*4*

 

“என்ன அண்ணி? அண்ணா தலையில் கை வைத்துக்கொண்டு உட்கார்ந்து இருக்கிறார்!” என்று மணியிடம் வினவியவாறு அங்கே வந்தாள் மிருணா.

“ஆங்… எல்லாம் மதியம் வந்த செய்தி பற்றி தான் கவலையாக இருக்கிறார்!”

“இதில் கவலைப்பட என்ன இருக்கிறது? உண்மையை சொல்ல வேண்டுமென்றால் இதை நாம் சந்தோசமாக கொண்டாட வேண்டும். இப்படிப்பட்ட அரக்கனுக்கு இந்த மாதிரி தாக்குதல் நடந்திருப்பதை நினைத்தால் எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறது தெரியுமா? மக்களும் நிச்சயமாக இதை வரவேற்க தான் செய்வார்கள்!” என்றாள் மிரு குதூகலமாக.

“ஏய்… இரண்டு பேரும் கொஞ்சமாவது இந்த துறையில் இருக்கின்ற பக்குவத்தோடும், பொறுப்புணர்வோடும் உணர்ந்துப் பேசுங்கள்!” என்றான் ஜெய் எரிச்சலுடன்.

“பக்குவமாவது… புடலங்காயாவது… எங்களை பொறுத்தவரை பெண் குழந்தைகளையும், சிறுமிகளையும், இளம்பெண்களையும் வக்கிரம் பிடித்து பாலியல் ரீதியாக துன்புறுத்தி துடிக்க வைத்து கொல்பவர்களை சும்மா விடக்கூடாது. இம்மாதிரி தான் எந்த வழியிலாவது கடுமையாக தண்டிக்க வேண்டும்!” என்று மணி கோபமாக கூற, விழிகள் சிவக்க மிருணாவும் அதை ஆமோதித்தாள்.

“நீங்கள் சொல்வது ரொம்ப சரி அண்ணி… மதியமே இந்த கேஸை பற்றி நான் முழுவதுமாக ஆராய்ந்து விட்டேன். ஆறு மாதங்களுக்கு முன்னால் தஞ்சாவூரில் கல்லூரி மாணவி ஒருவளை உறவுக்காரன் ஒருவனே இம்மாதிரி துன்புறுத்தி இறுதியில் அவளை தற்கொலை செய்ய வைத்து சாகடித்து இருபது நாட்களில் போலீஸ் காவல் மற்றும் நீதி விசாரணையில் இருந்து தப்பித்து நிபந்தனை ஜாமினில் வெளியில் சுற்றினானே… அவனும் இதே மாதிரி அடுத்த ஒரு மாதத்தில் தாக்குதலுக்கு உள்ளானான். எனக்கு என்னவோ அந்த கேஸிற்கும், இந்த கேஸிற்கும் ஏதாவது சம்பந்தம் இருக்குமோ என்று தோன்றுகிறது. ஒருவேளை… இது போன்ற விஷயத்தில் பாதிப்பிற்கு ஆளான யாராவது இந்த வேலையை கையில் எடுத்திருப்பார்களோ!”

“அதைத்தான்… நானும் சொல்ல வருகிறேன். தொண்ணூற்று ஐந்து சதவீதம் முந்தைய குற்றவாளிக்கு நடந்த தாக்குதலும் இப்பொழுது நடந்த தாக்குதலும் இரண்டும் நன்றாக ஒத்துப் போகிறது. நீங்கள் குற்றவாளிக்கு கிடைத்த தண்டனையை பற்றி மட்டுமே நினைத்து ஆனந்தம் கொள்கிறீர்களே… இதை நிகழ்த்திய அந்த மர்ம நபருக்கு வரப்போகும் ஆபத்தை பற்றிக் கொஞ்சமாவது யோசித்து பார்த்தீர்களா… எனக்கு அதுதான் கவலையாக இருக்கிறது. இவள் சொல்வதுப் போல் பாதிக்கப்பட்டவராக இருந்து இந்த மாதிரி குற்றவாளிகளை பழிவாங்குபவராக இருந்தாலும் சரி, அப்படி இல்லாமல் பெண்களின் பாதுகாப்பிற்கு எதிராக மாறி வரும் இது போன்ற சமூக சீர்கேடுகளை கண்டு பொங்கி எழும் பொது நலவாதியாக இருந்தாலும் சரி. அது இரண்டுமே அவருக்கு ஆபத்தில் தான் வந்து முடியும். ப்ச்… இதில் ஈடுபடுவது ஆணா அல்லது பெண்ணா என்றும் தெரியவில்லை, சட்ட ரீதியாகவும் சிக்கல்களை சந்திக்க வேண்டும். இதுவரை நடந்த இந்த இரண்டு தாக்குதல்களும் நடுத்தர குடும்பத்தை சேர்ந்த குற்றவாளிகளிடம் நடந்திருப்பதால் அவர்களுடைய குடும்பத்தினர் இதைப்பற்றி பெரிதாக தேடியலைந்து துப்பு துலக்கும் அளவிற்கு துணிந்து காரியத்தில் இறங்க மாட்டார்கள். ஆனால் இதே தொடர்கதையாகி எங்காவது பெரிய இடத்தில் அந்த நபர் கை வைத்தால் அது நிச்சயம் அவருக்கு அபாயகரமான பின்விளைவுகளை ஏற்படுத்தும்!” என்று நெற்றியை தேய்த்தவன், “இந்த நாட்டில் நல்லவர்களை எங்கே நிம்மதியாக வாழ விட்டிருக்கிறார்கள்? அரசியல்வாதிகளின் சுயநல லாப நோக்கிற்காக நாட்டின் வளத்தை சீர்கெடுக்க போடப்படும் திட்டங்களையும், தொழில்களையும் நிறுத்தக் கோரி எத்தனை எத்தனை சமூக ஆர்வலர்கள் பல்வேறு ஊர்களில் போராட்டங்கள் நடத்தியிருப்பார்கள்… இன்று அவர்களின் கதியெல்லாம் என்ன ஆனது? ஏதோவொரு வகையில் அதிகாரம் படைத்தவர்களால் பாதிப்பிற்கு உள்ளாகி அடுத்தடுத்து காரணங்கள் தேடி குற்றம் சாட்டப்பட்டு சிறையில் தள்ளப்படுவதும், போராட்டங்களின் பொழுது வன்முறையை தூண்டி அதிகார துஷ்பிரயோகத்தில் அவர்களை சுட்டுத் தள்ளுவதும், அதற்குமேல் ரவுடிகளை ஏவிவிட்டு வெட்டிக் கொல்வதுமாக எத்தனை கொடுமைகள் இங்கு நடக்கிறது என்பது உங்களுக்கு தெரியாதா என்ன?” என்றான் அவர்களிடம் திரும்பி கோபமாக.

அவன் சொல்லில் பெண்கள் இருவரின் முகமும் அந்நபரின் எதிர்காலம் குறித்து கவலையை தத்தெடுத்திருக்க, “எந்த ஒரு விஷயத்திலும் தற்காலிக முடிவை மட்டுமே கண்டுப்பிடித்து ஆனந்த கூத்தாடக் கூடாது. எடுக்கின்ற வேலை எதிலும் தொலைநோக்கு இருக்க வேண்டும். இல்லாமலா… குற்றாவாளிகள் குறித்த முழுத்தகவல்களும் வெளியிடுவது தொடர்பாக நீ இணையத்தளம் ஒன்றை ஆரம்பிக்கப் போகிறேன் என்ற பொழுது அதை தடுத்து அதனுடைய உரிமை அனைத்தையும் என்னுடைய போலி அக்கவுண்ட்டில் ஆரம்பித்து உங்கள் இருவரையும் பின்னால் இருந்து இயக்க சொல்லி இருக்கிறேன்!” என்று ஜெய் கேள்வி எழுப்ப மிருவிற்கும் அன்றைய நாள் நினைவிற்கு வந்தது.

முதலில் மிருணாளிணிக்கு இந்த யோசனை வரக் காரணமே, பத்து வருடங்களாக ஒரே ஆள் பல பெயர்களில் வெவ்வேறு ஊரில் வசித்து வந்த ஐந்து இளம்பெண்களை அடுத்தடுத்து சுலபமாக ஏமாற்றி திருமணம் செய்து வந்தது தெரிய வந்தப்பொழுது உண்டான அதிர்ச்சியால் தான்.

‘இன்றைய நவீன தொழில்நுட்ப காலகட்டத்தில் வசிக்கின்ற நம் மக்கள் இத்தகைய விஞ்ஞானம், இணையதளங்கள் வசதி இருந்தும் இப்படி ஏமாந்துப் போகிறார்களே… இதை தடுப்பதற்கே வழியேயில்லையா!’ என்று குமுறிய நேரம் அவளுக்குள் தோன்றியது தான் இப்படிப்பட்ட குற்றவாளிகளை பொது மக்களுக்கு சரியாக அடையாளம் காட்டவென்று தனிப்பட்ட இணையதளம் ஒன்றை ஆரம்பிக்க வேண்டும் என்பது.

நாடு முழுவதும் இணையத்தில் எத்தனையோ குற்றச் செய்திகளை பகிரும் தளங்கள் இருந்தாலும் அவை ஆயிரத்தோடு ஒன்றாக இந்த செய்தியை பகிர்ந்து விட்டு அடுத்த செய்திக்கு போய்விடும் பொழுது முந்தைய குற்றத்தின் தகவல்களும் குற்றவாளிகளின் புகைப்படங்களும் எங்கோ ஓர் மூலையில் ஒதுங்கி மறைந்து விடுகிறது. அப்படி அல்லாமல் இத்தகைய குற்றவாளிகள் தொடர்பாக பெண்களுக்கு விழிப்புணர்வு தகவல்களையும், ஒரு எச்சரிக்கை உணர்வையும் நிரந்தரமாக வழங்குவதற்கு வசதியாக இவற்றை மட்டுமே பதிவேற்றம் செய்யும் தளமொன்றை துவங்க நடவடிக்கை மேற்கொண்டாள் மிருணா.

இதற்காக தளத்திற்கு தேவைப்பட்ட தென்னிந்திய மாநிலமெங்கும் பெண்களுக்கு எதிரான குற்றச்செயல்களில் ஈடுபட்ட மற்றும் ஈடுபட்டு வரும் குற்றவாளிகளின் தகவல்கள் மற்றும் புகைப்படங்கள் குறித்து ஜெய்சங்கரிடம் இவள் செய்திகள் சேகரிக்க முயன்றப் பொழுது தான் அவன் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தான்.

எப்பொழுதுமே தான் எடுத்துக் கொள்ளும் வேலைகளில் தனது பாதுகாப்பை முதலில் உறுதி செய்துக்கொண்டு அதற்கேற்றவாறு திட்டமிட்டு சமூக பொறுப்புணர்வு மிக்க செயல்களில் ஈடுபடுபவன் அதையே தன்னை சுற்றியுள்ளோருக்கும் அறிவுறுத்துவான்.
இறுதியில் அவன் வாதமே வென்று போலியான ஐடியில் ‘விழித்தெழுப்பெண்ணே.காம்’ துவக்கப்பட்டு அனைத்து தகவல்களையும் சேகரித்து குற்றவாளிகளை பற்றிய செய்திகளையும், புகைப்படங்களையும் பதிவேற்றம் செய்யும் பொறுப்பை பின்புலத்தில் இருந்து பெண்கள் இருவரும் பொறுப்பேற்று நடத்தி வந்தனர்.

இளம் பெண்கள் இடையேயும், மக்களிடையேயும் அதற்கு நல்லதொரு வரவேற்பு கிடைக்க, தங்களுக்கு நேர்கின்ற, நேர்ந்த கொடுமைகளை வெளியே பகிர அஞ்சி ஒதுங்கி இருக்கும் பெண்களிடம் இருந்தும் தகவல்களை சேகரித்து சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் குறித்து எச்சரிக்கை பதிவு போட்டால் மற்றப் பெண்கள் அவர்களிடம் எச்சரிக்கையாக இருக்க உதவுமே என்று மிருணாவுக்கு தோன்ற அதை செயல்படுத்த ஆரம்பித்தாள்.

அவளின் ஆர்வமும், தொழிலின் வேகமும் புரிந்தாலும் இந்த இடத்தில் நமக்கு விவேகமும் தேவை என்று அவளை சரியாக வழி நடத்தினாள் மணிகர்ணிகா.

அது போன்று நமக்கு வருகின்ற அதிகாரப்பூர்வமில்லாத தகவல்களை தளத்தில் பகிரும் முன் மிகுந்த கவனத்துடன் தங்களுக்கு மின்னஞ்சலில் வந்திருக்கும் தகவல் உண்மை தானா என்பதை ஒரு முறைக்கு இரு முறை சரிபார்த்து விட்டே பதிவேற்றம் செய்ய வேண்டும், இல்லையெனில் தங்களுக்கு பிடிக்காத ஆண்களை பழிவாங்க என்று நாட்டில் உலவுகின்ற சில மோசடிப் பெண்களுக்கு நாம் தவறாக வழியேற்படுத்திக் கொடுத்த மாதிரி ஆகிவிடும் என்றும் மூத்தவளாக எச்சரித்தாள்.

இருவரின் வழிகாட்டுதலிலும் இன்று வரை எந்தவித சிக்கலிலும் சிக்கி கொள்ளாமல் நல்ல முறையில் தளத்தை நிர்வகித்து வருகிறாள் மிருணாளிணி.

இங்கே இவர்கள் அந்த மர்ம நபரை குறித்து தங்களுக்குள் கலந்தாலோசித்து கொண்டிருக்க, ஒருபுறம் காவல்துறையும் இது தொடர் கதையாகி தங்களுக்கு புது தலைவலியை உண்டாக்குமோ என்று இரண்டு கேஸ்கள் சம்பந்தப்பட்ட பைலையும் தனியாக குழு அமைத்து ஆய்வு செய்துக் கொண்டிருந்தது. மறுபுறம் அந்த மூன்று குற்றவாளிகளில் இரண்டாமவனும் மர்மமான முறையில் காணாமல் போனான்.


 

அடர்ந்த கருப்பு நிற துணியால் கண்கள் கட்டப்பட்டிருந்த நிலையில், நாற்காலியோடு சேர்த்து தன் கை, கால்களும் வளைத்து கட்டப்பட்டிருக்க வெறும் உள்ளாடைகளுடன் தான் அமர வைக்கப்பட்டிருப்பதை மயக்கத்தில் இருந்து மெல்ல மெல்ல நினைவு மீண்டுக் கொண்டிருந்த அந்த கயவன் பெரும் பீதியுடன் உணர்ந்தான்.

“என்ன இன்னும் மயக்கம் முழுவதுமாக தெளிய மாட்டேன் என்கிறதா?” என்று ஒரு குரல் கர்ண கொடூரமாக ஏளனத்துடன் வந்து இவன் செவியில் மோத இவனுடல் அச்சத்தில் நடுங்கத் துவங்கியது.

நான்கு நாட்களுக்கு முன்னர் தான் இவனுடைய கூட்டாளி குமாருக்கு நேர்ந்த தாக்குதல் குறித்து கேள்விப்பட்டு முற்றிலுமாக அரண்டுப் போயிருந்தான் இந்த சக்திவேல். அதிலிருந்து வீட்டை விட்டு வெளியே வரப் பயந்து உள்ளேயே அடைந்துக் கிடந்தவனுக்கு திடீரென்று அர்த்த இராத்திரியில் உறங்கும் பொழுது பெரிதாக மூச்சு திணறல் ஏற்பட்டது.

ஒரு நிலையில் தன்னை சமாளிக்க முடியாமல் அறையை விட்டு தள்ளாடியபடி வெளியே வந்து பெற்றோரிடம் உதவி கேட்க, தாய் வெறுப்புடன் முகத்தை திருப்பிக் கொள்ள தந்தை தான் வேண்டா வெறுப்பாக மருத்துவமனை அழைத்து சென்றார்.

போகின்ற வழியில் இவர்களுடைய இருசக்கர வாகனத்தை வெள்ளை நிற வேன் ஒன்று இடித்து தள்ள அதில் நிலைதடுமாறி தந்தையும், மகனும் சாலையில் கீழே விழுந்தனர்.

அடுத்த நொடி இருவரின் முகத்திலும் குளோரபார்ம் தெளித்த கைகுட்டையை வைத்து யாரோ அழுத்திப் பிடிக்க இருவரும் மயங்கி சரிந்திருந்தனர்.

“பையனோட முகத்தில் கொஞ்சம் தண்ணீர் தெளிங்கப்பா!” என்ற குரல் கேட்கவும் பதறியடித்து சுற்றுமுற்றும் தலையை திருப்பினான் சக்தி.

எங்கும் மயான அமைதி சூழ்ந்திருக்க, அவன் முகத்தில் சுரீரென்று தண்ணீர் தெளிக்கப்பட்டது.

சக்தி, “யா… யார் நீங்கள்? என்… என்னை விட்டு விடுங்கள்!” என்றதற்கு அங்கே மௌனமே பதிலாக கிடைத்தது.

“என்னை எதற்காக இப்படி கடத்தி வந்திருக்கிறீர்கள்?” என முடிக்கும் முன்னே கடகடவென்று சிரிப்பொலி கேட்டது.

“பாருடா… ரொம்பவும் அப்பாவி பிள்ளை போல இப்படி கேள்வி கேட்டால் என்ன செய்வது? நிஜமாகவே உன்னை எதற்காக கடத்தி இருக்கிறார்கள் என்று உனக்கு ஒன்றுமே தெரியாதா?” என நக்கலாக கேள்வி கேட்ட குரல் அடுத்து இறுக்கத்தை தத்தெடுத்திருந்தது.

“ஏன்டா… உன் கூட்டாளிக்கு நடந்ததை தெரிந்துக் கொண்டு தானே வீட்டை விட்டு வெளியவே வராமல் உள்ளேயே அடைந்துக் கிடந்தாய்? அப்புறம் கேள்வி வேற கேட்கிறாய்…” என்றது அக்குரல் கோபமாக.

இவனுக்கு வியர்த்து வடியத் துவங்க, “ப்ச்… பேசியது வரை போதும்… சீக்கிரமாக சிகிச்சையை ஆரம்பியுங்கள்!” என்று உத்திரவிட்டது அக்குரல்.

இவன் அலறியடித்து, “இல்லை வேண்டாம்!” என பதறும் பொழுதே அவன் கைகள் இரண்டிலும் கிளிப் போன்று எதையோ மாற்றி மேலே ஏதோ மெல்லிய கயிற்றால் இறுக கட்டுவதுப் புரிந்தது இவனுக்கு.

தன்னை என்னவோ செய்யப் போகிறார்கள் என்று மிரண்டுப் போனவன், “என்னை விட்டு விடுங்கள். இனிமேல் அந்த மாதிரி எந்தப் பெண்ணையும் நான் எதுவும் செய்ய மாட்டேன்!” என கதறினான் சக்தி.

“ஆஹான்… இனிமேல் செய்ய மாட்டாய் சரி, ஆனால் ஏற்கனவே செய்த தப்பிற்கு தண்டனை தர வேண்டாமாடா உனக்கு. ம்… வழக்கமான அளவையே கொடுங்கள்!” என்று அந்தக் குரல் உறும, இவனுடலில் வீரியமிக்க மின்சாரம் பாய்ந்து இவனை அலறி துடிக்க வைத்தது.

அடுத்த பத்து நிமிடங்களில் சக்தியின் தலை தொய்ந்து விழ, “இன்று இது போதும், மீதியை நாளை பார்த்துக் கொள்ளலாம்!” என்றதோடு அக்குரலின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.

அவனை சுற்றியிருந்த காலடியோசைகள் மெதுவாக தேய்ந்து மறைந்தது.

அரைகுறை மயக்கத்தில் இருந்தவனுக்கு உடலில் உள்ள தசைகள் முழுவதும் தாங்க முடியாத கடும்வலி கொடுக்க லேசான மூச்சுத்திணறலோடு போராடத் துவங்கினான்.

இப்பொழுது கொடுத்த தண்டனையையே இவனுள் பெரிதும் மரண பீதியை கிளப்பியிருக்க, குமாருக்கு செய்தது போலவே துவங்கி இருப்பவர்கள் அடுத்து தன்னையும் அதுபோன்று தண்டிப்பார்களோ என்று எண்ணி கதிக் கலங்கிப் போனான்.

அவனுடைய அச்சத்தை சிறிதும் பொய்யாக்காமல் மறுநாள் சக்தியின் உடல் முழுவதும் கெட்டியான சர்க்கரைப் பாகை ஊற்றி பலநூறு கட்டெறும்புகளையும், மனிதனின் உடலை கடுமையாக கடிக்கும் சுள்ளெறும்புகளையும் மேலே ஊர்ந்து செல்லுமாறு கொட்டினர்.

“ஐயோ… இல்லை வேண்டாம், என்னை விட்டு விடுங்கள்!” என்று உடலை உதறியபடி அவன் அலறித் துடிக்க, ஆவேசமாக எதிரொலித்தது அந்தக் குரல்.

“இப்படித்தான்டா அந்தப் பெண்ணும் உங்களிடம் கதறி இருப்பாள், நீங்கள் விட்டீர்களாடா அவளை… ஈவு இரக்கம் இல்லாமல் அவள் படும்பாட்டை ரசித்து அவமானப்படுத்தி வலியில் துடிதுடிக்க வைத்து சாகடிக்கவில்லை!” என்றது ஆக்ரோசமாக.

அன்றைய நிகழ்வில் தங்களின் கேடுக்கெட்ட செயலால் அவள் பதறி துடித்து விட்டுவிடுமாறு கெஞ்சி கதறியது இவன் நினைவில் வந்து நிற்க, இவன் வார்த்தைகளின்றி ஒரு நொடி உறைந்துப் போனான்.

“ஆ.. என்னால் வலி தாங்க முடியவில்லை… என்னை இந்த ஒருமுறை மட்டும் மன்னித்து விடுங்கள். உங்களை கெஞ்சிக் கேட்கிறேன்!” என்று உடல் முழுவதும் ஊறிய எறும்புகளின் கடியை தாங்க முடியாமல் அடுத்த நொடி அவன் அலறித் தவிக்க மெல்லிய பெருமூச்சொலி கேட்டது அங்கே.

“ஆனால் எனக்கு இப்பொழுது தான்டா கொஞ்சமாக திருப்தி தோன்றுகிறது. அந்தப் பெண் அனுபவித்த கொடுமைக்கு சிறிதாவது உன்னை வலியில் துடிக்க வைக்க முடிகிறதே. இத்தோடு நாங்கள் உன்னை விட்டுவிட போவதில்லைடா…”

“தெரியும்… குமாருக்கு நடந்தது என்னவென்று எனக்கு முழுமையாக தெரியும்!” என்று துணியை கொண்டு மூடியிருந்த கண்களின் வழியே கண்ணீர் பெருக்கெடுத்து ஓட உடலெங்கும் ஆங்காங்கே எறும்புகளின் கடியால் தோல் தடித்துவிட்ட வலியோடு கதறியழுதவனிடம், “குட்… நாளை அதற்கு தயாராக இரு!” என்று ஏளனமாக உத்திரவிட்டது அக்குரல்.

“என்னால் இதையே தாங்க முடியவில்லை, என்னுடைய விரல்களை வேறு வெட்டி விடாதீர்கள்!” என்று எறும்பு கடியால் உதடுகளில் ரத்தம் பெருகி வழிய உயிர் பிச்சை கேட்டு அழுதான் சக்திவேல்.

“இதெல்லாம் ஒரு வாரம் அல்லது பத்து நாட்களில் சிகிச்சை எடுத்துக் கொண்டால் சரியாகி விடுமே… ஆனால் வாழும் காலம் முழுதும் தங்கள் பெண்ணுக்கு நேர்ந்த கொடுமையை எண்ணி பரிதவிக்கும் பெற்றோருக்கு நாங்கள் தகுந்த நியாயம் செய்ய வேண்டாமா? உன் கைகளில் உள்ள அனைத்து விரல்களையும் அழகாக வெட்டி எடுத்து விட்டோம் என்று வை… அவர்களை போலவே இறக்கும் வரையில் அனுதினமும் உன்னுடைய முடத்தை பார்த்து நீ வருந்தி தவிப்பாய். அதற்கு தான் உங்களை கொல்லாமல் இப்படி அரைகுறையாய் உயிரோடு விடுவது. நாளையில் இருந்து உண்பது முதல் கழுவுவது வரை நீ அடுத்தவரின் உதவியை நம்பித் தான் வாழ வேண்டும். அதில் எத்தனை எத்தனை அவமானத்தை நீ சந்திக்க வேண்டுமோ தெரியவில்லை, ப்ச்!” என போலியாக உச்சுக் கொட்டிய குரல், சக்தியின் விழிகள் அதிகப்படியான உடல் வலியிலும், அயர்விலும் மயக்கத்தில் சொருகுவதை கண்டு, “அவன் சாகக்கூடாது, தேவையான சிகிச்சை அளித்து உணவில்லாமல் இன்னும் இரண்டு நாட்களுக்கு தொடர்ந்து அவன் உயிர் வாழ்வதற்கு வேண்டிய சத்து மருந்தையும் உடலில் செலுத்துங்கள்!” என்றது அங்கு நின்றிருந்தவர்களிடம் அழுத்தமாக.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *