*3*

 

ஆமோதிப்பாக அவனிடம் தலையசைத்தவளுக்கு நான்கு வருடங்களுக்கு முன்னால் அவள் வேலை கேட்டு தங்கள் முன் வந்து நின்ற தினம் நெஞ்சில் உலாப் போனது.

அன்று இவர்களின் இளைய மைந்தன் ஆகாஷின் பிறந்தநாள் என்று குடும்பத்தினர் அனைவரும் அந்தக் குறிப்பிட்ட மாலில் படம் பார்க்க வந்திருந்தனர். பெரியவன் திலக்கின் விருப்பப்படி அன்றைய ரிலீசான அந்த ஆங்கில ஆக்சன் த்ரில்லரை காலையில் முதல் காட்சியாக பார்த்து முடித்ததும் அங்கிருந்த புட் கோர்ட்டில், மதிய உணவிற்காக சென்று அமர்ந்தனர்.

“எனக்கு சிக்கன் லாலிபாப்!” என்று முதல் ஆளாக ஆகாஷ் குரல் கொடுக்க உணவு ஆர்டர் செய்ய அவரவரின் விருப்ப உணவை கேட்டுக் கொண்டிருந்த ஜெய்யின் முகத்தில் புன்னகை பூத்தது.

“அதை நீ சொல்லவே வேண்டாம்டா, எனக்கு தான் தெரியுமே… எங்கே போனாலும் உனக்கு முதலில் அது தான் வேண்டும்!” என்று அவன் தலையை கலைத்தவன் உணவை எடுத்துவர தன்னுடன் திலக்கை அழைத்து சென்றான்.

“டாடி… நானும்!” என ஓட முயன்ற மகனை இழுத்துப் பிடித்து தன்னருகில் இருந்த சேரில் அமர வைத்தாள் மணி.

“அம்மா!” என்று பிள்ளை எகிற, “டேய்… போனமுறையே இப்படித்தானே ஓடிப்போய் அண்ணாவின் கையிலிருந்ததை நான் எடுத்து வருகிறேன் என பிடுங்கி கீழே கொட்டி அப்பாவிடம் திட்டு வாங்கினாய். இன்று உனக்கு பர்த்டே, ஒழுங்காக சேட்டை செய்யாமல் அமைதியாக இரு!” என்று அவனிடம் லேசாக கடிந்துக்கொள்ள, “இப்பொழுது நீங்கள் மட்டும் என்னை திட்டவில்லையா?” என்று முறைத்தான் பையன்.

“இதற்கு பெயர் திட்டாடா… அம்மாவாக உனக்கு அட்வைஸ் சொன்னேன்!” என்றவளிடம், “ம்க்கும்…” என ஆகாஷ் உதட்டை சுழிக்க சிரித்தபடி குனிந்து அவன் கன்னத்தில் முத்தமிட்டு, “ஏன் பாஸ் என்னிடம் இவ்வளவு ஆட்டிடியுட் காண்பிக்கிறீர்களே இன்று உங்களுக்கு பிறக்கின்ற வயது என்னவென்று தெரியுமா?” என்றாள் மணி கேலியாக.

“ஓ… தெரியுமே…” என்று வேகமாக மொழிந்தவன் பின் திருதிருவென்று விழித்தபடி அவசரமாக பாட்டியின் உதவியை நாடினான்.

“பாட்டி… எனக்கு த்ரீயா இல்லை ஃபோரா?” என்றான் விரல் விட்டு எண்ணியபடி சந்தேகமாக.

செண்பகமோ தங்கள் வீட்டு செல்ல கண்ணனின் அலும்பில் நகைத்தவர், “த்ரீடா பட்டுக்குட்டி, நம்முடைய பர்த் இயர் எப்பொழுதும் சேர்க்க கூடாது!” என்றார் பேரனிடம்.

பெரிய மனிதனாக நெற்றியை சுருக்கி யோசித்தான் அவன்.

பின்பு அவர் கூறிய கணக்கில் திருப்தியடைந்தவனாக, “ம்… ஓகே… ஓகே!” என ஆகாஷ் பலமாக தலையை உருட்ட, “அம்மா… உனக்கு பிடித்த சிக்கன் பிரைட் ரைஸ் பிடி!” என்றபடி செண்பகத்திடம் பௌலை வைத்த ஜெய், “ம்… யார் யார் எதை கேட்டீர்கள்? எடுத்துக் கொள்ளுங்கள்!” என டேபிளில் அனைத்தையும் கடைப்பரப்பி விட்டு அவன் அமர்ந்தான்.

உணவை முடித்து ஐஸ் க்ரீமிற்காக இவர்கள் தயாரான நேரம் அருகில் வந்து நின்றாள் மிருணாளிணி.

“எக்ஸ்க்யுஸ் மீ!” என்றவளின் குரலில் குடும்பம் முழுவதும் அவளை திரும்பி பார்த்தது.

சின்ன தயக்கத்துடன், “நீங்கள் தானே ஃபார்யு சேனல் ஜே.பி அன்ட் ஜே.ஆர்?” என்றாள் கேள்வியாக.

“ஆமாம்!” என்ற ஜெய்யின் விழிகள் யோசனையுடன் எதிரில் நின்றவளை அளவிட்டது.

“இல்லை… ஆக்ட்சுவலி… நான் ஜெர்னலிசம் முடித்து இருக்கிறேன்!” என மிரு தடுமாற்றத்துடன் ஆரம்பிக்கவும் உதட்டில் சின்ன முறுவல் பூக்க, “உட்காருங்கம்மா!” என்று செண்பகத்தின் அருகில் இருந்த நாற்காலியை கை காண்பித்தான் ஜெய்சங்கர்.

“ஆங்… தேங்க்ஸ் சார்!” என்றபடி அவள் அமர, “உன்னுடன் வேறு யாராவது வந்து இருக்கிறார்களா?” என்று மணி வினவவும், “இல்லை மேடம்… நான் மட்டும் தான் வந்தேன்!” என்றாள் அவள்.

“சொல்லுங்கம்மா… என்ன விஷயம்?”

இவள் வாயை திறப்பதற்குள், “அப்பா… நீங்கள் போய் ஐஸ் கிரீம் எடுத்து வந்திட்டு அப்புறம் பேசுங்க!” என தன் காரியத்தில் முக்கியமாக உத்திரவு இட்டான் ஆகாஷ்.

சிரிப்புடன் மகனிடம், “சரிடா!” என எழுந்தவன், “நீங்கள் என்ன ப்ளேவர் சாப்பிடுவீர்கள்?” என மிருவிடம் விசாரித்தான்.

“ஐயோ… இல்லை, நான் இப்பொழுது தான் உணவை முடித்தேன். எனக்கு எதுவும் வேண்டாம்!” என மறுத்தாள்.

“பரவாயில்லை… எங்களுடன் சேர்ந்து ஒரு கப் ஐஸ்க்ரீம் சாப்பிடுவதால் ஒன்றும் ஆகாது. நீங்கள் வாங்கிட்டு வாங்க ஜே.பி!” என கணவனிடம் கூறிவிட்டு, “இன்று எங்கள் வீட்டு குட்டிப்பையனிற்கு பிறந்தநாள்!” என்று தகவல் பகிர்ந்தாள் மணிகர்ணிகா.

ஓ… என விழிகளை விரித்தவள், “ஹேப்பி பர்த்டே பேபி!” என்று மலர்ச்சியுடன் வாழ்த்தினாள்.

“நான் பேபி இல்லை பாய்!” என்றான் ஆகாஷ் எடுப்பாக.

அதற்குள் திலக்கும், ஜெய்யும் அவர்களிடம் வர பேச்சு திசை திரும்பியது.

“ம்… அப்புறம்? இன்னும் உங்கள் பெயரை கூட எங்களிடம் சொல்லவில்லையே நீங்கள்…”

“அச்சோ… சாரி, என் பெயர் மிருணாளிணி சார்!”

“சொல்லுங்க மிருணாளிணி…”

முதலில் தயங்கியவள் பின் மெல்ல விசயத்தை கூறினாள்.

“அது… நான் இப்பொழுது தான் முதுகலையில் ஜெர்னலிசம் முடித்து இருக்கிறேன். மீடியாவில் வேலைப் பார்க்க வேண்டும் என்பது என்னுடைய நீண்ட நாள் கனவு…”

“சாப்பிட்டுக் கொண்டே பேசலாமே!”

“இதோ!” என்று ஒரு ஸ்கூப் எடுத்து வாயில் வைத்தவள், “கோர்ஸ் முடித்து ஆறு மாதங்கள் ஆகப் போகிறது. கன்சல்டன்சி மூலமாக வேறொரு சேனலில் ஆபர் வந்தது. பட்… அது மாதிரி நாலாந்திர சேனலில் பணிபுரிவதில் எனக்கு விருப்பமில்லை. நான் எடுத்துக் கொள்ளும் பணி மூலமாக சமுதாயத்தில் எதையாவது தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என எனக்குள் ஒரு வெறியே இருக்கிறது!” என்று நிறுத்தி அவன் முகம் பார்த்தாள்.

“ஓகே!” என்று அடுத்து சொல்ல தூண்டினான்.

“அதற்கு உங்களுடைய சேனல் தான் எனக்கு சரியாக இருக்கும் என நினைத்து வேலை தொடர்பாக நேரடியாக ஃபார்யு சேனல் அலுவலக மின்னஞ்சலில் நான் தொடர்பு கொண்டேன். தற்பொழுது காலி பணியிடங்கள் எதுவும் இல்லை என்று பதில் வந்துவிட்டது!” என்றாள் வருத்தமாக.

ம்… என்று தாடையை தடவியவன், “உண்மை தான், எங்கள் சேனலில் இப்பொழுது வேகன்சி எதுவும் இல்லை!” என்றான் ஜெய்.

“அது…” என தயங்கியவள், “எதுவும் வேகன்சி வரும்பொழுது நீங்கள் பெர்சனலாக எனக்கு தகவல் தர முடியுமா… நான் உங்களிடம் எதுவும் ரெக்மென்டேசன் கேட்கவில்லை, தகவல் கொடுத்தால் மட்டும் போதும். எப்படியாவது நேர்முக தேர்வில் கலந்துக்கொண்டு என்னை நான் நிரூபிப்பேன்!” என்றாள் மிருணா வேகமாக.

மெல்ல சிரித்துக் கொண்டவன், “கண்டிப்பாக… மீடியாவில் நீங்கள் எந்தப் பிரிவில் வேலைப் பார்க்க ஆர்வமாக இருக்கிறீர்கள்!” என மேற்கொண்டு அவளிடம் பேசும் பொழுது அம்மா, மகன் இருவருக்குமே அவள் இன்னொரு மணியாக தோன்றினாள்.

என்னவொரு வித்தியாசம், அவளுக்கு இருக்கும் ஆர்வம் மட்டுமே இவளோடு ஒத்துப் போனது. மற்றபடி திரைகட்டிய குதிரையாக எடுத்துக்கொள்ள இருக்கும் வேலை குறித்து மட்டுமே ரொம்பவும் தீவிரமாக பேசினாள் அவள்.

“என்ன யோசனை?” என்று வீட்டு வாசலில் காரை நிறுத்தினான் ஜெய்.

“இல்லை… நீங்கள் சொன்ன விசயத்தை யோசித்துப் பார்த்தேன். முதல் சந்திப்பின் பொழுது கூட பட்டும்படாமல் தான் அவளுடைய குடும்பத்தினரை பற்றி மிருணா கூறினாளே தவிர இன்றுவரை நம்மிடம் அவள் இயல்பாக குடும்ப விஷயங்கள் குறித்து எதுவும் பேசியதேயில்லை!”

“ம்… அதைத்தான் நான் சொன்னேன்!” என்ற கணவனிடம் தலையசைத்து விட்டு இறங்கி மதில்சுவர் கதவை அகல திறந்தாள் மணிகர்ணிகா.


தன் வேலையில் தீவிரமாக மூழ்கியிருந்த மிருணாவை மேசை மேலிருந்த கைபேசி குரல் கொடுத்து கலைக்க, நெற்றியை சுருக்கி திரையை பார்வையிட்டவள் அதில் ஒளிர்ந்த பெயரை கண்டு இணைப்பை ஏற்றாள்.

“சொல்லுங்க அண்ணா!” என இயல்பாக மொழியும் நேரம், “நீ உடனடியாக என்னுடைய கேபினுக்கு வா!” என்று படபடத்து விட்டு இணைப்பை துண்டித்து இருந்தான் ஜெய்சங்கர்.

‘என்னவாயிற்று?’

யோசனையுடன் புருவம் சுளித்தவளை கண்டு அடுத்த மேசையில் அமர்ந்திருந்த பிரியா, “என்னப்பா? எதுவும் முக்கியமான விஷயமா ஜே.பி.யிடம் பேசிவிட்டு இவ்வளவு தீவிரமாக அமர்ந்து இருக்கிறாய்?” என்று கேட்டாள்.

இவளை விட ஓராண்டு சீனியர் அவள், “இல்லை பிரியா… என்னவென்று விவரம் சொல்லவில்லை, வரச்சொல்லி இருக்கிறார் போய் பார்த்து வருகிறேன்!” என்று எழுந்தாள்.

ஜெய்யின் கேபினுக்குள் இவள் நுழைந்த நேரம் அவன் தனக்கு வந்திருந்த மின்னஞ்சலை மீண்டும் ஒருமுறை நிதானமாக படித்துப் பார்த்துக் கொண்டிருந்தான்.

“என்ன அண்ணா?”

ஆங்… என்று தன் நெற்றியை தேய்த்தபடி அவளிடம் திரும்பியவன், “பத்து நிமிடங்களுக்கு முன்னால் தான் என்னுடைய மின்னஞ்சலுக்கு இந்த தகவல் வந்தது, படித்துப் பார்!” என அவளிடம் மானிட்டரை திருப்பினான்.

ஓ.எம்.ஆர் சாலையில் அமைந்திருந்த ஐடி நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்த இருபத்திமூன்று வயது இளம்பெண் ஒருவள் இரவு எட்டு மணி அளவில் வேலை முடிந்து தனது இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பும் பொழுது ஆள் அரவமற்ற சாலையில் மர்ம நபர்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டார் என்பது மூன்று மாதங்களுக்கு முன்பாக மீடியாக்களிலும், செய்திதாள்களிலும் பரபரப்பாக சுற்றி வந்த செய்தி.

அதற்கடுத்த இரண்டு வாரத்தில் அப்பெண்ணை ஒருதலையாக காதலித்து வந்தவனும் அவனுடைய நண்பர்கள் இருவரும் சேர்ந்து தான் அக்குற்றத்தை நிகழ்த்தி உள்ளனர் என்கிற உண்மை காவல்துறையினரால் கண்டுப்பிடிக்கப்பட்டு குற்றவாளிகள் மூவரும் விசாரணைக்காக காவல் நிலையத்திற்கும், நீதிமன்றத்திற்கும் மாறி மாறி அழைத்து செல்லப்பட்ட அந்நேரத்தில் மாநிலமெங்கும் பெண்களுக்கு எதிரான இம்மாதிரி வன்முறையை கண்டித்து பல போராட்டங்களும், கண்டன ஆர்ப்பாட்டங்களும் சோசையல் மீடியாக்களில் பலவிதமான குமுறல் பதிவுகளுமாக அசுர வேகத்தில் எதிரொலித்து அதே வேகத்தில் ஓய்ந்துப் போய் வேறொரு பிரச்சினையில் திசை திரும்பி அது அடங்கியும் விட்டது.

அந்த இடைவெளியில் அக்குற்றவாளிகளும் சில நாட்கள் கழித்து நிபந்தனை ஜாமினில் வெளிவந்து சுதந்திரமாக மக்களிடையே ஊரில் உலா வருகிறார்கள்.

தற்பொழுது அந்த மூவரில் ஒருவன் கடந்த ஐந்து நாட்களுக்கு முன்பாக மாயமாக மறைந்து விட்டான் போலிருக்கிறது.

ஏற்கனவே கொலை வழக்கில் சிக்கி கைதாகி சிறை சென்று ஜாமினில் வெளிவந்தவன் என்பதால் சொந்த ஊரில் தொடர்ந்து இருக்க முடியாமல் சென்ற மாதம் தான் ஆந்திர மாநிலம் எல்லையை ஒட்டி இருக்கும் தமிழக எல்லையோர கிராமம் ஒன்றில் அவன் குடும்பம் குடியேறியிருந்தது.

அங்கிருந்து தான் அவன் காணாமல் போய் விட்டான். தங்கள் மகன் ஏற்கனவே குற்றவாளி என்பதால் அவனை குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்து கண்டுப்பிடித்து தரச்சொல்லி கேட்க அவர்கள் தயங்கிக் கொண்டு தங்களுக்கு தெரிந்த இடங்களிலெல்லாம் அவனை தேடியழைந்து ஏமாற்றம் அடைந்திருந்த வேலையில் தான் ஊருக்கு ஒதுக்குப்புறமாக அடையாளம் தெரியாத இளைஞன் ஒருவனின் உடல் உறுப்புகள் தாக்கப்பட்டு மோசமானதொரு நிலையில் கிடக்கின்றான் என்கிற தகவல் கிடைக்கவும் அவனுடைய தந்தை பதறியடித்து அங்கே ஓடிச்சென்று பார்த்தால் அது அவருடைய மகனே தான்.

முணுமுணுவென்று அந்த மின்னஞ்சலை படித்துக் கொண்டே வந்த மிருணாளிணி, “என்ன அண்ணா இது?” என்றாள் ஜெய்யிடம் திரும்பி திகைப்புடன்.

“இன்னும் மேலே படி!” என்றான் அவன்.

அதன்பிறகு போலீசாரிடம் அவன் தன்னுடைய மகன் தான் என அந்த தந்தை கதறியழுத பின்னர் முழு விசாரணையில் பாதிக்கப்பட்ட நபரின் குற்றப்பிண்ணனி முழுவதும் வெளியே அம்பலமாகி இருக்கிறது என்பது போன்ற தகவல்களுடன் அந்த இளைஞனுக்கு நேர்ந்த தாக்குதல் குறித்தும் அதில் இன்னும் விளக்கமாக பகிரப்பட்டிருந்தது.

மிருணா நெற்றியை சுருக்கி யோசனையில் ஆழ, “இப்பொழுது தான் சூட்டோடு சூடாக ஸ்பாட்டில் இருந்த சதீஷ் நமக்கு இந்த தகவல்களை அனுப்பி இருக்கிறான். அதோடு அவன் அனுப்பிய புகைப்படத்தில் அவனுடைய முகம் வேறு சிதிலமடைந்து இருக்கிறது. உன்னால் அவனை யாரென்று சரியாக அடையாளம் காண முடிகிறதா?” என்று அவளிடம் கேட்டான் ஜெய்.

உதட்டை ஏளனமாக வளைத்தவள், “ஏன் முடியாது? இந்த மாதிரி வக்கிரம் பிடித்த ஜென்மங்களை பொதுமக்களுக்கு அடையாளம் காட்டவென்று தானே நாம் தனிப்பட்ட தளமொன்றை போலியான பெயரில் உருவாக்கி அதில் நம்மை மறைத்து இவர்களுடைய புகைப்படம் முதற்கொண்டு அனைத்து தகவல்களையும் பதிவு செய்து வருகிறோம்!” என்றாள் அலட்சியமாக.

“ஷ்… சத்தமாக பேசாதே!”

“ப்ச்…” என சலித்தவள், “ஆனால் அண்ணா… நீங்கள் ஒன்றை கவனித்தீர்களா… இதேபோல் தானே ஆறு மாதங்களுக்கு முன்னால்…” என்று அடுத்து பரபரத்தவளை வேகமாக இடையிட்டான் ஜெய்சங்கர்.

“ம்… போதும், அதை நானும் யோசித்தேன். இப்பொழுது அதைப்பற்றி இங்கே நாம் எதையும் பேச வேண்டாம், மாலையில் நிதானமாகப் பார்த்துக் கொள்ளலாம். நீ உடனடியாக உன்னுடைய கேபினுக்கு சென்று இது தொடர்பான செய்தி தொகுப்பை தயார் செய். இன்னும் பதினைந்து நிமிடங்களுக்குள் இதை நாம் பிளாஷ் நியுஸாக போட வேண்டும். அப்புறம்… இவனுடைய முகம் சரியாக அடையாளம் காணும்படி நம்மிடம் இருக்கும் வேறு புகைப்படத்தையும் இந்தப் படத்துடன் இணைத்து செய்திப்பிரிவிற்கு அனுப்ப வேண்டும். அதையெல்லாம் சீக்கிரமாக முடித்து எடுத்து வா!” என்றதும் இவளும் விரைந்து தன்னிடத்திற்கு சென்றாள்.

3 thoughts on “Varathu Vantha Nayagan 3 – Deepababu”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *