*7*​

 

ரம்மியமான மாலைப் பொழுது கடந்து, அழகான இரவுப் பொழுதின் துவக்கம். நிலா மகள் மேகங்கள் இடையே ஊர்வலம் செல்ல, இங்கு வைதேகி நம் பூமகள் சுவாஹனாவை சோபன அறைக்கு அனுப்ப அலங்கரித்துக் கொண்டிருந்தாள்.

“ஹேய் வைது… உனக்கு கொஞ்சமாவது அறிவிருக்காடி?” என்று வினவினாள் சுஹா.

“ஏன்… இப்பொழுது என் அறிவில் என்ன சந்தேகம் வந்து விட்டது உனக்கு?” என்றபடி அவள் தலையில் ஜாதிமல்லி பூச்சரத்தை தொங்க விட்டாள் வைதேகி.

அவள் கைகளை விலக்கி விட்டு திரும்பிய சுஹா, “யோசித்துப் பார்… அங்கே ரூமில் நுழைந்ததுமே இருவரும் ஒருவரையொருவர் முறைத்துக் கொண்டு நிற்கப் போகின்றோம். அதற்கெதற்கு இத்தனை அலங்காரம்? போனவுடனேயே நான் டிரஸ் சேஞ்ச் பண்ணிட்டு தூங்க போகிறேன்!” என்று லேசாக கை மறைவில் கொட்டாவி விட்டுக் கொண்டு எழுந்தாள்.

வைதேகிக்கு என்ன சொல்வதென்றே புரியவில்லை. சுஹாவின் மாமா பெண் மட்டுமல்ல அவள், அவளுடைய நெருங்கிய தோழியும் கூட. இருவருக்கும் மூன்று மாதம் தான் வயது வித்தியாசம். வெளியூரில் இருந்த அண்ணன் மகளை தன் மூத்தார் மகனுக்கே திருமணம் முடித்து வீட்டுக்கருகிலேயே கொண்டு வந்து வைத்துக் கொண்டார் சுகந்தி.

தன் வீட்டுக்கே அவள் அண்ணியாக வரவும் சுஹாக்கு ஒரே கொண்டாட்டமாகி விட்டது. வைதேகி படிப்பில் அவ்வளவாக ஆர்வமில்லாதவள் என்பதால் பெயருக்கு ஒரு டிகிரி முடித்த கையோடு விரைவில் திருமணம் முடிவாகி நடந்து முடிந்து விட்டது.

இரண்டு வயதில் மகன் இருக்கிறான் பயங்கர துறுதுறு… அவன் அப்பா தேவா பிரொஜக்ட் விஷயமாக வெளிநாட்டில் இருப்பதால் திருமணத்தில் கலந்துக் கொள்ள இயலவில்லை.
அனைத்தையும் முன்னின்று வைதேகியே பார்த்து கொண்டாள்.

சுஹாவுக்கும் கிருஷுக்கும் இடையே நடந்த பிரச்சினை முதற்கொண்டு அனைத்து விவரங்களும் அவளுக்கு முழுமையாகத் தெரியும்.

லேசாக பெருமூச்சு விட்டவள், “சரி… உன்னிடம் பல முறை சொன்னது தான், திருமணம் முடிந்த பின்னரும் இருவரும் முறைத்துக் கொண்டு இருக்காமல் கொஞ்சமாவது ஒருவரையொருவர் புரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள்!” என்றாள் வைதேகி.

“ப்ச்… முடித்து விட்டாயா? என்னை ரூமுக்கு அழைத்து போ, நான் தூங்க வேண்டும்!” என்றாள் சுஹா சலிப்பாக.

“ம்… தூங்க போகிறவளுக்கு எதற்கு துணை? நீயே உங்கள் ரூமுக்கு போய் கொள்!” என்று விட்டு கைகளை கட்டிக் கொண்டு அமர்ந்து விட்டாள் அவள்.

“ஏய்… பைத்தியக்காரியாடி நீ? நான் எப்படி தனியாக போவேன்? இன்று…” என சற்று தடுமாறியவள் பின் சமாளித்து, “பர்ஸ்ட் டே இல்லை… பார்க்கிறவர்கள் என்ன நினைப்பார்கள்?” என்றாள் லேசான எரிச்சலுடன்.

“பர்ஸ்ட் டேவா…” என்று ஜன்னலின் வெளியே எட்டி பார்த்த வைதேகி, “நைட் ஆயிற்று போலிருக்கிறதே… அப்புறம் எப்படி பர்ஸ்ட் டே ஆகும்? பர்ஸ்ட் நைட் இல்லை?” என்று கேட்டு கண்சிமிட்ட, தன்னையுமறியாமல் முகம் சிவந்தாள் சுஹா.

“எருமை… எருமை… என்னை ரொம்ப வாராதே, ப்ளீஸ் வாப்பா… எனக்கு ஒரு மாதிரி இருக்கின்றது!” என்று முதலில் அவளை அடித்தவள், பிறகு சரணாகதி ஆனாள்.

“ஒரு மாதிரி என்றால் எப்படி?” என்று அவள் யோசிப்பது போல் பாவனை செய்தாள்.

“வைது…” என்று சுஹா பொறுமையிழந்து கத்த, “சரி சரி இரு, பாலை மட்டும் எடுத்து வந்து விடுகிறேன்!” என்று வெளியேற முயற்சித்தவளை தடுத்தாள் அவள்.

“ஒரு மண்ணும் வேண்டாம்… வீணாக வாஷ்பேஷினில் கொட்டுவதற்கு அது எதற்கு வா!” என்று அவள் கையை பிடித்து இழுத்து கொண்டு சுஹா நடக்க, “ஏய்… ஏய்… என்னடி பண்றே? நான் தான் உன்னை அழைத்து போக வேண்டும்!” என்று அதட்டி அவளை கிருஷின் ரூமில் விட்டு விட்டு வந்தாள் வைதேகி.

அவளை எதிர்கொண்ட சதா, “என்னம்மா ஏதாவது பாஸிடிவ் சேஞ்சஸ்?” என்று ஒருவித ஆர்வத்துடன் வினவினார்.

“ஹய்யோ… நீங்கள் வேறப்பா என்னால் முடியவில்லை. இரண்டு பேரும் சேர்ந்து இந்த ஒரு நாளிலேயே இந்த பாடுபாடுத்துகிறார்கள், இவர்களின் சண்டை முன்னே சிறுபிள்ளைகள் கூட தோற்று விடும். உஃப்… எப்படி தான் சமாளிக்க போகிறீர்களோ தெரியவில்லை?” என்று சலித்தாள் அவள்.

கலகலவென்று சிரித்தவர், “ஆனால் இது கூட நன்றாக தான்மா இருக்கிறது. எப்பொழுதும் சிறு வயது முதலே ஒரு மாதிரி தான் பெரியவன் என கம்பீரமாக அலைந்து கொண்டிருந்த கிருஷுக்குள் இப்படியொரு குழந்தைதனமா என்று எனக்கு வியப்பாக இருக்கிறது. ஐந்து வயதிலும் பத்து வயதிலும் உடன்பிறந்தோரிடம் போட வேண்டிய சண்டையையும், சீண்டலையும் கட்டிய மனைவியுடன் செய்து கொண்டிருக்கிறான். ஹும்… எப்படியோ ஒருவரையொருவர் புரிந்து கொண்டு சந்தோசமாக வாழ்ந்தால் சரி…” என பெருமூச்சு விட்டவர், “ஆமாம்… அம்மாவிடம் பேசினாயா, குழந்தை எப்படி இருக்கின்றானாம்?” என்று கேட்டார்.

“ம்… இப்பொழுது கொஞ்சம் ஜுரம் குறைத்திருக்கிறதாம்பா!”

“ஓ… குட் குட். சரி நீயும் போய் ரெஸ்ட் எடும்மா… உனக்கு தான் திருமண வேலைகள் அதிகமாக இருந்தது. குட் நைட்!” என்றார்.

“குட் நைட்பா!” என்று புன்னகைத்து விட்டு தன்னறைக்குச் சென்றாள் வைதேகி.

ரூமிற்குள் நுழைந்தவுடனேயே சுஹாவின் மனதில் பெரிய ஏமாற்ற அலை சுனாமி போல் உயர்ந்து அவளைத் தாக்கியது.

இந்த நாளுக்காக எத்தனை வருடங்களாக காத்திருந்தேன்… எனக்கு கணவனாக வரப் போகிறவனை பார்த்த முதல் பார்வையிலேயிருந்தே காதலித்து அவனிடமும் அதே அளவு காதலை உணர்ந்து வாழ்க்கையை அணுஅணுவாய் ரசிக்க வேண்டும் என்று எவ்வளவு ஆசையாக இருந்தேன்!!

அத்தனையிலும் மண்ணை அள்ளி போட்டு விட்டானே… ஆசையும், காதலுமாக தொடங்க வேண்டிய இரவு அவனுடைய முறைப்பிலும், எரிச்சல் மிகுந்த பார்வையிலும் தான் துவங்க போகிறது.

இயலாமையில் நெஞ்சம் தவிக்க விழிகள் கலங்கியது, அதுவரை சுஹாவின் வரவை உணராமல் மொபைலில் மூழ்கியிருந்த கிருஷ் அப்பொழுது தான் நிமிர்ந்தான்.

சட்டென்று தன்னை சமாளித்து அனைத்தையும் விழுங்கியவள் அறையின் மூலையிலிருந்த வார்ட்ரோப்பை நோக்கிச் சென்றாள்.

‘இவன் முன் என் உணர்வுகளை நான் எப்பொழுதும் வெளிப்படுத்தவே கூடாது, அது அவனுக்கு இன்னும் இளக்காரமாக தான் இருக்கும். இவனிடம் என்றும் ஏட்டிக்கு போட்டியாக நிற்பது தான் சரி!’ என்று தன் அடுக்கிலிருந்து நைட் டிரஸ்ஸை எடுத்து கொண்டிருந்தாள்.

கிருஷோ அவளையே யோசனையோடு நோக்கி கொண்டிருந்தான், ‘இவள் எப்பொழுது வந்தாள்? நான் கவனிக்கவேயில்லையே… என்ன இது? இவளிடம் சண்டை போட வேண்டும் என்று நான் காத்திருந்தால், இவள் பாட்டுக்கு எதுவும் பேசாமல் டிரஸ்ஸிங் ரூமிற்குள் போய் விட்டாள்!’ என்று இதழ் கடித்தான்.

வெளியே வந்த சுஹா பேன்ட் சர்டில் இருந்தாள், மற்ற உடைகளை விட இது தான் சேஃப் என்பது அவளின் எண்ணம். மற்ற உடைகள் என்றால் உறங்கும் பொழுது அங்கே இங்கே நெகிழ சான்ஸ் இருக்கிறது. ஒருபுறம் அது அவளுக்கு சங்கடம் என்றால் மறுபுறம் அவன் தன்னை கேவலமாக பேச தானே வாய்ப்பு ஏற்படுத்தி கொடுத்து விடக் கூடாது என்று நினைத்தாள்.

ஏதாவது சண்டை போட வேண்டும் என்று கொக்காக காத்திருப்பவன், அதை கண்டால் கண்டிப்பாக மயக்கப் பார்க்கின்றாயா? என்று தான் அசிங்கமாகப் பேசுவான்.

அமைதியாக தன் நகைகளை எல்லாம் கழட்டி ஜுவல் பாக்ஷில் அடுக்கி கப்போர்டில் வைத்த சுஹா, சோர்வுடன் கட்டிலின் ஒரு ஓரமாக பிளாங்கட்டை இழுத்து போர்த்தியபடி படுத்தாள்.

அதுவரை அவளின் செயல்களையே அலட்சியமாக நோட்டம் விட்டு கொண்டிருந்த கிருஷ் திடுக்கிட்டான்.

வேகமாக எழுந்து அவளருகே சென்றவன், “ஏய்… எதற்கு என் கட்டிலில் படுக்கிறாய்?” என்று அதட்டினான்.

ஷ்… என சலிப்புடன் திரும்பியவள், “என்ன?” என்றாள் அவனை நேராக பார்த்து.

“எதற்கு என் கட்டிலில் நீ படுக்கின்றாய் என்று கேட்டேன்?” என்றான் முறைப்புடன்.

“இது என்ன கேள்வி… கட்டிலில் படுக்காமல் வேறெங்கே படுப்பார்கள்?” என்றவள் பிளாங்கட்டை தலை வரை இழுத்து மூடிக் கொண்டாள்.

அடுத்த நொடி அதை இழுத்து பிடுங்கியவன் அவளையும் இழுக்க, காளியாக மாறியவள் வேகமாக எழுந்தமர்ந்தாள்.

“இப்பொழுது உங்களுக்கு என்ன தான் பிரச்சினை?” என்று அவனை உறுத்து விழித்தாள் சுஹா.

“ஆங்… அந்த சோபாவில் போய் படு!” என்று சுட்டிக் காட்டினான் கிருஷ்.

அவனை அமைதியாக பார்த்தவள், “எதற்கு?” என்று வினவினாள்.

“லூசா நீ… சினிமாவே பார்த்ததில்லையா? எத்தனை படத்தில் காண்பிப்பார்கள். ஒத்துப் போகாத கணவனும், மனைவியும் அப்படித்தான் தூங்க வேண்டும், மரியாதையாக எழுந்து போ!” என்றான் திமிராக.

அவனை அலட்சியமாக பார்த்தவள், “சினிமாவில் எப்படியோ அதைப்பற்றி எனக்குத் தெரியாது. ஆனால் சோபாவில் எல்லாம் என்னால் படுத்து தூங்க முடியாது, அப்புறம் தரையில் என்று சொல்ல வேண்டாம்… என்னால் அங்கும் படுத்து தூங்க முடியாது. பிறந்ததிலிருந்தே மெத்தையில் படுத்துறங்கி தான் எனக்கு பழக்கம், அதை மாற்றிக் கொள்ள முடியாது. ஏதோ ஒரு சில நாள் என்றால் அட்ஜெஸ்ட் செய்து கொள்ளலாம், காலம் முழுக்க என் தலையெழுத்து இங்கே தான் என்கிற பொழுது என்னால் கண்டிப்பாக அது முடியாது. இவ்வளவு பெரிய கட்டிலில் ஒரு மூலையில் படுத்துறங்குவது பற்றி எனக்கு எந்த பிரச்சினையுமில்லை. என்னுடன் தூங்குவதற்கு உங்களுக்கு சங்கடமாக இருந்தால், நீங்கள் வேண்டுமென்றால் போய் சோபாவில் தூங்குங்கள்… எனக்கு எந்த ஆட்சேபனையுமில்லை!” என்று மீண்டும் படுத்தாள்.

“என்னடி திமிரா… நான் எப்படி போய் சோபாவில் படுக்க முடியும்? எனக்கு கால் நீட்டவெல்லாம் அது பற்றாது!” என்றான் சிறுபிள்ளை போல்.

“ம்… அப்பொழுது தரையில் படுத்துக் கொள்ளுங்கள். எவ்வளவு தூரம் வேண்டுமென்றாலும் நீங்கள் நன்றாக காலை நீட்டிக் கொள்ளலாம்!” என்று நக்கலாக சிரித்தாள் சுஹா.

அதற்கு பதில் சொல்ல தெரியாது, “ஏய்…” என்று கிருஷ் வேகமாக கத்த, “ப்ச்… உஷ்… சும்மா இந்த மசாலா பட ஹீரோ மாதிரி கத்திக் கொண்டிருக்காதீர்கள். போய் எங்கேயோ ஒரு இடத்தில் படுத்து தூங்குங்கள், எனக்கு தூக்கம் வருகிறது நான் தூங்க வேண்டும்!” என்று திரும்பி விழிகளை மூடிக் கொண்டாள்.

செய்வதறியாமல் அவளையே சில நிமிடங்கள் உறுத்துப் பார்த்தவன், கை முஷ்டிகளை இறுக்கியபடி சினத்துடன் நடக்க ஆரம்பித்தான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *