என்றாள் தீர்மானமாக.

“அந்த கவலையே உனக்கு வேண்டாம் என் குடும்பத்தாரின் மேல் உள்ள நம்பிக்கையில் தான் நான் இதை உன்னிடம் பேசுவதே!” எனவும் வேறெந்த கேள்வியும் கேட்காமல் அடுத்த நொடி தன் உளப்பூர்வமான சம்மதத்தை விமலிடம் தெரிவித்தாள் ஹர்சிதா.

இருபத்திநான்கு மணி நேரத்தில் எப்பொழுது தனிமை கிடைத்தாலும் அவளுடன் மறவாமல் பேசி மறைமுகமாக நானிருக்கிறேன் உனக்கு என்று அவளுடைய தனிமை உணர்வை போக்கினான்.

இருவர் மனதிலும் குறுகிய நாட்களிலேயே காதல் வேரூன்றி விருட்சமாக வளர்ந்து ஒருவரின்றி மற்றொருவர் இல்லை என்ற நிலையை கொண்டு வந்தது.

தினமும் மாலை வேலையில் தானும் அவளின் தரிசனம் கண்டு பிரதியுபகாரமாக தனது தரிசனத்தையும் அவளுக்கு பரிபூரணமாக கொடுத்தான் விமல்.

வார விடுமுறை நாட்களில் பகல்வேளையில் பாதிப் பொழுதை அவளுக்காக அவளுடன் செலவிட்டான். அவனை கண்டவுடன் மலரும் அவளது விழிகள் அவனைப் பிரிய நேர்கையில் ஏக்கத்தையும், தவிப்பையும் வெளிப்படுத்துவதை கண்டு விரைவில் அவளை தன்னுடையவளாக்கி கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தை அவனுக்குள் வேரூன்றச் செய்தது.

தங்களின் காதலை தனது தாய்க்கு இவன் தான் முதலில் தெரிவிக்க வேண்டும் என்று மீனா முதற்கொண்டு யாரிடமும் வெளிப்படுத்தாமல் அதை அடைக்காத்து வந்திருக்க அது சரியாக சுமித்ராவின் கண்களில் உறுத்தும் தூசிப்போல விழுந்துவிட்டது.

பிறர்வாய் மொழியாக தன் காதல் பவானிக்கு செல்லக் கூடாது என்று தெளிவாக நினைத்திருந்தவன் திட்டமிடலில் சொதப்பி விட்டான்.

தன் காதல் மாதக்கணக்கில் தாண்டாமல் நாட்கணக்கில் தானே இருக்கிறது பிறர் கவனத்தை அவ்வளவு விரைவில் கவராது என்று அலட்சியமாக இருந்தவன் ஹர்சுவை வெளியிடங்களுக்கு அழைத்து செல்வதில் தயக்கம் காட்டவில்லை. அதுவே பிரச்சினை தோன்றுவதற்கும் காரணமாகி விட்டது.

சுமித்ரா ஒருநாள் வெளியில் எங்கேயோ சென்று விட்டு வீடு திரும்பி கொண்டிருந்த வழியில் சிக்னலில் அவரின் கால்டாக்ஸிக்கு அருகே விமலின் வண்டியும் நிற்க அவன் பின்னால் அமர்ந்திருந்த ஹர்சிதாவை கண்டு இவர் திகைத்துப் போனார்.

‘இவள் எப்படி இவனுடன்?’ என்று குழம்பும் பொழுதே சிக்னல் விழுந்துவிட அவன் வண்டி கிளம்பி சென்றுவிட்டது.

மூளை குடைச்சலை கொடுக்க வேகமாக தன் மகள் மீனாவை தொடர்பு கொண்டார். அவளுக்கே விவரம் தெரியாத பொழுது அவள் என்ன சொல்வாள் உளராதீர்கள் என்று ஒரே வார்த்தையில் கடிந்துவிட்டு வைத்துவிட்டாள்.

தன் மகளின் மேல் திருப்தி தோன்ற மறுக்க, இவர் நேராக சென்ற இடம் பவானியின் இல்லம்.

என்றும் வராதவள் இங்கே எங்கே வந்திருக்கிறாள் என்ற நெருடல் தோன்ற அதை மறைத்து அவரை இயல்புடன் வரவேற்றார் பவானி.

பெயருக்கு குசலம் விசாரித்து விட்டு நேரிடையாக விஷயத்திற்கு வந்தார் சுமித்ரா.

“வேலையை காரணம் காட்டி நீ ஏன் உறவுகளின் விசேஷத்திற்கு வராமல் ஒதுக்குகிறாய் என்பது இன்று தான் எனக்கு விவரம் தெரிந்தது!”

‘என்ன உளறுகிறாள் இவள்?’ என்று புருவம் சுருக்கினார்.

“அத்தான் இல்லையென்றால் அவரின் பொறுப்பும் சேர்ந்து உனக்கு இருக்கிறது என்பதை மறந்து விட்டு வசதியாகப் போயிற்று என்பது போலல்லவா நீ தான்தோன்றித்தனமாக நடந்துக் கொள்கிறாய்!” என்று அவரை வார்த்தைகளால் சீண்ட பவானிக்கு சினம் துளிர்த்தது.

“சுமி எதைப் பேசுவதென்றாலும் வெளிப்படையாக பேசு!”

“நான் என்ன சொல்வது உனக்கே தெரியாதா? உன் பையன் ரொம்பவும் தகுதி வாய்ந்த மருமகளாக தான் உனக்கு தேர்ந்தெடுத்திருப்பான் போலிருக்கிறது!” என்றார் நக்கலாக.

‘மருமகளை தேர்ந்தெடுத்தானா? அகில்… இடியட்… சொன்ன மாதிரியே செய்து விட்டானா? அவனை…’ என பல்லைக் கடித்தவர், ‘செய்ததை தான் செய்தாய்… என்னிடம் ஏன்டா தெரிவிக்கவில்லை?’ என்று தனக்குள் புகைந்தார்.

“என்ன அமைதியாகி விட்டாய்? இவளுக்கு தெரிந்து விட்டதே என்று கவலையா?” என்றார் சுமி ஏளனமாக.

சலிப்புடன் அவளை ஏறிட்டவர், ‘முதலில் இவளுக்கு எப்படி தெரியும்?’ என்று குழம்பி, “உனக்கு யார் சொன்னார்கள்?” என்று விவரம் கேட்டார்.

“யாரும் சொல்ல வேண்டுமா? நானே என் கண்ணால் பார்த்தேன்!” என்று முகத்தை சுளித்தார்.

‘கண்ணால் பார்த்தாளா?’ என்று திகைத்தவருக்கு முரண்பாடு மேலும் குழப்பத்தையே அதிகரித்தது.

அவரை அதற்கு மேல் தவிக்க விடாமல் விஷயத்தை போட்டு உடைத்தார் சுமித்ரா.

“நான் இப்பொழுது தான் என் கண்ணால் பார்த்து விட்டு நேரே இங்கே வருகிறேன். அந்த அநாதைப்பெண் விமலின் பின்னே அவ்வளவு உரிமையுடன் வண்டியில் அமர்ந்து செல்கிறாள். எப்படித்தான் இப்படிப்பட்ட குலம்கோத்திரம் தெரியாதவளை உனக்கு மருமகளாக ஒப்புக்கொண்டுள்ளாயோ!” என்று அஷ்டகோணலுடன் தான் வந்த வேலையை முடித்தார் சுமித்ரா.

அதற்கு மேல் அவர் கூறிய வார்த்தைகள் எதுவும் காதில் விழாமல் தன் பிள்ளையின் நடவடிக்கைகளை ஆராய்ந்து கொண்டிருந்தது அந்த தாயின் மனம்.

கடந்த சில வாரங்களாக மலர்ந்திருந்த அவன் முகம், மாலையில் தாமதாக வருவது, விடுமுறை நாட்களில் தவறாமல் வெளியே சென்று விடுவது கேட்டதற்கு நண்பர்களுடன் என்று விமல் கூறியது இன்று சமாளிப்பாக தோன்றியது.

அகில் காதலிக்கிறானோ என்ற எண்ணம் தோன்றிய பொழுது தன்னிடம் கூறவில்லையே அவன் என்று சிறு சினம் மட்டுமே அவருக்கு துளிர்த்தது. ஆனால் மாறாக விமல் காதலிக்கிறான் என்பதை அவரால் அவ்வளவு சுலபமாக ஜீரணிக்க முடியவில்லை.

சுமித்ரா தன் போக்கில் பேசிவிட்டு கிளம்பி செல்ல அவரை தடுக்க தோன்றாமல் தன் சிந்தனை வலையில் சிக்கியிருந்தார் பவானி.

அம்மா பிள்ளையாக தன்னை சுற்றி வந்தவன் காதலித்தான் என்பதை விட அதை தன்னிடம் மறைத்து விட்டான் என்பதே முதல் விரிசலாக அவர் உள்ளத்தில் தோன்றி அவனுடைய காதலுக்கு எதிராக மனதை இறுக வைத்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *