*4*

 

தன்னருகில் மணப்பெண்ணாக சுவாஹனாவை சற்றும் எதிர்பார்த்திராத சாய்கிருஷ் முற்றிலும் அதிர்ந்தான்.

‘இவள் எப்படி இங்கே? அப்பாவின் கண்களில் எப்படி இவள் விழுந்தாள்?அவர் இவளை எப்படி எனக்கு மணமகளாக தேர்ந்தெடுத்தார்?’ என்று ஆயிரம் எப்படிகள் அவன் மனதில் உதயமாகி கொண்டிருக்க, சுஹா அவன் நிலையை கண்டு நமட்டுச் சிரிப்பு சிரித்தாள்.

தன்னைச் சீண்டிய அவளின் சிரிப்பை கண்டதும் அவன் மனதில் ஆக்ரோஷம் எழுந்தது. அன்று அவளிடம் தான் விட்ட சவால் நினைவுக்கு வந்தது.

தன் சவாலில் தன்னை தோற்கடித்தது மட்டும் அல்லாமல், தன்னை ஆள்கின்ற உரிமையான பதவியையும் பிடித்து விட்டாளே… என்று தவித்துப் போனான் கிருஷ்.

‘இந்த கல்யாணத்தை நிறுத்தவே முடியாதா?’ என்று அவன் வேக வேகமாக யோசிக்க, உள்ளிருக்கும் குரல் உரக்க நகைத்து அவனை கேலி செய்தது.

‘எப்படிடா முடியும்? நீதானே உன் அப்பாவிடம் அவ்வளவு உறுதியாக கூறினாய், நீங்கள் பார்க்கின்ற பெண்ணையே திருமணம் செய்து கொள்கிறேன் என்று…’

‘எனக்கெப்படி தெரியும்… அவர் இவளை எனக்கு மனைவியாக முடிவு செய்வார் என்று? ஒருவேளை எல்லாம் திட்டமிட்ட சதியாக இருக்குமோ? சீச்சீய்… அப்படியெல்லாம் இருக்காது, அப்பாவுக்கு இவளைப் பற்றி எதுவும் தெரிந்திருக்காது. அப்படி தெரிந்திருந்தால் என்னிடம் கேட்டு இருப்பாரே… இது யதேச்சையாக தான் நடந்திருக்கும். நான் குறிப்பிட்ட மாதிரி பெண்ணைத் தேடும் பொழுது இவளை கண்டு முடிவு செய்திருப்பார். இவளும் என்னைத் தோற்கடிக்க கிடைத்தது வாய்ப்பு என்று மகிழ்ச்சியாக சம்மதித்து இருப்பாள்!’ என்று கடுப்பானான்.

‘ச்சே… அப்பா பெண்ணை பற்றிக் கேட்கும் பொழுது, எனக்கு இவள் முகமா மனதில் தோன்ற வேண்டும்? என் விதி எங்கெங்கே எல்லாம் விளையாடியிருக்கிறது… அப்பா அத்தனை தடவை சொன்னாரே… பெண்ணின் போட்டாவாவது பார் என்று எனக்கு எங்கே போயிற்று புத்தி? தேவையில்லை என்று அலட்சியப்படுத்தி என் வாழ்வையே கேள்விக்குறியாக்கி கொண்டேனே!’ என்று நொந்து போனான்.

‘இப்பொழுது என்ன செய்வது? இவள் கழுத்தில் தாலியை கட்டுவதை தவிர வேறு வழியே இல்லையா எனக்கு?’ என்று பரிதவித்தான் கிருஷ்.

எரிச்சலுடன் அவளை ஓரவிழியில் நோக்க, ஒட்டி வைத்ததுப் போல் இருந்த அவளின் இதழோர சீண்டல் முறுவல் அவனை மேலும் கொந்தளிப்புக்கு ஆளாக்கியது.

‘இவள் கழுத்தில் தாலியை கட்டுகிறேனோ இல்லையோ… முதலில் இவளின் திமிர் பிடித்த வெற்றிச் சிரிப்பை ஒழிக்க வேண்டும்!’ என்று ஆத்திரத்துடன் முடிவு செய்தவனுக்கு சட்டென்று ஒன்று தோன்றியது.

மாலையை சரி செய்பவன் போல நிமிர்ந்து அமர்ந்தவன், அதை கீழே இழுத்து விடும் பொழுது மின்னல் வேகத்தில் அருகில் அமர்ந்திருந்தவளின் கையில் நறுக்கென்று கிள்ளி விட்டு தன் கையை நகர்த்திக் கொண்டான்.

தன்னை மறந்து தாங்க முடியாத வலியில், “ஆ…” என்று சன்னமாக கத்தி விட்டாள் சுஹா.

மணப்பந்தலின் அருகிலிருந்தவர்கள், மாற்றி மாற்றி என்னம்மா… என்னம்மாவென்று பதட்டத்துடன் விசாரிக்க துவங்க பதில் சொல்ல இயலாமல் தடுமாறிப் போனாள் அவள்.

“ஒன்றுமில்லை… ரொம்ப நேரமாக கால் மடக்கி அமர்ந்திருப்பது வலிக்கிறது!” என்று சமாளித்தாள்.

அதைக்கண்டு கிருஷின் முகத்தில் வெற்றிப் புன்னகைத் தோன்றியது.

‘ச்சே… சரியான லூசாக இருப்பான் போலிருக்கிறது, இப்படி கிள்ளி விட்டானே அம்மா… இன்னும் வலிக்கிறது. சிறுப்பிள்ளையா இவன்? கையை கிள்ளிவிட்டு என்னவோ திருமணத்தையே நிறுத்திவிட்டது போல் ஈயென்று பெருமிதமாக பல்லைக் காண்பித்து கொண்டிருக்கின்றான்… இடியட்!’ என்று கண்டபடி அவனை மனதினுள் அர்ச்சித்தாள் சுஹா.

உண்மையில் சுஹா திட்டியதற்கேற்ப தான் கிருஷ் மலர்ந்த முகத்துடன் அமர்ந்திருந்தான்.

சுஹாவின் கையை அவன் கிள்ளியதிலிருந்து அவள் முகத்திலிருந்த சிரிப்பு மறைந்து முதலில் வலியில் சுணங்கிய முகமும், பின் அனைவரின் கேள்விகளுக்கும் பதில் சொல்ல முடியாத தடுமாற்றமும், இறுதியில் அவள் முகத்தில் நிரந்தரமாக வந்து ஒட்டிக் கொண்ட எரிச்சலும் அவனுள் எல்லையில்லா உவகையைத் தோற்றுவித்தது.

“பைத்தியமா பிடித்திருக்கிறது உங்களுக்கு… சின்ன பிள்ளை மாதிரி பிடிக்காதவர்களை கிள்ளி விட்டு சந்தோசப்பட்டுக் கொள்கிறீர்கள்?” என்று அடிக் குரலில் சீறினாள் சுஹா.

“சிறுப்பிள்ளைத்தனமோ என்னவோ… அதைப்பற்றி எனக்கு கவலையில்லை. ஆனால் உன் முகத்தில் உள்ள சிரிப்பை அழித்து உன்னை எரிச்சலடைய வைத்து விட்டேன் அது போதும் எனக்கு. உன் அமைதியையும், நிம்மதியையும் கெடுக்க எதை வேண்டுமென்றாலும் செய்வேன் நான். திட்டம் போட்டா என் வாழ்வில் நுழைகிறாய்? இதற்காக உன்னை நான் வருந்த வைக்காமல் விட மாட்டேன்!” என்று அதே அடிக்குரலில் எச்சரித்தான் கிருஷ்.

முதலிலிருந்தே நடப்பதையெல்லாம் கவனித்து கொண்டு தான் இருந்தார் சதா. சுஹாவை பார்த்து அவன் அதிர்ந்ததிலிருந்து, அவள் கையை இவன் கிள்ளியது வரை.

எப்படியோ திருமணத்தை நிறுத்த முயலவில்லையே… அதுவரை நிம்மதி. மற்றபடி அவர்களுக்குள் என்னவோ செய்து கொள்ளட்டும் என்றிருந்தவர், இருவரும் ஒருவரையொருவர் முறைத்தபடி தங்களுக்குள் சீரியஸாக விவாதிக்க ஆரம்பிக்கவும் குறுக்கே புகுந்தார்.

மெதுவாக பேசுவது போல் குனிந்தவர், இருவரையும் அதட்டினார்.

“இருவரும் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்? மணப்பந்தலில் அமர்ந்து இருக்கின்றோம் என்ற கவனம் கொஞ்சமாவது இருக்கிறதா… மற்றவர் கவனத்தை ஈர்ப்பது போல் இப்படி தான் சண்டையிடுவதா? இடம், பொருள் தெரிய வேண்டாம்… ம்? சண்டையிடுவதற்கு தான் திருமணத்திற்கு பின் காலம் முழுக்க நேரம் காத்து இருக்கிறதே, பிறகு என்ன அமைதியாக இருங்கள்!” என்றார் மெல்லிய குரலில்.

“ஆனால்… அப்பா… இவர் என் கையை கிள்ளிவிட்டார்!” என்று கிருஷை பற்றி புகார் வாசித்தாள் சுஹா.

“எல்லாம் கவனித்துக் கொண்டு தானிருந்தேன் வீட்டில் பேசிக் கொள்ளலாம்!”

‘அப்பாவா?’ என அதிர்ந்த கிருஷ், “டாட்… இவள் யார் தெரியுமா?” என்று வேகமாக ஆரம்பிக்க,

“எல்லாம் எனக்குத் தெரியும் தெரியும்… அனைத்து விவரங்களையும் வீட்டில் பேசிக் கொள்ளலாம். முதலில் சடங்குகளை கவனமாக செய்யுங்கள்!” என்று விட்டு நிமிர்ந்தார்.

‘ஷ்… அப்பா… இப்பவே இப்படி சண்டையிட்டு கொள்கிறதுங்களே… இனி வீட்டில் என் நிலைமை? எந்நேரமும் ஆலமரத்துக்கடியில் உட்கார வைத்து விடுவார்கள் போலிருக்கிறது!’ என்று பெருமூச்சு விட்டார் சதா.

இங்கே கிருஷ்ஷோ, ‘என்ன எல்லாம் தெரியுமா? பிறகு ஏன் இவளை எனக்கு மணமகளாக முடிவு செய்தார்?’ என்று திகைக்க, அவனை மேலே யோசிக்க விடாமல் ஐயர் அடுத்தடுத்து வேலைகள் கொடுக்க ஆரம்பித்து விட்டார்.

கையை இப்படி வைங்கோ, நான் சொல்கின்ற மந்திரத்தை சொல்லுங்கோ என்று அவர் ஒருபுறம் அவனை படுத்தி எடுக்க, மணமக்கள் இருவரும் கடுப்பின் உச்சியில் இருந்தனர்.

அதையெல்லாம் மணப்பந்தலின் மற்றொரு புறம் நின்று கவனித்து கொண்டிருந்தனர் சுஹாவின் குடும்பத்தினர்.

ஆரம்பத்தில் அவர்களுக்கு இத்திருமணத்தில் சுத்தமாக விருப்பமே இல்லை. சுஹா பிடிவாதமாக நிற்கவும், சதாவும் தன் நிலையை விளக்கி வற்புறுத்தவும் தான் வேறு வழியில்லாமல் அரை மனதாக சம்மதித்திருந்தனர்.

அனைவரின் அமோக ஆசிர்வாதங்களோடு சுஹாவின் கழுத்தில் மூன்று முடிச்சிட்டான் கிருஷ்.

பெண்ணின் கையைப் பற்றிக் கொண்டு அக்னியைச் சுற்றி வலம் வர வேண்டும் என்றதும் வேண்டா வெறுப்பாக அவள் கையை பிடித்தான். அவனுடைய கரம் பட்டதும் அவள் முகம் சுளிக்க கண்டவன் மனதில் அருமையான திட்டம் ஒன்று தோன்றி முறுவலை மலரச் செய்தது.

அக்னியைச் சுற்றி வலம் வரும்பொழுது வேண்டுமென்றே அவள் கரத்தை அழுந்தப் பற்றினான்.

சுற்றி முடித்ததும் எரிச்சலுடன் தன் கரத்தை மெல்ல அவன் பிடியிலிருந்து அவள் உருவ முயல, அவனோ அதற்கு இடம் கொடாமல் தன் பிடியை மேலும் இறுக்கினான்.

சுஹாவின் முகத்தில் எள்ளும், கொள்ளும் வெடிக்க கிருஷின் முகத்தில் பரம திருப்தி உண்டாயிற்று.

“ம்… இங்கே வாங்கோ…” என்று ஐயர் நின்ற இடத்தை பார்த்ததுமே, அத்தனை நேரம் இருந்த கடுப்பு மாறி சுஹாவின் இதழ்களில் வெற்றிப் புன்னகை மலர்ந்து அவனை அலட்சியமாக பார்க்க வைத்தது.

அவளுடன் அவர் அழைத்த இடத்திற்கு விரைந்த கிருஷிற்கு அவளின் மர்ம சிரிப்பிற்கான காரணம் புரியவில்லை. அவளுடைய கை இன்னமும் என் பிடியில் தானே இருக்கிறது பின் எப்படி சிரிக்கிறாள் என்று குழம்பினான்.

சுஹாவிடம், “உங்கள் வலது காலை எடுத்து இந்த அம்மியில் வைங்கோம்மா…” என்றவர் கிருஷிடம் திரும்பி, “இந்த மெட்டியை அவா கால் விரலில் போட்டு விடுங்கோ…” எனவும் கிருஷ் பலமாக அதிர்ந்தான்.

“என்ன? நான்… நான் அவள் காலை தொட வேண்டுமா… அதெல்லாம் என்னால் முடியாது!” என்று அவன் திட்டவட்டமாக ஐயரிடம் மறுக்க, சதா அருகில் ஓடி வந்தார்.

“தவறாக எடுத்து கொள்ளாதீர்கள்… இவன் எந்த ஃபங்கஷனையும் அட்டென்ட் செய்ததில்லை, அவனுக்கு நம் சம்பிரதாய முறைகளெல்லாம் எதுவும் தெரியாது. நான் சொல்லி புரிய வைக்கின்றேன்!” என்றவர் அவன் காதை கடித்தார்.

“கிருஷ்… எல்லோர் முன்னாடியும் சீன் கிரியேட் பண்ணாதே, சீக்கிரமாக சுஹாவின் காலில் மெட்டியை போட்டு விடு!” என்றார் அமைதியாக.

“நோ டாட்! சான்ஸ்லெஸ்… அவள் காலையெல்லாம் நான் தொட மாட்டேன். இப்படி செய்வதை எல்லாம் நான் சினிமாக்களில் பார்த்திருக்கிறேன் எனக்கு தெரியும். ஆனால் இவளுக்கு நான் போட்டு விட மாட்டேன்!” என்று தீர்மானமாக கூறினான்.

“டேய்… படுத்தாதேடா என்னை. இது நம் சம்பிரதாயம்டா, பெண் காலில் பையன் மெட்டி போட்டு விடுவது. நீ மட்டும் என்று இல்லை… அனைத்து ஆண்களுமே திருமணத்தன்று பெண் காலை பிடித்து தான்டா ஆக வேண்டும். ப்ளீஸ்டா… அப்பா பேச்சை கேட்கிறேன் என்று சொல்லி விட்டு இப்படி கெஞ்ச வைக்கிறாயேடா!” என்று அவர் புலம்ப, வேறு வழியின்றி எரிச்சலுடன் சம்மதித்தான் கிருஷ்.

சுஹாவின் கால் விரலில் மெட்டியை அணிவித்தவன், வேண்டுமென்றே அவள் விரலில் அதை நன்றாக நெருக்கி விட்டான்.

இச்செயலை அவனிடம் எதிர்பார்த்திருந்தவள் பல்லைக் கடித்து வலியை பொறுத்து கொண்டாள்.

அனைத்து சம்பிரதாயங்களும் முடிந்து பெரியவர்களிடம் ஆசிர்வாதம் வாங்கினர் மணமக்கள்.

‘ஆண்டவா… இவர்களின் வாழ்க்கையை ஒன்றிணைத்த நீயே இவர்களின் மனதையும் சேர்த்து வையப்பா!’ என்று வேண்டியபடி ஆசிர்வதித்தார் சதா.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *