*1*

 

“குறையொன்றுமில்லை மறைமூர்த்தி கண்ணா…

குறையொன்றுமில்லை கண்ணா…

குறையொன்றுமில்லை கோவிந்தா…

கண்ணுக்கு தெரியாமல் நிற்கின்றாய் கண்ணா…

கண்ணுக்கு தெரியாமல் நின்றாலும் எனக்கு

குறையொன்றுமில்லை மறைமூர்த்தி கண்ணா…

வேண்டியதை தந்திட வேங்கடேசன் என்றிருக்க

வேண்டியது வேறில்லை மறைமூர்த்தி கண்ணா…

மணிவண்ணா மலையப்பா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா …”

“அம்மா…”

பக்தியில் உருகி நின்ற பொன்னம்மாவின் செவிகளில் தன் குரல் விழவில்லை எனவும் மீண்டும், “பொன்னம்மா அம்மா…” என அழைத்தபடி அவர் தோளை தொட்டாள் செவ்வந்தி.

ஆங்… என திடுக்கிட்டு விழிகளை திறந்தவர், “அட… நீயா புள்ளை… என்ன?” என்றார் சின்னப் புன்னகையுடன்.

“யாருக்காக… இப்படி விழுந்து விழுந்து சாமி கும்பிடுகிறீர்கள் நீங்கள்?” என்றாள் அவள் மெல்லிய கேலியுடன்.

“வேற யாருக்கு… எல்லாம் என் வீட்டில் இருக்கும் ராசாவுக்காக தான்!” என்றார் அவர் விழிகள் மின்ன.

“யார்… ஊர், பெயர் தெரியாமல் உங்கள் வீட்டில் வந்து புதிதாக புகுந்துக் கொண்டிருகிறானே அந்தப் பையனுக்காகவா?” என்றாள் செவ்வந்தி ஏளனமாக.

முகம் மாறியவர், “இங்கே பார் புள்ளை… கோவிலுக்கு சாமி கும்பிட வந்தோமா போனோம்மா என்றிரு… சும்மா என் வீட்டு விசயத்தில் நீ மூக்கை நுழைக்காதே…” என்றார் சற்றே எரிச்சலுடன்.

“இது தான் நல்லதற்கு காலமில்லை என்பது… புருஷன் சின்ன வயசுலேயே உன்னை விட்டுட்டு அல்பாயுசில் போனதும், இரண்டு ஆண் பிள்ளைகளையும் என்னமாய் பாடுபட்டு படிக்க வச்சு பெரிய ஆளாக்கி விட்டாயே ஒன்றாவது உன்னை திரும்பி பார்த்ததா… அது அது தன் வேலை, தன் குடும்பம் என்று உன்னை விட்டுட்டு ஓடிப்போய் விடவில்லை. உனக்கென்று இருந்த ஒரே ஒரு ஓட்டு வீட்டை கூட உருவிக்கொண்டு உன்னை அனாதையாய் நடுத்தெருவில் நிறுத்தியும் உனக்கு புத்தி வரமாட்டேன் என்கிறதே. வாடகைக்கு ஓலைக் குடிசையில் இருக்கின்ற உன்னிடம் எதை எதிர்பார்த்து அவன் வந்திருக்கிறானோ தெரியவில்லையே… பார்த்து எவனாவது தீவிரவாதியாக இருந்து இங்கே வந்து உன் வீட்டில் பதுங்கி இருக்கப் போகிறான். அப்புறம் சாகிற காலத்தில் போலீஸ் அடி வேறு வாங்குகிற மாதிரி ஆகிவிடப் போகிறது, இதில் நீ என்னவோ வயசுப்பிள்ளை போல் ஓடி ஓடி சம்பாதித்து அவனுக்கு சாப்பாடு போடுகிறாய். அவன் யார் என்று அவனுக்கே தெரியவில்லை என நீ பரிதாபப்பட்டு கூட தங்க வைத்துக் கொண்டிருப்பதற்கு கடைசியாக ஒரு பட்டை நாமம் போட்டுவிட்டு ஓடிப்போவான் பாரு, அப்பொழுதான் நான் சொன்னதை நீ நினைத்துப் பார்ப்பாய்!” என்று பொன்னம்மாவிடம் சிலுப்பிக் கொண்டு விலகிச் சென்றாள் செவ்வந்தி.

“அப்படி அந்தப் பையன் என்னை விட்டுட்டு ஓடிப்போனாலும் உதவி என்று கேட்டு உன் வீட்டு வாசலில் வந்து நிற்க மாட்டேன்டி நான்… எப்பொழுதும் தனிமரமாக நிற்பவள் மறுபடியும் தனிமரமாக நின்று விட்டுப் போகிறேன். கூப்பிட்ட மாதிரி கிளம்பி வந்து விட்டாள் எனக்கு புத்தி சொல்வதற்கு!” என்று சத்தமிட்டபடி புடவை முந்தானையை உதறி சொருகியவரை பின்னிருந்து மெதுவாக அழைத்த குரல் தடுமாறச் செய்தது.

“பாட்டி…”

திகைப்புடன் திரும்பியவர் வேகமாக முகத்தை மாற்றிக் கொண்டு, “என்னப்பா?” என்றார் கனிவுடன்.

“துளசி ஒரு முழம் வாங்கி வரச் சொன்னீர்களே!” என்றபடி தன் கையிலிருந்த துளசி சரத்தையும் மீதி சில்லறை காசுகளையும் அவர் கைகளில் கொடுத்தான் அவன்.

‘அவள் பேசியதை எதுவும் இந்தப் பிள்ளை கேட்டிருக்குமோ முகமே கலையிழந்து கிடக்கிறது!’ என்று அவனை உற்றுப் பார்த்தார் பொன்னம்மா.

“போகலாமா பாட்டி!”

“ஆங்… போகலாம்டா ராஜா!” என்று அவனை அழைத்துக் கொண்டு பெருமாள் சன்னதிக்குள் நுழைந்தார்.

தரிசனம் முடிந்து பிரகாரத்தை சுற்றி வந்து ஓரிடத்தில் அமர்ந்தவனது விழிகள் தொலைதூர வானத்தை வெறிக்க ஆரம்பித்தது.

அவன் முகத்தை கவலையுடன் பார்த்த பொன்னம்மாவிற்கு கடந்த வாரம் அவனை தான் ஆற்றங்கரையில் சந்தித்த நினைவு அலைமோதியது.

செவ்வந்தி குறிப்பிட்டது போல் கணவனை இழந்துவிட்ட பிறகு ஒற்றை ஆளாய் இரண்டு மகன்களையும் கஷ்டப்பட்டு வளர்த்தி ஆளாக்கி விட்டதற்கு இவரை அவர்கள் தனிமையில் தவிக்க விட்டுப் போனது தான் மிச்சம். முதலில் மன வருத்தம், வலி என அனைத்தும் இருந்தாலும் காலப்போக்கில் அதை விழுங்கி கொண்டு வழக்கம் போல் தனக்கு தெரிந்த வயல் வேலைக்கு சென்று தன் வயிற்றுப்பாட்டை கவனித்தபடி காலத்தை தள்ளிக் கொண்டிருக்கிறார் பொன்னம்மா. தற்பொழுது அவருக்கு எழுபது வயது, உடல் உழைப்பிற்காக என்றும் கவலை கொள்ளாதவருக்கு வயதான காலத்தில் தனிமை மட்டும் தான் கொடுமையாக இருந்தது. ஊர் பக்கம் வந்தால் எங்கே அக்கம்பக்கம் உள்ள பெரியவர்கள் பெற்றவளை பிடித்து தங்கள் தலையில் கட்டிவிடுவார்களோ என்கிற பயத்திலேயே அவருடைய பிள்ளைகள் அந்தப் பக்கம் எட்டியே பார்ப்பதில்லை.

பொழுது விடியும் வேளையில் நேரமாக கிளம்பி வேலைக்கு சென்றார் என்றால் அங்கிருக்கும் மக்களுடன் ஆண், பெண் பேதமின்றி அனைவரிடமும் கலகலத்து நேரத்தை ஓட்டி விட்டு பறவைகள் கூடு திரும்பும் நேரம் தான் இவர் தன் வீடு திரும்புவார். இப்படி நாட்களை கடத்திக் கொண்டிருந்தவர் கடந்த வாரம் தன் துணிமணிகளை அலச என்று ஆற்றங்கரைக்கு சென்றிந்தப் பொழுது தான் நம் நாயகனை சந்தித்தார்.

கதிரவன் முழுதாக மேலெழும்பி தனது செங்கதிரை நிலமகளின் மீது படரவிட்டு அவளை துயிலெழுப்பும் முன்னரே தன்னந்தனியாக சோர்ந்த முகத்துடன் அமர்ந்திருந்த வாலிபனை கண்டு வியப்பில் ஆழ்ந்தார் பொன்னம்மா.

கையில் இருந்ததை அப்படியே கீழே போட்டுவிட்டு அவனிடம் விரைந்தவர் அவனை கீழிருந்து மேல்வரை அளந்தபடி, “ஏன்பா… யார் நீ? இந்நேரத்தில் இங்கே எதற்காக இப்படி தனியாக உட்கார்ந்திருக்கிறாய்?” என குழப்பத்துடன் கேட்டார்.

அவரிடம் விழிகளை உயர்த்தியவன் சின்னப் புருவச் சுளிப்புடன் தலையை திருப்பிக் கொண்டு மறுபடியும் ஆற்றுநீரை வெறித்துப் பார்க்க ஆரம்பித்தான்.

“பாருடா… உன்னை தானே கேட்கிறேன், இப்படி முகத்தை திருப்பிக் கொண்டால் என்ன அர்த்தம்?”

கிராமத்திற்கே உரிய வெகுளி குணம், எதிரில் இருப்பவர் தன் கேள்விக்கு பதிலளிக்கும் வரை விடாது தொணதொணத்து தாங்கள் எதிர்பார்த்த பதிலை வாங்கி விட வேண்டும் என்பது.

தயக்கத்துடன் அவரிடம் மீண்டும் திரும்பியவன், “தெரியவில்லை…” என்றான் உணர்ச்சியற்றக் குரலில்.

“தெரியவில்லையா… என்ன தெரியவில்லை?” என்றார் புரியாமல்.

“நான் யாரென்று எனக்கே தெரியவில்லை!” என்றான் அவனையும் மீறி வெளிப்பட்ட விரக்தியுடன்.

அச்சோ… என தன் நெஞ்சில் கை வைத்து அதிர்ந்த பொன்னம்மா, அவன் அமர்ந்திருந்த பாறையிலேயே அவனுக்கு அருகில் அமர்ந்துக் கொண்டார்.

“என்னப்பா சொல்கிறாய்?”

அவன் எதுவும் கூறாமல் இறுக்கமாக அமர்ந்திருக்க, “உனக்கு எங்கேயாவது ஏதாவது அடிபட்டு பழைய ஞாபகம் போய்விட்டதா?” என்று கேட்டு அவன் உடல் முழுவதையும் தன் கூரிய விழிகளால் ஒருமுறை ஸ்கேன் செய்தார் அருகில் இருந்தவர்.

சின்ன சலிப்புடன் உச்சுக் கொட்டியவன், “என் உடலில் ஒரு சிராய்ப்புக் கூட இல்லையே… நான் நன்றாக தானே இருக்கிறேன்!” என்றான்.

“ஆமாம்… ராஜா கணக்காக உடம்பில் எந்தக் குறையும் இல்லாமல் நன்றாக தான் இருக்கிறாய். அப்புறம் எப்படி உனக்கு பழையது மறந்திருக்கும்?” என்று உரக்க யோசித்தார் பொன்னம்மா.

அவரையே சில நொடிகள் சலனமில்லாமல் பார்த்திருந்தவன் பின் தன் பார்வையை திருப்பிக் கொண்டான்.

“எத்தனை நாட்களாக உனக்கு நீ யாரென்று அடையாளம் தெரியவில்லை?”

“ப்ச்… அதுவும் தெரியாது!”

“அட… என்னப்பா நீ? எதைக் கேட்டாலும் தெரியாது… தெரியாது என்று சொல்கிறாய். ஆமாம்… இங்கே எத்தனை நாளாக இருக்கிறாய்?”

“இரண்டு நாட்களாக…” என்று பதிலளித்தான் அவன்.

“ஓ… அப்பொழுது இரண்டு நாட்களுக்கு முன்னர் என்ன நடந்தது என்று உனக்கு நினைவில் இல்லை. சரி… இப்படியே உட்கார்ந்திருந்தால் எப்படி விவரம் தெரிய வரும், ஊருக்குள் போய் பார்க்க வேண்டியதுதானே?”

“இரண்டு நாட்களாக பகல் முழுவதும் அக்கம்பக்கம் உள்ள ஊர்களையும் சேர்த்து சுற்றி வருகிறேன். ஆனால் ஒன்றும் அடையாளம் தெரியவில்லை!” என்றான் சோர்வாக.

“ஐயோ பாவமே… “ என தாடையில் கைவைத்துக் கொண்டவர், “இரவானதும் இங்கே வந்து உட்கார்ந்துக் கொள்கிறாயா?” என்றார் பரிதாபமாக.

ம்… என்று ஆமோதிப்பவனின் முகத்தை உற்றுப் பார்த்தவர், “இரண்டு நாட்களாக சாப்பாட்டிற்கு என்ன செய்கிறாய்?” என்றார்.

“எங்கேயாவது மரம், செடியில் கிடைப்பதை பறித்து சாப்பிடுகிறேன்!” என்றவனின் பார்வை எங்கோ இருந்தது.

இந்த சூழலில் கூட பார்த்தால் நன்றாக வசதிப்படைத்த வீட்டுப்பிள்ளை போல் ராஜகம்பீரம் பொருந்தி கலையாக தெரிந்த அவனை அப்படியே விட்டுவிட அவருக்கு மனம் வரவில்லை.

“எவ்வளவு யோசித்தாலும் பழையது ஞாபகம் வர மாட்டேன்கிறதா?”

“ம்… ஆமாம்!” என்றான் இயலாமையுடன் தலைகுனிந்தபடி.

“போலீஸ் கிட்ட போய் சொல்லிப் பார்க்கலாமே, அவர்கள் ஏதாவது கண்டுப்பிடித்து தருவார்கள்!”

“இல்லை பாட்டி… வேண்டாம், உடம்பில் எந்த அடியும் படாமால் எனக்கு எப்படி ஞாபகம் போனது என்று புரியாமல் குழம்பிக் கொண்டிருக்கிறேன். இதில் அவர்களிடம் போய் உதவி கேட்பது என்பது என்னுடைய மனதிற்கு நல்லதாகப் படவில்லை!” என்றான் அவன் யோசனையாக.

“பரவாயில்லையே… உன்னால் இந்த அளவிற்கு யோசிக்க முடிகிறதா?” என்று ஆச்சர்யம் கொண்டார் பொன்னம்மா.

முதல் முறையாக அவரிடம் முறுவலித்தவன், “எனக்கு ஞாபகங்கள் தான் போய் விட்டதே தவிர என் மூளையில் எந்தக் கோளாறும் இல்லை பாட்டி!” என்று பதிலளித்தான்.

“ஐயோ… தவறாக எதுவும் எடுத்துக் கொள்ளாதேப்பா, சட்டென்று தோன்றியதை கேட்டு விட்டேன்!” என்றார் சங்கடமாக.

“அதனாலென்ன பாட்டி பரவாயில்லை!” என்று புன்னகைக்கும் அவன் முகத்தையே இமைக்காமல் பார்த்தார் பொன்னம்மா.

‘என் பேரன், பேத்தி கூட கல்லூரியில் படிப்பதாக சொன்னாரே அந்த சின்னசாமி அண்ணன், கிட்டதட்ட இவன் வயது இருக்குமா அவர்களுக்கு… இல்லை… இல்லை… இந்தப் பையன் இன்னும் கொஞ்சம் பெரியவனாக தெரிகிறான்!’

“சரி பாட்டி… நீங்கள் போய் உங்கள் வேலையை பாருங்கள், என்னால் உங்கள் வேலை கெட வேண்டாம்!” என்று எழுந்து நடக்க ஆரம்பித்தான்.

சொந்தப் பேரன், பேத்தி வாயால் கூட கேட்க முடியாத அழைப்பை வாய்க்கு வாய் பாட்டி என்று அழைக்கும் அவனை அப்படியே அனாதையாக விட்டுச் செல்ல மனம் வராமல் வேகமாக எழுந்து அவன் பின்னே ஓடினார்.

“ஒரு நிமிடம்பா!”

“சொல்லுங்கள் பாட்டி!” என்று திரும்பினான்.

“நீ பேசாமல் என்னுடன் என்னுடைய வீட்டிற்கு வந்து விடேன், எனக்கென்று யாருமில்லை நான் தனியாக தான் இருக்கின்றேன். ஆனால் நீ எப்படி வசதியாக இருந்தப் பையனோ என் வீடு குடிசை தான்!” என்றார் சங்கடத்துடன்.

“நான் எப்படி வாழ்ந்தேனோ எனக்கு தெரியாது, ஆனால் இந்த நிமிடம் அந்தக் குடிசை கூட இல்லாமல் நடுத்தெருவில் தான் நிற்கிறேன்!” என விரக்தியாக சொன்னவன், “இருக்கட்டும் பாட்டி, நான் உங்கள் வீட்டிற்கு வரவில்லை. என்னால் உங்களுக்கு எதுவும் சங்கடம் வந்துவிடப் போகிறது. உங்கள் குடும்பத்து ஆட்களுக்கு இது ஏற்புடையதாக இருக்காது!” என மறுத்தான்.

“நான் ஒண்டிக்கட்டை தான்டா ராஜா, என்னை கேள்வி கேட்டு சண்டைப் போடவெல்லாம் உறவில் யாருமில்லை. நீ இப்பொழுது என்னுடன் வா, உனக்கு பழைய ஞாபங்கள் வந்ததும் உன்னுடைய வீட்டிற்கு போய்விடு!”

“இல்லை பாட்டி… அது சரி வராது!” என்றவன் தயங்க, “எல்லாம் வரும், நீ பேசாமல் என்னுடன் கிளம்பு. எத்தனை நாட்களுக்கு இப்படி ஆற்றோரமாக தனியாக உட்கார்ந்து இருப்பாய்!” என அவனை வற்புறுத்தி அழைத்து சென்று தன்னுடன் தங்க வைத்துக்கொண்டார் பொன்னம்மா.

பெயர் தெரியாத அவனுக்கு தன் மனதில் தோன்றி சட்டென்று அவனை அழைத்து விட்ட பெயரான ராஜாவையே நாமகரணமாக சூட்டி வாய் நிறைய அழைக்க ஆரம்பித்து விட்டார்.

மிகவும் சங்கோஜத்துடன் ஒதுங்கி ஒதுங்கி இருந்தவனை வற்புறுத்தி சாப்பிட வைத்து, பேசி என்று அவன் மனதில் ஒரு இணக்கத்தை உருவாக்கினார் முதியவர்.

மகன்களின் நினைவாக அவர் வைத்திருந்த ஆடைகளையே அவனிடம் கொடுத்து மாற்றுடையாக உடுத்தச் சொல்ல, தலைமுறையை கடந்த ஆடை அவனுக்கு சரியாக பொருந்தாமல் அசௌகரியத்தையே கொடுத்தது. ஆனாலும் தன் மீது தனியான அன்பு வைத்து தனக்காக மெனக்கெடும் அந்த முதியவளின் மனம் சங்கபடக் கூடாது என்று சகித்துக் கொண்டான் ராஜா.

அவர் வயல் வேலைக்கு செல்லும் பொழுது அவருடன் கிளம்ப முயன்றவனை தடுத்து, நீ தனிமையில் உட்கார்ந்து நன்றாக யோசித்து உன்னை பற்றி ஏதாவது கண்டுப்பிடிக்கப் பார் என விட்டுச் சென்று விட்டார்.

பொன்னம்மா அவனை வெளியில் அழைத்து செல்ல தயங்குவதற்கு இன்னொரு காரணம் இருந்தது. ராஜாவை முதல் நாள் வீட்டிற்கு அழைத்து வந்தப் பொழுதே விவரம் தெரிந்தவர்கள் அனைவரும் அவரை திட்டித் தீர்த்து விட்டனர்.

இப்படி ஊர், பெயர் தெரியாதவனை நம்பி வீட்டிற்குள் சேர்த்துக் கொண்டிருக்கிறாயே, அவன் நாளை உன்னை எதுவும் கொன்றுப் போட்டு விட்டால் என்ன செய்வது என்று அவரவர் கற்பனை திறனுக்கு ஏற்ப அவரிடம் கடினமாக கண்டனம் தெரிவித்தனர்.

அவர்களிடம், “அந்தப் பையனிடம் மோசம் போவதற்கு நான் வயதுப் பெண்ணும் இல்லை, அந்த ஓட்டை குடிசையில் இருக்கும் என்னிடம் சல்லிக்காசு இருக்காது என்பதும் அவனுக்கு தெரியும். அப்படியே அவன் என்னை கொன்றுப் போட்டாலும் போய்விட்டுப் போகிறேன், இதற்குமேல் வாழ்ந்து நான் எதையும் சாதிக்கப் போவதில்லை!” என ஒரே போடாக முடித்து விட்டார்.

அதனால் தான் ராஜாவை யாரும் வீடு தேடிவந்து சண்டைப் போடவில்லை, இல்லையென்றால் அவனை ஊரை விட்டே விரட்டி இருப்பார்களோ என்னவோ… இப்பொழுது அனைவரும் பொன்னம்மாவின் வாய்க்கு பயந்தே அமைதியாகி விட்டனர்.

ஆனாலும் செவ்வந்தி மாதிரி சில துடுக்குப் பெண்கள் வாய் நிற்காமல் மற்றவரின் விசயத்தில் மூக்கை நுழைத்து அவர்களை சங்கடப்படுத்துவது மட்டும் இல்லாமால் தாங்களும் மூக்கறுப்பட்டு செல்கிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *