*6*

 

“என்னண்ணா… என்னவாயிற்று? ஏன் கத்துகிறீர்கள்?” என்று குழப்பத்துடன் கேட்டாள் வைதேகி.

அவளுக்கு பதிலளிக்காமல் சுஹாவிடம் எகிறினான் சாய்கிருஷ்.

“யூ… இடியட்… எதற்குடி என் கையை அப்படி கிள்ளினாய்?”

சுவாஹனாவோ செய்வதறியாது திருதிருவென்று விழித்தபடி அவனை பரிதாபமாக பார்த்தாள்.

‘ஐயோ… என்ன இது? இவன் கிள்ளினாலும் சரி… நான் கிள்ளினாலும் சரி மாட்டுவதென்னவோ நான் தான். இப்பொழுது அனைவரும் என்னை தான் கேள்வி கேட்டு திட்டப் போகிறார்கள்!’

“ஏய் சுஹா… என்ன இது அண்ணாவின் கையை நீ கிள்ளினாயா?”

“ஆங்… அது…” என்று திணறியவள், சுற்றியிருந்தவர்கள் கேலியாக சிரிக்க, பதிலளிக்க இயலாமல் அவமானத்தில் முகம் சிவந்து தனக்கென ஒதுக்கப்பட்டிருந்த அறைக்கு ஓடி கதவைத் தாளிட்டாள்.

அவள் சென்ற திசையை எரிச்சலுடன் பார்த்தபடி கையை தேய்த்து விட்டு கொண்டு தன்னறைக்குச் சென்றான் கிருஷ்.

அப்பொழுது தான் மற்ற வேலைகளை முடித்து விட்டு வீட்டிற்குள் நுழைந்த சதா, சுஹா வேகமாக ஓடி தன் அறை கதவைச் சாற்றியதை கவனித்தார்.

‘என்னவாயிற்று… மறுபடியும் சண்டையா?’

கிருஷிடம் விவரம் கேட்கலாம் என்று அருகில் வருவதற்குள் அவனும் தன்னறைக்குச் சென்று விட்டான்.

அங்கிருந்தவர்களிடம் லேசான சலசலப்பு எழ, “என்னம்மா வைதேகி… அனைத்து சம்பிரதாயங்களும் முடிந்து விட்டதா? சாப்பாடு வந்து விட்டது பார், அனைவரையும் டைனிங் ஹால் அழைத்து போகச் சொல்லி யாரிடமாவது பொறுப்பை ஒப்படைத்து விட்டு போய் சுஹாவை அழைத்து வா, நான் கிருஷை அழைத்து வருகிறேன்!” என்று மாடி ஏறினார்.

கிருஷின் அறை கதவை தட்டி விட்டு திறந்தவர், அவனை காணாமல் நெற்றியை சுருக்கினார். வாஷ்ரூமில் அரவம் கேட்க அமைதியாக சோபாவில் அமர்ந்து அவனிடம் பேசுவதை குறித்து ஆலோசித்து கொண்டிருந்தார்.

வெளியே வந்தவன் அவரைப் பார்த்து முறுவலித்தபடி, “ஹாய் டாட்! எங்கே ரொம்ப நேரமாக உங்களை காணவில்லை?” என்றான்.

“திருமண கான்ட்ராக்டருக்கு கொஞ்சம் அமௌன்ட் செட்டில் பண்ண வேண்டியிருந்தது, அதனால் வெளியே போய் விட்டேன். உனக்கு ஏதாவது தேவை இருந்தால் நீ எப்படியும் போன் செய்வாய் என்று நினைத்தேன். ஆனால் நீ நன்றாக செட்டில் ஆகி விட்டாய் போலிருக்கிறது… சடங்குகள் எல்லாம் எப்படி இருந்தது?” என்று கேட்டார் சதா.

“ம்… பர்ஸ்ட் கொஞ்சம் எரிச்சலாக தான் இருந்தது, அப்புறம் நல்லா இன்ட்ரஸ்டிங்காக போயிற்று. வைதேகி இருந்ததால் பிழைத்தேன்… அவள் நன்றாக உதவி செய்தாள், அனைத்தையும் தெளிவுப்படுத்தினாள்!” என மலர்ந்த முகத்துடன் சொன்னவன், “கடைசியில் அந்த ராட்சசி தான் என் கையை நன்றாக கிள்ளி விட்டாள், பாருங்கள்!” என்று சிடுசிடுத்தபடி தன் கரத்தை அவரிடம் நீட்டினான்.

உள்ளுக்குள் தோன்றிய சிரிப்பை மறைத்து கொண்டு, “சரி… முகூர்த்த நேரத்தில் நீ என்ன செய்தாய் அவளை?” என அமைதியாக கேட்டார்.

அது… என்று தடுமாறியவன், “அவளை திருமணம் செய்து கொள்ள எனக்கு பிடிக்கவில்லை. என்னை ஜெயித்து விட்டோம் என்று அவளும் திமிராக சிரித்துக் கொண்டிருந்தாள். எனக்கு பயங்கர கோபம் வந்து விட்டது அதனால் கிள்ளி விட்டேன்!” என்றான் அலட்சியமாக.

“டேய்… நீ செய்த காரியத்தை வெளியில் யாராவது கேட்டால் சிரிப்பார்கள். சிறுவனாடா நீ? வயது இருபத்து ஏழு ஆகிறது!” எனவும், ப்ச்… என்று திரும்பியவன் மீண்டும் அதே வேகத்தில் அவரிடம் திரும்பினான்.

“ஆமாம்… அவளை பற்றி எல்லாம் தெரியும் என்று சொன்னீர்களே, அப்புறம் ஏன் அவளை எனக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்தீர்கள்? காலம் முழுக்க என்னிடம் நடந்து கொண்டதை நினைத்து அவள் வருந்துமாறு நான் செய்தது…” என்றவன் சட்டென்று நிறுத்தினான்.

“ம்… ஏன்டா நிறுத்தி விட்டாய்? மேலே சொல்லு… இவ்வளவு நேரம் அதிகாரமாக பேசினாய்!” என்றார் இகழ்ச்சியாக.

கிருஷ் பதிலின்றி அமைதி காக்க, “உனக்கே தெரிகிறது நீ செய்தது தவறு தான் என்று…” என அவர் முடிக்கும் முன் குறுக்கிட்டவன்,

“அப்பொழுது அவள் செய்தது மட்டும் சரியா?” என்றான் சினத்துடன்.

“இங்கே பார் கிருஷ்… அவரவர் கோட்பாடு அவரவர்க்கு உயர்வு. என்னை பொறுத்த வரை சுஹாவின் மேல் எந்த தவறும் இல்லை, நீ நடந்து கொண்டது தான் சரியில்லை. அவள் பக்கம் நியாயம் இருந்ததால் தான் இந்த திருமணத்திற்கு ஏற்பாடு செய்தேன். இருந்தும் உனக்கு ஒரு வாய்ப்பளிக்க விரும்பினேன், அவளைப் பற்றிய விவரத்தை உனக்கு தெரிவிக்க முயன்றேன் நீ அலட்சியப்படுத்தினாய்!” என்றார் சதா.

“ஆனால் இவள் தான் பெண் என்று நீங்கள் சொல்லவில்லையே?”

“ஏன் சொல்ல வேண்டும்? நீ சொன்னாயா எனக்கு ஒரு பெண்ணுடன் பிரச்சினையிருக்கிறது அவளை மட்டும் தேர்வு செய்து விடாதீர்கள் என்று!”

இறுகிய முகத்துடன் இருந்தவனிடம், “ஓகே பாஸ்ட் ஈஸ் பாஸ்ட்… நீ விவரம் தெரிந்து கொள்ள மறுக்கவும், சரி கடவுள் அவளை தான் உனக்கு மனைவியாக முடிவு செய்திருக்கிறார் என்று எண்ணினேன். அதுவும் இல்லாமல் நான் விசாரித்த வரையில் அவள் நல்ல பொறுப்பான புத்திசாலி பெண்ணாக தெரிந்தாள். சரி நம் வீட்டை நிர்வகிக்கவும், கம்பெனியை கவனித்து கொள்ளவும் சுஹா தான் பொருத்தமாக இருப்பாள் என்று தீர்மானித்து விட்டேன்!” என்று அவர் கூறவும், கிருஷ் திகைத்தான்.

“வாட்? அவள்… அவள் நம் கம்பெனிக்கு வரப் போகிறாளா?” என்று அதிர்ச்சியுடன் கேட்டான்.

அதுவரை சதாவுக்கு அந்த எண்ணமில்லை, இருளடைந்து கிடக்கும் தன் வீட்டை முதலில் அவள் ஒளிர செய்யட்டும் என்று தான் நினைத்திருந்தார். ஆனால் கிருஷின் அதிர்ச்சியை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள முடிவு செய்தவர், “ஆமாம்!” என்றார் ஒற்றை வார்த்தையில்.

“அப்பொழுது நான்?” என்றான் புருவம் சுருக்கி.

“அதை நீதான் முடிவு செய்ய வேண்டும். இல்லை… எப்பொழுதும் போல் ஊர் சுற்றிக் கொண்டிருப்பேன் என்றால் இரு. கம்பெனியை என் மருமகள் பார்த்து கொள்வாள்!” என்று அவனுக்கு நன்றாக கொம்பு சீவி விட்டார்.

“டாட்! இதை விட நீங்கள் என்னை அவமானப்படுத்தி விட முடியாது… அப்பொழுது நான் எதற்கும் லாயக்கில்லாதவன் முட்டாள் என்கிறீர்களா?” என்று சீறினான் கிருஷ்.

“கண்டிப்பாக இல்லை… என் மகன் மிகவும் புத்திசாலி என்பது எனக்கு நன்றாகத் தெரியும். ஆனால் ஆர்வமில்லாதவனை நான் எப்படி வற்புறுத்த முடியும்? அவள் விருப்பத்தை விசாரித்தேன், நீங்கள் என்ன சொன்னாலும் சரி கம்பெனிக்கு வருவதென்றாலும் வருகிறேன் எனவும் வரச் சொல்லி விட்டேன். இதில் உன்னை அவமானப்படுத்துவதாக நீ ஏன் எங்களை தவறாக நினைக்கிறாய்?” என்று கேட்டார்.

ஆக்ரோஷத்துடன் இதற்கும் அதற்கும் நடந்தவன், “சரி… நான் நாளையிலிருந்தே கம்பெனிக்கு வந்து என் பொறுப்பை ஏற்றுக் கொள்கிறேன். ஆனால் அவள் அங்கே வரக் கூடாது, அவளுடைய எல்லை வீடு வரை மட்டும் தான்!” என்றான் உத்தரவிடும் குரலில்.

அவன் அவ்வாறு கூறியது சதாவுக்கு தயக்கத்தை ஏற்படுத்தியது.

‘என்ன இது இவன் மனதில் ஆணாதிக்கம் தோன்றுகிறதே… இவனுக்கு எப்படி நான் அவ்வாறு உத்திரவாதம் கொடுப்பது? இல்லை… இவனுக்கு பெண்களை வெறுக்க தான் தெரியுமே தவிர அடிமைப்படுத்த அல்ல. சுஹாவின் மேல் உள்ள மூர்க்கத்தனமான கோபத்தில் இவ்வாறு நடந்து கொள்கிறான். பெண்களை கண்டாலே முகத்தை திருப்புகிறவன் வைதேகியை பாராட்டிப் பேசவில்லையா… அது போல் சுஹாவுடன் பழக பழக அவளையும் புரிந்து கொள்வான். இப்பொழுது அவள் மேல் உள்ள கோபத்தை தான் நாம் குறைக்க பார்க்க வேண்டும். இந்த நேரத்தில் இவனுக்கு நான் கூறும் அறிவுரை அவளுக்கு எதிராக தான் திரும்பும். அதனால் இப்பொழுதைக்கு சரி என்று சொல்லி விடுவோம். சுஹா பக்குவப்பட்ட பெண் சொன்னால் புரிந்து கொள்வாள்!’

“சரி நான் அவளிடம் கூறி விடுகிறேன் நீ மட்டும் கம்பெனிக்கு வா!” என்றார் அமைதியாக.

“ஓ… தேங்க் யூ டாட்!” என்று அவரை கட்டிக் கொண்டான்.

சுஹாவை வென்று விட்ட திருப்தி அவன் முகத்தில் தெரிந்தது. ஆனால் பாவம் இதற்கும் அவளுக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என்பது அவனுக்குத் தெரியவில்லை.

மெல்லிய பெருமூச்சுடன் அவனை விலக்கியவர், “சரி வா சாப்பிடப் போகலாம்!” என்று எழுந்தார்.

“அப்புறம் இன்னொன்று… தயவுசெய்து கிள்ளுகிறேன் அது இது என்று பிசிக்கலாக சுஹாவை தொந்திரவு செய்து விளையாடதே. மெட்சூர்டாக பிஹேவ் பண்ணு… இன்று அவள் எப்படி நடந்து கொண்டாள் என்று கவனித்தாயா? முகூர்த்த நேரத்திலும் உன்னை யாரிடமும் காட்டிக் கொடுக்கவில்லை, இப்பொழுதும் தன் தவறாக மௌனமாக விலகிச் சென்றாளே தவிர நீ செய்ததால் தான் திருப்பி செய்ததாக எதுவும் சொன்னாளா பார்… காரணம் என்ன? பிடிக்கிறதோ பிடிக்கவில்லையோ நீ அவள் கணவன்… உன் மான, அவமானம் இனி அவள் சம்பந்தப்பட்டது. அது போல் தான் நீயும் நடந்து கொள்ள வேண்டும். அவளை பிடிக்கவில்லை என்றாலும் அவள் உன் மனைவி. மற்றவர் முன் நீ என்றும் அவளை விட்டு கொடுக்க கூடாது, இதை நன்றாக நினைவில் வைத்து கொள்!” என்றார் அழுத்தமாக.

ஒரு கணம் மௌனம் சாதித்தவன் பின், “சரி!” என்றான்.

அங்கே சுஹாவோ வைதேகியிடம் நடந்ததையெல்லாம் கூறி புலம்பித் தள்ளிக் கொண்டிருந்தாள்.

“இப்பொழுது சொல்லடி… நான் செய்தது தவறா? அனைவர் முன்னும் அந்த மனுஷன் சட்டென்று அப்படி கேட்பார் என்று எனக்கெப்படி தெரியும்?” என்றாள் கோபமாக.

“இனி தெரிந்து கொள்… திருமணமாகி விட்டது இல்லை. அவரை பற்றி நீ தெரிந்து கொள்ள வேண்டாமா?”

“தேவையில்லை… நான் ஒன்றும் அவரை ஆசைப்பட்டு திருமணம் செய்து கொள்ளவில்லை வேறு வழியில்லாமல் தான் மணம் புரிந்தேன்!” என்றாள் கண்கள் கலங்க முகம் சிவந்து.

ஷ்… என்று சுஹாவை தோளோடு அணைத்து ஆறுதல்படுத்திய வைதேகி, “அப்படியில்லைடா… திருமணம் எந்த சூழ்நிலையில் வேண்டுமென்றாலும் நடந்திருக்கட்டும். ஆரம்பத்தில் வேண்டாம் என்று நாங்கள் சொன்னதை மறுத்து முடிவெடுத்தவள் நீதானே… அப்பொழுது எல்லாவற்றிற்கும் நீதான் தயாராக இருக்க வேண்டும். அதுவும் இல்லாமல் அந்த அண்ணாவை பார்த்தாலும் எல்லாவற்றையும் வேண்டுமென்றே செய்வது போல் தெரியவில்லை. எனக்கு தெரிந்து உன் விஷயத்திலும் அப்படித்தான் நடந்து கொண்டிருப்பார் என்று நினைக்கிறேன். குடும்ப அமைப்பில் வளராமல் தனியாக வளர்ந்தாலோ என்னவோ… ஒரு சில விஷயங்களில் இம்மெட்சூர்டாக தெரிகிறார்!” என்றாள் யோசனையோடு.

“அப்பொழுது கொஞ்சம் லூசு என்கிறாயா?” என பக்கென்று சிரித்தாள் சுஹா.

“ஏய்… உதைப்படுவாய் ராஸ்கல்!” என்று அவள் காதை திருகியவள், “நீதான் அனைவரிடமும் விவரமான பெண் என்று பெயர் எடுத்தவள். அதனால் இனி நீதான் அண்ணாவிடம் விட்டுக் கொடுத்து போய் கொண்டே அவரையும் உன் வழிக்கு கொண்டு வர பார்க்க வேண்டும்!” என்றாள்.

“ப்ச்… பார்க்கலாம் பார்க்கலாம், எதுவுமே உன் அண்ணா நடந்து கொள்ளும் விதத்தை பொறுத்து தான் முடிவு செய்வேன்!” என்று அசுவாரஸியமாக கூறினாள் சுஹா.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *