*1*

 

“ஸ்ரீஸ்ரீனிவாசா கோவிந்தா…

ஸ்ரீவேங்கடேசா கோவிந்தா…

பக்தவத்சலா கோவிந்தா…

பாகவதப்ரிய கோவிந்தா…

நித்ய நிர்மலா கோவிந்தா…

நீலமேகஸ்யாமா கோவிந்தா…

புராண புருஷா கோவிந்தா…

புண்டரிகாக்ஷா கோவிந்தா…

கோவிந்தா ஹரி கோவிந்தா…

கோகுல நந்தன கோவிந்தா…

கோவிந்தா ஹரி கோவிந்தா…

கோகுல நந்தன கோவிந்தா…”

தன் அறைக் கதவின் இடுக்கில் மெதுவாக கசிந்து வந்த பாடலின் ஒலியில் மெல்ல உறக்கம் கலைய புரண்டுப் படுத்தாள் மிருணாளிணி.

‘ஓ… இன்று புரட்டாசி சனிக்கிழமையோ…’ என புலன்கள் விழித்து யோசனையில் தன் புருவங்களை சுருக்கியவள் மெல்ல இமைகளை பிரித்து பக்கவாட்டில் திரும்பி ஜன்னல் வழியே தெரிந்த காலை நேர தெளிந்த நீல வானத்தை சில நிமிடங்களுக்கு நிச்சலனமாக பார்த்தபடி படுத்திருந்தாள்.

பின்பு திரும்பி சுவர் கடிகாரம் பார்த்தவள், அது நேரம் ஆறு முப்பதை காண்பிக்கவும் வேகமாக எழுந்து அமர்ந்தாள். குளியலறை சென்று கையோடு தன்னுடைய குளியலையும் முடித்துக் கொண்டு வெளியே வந்து கைக்கு கிடைத்த இலகுவான காட்டன் பேன்ட் சர்ட் ஒன்றை அணிந்து நெற்றியில் சிறு பொட்டிட்டு அறைக் கதவை திறக்கவும் பூஜை அறையிலிருந்து திருமூர்த்தி வெளியே வந்தார்.

மகளை காணவும் திரும்பவும் உள்ளே சென்று கையில் துளசி தீர்த்தம் எடுத்துக் கொண்டு விரைந்து இவளருகில் வந்தவர், “இந்தம்மா… தீர்த்தம் வாங்கிக் கொள்!” என்று தன் பக்கம் திரும்பாமல் வேகமாக சமையலறை நோக்கி நடப்பவளை நிறுத்தினார் அவர்.

“இல்லை… இருக்கட்டும்!” என ஒரு நொடி தயங்கி அவரிடம் மறுத்துவிட்டு மேலே சென்றவளை பார்த்து இவர் முகம் சுருங்கிவிட, கணவனின் வாட்டத்தை காண பொறுக்காமல் துளசி தான் தன்னுடைய மகளை அதட்டினார்.

“மிருணா… அப்பா கொடுக்கும் பிரசாதத்தை வாங்கிக் கொள்ளாமல் என்ன இது இப்படி மரியாதை இல்லாமல் செல்கிறாய் நீ?” என்றார் அதிருப்தியாக.

தந்தையின் பேச்சிற்கு நின்றாவது பதில் சொன்ன மகள் தன் தாயை திரும்பிக் கூட பாராமல் விறுவிறுவென்று உள்ளே சென்று மறைந்து விட்டாள்.

துளசியின் முகம் கணவனுக்கு மேல் வேதனையில் சுருங்கி விழ, அவரை நெருங்கி ஆதரவாக தோள் தட்டிய மூர்த்தி, “விடு… அவளை எதுவும் சொல்லாதே, அவள் வசதிப் போல் நடந்துக் கொள்ளட்டும்!” என்றவாறு சோர்வுடன் சென்று சோபாவில் அமர்ந்தார்.

மெல்ல தன்னை சுதாரித்துக் கொண்ட துளசியும், “நான் போய் உங்களுக்கு டீ எடுத்து வருகிறேன்!” என்று நகர முயல மூர்த்தி வேகமாக மனைவியை தடுத்தார், “இரு… அவள் வெளியே வரட்டும். அப்புறம் தனக்கு எதுவும் கலந்துக் கொள்ளாமல் அவள் பாட்டிற்கு அவளுடைய அறையில் புகுந்துக் கொள்ளப் போகிறாள்!” என்றார்.

“ஆனால் அவள் தன் சமையலை முடித்து வெளியே வர எப்படியும் ஒரு அரைமணி நேரமாகும்!” என்றார் அவர் தயக்கத்துடன்.

“ப்ச்… பரவாயில்லை விடு, ஒரு அரைமணி நேரம் தானே!” என்றவாறு தன் மனபாரத்தை குறைக்க செய்தித்தாளை எடுத்து மேம்போக்காய் பார்வையிட ஆரம்பித்தார் மூர்த்தி.

லேசாய் பெருமூச்சு விட்டுக்கொண்ட துளசியும், “சரி… அவள் வெளியே வந்தவுடன் ஒரு குரல் கொடுங்கள். நான் போய் தோட்டத்தில் முருங்கை கீரை பறிக்கிறேன்!” என்று மனதின் வேதனையை திசைத்திருப்ப பின்பக்கம் சென்றார்.

தன் மனைவியை நிமிர்ந்தும் பாராமல் இவர் மௌனமாக தலையசைக்க, துளசி வரவேற்பறையை கடப்பதற்குள் கையில் தனது காபி கப்புடன் விரைந்து வந்த மிருணா வழக்கம் போல் இருவரையும் திரும்பியும் பாராது தன்னுடைய அறைக்குள் நுழைந்து கதவை சாற்றிக் கொண்டாள்.

பெற்றவர்கள் குழப்பத்துடன் திரும்பி ஒருவரையொருவர் பார்த்துவிட்டு மகளின் அறைப் பக்கம் கவலையுடன் பார்வையை வீசியவர்கள் வேகமாக எழுந்து சமையலறை சென்று பார்க்க தனது சமையலின் துவக்கமாக அடுப்பில் குக்கரை வைத்துவிட்டு தான் சென்றிருந்தாள் அவள்.

முகத்தில் நிம்மதி பரவ மனைவியிடம், “சரி சீக்கிரம் டீயை போடு. நாம் இருவரும் வெளியே சென்றால் தான் அவள் வந்து மீதி சமையலை முடிப்பாள்!” என்று மனைவியை துரிதப்படுத்தினார் திருமூர்த்தி.

ஆங்… என்ற துளசியும் மடமடவென்று கணவருக்கு தேநீரை கலந்து அவர் கையில் கொடுத்தவாறு, “நீங்கள் பேப்பர் படியுங்கள், நான் பின்னால் தோட்டத்திற்கு செல்கிறேன்!” என்று அருகில் நின்றிருந்த அவரிடம் கூறுவது போல் அறைக்குள் இருக்கும் மகளுக்கு ஓங்கி குரல் கொடுத்தபடி வெளியேறினார்.

மிருணா ஒரு பக்கம் தனக்கு காபி டிக்காஷனை கொதிக்க விட்டபடி அரிசி, பருப்பை களைந்து குக்கரை வைக்கும் பொழுதே பெற்றோர் அடிக்குரலில் தங்களுக்குள் எதையோ குசுகுசுவென்று பேசிக்கொள்ளவுமே தன் காதை தீட்டிக் கொண்டவள், மூர்த்தி இன்னமும் தேநீர் அருந்தாமல் இருக்கிறார் என தெரிய வரவும் இவள் தனது அறைக்குள் புகுந்துக் கொண்டாள்.

தாயின் குரலுக்கு பின் இரண்டு நிமிட இடைவெளி விட்டு வெளியே வந்தவள், அறையின் வெறுமையை சுற்றிலும் அளந்துவிட்டு தன் நளபாகத்தில் தீவிரமாக இறங்கினாள்.

சரியாக எட்டு பதினைந்திற்கு தன் மகளின் ஹோண்டா ஆக்டிவா கனைத்துக் கொண்டு கிளம்பும் ஓசை கேட்கவும் வாசலுக்கு விரைந்து சென்ற துளசி அவளின் பின்புறத்தை கண்கள் கலங்க ஏக்கத்துடன் பார்த்தபடி நின்றிருந்தார்.

மிருணாளிணி! எம்.ஏ. ஜர்னலிசம் முடித்த இருபத்தியேழு வயது இளம்பெண். டெலிவிஷன் ரைட்டராகவும், நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் பிரபல தனியார் தொலைக்காட்சி நிறுவனமான ஃபார்யூ சானலில் கடந்த நான்கு வருடங்களாக பணிபுரிந்து வருகிறாள்.

(ஆம்… என்னுடைய “என்னை தெரியுமா” நாவலில் வரும் நாயகன் ஜெய்சங்கர் மற்றும் அவன் துணைவி மணிகர்ணிகா பணிபுரியும் அதே நிறுவனம் தான்.)

தனது வேலையில் தீவிரமாக கணினியில் ஈடுபட்டிருந்த மிருணாவின் தோளில் மெலிதாக ஒரு அடி விழ, அதுவரை தன் நெற்றி சுருங்கியிருக்க செய்கின்ற வேலையில் மிகவும் ஆழமாக மூழ்கி விட்டிருந்தவள் சற்றே அலுப்புடன் திரும்பி பார்க்க, கண்களை இடுக்கியபடி அவள் முகத்தை ஆராய்ந்தவாறு அங்கே நின்றிருந்தாள் மணி.

அவளை கண்டதும் லேசாய் முகம் மலர, “ஹாய் அண்ணி!” என்றாள் இவள் சின்ன முறுவலுடன்.

“இங்கே ஒருத்தி வந்து உன் பின்னால் ஐந்து நிமிடங்களாக நிற்பது தெரியவில்லை. அப்படி வேலை பார்க்கிறாய் நீ… ஆமாம்… எந்த நிகழ்ச்சிக்கு ஸ்கிரிப்ட் தயார் செய்துக் கொண்டிருக்கிறாய்?” என்றவாறு அவள் அருகே ஒரு சேரை இழுத்துப் போட்டுக்கொண்டு அமர்ந்தாள்.

“ம்… வருகின்ற வெள்ளி இரவு ஒளிப்பரப்பாக இருக்கும் அண்ணாவுடைய நிகழ்ச்சிக்கு அந்த கிராமம் தொடர்பாக இணையத்தில் பகிரப்பட்டிருக்கும் தகவல்களை தான் ஒருங்கிணைத்துக் கொண்டிருக்கிறேன். அப்புறம்… உங்களுடைய வேலை என்னவாயிற்று? காலையிலேயே வர இருக்கின்ற மகளிர் தினத்திற்காக அந்த சினிமா நடிகையை பேட்டி எடுக்க சென்றிருந்தீர்கள்!”

“ப்ச்… ஆமாம்… விருப்பமே இல்லாமல் தான் போனேன். அதேபோல் அந்த லேடியுடைய அலட்டலை மட்டுமே பதிவு செய்துக் கொண்டு வந்திருக்கிறோம். உன் அண்ணாவிடம் அப்பொழுதே சொன்னேன், இதெல்லாம் எனக்கு பிடிக்காது என்று. அவர் தான் வழக்கமாக ஒரு டயலாக் சொல்வாரே… மணி, நமக்கு பிடித்தமான செயலில் நாம் சுதந்திரமாக ஈடுபடுவதற்கு இதுபோன்ற நிகழ்ச்சிகளையும் சகித்துக் கொண்டு செய்து தான் ஆக வேண்டும் என ஆரம்பித்தாரா… சரி நான் கிளம்புகிறேன் என்று கிளம்பி விட்டேன்!” என்றாள் மணி அலட்சியமாக உதட்டை சுழித்து.

“ஹஹா… அண்ணா… உங்களை கண்டுப்பிடிக்கவில்லையா? அவரை இப்படி சட்டென்று தவிர்த்துவிட்டு கிளம்பி விட்டீர்களே!” என்றாள் மிரு சிரிப்புடன்.

“அதெல்லாம்… அப்பொழுதே நெற்றிக்கண்ணை திறந்து ஒரு பார்வை பார்த்தாயிற்று!” என கண்சிமிட்டினாள் பெண்.

இடவலமாய் தலையசைத்து நகைத்தவளை கனிவுடன் பார்த்து, “சரி… சாப்பிட்டாயா?” என்று கேட்டாள்.

“இன்னும் இல்லையே அண்ணி… டைம் என்ன? ஓ… மூன்று ஆகப் போகிறதா…” என்று மெல்ல இழுத்தவள் தன்னை முறைத்து பார்த்திருந்தவளிடம் லேசாக அசடு வழிந்தபடி சிரித்து வைத்தாள்.

“எனக்கு தெரியும் உன்னை பற்றி… அதனால் தான் அலுவலகம் வந்தவுடன் நேராக இங்கே வந்தேன்!”

“இதோ அண்ணி… இப்பொழுதே சாப்பிட்டு விடுகிறேன். நீங்கள்?” என்று கேள்வி எழுப்பியடி தன்னுடைய டப்பர் வேரை கையில் எடுத்தாள்.

“நாங்கள் எல்லாம் இன்று வெளியே போகிறோமே என்று தலப்பாகட்டு பிரியாணியை எய்ம் பண்ணி தான் சாப்பாடு எடுத்துக் கொள்ளாமல் கிளம்பி வந்தோம்!” என கண்ணடித்து புன்னகைத்தாள் மணி.

முறுவலித்தபடி அவளுக்கு தன் மூடியில் கொஞ்சம் சாதம் வைத்துக் கொடுத்தவள், “அப்பொழுது இன்று வீட்டில் அம்மாவுடைய சமையல் தானா?” என்றபடி ஒரு ஸ்பூன் சாதம் எடுத்து வாயில் போட்டுக் கொண்டாள்.

“அதெல்லாம்… எங்கள் வீட்டில் வேலைக்காகும்மா? என்னுடைய திட்டம் தெரிந்ததும் என் அத்தை நீதான் முழு சமையலும் செய்ய வேண்டும் என்று கழன்றுக் கொண்டார்கள். இதில் பையனிடம் உத்திரவு வேறு… டேய்… இன்று இரவு எங்கள் அனைவரையும் நீ தலப்பாக்கட்டு அழைத்து செல்கிறாய் என ஒரே அலம்பல் போ. அதற்கெல்லாம் அவருடன் ஜோராக கூட்டு சேர்ந்துக் கொண்டு நான் பெற்று போட்டிருப்பது கொட்டமடிக்கிறது!” என்று அலுத்தபடி தலையில் கை வைத்துக் கொண்டாள்.

“உங்கள் வீட்டு ஆட்களை யாராலும் அடித்துக்கொள்ள முடியாது. சான்சே இல்லை அண்ணி… எந்நேரமும் ரொம்ப ஜாலியாக இருக்கும் இல்லை?’ என்றவாறு ரசித்து சிரித்தவளை புன்னகையுடன் நோக்கியவள், “ஆமாமாம்… அம்மாவில் இருந்து பிள்ளை, பேரன் முதற்கொண்டு அனைவரும் ஒரே மாதிரி இருந்தால்…” என முதலில் கேலியாக ஆரம்பித்தவள் பின்பு தன் குடும்பத்தினரை எண்ணி தனக்குள் ரகசியமாக நகைத்துக் கொண்டாள்.

“சரி சரி… போதும், கொஞ்சம் உங்கள் லவ்சில் இருந்து வெளியே வாங்க!” என்று கண்சிமிட்டினாள் மிருணா.

ஏய்… என்று அவளை போலியாக முறைத்தபடி அவள் கொடுத்த சாதத்தை ஒரு வாய் உண்டவள், “இன்றும் உன் சமையல் தானா?” என கேட்டவாறு அவளிடம் நிமிர்ந்தாள்.

எதிரே இருந்தவள், ம்… என்று தோள்களை குலுக்கவும், “எப்படி தான் இப்படி அலுத்துக் கொள்ளாமல் தினமும் சமைத்து எடுத்து வருகிறாயோ நீ? என்ன தான் உன் அம்மாவுடைய சமையல் நன்றாக இருக்காது என்றாலும்…” என நிறுத்தி தன் தலையை அசைத்துக் கொண்டவள், “என்னால் எல்லாம் முடியாதுப்பா… ஏதோ வீட்டில் என் அத்தை இருக்கவும் நான் பிழைத்துக் கொண்டேன். இல்லையென்றால்… ஐயோ சாமி, சமையலறை பக்கம் செல்ல வேண்டும் என்று நினைத்தாலே அவ்வளவு அலுப்பாக இருக்கும்!” என புலம்பியவளை கண்களில் உணர்வில்லாத வெற்று சிரிப்புடன் பார்த்திருந்தாள் நாயகி.

“சரி நீ பார்… நான் போய் என் வேலையை பார்க்கிறேன்!” என்று வெளியேறியவளின் பின்னே சாற்றிக் கொண்ட கதவை சில நொடிகளுக்கு வெறித்துப் பார்த்தவள் பின் சலிப்புடன் தன்னுடைய கணினியின் புறம் பார்வையை திருப்பினாள்.

அடுத்த வாரம் இவள் தொகுத்து வழங்க இருக்கும் தனியார் நிகழ்ச்சி தொடர்பாக வந்திருந்த விவரங்களில் இவள் விழிகளை மேய விடும் நேரம், மேசை மேலிருந்த கைபேசி சிணுங்கியது. சின்ன புருவச் சுளிப்புடன் அதில் பார்வையை ஓட்டியவள் சி.இ.ஓ.விடம் இருந்து அழைப்பு எனவும் விரைந்து எடுத்து காதில் வைத்தாள்.

“சார்!”

“__________________________”

“அதற்கான ஸ்க்ரிப்டை நேற்றே தயார் செய்து அவர்கள் டீமிடம் கொடுத்து விட்டேன் சார்!”

“__________________________”

“ஓ… அதில் சில மாற்றங்கள் செய்ய வேண்டுமா? இதோ வருகிறேன்!” என இணைப்பை துண்டித்து கணினியை அணைத்து விட்டு எழுந்தவள், அவரின் கேபின் நோக்கி வேகமாக நடந்தாள்.


சோபாவில் அவ்வளவு நேரமாக அவனருகில் அமைதியாக வீற்றிருந்த அலைபேசி அவனின் கவனத்தை தன்பக்கம் திருப்பும் முயற்சியாக ஓசையெழுப்பி தோற்று ஓயும் நேரம் அதற்கு சொந்தமானவனோ அதை சற்றும் சட்டை செய்யாது தன்னுடைய கவனம் முழுவதையும் எதிரே தெரிந்த தொலைக்காட்சி திரையில் சுவாரசியத்துடன் தொலைத்திருந்தான்.

மீண்டும் அடுத்த இடைவெளியில் அவன் கைபேசி சத்தமாக இசை மீட்ட ஆரம்பிக்கவும் வெளியில் இருந்து வேகமாக உள்ளே வந்த முருகன், “தம்பி… தலைவர் தான் கூப்பிடுகிறார் போலிருக்கிறது!” என்றார் அவனிடம் அழைப்பவரின் பெயரை பார்வையிட்டபடி.

ஆங்… பேசிக்கலாம் அண்ணா!” என்று திரையை விட்டு விழிகளை சிறிதும் அகற்றாமல் அவன் அலட்சியமாக பதில் கூறவும் இவரும் திரும்பி அதில் தெரிந்தப் பெண்ணை பார்த்தவர் தனக்குள் மெதுவாக புன்னகைத்துக் கொண்டார்.

தம்பிக்கு இந்தப் பெண்ணை ரொம்ப பிடிக்குமோ!”

சற்றே புருவம் சுருக்கி அவரிடம் தன் கண்மணிகளை லேசாக நகர்த்தியவன் பின்பு உதட்டில் நெளிந்த சிறு சிரிப்போடு மறுபடியும் பார்வையை அவள் மீது நிலைநிறுத்தினான்.

அமைதியாக சிரித்தால் என்ன அர்த்தம் தம்பி?”

உங்களுக்கு பதில் சொல்ல நான் பிரியப்படவில்லை என்று அர்த்தம் அண்ணா!” என்றான் மெல்லிய கண்சிமிட்டிலோடு பளிச்சென்று.

பதில் தான் அழுத்தமாகவும்ஒதுக்கமாகவும் வந்ததே தவிர அவன் முகத்தில் விரவியிருந்த வசீகரப் புன்னகை சிறிதும் குறையவில்லை.

அவன் குணம் அறிந்தவரும் சின்ன தலையசைப்போடு சிரித்த முகமாகவே வெளியேறினார்.

இடைவேளை முடிந்து முயன்றால் வெல்ல முடியும்!‘ நிகழ்ச்சிக்காக தனியார் பள்ளி ஒன்றின் நிறுவனரான திருமதி.நிறைமதியை மிருணாளிணி பேட்டி எடுக்கும் நிகழ்ச்சி மீண்டும் துவங்கவும் இவன் விழிகள் ஆவலுடன் அவள் மீது படிந்தது.

என்ன மின்னு இந்த தம்பிக்கு உன்னை ரொம்பவும் பிடித்திருக்கிறதோ?” என்று ரகசிய குரலில் அவளிடம் குறும்பாக கேட்டு விட்டுப் பிறகு எதையோ நினைத்து ரசித்தவனாக இடவலமாய் தலையசைத்து மௌன சிரிப்பில் குலுங்க ஆரம்பித்தான் அவன்.

2 thoughts on “Varathu Vantha Nayagan 1 – Deepababu”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *