*9*

 

காலையில் வழக்கம் போல் ஐந்தரை மணிக்கு உறக்கம் கலைய சோம்பலுடன் திரும்பி படுத்தாள் சுவாஹனா.

தன் வீட்டில் வழக்கமாக கட்டிலை விட்டு இறங்கும் முன் சுகமாக தலையணையை கட்டிக் கொண்டு ஒரு பத்து நிமிடங்கள் விழிமூடி படுத்திருப்பாள் அவள்.

அதே வழக்கம் இன்றும் தொடர விழிகளைத் திறவாமல் கையை நீட்டி தலையணையை எடுக்க முயன்றாள். எவ்வளவு தூரம் கட்டிலைத் தடவியும் அவள் கைகளுக்கு தலையணை அகப்படவில்லை.

புருவம் சுருங்க தன் கரத்தை இன்னும் கொஞ்சம் நீட்டியவள், திடுக்கிட்டு படக்கென்று விழிகளைத் திறந்தாள்.

ஏனெனில் சுஹாவின் கரம், கிருஷின் கரத்தை பிடித்திருந்தது. வேகமாக தன் கரத்தை விலக்கிக் கொண்டவள், எழுந்து அமர்ந்தாள்.

லேசான படபடப்பு எழ மெல்ல தன் தலைமுடியை கோதியபடி அவனிடம் விழிகளைத் திருப்பினாள்.

கிருஷ் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தான். நெஞ்சம் சீராக ஏறி இறங்க நிமிர்ந்து படுத்திருந்த அவனையே இமைக்காது பார்த்தாள் சுஹா.

உடலில் தேவைக்கதிகமான ஊளைச்சதை எதுவுமில்லாமல் கட்டுமஸ்தாக இருந்தான். விழித்திருக்கையில் எந்நேரமும் அவன் முகத்தில் ஒட்டிக் கொண்டிருக்கும் அந்த அலட்சியமும், திமிரும்(அவளைப் பொறுத்தவரை) எதுவும் இல்லாமல் நிர்மலமாக உறங்கி கொண்டிருந்த அவன் முகத்தில் தெரிந்த தேஜஸ் அவளை தடுமாறச் செய்தது.

மறுபுறம் திரும்பி கொண்டவள், ‘ஹும்… இவனை ஏன் நான் இப்படி பார்க்கிறேன்? இவனெல்லாம் ரொம்ப திமிர் பிடித்தவன், நான் இவனை இப்படி பார்த்தேன் என்பது மட்டும் இவனுக்கு தெரிந்தால் அவ்வளவு தான் பார்க்கின்ற பார்வையிலேயே நம்மை தலைநிமிர முடியாதபடி செய்திடுவான். ஏதோ தூங்கும் பொழுது கொஞ்சம் சுமாராக அழகாக தெரிகிறான் அவ்வளவு தான் மற்றபடி ஒன்றுமில்லை, முதலில் அவனை அப்படி பார்க்கிறதை விட்டு விட்டு கீழிறங்கி போய் ஆகின்ற வேலையைப் பார்!’ என்று தனக்கு தானே உத்தரவிட்டபடி இறங்கினாள்.

தன் அறையில் துணிமணிகளை பெட்டியில் அடுக்கிக் கொண்டிருந்த வைதேகி, “குட்மார்னிங்!” என்ற உற்சாக குரல் கேட்டு வேகமாக திரும்பினாள்.

“குட்மார்னிங்…” என்று இழுத்தவள், சுஹாவின் முகத்தை சுவாரசியமாக ஆராய்ந்தாள்.

“என்ன?” என்று அதிகாரமாக வினவியபடி அங்கிருந்த சேரில் அமர்ந்தாள் சுஹா.

“இல்லை…” என்று அவள் பேச ஆரம்பிக்கும் முன்னே புரிந்து கொண்டு தடுத்தாள் சுஹா.

“வைது… ப்ளீஸ்… தயவுசெய்து கண்டதையும் பேசி கேலி செய்யாதே… நான் ஒன்றும் என் கணவனை மகிழ்ச்சியாக திருமணம் புரிந்து உற்சாகமான உல்லாச வாழ்க்கையைத் தொடங்கவில்லை. என் வலி எனக்கு… இந்த நாளுக்காக தவமிருப்பது போல் எத்தனை வருடங்களாக என் மனதை தூய்மையாக வைத்திருந்து காத்திருந்தேன் என்று எனக்கு தான் தெரியும்!” என்றவளுக்கு குரல் கமறி விழிகள் கலங்கியது.

“ப்ச்… ஏய்… சுஹா…” என்று அவளை தன் மீது சாய்த்து சமாதானப்படுத்த முயன்றாள் வைதேகி.

“விடு வைது… வேண்டாம். என் மனதே வெறுத்து போய் இருக்கின்றது, உன் ஆதரவு பேச்சால் மட்டும் அமைதியடையாது!” என்று அவளை விரக்தியுடன் விலக்கினாள் சுஹா.

“அப்பொழுது கிருஷ் அண்ணா ஆதரவாக பேசினால் உன் மனம் அமைதி அடையுமா?” என்று வினா எழுப்பினாள் வைதேகி.

‘அவனா?’ என ஒரு கணம் குழம்பிய சுஹாவின் எண்ணங்கள் அவனைச் சுற்றி வலம் ஆரம்பித்தது.

கிருஷ் விழித்திருக்கும் பொழுது மட்டும் அவனுடைய அடாவடியை பார்த்து பழகியிருந்த சுஹாவுக்கு முதன் முதலில் உறங்கும் பொழுது அவன் முகத்தில் தெரிந்த அமைதியும், நிச்சலனமும் அவனை வித்தியாசமாக உணர வைத்து அவள் மனதை ஆட்டிப் பார்க்க தான் செய்தது.

அவன் தன்னுடன் இணக்கமாக இருந்தால் தன்னுடைய மனநிலை எப்படியிருக்கும்? அப்படி ஒரு சூழ்நிலை உருவாக வாய்ப்பிருக்கிறதா என்ன? உருவானால்… என்னைக் காணும் நேரம் அவ்விழிகளில் காதல் தோன்றுமா?’ என எண்ணும் பொழுதே அவள் மனம் குழம்ப ஆரம்பித்தது.

சுஹாவின் சிந்தனையில் குறுக்கிடாமல் தன் வேலையைத் தொடர்ந்தாள் வைதேகி.

அப்பொழுது உள்ளே வந்த சுஹாவின் அம்மா அவள் தலையை மென்மையாய் வருட, நினைவுகளை மீட்டவள் அவரைப் பார்த்து புன்னகைத்தாள்.

“நீ சந்தோசமாக இருக்கிறாயாம்மா?” என்று மெல்லிய கவலையோடு விசாரித்தார்.

விழிகளை தாழ்த்தியவள், ம்… என்று தலையசைத்தாள்.

“எங்களுக்கு விருப்பமில்லை என்றாலும், இது நீயாக தேர்ந்தெடுத்த வாழ்வு. ஒரு ஓரத்தில் நிம்மதியே இல்லாமல் உன் எதிர்காலத்தை பற்றிய பயத்துடனேயே தான் இத்திருமணத்தை நடத்தி வைத்தோம். ஆனால் மாப்பிள்ளையை பார்த்தால், நான் அஞ்சிய அளவுக்கு தீயவராக தெரியவில்லை நல்லவராக தான் தெரிகிறார். கொஞ்சம்… எப்படி சொல்வதென்று தெரியவில்லை? தனிமையில் வளர்ந்ததால் விவரமில்லாதவராக இருப்பது போல் தெரிகிறது. ஆனால் நீ அப்படி அல்ல அனைத்து வசதிகளுடன் உற்றார், உறவினர்களுடன் வாழ்ந்தவள். இனி இந்த வீட்டு பொறுப்பு முழுக்க உன்னடையதாகிறது என்கிற பொழுது, இங்கு நல்லதொரு மாற்றத்தை நீதான் கொண்டு வர வேண்டும். கடவுள் உனக்கென்று நிர்ணயித்த வாழ்வு இது தான் என்று எனக்கு தோன்றுகிறது. அதனால் இதை நல்லபடியாக வாழ முயற்சி மேற்கொள். அவரை ஒரு ஆண், கணவன் என்ற கண்ணோட்டத்தில் மட்டும் போட்டியாக பார்த்து வீம்பாக இருக்காதே… குழந்தையாக எண்ணிப் பார். உன்னை அனுசரித்து போ என்று தான் சொல்கிறேன், அடிமையாக இருக்க சொல்லவில்லை. அவர் செய்யும் தவறுகளுக்கு தண்டனைகள் வழங்க வேண்டும் என்று எண்ணாதே, ஒரு தாயின் நிலையிலிருந்து யோசித்து செயல்படு. அதே தவறை உன் குழந்தை செய்தால் என்ன செய்வாய்? அப்படி முடிவெடு புரிகிறதா… அவர் மனதில் உன்னை பற்றிய எண்ணங்களை மாற்றி, அவராக உன்னை நேசிக்கும் நிலையை உருவாக்கு… ம்?” என்று வினவ, சரிம்மா என்று அவர் இடையை கட்டிக்கொண்டாள் சுஹா.

“அத்தை… செம!” என்று விரல் மடக்கி காண்பித்தபடி வைதேகி அவர் தோள் சாய்ந்தாள்.

அதைக் கண்டு சிரித்தவர், “சரி சரி… கிளம்புங்கள், பத்தரைக்குள் கிளம்ப வேண்டும். மாப்பிள்ளை எழுந்து விட்டாரா சுஹா?” என்று கேட்டார்.

“நான் கீழே வரும் வரை எழவில்லைமா!”

“சரி இப்பொழுது போய் பார், காபி எதுவும் வேண்டுமென்றால் கலந்து கொண்டு போய் கொடு. உணவில் அவரின் ருசியை சமையற்காரரிடம் கேட்டறிந்து கற்றுக்கொள்!”

“சரிம்மா!” என்றவள் அவனைக் காண தங்களறைக்கு சென்றாள்.

இன்னும் குப்புறப் படுத்து தூங்கி கொண்டு தான் இருந்தான் கிருஷ், லேசான பெருமூச்சொன்றை வெளியேற்றினாள் சுஹா.

‘இப்பொழுது இவனை எழுப்புவதா வேண்டாமா? அம்மா வேறு பத்தரைக்குள் மறுவீடு சம்பிரதாயத்திற்காக வீட்டிற்கு கிளம்ப வேண்டும் என்றார்கள். இவன் எழுந்தால் எவ்வளவு நேரத்தில் கிளம்புவான் என்றும் தெரியவில்லை? வைதேகியும், அம்மாவும் சொல்வது போல் இவனை நான் புரிந்து கொள்ள முயற்சிக்க வேண்டுமா? ஆனால் நான் மட்டும் முயன்று என்ன பிரயோஜனம், அதற்கு இவனுடைய எதிரொலி எப்படி இருக்கும்?’ என்று குழம்பிக் கொண்டிருந்தவள், கிருஷிடம் அசைவு உணர்ந்து திரும்பினாள்.

உடலை நெளித்தபடி ஒரு நிமிடம் உருண்டவன், மெல்ல விழிகளை திறந்தான்.

எதிரில் சோபாவில் அமர்ந்திருந்த சுஹா, “குட்மார்னிங்!” என்று அவனிடம் அழகாக புன்னகைத்தாள்.

முகத்தில் எவ்வித உணர்வும் இல்லாமல் அவளைப் பார்த்தவன், தன் போக்கில் எழுந்து வாஷ்ரூம் சென்றான்.

அவனுடைய செய்கையால் முகம் சிவந்தவள், கண்களை மூடி தொண்டையில் அடைத்த தன் உணர்வுகளை விழுங்கினாள்.

ஏனோ உள்ளம் துவள, அவனிடம் காபியை பற்றி விசாரிக்க கூட மனமில்லாமல் வாடிய முகத்துடன் பால்கனிக்கு சென்று வெளியே வெறித்தாள்.

“காபி ஒரு கப் கொண்டு வாங்க!” என்று கிருஷ் யாருக்கோ உத்திரவிடும் குரல் செவியில் வந்து மோத அசையாமல் நின்றாள் சுஹா.

“ஆமாம்… என்ன திடீரென்று சிரிக்கவெல்லாம் செய்கிறாய்? என்னை கவிழ்க்க புதிதாக ஏதாவது திட்டம் போட்டிருக்கிறாயா?” என்று அவள் பின் வந்து நின்றான் அவன்.

அவள் பதிலின்றி அமைதியாக இருக்கவும், “உன்னிடம் தான் கேட்கிறேன்!” என்ற அதட்டலுடன் அவளை வலுக்கட்டாயமாக தன் புறம் திருப்பினான்.

இயலாமையால் கோபமும், எரிச்சலும் போட்டி போட, “ஆமாம்… மேனகை வேஷம் போட்டு இந்த விஸ்வாமித்திரரை மயக்கி என் கைக்குள் போட்டுக் கொள்ளலாம் என்று பார்த்தேன். ஆனால் முடியவில்லை… உஷாராக தான் இருக்கிறீர்கள் போதுமா?” என்று விழிகள் சிவக்க கத்தினாள் சுஹா.

அவள் முகத்திலிருந்த கோபத்தை நிதானமாக அளந்தவன், “எனக்கு நன்றாகவே தெரியும், உனக்கு என்னை பிடிக்காது என்று… அதனால் இந்த மயக்குகின்ற நாடகமெல்லாம் வேண்டாம், ஓகே. அதை கண்டு ஏமாறுகிற அளவுக்கு நான் ஒன்றும் முட்டாள் இல்லை!” என்று அலட்சியமாக கூறினான்.

மீண்டும் வெளிப்புறம் திரும்பி கொண்ட அவளின் மனதோ, ‘இல்லைடா… நீ வெறும் முட்டாள் இல்லை, அதைவிட வெரி வெரி அடி முட்டாள் ஹும்… ‘ என உள்ளுக்குள் பழிப்பு காண்பித்தாள்.

“அதுசரி… இந்த விஸ்வாமித்திரர், மேனகை யார்? எங்கேயோ இந்த பெயர்களை கேட்டிருக்கிறேனே… எதற்கு இவர்களை உவமையாக கூறுகிறார்கள்?” என்று சுஹாவிடமே யோசனையோடு விவரம் கேட்டான் கிருஷ்.

அவனுடைய கேள்வியால் அதுவரை இறுக்கமாக இருந்த சுஹாவின் நெஞ்சம் மெல்ல தளர்ந்தது.

‘அம்மா குறிப்பிட்டது போல், இவன் நிஜமாகவே குழந்தை தான். என்னிடமே சண்டை போட்டு விட்டு, என்னிடமே சந்தேகம் கேட்கின்றான் பார்… மாக்கான்!’ என்று இதழ் மலர்ந்தாள்.

‘இவன் வழியிலேயே சென்று தான் இவனை என் வழிக்கு திருப்ப வேண்டும்!’

கிருஷிடம் திரும்பிய சுஹா, “அடடா… அவர்களைப் பற்றி உங்களுக்கு ஒன்றுமே தெரியாதா? இருவரும் கணவன் மனைவி, அதில் விஸ்வாமித்திரர் ரிஷி என்பதால் குடும்ப வாழ்வில் ஈடுபட மறுத்து தவம் இருப்பார். அதை சவாலாக ஏற்றுக் கொண்ட மேனகை, அவரை தன் வழிக்கு கொண்டு வந்து ஒரு குழந்தைக்கு தந்தையாக்குவார் இது தான் கதை. அதை தான் உங்களிடமும் செயல்படுத்தலாமா என முயன்று கொண்டிருக்கிறேன்!” என்று லேசாக எக்கி அவன் கழுத்தில் கரங்களால் மாலையிட்டு அருகில் இழுத்தாள்.

ஒரு கணம் திகைத்த கிருஷ், “வாட்… என்ன?” என்று இருமொழிகளிலும் உளறியவன், அவளுடைய நெருக்கம் தந்த பதட்டத்தால் சற்று தடுமாறினான்.

வேகமாக அவளை விலக்கியவன், “ஏய் இங்கே பார்! இந்த வேலையெல்லாம் என்னிடம் வைத்து கொள்ளாதே… இதற்கெல்லாம் நான் அசர மாட்டேன். ஒழுங்காக மரியாதையாக நடந்து கொள்!” என்று விரல் நீட்டி எச்சரித்தான்.

சட்டென்று வாய் விட்டு வெள்ளி சதங்கையாக சிரித்தவள், “இவ்வளவு மரியாதை போதுங்களா எஜமான்?” என்று நக்கலாக கூழை கும்பிடு போட்டு காண்பித்தாள்.

அவன் சொல்வதறியாமல் திருதிருவென்று விழிக்க, “மரியாதை வேண்டுமாமே… மரியாதை, ஆளைப் பார். நீ என் புருஷன்டா… எனக்கு தாலி கட்டியிருக்கிறாய் தெரியுமில்லை. இனி இப்படித்தான்டா செல்லக்குட்டி ‘டா’ போட்டு பேசுவேன்!” என்று அவன் கன்னங்களை இழுத்து கொஞ்சிய சுஹா, “சரி காபி கேட்டீர்கள் இல்லை, நான் போய் எடுத்து வருகிறேன்!” என்று ஓடினாள்.

‘ஐயோ… வாயை வைத்துக் கொண்டு சும்மா இருக்க மாட்டாயாடா நீ? உன் மரியாதையை நீயே கெடுத்து கொண்டாய், இஷ்டத்துக்கு ‘டா’ போட்டு பேசுகிறாள். எல்லோர் முன்னிலையிலும் அவள் அப்படி பேசினால் என்ன செய்வது?’ என்று தவிக்க ஆரம்பித்தான் கிருஷ்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *