*16*

 

இத்தனை வருட மன உளைச்சலில் இருந்து பெண்ணை மீட்டு அவள் மனம் விரும்பிய மணாளனுக்கே மணமுடித்து வைத்ததில் திருமூர்த்தி, துளசி நெகிழ்ந்திருக்க, இந்தப்புறம் மிருதனின் பெற்றோரில் அம்மா தமிழ்செல்வி மட்டுமே மகனின் திருமணத்தில் பெரிதும் மகிழ்ந்திருந்தார்.

அப்பா புகழேந்தி பெற்ற கடமையென அனைத்திலும் முன்னின்று ஏற்பாடுகள் செய்து கலந்துக் கொண்டாரே தவிர, மகனின் மீது கொண்ட வெறுப்பால் எதிலும் பெரிதாக ஈடுபாடு காட்டவில்லை. அதை மணமக்களும் நன்றாக உணர்ந்து தான் இருந்தனர்.

மிருணா தான் இதில் சங்கடமாக உணர்ந்தாள், அவன் எதையும் சட்டை செய்யாமல் அவர் போக்கு அவ்வளவு தான் என்று அலட்சியமாக நின்றிருந்தான்.

நேரம் இறக்கை கட்டிப் பறக்க, மணமக்களுக்கான இரவு நேரத் தனிமை அமையும் பொழுதும் வந்தது.

தன்னெதிரே மென்பட்டுப் புடவையில் தலைக்கொள்ளா பூவுடன் வந்து நின்ற பெண்ணவளை பார்த்து அவனுக்கு சிரிப்பு பீறிட்டுக் கிளம்ப விழுந்து விழுந்து சிரிக்க ஆரம்பித்தான் மிருதன்.

உயிர் தோழனே காதலனாகி கணவனாகிப் போனதில் அவளுள் எந்தவித பதற்றமோ, பரபரப்போ இல்லை என்றாலும் பெரியவர்களின் ஏற்பாட்டால் கிளம்பி நின்றிருந்த சூழ்நிலை அவளுக்குள் சிறிது அசௌகரியத்தை கொடுக்க, அறைக்கு சென்று அவனோடு பேசிக் கொண்டிருந்தால் அனைத்தும் சரியாகிவிடும் என்றவளின் எண்ணத்திற்கு மாறாக அவன் பலமாக சிரிக்கவும் அவளுக்கு அதிருப்தி தோன்றியது.

“இப்பொழுது எதற்காக இப்படி சிரிக்கிறாய்?” என்றாள் மிருணா முகத்தை சுளித்து.

“இல்லை… எதற்கு இப்படி கூடைப்பூவை தலையில் வைத்திருக்கிறாய்? அதுவும் தூங்க வருவதற்கு நன்றாக ஜிகுஜிகுவென்று பட்டுப்புடவை வேறு.. என்ன இதெல்லாம்?”

அப்பொழுது தான் அவனை சரியாக பார்த்தாள் மிருணா. மிகவும் இயல்பாக இரவு நேர ஷார்ட்ஸ் ஒன்றும், ரவுண்ட் நெக் டீஷர்ட் ஒன்றும் அணிந்திருந்தான் அவன்.

குமைச்சலில் உதடுகளை அழுந்தக் கடித்தவள், ‘என்னடா கொடுமை இது? என்னை இந்தப் பாடுப்படுத்தியவர்கள் இவனை இப்படியே உட்கார வைத்திருக்கிறார்கள்!’ என்று ஆத்திரத்தோடு நினைத்தாள்.

“ஓய்… என்ன?”

“நீ ஏன் இப்படி உட்கார்ந்து இருக்கிறாய்?” என்று தன்னிடம் சிடுசிடுப்பவளை புரியாது பார்த்தவன், “எப்படி உட்கார்ந்து இருக்கிறேன்?” என்று பதில் கேள்வி கேட்டான்.

“ப்ச்… உனக்கு வேஷ்டி, ஷர்ட் கொடுக்கவில்லையா?”

“அது எதற்கு? நமக்கு தான் திருமணம் காலையிலேயே முடிந்து விட்டதே!”

“டேய்… என் கடுப்பை கிளப்பாதே!” என்று அவனிடம் கோபமாக சென்றவள் தொப்பென்று கட்டிலில் அமர்ந்தாள்.

உம்மென்று முகத்தை வைத்துக் கொண்டிருந்தவளை நெருங்கி அமர்ந்தவன், “என்னடி செல்லம்?” என்றான் அவள் தோளில் தன் நாடியை பதித்து.

“இந்தப் புடவை, இத்தனை பூ… இதெல்லாம் வேண்டாம் என்று தான் சொன்னேன். அத்தை தான் விடவில்லை!” என்றாள் மிரு சலிப்பாக.

“யார் அம்மாவா?”

“ம்… என் அம்மா என்றால் சமாளித்து இருப்பேன். அத்தையிடம் ஒன்றும் சொல்ல முடியவில்லை!”

புன்னகைத்தவன், “சரி போய் டிரஸ் மாற்றிவிட்டு வா, அப்பொழுது தான் உனக்கு மூட் சேஞ் ஆகும். இல்லை… விடிய விடிய என்னிடம் சண்டைப் போடுவாய்!” என்றான்.

அவனை பலமாக முறைத்துவிட்டு எழுந்து கப்போர்டிடம் சென்றவள், தன் பெட்டியை திறந்து அதிலிருந்து இரவு உடையான தன் வழக்கமான பைஜாமா செட்டை எடுத்துக் கொண்டு குளியலறை புகுந்தாள்.

மனைவியின் அலங்காரத்தையும், கோபத்தையும் எண்ணி ரசித்தபடி கைகளை தலைக்கு அடியில் மடக்கி வைத்து படுத்தான் மிருத்யுஞ்சயன்.

வெளியே வந்தவள் அவன் இருந்த நிலையை ஒருமுறை கவனித்து விட்டு புடவையை அங்கிருந்த சேர் ஒன்றில் மடித்துப் போட்டுவிட்டு அருகில் சென்றாள்.

“இப்பொழுது ஓகேவா…” என்றுவிட்டு, “ஏய்… இரு… இரு… என்ன இது? அந்தப் பூவையும் கழற்றி வைத்துவிடு, அப்பொழுதுதான் உனக்கு ப்ரீயாக இருக்கும்!” என்றான்.

அவனருகில் அமர்ந்தவள், “இல்லை வேண்டாம்…. அத்தை ஒன்று சொன்னார்கள். திருமணம் முடிந்த சுமங்கலிப் பெண்கள் யாரும் கொடுக்கின்ற பூவை வேண்டாம் என்றும் சொல்லக் கூடாதாம், தலையில் வைத்துக் கொண்ட பூவை வாடும் முன்னே எடுத்தும் போடக் கூடாதாம்!” என தகவல் சொல்ல, அவளை விசித்தரமாகப் பார்த்த கணவனோ, “இதிலெல்லாம் உனக்கு நம்பிக்கை இருக்கிறதா என்ன? சும்மா உன் வசதிக்கு இரு!” என்றான் அலட்சியமாக.

“நம்பிக்கை இருக்கிறதோ இல்லையோ… அவர்கள் சொன்ன விஷயம் எனக்கு பிடித்திருக்கிறது. அதனால் இருக்கின்ற பூ அப்படியே இருக்கட்டும், நாளையிலிருந்து வைக்கும் பொழுது அளவாக வைத்துக் கொள்கிறேன்!”

மிருதனோ சிரிப்புடன் பார்த்திருக்க, “நீ என்ன நான் வந்ததில் இருந்தே ரொம்பதான் கேலி செய்து சிரிக்கிறாய்? போ!” என்று முகத்தை திருப்பிக் கொண்டாள் மனைவி.

அவளை இழுத்து தன் மீது சரித்து நெற்றியில் அழுந்த முத்தமிட்டவன், “சரி, சிரிக்கவில்லை!” என முட்டினான்.

“அதைக் கூட சிரித்துக் கொண்டுதான் சொல்கிறாய்!”

“ஷ்… அப்பா… சிரிப்பது ஒரு குற்றமாடி. என் மனது மிகவும் சந்தோசமாக இருக்கிறது. அதனால் எல்லாவற்றையும் ரசிக்கிறேன், சிரிக்கிறேன்!”

நிமிர்ந்து அவனுடைய முகம் பார்த்தவள் பதில் எதுவும் சொல்லாது நகர்ந்து அவன் தோள் வளைவில் தலை சாய்த்து வசதியாக படுத்துக் கொண்டாள்.

தன் விரல்களை கொண்டு அவளின் கன்னம் வருடியவன், “மின்னு…. உனக்கு என்ன குழந்தை பிடிக்கும்?” என்று மென்மையாக கேட்க அவளோ அவனை விழி விரித்து ஆச்சரியமாக பார்த்தாள்.

“என்ன திடீரென்று?”

“திடீரென்றா… நமக்கு இன்றைக்கு என்ன நாள் தெரியுமா?”

“ம்… கல்யாண நாள்!” என்றாள் அவள் சாதாரணமாக.

“ஆமாம்…. நமக்கு கல்யாணம் முடிந்து பத்து வருடங்கள் ஆகிவிட்டது. அதனால் வருடா வருடம் வரும் வழக்கமான திருமண நாள் இது!” என்றான் அவன் கடுப்புடன்.

அவன் கோபம் கண்டு சிரித்தவள், “உனக்கு இப்பொழுது என்ன பிரச்சினை?” என்று கேட்க, “ம்… எனக்கு பெண் குழந்தை வேண்டும்!” என கூறியபடி மனைவியின் கழுத்து வளைவில் அழுத்தமாக முகம் புதைத்தான் மிருதன்.

ஒரு கணம் அசைவற்றுப் போன மிருணா, “மித்து…” என மெல்லமாக அழைக்க, ம்… என்று முனகினான் அவன்.

அதற்குமேல் பேசுவதறியாது அவள் அமைதியாகிவிட, மிருதன் நிமிர்ந்து அவள் முகம் பார்த்தான்.

“என்ன?”

“ம்… ஒன்றுமில்லை!” என்றாள் சின்னக் குரலில்.

முறுவலித்தவன், “பயமாக இருக்கிறதா?” என கண்சிமிட்ட, அவனை முறைக்க முயன்று தோற்றவள், “லூசு மாதிரி பேசாதே நீ!” என்றாள் கன்னம் சிவந்து.

“அப்புறம் என்ன?” என்று அவள் மூக்கோடு தன் மூக்கை உரசி தளிர் மேனியை சிலிர்க்க செய்தான்.

தொண்டையில் அடைத்த எச்சிலை கூட்டி விழுங்கியவள் அவன் டீசர்ட்டை இறுகப்பற்றி, “கொஞ்சம் பயமாக தான் இருக்கிறது!” என்று கூறி வேகமாக அவன் கழுத்தடியில் தன் முகத்தை மறைத்துக் கொண்டாள் பெண்.

அவள் சொல்லில் வாய்விட்டு ஆர்ப்பாட்டமாக நகைத்தவன் மிருவின் முகத்தை மெல்ல நிமிர்த்தி அவளின் பயத்தை மோகத்தில் அமிழ்த்தி காதலுடன் உறவாட ஆரம்பித்தான்.

மறுநாள் மறுவீடு அழைப்பு என்று மாப்பிள்ளை, பெண்ணை அழைத்துக் கொண்டு மூர்த்தி, துளசி தம்பதியினர் தங்கள் இல்லம் கிளம்ப, மிருதனின் திட்டத்தின்படி அவனின் பெற்றோரை அழைத்துக் கொண்டு முருகன் சென்னை பயணமானார்.

மகனின் வீட்டிற்கு செல்ல புகழேந்திக்கு சிறிதும் விருப்பம் இல்லை என்றப் பொழுதும், ஒரு தந்தையாக தன்னுடைய கடமையிலிருந்து தவற அவர் விரும்பவில்லை. இன்னும் ஒரு வாரத்தில் அனைத்து அரசியல் நட்புக்கும், தொழில் துறை நண்பர்களுக்கும் என சென்னையில் திருமண வரவேற்பிற்கு ஏற்பாடு செய்திருந்தான் மிருதன். அதற்கான ஏற்பாடுகளில் முன்னின்று கவனித்துக்கொள்ள வேண்டும் என்பதால் மட்டுமே அவர் இப்பொழுது அங்கே செல்கிறார். வரவேற்பு முடிந்த மறுநாள் ஊர் திரும்பிவிட வேண்டும் என்று மனைவியிடம் கண்டிப்பாக சொல்லிவிட்டார் அவர்.

மாமனார் வீட்டிலிருந்து மனைவியை அழைத்துக் கொண்டு அடுத்த நாளே தன் வீடு திரும்பிய மிருத்யுஞ்சயன், தன் கட்சி தலைவருக்கும், அரசியலில் பெரும் தலைகளுக்கும், இவன் தொழில் வட்டாரத்தில் முக்கிய பங்குவகிக்கும் தொழில் அதிபர்களுக்கும் பத்திரிக்கை வைக்கவென்று மிருணாவை உடன் அழைத்துக் கொண்டு கிளம்பிச் செல்ல அது புகழேந்திக்கு மிகுந்த அதிருப்தியை கொடுத்தது.

“கொஞ்சமாவது உன் பிள்ளைக்கு அறிவு இருக்கிறதா? புதுப் பெண்ணை இப்படித்தான் பத்திரிக்கை வைக்கவென்று எல்லா இடத்திற்கும் அழைத்து செல்வார்களா…” என்று மனைவியிடம் பொரிந்து தள்ளினார்.

வீடு திரும்பிய மகனிடம், “அப்பா சொல்வது சரிதானேடா… மிருணா வீட்டில் இருக்கட்டுமே, நீ மட்டும் முருகனுடன் சென்று அழைப்பு விடுத்தால் போதாதா…” என்றார் செல்வி.

“ப்ச் அம்மா… இதெல்லாம் உங்களுக்கு புரியாது. நான் மட்டும் சென்று அழைப்பதை விட மின்னுவும் என்னுடன் வந்தால் அதற்கு கிடைக்கும் மதிப்பே தனி. நாளை பின்னே யாருக்காவது பிசினஸில் மனத்தாங்கல் தோன்றினால் கூட நம்மை மதித்து மனைவியை அழைத்து வந்து நேரில் பத்திரிக்கை வைத்தானே என்று அவர்களின் மனதின் ஓரம் ஒரு சாப்ட் கார்னர் தோன்றும். அந்த நேரத்தில் என்னை பலமாக எதிர்க்க கொஞ்சம் யோசிப்பார்கள். நான் செய்யும் ஒவ்வொரு விஷயமுமே அரசியல் சாணக்கியத்தனம் நிறைந்தது. நீங்கள் ஒன்றும் இதில் பெரிதாக குழம்பிக் கொள்ளாதீர்கள்!” என்று அறைக்கு சென்று விட்டான்.

கேள்வி கேட்ட அன்னைக்கு ஒரு திகைப்பு என்றால், அவன் பதிலை கேட்டிருந்த மனைவிக்கோ அவன் செயலில் கடும் அசூயை உண்டானது.

முகத்தை சுளித்துக் கொண்டவள் எதுவும் பேசாது அறைக்கு செல்ல, செல்வியின் மனதில் மகனை நினைத்து கவலைக் குடியேறியது.

உடைகளை மாற்றி அப்பொழுதுதான் கட்டிலில் சரிந்தவன் உள்ளே வந்தவளிடம், “மின்னு… சாயந்திரம் நாம் போக இருப்பது பெரிய பிசினஸ் மேக்னெட் வீட்டிற்கு. ஸோ… ஸ்ஸாரி வேண்டாம், ஏதாவது கிராண்டான சல்வார் போட்டுக்கொள். ஆங்… அப்புறம் இதை எப்பொழுதும் நினைவில் வைத்துக்கொள், ஒவ்வொரு முறையும் என்னால் திரும்ப திரும்ப நினைவுப்படுத்த முடியாது. கட்சி ஆட்களின் வீட்டிற்கு செல்வது போல் இருந்தால் ஸ்ஸாரியும், பிசினஸ் பீப்புளை சந்திக்க சல்வாரும் தான் சரியாக இருக்கும். நீ என்றைக்குமே அதை நினைவில் வைத்து அதற்கேற்ப தயாராகிவிடு. ஓகேடா… நான் கொஞ்ச நேரம் தூங்குகிறேன். ஷிட்… உன்னிடம் இதை சொல்ல மறந்து விட்டேன் பார். இன்று இரவு எனக்கு ஒரு பிசினஸ் டீல் இருக்கிறது சந்திப்பு முடிந்து நான் வீட்டிற்கு வர நள்ளிரவிற்கு மேல் ஆகிவிடும்!” என்றபடி கொட்டாவி ஒன்றை வெளிவிட்டவன், “நீயும் தூங்குகிறாயா?” என்று கேட்டான்.

“இல்லை… எனக்கு கொஞ்சம் வேலை இருக்கிறது. நான் அதைப் பார்க்கிறேன் நீ தூங்கு!”

“ஷ்யூர்…” என்றவனிடம் ஆமோதிப்பாக தலையசைத்தாள்.

ஓகே… என்று புன்னகையுடன் தன் இமைகளை மூடுபவனை இவள் இமைகள் மூடாமல் பார்த்திருந்தாள்.

இவனை பார்த்த தினத்திலிருந்து இன்று வரை இவளிடம் கொஞ்சமும் வெளிவராத அரசியல்வாதி இப்பொழுது மெதுவாக தன் தலையை காண்பிக்கவும், இது எந்த அளவிற்கு இருவருக்குள்ளும் உள்ள உறவை பாதிக்கும் என முதன்முறையாக அச்சம் கொண்டாள் மிருணாளிணி.

சற்று முன்னர், அவன் தன் அம்மாவிடம் பேசியதற்கு முன்புவரை அரசியல் அவனுடைய ப்ரொஃபசன் அதற்கும் தனக்கும் என்ன சம்பந்தம் என்று சாதாரணமாக எடுத்துக் கொண்டவளுக்கு இப்பொழுது தன்னை வைத்தும் அவன் அரசியல் ஆதாயம் தேடுவதில் மனதில் ஒருவித குழப்பம் தோன்றியது. இதிலேயே கவலைக் கொண்டவளுக்கு, அவனை எப்படியாவது இந்த வழியில் இருந்து திசைமாற்றி நல்வழிப்படுத்த வேண்டும் என திருமணத்திற்கு முன்பாக தான் உறுதி எடுத்துக் கொண்ட நிகழ்வுகளும் சேர்ந்து நினைவு வர சோர்வாக உணர்ந்தாள் பெண்.

மிருதனின் கைபேசி ஒலி எழுப்பவும் அவன் உறக்கம் கலைந்து புரண்டுப் படுத்தான். இவள் யோசனையோடு அருகில் சென்று பார்க்க முருகன் தான் அழைத்துக் கொண்டிருந்தார்.

இந்த சில நாட்களில் இவனுக்காக என்று இவனுடைய தேவைகளை நிமிடத்தில் உணர்ந்து செய்து முடிப்பவரின் முக்கியத்துவம் இவளுக்கும் புரிந்திருந்ததால் அவன் தோள் தொட்டு எழுப்பினாள் மிருணா.

“மித்து!”

“ம்…

“உன் போன்… அவர்… முருகன் அண்ணா கூப்பிடுகிறார் போலிருக்கிறது!”

ஓ… என்றவன் திரும்பி படுத்து அலைபேசியை தேடினான்.

இவள் எடுத்துக் கொடுக்கவும் பெரிதாக புன்னகைத்தவன் மனைவியை அருகில் இழுத்து கன்னத்தில் முத்தமிட்டான். தன்னிடம் களைப்புடன் புன்னகையை வெளியிட்டவளை யோசனையோடு அளவிட்டவன், பிறகு இணைப்பை ஏற்று முருகனுடன் உரையாட ஆரம்பித்தான்.

அவன் ஏற்கனவே கூறியிருந்த இரவு நேர சந்திப்பை பற்றிய ஏதோ ஆலோசனை என்று புரிய மெதுவாக எழுந்து சென்று பால்கனியில் நின்றாள் மிருணா.

எம்.எல்.ஏ. மிருத்யுஞ்சயனின் பங்களா நீலாங்கரையில் உள்ள கடற்கரையோரம் அமைந்து இருந்தது.

இப்படித்தான் சொல்ல வேண்டுமோ? என்று கசப்புடன் எண்ணிக் கொண்டாள் நாயகி. மூன்று ஏக்கர் பரப்பளவில் தனது மொத்த பிரமாண்டத்தையும் வெளியிட்டு அவ்வீட்டு தலைவனுக்கு நிகரான கம்பீரத்துடன் நின்றிருந்தது வீடு.

தூரத்தில் தெரிந்த கடலலைகளை வெறித்திருந்தவளின் பின்னே வந்து இறுக கட்டிக்கொண்டான் அவன்.

“என்ன யோசனை?”

வழக்கம் போல் அவள் தோளில் அழுந்தியது அவன் நாடி.

“ப்ச்… ஒன்றுமில்லை, சும்மா!”

“பொய்…” என்றவாறு அவளை தன்புறம் திருப்பியவன் அவள் முகத்தை கூர்ந்தான்.

மிருணா விழிகளை திருப்ப இவன் அந்தப்பக்கமாக தன் முகத்தை நகர்த்தினான்.

“மித்து…” என்றாள் சலிப்புடன்.

“உன் மித்துவே தான், சொல்!” என்றதும் அவள் விழிகள் கரகரவென்று நீரை உற்பத்தி செய்தன.

“ப்ச்… ஏய்…” என்று அவளை அணைத்துக் கொண்டவன், “என்னம்மா?” என்க அவனை இறுக்கிக் கொண்டாள் அவள்.

“நீ இந்த அரசியலை விட்டு விடுகிறாயா? இது வேண்டாம் உனக்கு. நாம் வேறு எங்காவது சென்று நல்ல முறையில் வாழலாம்!” என்றாள் வேகமாக.

ஒரு கணம் உடல் விறைத்தவன், “என்ன திடீரென்று?” என அவளிடமிருந்து விலகி விவரம் கேட்டான்.

“திடீரென்று இல்லை… எனக்கு முதலில் இருந்தே நீ இதில் இப்படி… இப்படி… அது வந்து… அரசியலை பயன்படுத்தி நாட்டு மக்களை ஏமாற்றி சுயநலமாக லாபம் பார்ப்பதில் அவ்வளவாக இஷ்டம் இல்லை!” என்று வார்த்தைகளை மிகவும் கவனமாக தேர்ந்தெடுத்து கணவனிடம் கூறினாள்.

ஓஹோ… என்று நெற்றியை சுருக்கியவன், “உன்னிடம் திருமணத்திற்கு முன்பே இதைப்பற்றி கேட்டிருக்கிறேனே, அப்பொழுது எல்லாம் அது ஒன்றும் பிரச்சினை இல்லை என்று தானே நீ சொன்னாய்!” என அழுத்தமாக பார்த்தான்.

மிருத்யுஞ்சயனின் குற்றஞ்சாட்டும் பார்வையில் மிகவும் தடுமாறி நின்றாள் மிருணாளிணி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *