*23*

 

“ஏன்பா பிரவீண் நான் உங்களுடன் கண்டிப்பாக இங்கே தங்கியாக வேண்டுமா என்ன? நான் நன்றாக தான் இருக்கிறேன், என்னால் அங்கே ஊரில் தனியாக சமாளித்துக் கொள்ள முடியும். சாரதா கிளம்பும் பொழுது நானும் கிளம்புகிறேன்!” என பேரனிடம் தயங்கி தயங்கி மொழிந்தார் பொன்னம்மா.

இரத்த உறவுகளே தன்னை ஒதுக்கி விட்ட நிலையில் தான் செய்துவிட்ட சின்ன உதவிக்காக இந்தப் பையன் ஏன் தன் பாரத்தை சுமக்க வேண்டும் என்று சங்கடப்பட்டார் அவர்.

பிரவீண், பிரணவிகா திருமணம் முடிந்து ஒரு வாரம் ஆன நிலையில் அவர்களை தனிக்குடித்தனம் வைக்கவென்று வாசு, சிதம்பரம், சாரதா, சஞ்சய், செந்தில் அவன் மனைவி என அனைவரும் சிம்லாவிற்கு திரண்டு வந்திருந்தனர்.

“எங்களுடன் தங்குவதற்கு உங்களுக்கு எதுவும் அசௌகரியமாக இருக்கிறதா பாட்டி?” என்றான் பிரவீண் அவரை ஆழப் பார்த்து.

“சேச்சே… நீங்கள் சின்னஞ்சிறுசுகள் சந்தோசமாக இருங்கள், நான் எதற்கு இடையூறாக… இரண்டு மாதத்திற்கு ஒரு முறை பாப்பாவை அழைத்துக்கொண்டு நீ ஊருக்கு வந்து சென்றாலே எனக்கு போதும். என்னால் எதுவும் முடியவில்லை என்றால் உன்னிடம் அப்பொழுது சொல்கிறேன்!” என்றார் மூதாட்டி.

சின்னதாக முறுவலித்தவன், “இதுவே உங்கள் சொந்தப் பேரன் அழைத்திருந்தால் என்ன செய்திருப்பீர்கள் பாட்டி?” என்றான் அவரிடம் கூர்ப்பார்வையாக.

“நீ ஏன்பா இப்படியெல்லாம் தப்பார்த்தம் செய்துக் கொள்கிறாய்? சொந்தப் பேரன் என்ன சொந்தப் பேரன்… உன்னை போல் வாய் நிறைய பாட்டி என்றெல்லாம் யார் என்னை இப்படி உரிமையுடன் அழைத்தார்கள். நீ என்னுடன் தங்கியிருந்து எனக்கு செய்து தந்த வசதிகளை எல்லாம் பார்த்து ஊரில் எத்தனை பேர் பொறாமைப்பட்டார்கள் தெரியுமா?” என்று கண்ணோரம் கரித்த நீரை அவர் தன் புடவை தலைப்பால் துடைத்தெடுக்க, “ப்ச்… பாட்டி…” என்றபடி அவரை தோளோடு அணைத்து அமைதிப்படுத்தினான் பேரன்.

இருவரும் அவனுடைய அறையில் தான் தனிமையில் பேசிக் கொண்டிருந்தனர். வாசுவும், சிதம்பரமும் முன்னறையில் தங்களுக்குள் எதையோ கலந்தாலோசித்துக் கொண்டிருக்க, சஞ்சய், செந்திலை வைத்து புதிதாக வாங்கி வந்திருந்த வாஷிங் மெஷின், கிரைண்டர், ஓவன் இவற்றின் அட்டைப் பெட்டிகளையெல்லாம் மேலே லாப்டில் ஏற்றிக் கொண்டிருந்தார் சாரதா.

அவற்றையெல்லாம் ஓரமாக நின்றபடி பார்த்துக் கொண்டிருந்த பிரணவி அப்பொழுது தான் பிரவீண் அங்கில்லை என்பதை கவனித்து அவனை தேடி அறைக்கு சென்றுப் பார்த்தாள்.

“இது என்ன என்னை விட்டுவிட்டு பாட்டியும், பேரனும் தனியாக ரகசியம் பேசிக் கொள்கிறீர்கள்?” என இடையில் கை வைத்து அவர்களை முறைத்தாள்.

பொன்னம்மாவின் உதட்டில் அவளைக் கண்டு புன்னகை தேங்க, நம் நாயகனின் விழிகளோ வழக்கம் போல் அவள் மீது காதலுடன் படிந்தது.

தன்னை ஆசையுடன் பார்த்திருப்பவனை பார்த்து இதழ்களை சுழித்துக் கொண்டவள், “என்ன விஷயம் என்று கேட்டேன்?” என்றாள் இருவரிடமும் அழுத்தமாக.

அவளை தனக்கு அருகில் இழுத்துக் கொண்டவன் பாட்டியின் தயக்கத்தை தெரிவிக்க, பிரணவியின் விழிகள் அம்மூதாட்டியின் மீது யோசனையுடன் படிந்தது.

“என்னம்மா?” என்றார் அவர் தடுமாற்றத்துடன்.

“உனக்கு என்னை நினைத்தால் பயமாக இருக்கிறதா பாட்டி?”

“என்ன?” என்றவர் நகைக்க, “ஏய்… எதற்காக இப்படி உளறுகிறாய்?” என அவள் தோளை தட்டினான் கணவன்.

“உனக்கு தெரியாது அத்தான்… உன்னை பற்றிய விவரம் தெரிவிக்க செந்தில் அண்ணாவை அழைத்துக் கொண்டு ஊருக்கு வந்திருந்தோம் இல்லை… அப்பொழுது உன்னுடன் தனியாக பேச வேண்டுமென்று நான் இந்தப் பாட்டியை வீட்டிற்கு வெளியே நிற்க வைத்து விட்டேன். அதையெல்லாம் நினைத்து இப்பொழுது பயப்படுகிறதோ என்னவோ…” என்று இழுத்தாள்.

“அடப்பிள்ளையே… அப்படியே என்றாலும் அப்பொழுது நீ என்ன சொன்னாய்? இந்த வீட்டில் இன்னொரு அறை இருந்திருந்தால் உன்னை நான் வெளியே அனுப்பி இருக்க மாட்டேன் என்று நீதான் சொன்னாயே…”

“ஆங்… தெரிகிறது தானே… இங்கே தான் இன்னொரு அறை இருக்கிறதே அப்புறம் உனக்கென்ன பிரச்சினை?” என்று பிரணவி மடக்க, பிரவீணின் உதட்டில் புன்னகை பூத்தது.

“அது… அது…”

“நீ எதுவும் சொல்ல வேண்டாம்… நான் உன்னை நம்பி எவ்வளவு பெரிய திட்டம் போட்டு வைத்திருக்கிறேன். நீ என்ன பாட்டி இப்படி சொதப்புகிறாய்?”

ஒரு கணம் விழித்தவர், “என்ன பாப்பா?” என்க, கணவனும் சுவாரசியமாக மனைவியை பார்த்தான்.

“நீ ஊருக்கு போய்விட்டால் நீயும் அங்கே தனியாக இருக்க வேண்டும், நானும் இங்கே பகல் பொழுதுகளில் தனியாக இருக்க வேண்டும். இதுவே நீ இங்கேயே இருந்தால் நாம் இரண்டுப் பேரும் சேர்ந்து நன்றாக பொழுதை போக்கலாம். அப்புறம் உன் பேரனுக்கு பிடித்ததை வகைவகையாக பேசி வைத்து சமைத்துப் போடலாம். நீ குளிரை நினைத்து எதுவும் பயப்படாதே… வீடு முழுக்க எல்லா அறைகளிலும் ரூம் ஹீட்டர்ஸ் போட்டுடலாம். என்ன அத்தான்?” என்றாள் அருகில் நின்றிருந்தவனிடம் அதிகாரமாக.

“ம்… கண்டிப்பாக, நீ சொன்னால் அப்பீல் ஏது?” என்றவன் முறுவலிக்க, “அது தானே…” என்று ராகம் போட்ட மனைவி மலர்ச்சியுடன் அவனை நெருங்க, “என்ன மாநாடு நடக்கிறது இங்கே?” என்கிற கேள்வியுடன் அங்கே பிரசன்னமானான் செந்தில்.

“பக்கத்தில் வரக்கூடாதே… மூக்கில் வியர்த்தது சரியாக உள்ளே வந்து விட்டது!” என்று வாய்க்குள் முனகினாள் பிரணவி.

“நீ இப்பொழுது ஏதாவது சொன்னாயா?” என்றான் அவன் சந்தேகமாக.

“ம்… ஆமாம்!” என்று பலமாக தலையாட்டினாள் அவள்.

“என்ன சொன்னாய்?”

“அதைச் சொல்ல முடியாது!” என்று தோள் குலுக்குபவளை கண்டு அவன் முறைக்க அவனுடைய மனைவி இவளோடு ஹைபை அடித்துக் கொண்டாள்.

உணவிற்கு பின் அனைவரின் முன்னிலும் பொன்னம்மாவை மாட்டி விட்டாள் பிரணவிகா.

“என்னம்மா திடீரென்று இப்படி சொல்கிறீர்கள்? நீங்கள் பெரியவர்கள் இவர்களுடன் துணைக்கு இருப்பீர்கள் என்று நினைத்து தானே நான் நிம்மதியாக இருந்தேன். நாளை அம்முவிற்கு ஒரு மசக்கை என்றால் கூட என்னால் இத்தனை தூரம் அவசரத்திற்கு ஓடிவந்து எத்தனை நாள் இவளுக்கு உதவியாக இருக்க முடியும்? இதுவே நீங்கள் இவர்களுடனே தங்கியிருந்தால் இவளை கவனமாக பார்த்துக் கொள்வீர்கள் இல்லை… அதெல்லாம் நீங்கள் எங்கேயும் போக கூடாது, இனி இது தான் உங்கள் வீடு. உங்கள் பேரன், அவன் பெண்டாட்டி அடுத்து ஒரு கொள்ளுப்பேரனோ, பேத்தியோ வந்து விட்டால் இவர்களோடு எல்லாம் ஓடுவதற்கு உங்களுக்கு நேரம் சரியாக இருக்கும். இப்பொழுதே முடிந்தவரை நன்றாக ஓய்வெடுத்துக் கொள்ளுங்கள் அவ்வளவு தான் சொல்லி விட்டேன்!” என்றார் சாரதா அவரிடம் கட்டளையாக.

பொன்னம்மாவிற்கு அதில் சந்தோசமே… சிறிதுக் காலமாக இடையில் வந்த உறவே என்றாலும் பிரவீணை சொந்தப் பேரனாக பார்த்து பழகி விட்டவருக்கு அவனுடைய வாரிசுகள் என்றதுமே சிலிர்ப்பாக தான் இருந்தது. இவர் வெளிப்படையாக பகிராமல் உள்ளுக்குள் வைத்து மறுகிக் கொண்டிருந்த விஷயமும் சாரதாவின் பேச்சால் அடிப்பட்டுப் போகவும் பெருத்த நிம்மதியை உணர்ந்தார்.

விஷயம் இது தான், பிரவீண் என்ன தான் அவரை தங்களுடன் உரிமையாக தங்கச் சொன்னாலும் பிரணவியின் குடும்பத்தினர் தன் பிள்ளைக்கு சுமையாக இவர் வேறு எதற்கு என்று எதுவும் கசப்பாக உணர்வார்களோ என்கிற ஒரு பயம் அவருக்குள் இருந்துக் கொண்டே இருந்தது. அதைப் பகிர்ந்து அவனுக்கு புதிதாக எந்தவொரு சங்கடத்தையும் உண்டாக்கி விடக்கூடாது என்றே அவர் அப்படி பூசி மெழுகிக் கொண்டிருந்தார்.

“ஆனால் ஒரு விஷயம் தான் இன்னமும் எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. எப்படி சம்பந்தமே இல்லாத நீங்கள் இருவரும் இரட்டைப்பிறவி போல இப்படி உருவத்தில் ஒரே மாதிரி இருக்கிறீர்கள்? உங்களுடன் நன்றாக பழகியவர்களுக்கு உங்களிடம் இருக்கும் சின்ன சின்ன வித்தியாசங்கள் அப்புறம் முக்கியமாக உங்களின் உடல்மொழிகளின் வேறுப்பாடுகளை புரிந்துக் கொள்ள முடியும். பட் பார்த்தவுடனே பளிச்சென்று தெரிகின்ற இந்த ஒற்றுமை எவ்வாறு வந்திருக்கும்?” என்று வியப்புடன் வினவினான் செந்தில்.

ப்ரவீணும், சஞ்சயும் ஒருவரையொருவர் புன்னகையுடன் பார்த்துக் கொள்ள, அவர்களை சுற்றியிருந்த மற்றவர்கள் செந்திலை போன்றே உற்றுப் பார்த்தபடி அவர்களிடம் பத்து வித்தியாசங்களை கண்டுப்பிடிக்க முயன்றுக் கொண்டிருந்தனர்.

“என்னப்பா அமைதியாக சிரிக்கிறீர்கள்?” என நண்பர்களிடம் முகத்தை சுருக்கிவிட்டு, “அம்மா நீங்கள் சொல்லுங்கள்மா… சஞ்சய் பிறக்கும் பொழுது உங்களுக்கு இரட்டை குழந்தை பிறந்து மருத்துவமனையில் ஏதாவது தொலைந்துப் போய் விட்டதா?” என்று சாரதாவிடம் திரும்பி தீவிரமாக கேட்டான் செந்தில்.

அவரோ திகைப்புடன் சிதம்பரத்தை பார்க்க, சஞ்சய் தலையில் அடித்துக் கொண்டான்.

“அப்படியெல்லாம் எதுவும் இல்லைப்பா… சாரதா தலைப் பிரசவத்திற்கு அங்கே எங்கள் வீட்டிற்கு தான் வந்திருந்தாள். அவளுக்கு வலியெடுத்து நான் தான் என்னுடைய அப்பா, அம்மாவுடன் சென்று அவளை மருத்துவமனையில் சேர்த்தேன். குழந்தை பிறந்து அவளை அறைக்கு மாற்றும் வரை வேறெங்கும் செல்லாமல் நான் அங்கேயே தான் இருந்தேன். அவளுக்கு ஒரு ஆண் குழந்தை தான் பிறந்தது. நீ இதில் இன்னொரு விஷயத்தை கவனிக்க வேண்டும், பிரவீண் சஞ்சய்யை விட நான்கு மாதங்கள் பெரியவன். பிரவீண் பற்றிய விவரங்கள் தெரிந்து அவன் இங்கே வந்து வேலையில் சேர்ந்தவுடன் அவனுடைய சான்றிதழ்கள் எல்லாம் எடுத்துவரச் சொல்லி சரிப்பார்த்தேன். அப்பொழுது தான் எனக்கும் இந்த விவரம் தெரிய வந்தது!” என்று விளக்கினார் வாசுதேவன்.

“ஓ… அப்படியா?” என செந்தில் விழிகளை சுருக்க, “உன் சந்தேகம் எல்லாம் தீர்ந்ததா?” என்று கேலியாக நண்பனை கேட்டான் பிரவீண்.

“ஆங்… ஆங்… ஆனாலும்…” என அவன் இழுக்க, “டேய்… அடங்கு… உன் சந்தேகத்திற்கு நான் பதில் சொல்கிறேன்!” என்றான் சஞ்சய்.

“ம்… சொல்… சொல்!” என்று அவசரம் காட்டுபவனை பார்த்து அனைவரும் நகைத்தனர்.

“உலகில் ஒரே மாதிரி ஏழு நபர்கள் இருப்பார்கள் என்று நம்மூரில் பொதுவாக சொல்வார்களே கேள்விப்பட்டிருக்கிறாயா…”

அவனை வேகமாக இடைமறித்த செந்தில், “ஏய்.. இதெல்லாம் நம்புகிற மாதிரியா இருக்கிறது?” என்றான் குபீர் சிரிப்புடன்.

சஞ்சய் தன் பொறுமையை இழுத்துப் பிடித்து கண்களை அழுந்த மூடி தன்னுடைய அடர்ந்த சிகையை கையால் கோதிவிட பிரணவி அவனுக்காக பொங்கினாள்.

“இங்கே பாருங்கள் அண்ணா… உங்களால் ஒன்றும் முடியவில்லை என்று தானே நீங்களே அத்தானிடம் விவரம் கேட்கிறீர்கள். அப்புறம் என்ன அவன் விளக்கம் தருவதற்குள் பொறுமையின்றி கேலி செய்கிறீர்கள்?” என்று அவனை முறைத்துப் பார்த்தாள்.

“இவள் ஒருத்தி… ஆ ஊ என்று எதற்கெடுத்தாலும் ஏதாவது ஒரு அத்தானுக்காக வரிந்துக் கட்டிக்கொண்டு நம்மிடம் சண்டைக்கு வந்து விடுவாள்!” என இதழ்களுக்குள்ளேயே முணுமுணுத்தான் செந்தில்.

“அங்கே என்ன முணுமுணுப்பு?”

“ம்… உன் அத்தானிடம் சாரி சொல்லிக் கொண்டிருந்தேன்!”

“அதை நீங்கள் சத்தமாகவே சொல்லலாம் பரவாயில்லை!” என்றாள் பிரணவி கூலாக.

அவன் விழிக்க, “ஏய்.. போதும் விடுடி!” என நகைத்தபடி மாமன் மகளின் தோளில் தட்டினான் சஞ்சய்.

“நீ சொல்லுப்பா… உனக்கு இதைப்பற்றி ஏதாவது விவரம் தெரியுமா?” என ஆர்வமாக கேட்டான் பிரவீண்.

அனைவரின் முகத்திலேயும் அதே எதிர்பார்ப்பு தான் மிகுந்து தெரிந்தது.

“ம்… இணையத்தில் தேடி சில தகவல்களை கண்டுப்பிடித்தேன்!”

“பரவாயில்லையே… எனக்கு தான் அதைப்பற்றி யோசிக்கவெல்லாம் நேரம் அமையவில்லை!” என்றான் பிரவீண் சுவாதீனமாக.

அவன் வாழ்வின் சிக்கல்களை பற்றி முழுமையாக அறிந்திருந்தவனிடம் இருந்து மெல்லிய வருத்தப் பெருமூச்சொன்று வெளியேறியது.

“ம்க்கும்… உனக்கு அதற்கெல்லாம் நேரமேது, உன் முன்னால் காதலியும் இப்பொழுது மனைவி ஆகிவிட்டவளையும் சமாளிப்பதற்கே நேரம் இருந்திருக்காது!” என்று நையாண்டி செய்தான் செந்தில்.

பிரணவி அவனை அழுத்தமாக ஒருப் பார்வை பார்க்க, “உங்களுக்கு எத்தனை பட்டாலும் இந்த வாய் மட்டும் கொஞ்சமாவது அடங்குகிறதா… அவள் உங்களை எப்படி பார்த்துக் கொண்டிருக்கிறாள் பாருங்கள்!” என்று கணவனை அதட்டினாள் அவன் மனைவி.

அதன் பின்னரே தன் தவறை உணர்ந்தவன் அவளிடம் சமாளிப்பாக சிரிக்கின்றேன் பேர்வழி என அசடுவழிய, உதடுகளில் பரவத் துடித்த புன்னகையை அடக்கியபடி சஞ்சய்யிடம் திரும்பினாள் அவள்.

“நீ சொல் அத்தான்… இனி யாராவது இங்கே வாயை திறக்கட்டும் பேசிக் கொள்கிறேன்!” என்று அவன் புறம் ஒரு எச்சரிக்கை பார்வையை வீசவும் மறக்கவில்லை.

“ம்… ஒரே மாதிரி ஏழு நபர்கள் இருப்பதற்கான சாத்தியக் கூறுகள் குறைவு என்றாலும் உலகில் அங்கொன்றும் இங்கொன்றுமாக உருவ அமைப்பில் ஒருவருக்கும் மேற்பட்டோர் இருப்பது அவ்வப்பொழுது நிரூபணம் ஆகியுள்ளது. இதில் சிலது வெவ்வேறு காலகட்டங்களில் நிகழ்ந்து உள்ளதாம். உதாரணத்திற்கு இத்தாலியை சேர்ந்த ஃபெராரி கார் நிறுவனத்தை துவக்கிய என்சோ ஃபெராரி 1988 ஆம் ஆண்டில் இறந்து விட்டார். ஆனால் அதே ஆண்டு துருக்கியில் பிறந்து பின்பு ஜெர்மனியின் தேசிய கால்பந்தாட்ட வீரராக உயர்ந்த மீசுட் ஓசில் அப்படியே உருவத்தில் அவரை போலவே இருப்பாராம். இரு… இரு… உடனே அது ஏதாவது ஃபெராரியின் மறுஜென்மம் ஆக இருக்குமோ என்று எதுவும் என்னிடம் அசட்டுத்தனமாக சந்தேகம் கேட்டு விடாதே. நான் அதையெல்லாம் ஆராய்ச்சி செய்யவில்லை நீ வேண்டுமென்றால் முயன்றுப் பார்!” என செந்திலுக்கு முன் வேகமாக பேசினான் சஞ்சய்.

பட்டென்று தன் வாய் மீது ஆட்காட்டி விரலை வைத்துக் கொண்டவனை பார்த்தவர்களுக்கு சிரிப்பு தான் பொங்கியது.

“அப்புறம் இன்னொரு தகவலும் கூட கிடைத்தது. ரஷ்ய அதிபராக இருந்த ஸ்டாலின் தன்னை போலவே முகத் தோற்றம் கொண்ட இரண்டு நபர்களை தனக்கு கீழே பணியில் அமர்த்தி இருந்தாராம். அவர் எங்கே வெளியே சென்றாலும் மூன்று கார்கள் ஒரே மாதிரி ஒன்றன் பின் ஒன்றாக வரிசையாக செல்லுமாம். அதாவது மூன்று காரிலும் ஸ்டாலின் தான் உட்கார்ந்து இருப்பாராம். அதில் உண்மையான அதிபர் யார் என்பது அவர்களுக்கு மட்டுமே தெரிந்த ரகசியம். தன்னுடைய பாதுகாப்புக்காக என்று இதை அவர் தீவிரமாக கடைப்பிடித்து வந்தாராம்!”

அவன் கூறுவதையெல்லாம் செந்திலும், பொன்னம்மாவும் வாயைப் பிளந்து கேட்டுக் கொண்டிருக்க, “இணையத்தில் இன்னும் கூட சில தகவல்கள் கிடைத்தது. அநேகமாக அந்த விஷயத்தில் எனக்கும், ப்ரவீணுக்கும் ஏதாவது எங்கேயாவது ஒத்துப் போயிருந்திருக்கலாம் என நினைக்கிறேன்!” என்று அவனை நேர்ப்பார்வை பார்த்தான் சஞ்சய்.

“அது என்ன அத்தான்?” என்று அத்தை மகனிடம் ஆர்வமாக வினவினாள் பிரணவி.

“ஆதிக் காலத்தில் நம் இன மக்கள் எல்லோரும் ஓர் இடத்தில் கூட்டம் கூட்டமாக வாழ்ந்திருந்து பின்னாளில் நாம் பாடங்களில் படித்திருப்போமே மைக்ரேசன் அதாவது இடமாற்றம்… ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு இடம் பெயர்வது. அப்படி மாறிச் செல்லும் பொழுது தங்களுக்குள் ஏற்படும் கருத்து வேறுப்பாடுகளால் தனித்தனி கூட்டமாகவும் பிரிந்து சென்று விடுவனராம். அது மாதிரி இவன் முன்னோரும் என்னுடைய முன்னோரும் வேறு வேறாக இருந்தாலும் காலம்காலமாக பல மனிதர்களை தாண்டி நீந்தி வந்திருக்கும் மரபணுக்களில் பொதுவான நம் இனத்தின் மரபணுக்கள் எப்படியோ யுகங்கள் கடந்து இவ்வாறு உருவ ஒற்றுமையை தோற்றுவிக்கும் விதமாக எங்களுக்குள் உருவாகி எங்களை இப்படி பிறக்க வைத்திருக்கலாம்!” என்று முடித்தான்.

அனைவரும் பிரமிப்புடன் அமர்ந்திருக்க, “என்னடா ஒன்றும் சொல்லாமல் அமைதியாக இருக்கிறாய்?” என செந்திலை சீண்டினான் சஞ்சய்.

“ஆங்… முடித்து விட்டாயா!” என திடுக்கிட்டு திரும்பி பார்த்தான் அவன்.

“ம்…” என கைகளை விரித்து சாதாரணமாக தோள்களை குலுக்கி கொண்டவன், “நான் என்ன கதையா சொல்லிக் கொண்டிருக்கிறேன்… இன்னும் நிறுத்தாமல் பேசிக் கொண்டே இருப்பதற்கு!” என்றான் அவனை பார்த்து சின்ன முறுவலிப்புடன்.

“நான் அப்படித்தான்டா நினைத்தேன்… நீ ஏதோ ஆங்கிலப் படக் கதையைத்தான் எங்களிடம் இப்படி எடுத்து விட்டுக் கொண்டிருக்கிறாய் என்று எண்ணினேன். அப்பொழுது இது நிஜமாகவே இணையத்தில் போடப்பட்டிருந்த தகவல்கள் தானா…” என அப்பாவியாய் கேட்டு செந்தில் விழிகளை விரிக்க இவன் கடுப்பாக, “டேய்…” என்று பல்லைக் கடித்தான்.

“ஒருவகையில் நீ சொல்வது சரி தான் சஞ்சய், நம் பக்கத்து வீட்டுப் பெண் கூட என்னிடம் சொல்லி இருக்கிறாள். அவளுடைய கல்லூரி பருவத்தில் உடன் பயின்ற பெண் ஒருவள் இவளை போலவே அவளுக்கு உறவுப் பெண் இருப்பதாக சொல்லி இருக்கிறாளாம். அதேபோல் சமீபத்தில் இவளை வெளியூர் கோவில் ஒன்றில் பார்த்த பாட்டி ஒருவரும் சம்பந்தமே இல்லாமல் இந்தப் பெண்ணை பார்த்தால் நம் ராகினி மாதிரி இல்லை என்று அருகில் இருந்தவரிடம் காட்டி வியந்தாராம். என்னை போலவே ஜாடையில் வேறு சிலரும் இருக்கிறார்கள் என்பதை நினைத்தாலே எனக்கு ரொம்ப ஆச்சரியமாக இருந்தது ஆன்ட்டி என்றாள். அவர்கள் ஜாடை ஒற்றுமையை சொன்னார்கள் என்றால் நீ உருவ ஒற்றுமையை சொல்கிறாய் அவ்வளவு தான்!” என்றார் சாரதா நம்ப இயலாத வியப்புடன்.

(இந்த பக்கத்து வீட்டுப்பெண் வேறு யாருமல்ல சாட்சாத் நானே தான். ஹஹா… என்னுடைய இந்த அனுபவத்தை அடிப்படையாக கொண்டு தான் உருவ ஒற்றுமையை கதையில் கொண்டு வந்தேன். ஆனால் என்னவொன்று அதை கதையில் தெளிவாக்க மறந்து விட்டேன். எப்பொழுதுமே நிதானமாக அவ்வப்பொழுது சுடச்சுட ஆன்லைனில் எழுதிப் பழகிவிட்டு திடீரென்று அமர்ந்து ஒரே மூச்சில் இரண்டு வாரத்தில் முடித்தக் கதை என்பதால் சிற்சில சறுக்கல்கள் நேர்ந்து விட்டது. இதை என்னிடம் வாசக சகோதரி ஒருவர் சந்தேகம் கேட்கவும் தான், அட ஆமாமில்லை… நாம் எங்கேயும் இதற்கு விளக்கம் கொடுக்கவில்லையே என்று யோசித்தேன்.)

“எது எப்படியோ இனி அந்த தேவையில்லாத பேச்செல்லாம் நமக்கு எதற்கு? சஞ்சய்யை போலவே இருக்கும் பிரவீணும் நம் வீட்டிற்கு இன்னொரு பிள்ளை தான். அம்முவை திருமணம் செய்துக் கொண்டதால் இன்னமும் அவனுடைய உறவு பலப்பட்டு விட்டது. இத்தோடு விடுங்கள்… சரி நாளைக்கு நம்முடைய ப்ரோக்ராம் என்ன? பிரவீண் நீதான் உள்ளூர்காரன், எங்கெங்கே முதலில் சுற்றிப்பார்க்க போகலாம் என்று சொல்!” என நடைபெற்றுக் கொண்டிருந்த பேச்சை திசை மாற்றி விட்டார் சிதம்பரம்.

********************************

மறுநாள் சிம்லாவை சுற்றிப் பார்க்க கிளம்பியவர்கள் முதலில் ஜக்கு மலையில் அமைந்திருந்த ஹனுமான் கோவிலுக்கு சென்றனர்.

அங்கிருந்த பிரமாண்ட உயரம் கொண்ட அனுமன் சிலை அவ்விடத்தினுள் நுழைவதற்கு முன்னாலே தொலை தூரத்திலேயே தெரிய ஆரம்பித்திருந்தது.

வண்டியில் இருந்து இறங்கி சிலையின் அருகில் வந்து தலையை உயர்த்தி அதை அண்ணார்ந்து பார்த்தவர்களுக்கு கழுத்தை வலிப்பது போல் இருந்தது.

அத்தனை உயரமாக அமைந்திருந்தது அந்தச் சிலை. நம்மூர் பக்கம் போல் பச்சை நிறமோ அல்லது சந்தன நிறத்தில் வண்ண உடைகளை தரித்தவராகவோ இல்லாமல் முழுக்க முழுக்க செந்தூர நிறத்தை கொண்டிருந்தார் அந்த மஹா ஆஞ்சநேயர்.

“யப்பா… என்ன உயரம்டா சாமி?” என இடுப்பில் கைவைத்து அண்ணார்ந்து பார்த்த செந்தில், “வா… நாம் அப்படியே ஒரு செல்பி எடுத்துக் கொள்வோம்!” என்று மனைவியை அருகில் இழுத்தான்.

“ம்க்கும்… உன் உயரத்திற்கு அதன் முன்னால் நின்று செல்பி எடுத்தாய் என்றால் அவரின் பாதம் கூட புகைப்படத்தின் பின்புறத்தில் விழாது!” என்று அவனை நக்கல் அடித்தான் சஞ்சய்.

“ஏன்டா ஏன்… அதோ உன் முறைப்பெண்ணும் அங்கே அவள் புருஷனுடன் இதே வேலையை தானே செய்கிறாள்? அவளிடம் போய் இதைச் சொல்ல வேண்டியது தானே!” என்று குதித்தான் அவன்.

“ஆமாம்… அவளிடம் யார் வாயை கொடுத்து மீள்வது, சரி நீங்கள் என்ஜாய் பண்ணுங்கப்பா!” என்று சிரித்த முகத்துடன் கேலிப் பேசியபடி சஞ்சய் வேறுபுறம் தனியாக செல்லவும், அவனை பார்த்திருந்த பெற்றவர்களுக்கும், தாய்மாமனுக்கும் முதன் முதலாக மனதில் சஞ்சலம் உண்டானது.

‘இந்தப் பையனுக்கும் சீக்கிரமாக ஒரு கல்யாணத்தை முடிக்க வேண்டும்!’

அடுத்த மூன்றாம் நாள் சென்னை செல்வதற்காக அனைவரும் சிம்லா விமான நிலையத்தில் நின்றிருந்தனர். அவர்களை வழியனுப்ப என்று பிரவீண், பிரணவிகா, பொன்னம்மாவும் அங்கே வந்திருந்தார்கள்.

அப்பொழுது பிரவீணை ஓரந்தள்ளி சென்ற சஞ்சய், “டேய் பிரவீண்… உன்னை பற்றி அம்முவிடம் விவரம் சொல்லி விட்டாயா… அதாவது உனக்கு பழைய நினைவுகள் என்றும் திரும்பவே திரும்பாது என்று…” என அவசரமாக கேட்டான்.

“இல்லை… அது அவசியமில்லை என்று நான் நினைக்கிறேன். அதைப் பற்றி பேசினால் எனக்கு நேர்ந்துள்ள பிரச்சினையோடு சேர்த்து அந்தக் கயவனின் விவரங்களையும் தெரிவிக்க வேண்டி வரும். அதெல்லாம் அவள் தெரிந்துக் கொள்ளாமல் இருப்பதே நல்லது, என்னை இப்படியே மனதார ஏற்றுக் கொண்டிருப்பவளை தேவையில்லாமல் அதையும் இதையும் சொல்லிக் குழப்ப வேண்டாம். எல்லோரையும் போலவே என்றாவது ஒரு நாள் எனக்கு நினைவு திரும்பி விடும் என்றே அவள் இருக்கட்டும்!” என்றான் அமைதியாக.

ம்… என்றவன் பின் தயக்கத்தோடு, “நீ ஏற்கனவே தெளிவுப்படுத்தி விட்டாய் தான், இருந்தாலும் கேட்கிறேன் அந்த குபேர் விஷயத்தில் எங்கேயும் உனக்கு எதுவும் பிரச்சினை நேர்ந்து விடவில்லையே!” என்றான் சுற்றிலும் விழிகளை உருட்டியபடி கவலையாக.

“ஹேய்… ஏன்டா? அதிக குடியினால் வந்த மாரடைப்பு தான் அது, அவருடையது இயற்கையான மரணம் தான் என போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்டில் வந்து அவருடைய கேசை காவல் துறையினர் மூடி விட்டார்கள் என்று உன்னிடம் அப்பொழுதே தெளிவாக கூறினேன் அல்லவா… இரண்டரை மாதங்கள் ஓடிவிட்டது இன்னமும் என்ன சந்தேகம் உனக்கு? இந்த ஒரு விஷயத்தில் மட்டும் எதற்கும் துணிந்த நீ பதற்றமாக இருக்கிறாய், எல்லாவற்றிலும் அமைதியை விரும்பும் நான் எதிராக இருக்கிறேன்!” என பெருமூச்செரிந்து விட்டு பின் அவனை பார்த்து சிநேகப் புன்னகையுடன் தோள் தட்டி, “டோன்ட் வொர்ரி சஞ்சய்… நான் அன்று சொன்னது தான் பிரணவியுடன் பேரன், பேத்தி எடுக்கிற காலம் வரையிலும் பிரியாமல் மகிழ்ச்சியுடன் வாழ்வதற்காக நான் என்னை பத்திரமாக பார்த்துக் கொள்வேன்!” என்று மென்மையாக முறுவலித்தவன் ஒருமுறை அவனை கட்டியணைத்து விலக, “என்ன நடக்கிறது இங்கே?” என்கிற கேள்வியோடு அவர்களிடம் வந்து நின்றாள் பிரணவி.

“என்ன நடந்தால் உனக்கென்னடி?” என அவளை போலியாக முறைத்தான் சஞ்சய்.

“எனக்கென்னவா… என் புருஷன் ஏன் உன்னை கட்டிப்பிடிக்கிறார்?”

“ஆங்.. அதை உன் புருஷனிடம் கேள், நான் உனக்கென்னடா குறை வைத்தேன் என்று…” என அவன் நாக்கை துருத்தி காண்பிக்க, “அத்தான்…” என்று தரையை ஓங்கி மிதித்தவள், “நான் உன்னிடம் பேச மாட்டேன் போ…” என வேகமாக முகத்தை திருப்பிக் கொண்டாள்.

சத்தமாக நகைத்தபடி அவளை தோளோடு அணைத்துக் கொண்டவன், “பிரவீண் ரொம்ப நல்லப்பையன்டி… உன் மீது உயிரையே வைத்திருக்கிறான் அவனை சந்தோசமாக வைத்துக் கொள்!” என்றான் அவளின் தலையை பிடித்து ஆட்டியபடி வாஞ்சையுடன்.

“பாருடா…” என கேலிப்பேச முயன்றவளின் விழிகள் பிரிவை எண்ணி கலங்க ஆரம்பிக்க, உஷ்… என்று அவளை அதட்டியபடி தன்னோடு சேர்த்து அணைத்துக் கொண்டான் அவன்.

“இத்தனை தூரம் அவன் தான் வேண்டும் என்று அடம் செய்து திருமணம் செய்துக் கொண்டவள் இப்பொழுது எதற்காக அழுகிறாய்?” என கிண்டலாக வினவி அவளை தன்னிடமிருந்து பிரித்து முகம் பார்த்தான் சஞ்சய்.

“அப்பொழுது அத்தான் தூரமாக இருந்தான், இப்பொழுது நீங்கள் எல்லோரும் என்னை விட்டுச் செல்கிறீர்களே!” என்றாள் அழுகையோடு.

“எங்கே செல்கிறோம் சென்னைக்கு தானே… நினைத்தால் யாராவது ஒருவர் வந்துப் பார்த்து செல்ல வேண்டியது தான். நீங்களும் அடிக்கடி அங்கே வாருங்கள்!”

“ம்… அத்தான் கேட்டுக் கொண்டாயா… நான் சொல்லும் பொழுதெல்லாம் நாம் சென்னை செல்ல வேண்டும்!” என்றாள் பிரவீணிடம் திரும்பி அதிகாரமாக.

“கண்டிப்பாகடா அம்மு!” என்று அவன் ஒப்புதல் தெரிவிக்க, “உருப்பட்டு விடும் போ… இவள் இஷ்டத்திற்கு நீ முழுவதுமாக ஆடினால் உன் பாடு ரொம்பவும் கஷ்டம் தான்!” என இடவலமாக தலையசைத்தான் சஞ்சய்.

“உன்னை…” என்றவள் சட்டென்று அவன் தலையில் கொட்டிவிட்டு ஓட, “ஏய்…” என்று அவளை துரத்திக்கொண்டு பின்னால் ஓடினான் அவன்.

“கடவுளே… இரண்டு பேரும் என்ன செய்கிறீர்கள்? இது வீடு என்று நினைத்தீர்களா…” என சாரதா அதட்ட, ஆண்கள் இருவரும் அவர்களை அலுப்புடன் பார்த்திருந்தனர்.

“சரி அம்மு… நாங்கள் கிளம்புகிறோம். நீ இன்னமும் சின்னப்பிள்ளை இல்லை பார்த்து பக்குவமாக நடந்துக்கொள்!” என்று தகப்பனாய் வாசு அறிவுரை கூற அவர் மீது சாய்ந்து அழுதவள், “அத்தான் சொல்வது போல் நம் வீட்டை வாடகைக்கு விட்டுவிட்டு நீங்கள் அத்தை வீட்டில் போய் இருங்கப்பா. அங்கே தனியாக இருக்க வேண்டாம்!” என்றாள் மூக்கை உறிஞ்சியபடி.

மகளின் பிரிவால் தனக்குள் ஏற்படும் தொய்வை வெளிக்காட்டாமல் லேசாக தொண்டையை செருமி சரி செய்துக் கொண்டவர், “அதை நான் பார்த்துக் கொள்கிறேன், நீ என்னை பற்றி கவலைப்படாதே. ஒழுங்காக பிரவீண், பாட்டி சொன்னப்பேச்சை கேட்டு நடக்க வேண்டும்!” என அவர் திரும்பி ஆரம்பிக்க, “ஹும்… போங்கப்பா!” என்று சிணுங்கியபடி திரும்பி தன் அத்தையை கட்டிக்கொண்டு ஒருமுறை கண்ணீர் உகுத்தாள் பிரணவி.

“நீ கவலைப்படாதேடா செல்லம்… சஞ்சய் ஏற்கனவே நம் வீட்டை வாடகைக்கு விடுவதற்கு ஆள் பேசி முடித்து விட்டான். ஊருக்கு போனதும் அண்ணா எங்களுடன் வந்து தங்கிக் கொள்வார்!” என்று அவளை சமாதானப்படுத்தினார் சாரதா.

“ம்… ஐ மிஸ் யூ பேட்லி அத்தை!” என்று அவரையும் அழ வைத்தவளின் தலையில் கொட்டிய சஞ்சய், “இப்பொழுது எதற்குடி எல்லோரையும் அழ வைக்கிறாய்?” என அவளை வம்படியாக இழுத்து தன் அன்னையிடம் இருந்து பிரித்தான்.

“நீதான் கல் நெஞ்சுக்காரன், எங்களை எல்லாம் விட்டுவிட்டு பெங்களூர் ஓடிப் போனாய். நாங்கள் எல்லாம் அப்படியா… இல்லை அத்தை!” என கன்னங்களில் இறங்கிய நீரை துடைத்தவளை கண்டு சிரித்தவன், “நான் திரும்ப சென்னைக்கே வரப் போகிறேன், அப்பாவின் கம்பெனியிலும் சேரப் போகிறேன்!” என்றான் அவள் தோளில் கைப்போட்டு.

“ஹேய்… நிஜமாகவா அத்தான்…” என்று துள்ளிக் குதித்தவள், “ஸோ ஹேப்பி!” என அவன் கைககளை பற்றி குலுக்கி, “அப்படியே சீக்கிரமாக கல்யாண சாப்பாடு போடு, அத்தை ரொம்பவும் மருமகளுக்காக ஏங்குகிறார்கள்!” என்றாள் அவனிடம் கண்ணடித்து.

“ஆஹான்… பார்க்கலாம், எனக்கு வரப் போகிறவள் எங்கே எப்படி இருக்கிறாளோ…” என்று தன் சிந்தனையில் மூழ்கிய சஞ்சய்யை சுற்றியுள்ளோரின் நகைப்பு தான் நனவுலகிற்கு மீட்டது.

💞சுபம்💞

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *