*7*

 

“மிரு… என்னப்பா இந்த கவுதம் விஷயத்தில் இன்னமும் எந்தவொரு முடிவும் தெரியாமல் இருக்கிறது!” என்று தன்னருகில் இருந்தவளிடம் யோசனையோடு கேள்வி எழுப்பினாள் மணிகர்ணிகா.

கவுதம்! சம்பந்தப்பட்ட ஷாலினி கொலைவழக்கில் முக்கிய குற்றவாளி. இவனுடைய நண்பர்கள் குமார் மற்றும் சக்திவேல் இருவரையும் தான் மர்மக்கும்பல் நான்கைந்து நாட்கள் கடத்தி வைத்து தண்டித்து விடுவித்திருந்தது.

“அதுதான் அண்ணி… என்ன நடக்கப் போகிறதோ என்று அவனுக்கு மேல் எனக்கு டென்சனாக இருக்கிறது!”

“ஆமாம்பா… எனக்கும் அப்படித்தான். முந்தைய கடத்தல் மூலம் காவல் துறையினர் ரொம்பவே உஷாராகி விட்டனர். அவனுக்கு தனிப்பட்ட பாதுகாப்பு தருகிறார்களாம், வீட்டை விட்டு வெளியேறவும் அனுமதிப்பதில்லை. அவன் வீட்டை சுற்றி காவல் வேறு இருக்கிறார்களாம்!”

“அந்தப் பரதேசி நாய்க்கு அது ஒன்று தான் குறைச்சல்!” என முகத்தை சுளித்து மிருணா கடுகடுவென்று பேச, “அதைச்சொல்… பாதிக்கப்பட்ட நம் பெண்களுக்கு ஒரு உதவியோ, பாதுகாப்போ கொடுக்க மாட்டார்கள். இந்த மாதிரி யாராவது நியாயமான செயலில் ஈடுபடும் பொழுது மட்டும் அவர்களை பிடிக்கவென்று குற்றவாளிகளுக்கு குடையை பிடித்துக் கொண்டு பக்கத்தில் உட்கார்ந்து காவல் இருப்பார்கள்!” என்றாள் மணி வெறுப்புடன்.

அதை ஆமோதிக்கும் விதமாக தலையில் கைவைத்தபடி மேசையை வெறித்திருந்தவள் பிரியா கேபினுள் வரவும் நேராக நிமிர்ந்து அமர்ந்தாள்.

“ஹேய்… ஜே.ஆர்…. என்ன இங்கே இருக்கிறாய்? எதுவும் சீரியஸ் டிஸ்கசனா?” என்று இருவரின் முகத்தையும் ஆராய்ச்சியாக பார்த்தாள் அவள்.

சட்டென்று வலிந்துப் புன்னகைத்த மணி, “இல்லைப்பா… இந்த கவுதம் விஷயம் அடுத்து என்னவாக போகிறதோ தெரியவில்லை என்று தான் எங்களுக்குள் கொஞ்சம் விவாதித்துக் கொண்டிருந்தோம்!” என்றாள் சமாளிப்பாக.

ஓ… என்றபடி சென்று தன் இருக்கையில் அமர்ந்த பிரியா, “உங்களுக்கு லேட்டஸ்ட் நியூஸ் தெரியுமா?” என்றதும் இரு பெண்களும் பரபரப்புடன் ஒருவரையொருவர் திரும்பி பார்த்துக் கொண்டனர்.

“என்ன?” என்றாள் மிருணா வேகமாக.

“அந்த கவுதம் ட்விட்டர், பேஸ்புக், டிக்டாக் அனைத்திலும் ஒரு வீடியோ விட்டிருக்கிறான்!” என்றதும் சுவாரசியம் குன்ற, “என்னவாம்?” என்று கேட்டு வைத்தாள் மணி.

“ஏதோ ஒரு போதை வெறியில் நண்பர்களின் பேச்சைக் கேட்டு என் காதலியை நானே கொன்று விட்டேன். செய்துவிட்ட தப்பிற்கு எதையும் காரணம் கூறி அதை நியாயப்படுத்த விரும்பவில்லை. என்னுடைய ஜாமீனை ரத்து செய்யக் கோரி நீதிமன்றத்தில் விண்ணப்பித்து இருக்கிறேன். அதில் வரும் சட்டப்படியான தீர்ப்பை ஏற்றுக்கொண்டு சிறைக்கு செல்ல நான் தயாராகி விட்டேன். அப்படியில்லை என்றாலும் என்னை திருமணம் செய்ய மறுத்த அவளுடைய நினைவில் உயிரோடு இருந்து வதைப்படுவதை விட, நானே தற்கொலை செய்து இறந்து அவள் ஆன்மாவோடு இணைகிறேன் என உருக்கமாக அந்த வீடியோ பதிவில் கதறுகிறான்!” என்று பிரியா முடிக்கவும் மிருவின் இதழில் ஏளனப் புன்னகை ஒன்று நெளிந்தது.

“ஷ்… அப்பா… என்னடா நாடகம் உங்களோடது? காதலி மீது அவ்வளவு அக்கறை இருக்கின்ற விஷஜந்து, எப்படி அவளை அவ்வளவு குரூரமாக நண்பர்களுடன் சேர்ந்து சீரழித்து சாகடித்தது. அதோடு பார்த்தாயா… குடிவெறியில் செய்து விட்டேன் என்று பூசி மெழுகுகிறான். எனக்கு இங்கே தான் ஒரு சந்தேகம் வருகிறது. எதற்கெடுத்தாலும் போதையில் செய்து விட்டேன் என்று இப்படிபட்ட அரக்கன்கள் சுலபமாக அதன்மேல் பலியை தூக்கி போடுகிறார்களே… இல்லை தெரியாமல் தான் கேட்கிறேன், குடித்திருக்கும் பொழுது ப்ளேட்டில் மாட்டுச் சாணியை வைத்தால் தெரியாமல் எடுத்து தின்று விடுவார்களா… அப்பொழுது மட்டும் எப்படி தெளிவு வரும்? ஹும்… எரிச்சல் தான் வருகிறது. இவ்வளவு பேசுகிறானே… போதையிலிருந்த நாய்க்கு தெளிந்தவுடன் தான் செய்த விஷயம் புரியவில்லையா… எதற்காக நீதிமன்றத்தில் ஜாமீன் வாங்கினான்? அப்படியே ஜெயிலுக்கு போய் தூக்குப்போட்டு செத்திருக்க வேண்டியது தானே!” என்று மணிகர்ணிகா குமுறவும் பிரியா வாய்விட்டு நகைத்தாள்.

அதற்குமாறாக மிருவோ தீவிர சிந்தனையில் ஆழ்ந்தாள். பொது மக்களாலேயே இத்தனை சுலபமாக அவன் நடிப்பை கண்டுக்கொள்ள முடிகிறது எனும்பொழுது சம்பந்தப்பட்ட கும்பல் என்ன முடிவெடுப்பார்கள் என்று யோசித்தாள்.


 

“கவுதம் சொன்னதெல்லாம் புரிகிறதா? நீ வீட்டில் இருப்பதை விட இப்பொழுது சிறையில் இருப்பது தான் ரொம்ப நல்லது!” என மீண்டும் ஆரம்பித்த தந்தையிடம், “காட்… எத்தனை தடவை சொன்னதையே திரும்ப திரும்ப சொல்வீர்கள்? இதற்கு என்னை பேசாமல் அமெரிக்காவிற்கு அனுப்பி இருக்கலாம் இல்லை… என்னுடைய ப்ரோக்ராமிங் நாலேட்ஜுக்கு நிம்மதியாக அங்கேயாவது செட்டில் ஆகி இருப்பேன்!” என்றான் கவுதம் எரிச்சலுடன்.

“ஆமாம்டா நாயே… இப்பொழுது சொல். தாயில்லாத பிள்ளை என்று உன்னை செல்லம் கொடுத்து வளர்த்து வைத்ததற்கு ஊரில் உள்ள பிள்ளையை கடித்து குதறி வைத்து விட்டாய்!” என்றார் அவர் கோபமாக.

அவன் அலட்சியமாக முகத்தை திருப்பவும், “சரி சரி, இனிமேலாவது ஒழுங்காக இருக்கப் பார். உன் மீது உள்ள கேசை தள்ளுபடி செய்யும் வரை உன்னை வெளிநாட்டிற்கு எல்லாம் அனுப்ப முடியாது. அதற்காக தான் இந்த ஏற்பாடு, அங்கே கொஞ்ச நாள் சமாளித்துக் கொள். அந்த கொலைகார கும்பல் பற்றி ஒரு முடிவு தெரியட்டும், உன்னை வெளியில் எடுத்து விடுகிறேன்!” என முடித்து அவனை அழைத்துக் கொண்டு நீதிமன்றம் சென்றார்.

கவுதம் தானாகவே முன்வந்து சரணடையவும், மூன்று மாதங்களுக்கு முன்பாக அவன் சமர்ப்பித்த போலி ஆதாரங்களை குறிப்பிட்டு நீதிமன்றம் கடுமையாக அவனை எச்சரித்ததோடு ஆயுள் தண்டனையுடன் சேர்த்து ஐம்பதாயிரம் அபராதமும் அவனுக்கு விதித்தது. அதோடு அவனுடைய நண்பர்களான குமார் மற்றும் சக்திவேலின் உடல் நிலையை தற்பொழுது கருத்தில் கொண்டு அவர்கள் எடுத்துக் கொள்ளும் சிகிச்சை முடிந்து குணமானதும் சிறையில் தள்ளப்படுவர் என்றும் நீதிபதி தீர்ப்பளித்தார்.

மணி, “பரவாயில்லை இல்லை… எப்படியோ ஒருவாறு அவனை தன்னால் சிறைக்கு செல்ல வைத்து விட்டார்கள்!” என்று திரையின் மறைவில் இதுபோன்ற குற்றவாளிகளை தண்டித்து வந்தக் கும்பல் குறித்து அவள் அறிக்கை வாசிக்க, மிருணாவுக்கு அது அதிருப்தியாக இருந்தது.

“ப்ச்… இதெல்லாம் அவனுக்கு பற்றாது அண்ணி. அவன் ஜெயிலுக்குள் சுகவாசியாக வாழ்வான் பாருங்கள். அவர்கள் ஏன் இந்த கவுதமின் விஷயத்தில் அமைதியாகி விட்டார்கள்? அந்த ராஸ்கல் அந்தப் பெண்ணிற்கு செய்த கொடுமைக்கு அவ்வளவு தானா தண்டனை…” என்றாள் ஆற்றாமையுடன்.

“நீ சொல்வது சரிதான்பா, ஆனால் நம் நாட்டில் இந்த அளவிற்கு உடனடியாக தண்டனை கிடைப்பதே பெரிய விஷயம்!” என்றவள் புருவம் சுருக்கி, “ஒருவேளை இப்படி இருக்குமோ… அன்று ஜே.பி. கூறியது போல் இவன் கொஞ்சம் பெரிய இடம் என்பதால் தயங்கி ஒதுங்கி விட்டார்களா?” என்றாள் யோசனையோடு.

இருக்குமோ… என தனக்குள் எண்ணியவளுக்கு எல்லாமே வெறுப்பாக தோன்றியது. புகைப்படத்தில் பார்த்திருந்த நிர்மலமான அந்த ஷாலினியின் முகம் நெஞ்சில் தோன்றி இவளை இம்சித்தது. அவள் அனுபவித்த வேதனையையும், வலியையும் இந்த ஸ்கவுன்டிரல் அனுபவிக்க வேண்டாமா என்று மனம் ஆறாமல் அலைபாய்ந்தாள் மிருணாளிணி.

மேலும் நான்கு மாதங்கள் கடந்திருந்த நிலையில் அந்த தனியார் மருத்துவமனையின் தனியறையில் தன்னுடைய நிலையை எண்ணி வெறிப்பிடித்தவன் போல் தந்தையிடம் இயலாமையால் பெரும் ஓசையுடன் முகத்தை மூடியவாறு கதறிக் கொண்டிருந்தான் கவுதம்.

அத்தனை தூரம் கதறி அழும் மகனை கண்டு நெஞ்சம் கலங்கினாலும் அருகில் சென்று ஆறுதல் கூற தைரியம் இல்லாமல் பத்தடி தூரம் தள்ளியே நின்றிருந்தார் அவர்.

பின்னே… பெற்ற மகனே என்றாலும் முழுமையான தொழு நோயால் பாதிக்கப்பட்டு இருப்பவனை நெருங்கி நின்று அரவணைத்து ஆறுதல் சொல்ல எந்த மனிதரால் தான் முடியும்?

ஆம்… மைக்கோபாக்டீரியம் இலப்ரே எனும் பாக்டீரியாவால் உண்டாகும் தொழுநோயால் கடுமையான பாதிப்பிற்கு உள்ளாகி இருக்கிறான் கவுதம்.

இந்நோய் பொதுவாக ஒரு உடலுக்குள் சென்றவுடன் உடனடியாக பாதிப்பு எதையும் ஏற்படுத்துவதில்லை. ஆரம்ப நிலையில் சாதாரண சரும வியாதி போல மேல் தோலின் மீது சீழ், தேமல், புண்கள், கொப்பளங்கள் போன்றவையே காணப்படும். இதுவே நாளாக நாளாக அந்நோயாளிக்கு தோலில் உணர்ச்சியின்மை, சுருக்கம், தசைத் தொங்குதல் ஆகியவற்றை உண்டாக்க ஆரம்பிக்கும்.

இயற்கையாக ஒரு மனிதருக்கு இந்நோயின் தாக்கம் ஏற்பட்டால் இதனுடைய அறிகுறிகள் வெளிப்படுவதற்கு வருடக்கணக்கில் ஆகும். ஏனெனில் இதன் நுண்ணுயிரிகள் மிகவும் மெதுவாகவே தங்கள் எண்ணிக்கையை பெருக்கம் செய்கின்றன.

ஆனால் வஞ்சம் வைத்து கவுதமின் உடலில் செலுத்தப்பட்ட நுண்ணுயிரிகளின் அளவு அதிகம் என்பதால் அவன் மூன்று மாதங்களிலேயே தீவிரமான நோய்க்கு ஆட்பட்டான்.

சிறைச்சாலையில் இருந்தப் பொழுது நோயின் ஆரம்ப கட்டத்தில் அவனுக்கு வந்திருப்பது சாதாரண சரும வியாதி என்றெண்ணி அதற்கு உண்டான சிகிச்சையே ஒருபுறம் கொடுக்கப்பட்டுக் கொண்டிருந்தது. இந்நிலையில் மேலும் மேலும் அவனுடைய உடலில் அந்த நுண்ணுயிர்கள் தினமும் இடைவிடாது செலுத்தப்பட்டதின் எதிரொலியாக கவுதம் தீவிரமாக பாதிப்படைந்து அவன் உடலெங்கும் சீழ் வடிந்து கொப்புளங்கள் பெருகவும் தான் அவனை தனிமைப்படுத்தி சிகிச்சைகள் தர ஆரம்பித்தனர்.

நோய் முற்றிய நிலையில் அவனுடைய முகம் விகாரமாக ஆரம்பிக்கவும் அவனின் தந்தையின் மனுவை ஏற்றுக் கொண்டு அவனை காவலர்களின் பாதுகாப்போடு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.

எத்தனை செலவு செய்தும், தரமான சிகிச்சை அளித்தும் நோயின் பாதிப்பை குறைக்க முடியவில்லை. கவுதமின் மூக்கு சப்பையாகி, கண் இமைகள் தடித்து மூட முடியாமல் தூக்கம் என்பதே அவனை விட்டு தூரச் சென்று விட்டது. அதுமட்டுமில்லாமல் அவன் கை, கால்களில் உள்ள விரல்கள் எல்லாம் அழுகிய நிலையில் மடங்கத் துவங்கி, பாதத்தில் இருந்த தொடு உணர்ச்சியும் மறைந்து அங்கே குழிப்புண்கள் உண்டாகி விட்டது.

இரண்டு மாதங்களாக அந்த நோயோடு போராடியவன், அதற்குமேல் முடியாமல் தன்னை கொன்று விடுமாறு தன் தந்தையிடம் மன்றாடி கதறிக் கொண்டிருக்கிறான். சரும எரிச்சலும், தோலில் சீழ் வடியும் புண்களை பார்த்து அருவருப்பும் அடைந்தவனுக்கு இமைகளை மூடி தூங்க முடியாத நிலைமை என்பது வேறு பெரும் கொடுமையாக இருந்தது.

முழுதாக ஒரு மாத காலம், முப்பது நாட்கள், எழுநூற்று இருபது நிமிடங்கள் உறங்க முடியாமல் விழித்திருப்பது அவனுக்கு உயிர்வதையை கொடுத்தது. இப்படியொரு கொடுமையான நிலையில் உயிர் வாழ்வதற்கு பதில் செத்து விடலாம் என்றே தீவிரமாக இருந்தான். இரண்டு முறை தற்கொலைக்கு முயன்றவனையும் காப்பாற்றி விட்டார்கள்.

ஒருகட்டத்தில் நோயின் தன்மை முற்றி கவுதம் தானாகவே இயற்கையாக இறந்துப் போனான்.

அவன் இப்பொழுது தான் நீதிமன்றத்தில் சரணடைந்து சிறைக்கு சென்றது போல் இருந்தது மிருணாவுக்கு, அதற்குள் நான்கு மாதங்கள் புயலென கடந்திருக்க அவனும் நோய்வாய்ப்பட்டு இறந்து விட்டான்.

தனக்கு வந்த செய்தியை கேள்விப்பட்ட நொடியில் இருந்தே ரொம்பவே ஆச்சரியமாக இருந்தது நம் நாயகிக்கு, நல்ல ஆரோக்கியத்துடன் சிறைக்கு சென்றவன் எப்படி திடீரென்று இப்படியொரு பாதிப்பிற்கு உள்ளாகி இருப்பான் என்பது அவளுக்கு பெரும் சந்தேகமாகவே இருந்தது.

இதே சந்தேகம் கவுதமின் தந்தைக்கும் வந்து அவர் தன் வக்கீலின் மூலம் போலீஸில் புகார் அளித்து அவனுக்கு பலவிதமான மருத்துவ பரிசோதனைகள் செய்த பொழுதும், சிறையில் உள்ள கண்காணிப்பு கேமராவை ஆராய்ந்தப் பொழுதும் வேறெதுவும் முரண்பாடாக அவர்களுக்கு ஆதாரம் சிக்கவே இல்லை. இறுதியில் மகனுக்கு இருந்த நோயின் தன்மையை தாங்கள் அறிந்துக் கொள்ளாமலே இந்தளவிற்கு முற்றவிட்டு விட்டோம் என்று வேதனையுடன் அவர் தன்னுடைய புகாரை வாப்பஸ் வாங்கிக் கொண்டார்.


தன்னை சிறைச்சாலையில் சந்திக்க வந்த மனைவியிடம், “என்ன பையனுக்கு ஆப்ரேசன் முடிந்து விட்டதா எப்படி இருக்கிறான்?” என்று விசாரித்தான் கம்பிகளுக்கு பின்னால் இருந்தவன்.

“ம்… நல்லபடியா முடிந்து இப்பொழுது முழுதாக குணமாகி விட்டான். என்னவொன்று நீங்கள் இப்படி அவனுடைய ஆப்ரேசனுக்கு என்று கம்பெனியில் திருட முயன்று ஜெயிலுக்கு வருவதற்கு முன்பாகவே அந்த தொண்டு நிறுவனம் பற்றிய விவரம் தெரிந்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும்!” என தன் புடவை முந்தானையால் கலங்கிய கண்களை துடைத்து கொண்டாள் நாற்பதுகளின் துவக்கத்தில் இருந்த பெண்ணவள்.

“சரிவிடு… ஏதோ கடவுள் இந்தளவிற்கு நம்மீது கருணை வைத்தாரே… இன்னும் இரண்டு மாதங்களில் நான் வெளியே வந்து விடுவேன். அதுவரை பிள்ளையை நன்றாக பார்த்துக்கொள்!”

“ஆங்… சரி!” என்றவாறு தலையசைத்து விடைப்பெற்று செல்லும் மனைவியை பார்த்திருந்தவனின் நெஞ்சில் நான்கு மாதங்களுக்கு முன்னால் தன்னை வந்து சந்தித்த மனிதனின் நினைவுகள் அலைமோதியது.

இவனை பற்றிய விவரங்கள் அனைத்தையும் தன் விரல் நுனியில் வைத்திருந்தவன் உன்னுடைய பையனின் உயிரை நான் காப்பாற்றுகிறேன் அதற்கு பிரதியுபகாரமாக நான் சொல்லும் வேலையை நீ செய்ய வேண்டும் என்றான்.

தன் மகன் உயிர் பிழைத்தால் போதும் என்று சம்மதம் தெரிவித்த தகப்பனிடம், கவுதம் அணியும் மேல் சட்டையில் தான் கொடுக்கும் மருந்தினை தினமும் குறிப்பிட்ட அளவு பூசிவிட வேண்டும் என்றான். இவன் புரியாமல் பார்த்தப் பொழுது, இது ஒரு சரும நோய்க்கான மருந்து அவனை பழிவாங்க தான் இதை உன்னை செய்ய சொல்கிறேன். ஆனால் நீ ஜாக்கிரதையாக அவனைவிட்டு விலகியே இரு, இது ஒரு தொற்று நோய். அதோடு நீ செய்யும் இந்த வேலையை யாரும் அறியாமல் ஒருவருக்கும் சந்தேகம் வராமல் நீ செய்து முடிக்க வேண்டும். அப்பொழுது தான் நாங்கள் உன் பையனுக்கு சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்வோம் என்றதும் இவனும் உடனடியாக ஒத்துக் கொண்டான்.

ஆரம்பக் கட்டத்தில் கவுதம் கொஞ்சம் சிரமப்பட்ட பொழுது இவனுக்கு கொஞ்சம் பதற்றமாக தான் இருந்தது. நண்பன் என்ற போர்வையில் மறுமுறையும் இவனை சந்தித்து அவன் ரகசியமாக மருந்து தர வந்தப்பொழுது இவன் தன் பயத்தை தெரிவிக்க, அவன் ஒரு பெண்ணை சீரழித்துக் கொன்றவன் அவனை பற்றியெல்லாம் நீ கவலைப்படாதே உனக்கு பிரச்சினை வராமல் நான் பார்த்துக் கொள்கிறேன். அதேபோல் நாங்கள் நேரடியாக உன் மகனுக்கு உதவாமல் ஒரு தொண்டு நிறுவனம் மூலமாக தான் இந்த உதவியை செய்வோம். அதையும் கவனத்தில் கொண்டு வெளியில் எதுவும் உளறக் கூடாது என எச்சரிக்கவும் தன் மனைவியிடம் கூட இவன் விசயத்தை கூறவில்லை. அதுவும் கவுதம் இறந்து விட்டதில் சிறையில் இருந்த அனைவருக்கும் தொழுநோய் அறிகுறி குறித்து மருத்துவ முகாம் நடந்தப் பொழுது இவன் கமுக்கமாகவே இருந்து விட்டான்.

2 thoughts on “Varathu Vantha Nayagan 7 – Deepababu”

  1. Kudi mela pazhiya podum podhu naanum adha dhan ninapen,kudicha mattum mirugha gunam vandhiduma nu…aana evlo pwruku avanga family eh support panranga mam,avan kudicha dhan mosama nadandhukkuvan illatti rombaaaaa nallavan nu …

    1. எஸ்… எனக்குமே எரிச்சல் தரும் விஷயம் அது. தன் மனதின் வக்கிரத்தையும், குரூரத்தையும் வெளியிட குடியின் முகமூடி அணிந்து மறைத்துக் கொள்ளும் பேடித்தனம் தவிர வேறொன்றுமில்லை. பெற்றோர்களின் ஆதரவு இருக்கும் வரையில் இப்படிப்பட்ட ஆட்கள் திருந்த மாட்டார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *