*19*

 

திருமண வரவேற்பு நல்லபடியாக முடிந்து மிருதனின் பெற்றோர் ஊருக்கு கிளம்பிவிட, புது ஜோடி பிரசன்னாவின் ஏற்பாட்டின்படி தங்கள் தேனிலவிற்காக சுவிட்சர்லாந்து பத்து நாட்கள் சென்று வந்தனர்.

அறை முழுவதும் காலைநேர பரபரப்புடன் இங்கும் அங்கும் உலவிக் கொண்டிருந்த மனைவியை பார்த்து மெலிதாக புன்னகைத்தபடி படுத்திருந்தான் மிருத்யுஞ்சயன்.

வார்ட்ரோப், ஹேன்ட்பேக் என்று பதற்றத்துடன் எதையோ தீவிரமாக தேடிக் கொண்டிருந்த மிருணாளினி கணவனின் முகம் பார்த்து கடுப்பாகி, “இப்பொழுது உனக்கென்ன சிரிப்பு? என் கஷ்டம் உனக்கு சிரிப்பாக இருக்கிறதா?” என்று கோபமாக கையில் இருந்த பௌச்சை தூக்கி அவன் மீது எறிந்தாள்.

அதை லாவகமாக கேட்ச் பிடித்தவன், “என்ன தேடுகிறாய் நீ?” என்று அவளுக்கு உதவும் பொருட்டு கட்டிலை விட்டிறங்கி அருகில் வந்தான்.

“என் ஐ.டி. கார்ட் காணவில்லை!” என்றாள் சோகமாக.

திருமணத்திற்கு பிறகு இன்று தான் கிட்டதட்ட இருபது நாட்கள் கழித்து வேலைக்கு செல்கிறாள். இரண்டு வாரம் மட்டுமே விடுமுறை எடுத்திருந்தவளை சி.இ.ஓ.விடம் பேசி மேலும் ஐந்து நாட்களுக்கு நீட்டித்து விட்டான் மிருதன்.

அவளின் அலமாரியை குடைந்தபடி, “இங்கே எடுத்து வந்தாயா அல்லது உன் வீட்டிலேயே விட்டு விட்டாயா? நன்றாக யோசித்து பார்!” என்றான் அவன்.

“இல்லை மித்து… எனக்கு நன்றாக ஞாபகம் இருக்கிறது. கவனமாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்று அதை தான் முதலில் பேக் செய்தேன்!” என்றாள் தவிப்புடன்.

“எதில் பேக் செய்தாய்?” என்றான் அடுத்த கேள்வியாக.

“எதில்… எதில்… ஆங்… ஐ.டி. கார்டை கைப்பையில் தானே வைப்பார்கள். அதில் இல்லையே…” என கவலையுடன் விழிகளை உருட்டி கடிகாரம் பார்த்தாள்.

“உன் ஹேன்ட்பேக்கை தூக்கிக் கொண்டு தானே ஊர் ஊராக சுற்றினாய்… அதிலேயா வைத்திருந்தாய்? எனக்கென்னவோ எங்கேயோ இடிக்கிறது!” என்றவன் அவள் கொண்டு வந்திருந்த அத்தனை பெட்டிகளையும் தூக்கி கட்டில் மீது போட்டான்.

“ஏய்… என்ன செய்கிறாய் நீ? இதற்கெல்லாம் நேரமில்லை!” என்றவளின் அலறலை அலட்சியம் செய்து ஒவ்வொரு பெட்டியாக திறந்து பார்த்தவன் மூன்றாவது பெட்டியின் உள் அறையிலிருந்து அவள் ஐ.டி.யை எடுத்து நீட்டினான்.

“ஹேய்… ஆமாம், மறந்து விட்டேன். நான் தான் பத்திரமாக வைக்க வேண்டும் என்று அதில் வைத்தேன்!” என பற்களை காண்பித்து சந்தோஷத்தில் குதித்து அசடு வழிந்தவள் அதை வாங்க முயல கையை உயரே தூக்கினான் மிருதன்.

“மித்து… நேரம் ஆகிறதுடா!” என்று சிணுங்கினாள் பெண்.

“இதற்காக எத்தனை டென்சன் ஆனாய் நீ? நான் எடுத்துக் கொடுக்கவும் கூலாக அப்படியே எஸ் ஆகப் பார்க்கிறாய்!”

“சரி சரி!” என்றவள் எம்பி அவன் கன்னத்தில் முத்தமிட்டு கோபத்தை குறைத்து ஐ.டி.யை பிடுங்கும் நேரம் அவளை அப்படியே குனிந்து மேலே தூக்கிக் கொண்டான் மிருதன்.

“டேய்… நேரம்…” என பதறியவளின் உதடுகளை வலிக்க மென்றுவிட்டு கீழே இறக்கியவன், “ஒரு டூ மினிட்ஸ், டிரஸ் சேஞ் செய்து வருகிறேன்!” என தனது டீசர்ட்டை எடுத்தான்.

“வேண்டாம்… எப்படியும் எனக்கு சாயந்திரம் வண்டி தேவைப்படும்!” என்று மறுத்தாள்.

“அதை அப்பொழுது பார்த்துக் கொள்ளலாம். நீ உன் ஓட்டை வண்டியில் நாற்பது ஐம்பதை தாண்டி ஓட்ட மாட்டாய். உன்னை இன்னும் பதினைந்தே நிமிடங்களில் நான் கொண்டு போய் விடுகிறேனே இல்லையா பார்!”

முதலில் முறைத்தவள் பின் கேலியாக பார்த்து, “என் ஸ்கூட்டியில் நாற்பதில் சென்றாலும் முப்பது நிமிடங்களில் அலுவலகம் சென்று விடுவேன். உன் காரில் வந்தேன் ட்ராபிக்கில் மாட்டியே ஒரு மணி நேரம் போய்விடும்!”

“நாம் காரில் போகவில்லை!” என்று சாவியை எடுத்தவனை நெருங்கியவள், “அப்புறம்?” என கேட்க, “உன்னை…” என்று அவன் வேகமாக இழுக்கவும், “வேண்டாம்… வேண்டாம்… நீ எப்படியோ ஒன்று என்னை கூட்டிட்டு போ!” என அலறியபடி சரணடைந்தாள் அவள்.

அவன் தன் முன்னால் கொண்டு வந்து நிறுத்திய டுகாட்டி மல்டிஸ்ட்ராடா ஆயிரத்தி இருநூற்று அறுபதை பார்த்து லேசாக மிரண்டு நின்றாள் மிருணா.

“ம்… ஏறு மின்னு!”

“ஏய்… நீ அந்தக் காலத்தில் எடுத்து வரும் ஹீரோ ஸ்ப்ளென்டரில் ஒரே ஒரு முறை ஆசைப்பட்டு ஏறிவிட்டு அவஸ்தைப்பட்டவள் நான். உன்னை நம்பி இத்தனை சிசி கொண்ட வண்டியிலா… நோ!” என்று பின்னால் இரண்டடி எடுத்து வைத்தவளை இழுத்து தன்னருகே நிறுத்தினான்.

“நீயாக ஏறிக் கொண்டால் வசதியாக உட்காரலாம். அப்படி இல்லை… உன்னை நான் எனக்கு முன்னால் டேங்கின் மீது தூக்கி போட்டுக் கொண்டு ஓட்டி செல்வேன். எப்படி வசதி?”

“சும்மா மிரட்டாதேடா… இதில் வசதியாக உட்கார ஏது இடம்?” என கண்களில் பீதியோடு கணவனை அதட்டினாள்.

அதைக்கண்டு வாய்விட்டு நகைத்தவன் அவளை இன்னும் அருகில் இழுத்து, “லூசு… உன்னை விட உன் உயிர் மேல் எனக்கு தான் அக்கறை அதிகம். பயப்படாமல் ஏறு!” என்றான் மிருதன் ஆழமான பார்வையொன்றை செலுத்தி.

அச்சத்தில் தான் மறந்து விட்டதை கணவன் நினைவுப் படுத்தவும் நிமிர்ந்து அவன் முகம் பார்த்தவள் பின் வண்டியில் ஏறி அமர்ந்து அவனை ஆசையுடன் கட்டிக் கொண்டாள்.

அவன் டீசர்ட்டை முகர்ந்தவள், “ஏய்… நான் சொன்ன பாடி ஸ்ப்ரே போடவில்லையா நீ?” என்று சண்டையிட்டாள்.

“ரொம்ம்ம்ப்ப்ப முக்கியம்!” என்று அவன் சிரிக்க, “ஆமாம்… எனக்கு முக்கியம் தான். உன்னிடம் என்ன சொன்னேன்?” என்று அவள் முகத்தை திருப்ப அவனோ வெகுவாக அலுத்துக் கொண்டான்.

“நீ ரொம்ப செய்கிறாய் மின்னு… அது நேற்றோடு காலியாகி விட்டதுடி. வேறு வாங்க வேண்டும்!”

“அப்பொழுது என்னை டிராப் செய்த உடனே வாங்கிவிடு!”

“சரிம்மா தாயே… அதை வாங்கிவிட்டு தான் வீட்டிற்கே போவேன். ஓகே?”

“ம்… ஓகே… ஓகே!” என்று சிரித்துக் கொண்டாள் அவள்.

எப்பொழுதுமே அவனை தனக்காக இப்படி கொஞ்சமாக சலிக்க வைத்து பார்ப்பதில் அவளுக்கு சிறு வயது முதலே அப்படி ஒரு பேரானந்தம்.

அலுவலகம் முன்பு வண்டியை நிறுத்தியவனின் தோளில் தட்டியவள், “ஹேய்… சொன்ன மாதிரியே அழைத்து வந்து விட்டாய். பை!” என்று அவன் பின்னால் இருந்து குதித்து இறங்கினாள்.

உள்ளே செல்ல முயன்றவளை, “மின்னு…” என வேகமாக தடுத்தவன், “ஈவ்னிங் கிளம்புவதை மதியமே சரியாக திட்டமிட்டுக் கொண்டு சொல்லிவிடு. அப்பொழுது தான் பிக்கப் செய்துக் கொள்வதற்கு வசதியாக இருக்கும். முடிந்தவரை நானே வந்து விடுவேன், அப்படியில்லை என்றால் டிரைவரோடு கார் அனுப்பி வைக்கிறேன்!” என்றதும் அவள் முகம் சுளித்துக் கொண்டது.

“சரி… நான் தான் ட்ரை பண்றேன் என்கிறேன் இல்லை… கொஞ்சம் சிரித்துவிட்டு போ. ஹேவ் எ குட் டே!” என்றதும் இவள் முகம் மலர்ந்தது, “ஹேவ் எ குட் டே மித்து!” என்று பதிலுக்கு உற்சாகமாக அவனை வாழ்த்தி விட்டு நடந்தாள்.

செல்பவளை விழிகளில் லயிப்புடன் பார்த்திருந்தவன் பின் நீண்டதொரு பெருமூச்சை விட்டு வண்டியை கிளப்பினான்.

“வாங்க மேடம்… உங்களை அலுவலத்தில் விட்டுச் செல்ல உங்கள் ஆத்துக்காரருக்கு மனதே இல்லை போலிருக்கிறது. அப்படியே பார்த்திருந்து விட்டு சோகமாக கிளம்புகிறார்!”

மணியின் கேலியில், “அண்ணி!” என்று சிரித்தவள் திரும்பி கேட்டை பார்க்க, “நீ திரும்பியும் பார்க்கவில்லை என்றதும் அவர் அப்பொழுதே கிளம்பி விட்டார்!” என சிரித்தாள்.

“அவனை மட்டும் திரும்பி பார்த்திருந்தேன்… திரும்பவும் ஓடிப்போய் வண்டியில் ஏறி வீட்டிற்கு போயிருப்பேன். அதுதான் திரும்பவில்லை!” என்று கண் சிமிட்டியவளின் கரம்பற்றி, “மேரேஜ் லைப் எப்படி போகிறது?” என்று கனிவுடன் விசாரித்தாள் மணிகர்ணிகா.

“மனதிற்கு பிடித்தவனோடு வாழும் பொழுது அது தரும் மகிழ்ச்சியை சொல்ல என்னிடம் வார்த்தைகள் இல்லை அண்ணி!” என கணவனின் நினைவில் உருகினாள் பெண்.


காலையிலிருந்து மனதே சரியில்லை மிருணாளிணிக்கு, அன்று பதினோரு மணியளவில் கிடைத்த செய்தியை கேட்டு மிகவும் மனம் வெறுத்துப் போனாள் அவள்.

சென்னையின் முக்கிய பகுதியான கிண்டியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசித்த ஏழு வயது பெண் குழந்தையை பக்கத்து வீட்டை சேர்ந்த ஐம்பந்தைந்து வயதான கயவன் ஒருவன் பாலியல் வன்கொடுமை செய்து கொன்றும் விட்டான்.

இரண்டு நாட்களுக்கு முன்பே அக்கொடுமையை நிகழ்த்தி பெற்றோர் குழந்தையை காணாமல் தேடி பரிதவித்த நேரம் இவனும் தேடுவது போல் உடன் நாடகமாடி அனைவரையும் ஏமாற்றி இருந்திருக்கிறான்.

அவன் வீட்டிலிருந்து துர்நாற்றம் கிளம்பவும் தான் அக்கம்பக்கத்தினர் சந்தேகித்து போலீசாரிடம் தகவல் தெரிவித்தனர். அங்கே சென்று சோதித்துப் பார்த்ததில் அவன் குழந்தையை கொன்று ஒரு பெரிய பெட்டிக்குள் சுருட்டி வைத்திருந்திருக்கிறான் என்கிற விஷயம் தெரிந்து அதிர்ந்துப் போயினர்.

போலீசார் ஆத்திரத்தில் அவனை அங்கேயே நான்கு அடி அடித்து வெளியே தரதரவென்று இழுத்துவர, கூடியிருந்த கூட்டமும் கோபத்தோடு அவனை போட்டு தர்ம அடி வெளுத்திருக்கிறது. அப்படியே அவர்கள் கையினாலே அவன் சாகட்டும் என்று விட்டுவிட போலீசாருக்கும் ஆசை தான் என்றாலும் தங்கள் கடமையிலிருந்து விலக முடியாதே என்று நொந்தபடி அவனை பாதுகாப்பாக ஜீப் வரை அழைத்து சென்று காவல் நிலையத்தில் சிறை வைத்தனர்.

இனி… நீதி மன்றக் காவல், விசாரணை என்று கொஞ்ச நாட்களுக்கு இழுத்தடித்து விட்டு இந்தப் பரதேசியை ஒன்று சுகவாசியாக உள்ளே வைத்திருப்பார்கள் அல்லது வெளியே விட்டு விடுவார்கள் என்பது நாடறிந்த ரகசியம் என்றாலும் ஒருவரும் ஒன்றும் செய்வதற்கு இல்லை. இதுப் போன்ற சம்பவங்களுக்கு எதிராக வெறும் வெற்றுக் கோஷங்களை எழுப்பியும், போராடியுமே நம் காலம் ஓடுகிறது.

டேபிளின் மேல் கைகளை கோர்த்து அதில் சோர்வுடன் தலை சாய்த்திருந்தவளின் தோளை அழுத்தினாள் மணி.

வேகமாக நிமிர்ந்தவள் முகம் கசங்க, “என்னால் அந்த நியூஸை பார்க்க முடியவில்லை அண்ணி, கொடுமையாக இருக்கிறது!” என்று கண் கலங்கினாள்.

“ம்… எனக்கு பெண் குழந்தை இல்லாமல் இருக்கலாம், ஆனால் நானும் ஒரு பெண் தானே. அந்த குழந்தையின் நிலையையும், அதன் தாயின் வேதனையையும் நினைத்து… அப்பா… அப்படியே நெஞ்செல்லாம் பதறுகிறது மிரு. காட்… சத்தியமாக டாலரெட் செய்ய முடியவில்லை!” என்று நெஞ்சில் கைவைத்து கன்னங்களில் நீர் வழிய அங்கிருந்த நாற்காலியில் வேதனையுடன் அமர்ந்தாள்.

“இது போன்ற சம்பவங்களை ஏன் அண்ணி நம்மால் தடுக்க முடியவில்லை? எத்தனை எத்தனை குழந்தைகளையும், இளம் பெண்களையும் இந்தக் கொடுமைக்கு பலி கொடுத்து கொண்டிருக்கிறோம். ஆனாலும் இதற்கெல்லாம் தீர்வு கிடைக்க மாட்டேன்கிறதே… அந்த ராட்சசன்களை நம்மால் ஒன்றும் செய்ய முடியவில்லையே என்று நினைக்கும் பொழுது அப்படியே பற்றிக் கொண்டு எரிகிறது!” என தன் முன்னிருந்த மேஜையை ஆத்திரத்துடன் ஓங்கி குத்தினாள்.

மிருணாவை வெறித்துப் பார்த்திருந்தவள், “ஏன் தீர்வு இல்லாமல்… எல்லாம் இருக்கிறது. ஆனால் அனைத்தும் இந்த நாட்டை பிடித்திருக்கும் அரசியல் சகுனிகளிடம் தான் இருக்கிறது. அவர்களின் சரியான தலையீடு இருந்தால் நிச்சயமாக பெண்களுக்கு எதிரான குற்றங்களை ஒழித்து கட்ட முடியும். ஆனால் தங்களுக்கு லாபமில்லாத அந்த செயலை செய்ய அவர்கள் யாரும் தயாராக இல்லை. சும்மா மீடியாவின் முன் முழங்கும் வெற்று பேச்சோடும், அலங்கார சூளுரையோடும் கவனமாக தவிர்த்து விலகி ஓடி விடுவார்கள்…” என்ற மணி நிறுத்தி, “உன் கணவர் மாதிரி!” என்றாள் அழுத்தமான நேர்பார்வையுடன்.

“அண்ணி…” என்றாள் மிருணா விக்கித்து, “ஐ ஆம் சாரி!” என்ற மணிகர்ணிகா பட்டென்று எழுந்து சென்று விட்டாள்.

இவளின் உடலெங்கும் சொல்ல முடியாத நடுக்கம் பரவியது.

உண்மை தானே… என் கணவன் அரசியல்வாதி தானே… அவனை போன்றோர் நினைத்தால் இதை ஒழித்துக் கட்ட முடியுமே… அதை செயல்படுத்துவதற்கு அவர்கள் தயாராக இல்லையே என்று தலையை இறுகப் பிடித்துக் கொண்டாள்.

அவளின் அலைபேசிக்கு நோடிபிக்கேசன் வரவும், நடுங்கும் விரல்களால் எடுத்துப் பார்த்தாள். மணியிடமிருந்து தகவல் வந்திருக்கவும் தொண்டை அடைத்து உதட்டை கடித்தவள் தன் வேதனையை விழுங்கி அதை திறந்துப் பார்த்தாள்.

மீடியாவிற்கு மிருத்யுஞ்சயன் அளித்துக் கொண்டிருக்கும் ஐந்து நிமிட பேட்டி ஒன்று அதில் வீடியோவாக ஓடியது.

“சின்ன குழந்தையிடம் கூட காமம் தேடும் மனிதர்களை நினைத்தால் அடித்துக் கொன்று போட்டு விடும் வேகம் வருகிறது தான். ஆனால் இந்த நேரத்தில் நாம் பொறுமையை கடைப்பிடிப்பது அவசியமாகும். நம் நாட்டின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு சரியான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ளும். சம்பவம் குறித்து இன்று அமைச்சர்கள் கூட்டம் நடைப்பெற உள்ளது, அதில் சரியான முடிவு எடுக்கப்படும்!”

தனது கட்சி அலுவலகத்திலிருந்து வெளியே வந்தவனை நிறுத்தி வைத்து கேள்வி எழுப்பிக் கொண்டிருந்தனர் அங்கே சூழ்ந்திருந்த நிருபர்கள் கூட்டம். அவன் பின்னே அவனின் பி.ஏ. முருகன் அமைதியாக நின்றிருந்தார்.

“இதையே தான் சார் போன முறையும் சொன்னீர்கள், ஆனால் ஒரே மாதத்தில் அவர்களை வெளியே விட்டு விட்டதே உங்கள் ஆட்சி!” என்று ஒருவன் கேள்வி எழுப்ப அவனை திரும்பி அழுத்தமாக பார்த்தவன், “இங்கிருக்கும் மாநில அரசால் எதையும் எடுத்தோம், கவிழ்த்தோம் என்று உங்களை மாதிரி பேச முடியாது. எங்களுக்கென்று சில தனிப்பட்ட பொறுப்புகள் இருக்கிறது, நாங்கள் நீதி மன்றம் வாயிலாக தான் எதையும் செய்ய முடியும். சென்ற வழக்கில் போதிய ஆதாரம் இல்லை என்று விடுவித்தது நீதித்துறை தான். எங்களது முதலமைச்சரோ அல்லது அவரது ஆட்சியோ இல்லை!” என்றான் சூடாக.

“சும்மா வெறும் வாய்ப் பேச்சால் எதையும் சமாளித்து விடப் பார்க்காதீர்கள் சார். உங்கள் அரசாங்கம் நினைத்தால் புதிய சட்டங்களை குற்றவாளிகளுக்கு எதிராக கடுமையாக கொண்டு வந்து இதையெல்லாம் தடுத்த நிறுத்திவிட முடியும்!” என்றான் அந்த நிருபர் ஏளனமாக.

முகம் சிவந்த மிருதன் பல்லைக் கடித்து பொறுமையை இழுத்துப் பிடித்து, “அதையே தான் நானும் சொல்கிறேன். சும்மா பேச வேண்டுமென்று எதை வேண்டுமென்றாலும் பேசக்கூடாது. இங்கிருக்கும் மாநில அரசால் மட்டும் தன்னிச்சையாக அதுப் போன்ற திட்டங்களை அமுல்படுத்திவிட முடியாது. ஒரு புதிய சட்டத்தை இங்கே கொண்டு வருவதற்கு ஆளுநரின் அனுமதியும், மத்திய அரசின் ஒத்துழைப்பும் அதற்குமேல் ஜனாதிபதியின் ஒப்புதலும் என எல்லாமே சரியாக நடக்க வேண்டும். இத்தனையும் செய்ய நாட்கள் பிடிக்கும் தான், உங்கள் அவசரத்திற்கு எல்லாம் நடக்காது!” என்று பேச்சை முடித்துக் கொண்டவன் திரும்பி முருகனை ஒருப் பார்வை பார்த்துவிட்டு விறுவிறுவென்று நடந்து சென்று விட்டான்.

மிருணாவின் முகம் தாங்க முடியாத அவமானத்தில் கன்றிச் சிவந்துப் போனது. இவள் கணவனிடம் கேள்வி கேட்ட அந்த நிருபர் இவளுடைய சேனலை சேர்ந்தவன் தான், அதுவும் ஜெய்யிடம் பயிற்சி எடுத்துக் கொண்டவன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *