*2*

 

“ச்சை… இன்று என்ன வேலை இவ்வளவு நேரம் இழுத்தடித்து விட்டது!” என அலுப்புடன் கைகளை உயரே தூக்கி சோம்பல் முறித்த மனைவியை ஒரு பார்வை பார்த்த ஜெய், “பின்னே… டி.ஆர்.பி. ரேட்டிங் உயர்த்த வேண்டி பண்டிகை விடுமுறை நாட்களில் நம் சேனல் பார்வையாளர்களை நம் பக்கம் பிடித்து வைக்க வேண்டும் என்றால் இதுப் போன்ற விசேஷ நிகழ்ச்சிகளை நடத்தி தான் கவர்ந்திழுக்க வேண்டும்!” என்றவாறு தன் கணினியில் மிருணா சமர்ப்பித்த வீடியோ க்ளிப்பிங்கை பதிவேற்றம் செய்துக் கொண்டிருந்தான்.

“ஹும்… அது என்னவோ வாஸ்தவம் தான். ஏதோ புண்ணியத்துக்கு நம் சி.ஈ.ஓ. கொஞ்சம் நாம் சொல்வதை காதுக் கொடுத்து கேட்பதால் மற்ற சேனல்களில் வருவதுப் போல் கண்ட கண்ட கேவலமான போட்டி நிகழ்ச்சிகளை நடத்தாமல் மக்களுக்கு பயனுள்ள சுவாரசியமானதை தரமாக கொடுக்கிறோம்!” என்றாள் மணிகர்ணிகா.

“அப்புறம்… அதற்கு நாம் மெனக்கெட வேண்டியிருப்பதை மறந்து இப்படி அலுத்துக் கொள்கிறாய்!”

“சரிப்பா விடுங்கள்… தெரியாமல் சொல்லி விட்டேன். மிரு… நீ எப்படி வீட்டிற்கு போகப் போகிறாய்? மணி ஒன்பது ஆகி விட்டதே!”

“என்னுடைய வண்டியில் தான் அண்ணி!”

“ஏய்… இந்த நேரத்தில் நீ தனியாக ஸ்கூட்டியில் போக வேண்டாம். மணியும் அவள் வண்டியை இங்கே நிறுத்தி விட்டு என்னுடன் காரில் தான் வருகிறாள். நாங்களே உன்னை வீட்டில் டிராப் செய்து விடுகிறோம்!” என்றான் ஜெய்சங்கர்.

“ஒன்றும் பிரச்சினை இல்லைண்ணா… அரைமணி நேரப் பயணம் தானே. ஓரளவு ஆள் நடமாட்டம் இருக்கும். உங்கள் வீடு இருக்கும் திசைக்கு எதிர் திசை எங்கள் வீடு. உங்களுக்கும் தேவையில்லாத அலைச்சல் தான் விடுங்கள் நான் பார்த்துக் கொள்கிறேன்!”

ஜெய் மறுத்து பேசும் முன் மணி அவளை அதட்டினாள்.

“நீ சும்மா இரு, ஜேபி சொல்வது சரி தான். நீ எங்களுடன் வருகிறாய், காலையில் வேண்டுமென்றால் அப்பாவுடன் அலுவலகம் வந்து விடு!” என திட்டவட்டமாக அவள் கூறவும் அதற்குமேல் இவளும் எதுவும் மறுத்துப் பேசாமல் ஒத்துக் கொண்டாள்.

தன் வீட்டு வாசலில் கொண்டு வந்து விட்டவர்களை மரியாதை நிமித்தமாக வீட்டினுள் அழைத்தாள் மிருணா.

வாசலுக்கு பரபரவென்று வந்த துளசி மகளை ஒருமுறை வேகமாக கீழிருந்து மேல்வரை அளந்து அவளின் நலத்தை உறுதி செய்து நிம்மதியடைந்தவராக அருகில் வந்து நின்ற ஜெய்யையும், மணியையும் யோசனையுடன் பார்த்தார்.

லேசாக தொண்டையை செருமிய மிரு, “அண்ணா… அம்மா!” என்றாள் அறிமுகத்தின் அடையாளமாக.

“ஓ… வணக்கம்மா, என் பெயர் ஜெய்சங்கர். இவள் என் மனைவி மணிகர்ணிகா!” என்று கரம் குவித்தான்.

“ஆங்… உள்ளே வாங்க!” என அவர் சங்கடமாக அழைக்கும் பொழுதே வேகமாக வெளியே வந்த திருமூர்த்தி, “ஏன்மா இவ்வளவு நேரம்? வீட்டிற்கு ஒரு போன் செய்து சொல்லி இருக்கலாம் அல்லவா… உன்னுடைய நம்பரை தொடர்பு கொண்டாலும் நீ எடுக்கவில்லை!” என்றார் கவலையுடன்.

“இல்லை… சைலண்டில் போட்டிருந்தேன் கவனிக்கவில்லை. நீங்கள் உள்ளே வாங்க!” என வந்தவர்களை வரவேற்று தன் பெற்றோரிடம் ஒதுங்கி வீட்டினுள் சென்றாள்.

“மிரு… வரத் தாமதமாகும் என்று நீ வீட்டிற்கு தகவல் தெரிவிக்கவில்லையா…” என்று ஜெய் மெலிதாக கண்டனம் தெரிவிக்கவும், “இல்லைண்ணா… நான் ஒருமுறை முயன்ற பொழுது இணைப்பு கிடைக்கவில்லை. அப்புறம் மறந்து விட்டேன்!” என உள்ளிருந்து கூலாக பதில் கொடுத்தவள், “சரி, என்ன குடிக்கிறீர்கள்? டீ ஆர் காபி?” என்று கேட்டாள்.

“ஏய்… நேரம் என்ன ஆகிறது? அதெல்லாம் எதுவும் வேண்டாம். நீ வெளியே வா, நாங்கள் கிளம்புகிறோம்!” என்று குரல் கொடுத்தான் ஜெய்.

தன் பிள்ளை மற்றவர் முன் பொய்யுரைப்பது புரிந்தாலும் லேசாக முகம் கன்ற அமைதியாக நின்றிருந்தவர்களை இதழ் கடித்து ஆழ்ந்துப் பார்த்துக் கொண்டிருந்தாள் மணி.

“அதெல்லாம் எனக்கு தெரியாது, முதல்முறையாக வந்து இருக்கிறீர்கள். உட்காருங்கள், பால் எடுத்து வருகிறேன்!”

மிருவின் கட்டளையில் இவன் திரும்பி மனைவியை பார்க்க, “சாரி… உட்காருங்கள். அவள் வரத் தாமதமாகவும் எங்களுக்கு கொஞ்சம் பதற்றமாகி விட்டது!” என்று உபசரித்த மூர்த்தியிடம் மெல்ல முறுவலித்து விட்டு இவர்கள் அமர, “நான் போய் பழம் நறுக்கி எடுத்து வருகிறேன்!” என நகர முயன்ற துளசியை வேகமாக கையை பற்றி தடுத்து தன் அருகே அமர வைத்தாள் மணி.

“இந்த நேரத்தில் எங்களால் பழம் எல்லாம் சாப்பிட முடியாது!”

“நீங்களும் உட்காருங்கள் அப்பா, சாரி… அவள் உங்களுக்கு தகவல் கொடுத்து இருப்பாள் என்று நாங்கள் நினைத்து விட்டோம்!” என வருத்தத்துடன் உரைத்தான் ஜெய்.

“இல்லை இருக்கட்டும்!” என தடுமாறியவர், “உங்கள் நம்பர் தருகிறீர்களா… இதுபோல் சிக்னல் ப்ராப்ளம் எதுவும் வரும் பொழுது நாங்கள் விவரம் கேட்டுக் கொள்வதற்கு வசதியாக இருக்கும்!” என்றார் மூர்த்தி தயக்கத்துடன்.

“சியூர்!” என இங்கே இவன் தன் கார்டை எடுத்து அவரிடம் கொடுக்க, உள்ளே முகம் இறுகியவளாக மிருணாளிணி பாலை கப்பில் ஊற்றிக் கொண்டிருந்தாள்.

“உங்களுடைய நிகழ்ச்சிகளை நான் தொடர்ந்து பார்த்து வருகிறேன்!” என பொதுவாக அவர் ஜெய்யிடம் பேசிக் கொண்டிருக்க மணி துளசியிடம் திரும்பி புன்னகைத்தாள்.

”அப்புறம்மா… உங்கள் பெண் உங்களை எப்படி எல்லாம் என்னிடம் டேமேஜ் செய்கிறாள் என்று ஏதாவது வீட்டில் சொல்வாளா மாட்டாளா… தினமும் அவளே சமைத்து எடுத்துக் கொண்டு வருகிறாளே என கேட்டால் உங்கள் சமையல் சுத்தமாக சரியில்லை என்று குறைக் கூறுவாள். வெளியே எங்களிடம் அப்படி உதார் விட்டுவிட்டு வீட்டில் நீங்கள் செய்து தருவதை தானே அவள் சாப்பிடுவாள்?” என்றாள் அவரிடம் கேலியாக.

மணியின் சொல்லில் முகம் வாடியவர், “இல்லைம்மா… வீட்டிலும் அவளே தான் தனக்கு வேண்டியதை சமைத்து சாப்பிட்டுக் கொள்வாள். என்னுடைய சமையலை அவள் ஒரு நாளும் சாப்பிட மாட்டாள்!” என்று கூறியவருக்கு சட்டென்று துக்கத்தில் தொண்டையை அடைக்க தன்னை மறைத்துக் கொள்ளும் முயற்சியாக வேகமாக எழுந்தவர், “நான் போய் அவள் என்ன செய்கிறாள் என்று பார்த்து வருகிறேன்மா!” என எழுந்த நேரம் மிருணாவே வந்தாள்.

இருவரிடமும் பாலை கொடுத்துவிட்டு தனக்கு ஒன்றை எடுத்து கொண்டு அவள் அமர, “ஏய்… அப்பா, அம்மாவுக்கு?” என கேள்வி எழுப்பினான் ஜெய்.

மகள் பதிலளிக்கும் முன்னே, “அதெல்லாம் ஆயிற்று சார், இவ்வளவு நேரம் கழித்து குடித்துப் பழக்கம் இல்லை!” என்று சமாளிப்பாக புன்னகைத்தார் மூர்த்தி.

அவர்கள் விடைப்பெற்று செல்லவும், மிருணாளிணி விரைந்து தனது அறைக்குள் நுழைந்து கதவை சாற்றிக் கொண்டாள்.

துளசியோ பொங்கிய அழுகையை புடவை தலைப்பை வாயில் வைத்து அழுத்தி கட்டுப்படுத்தியவராக சோபாவில் அமர்ந்து மௌனமாக உடல் குலுங்க ஆரம்பித்தார். வாசல் கதவை சாற்றிவிட்டு வந்த மூர்த்தியும் மனைவியின் வேதனைக்கு கொஞ்சமும் குறையாமல் கண்கள் கலங்க அவர் அருகே அமர்ந்தவர் ஆதரவாய் அவரை தன் மீது சாய்த்துக் கொண்டார்.

அறைக்குள் சுவற்றை வெறித்துப் பார்த்தபடி மெத்தையில் படுத்திருந்தவளை அவளின் அலைபேசி ஒலி எழுப்பி கலைத்தது. விழிகளை திருப்பி கடிகாரத்தை பார்த்தவள் அழைப்பது யாரென புரிந்து மெல்ல முகம் இளகியவளாக இணைப்பை ஏற்றாள்.

“சொல்லுடா தம்பி… குட் ஈவ்னிங்!” என்று மென்மையாக புன்னகைத்தாள் மிருணா.

“குட் ஈவ்னிங்க்கா! இன்னும் தூங்கவில்லை தானே?” என்று கேட்டான் பிரசன்னா.

“இல்லைடா… இப்பொழுது தான் வீட்டிற்கு வந்தேன். நீ என்ன அலுவலகத்தில் இருந்து கிளம்பி விட்டாயா?”

“ம்… இன்னும் வேலை இருக்கிறது. சரி… உங்களுக்கு தூங்கும் நேரம் தாண்டி விடுமே என்று தான் இடையில் கிடைத்த ஓய்வு நேரத்தில் உனக்கு அழைத்தேன்!” என்று தற்பொழுது மிருவிடம் பேசிக் கொண்டிருப்பவன் அவளின் ஒரே உடன்பிறப்பான அவளுடைய தம்பி, கடந்த மூன்று வருடங்களாக ஜெனிவாவில் பணிபுரிந்து வருகிறான்.

“ஓ… நேரத்திற்கு சரியாக சாப்பிட்டு விடுடா. வேலை வேலையென்று உடல் நலனை கெடுத்துக் கொள்ளாதே!” என்று பெரியவளாய் தனக்கு அறிவுறுத்தும் அக்காவை நினைத்தால் அவனுக்கு கவலை தான் பிறந்தது.

‘வழக்கமானவள் இவள் அல்லவே… தங்களுடைய அடாவடி, குறும்புமிக்க தன்னிடம் எதற்கெடுத்தாலும் சண்டையிடும் அக்காவை எங்கள் குடும்பம் தொலைத்து பதினோரு வருடங்கள் ஆகி விட்டதே!’

“என்னடா அமைதியாகி விட்டாய்? நீ நன்றாக இருக்கிறாய் தானே?” என்றாள் சகோதரி சட்டென்று கவலையுடன்.

“எனக்கென்ன… நன்றாக தான் இருக்கிறேன். ப்ச்… வேறு யோசனை…” என்றவனிடம் இவள் என்னவென்று விசாரிக்க, “வேலை முடிந்து வருவதற்கு தாமதமானால் வீட்டிற்கு ஒரு போன் செய்து சொல்லலாம் அல்லவா… ரொம்பவே பயந்து விட்டார்கள்!” என்று பிரசன்னா வருத்தத்துடன் கூற இவள் முகம் கோபத்தில் சிவந்தது.

“ஓ… நாடு விட்டு நாடு… இந்தியா தாண்டி சுவிஸர்லாந்து வரை புகார் பறந்து வந்து விட்டதா?” என்று ஏளனமாக கேட்டபடி எழுந்து அமர்ந்தவளிடம் அவன், “அக்கா!” என்றபடி குறுக்கே பேச முயல்வதை தடுத்தாள் அவள்.

“பேசுவதற்கு வேறு எதுவும் இல்லை என்றால் நான் வைக்கிறேன் பிரசன்னா!” என்றாள் இறுகிய குரலில்.

“நீ ஏன்…” என்று எதையோ கேட்க வந்து மாற்றியவன், “இன்னும் எத்தனை வருடங்களுக்கு இப்படியே வீம்பாக இருக்கப் போகிறாய்? அவர்களுக்கு நீ கொடுத்த தண்டனை போதும் அக்கா, இனிமேலாவது…” என்றவனை கோபமாக குறுக்கிட்டு, “எனக்கு தூக்கம் வருகிறதுடா, குட் நைட்!” என பட்டென்று இணைப்பை துண்டித்து விட்டாள் மிரு.

பெருமூச்சுடன் தன்னுடைய அலைபேசி திரையை வெறித்த பிரசன்னா, ‘தங்களின் பெற்றோர் அவளிடம் அப்படி நடந்துக் கொண்டது ரொம்பவே தவறான செயல் தான். என்ன செய்வது? மிகவும் உணர்ச்சிகரமான தருணம் அது… நம் நாட்டின் கலாச்சாரத்திற்கும், ஊர் பேச்சிற்கும் பயந்து எடுத்தோம் கவிழ்த்தோம் என்று அவள் நிலையில் இருந்து சற்றும் யோசித்துப் பார்க்காமல் அவ்வாறு செய்து விட்டார்கள். அதற்காக… அவர்கள் தங்களின் தவறை உணர்ந்து வருந்தி நெருங்கும் பொழுது இவள் இப்படி விலகி செல்வது எப்படி சரியாகும்?’ என்று கவலையுடன் தன் நெற்றியை தேய்த்துக் கொண்டான்.

“ஜேபி…” என்று கணவனை அழைத்து காரில் நிலவிய அமைதியை கலைத்தாள் மணிகர்ணிகா.

“ம்…” என்று அவளிடம் விழிகளை திருப்பியவனுக்கு அவள் என்ன பேசப் போகிறாள் என தெரிந்தே இருந்தது.

“இல்லை… மிருவின் வீட்டில் அவளுடைய நடவடிக்கைகள் கொஞ்சம் வித்தியாசமாக இருந்தது போல் எனக்கு தோன்றியது. நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?”

“சந்தேகமே வேண்டாம்… அவர்களுக்கு இடையே எதுவோ சரியில்லை என்பது அங்கு போன சில நிமிடங்களுக்கு உள்ளாகவே எனக்கு புரிந்து விட்டது. இவளும் வீட்டிற்கு தகவல் தரவில்லை, அவள் அப்பா அழைத்தப் பொழுதும் போனை எடுக்காமல் இருந்திருக்கிறாள்…”

“ஆமாம்… எனக்கும் அங்கே தான் டவுட் வந்தது. இவள் அவர்களிடம் காரணம் கூறியது போல் போனை சைலன்டில் போடவில்லை. நீங்கள் கவனித்தீர்களா… நம்முடைய வேலையின் பொழுது அவளுக்கு அடுத்தடுத்து நம் நிகழ்ச்சி குழுவினரிடம் இருந்து அழைப்பு வந்தபடி தான் இருந்தது. அதையெல்லாம் எடுத்துப் பேசி தகுந்த பதில் அளித்தவள், இடையில் இரண்டு மூன்று முறை வந்த அழைப்பை மட்டும் ஏற்கவில்லை. நான் கேட்டதற்கும் ஒன்றும் முக்கியமான கால் இல்லை, நான் வீட்டிற்கு போய் பேசிக் கொள்கிறேன் என்று சொல்லி விட்டாள்!”

ம்… என்றவாறு யோசனையில் நெற்றி சுருங்க வண்டியை செலுத்திக் கொண்டிருந்தவனை நெருங்கி அமர்ந்து, “என்ன பிரச்சினையாக இருக்கும்?” என்று அவனிடம் கதை கேட்கும் தீவிரமான பாவத்துடன் விசாரித்தாள் மணி.

மனைவியிடம் நக்கலான பார்வை ஒன்றை செலுத்தியவன், “மை டியர் ஜே.ஆர்… அதை என்னிடம் கேட்டால் எனக்கு எப்படிடி தெரியும்? அடுத்தவர்கள் விசயத்தை தெரிந்துக் கொள்வதில் இந்த பெண்களுக்கு தான் எத்தனை ஆர்வம்?” என்று நகைத்தான்.

அவனை முறைத்தவள், “ப்ச்… நான் என்ன ஊர் வம்பிற்கு என்று அலைகிறேனா… நம்முடன் ஒன்றாக நான்கு வருடங்களாக ஒரே குடும்பமாக பணியில் இருக்கின்றாளே, நம்மால் எதுவும் உதவ முடியுமா என்று தான் முயற்சி செய்ய கேட்கிறேன். ரொம்ப தீவிரமான பிரச்சினையாக இருக்கும் போலிருக்கிறது. தினமும் மதிய உணவிற்கு அவளே தான் ஏதாவது சமைத்து எடுத்து வருவாள். நான் கூட அவள் கூறுவது போல் அவளுடைய அம்மாவின் சமையல் நன்றாக இருக்காது போல என இத்தனை நாட்களாக நினைத்திருந்தேன். இன்று அவரிடம் அதைபற்றி விளையாட்டாக பேசும் பொழுது கண்ணெல்லாம் கலங்கிட என் சமையலை அவள் சாப்பிட மாட்டாள் என்று வேகமாக எழுந்து விட்டார்கள். எனக்கு ஒரு மாதிரியாகி விட்டது!” என்றாள் வருத்தத்துடன்.

ஓ… என்று இழுத்தவனிடம், “நான் வேண்டுமென்றால் மிருவிடம் பேசிப் பார்க்கட்டுமா? அவள் என்னிடம் நன்றாக மனம் விட்டுப் பேசுவாள். அவளின் ஒதுக்கம் கண்டு அவளுடைய பெற்றோரின் முகம் மிகவும் வாடிப் போய் தெரிந்தது. சின்னப்பெண் தானே… சரியான பக்குவம் இல்லாமல் அவர்களிடம் அப்படி நடந்துக் கொள்கிறாள். அவளுக்கு என்ன கோபமோ… நான் எடுத்து சொன்னால் தெளிவாக புரிந்துக் கொள்வாள்!” என்றவளிடம் மறுப்பாக தலையசைத்தான் ஜெய்.

“ப்ச்… மணி, அவளை சொல்கின்ற நீ முதலில் பக்குவமாக யோசி. அவள் உன்னிடம் மனம் விட்டுப் பேசுகிறாள் என்றால் அது அவளுடைய பெர்சனல் லைப் பற்றி இல்லை அனைத்துமே அலுவல் ரீதியானது தான். அப்படியிருக்கும் பொழுது நீ எப்படி அவளுடைய தனிப்பட்ட வாழ்க்கையில் மூக்கை நுழைக்கிறேன் என்கிறாய்? அது சரிவராது விட்டுவிடு!”

புருவம் சுளித்தவள், “இல்லைப்பா… நம் மிருணா தானே என்று யோசித்தேன்!” என்றாள் இன்னமும் அதைவிட்டு விடுவதற்கு மனம் இல்லாதவளாக.

“நான் சொல்ல வருவதை இன்னும் நீ சரியாக புரிந்துக் கொள்ளவில்லைடா. யோசித்துப் பார்… நம்மிடம் வந்து வேலை கேட்டு நம் மூலமாக சேனலில் வேலையில் இணைந்தவள் மிருணாளிணி. ஆனால் இந்த நான்கு வருடத்தில் ஒருமுறையாவது அவளை பற்றியோ அவளுடைய குடும்பத்தினரை பற்றியோ நம்மிடம் ஏதாவது அவள் வெளிப்படையாக பேசி இருக்கிறாளா… இல்லை தானே… அப்பா, தம்பியின் அலுவல் குறித்து தான் நம்மிடம் பகிர்ந்து இருக்கிறாளே தவிர, அதற்குமேல் தன்னை பற்றி அவள் எதுவுமே மூச்சு விட்டதில்லை!”

“ம்… நீங்கள் சொல்வது சரிதான் ஜேபி!” என்றாள் மணி யோசனையோடு, “அதனால் தான் சொல்கிறேன், அவள் எதற்காக நம்மிடம் இப்படி எல்லைக்கோடு வகுத்து பழகுகிறாளோ நமக்கு தெரியாது. நம்முடன் இயல்பாக பழகுகிறவள் என்றால் நாம் உரிமையெடுத்து அவள் குடும்ப விவகாரங்களில் தலையிடலாம். அதற்குமே ஒரு எல்லை இருக்கிறது எனும்பொழுது, நீ உன்னுடைய அக்கறையை காட்டுகிறேன் என தேவையில்லாமல் அவள் பெற்றோரை பற்றி பேசி நட்புக்குள் சங்கடத்தை உருவாக்கி விடாதே!” என்று எச்சரித்தான் ஜெய்சங்கர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *