*8*

 

சுவாஹனா நிம்மதியாக படுத்திருப்பதை காணக் காண சாய்கிருஷுக்கு கோபம் கன்னாபின்னாவென்று எகிறியது.

அவளை ஏதாவது செய்து அவள் தூக்கத்தை கெடுக்க வேண்டும் என்று வேக வேகமாக யோசித்தவனுக்கு ஒன்று தோன்றியது, ஆனால் அது ரொம்ப சிறுபிள்ளைத்தனமாக இருக்குமோ… என்று இதழ் கடித்தபடி நின்றான்.

‘ப்ச்… பரவாயில்லை, வேறு என்ன செய்வது? அவளை கஷ்டப்படுத்தவும் கூடாது என்று விட்டார் அப்பா, அது எனக்கும் வராது… அது வேற விஷயம்!’ என்று எண்ணியவனுக்கு தான் செய்யப் போகும் செயலை எண்ணி முகத்தில் முறுவல் மலர்ந்தது.

‘எனக்கு ஏன் இவளிடம் மட்டும் இப்படி தோன்றுகிறது? இதுவரை யாரிடமும் இப்படியெல்லாம் செய்ததே இல்லை. எது… எப்படியோ அவளுக்கு எரிச்சல் மூட்டி பார்ப்பது எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது அவ்வளவு தான்!’ என்று விழிகள் மூடி படுத்திருந்த அவளை திரும்பி பார்த்தான்.

தான் எண்ணியதை செயல்படுத்த முயலுகையில் அவனுக்கே சற்று கூச்சம் தோன்ற, கொஞ்சம் தயங்கி நின்றான். சில நிமிடங்கள் அப்படியே நின்றவன் பின் இங்கு தான் யாருமே இல்லையில்லை… அதுவும் அவளும் பார்க்கவில்லை என சட்டென்று ஒரு எகிறு எகிறி கட்டிலின் மீது தொப்பென்று விழுந்தான்.

கிருஷ் அவ்வாறு எகிறி குதித்ததில், சுஹா படுத்திருந்த இடத்தை விட்டு ஐந்து சென்டி மீட்டர் மேலே எழும்பி திரும்ப கட்டிலில் வந்து விழுந்தாள்.

அதைக் கண்டதும் முகமெல்லாம் மலர சடாரென்று அவளுக்கு முதுகு காண்பித்தபடி திரும்பி படுத்துக் கொண்டான் அவன்.

கிட்டத்தட்ட அரை மணி நேரம் அலுப்பில் ஆழ்ந்த உறக்கத்திற்கு சென்று விட்ட சுஹா, திடீரென்று தான் மேலே போய் கீழே வரவும் என்னவோ ஏதோவென்று அரக்கபரக்க எழுந்து அமர்ந்து என்ன நடந்தது என்று புரிந்துக் கொள்ள இயலாமல் சுற்றும்முற்றும் பார்த்து விழித்தாள்.

மெல்ல தூக்கம் கலையவும், நிதானமாக கண்களை மூடி சிந்தனை செய்தாள். மிகவும் தூக்க கலக்கமாக இருந்தது அவனிடம் சண்டையிட்டு விட்டு தூங்கி விட்டேன்.

பிறகு… என்று இழுத்தவள் ஒன்றும் புரியாமல் இவன் எப்பொழுது வந்து படுத்தான் என்று அவனிடம் பார்வையை செலுத்தினாள். கிருஷ்ஷோ அவள் எழும்பி விழுந்ததை நினைத்து நினைத்து உடல் குலுங்க மௌனமாக சிரித்துக் கொண்டிருந்தான்.

சுஹாவின் கழுகு பார்வையில் அது விழ, இவன் ஏன் காரணமில்லாமல் இப்படி சிரித்துக் கொண்டிருக்கிறான்? என்று யோசித்தவளுக்கு பனிமூட்டம் விலகியது போல் அனைத்தும் தெளிவாக புரிந்தது.

‘அடப்பாவி பயலே… யாருடா நீ? என்ன கேரக்டர் என்று ஒன்றும் புரிந்துக் கொள்ள முடியவில்லையே? இவ்வளவு சீப்பாக பிஹேவ் செய்கின்றான். கையை கிள்ளுவதும், பெட்டில் எகிறி குதிப்பதும்… காட்! ஐயோ… தெரியாதனமாக இவனை திருமணம் செய்துக் கொண்டு ஏதாவது தப்பு செய்து விட்டேனா?’ என்று தலையில் கை வைத்தபடி அமர்ந்தாள்.

சுஹா எழுந்து வெகு நேரமாகியும் அவளிடம் இருந்து எந்த எதிரொலியும் வராததால் கிருஷ் மெல்ல உடலை நெளிப்பது போல திரும்பி அவளை பார்த்தான்.

அவள் அவனை நேர்ப்பார்வை பார்த்தாள்.

அதைக் கண்டு லேசான தடுமாற்றம் உண்டாக, “என்ன?” என்றான் புருவம் சுளித்து.

“நன்றாக தானே இருக்கிறீர்கள்?” என்று முகத்தை சீரியஸாக வைத்துக் கொண்டு கேட்டாள் அவள்.

ஒரு கணம் ஒன்றும் புரியாமல் விழித்தவன், “ஆங்…” என்றான்.

“இல்லை… இவளை திருமணம் செய்துக் கொண்டோமே என்ற அதிர்ச்சியில் பைத்தியம், கியித்தியம் எதுவும் பிடித்து விட்டதா?” என்றாள் ஏளனமாக.

“ஏய்… என்னடி கொழுப்பா?” என்று வேகமாக எழுந்தமர்ந்தான்.

“ம்… ஆமாம், உங்களை திருமணம் செய்துக் கொண்டேன் இல்லை… அதனால் பெருகி விட்டது. அது இருக்கட்டும்… கொஞ்ச நேரத்திற்கு முன்னாடி என்ன செய்தீர்கள்?”

“என்ன செய்தேன்? படுத்தேன்!” என்று தோள்களை குழுக்கினான்.

“நீங்கள் வந்து விழுந்த வேகத்திற்கு பெயர் படுத்தேன் இல்லை… குதித்தேன் என்பது தான் பொருத்தமாக இருக்கும்!” என்று முறைத்தாள் சுஹா.

அலட்சியமாக இதழை வளைத்தவன், “நீ என்ன வேண்டுமென்றாலும் சொல்லிக் கொள்!” என்று படுத்தான்.

“நீங்கள் இதே மாதிரி ஏதாவது லூசுத்தனமாகவே செய்துக் கொண்டிருந்தீர்கள், அப்புறம்… அப்புறம் நான் என்ன செய்வேன் என்று எனக்கே தெரியாது!” என எகிறியவளை தெனாவட்டாக பார்த்தான் கிருஷ்.

“என்ன செய்வாய்? நீயும் இதே மாதிரி நான் தூங்கும் பொழுது பெட்டில் எகிறி குதிப்பாயா?” என்றவன் உடனே சத்தமாக வாய் விட்டு சிரிக்க ஆரம்பித்தான்.

“ஓ மை குட்னஸ்… நினைத்துப் பார்க்கவே முடியவில்லை நீ அப்படி குதிப்பதை…” என்றவன் மீண்டும் வயிற்றைப் பிடித்துக் கொண்டு சிரிக்க, ‘என்ன? நான் குதிப்பதா?’ என்று விழித்த சுஹா கோபம் கொண்டு அவன் மேல் பாய்ந்தாள்.

“யூ… யூ… உங்களுக்கு எவ்வளவு திமிர் இருந்தால், நான் அப்படி குதிப்பேன் என்று கேலி செய்வீர்கள்!” என அவன் ஷர்ட் காலரை பிடிக்கப் போனாள்.

“ஏய்… ஏய்… நோ… நோ…” என்று வேகமாக குறுக்கே தலையணையை கொண்டு வந்தவன், “டோன்ட் டச்! வாய்ப்பேச்சு வாய்ப்பேச்சாக தான் இருக்க வேண்டும். நோ வயலன்ஸ், அப்பா சொல்லியிருக்கிறார்கள்!” என சட்டம் பேசினான்.

ச்சை… என்றவள் தள்ளி அமர்ந்தாள். அவனுடைய செய்கைகளை எண்ணி மனம் உலைக்களமாய் கொதித்துக் கொண்டிருந்தது.

அமைதியாக உர்ரென்று முழங்காலை கட்டிக்கொண்டு அமர்ந்திருந்தவளை பார்த்த கிருஷ், ‘என்ன இவள் அப்படியே உட்கார்ந்து கொண்டிருக்கிறாள்? இவள் படுத்தால் தானே நான் அடுத்த ப்ளானை எக்ஸுகியூட் பண்ண முடியும்!’ என்று நினைத்தான்.

“ஏய்… நீ படுத்து தூங்கவில்லை?” என்று அவளிடம் வினவினான்.

“அதில் உங்களுக்கென்ன அவ்வளவு அக்கறை?” என்றாள் சுஹா.

“எனக்கென்ன அக்கறை பயந்து விட்டாயோ என்று கேட்டேன்!”

“நான் எதற்கு பயப்படுகிறேன் நீங்கள் என்ன பேய் மாதிரி வந்தா பயமுறுத்தினீர்கள்? நான் அப்படியே பயந்து நடுங்குவதற்கு ஹும்… வெறும் காமெடி பீஸ் தானே!” என்று இகழ்ச்சியாக சிரித்தாள்.

பதிலின்றி முறைத்தவன், ‘இருடி… இரு… திமிராகவா பேசுகிறாய்? உன்னை எப்படி எப்படியெல்லாம் டார்ச்சர் பண்ணப் போகிறேன் பாரு. அதிருக்கட்டும்… இவள் சொன்ன பேய் விஷயம் கூட நன்றாக இருக்கிறதே, மூளையில் ஒரு ஓரமாக சேவ் செய்து வைத்துக் கொள்ள வேண்டும் ப்யூச்சரில் எதற்காவது யூசாகும்!’ என்று எண்ணினான்.

சற்று நேரத்தில் எவ்வளவு நேரம் தான் இப்படியே அமர்ந்திருப்பது என்று சலிப்புடன் படுத்தாள் சுஹா.

அதற்காகவே காத்திருந்தவன் போல் வேகமாக தன் மொபைலில் யு டியூப் ஓப்பன் செய்து ஃபுல் வால்யுமில் ஒரு வீடியோவை ப்ளே செய்தான் கிருஷ்.

இவனை… என்று பல்லை கடித்தபடி கண்களை இறுக்க மூடினாள் சுஹா.

சட்டென்று அவள் மூளையில் ஒரு மின்னல் வெட்டியது.

‘இவன் காலையிலேயே என்ன சொன்னான்? எனக்கு எரிச்சல் மூட்டி பார்ப்பது அவனுக்கு மிகவும் பிடித்திருக்கிறது என்றான். அப்படியென்றால் இவன் செய்கைகளுக்கு நான் ரியாக்ட் செய்துக் கொண்டே இருந்தால் இவனுடைய சில்லறைத்தனங்களும் தொடரும் என்று அர்த்தம். கூலாக இருந்தால்… என்ன செய்கிறான் என்று இப்பொழுது பார்க்கலாம்?’

‘என்ன ஒரு ரியாக்ஷனையும் காணோம்?’ என்று கிருஷ் எண்ணமிடும் பொழுதே சுஹா அவன் புறம் திரும்பினாள்.

‘ஹை… திரும்பி விட்டாள்!’ என்று ஆவலாக அவள் முகத்தை பார்த்தவன் குழம்பினான்.

எள்ளும், கொள்ளும் வெடிக்கும் என அவன் எதிர்பார்த்திருக்க, அவள் அவனை பார்த்து அழகாக புன்னகைத்தாள்.

‘சண்டை போடுவாள் என்று பார்த்தால்… இவள் என்ன சிரிக்கிறாள்? என்னை சொன்னாள்… ஒருவேளை என் டார்ச்சர் தாங்காமல் இவளுக்கு பைத்தியம் பிடித்து விட்டதோ!’

“என்ன?” என்று அவளிடம் அதிகாரமாக கேட்டான்.

“ராஜா ராணி படம் பார்த்தீர்களா…?” என்று செல்லமாக கொஞ்சும் குரலில் வார்த்தைகளை இழுத்தாள்.

உள்ளுக்குள் திருதிருவென்று விழித்தவன் வெளியே கெத்தாக, “ஆமாம்!” என்றான்.

“நானும் இரண்டு தடவை பார்த்திருக்கிறேன். ஸோ… என்னிடம் இந்த வேலை எல்லாம் வேண்டாம் ஓகே!” என ஈயென்று சிரித்தாள்.

“அப்படியென்றால் நான் இதே மாதிரி கன்டினியூ செய்தால் உனக்கும் அவளை மாதிரி பிட்ஸ் வருமா?” என்று வேண்டுமென்றே விழிகளை விரித்து அப்பாவியாக கேட்டான்.

தன்னை விட்டு பறக்கத் துடித்த பொறுமையை இழுத்துப் பிடித்தவள் அவனை பார்த்து மறுபடியும் பல்லை காட்டினாள்.

“அந்த படத்தில் வருவதை போல் நீங்கள் வேண்டுமென்றால் அந்த லூசு ஆர்யாவாக இருக்கலாம். ஆனால் நான் வீக் நயன்தாரா இல்லை, ஓகே!” என்றவள், “அப்புறம் இன்னொரு விஷயம்… உங்களை மாதிரி ஆட்களுக்கு தான் ஏதாவது சத்தம் இருந்தால் தூக்கம் வராது. பட்… எனக்கு அப்படியில்லை எங்கள் வீடுகள் அதாவது பெரியப்பா, நாங்கள் அப்புறம் சித்தப்பா அனைவரும் ஒரே இடத்தில் இடம் வாங்கி அருகருகே வீடுகள் கட்டிக்கொண்டோம். மூன்று வீட்டிற்கும் சேர்த்து ஒரே பெரிய காம்பவுன்ட் தான். ஸோ… என் தம்பி, தங்கைகளுடன் எங்கள் தெரு பசங்கள் முழுவதும் எங்கள் காம்பவுன்டில் தான் விடுமுறை நாட்களில் பகலென்றும் இல்லாமல் இரவென்றும் இல்லாமல் ஆட்டம் போட்டுக் கொண்டிருப்பார்கள். அந்த கூச்சலிலேயே தூங்கிப் பழகியவள் நான் இந்த சத்தம் எல்லாம் எனக்கு சுண்டைக்காய். ஓகே… யு கேரி ஆன்… கேரி ஆன்!” என்று சுஹா நக்கல் செய்யவும், கிருஷ் தடுமாறினான்.

“ஆங்… இதை சொல்ல மறந்து விட்டேனே, உங்களுக்கு நைட் தூக்கத்தை விட அதிகாலை தூக்கம் தான் மிகவும் பிடித்த விஷயமாமே… அந்த நேரம் யாரும் தொந்திரவு செய்தால் பிடிக்காதாம், ஏழு மணி வரை பின் டிராப் சைலன்ஸ் இருக்க வேண்டுமாமே… எனக்கு வேறு நான்கு மணிக்கே விழிப்பு வந்து விடும். என்ன ரிவென்ஜ் எடுத்துக் கொள்ளலாமா?” என்று வினவி கண்ணடித்தாள் சுஹா.

திகைத்தவன் அலறி அடித்து, “வேண்டாம்… வேண்டாம்… எனக்கு தூக்கம் வருகிறது நான் தூங்கப் போகிறேன். நீயும் தூங்கேன், குட்நைட்!” என்று இப்பொழுது இவன் பல்லை காட்ட, அப்படி வாடா செல்லம் வழிக்கு என மனதினுள் புன்னகைத்தபடி படுத்தாள் சுஹா.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *