*5*​

 

வீட்டிற்கு வந்த மணமக்களை உள்ளே நுழைய விடாமல் வாசலின் குறுக்கே முகூர்த்த பாய் பிடித்து மறைத்தபடி வம்பிழுத்தனர் இளம்பெண்கள்.

ஆரத்தி எடுத்த பின், ‘எப்பொழுதுடா… இந்த கூட்டத்திலிருந்து தப்பித்து தன் அறைக்குச் செல்வோம் என்றிருந்தவனுக்கு…’, அவர்கள் உள்ளே விடாமல் தடுத்து நிறுத்தியது திகைப்பை உண்டாக்கியது.

“ம்… மாப்பிள்ளை சார்! எப்பொழுது என் பிள்ளைக்கு பெண் பெற்றுத் தர போகிறீர்கள்?” என்று கேலியாக வினவினாள் அவர்களுள் ஒருத்தி.

அவளின் பேச்சைக் கேட்டு உண்மையிலேயே அதிர்ந்து தான் போனான் சாய்கிருஷ்.

‘என்ன? இவள் பிள்ளைக்கு நான் பெண் பெற்றுத் தர வேண்டுமா? யார் இவள்… என்ன உளறி கொண்டிருக்கிறாள்?’ என்று எண்ணியவன் வேகமாக திரும்பி தன் தந்தையை உதவிக்கு தேட, கண்களுக்கு எட்டிய தூரம் வரை அவர் தென்படவேயில்லை.

‘ஐயோ… இந்த கும்பலிடம் என்னை தனியாக மாட்டிவிட்டு விட்டு இவர் எங்கே போனார்?’ என்று மனதினுள் புலம்பி தவித்தான்.

சுற்றி இருந்த யாரையும் தெரியாத நிலையில், தெரிந்த ஒரே முகம் அவன் மனைவி மட்டும் தான். செய்வதறியாது அவளிடம் பரிதாபமாக திரும்பி பார்த்தான் கிருஷ். அவளோ மறுபுறம் முகத்தை திருப்பி கொண்டிருந்தாள்.

‘ச்சை… இவர்களின் சம்பிரதாயங்களுக்கு வரைமுறையே இல்லையா, பிடிக்காத திருமணம் செய்து கொண்ட இருவரிடம் பிள்ளையை கேட்டு கொண்டிருக்கிறார்கள்!’ என்று பல்லை கடித்து கொண்டிருந்தாள் சுவாஹனா.

அவளிடமிருந்து எந்த உதவியும் கிடைக்கின்ற மாதிரி தெரியவில்லை என்றதும் கேள்வி கேட்டவர்களிடமே பதிலுக்காக சரணடைந்தான் கிருஷ்.

“சாரி… நீங்கள் என்ன கேட்க வருகிறீர்கள் என்றே எனக்கு புரியவில்லை. நான் ஏன் உங்கள் மகனுக்கு பெண் பெற்று தர வேண்டும்? பிள்ளை எப்பொழுது பிறக்கும் என யாருக்குத் தெரியும்? அதுவும் ஆண் பிள்ளையா… பெண் பிள்ளையா என்று எப்படி இப்பொழுதே உத்திரவாதம் தர முடியும்? இதற்கு எங்களை வேறு உள்ளே விடாமல் வாசலிலேயே நிற்க வைத்து கேள்வி கேட்டு கொண்டிருக்கிறீர்கள்!” என்று அவர்களிடம் சலிப்புடன் கேட்டான்.

“ஐயோ… என்ன இப்படி பேசுகிறார்?” என்று வாய் மேல் கை வைத்து தங்களுக்குள் மெல்லிய குரலில் பேசி கிண்டல் செய்து சிரித்தனர் அப்பெண்கள்.

சுஹா தன் காது மடல் சிவக்க முகத்தை திருப்பி இதழ் கடித்து புன்னகையை அடக்கி கொண்டிருந்தாள்.

“ஏய்… சும்மா இருங்கள் அவருக்கு தெரியவில்லை என்று தானே கேட்கிறார்!” என்று அவர்களை அதட்டினாள் ஒருவள்.

“ஆமாம் ஆமாம்… மனைவி காலில் மெட்டி போடவே ஆயிரம் முறை யோசித்தவராயிற்றே…” என பக்கென்று சிரித்தாள் ஒருத்தி.

கிருஷின் பொறுமை காற்றில் பறந்து கொண்டிருக்க, “சாரி அண்ணா… எதுவும் தவறாக எடுத்து கொள்ளாதீர்கள். திருமண வீடுகளில் இப்படி கேலி, கிண்டல் சகஜம். அப்புறம் என் பெயர் வைதேகி, நான் சுஹாவின் மாமா பெண். இப்பொழுது நாங்கள் செய்வதும் ஒரு சடங்கு தான், அதாவது மாப்பிள்ளைக்கு சகோதரி முறையில் இருப்பவர்கள் திருமணம் முடிந்து வீடு வரும் மணமக்களை உள்ளே விடாமல் வழி மறித்து குழந்தைச் செல்வத்தை கேட்போம். நீங்கள் சரி தருகிறோம் என்று சொன்னால் தான் உள்ளே அனுமதிப்போம். உங்களுக்கு சகோதரி யாரும் இல்லாததால் அவர்களுக்கு பதில் அம்முறையில் இருக்கின்ற நாங்கள் கேட்கின்றோம்!” என்று புன்னகையுடன் விளக்கினாள்.

“ஓ காட்! இதில் எல்லாம் கூடவா சடங்கு இருக்கிறது?” என்று வியந்தவன், “ஆனால் இது என்ன வாக்கு கொடுப்பது போலவா?” என்று சந்தேகமாக கேட்டான்.

“ஹஹா… பயப்படாதீர்கள் பயப்படாதீர்கள்… உங்கள் பெண்ணை ஒன்றும் நாங்கள் தூக்கி கொண்டு ஓடி விட மாட்டோம்!” என்றாள் அவர்களுள் ஒருத்தி குறும்பாக.

அவர்களின் கேலிப் பேச்சில் அவன் மனமும் இளக, “உங்களை நம்பி சொல்வதற்கே பயமாக இருக்கிறதே… என் பெண் பிறந்த உடனேயே தூக்கி கொண்டு ஓடி விடுவீர்கள் என்று. ஓகே எனிவேஸ்… இதற்கு மேல் என்னால் வாசலில் நின்று கொண்டிருக்க முடியாது. இப்பொழுதே சொல்லி விட்டேன் இது வாக்கு அல்ல சரியா? பெண்ணைப் பெற்றுத் தருகிறேன்!” என்று பதிலளித்தான் அவர்களிடம்.

“ஆங்… இப்படி பட்டென்று நீங்கள் மட்டும் சொன்னால் எப்படி? சுஹாவிடம் கேட்டு சொல்லுங்கள் அவளில்லாமல் எப்படி உங்களுக்கு பிள்ளை வரும்? ஷ்… ஆஆ… ஏன்கா இப்படி கிள்ளுகிறாய்?” என்று கையை தேய்த்தாள் அவனை கேலி செய்தவள்.

“வாயை வைத்துக் கொண்டு ஒழுங்காக பேசு. உன் துடுக்கு தனத்தை இங்கே காண்பிக்க கூடாது அம்மாவுக்கு தெரிந்தால் உதைப்படுவாய்!” என்று அவளை எச்சரித்த வைதேகி, “அண்ணா! அவர்களிடம் சரியென்று சொல்லி விடலாமா என்று நீங்கள் அவளிடம் சம்மதம் கேட்டு தான் சொல்ல வேண்டும்!” என்றாள்.

“ஓ… இது வேறேயா… இவள் என்னிடம் வீம்புக்கு அலைபவள் ஆயிற்றே… இவள் சம்மதிக்க மாட்டேன் என்று சொன்னால் நான் என்ன செய்வது?” என்று போலியாக வருத்தப்பட்டான் கிருஷ்.

அவன் பேச்சைக் கேட்டு அங்கிருந்தவர்கள் கொல்லென்று சிரிக்க, சுஹாவோ ஐயோ… இப்படி மானத்தை வாங்குகின்றானே என்று உள்ளுக்குள் தவித்து கொண்டிருந்தாள்.

“அது எப்படி சம்மதிக்காமல் போவாள்… கழுத்தில் தாலி மட்டும் கட்டிக்கொள்ள தெரிகிறது இல்லை? எதுவும் வம்பு செய்தாள் என்றால் என்னிடம் சொல்லுங்கள்… ஒரு கை பார்த்து விடலாம்!” என்று அவள் கெத்தாக கூறவும், கிருஷ் அகமகிழ்ந்து போனான்.

“ஹை… அப்பொழுது நீ என் டீம், பிரெண்ட்ஸ்…?” என்று சந்தோஷ் சுப்பிரமணியம் பாணியில் அவன் வைதேகியிடம் கை நீட்ட, நான் நீயென்று போட்டிக் கொண்டு அனைவரும் அவனிடம் நண்பர்கள் ஆனார்கள்.

“பார்… எத்தனை பேரை நீ படுத்தியிருந்தால் அனைவரும் உன் மேல் காண்டாகி என்னிடம் நட்பு பாராட்டுவார்கள்!” என்றான் சுஹாவிடம் நக்கலாக.

அவள் அனைவரையும் எரித்து விடுவதை போல் பார்க்க, “சரி சரி உள்ளிருந்து அத்தை சத்தம் போடுவதற்குள் நாம் உள்ளே போகலாம், ம்… சீக்கிரம்!” என்று அவர்களை விரட்டினாள் வைதேகி.

அவள் குறிப்பிட்டது போலவே சுஹாவிடம் கேட்டு சம்மதம் வாங்கி தன் வீட்டினுள் நுழைந்தான் கிருஷ்.

“சரி நான் என் அறைக்கு போகிறேன்!” என்று அவன் மாலையை கழட்ட போக, அவனை வேகமாக தடுத்தாள் வைதேகி.

“அண்ணா… அண்ணா ப்ளீஸ்… இன்றைக்கு ஒரு நாள் கொஞ்சம் அட்ஜஸ்ட் செய்து இந்த முறைகளையெல்லாம் எங்களுக்காக செய்து விடுங்களேன். ப்ளீஸ்… இதெல்லாம் லைஃபில் ஒரு முறை தானே செய்யப் போகிறீர்கள்!” என்றதும் அவனுக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை.

எல்லாமே கிருஷுக்கு நியூஸென்ஸாக தெரிந்தாலும், ஒரு பக்கம் அவன் மனது அதை ரசிக்கவும் செய்தது. இது போன்ற சடங்குகள், விளையாட்டுகள் எதுவும் அவன் கேள்விப்பட்டதுமில்லை பார்த்ததுமில்லை.

அதுவுமில்லாமல் வாய்க்கு வாய் தன்னை அண்ணாவென்று அழைத்தபடி கெஞ்சும் வைதேகியை அவனுக்கு மிகவும் பிடித்து போய் விட்டது.

“சரி உனக்காக ஒத்துக் கொள்கிறேன், ஆனால் எல்லாம் முடியும் வரை நீ என் அருகிலேயே இருக்க வேண்டும். மற்றவர்கள் எல்லாம் மிகவும் கேலி செய்கிறார்கள்!” என்றான் முகத்தை தொங்கப் போட்டுக் கொண்டு.

“ஓகே டன்! மற்றவர்களும் வேண்டுமென்றே அப்படி செய்யவில்லை அண்ணா, விளையாட்டுக்கு தான் செய்கிறார்கள்!” என்று அவனுக்கு புரிய வைக்க முயன்றாள்.

“பட்… இருந்தாலும் பழக்கமில்லாததால் கஷ்டமாக இருக்கிறது!” என அவன் கூறவும், சரி அவர்களிடம் நான் பேசிக் கொள்கிறேன் என்று அவள் கூற உடனே முகம் மலர்ந்தான்.

உள்ளுக்குள்ளே அவனுக்கே வியப்பாக தான் இருந்தது, நானா இப்படி சுற்றி பெண்கள் புடை சூழ இயல்பாக பேசிக் கொண்டிருக்கிறேன் என்று.

பூஜை அறையில் சுஹா விளக்கேற்றி கடவுளை வணங்கி விட்டு பாலை காய்ச்ச கிட்சனுக்கு செல்ல, மணமக்கள் இருவரின் மாலைகளையும் வாங்கி அறைக் கதவின் நிலையில் மாட்டினாள் வைதேகி.

ஃஉப்… அப்பா என்று சோபாவில் ரிலாக்ஸாக அமர்ந்தான் கிருஷ்.

பழக்கமில்லாததை செய்ய அவன் சிரமப்படுவதை கண்டு வைதேகிக்கும் பாவமாக தான் இருந்தது.

சுஹா பாலை காய்ச்சியதும், மணமக்கள் பால், பழம் சாப்பிட வேண்டும் என்று அவளை அழைத்து வந்து கிருஷின் அருகில் அமர வைத்தனர்.

அவன் அவளை ஒரு மாதிரி பார்த்து விட்டு திரும்பி கொள்ள, எப்பொழுதுடா இதெல்லாம் முடியும் என்று சலித்தபடி அமர்ந்திருந்தாள் அவள்.

பால், பழம் சாப்பிட வைப்பதற்குள் அனைவரையும் படுத்தி எடுத்து விட்டான் கிருஷ்.

பால் சாப்பிடும் பழக்கம் கிடையாது, சாப்பிட மாட்டேன் என்று மறுத்து விட்டவனை சமாதானப்படுத்தி காபி என்ற நிலைக்கு கொண்டு வந்தால், வாழைப்பழம் எல்லா வெரைட்டியையும் சாப்பிட மாட்டேன் என்னென்ன பழம் இருக்கிறது என்று ஆராய்ந்து தேர்ந்தெடுத்தான். அவன் செய்யும் கூத்து அனைத்தையும் கைகளில் தலையை தாங்கியபடி பார்த்து கொண்டிருந்தாள் சுஹா.

அருகிலிருந்து கிருஷின் செயல்கள் ஒவ்வொன்றையும் பார்க்க பார்க்க சுஹாவின் அம்மா சுகந்திக்கு அவனை மிகவும் பிடித்துப் போனது.

வெளியில் பார்க்க தான் இப்படி விறைப்பாக இருப்பான் போலிருக்கிறது… மற்றபடி உள்ளுக்குள் குழந்தையாக இருக்கின்றான். எப்படியோ தன் ஒரே மகளின் வாழ்வு இந்த வீட்டில் நல்லபடியாக மலரும் என்ற நம்பிக்கையும் வந்தது.

“அவ்வளவு தானே இனி எதுவும் இல்லையே?” என்று வைதேகியிடம் சோர்வாக கேட்டான் கிருஷ்.

“நிறைய இருக்கிறது அண்ணா, ஆனால் பரவாயில்லை நீங்கள் ரொம்ப டயர்டாக தெரிகிறீர்கள். இது ஒன்றை மட்டும் முடித்து விட்டு நீங்கள் சாப்பிட்டு ஓய்வெடுங்கள் வேறெதுவும் வேண்டாம்!” என்றாள் கரிசனத்துடன்.

“சரி இப்பொழுது என்ன?” என்று நிமிர்ந்து அமர்ந்தான்.

“மாலா… அந்த குடத்தை எடுத்து வா!” என்றவள் தன் கைகளிலிருந்த பொருட்களை கிருஷிடம் காண்பித்து விளக்கினாள்.

“அண்ணா! இதோ பாருங்கள், இது பாலாடை, வீட்டுச்சாவி அப்புறம் மோதிரம். இந்த மூன்றையும் நான் தண்ணீர் குடத்தினுள் போட்டு விடுவேன். இதில் நீங்கள் எதை எடுக்கிறீர்களோ அதைப் பொறுத்து வீட்டு நிர்வாகம், குழந்தை போன்ற விஷயங்கள் யார் கைகளுக்கு வரும் என்று நாங்கள் சும்மா ஆருடம் சொல்வோம்!” என்று அம்மூன்றையும் குடத்தினுள் போட்டாள்.

“ம்… ரெடியா?” என்று இருவரையும் கேட்டாள்.

‘எல்லாம் ரெடி… ரெடி இதற்காக தானே ரொம்ப நேரமாக காத்திருக்கிறேன்!’ என்று உள்ளுக்குள் கறுவினாள் சுஹா.

“ரெடி ஜுட்!” என்றதும் இருவரும் வேகமாக குடத்தினுள் கையை விட்டனர்.

அடுத்த நொடி, ஆ… என்று அலறினான் கிருஷ்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *