*15*

 

மிருத்யுஞ்சயனுக்கு விடைக்கொடுத்த மூர்த்தியும், துளசியும் அவர்கள் இருவருக்கும் தனிமை கொடுக்க வேண்டி வீட்டினுள்ளேயே நின்றுவிட, கார் வரை தன்னுடன் நடந்து வந்தவளை திரும்பி பார்த்தான் அவன்.

“நீ இன்னும் உன்னுடைய மொபைல் நம்பரை கூட எனக்கு தரவில்லை!” என்றாள் மிருணா அவனிடம் குறையாக.

சிறு கேலிச்சிரிப்புடன் அவளை பார்த்தவன் பதிலை தவிர்த்துவிட்டு படுகூலாக காரின் உள்ளே ஏறி அமர்ந்தான்.

“டேய்… நான் உன்னிடம் தான் சொல்கிறேன்!” என்றாள் அவள் கோபமாக.

“அது எதற்கு உனக்கு?” என்றான் அவன் அலட்சியமாக.

ஆத்திரத்தில் முகம் சிவக்க, “ஓகே பை!” என்றுவிட்டு வேகமாக திரும்பியவளின் போனிடைலை பிடித்து ஒரே இழுப்பில் அருகில் இழுத்தான் மிருதன்.

“ஆ… ஏய்… முரடா!” என்று சன்னமாக வலியில் அலறினாள் அவள்.

“ஒ… இன்னமும் உன் சொந்த முடி தானா… ஜவுரி இல்லையா?” என்றான் கேலியாக.

“இடியட்… இதையே தான்டா அப்பொழுதும் கேட்டாய்?” என பற்களை கடித்தாள்.

“ஆமாம்… செவன்த் படிக்கிற பாப்பாவிற்கும் உனக்கும் வித்தியாசம் இல்லையா… வயதாகி விட்டதே, ஒருவேளை… முடி கொட்டியபிறகு அதை மறைக்க ஜவுரி எதுவும் யூஸ் செய்கிறாயோ என பார்த்தேன்!” என்று அவன் உதடு மடித்து சிரிக்க இவளோ முகத்தை சுளித்துக் கொண்டாள்.

அவள் முகத்தையே சில நொடிகள் பார்த்திருந்தவன், “சரி… உன் அப்பா, அம்மாவிடம் சொல்லிவிட்டு என்னோடு கிளம்பி வருகிறாயா, நாளை காலையில் கொண்டு வந்து விடுகிறேன்!” என்று சாதாரணமாக கேட்பவனை ஒருகணம் பேவென்று பார்த்தவள், “என்ன?” என்றாள் இன்னமும் சரியாக புரியாது.

“இல்லை… உன்னை விட்டுக் கிளம்ப எனக்கும் மனது வரமாட்டேன் என்கிறது. நீயோ என்னுடைய நம்பர் கேட்கிறாய், அதற்கு பேசாமல் கிளம்பி அங்கே வந்து விடேன். ஒன்றாக டைம் ஸ்பென்ட் செய்யலாம்!” என்று சிரியாமல் சொல்பவனை பார்த்து இவளுக்கு சிரிப்பு வெடித்துவிட, “நீ இருக்கிறாய் பார், சரி கிளம்பு!” என்றாள் புன்னகையுடன்.

“கிளம்புவதா… உன்னை என்னுடன் வரச் சொன்னேன்டி!”

“விளையாடாதே மித்து!” என இன்னமும் சிரித்தாள் பெண்.

“ஹேய்… சீரியசாக சொல்கிறேன்!”

“ஆ… படுத்தாதேடா கிளம்பு!” என்க, அவனோ காரை விட்டு இறங்கியிருந்தான்.

“படுத்துகிறேனா… அப்பொழுது என்னுடன் வர உனக்கு ஆசையில்லை அப்படித்தானே?” என்றான் வேகமாக.

ப்ச்… என்றவள் பதில் ஏதும் கூறாமல் அவன் முகத்தை பார்க்க, சிறிது நேரம் வரை அவள் பார்வையை அழுத்தமாக எதிர்கொண்டவன் பின் மெல்ல சிரித்தவாறே அவளை அருகில் இழுத்து முணுமுணுத்தான்.

“ஹேப்பி பர்த்டே!” என்றவாறு அவள் கையில் ஒரு பெட்டியை திணிக்க, “எத்தனை முறை வாழ்த்துவாய்?” என ஆரம்பித்தவள், “இது என்ன?” என்றாள் அவனிடம் நிமிர்ந்து.

“நீதானே நம்பர் கேட்டாய்?”

“ஆமாம்… அதற்கு… ஏய்… மொபைலா?”

பதில் சொல்லாமல் சிரித்தவனின் தோளில் அடித்தவள், “இது எதற்குடா?” என்றாள்.

“நீ எதற்காக என் நம்பர் கேட்டாயோ அதற்காக தான்!”

வார்த்தைகளின்றி மௌனித்தவளுக்கு அவன் கூப்பிட்டது போலவே உடன் கிளம்பிச் செல்ல அத்தனை ஆசையாக இருந்தது.

“என்ன பேச்சையே காணவில்லை?”

“மாலையிலிருந்து தான் அடுத்தடுத்து என்னை எதுவும் பேச முடியாதபடி உறைய வைக்கிறாயே நீ!”

மெலிதாக நகைத்தவன், “சரி கிளம்பட்டுமா… வீட்டிற்கு போய்விட்டு உனக்கு கால் பண்றேன்!” என்று பிடித்திருந்த அவள் கையை அழுத்தினான்.

அவன் பிரிவை ஏற்றுக்கொள்ள மனம் இல்லா விட்டாலும், ம்… என்று சிரித்த முகமாகவே தலையாட்டினாள் மிருணா.

சின்ன பெருமூச்சொன்றை வெளியேற்றிவிட்டு மிருதன் கிளம்பிச் செல்ல, இவளோ அவன் சென்ற திசையை பார்த்தபடி அப்படியே வாசலில் நின்றிருந்தாள்.

கார் கிளம்பும் ஓசை கேட்டு வெகு நேரமாகியும் மகளை காணவில்லை என்றதும் வாசலை எட்டிப்பார்த்த துளசி, “மிரு…” என்றழைக்க, திரும்பியவள் அமைதியாக வீட்டினுள் வந்தாள்.

“திருமணத்திற்கு இன்னும் இரண்டு வாரங்கள் தான் இருக்கிறது. புது ரக நகைகள், பட்டுப்புடவைகள், டிசைனர் புடவைகள் அப்புறம் உனக்கு தேவையான மற்ற ரெகுலர் வியர்சும் வாங்க வேண்டுமே… எப்பொழுது ஷாப்பிங் வர வசதியாக இருக்கும் என்று சொன்னால், அதற்கேற்றவாறு அப்பாவையும் லீவ் போட சொல்லி விடலாம்!”

மகள் என்ன சொல்வாளோ என உள்ளூர சிறு படபடப்புடன் தான் கேட்டார் துளசி. தந்தையின் புறம் ஒருமுறை பார்வையை செலுத்திவிட்டு அவரின் தவிப்பையும் குறித்துக் கொண்டவள், இதற்குமேல் தானும் மிருதனை போல் சமாதானமாக போக முடிவு செய்தாள்.

“நாளைக்கு அலுவலகம் சென்று சூழ்நிலையை பார்த்து விட்டுச் சொல்கிறேன். அதன்பிறகு அதை எல்லாம் முடிவு செய்துக் கொள்ளலாம்!” என்றவள், “பிரசன்னா?” என கேட்டு நிறுத்த, “அவன் அடுத்த வாரத்தில் வந்து விடுவதாக சொன்னான்மா!” என்றார் மூர்த்தி அவசரமாக, ம்… என்று விட்டு அவள் தன்னறைக்குள் நுழைந்துக் கொள்ள, பெற்றவர்களின் முகத்தில் மெல்ல நிம்மதி தோன்றியது.

இரவு உடைக்கு மாறி படுக்கையில் சரிந்தவள் அன்றைய நிகழ்வுகளை கண்மூடி திரும்ப தன் எண்ண ஓட்டத்தில் நிதானமாக ஓட்டிப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

மிருத்யுஞ்சயனுடன் பேசிக் கொண்டிருந்த ஒவ்வொரு சூழ்நிலையையும் அவள் ரசனையுடன் அசைப்போட்டுக் கொண்டிருக்க, இதழில் ஓட்ட வைத்தது போல் சிரிப்பு உறைந்து இருந்தது. அவன் திரும்பவும் தன் வாழ்வில் நுழைந்து அனைத்தையும் தலைகீழாய் மாற்றி விட்டான்.

ஏதோ ஒரு இன்னிசையின் சத்தம் அவள் நினைவை கலைக்க புருவம் சுருக்கி திரும்பி பார்த்தாள். அவள் கைபேசி மௌனமாக தான் இருந்தது. பின்பே மிருதன் கொடுத்திருந்தது நினைவு வர வேகமாக அதை எடுத்து பரபரவென்று கிப்ட் ரேப்பரை பிரித்தாள்.

‘மை மித்து’ காலிங் என்று வர, இவள் உதடுகளில் மீண்டும் சிரிப்பு, ஸ்வைப் செய்து காதில் வைத்தவள் பேச்சின்றி இருக்க, “ஏய்…” என்று அதட்டினான் அவன்.

“ம்…”

“ஏன் அமைதியாக இருக்கிறாய்?”

“ஆங்… சாயந்திரம் நீயும் இப்படித்தானே எடுத்தவுடன் பேசவில்லை!”

“ஓஹோ… சரி… என்ன செய்கிறாய்?”

“கேள்வியை பார், பத்தரை மணிக்கு என்ன செய்வார்கள்? தூங்கப் போகிறேன்!”

“உனக்கு தூக்கம் எல்லாம் வருகிறதா?” என்று அவன் பெருமூச்சு விட ஓசையின்றி நகைத்தவள், “முயற்சி செய்துக் கொண்டிருக்கிறேன்!” என்றாள் அமர்த்தலாக.

“ஓகே… உன்னிடம் இதைப் பேச மறந்து விட்டேன்!”

“என்ன? சொல்!”

“அது… நான் வேறு கட்சியில் இணைந்ததில் அப்பாவிற்கு என்னிடம் கொஞ்சம் மனக்கசப்பு. அதனால் என்னை ஒதுக்கி வைத்தது மட்டுமில்லாமல் அவரின் கட்சியிலேயே இளைஞர் வட்டம் சூடாக கேள்வி எழுப்பவும் இவரும் கோபமாக அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து விலகி விட்டார். இப்பொழுது அமைதியாக ஊரிலிருக்கும் விவசாய நிலங்களையும், மில்லையும் மட்டும் தான் மேற்பார்வையிட்டு வருகிறார். அம்மா, அப்பாவை இங்கே நம் வீட்டிற்கு அழைத்துக் கொள்ள எனக்கு ஆசை, அம்மாவிற்கு விருப்பம் இருந்தாலும் அப்பா என்மீது கோபமாக இருப்பதால் தயங்கிக் கொண்டிருக்கிறார்கள். இதுவே நமக்கு திருமணம் முடிந்து விட்டால் ஒன்றாக இருக்கலாம் என எதையாவது சாக்கு சொல்லி அவர்களை இங்கே வரவழைக்க திட்டம் போடலாம். நீ என்ன சொல்கிறாய்?” என்று அவளிடம் அபிப்பிராயம் கேட்டான்.

அவன் கூறுவதையெல்லாம் எந்தவித குறுக்கீடும் இல்லாமல் பொறுமையாக கேட்டிருந்தவள், “நீ சொல்வதுப் போலவே அங்கிள், ஆன்ட்டியை நம்முடன் அழைத்துக் கொள்ளலாம். ஆனால் மித்து… அங்கிளுக்கு இங்கே வந்தால் ரொம்பவும் போரடிக்கும் இல்லை, அவருக்கு பிடித்த விதமாக அவர் பொழுதை போக்குவதற்கு ஏதாவது ஏற்பாடு செய்துவிட்டு அழைத்தால் அவருக்கும் ஒரு ஆர்வம் வரும்!” என்றாள் யோசனையாக.

“ஆமாம்… சரியாக சொன்னாய்? அதற்கு என்ன செய்யலாம்?”

“ம்… நான் கொஞ்சம் யோசித்து சொல்கிறேன்!”

“சரி பார்… ஆன்ட்டி, அங்கிளிடம் ஒழுங்காக பேசினாயா?” என்றவுடன், அவன் சென்றதும் நடந்தப் பேச்சுக்களை கூறினாள் மிருணாளிணி.

“குட்… அப்படியே இயல்பாக மூவ் ஆகிக்கொள். நாம் மகிழ்ச்சியாக இருப்பது போலவே அவர்களையும் நிம்மதியுடன் வைத்துக்கொள்ள வேண்டும்!”

“ம்…”

“சரி வைக்கட்டுமா… குட் நைட்!”

“தூக்கம் வராது என்று சொன்னாய்…”

“உன்னை போல் முயற்சிக்கிறேன்மா, நாளை கட்சி அலுவலகத்தில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் வேறு இருக்கிறது. அதற்கு செல்ல வேண்டும், அப்புறம் மதியம் தொழில்முறை சந்திப்பு ஒன்றிற்கு தயாராக வேண்டும்!”

அமைதியாக, “ஓ…” என்றவள், “ஓகே… குட் நைட்!” என்று இணைப்பை துண்டித்து விட்டு சிந்தனையில் ஆழ்ந்தாள்.

இத்தனை வருட அரசியலில் மிருதனுக்கு சொந்தமாக தற்பொழுது பினாமி பெயரில் ஒரு பள்ளியும், கல்லூரியும் இருக்கிறது. அதோடு ரியல் எஸ்டேட் தொழிலிலும் கால் பதித்து அடியாட்களை கொண்டு தான் நினைத்ததை நடத்திக் கொண்டிருக்கிறான். இதற்கெல்லாம் பணம் அவன் செய்யும் ஏதோ அண்டர்கிரவுண்ட் பிசினஸில் இருந்து வருகிறது என்று மீடியாக்கள் ஆதாரமற்ற இரகசிய தகவல்களை வெளியே விட்டு பரபரப்பை கூட்டுவது தான் மிச்சம், அவனுக்கு எதிராக ஒன்றும் செய்ய முடிவதில்லை. மக்களுக்கு பணியாற்றுவதை விட்டுவிட்டு அரசியலில் கொள்ளை லாபம் சம்பாதிக்கும் நோக்குடன் அவனுடைய நடவடிக்கைகள் இருக்கவும் தான் ஜெய்சங்கருக்கு மிகவும் அதிருப்தியை கொடுக்கிறது என்பதை மிருணா நன்றாகவே உணர்ந்திருந்தாள். ஏன்? இவளுக்குமே கூட அவன் செய்யும் பல செயல்கள் பிடிக்கவில்லை தான். அதற்காக அவன் மீது கொண்டுள்ள நேசம் மாறிவிடாதே… திருமணத்திற்கு பிறகு மெதுவாக அவனிடம் பேசிப் பார்க்க வேண்டும் என்று முடிவு செய்துக் கொண்ட பின்னே தான் நித்திரா தேவி அருகில் வந்தாள்.

மறுநாள் காலையில் இவள் அலுவலகத்தில் நுழையும் பொழுதே இவளை ஓரமாக தள்ளிச்சென்ற மணிகர்ணிகா, “வாழ்த்துக்கள் மேடம்… இன்னும் இரண்டு வாரங்களில் திருமணமாமே…” என்று கண்சிமிட்டி அவள் கேலியாக இழுக்கவும் அழகாக சிரித்தவள், “அதற்குள் அண்ணா சொல்லி விட்டாரா?” என்று கேட்க, “பின்னே… இல்லையென்றால் ஜே.பி.யை ஒரு வழியாக்கி விட மாட்டேன்!” என்று உதார் விட்டாள் அவள்.

சின்ன சிரிப்புடன் மௌனம் காத்தவளை சில நொடிகள் ஆழ்ந்துப் பார்த்தவள், “ரொம்ப சந்தோசமாக இருக்கிறது மிரு. உன் தனிப்பட்ட விஷயத்தில் நான் தலையிடக்கூடாது என்று உன்னுடைய அண்ணா என்னை கட்டுப்படுத்தி வைத்து இருந்ததால் நம் பெண் என்கிற எண்ணத்தில் உன்னை பற்றிய கவலை மனதை அரித்தாலும் என்னால் ஒரு நிலைக்கு மேல் உன்னிடம் நெருங்கி உரிமை எடுத்துக் கொள்ள முடியவில்லை. அதனால் தான் நேற்று நீ ஏதோ பதற்றமாக இருக்கவும் மனம் கேட்காமல் ஜே.பி.யிடம் கூறினேன். அவரும் மிருதன் வந்து சென்றதில் இருந்தே உன் மீது கொஞ்சம் கவனமாக இருந்ததால் பிரச்சினை எதுவும் தீவிரமாக இருக்குமோ என்று பயந்து உன்னை பின்தொடர்ந்து வந்து விட்டார்!” என்றவள் சட்டென்று வாய்விட்டு நகைக்க ஆரம்பிக்க, “என்ன அண்ணி?” என்றாள் இவள் ஆர்வமாக.

“ஓ காட்… இல்லை… பெரிய பிரச்சினையை எதிர்பார்த்து அதை தான் எப்படி சமாளிக்க வேண்டும் என பதற்றத்துடன் காத்திருந்தவருக்கு நீங்கள் இருவரும் கொடுத்த ட்விஸ்ட் அவ்வளவு அதிர்ச்சியாக இருந்திருக்கிறது. அதுவும் உங்கள் இருவருக்குள்ளும் அது நட்போ… காதலோ ஏதோவொரு நெருக்கம் இருக்கவும், தான் தேவையில்லாமல் இங்கே வந்து தொலைத்து விட்டோமே என ரொம்ப சங்கடப்பட்டு நின்று இருந்திருக்கிறார்!” என்று பெரும் நகைச்சுவையை கூறுவது போல் அவள் மேலும் சிரிக்க இவளுக்கும் புன்னகை தான்.

“ஆனால்… நானோ, மித்துவோ அப்படி நினைக்கவில்லை. என் மீது அக்கறை கொண்டு அவர் அவ்வளவு தூரம் பின்தொடர்ந்து வந்தது எங்கள் இருவருக்குமே அவர் மீது நன்மதிப்பை தான் கொடுத்தது!”

“பாருடா… மித்து என்று அதற்குள் செல்லப்பெயர் எல்லாம் வைத்து அழைக்க ஆரம்பித்தாயிற்றா…!”

“ஐயோ அண்ணி… அவனை செவன்த் கிளாஸில் இருந்தே அப்படித்தான் நான் அழைப்பேன்!”

“ஓஹோ… அப்பொழுது அவ்விடம் உன்னை அழைக்கும் பெயர் என்னவாக இருக்கும்?” என யோசனைக்கு போனாள்.

“ரொம்ப யோசிக்காதீர்கள்… நான் மித்து என்று கூப்பிடவும் பெண் பெயர் போல உள்ளது என்று முதலில் சண்டைப் போட்டவன் பிறகு என்னை மின்மினி என்று பூச்சி பெயர் எல்லாம் சொல்லி கிண்டல் செய்து கடைசியில் மின்னு ஆக்கி விட்டான்!” என்றாள் மிருணாளிணி சிரிப்புடன்.

“மின்னு… இது கூட நன்றாக தான் இருக்கிறது!” என்று ரசித்தவள், “சரி… அப்பா, அம்மா என்ன சொல்கிறார்கள்? மிருதன் வீட்டிலிருந்து முறைப்படி பேசினார்களா?” என விசாரித்தாள்.

“இல்லை அண்ணி… எல்லாம் இன்று தான் பேசுகிறார்கள். அவன் மட்டும் நேற்றிரவு அப்பா, அம்மாவிடம் சுருக்கமாக பேசிவிட்டு கிளம்பி விட்டான்!”

“ஓ… சரி பார்… ஜே.பி.யிடமும், சி.இ.ஓ.விடமும் கலந்துப் பேசி உன்னுடைய முக்கியமான வேலைகளை எல்லாம் முடித்துவிட்டு சீக்கிரமாக திருமணத்திற்கு விடுமுறை எடுக்கப் பார். குறைந்தது பத்து நாட்களில் இருந்து இரண்டு வாரங்கள் தேவைப்படுமே…”

“ம்… ஆமாம் அண்ணி… பேச வேண்டும்!” என்றவள், “இன்விடேசன் வைக்கும்வரை வேறு யாருக்கும் விஷயம் தெரிய வேண்டாம் அண்ணி!” என்றாள் உடனே வேகமாக.

“ஓகேடா… டன்!” என்று அவள் கையை அழுத்திவிட்டு தன் இடம் நோக்கி நடந்தாள் மணிகர்ணிகா.


 

நெருங்கிய உறவுமுறை, நட்புக்கு மட்டுமே திருமண அழைப்பு விடுத்து, எண்ணி… ஐம்பதே பேர் மணமக்களை சூழ்ந்து நின்று வாழ்த்த, கரூர் தான்தோன்றி மலையில் அருள்பாலித்து வரும் கல்யாண வேங்கடரமண பெருமாளின் முன்னிலையில் மிருணாளிணியை தன் வாழ்க்கைத் துணைவியாக மூன்று முடிச்சியிட்டு ஏற்றுக் கொண்டான் மிருத்யுஞ்சயன்.

தன் கைகளை விலக்கிக் கொண்டப் பொழுதும் பார்வையை விலக்கிக் கொள்ள முடியாமல் அவள் முகத்தின் நிம்மதியையே இவன் அசையாது பார்த்திருக்க, அதை உணர்ந்தவளும் அவனிடம் நிமிர்ந்து மெல்ல சிரித்தாள்.

அதற்குள் அவள் வகிட்டில் குங்குமம் வைக்க வேண்டிய அடுத்த சடங்கிற்கு ஐயர் அவனை ஆயத்தப்படுத்த, உதட்டில் உறைந்துவிட்ட மோகனப் புன்னகையுடன் அடுத்தடுத்து ஒவ்வொன்றையும் ஆசையுடன் மேற்கொண்டான் அவன்.

தங்களிடம் வந்து கால்பணிந்து ஆசீர்வாதம் வேண்டிய மணமக்களை இரண்டு பெற்றவர்களுமே மனம் நிறைந்து ஆசீர்வதித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *