*26*

 

மிருணாளினி இன்னமும் மிருத்யுஞ்சயன் தன்னை அசுர வேகத்தில் நெருங்கி விலகிச் சென்றுவிட்ட அதிர்விலிருந்து முழுதாக வெளியே வரவில்லை.

இவளின் டயருக்கு சற்று முன்னால் வந்து நின்ற அவன் சைக்கிளை கண்டு பதறி பட்டென்று பிரேக்கை அழுத்திப் பிடித்து நின்றவள் தான் அப்படியே நின்றிருந்தாள்.

“இதற்கு தான் அவனிடம் எல்லாம் வைத்துக் கொள்ளாதே என்றேன். பார்… கொஞ்ச நேரத்தில் எப்படி பயம் காட்டி விட்டான். இந்நேரம் நீ கீழே விழுந்திருப்பாய்! என்றாள் மலர்விழி தனது அச்சத்தில் இருந்து அப்பொழுது தான் சிறிது வெளிவந்தவளாக.

மிருணாவிற்கோ அது அப்படி தோன்றவில்லை. இறுதியாக தன்னிடம் பை சொல்லிச் சென்றானே என அவன் சென்ற திசையை திரும்பி பார்த்தாள். இவள் கண்களை விட்டு மின்னலென மறைந்திருந்தான் அவன்.

தனது அதிகப்படியான பேச்சிற்கு ஒரு பயம் காட்டவே அவன் அப்படி செய்திருக்கிறான் என்பது புரியவும் மெல்ல சிரித்தபடி தனது மிதிவண்டியை அழுத்தினாள் பெண்.

கூடவே தானும் தன் சைக்கிளை செலுத்தியபடி, “என்னடி லூசு மாதிரி சிரிக்கிறாய்? என்றாள் மலர் சந்தேகமாக.

இவளோ மிருதனின் நிலையை எண்ணி மேலும் வாய் விட்டு நகைக்க ஆரம்பித்தாள்.

‘அவன் பெயரை மாற்றிவிடப் போகிறேன் என்று கூறியதும் தானே அரண்டுப் போய் உடனடியாக என்னிடம் பேசினான்!

தன்னிடம் பதில் எதுவும் கூறாமல் வெடிச்சிரிப்பு சிரித்துக் கொண்டு வருபவளை திரும்பி பார்த்து, “அதுசரி… முற்றிவிட்டது போலிருக்கிறது. எதற்கும் கொஞ்சம் தள்ளியே வா மலர்! என்று தனக்குத்தானே அறிவுறுத்தியபடி உடன் வருபவளை கண்டு மிருவின் புன்னகை மேலும் விரிந்தது.

தன் வீட்டை நோக்கி சென்றுக் கொண்டிருந்த மிருதனின் முகமும் பூவிற்கு ஒத்ததாய் மலர்ந்து தான் கிடந்தது. மனம் எங்கும் காலையில் இருந்து தான் சூட்டிகையாக பார்த்து வரும் மிருணாவின் நினைவுகளே நிறைந்து இருந்தது.

“என்னம்மா தம்பி இன்று அதிசயத்திலும் அதிசயமாக இப்படி சிரித்துக்கொண்டே வருகிறது? என்று வீட்டுவேலை செய்யும் இசக்கியம்மாள் ஆச்சரியமாக கேள்வி எழுப்ப தமிழ்செல்வியும் மகனின் முகத்தை கூர்ந்துப் பார்த்தார்.

கணவர் புகழேந்தியின் பிரதிபிம்பமாக பிறந்திருக்கும் தனது ஒற்றை மகனின் தோற்றம் மட்டுமல்லாது குணங்களுமே அவனுடைய தந்தையை ஒத்ததாக தான் அதிகம் இருக்கும். அளவான பேச்சு, அளவான சிரிப்பு என்று தங்கள் வீட்டினர் தவிர்த்து வெளியாட்களிடம் அளவுடன் கூடிய நட்பில் தான் பழகுவர் இருவரும். அப்படிப்பட்டவன் இன்று சிரித்த முகமாக வருவது அவருக்குமே வியப்பை கொடுத்தாலும் தங்கள் வரைமுறைகளை விட்டு பணிப்பெண்ணிடம் அவர் வெளிப்படையாக அதைச் சொல்ல முடியாதே.

“பள்ளியில் சினேகிதப் பசங்களோடு சேர்ந்து ஏதாவது நகைச்சுவை கதைப்பேசி வந்திருப்பானாக இருக்கும். சரி, நான் போய் அவனுக்கு டிபன் கொடுக்கிறேன், நீ இந்த வேலையை முடித்துவிட்டு வீட்டிற்கு கிளம்பு! என்று அவள் பேச்சை கத்தரித்துவிட்டு மகனின் பின்னே உள்ளே சென்றார்.

இரவு டிவியில் மூழ்கியிருந்தவன் திடீரென்று சத்தமிட்டு நகைக்கவும், உள்ளறையிலிருந்து வேகமாக வெளியே வந்துப் பார்த்தார் செல்வி.

மிருதன் குலுங்கி குலுங்கி சிரித்துக் கொண்டிருந்தான்.

“என்னடா கண்ணா? என்று ஆர்வமாக மகனின் தலைக் கோதினார் அன்னை.

“அம்மா… இன்று ஸ்கூல்க்கு ஒரு புதுப்பெண் வந்திருந்தாள், சென்னையாம்… நேற்று வயிற்றுவலி என்பதால் விடுமுறை எடுத்து விட்டேன் இல்லை. பார்த்தால்… ஒரே நாளில் நிறைய பேரை பிரெண்டாக்கி வைத்து இருக்கிறாள். அவள் ரொம்ப ஜாலி டைப் போலிருக்கிறது, எல்லோரிடமும் ஈசியாக பேசி விடுகிறாள். என்னிடம் கூட பேச முயன்றாள், ஆனால் நான் பேசவில்லை! என்றான் தெனாவெட்டாக.

அம்மாவாக பதவியேற்ற இத்தனை ஆண்டு காலத்தில் தன்னுடைய மகனின் வாயிலிருந்து எந்த ஒரு பெண்ணை பற்றியும் இப்படியெல்லாம் இவருக்கு செய்தி வந்திராததால் இவனுக்கு அவளை பிடித்திருக்கிறது என்பது நன்றாகவே புரிந்துப் போனது அந்த தாய்க்கு.

“ஏன்பா அவள் பேசினால் நீயும் பேச வேண்டியது தானே?

“இல்லைம்மா… அவள் ரொம்ப வாயாடியாக இருக்கிறாள். எனக்கு பிடிக்கவில்லை! என்று முகத்தை சுளித்தான்.

தனது பெயரை அவள் கேலி செய்தது வேறு மனதில் தோன்றி அதிருப்தியை கொடுத்தது.

ஓ… என அமைதியாக அதை உள்வாங்கிக் கொண்டவர், “சரி… எதற்காக நீ அப்படி சிரித்தாய்? என்று கேட்க, அவனோ மீண்டும் வெடிச்சிரிப்பு சிரித்தான்.

“அது அந்த லூசை நினைத்து தான்மா… அவள் எப்படி பேசுகிறாள் தெரியுமா? என்றவன் கண்கள் ஒளிர அவள் மலரை கையெழுத்து விஷயத்தில் எப்படியெல்லாம் கேலிப் பேசினாள் என்று அந்த நேரத்தின் நினைவுகளை இழுத்துப் பிடித்து ரசிப்புடன் சொல்லிக் கொண்டிருந்தான்.

வாய் தான் ஜம்பமாக அந்தப் பெண்ணை பிடிக்கவில்லை என்று சொல்கிறதே தவிர மகனுக்கு அவளிடம் தோன்றி இருக்கும் ரசனை கூடிய விரைவில் அவளை தன்னுடைய தோழி என ஒருநாள் தனக்கு அறிமுகப்படுத்தப் போவது உறுதி என்றெண்ணிக் கொண்டார் அவர்.

மறுநாள் காலையில் தன் சைக்கிளை உரிய இடத்தில் நிறுத்தும் பொழுதே அருகில் நின்ற சைக்கிளை கண்டு அவன் உதடுகள் தன்னால் முறுவலித்துக் கொண்டது.

மிருதன் வகுப்பறைக்குள் நுழையவும் மலரிடம் எதையோ விவாதித்துக் கொண்டிருந்த மிரு, இவன் வரும் அரவத்தில் திரும்பிப் பார்த்து புன்னகையுடன் ஹாய் என்று இதழசைத்தாள்.

இவனோ வேண்டுமென்றே அலட்சியமாக தன் விழிகளை திருப்பிக் கொண்டு சென்று தன்னிடத்தில் அமர்ந்தான்.

நம் பெண்ணோ, ‘டேய்… உன்னை எப்படியாவது எனக்கு பிரெண்டாக்கி காண்பிக்கின்றேனா இல்லையா பார்! என்று தனக்குள் சூளுரைத்தபடி திரும்பி அவனை முறைத்தாள்.

மிருணாவின் முறைப்பு மிருதனுக்குள் ஒரு குதூகலத்தை கொடுக்க முகத்தில் எதையும் காண்பிக்காமல் அமைதியாக அமர்ந்திருந்தான்.

“ஏன்டி என் சொல்பேச்சை கேட்டு நீ அடங்கவே மாட்டாயா? நேற்றாவது உன்னை பயமுறுத்த மட்டும் தான் செய்தான். நீ இப்படியே அவனிடம் வம்பு வளர்த்துக் கொண்டிருந்தாய் என்றால் நிச்சயம் ஒருநாள் உன்னை கீழே தள்ளி விட்டு விடுவான்! என்று பயமுறுத்தினாள் மலர்விழி.

“நான் எல்லாம் என் அம்மா பேச்சையே கேட்க மாட்டேன். நீ எம்மாத்திரம்… இதுவரை என்னுடைய நட்பை யாரும் இந்த அளவிற்கு மோசமாக அலட்சியப்படுத்தியது இல்லை, இவன் மட்டும் தான் இப்படி செய்கிறான். அவனா நானா என்று ஒரு கை பார்க்காமல் விடமாட்டேன்! என மிருணா தீர்மானமாக கூறவும், ‘ஆகமொத்தம்… நீ என்னை நன்றாக வைத்து செய்யப் போவது உறுதி. அவளுடன் தானே எந்நேரமும் சுற்றுகிறாய் என்னை பற்றி அவளிடம் உனக்கு சொல்லத் தெரியாதா என்று அவன் என்னை பிடித்து எப்பொழுது மொத்தப் போகிறானோ தெரியவில்லை! என கவலையில் தலையில் கைவைத்துக் கொண்டாள் மலர்.

அருகில் குனிந்து, “ஏன்டி திடீரென்று தலைவலிக்கிறதா? என்று அப்பாவியாக சோகம்காட்டி கேட்க முயல்பவளை பார்த்து அவள் பல்லைக் கடித்தவாறு திரும்பிக் கொள்ள, இவள் முகம் குறும்பில் மலர்ந்தது.

இப்படியே நாட்கள் செல்ல, மிருணா வம்படியாக மிருதனை நெருங்கி சீண்டுவதை மட்டும் விடவே இல்லை. அவளுக்கு அவளுடைய பிடிவாதம் பெரியது என்றால் நம் நாயகனும் சளைத்தவன் அல்லவே. தன்னை நெருங்கி வரும் அவள் நடவடிக்கைகளை ஒவ்வொரு நாளும் ரசித்தாலும் அவளை தள்ளி நிறுத்தியிருப்பது போன்ற தோரணையை மட்டும் கைவிடாமல் கவனமாக விலகி நின்றான் அவன்.

அன்று பள்ளி முடிந்து வீட்டிற்கு கிளம்பும் பொழுது, “ஏன் மலர் அந்த ராகவி ஒரு மாதிரி டல்லாக இருக்கிறாள்? இப்பொழுது எதுவும் மார்க் சீட் கூட தரவில்லையே! என்று தோழியிடம் தன் சந்தேகம் கேட்டாள் மிரு.

“ப்ச்… நாளை அவளுக்கு பர்த்டே, அதுதான் சோகமாக இருக்கிறாள்!

“என்ன? பர்த்டே என்றால் புது டிரஸ், செலிப்ரேசன், ட்ரீட் என்று எவ்வளவு சந்தோசமாக இருக்கும். இவள் ஏன் சோகமாக வேண்டும்? என்றாள் புரியாமல்.

“உனக்கு தெரியாது… இதே பள்ளியில் தான் எங்களுடன் அவள் எல்.கே.ஜி.யிலிருந்து படித்து வருகிறாள். சின்ன வயதில் தெரியவில்லை, அவள் பிப்த் படிக்கும் பொழுது தான் பர்த்டே பற்றிப் பேசும்பொழுது ஒருமுறை அழுது விட்டாள். என்னவென்று விஷயத்தை கேட்கும் பொழுது தான் தெரியும், அவள் பிறக்கும் பொழுது அவளுடைய அம்மா இறந்து விட்டார்களாம்! என்று மலர் கூற, “ஐயோ… என பதறினாள் மிரு, “ம்… அதனால் அவளுடைய வீட்டில் அவள் பிறந்தநாளை செலிப்ரேட் பண்ண மாட்டங்களாம். அன்று புது டிரஸ் கூட கிடையாது, தீபாவளி டிரஸ் தான் போட்டு வருவாள்! என்றாள் வருத்தமாக.

மிருணாவிற்குமே கூட ராகவியை நினைத்து கவலையாக இருந்தது. வீட்டில் இவள் எப்பொழுதுமே அப்பா செல்லம் தான் என்றாலும் தன்னிடம் கண்டிப்பு காண்பித்து பாசம் பொழியும் அம்மாவையும் இவளுக்கு மிகவும் பிடிக்கும். அவர் ஒன்று சொல்ல இவள் ஏட்டிக்கு போட்டிக்கு ஒன்று செய்ய என வீடே அமர்க்களப்படும். ஆனாலும் இருவரும் ஒருவரை மற்றொருவர் எப்பொழுதுமே வெளியாட்களிடம் விட்டுக்கொடுத்தது கிடையாது.

மறுநாள் காலை தன் வகுப்பிற்குள் நுழைந்த மிருதன் வியப்புடன் விழிகளை சுழற்றினான்.

மிருணாவும் இன்னும் சில மாணவிகளும் சேர்ந்து வண்ண வண்ண தோரணங்களால் வகுப்பறையை அழகுற அலங்கரித்துக் கொண்டிருந்தனர். அவர்களுக்கு எட்டாத உயரத்திற்கு எல்லாம் ஒன்றிரண்டு மாணவர்களை அவள் கூட்டு சேர்த்துக் கொண்டிருந்தாள்.

‘நல்லவேளை… இவளுடைய பிரெண்ட் ரெக்வெஸ்ட்டை நான் அக்செப்ட் செய்யவில்லை. இல்லையென்றால்… என்னையும் இப்படி குரங்கு மாதிரி மேலே கீழே ஏறி இறங்க செய்திருப்பாள்! என்றெண்ணிக் கொண்டான்.

‘ஆனால்… இன்று என்ன செலிப்ரேஷன்? நேற்று கூட வகுப்பு ஆசிரியர் எதுவும் சொல்லவில்லையே…’ என்று இவன் சிந்திக்கும் நேரம் அவரே வகுப்பிற்குள் வர, அனைவரும் எழுந்து நின்று காலை வணக்கம் தெரிவித்தனர்.

“குட்மார்னிங் ஸ்டூடண்ட்ஸ்! என பெரிதாக முறுவலித்தவர் அனைவரையும் அமரச்சொல்லி விட்டு, “மிருணாளினி… இங்கே வா! என்று அவளை முன்னால் அழைத்தார்.

அவள் சென்று அவரருகில் நின்றதும் புன்னகையுடன் அவளின் தோளில் கரம்போட்டு, “இன்று காலை பள்ளிக்கு நேரமாக வந்து என்னை தனியாக சந்தித்த மிருணா என்னிடம் ஒரு ரெக்வெஸ்ட் வைத்தாள். இந்த வருடம் தான் நம் பள்ளியில் புதிதாக சேர்ந்தப் பெண் என்றாலும் தன்னுடைய நட்பால் அனைவரின் மனதையும் குறுகிய காலத்திலேயே கவர்ந்துவிட்டாள் இந்த பெண். இப்பொழுது அவள் கேட்ட விஷயம் கூட எனக்கு ரொம்பவே நியாயமாக பட்டதால் அதற்கு இங்கே அனுமதி கொடுத்திருக்கிறேன். அதனுடைய ஒரு பகுதி தான் இந்த அலங்காரம் எல்லாம். இனி அதை அவளே சொல்வாள்! என்றவர் அவளிடம் கண் காட்ட, அவள் ராகவியை அழைத்தாள்.

“ராகவி இங்கே வா!

அவளோ தயக்கத்துடன் ஒன்றும் புரியாமல் மெதுவாக நடந்துச் செல்ல, தன்னிடம் வந்தவளின் கரம்பற்றி அருகே இழுத்து நிறுத்திக் கொண்டவள் அனைவரின் குழம்பிய முகத்தை பார்த்து மெல்ல முறுவலித்தாள்.

“பிரெண்ட்ஸ்… டெக்கரேசன் எதற்கு என்று கேட்டவர்களிடம் எல்லாம் சஸ்பென்ஸ் வைத்தே நான் வேலை வாங்கி விட்டேன். அதற்கு ஒரு சாரி… அப்புறம் இதெல்லாம் எதற்கு என்றால் நம்முடைய வகுப்பு தோழி ராகவியின் பிறந்தநாள் இன்று. அவளை சியர்அப் செய்யும் விதமாக தான் நாம் இங்கே அதை கொண்டாட இருக்கிறோம்! என்றவள் திரும்பி, “மெனி மோர் ஹேப்பி ரிட்டர்ன்ஸ் ஆப் தி டே ராகவி! என சிரிப்புடன் அவள் கரம்பற்றி குலுக்கினாள்.

பிறந்தநாள் பெண்ணோ திகைப்புடன் அவளை பார்த்து நிற்க, “மலர்! என குரல் கொடுத்தாள் மிரு.

மலர்விழி வேகமாக ஒரு அட்டைபெட்டியை எடுத்து வந்து ஆசிரியரின் மேஜை மீது வைக்க, பெண்கள் இருவரும் மளமளவென்று அதைப் பிரித்து உள்ளிருந்த பிறந்தநாள் கேக்கின் மீது மெழுகுவர்த்திகளை அடுக்கினர்.

பார்த்திருந்த மிருதனிற்கு பெரும் வியப்பு, அதோடு சேர்ந்து சிறு குழப்பமும் கூட.

மிரு கேண்டில்களை ஏற்றி, ராகவியை கேக்கின் முன்னால் இழுத்து நிறுத்த, அவளோ கலங்கிப்போய் நின்றிருந்தாள்.

“ம்… கேண்டிலை ஊதிவிட்டு, கேக் கட் பண்ணு! என்றாள்.

கண்ணை மறைத்த நீர்ப்படலத்துடன் குனிந்து மெழுகை ஊதி அணைத்தவள் அடுத்து நடுங்கும் கரங்களால் கத்திக் கொண்டு கேக்கை வெட்டினாள். முழு வகுப்பறையும் கைத்தட்டி அவளுக்கு பிறந்தநாள் வாழ்த்து பாடியது.

அதற்குமேல் முடியாமல் மிருணாவை கட்டியணைத்து அவள் வெடித்து அழத் துவங்க, பார்த்திருந்த அனைவரும் அதிர்ந்து தான் போயினர். விஷயம் தெரிந்தவர்கள் மட்டும் அவளுக்காக மனம் வருந்தி நின்றிருந்தனர்.

“ஏய் பிரவீணா… எதற்காக பிறந்தநாள் அதுவுமாக இந்த லூசு ராகவி இப்படி அழுகிறாள்? என சந்தேகம் கேட்டான் ரவி, அவளுக்கு அடுத்த வரிசையில் அமர்ந்திருப்பவன்.

“வாயை மூடுடா எருமை… அவள் எவ்வளவு பாவம் தெரியுமா? என்றவள் ராகவியை பற்றி எல்லாம் கூறி, “அதனால் தான் மிருணா நம் ஆசிரியரிடம் அனுமதி வாங்கி அவள் வாங்கி வந்திருந்த கேக்கை கட் பண்ண வைத்தாள். வீட்டில் எப்படியோ இருந்துவிட்டுப் போகட்டும், இனிமேல் வருடா வருடம் அவள் பிறந்தநாளை நாம் அனைவரும் இப்படித்தான் கொண்டாட வேண்டும் என்றும் சொன்னாள். இவள் நம் கிளாஸ்க்கு கிடைத்த மிகப்பெரிய கிப்ட், ஸ்வீட் கேர்ள்! என மனதார தோழியை பாராட்டினாள்.

அனைத்தையும் சற்று தள்ளி நின்றுக் கேட்டிருந்த மிருதனின் இதயம் மிகவும் நெகிழ்ந்துப் போனது. விழிகளை திருப்பி அவளை பார்க்க, தன் மீது சாய்ந்து அழும் ராகவியை ஒரு தாய் போல முதுகை தடவி ஆசுவாசப்படுத்தியபடி அவள் தன் கண்களில் வழியும் நீரை துடைத்துக் கொண்டிருந்தாள்.

இத்தனை சிறியவளாக தோற்றம் அளிக்கும் இவளுக்குள் இத்தனை அன்பான இருதயமா என்று மெய்சிலிர்த்து நின்றான் மிருத்யுஞ்சயன்.

மாலை வழக்கம் போல் மலருடன் தனது வீட்டிற்கு கிளம்பிய மிருணாவின் பாதையின் முன்னே சர்ரென்று தனது சைக்கிளில் குறுக்கே வந்து நின்றான் மிருதன்.

“ஏய்… என்று பதறி ப்ரேக்கிட்டவள் நிமிர்ந்து அவனை முறைத்து, “உனக்கு வேறு வேலையே இல்லையா… நான் தான் இன்று உன்னை எதுவும் சீண்டவில்லையே… அப்புறம் எதற்காக இப்படி குறுக்கே வருகிறாய்? என படபடத்தாள்.

அவனோ இவளை சட்டை செய்யாமல் மலரிடம் திரும்பி, “நீ கிளம்பு, நான் இவளிடம் பேச வேண்டும்! என்றான்.

ஆங்… என்று முகத்தை சுருக்கி அவனை நோக்கி ஒரு கேவலமான பார்வையை வீசியவள், இங்கிருந்து நாம் நகர்ந்து செல்லலாமா வேண்டாமா என மலர் மிகவும் தயங்கி யோசிப்பதை பார்த்து, “நீ இங்கேயே நில்! என்றுவிட்டு அவனிடம் திரும்பி, “என்ன விஷயம்? என்றாள் எடுப்பாக.

“ப்ச்… ஏய்… உன்னை போகச் சொன்னேன் அல்லவா… என்று மீண்டும் அவன் மலர்விழியை சத்தமாக அதட்டவும் அவள் மிரண்டு விழித்து, “மிரு… நான் தெருமுனையில் நிற்கிறேன், நீ பேசிவிட்டு வா! என்றுவிட்டு சைக்கிளை விமானமாக்கி பறந்து சென்றாள்.

“டேய்… நீ ஏன் இப்படி ரௌடி மாதிரி பிஹேவ் செய்கிறாய்? ஒரு செவன்த் படிக்கின்ற பையன் மாதிரியா நடந்துக் கொள்கிறாய்… என்னவோ பத்தாவது படிக்கிறவன் போல ஆளும் உயரமாக இருந்து ரொம்ப அராஜகமாக நடந்துக் கொள்கிறாய். இப்பொழுது எதற்காக அவளை அப்படி விரட்டி அடித்தாய்? என்றாள் மிருணா கோபமாக.

அவனோ அவளை பார்த்து புன்னகைத்து, “இந்த ஸ்கூலில் டீச்சர்ஸ் கூட என்னை இப்படி டேய்… என சொன்னதில்லை. முதல் முதலாக நீதான் சொல்கிறாய். இதற்கு உன் மேல் எனக்கு பயங்கர கோபம் வந்திருக்க வேண்டும். ஆனால் கோபம் வருவதற்கு பதில் நீ என்னிடம் காட்டும் உரிமை இது என்று புரிகிறது. அது பிடித்தும் இருப்பதால் ரொம்ப மகிழ்ச்சியாக தான் இருக்கிறது! என்றான் பாவனையாக.

ம்… என்று எதிரில் இருந்தவனை அவள் புருவங்கள் சுளித்துப் பார்க்க, “பிரெண்ட்ஸ்? என பளீரென்று சிரித்து அவளின் முன்னே தனது வலது கரத்தை நீட்டினான் மிருத்யுஞ்சயன்.

2 thoughts on “Varathu Vantha Nayagan 26 – Deepababu”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *