*3*

 

 

கிருஷ் கத்திய பிறகு சில நிமிடங்கள் இருவரிடமும் எந்த அசைவுமின்றி அமைதி நிலவியது.

தங்களின் உறுதியை விட்டுக்கொடுக்காமல் இருவரும் தங்கள் நிலையை நிலைநாட்ட முயன்றனர். கிருஷின் மனதில் அவரின் வார்த்தைகள் உண்டாக்கிய நடுக்கத்தால் இறுதியில் அவனே கீழிறங்கி வந்தான்.

“சரி… உங்கள் இஷ்டம், என்னவோ செய்யுங்கள்!” என்றான் உம்மென்று.

அப்பாடா… என்று உள்ளுக்குள் நிம்மதி பெருமூச்சு விட்டவர், “இங்கே வா!” என அவனை அருகில் அழைத்தார் சதா.

இறுக்கமான முகத்தோடு தன் அருகில் வந்து அமர்ந்தவனின் கரத்தை தன் கரங்களுக்குள் எடுத்துக் கொண்டவர், “அப்பாவை நம்புடா கண்ணா… நான் எதைச் செய்தாலும் உன் நன்மைக்காக தான் செய்வேன்!” என்றார் ஆத்மார்த்தமாக.

“ப்ச்…” என்றபடி திரும்பிக் கொண்டான் அவன்.

ஒரு சில நொடிகள் மீண்டும் அமைதி நிலவ, “சரி… டிராவல்ஸ்கு போன் செய்து டிரிப்பை கேன்சல் செய்து விடு!” என்றார் சதா.

“ஏன்?” என்றான் கிருஷ் திகைப்புடன்.

“பிறகு… இன்னும் ஒரு மாதத்திற்குள் பெண்ணெல்லாம் பார்த்து திருமணம் முடிவு செய்ய வேண்டாமா?” என கேட்டார்.

“அதற்கு நான் எதற்கு?” என்றான் புருவம் முடிச்சிட.

“என்னடா உளறுகிறாய்? நீதானே பெண்ணை தேர்வு செய்ய வேண்டும்!”

“உஃப்…” என்று ஊதி டென்ஷனை குறைத்தவன், “இங்கே பாருங்கள்… பெண்களைப் பற்றி எனக்கு எதுவும் தெரியாது என்பது உங்களுக்கே நன்றாக தெரியும். பின் நான் எப்படி பெண்ணைத் தேர்ந்தெடுக்க முடியும்? எல்லாம் நீங்களே பார்த்து முடிவு செய்து கொள்ளுங்கள் நான் கிளம்புகிறேன். இப்பொழுதே அவளுக்காக என் சந்தோசங்களை எல்லாம் விட்டுக் கொடுக்க சொல்கிறீர்களா? முடியாது… என் திட்டப்படி ஒரு மாதம் டூர் முடித்து விட்டு தான் வருவேன். அதன்பிறகு வருமாறு திருமண தேதியை முடிவு செய்யுங்கள். ஆங்… அப்புறம் என்னிடம் எதுவும் முரண்டு பண்ணாமல் சொல்பேச்சு கேட்டு அடங்கி இருப்பவளாக பாருங்கள். சும்மா… எதற்கும் என்னிடம் நைநை என்று வளவளக்க கூடாது, என்னிடமிருந்து விலகி தான் இருக்க வேண்டும் என்று தெளிவாக சொல்லி விடுங்கள். ம்… வேற… ஓகே, இப்பொழுதைக்கு அவ்வளவு தான். வேறு எதுவும் தோன்றினால் போனில் சொல்கிறேன் அதற்கேற்றபடி பெண்ணைத் தேர்ந்தெடுங்கள்!” என்றான் அலட்சியமாக.

‘எனக்கும் அது தான்டா கண்ணா வேண்டும்… நீ முதலில் இங்கிருந்து கிளம்ப வேண்டும். அப்பொழுது தான் என் திட்டம் வெற்றி பெறும். இந்த சால்ஜாப்பு எல்லாம் நாளை நீ என்னை குறை சொல்ல வாய்ப்பு தர கூடாது என்பதற்காக தான். ஏன் இவளை திருமணம் செய்து வைத்தீர்கள் என்று கேட்டாயானால்… பட்டென்று சொல்லி விடுவேன் இல்லை நீதானே இதற்கு காரணம் என்று. சரி… அவன் ஆழ் மனதில் அவனையுமறியாமல் ஏதாவது புதைந்துக் கிடக்கிறதா என்று டெஸ்ட் பண்ணி பார்க்கலாம்!’

“சரி குணத்தை விடு, பெண் பார்க்க எப்படி இருக்க வேண்டுமென்று எதிர்ப்பார்க்கிறாய்?” என்று மெல்ல நூல் விட்டு பார்த்தார் சதா.

“ப்ச்… அப்படி எல்லாம் எதுவுமில்லை பார்க்கின்ற மாதிரி இருந்தால் சரி!” என்று தன் மொபைலை கையில் எடுத்தான்.

“அதை தான் எப்படி எதிர்பார்க்கிறாய்?”

“ஓ காட்! ஏன் டாட் இப்படி படுத்தி எடுக்கிறீர்கள்?”

“ஆங் பின்னே… ஏன் இப்படிப்பட்ட பெண்ணை தேர்ந்தெடுத்தீர்கள் என்று நாளை நீ என்னை குறை சொல்லக் கூடாது இல்லை?”

“இங்கே பாருங்கள்… நீங்கள் சொல்கின்ற பெண்ணையே நான் திருமணம் செய்துக் கொள்கிறேன். நாளை அவளுடன் எனக்கு எந்த பிரச்சினை வந்தாலும் அதற்கு உங்களை பொறுப்பாளியாக்க மாட்டேன் போதுமா?” என்றவன் புருவம் சுருக்கினான்.

“சரி… இப்பொழுது என்ன பெண்ணைப் பற்றி சொல்ல வேண்டும் அவ்வளவு தானே?” என்று ஒரு நொடி கண்களை மூடினான் கிருஷ்.

மூடிய விழிகளுக்குள் அவளின் முகம் நிழலாடியது, பட்டென்று கண்களைத் திறந்தவன் யோசனையோடு கூற ஆரம்பித்தான்.

“ம்… நல்ல ஹோம்லி லுக்காக இருக்க வேண்டும். உயரம் என் தோள் அளவு இருக்க வேண்டும், தலைமுடி நன்றாக அடர்ந்து நீளமாக இருக்க வேண்டும். ம்… அப்புறம்… ஆங்… சிரித்தால் கன்னத்தில் குழி விழ வேண்டும். அப்புறம்… அவள்… அவள்…” என்று அவன் அடுத்து என்ன சொல்வதென்று புரியாமல் தடுமாற,

“டேய்… அப்பா சாமி, போதுமடா. எதுவும் இல்லை இல்லை என்று சொல்லி விட்டு இத்தனை வேண்டும் கேட்கின்றாய்… இதுவரை நீ போட்ட லிஸ்டுக்கே நான் பெண்ணைத் தேடி அலைய வேண்டும், இதற்கு மேல் எதுவும் சொல்லாதே. இந்த மாதிரி பெண்ணெல்லாம் இப்பொழுது இருக்கின்றாளா என்ன?” என்று அவனை தடுத்தபடி உரக்க யோசித்தார் சதா.

“ஏன் இல்லாமல்… எல்லாம் இருக்கின்றாள் இருக்கின்றாள்!” என்றான் கிருஷ் வேகமாக.

“என்னடா இவ்வளவு வேகம்? அப்பொழுது இம்மாதிரி பெண்ணை உனக்கு ஏற்கனவே தெரியுமா? சரி எங்கே இருக்கின்றாள் என்று சொல்லு அவளையே முடிவு செய்து விடலாம்!” என்று மெதுவாக போட்டு வாங்க பார்த்தார்.

“ஆங்… அப்படியெல்லாம் யாரையும் எனக்குத் தெரியாது. ஏதோ நீங்கள் கேட்டீர்களே என்று சொன்னேன், இனி அது உங்கள் பாடு. சரி எனக்கு நேரமில்லை இன்னும் பேக்கிங் எல்லாம் செய்ய வேண்டும். பை!” என்று அவசரமாக மறுத்தவன் விரைந்து வெளியேறினான்.

விழிகள் மலர தன் புதல்வனை எண்ணி சிரித்தார் அவர்.

அவன் கூறிய அத்தனையும் தான் சந்தித்த அந்தப் பெண்ணிடம் ஒத்துப் போகின்றது. அப்பொழுது… அவனுக்கே தெரியாமல் அவன் அவளை விரும்புகின்றானா? என்று யோசனையில் ஆழ்ந்தார்.

“டாட்… டாட்…” என்று கிருஷ் பலமாக பிடித்து உலுக்கவும், திடுக்கிட்டு விழித்தார் சதா.

“வீடு வந்து விட்டது, என்ன அரை மணி நேரத்தில் இப்படி தூங்குகிறீர்கள்?” என்று கேலி செய்தான்.

“இல்லை… ஒரு வாரமாகவே சரியான தூக்கம் இல்லை. கல்யாண டென்ஷன் வேற…” என்றார் காரிலிருந்து இறங்கியபடி.

“இதெல்லாம் தேவையா? உங்களை யார் அப்படி ஹெல்த்தை கெடுத்துக் கொண்டு எல்லாவற்றையும் இழுத்து போட்டுக் கொண்டு செய்ய சொன்னார்கள்?” என்றான் சற்று கோபமாக.

“ப்ச்… ஏய்… டென்ஷன் என்றால் அது இல்லை. உன்னை நினைத்தால் தான் பயமாக இருக்கின்றது!” என்று கண்களில் கவலையுடன் அவனை ஏறிட்டார்.

அவன் அமைதியாக அவரை நோக்க, “நீ கேட்டிருந்தபடி தான் பெண்ணைப் பார்த்து முடிவு செய்திருக்கிறேன். நேரில், போட்டோவில் என்று எதிலேயும் பெண்ணை பார்க்க நீ ஆர்வம் காட்டவில்லை. நேரடியாக முகூர்த்த நேரத்தில் தான் சந்திக்கப் போகின்றாய், திடீரென்று ஏதாவது காரணம் காட்டி பிடிக்கவில்லை என்று சொல்லி விடுவாயோ என்று பயமாக இருக்கிறது. மேலும் அவள் பெற்றோரிடமோ… அல்லது அவள் உறவினர்களிடமோ ஏதாவது மரியாதைக் குறைவாக நடந்து கொள்வாயோ என்றும் கவலையாக இருக்கிறது!” என்றார் மெய்யான தவிப்புடன்.

மெல்ல புன்னகைத்தவன், “டாட்… பீ ரிலாக்ஸ்! நான் ஏற்கனவே சொன்னது தான். எனக்கு பெண்ணைப் பிடிக்கிறதோ இல்லையோ… நீங்கள் தேர்வு செய்தவள் தான் என் மனைவி அதில் எந்த சந்தேகமும் உங்களுக்கு வேண்டாம். அப்புறம் உங்களின் வளர்ப்பை குறைக் கூறும்படி உங்கள் மகன் யாரிடமும் மரியாதைக் குறைவாக நடந்து கொள்ள மாட்டான். ஓகே…” என்று அவரை அணைத்து விடுவித்தான்.

கண்கள் கலங்க, “தேங்ஸ்டாம்மா!” என்று ஆதரவாய் அவன் தோளில் சாய்ந்தார்.

“ஓ மைகுட்னஸ்… என்னதிது… ஏன் இன்றைக்கு இவ்வளவு சீன் போடுகிறீர்கள்?” என்றான் கிருஷ் சிரித்தபடி.

“அது இல்லைடா… திருமண நேரம் நெருங்க நெருங்க உன் அம்மாவை நான் ரொம்ப மிஸ் பண்றேன்!” என்று முகம் வாடினார் சதா.

“சரி விடுங்கள்…” என்று அவரை தடவிக் கொடுத்து அமைதிப்படுத்தினான்.

அதற்குமேல் என்ன செய்ய வேண்டுமென்று அவனுக்கும் தெரியவில்லை. இருவர் மட்டுமே வாழ்ந்த உலகில் அவர்களுக்குள் ஏற்பட்ட உணர்வுப்பூர்வமான விஷயங்கள் மிகவும் குறைவு.

அவன் நிலையை உணர்ந்து சற்றுத் தெளிந்தவர், “சரி… நீ கொஞ்ச நேரம் ரிலாக்ஸ் பண்ணிக்கோடா கண்ணா, முகூர்த்ததுக்கு கிளம்ப வேண்டும்!” என்று அவனை ரூமுக்கு அனுப்பி வைத்தார்.

ரிலாக்ஸாக படுக்கையில் விழுந்தவனின் மனம் ரிலாக்ஸாக இல்லை.

அதுவரை திருமணம் என்பதை அலட்சியமாக நினைத்து வந்தவனுக்கு மெல்ல சிறிய பயம் தோன்றியது.

‘அந்தப் பெண் எப்படிப்பட்டவளாக இருப்பாள்? இனி என் வாழ்க்கை அவள் கைகளிலா?’ என்று இதயம் லேசாக படபடக்க ஆரம்பித்தது.

“ப்ச்… இது என்ன டாட் இது… காலோடு ஒட்டி நிற்காமல் இப்படி வழுவழுவென்று இருக்கிறது?” என்றான் கிருஷ் எரிச்சல் குரலோடு.

“டேய்… உனக்கெல்லாம் பரவாயில்லைடா ஒட்டிக்கோ கட்டிக்கோ வேஷ்டி. இரண்டு வருடங்களுக்கு முன்னால் இருந்த மாப்பிள்ளைகளுக்கு எல்லாம் வேஷ்டி இடுப்பிலேயே நிற்காமல் மிகவும் சிரமப்படுவார்கள் தெரியுமா?” என்று சிரித்தார் சதா.

“ம்க்கும்… நடக்கும் பொழுது கால்கள் வேறு தெரிகிறது?” என்று முகத்தை சுளித்தான்.

“ஏய்… நீ என்ன ரொம்ப தான் அக்கால கதாநாயகி மாதிரி கால் தெரிகிறது… கை தெரிகிறது என்று சீன் போட்டுக் கொண்டிருக்கிறாய்?” என்று அவர் கேலி செய்து சிரிக்க, கிருஷ் அவரை முறைத்தான்.

“சரி சரி வா!” என்று சமாதானத்தில் இறங்கினார்.

கோவிலை நெருங்கியதும், “க்ருஷ்… சொன்னதெல்லாம் கவனத்தில் இருக்கட்டும். அனைவரின் பார்வையும் மணமக்களாகிய உங்கள் இருவர் மேல் தான் இருக்கும் பார்த்து பிஹேவ் பண்ணு!” என்று எச்சரித்தார்.

கடுப்புடன் முகத்தை வெளியே திருப்பிக் கொண்டான் அவன்.

‘பெருமாளே… உன் சந்நிதானத்தில் நடைப்பெறும் இத்திருமணத்தை எவ்வித தடங்கலும் இன்றி சிறப்பாக நடத்திக் கொடுத்து, இவர்களின் வாழ்வை நீதான் மலரச் செய்ய வேண்டும்!’ என்று விழிகள் மூடி வேண்டி கொண்டார்.

காரை விட்டிறங்கி மணப்பந்தல் செல்லும் வழியில் சிறுசிறு அறிமுகங்களை முடித்து கொண்டே முன்னேறினர் அப்பாவும், பிள்ளையும்.

விழிகளை சுழற்றிய கிருஷுக்கு ஆயாசமாக இருந்தது.

‘எப்படியும் ஐந்நூறு பேராவது இருப்பார்கள் போலிருக்கிறது, இம்மாதிரி கூட்டத்திற்கெல்லாம் நான் போனதே இல்லை!’

அவன் சிந்தனையில் குறுக்கிட்ட சதா, “இப்படி உட்காரப்பா!” என்று அவனை மணமேடையில் அமர வைத்தார்.

ஹோமத்தை வளர்த்த ஐயர் மந்திரங்களை உச்சரித்துக் கொண்டு, செய்ய வேண்டிய முறைகளை எல்லாம் சைகையில் விளக்கியபடி அவனை செய்ய வைத்துக் கொண்டிருந்தார்.

பத்து நிமிடங்கள் கழித்து, “ஆங்… பெண்ணை அழைச்சிட்டு வாங்கோ!” என்று ஐயர் கூற, ஏனோ கிருஷின் இதயம் குதித்து வெளியே வருமளவுக்கு அவன் இதயத்துடிப்பு எகிற ஆரம்பித்தது.

அவன் முகத்தில் விளைந்த டென்ஷனை பார்த்த சதா, அவன் தோளைத் தொட்டு அமைதிப்படுத்தினார்.

சில நிமிடங்களில் தன்னருகே ஒரு பெண் வந்து அமர, கிருஷ்ஷோ ஏதோ ஒரு பதட்டத்தில் அவளை திரும்பி பார்க்க தயங்கி கொண்டு அமர்ந்திருந்தான்.

“சுவாஹனா… இதை கைகளில் வைத்துக் கொள்ளம்மா!” என்று அவள் கைகளில் யாரோ வெற்றிலைப்பாக்கு, பழம் வைத்தனர்.

அப்பெயரைக் கேட்டதும் அவன் சரேலென்று தன் விழிகளை அவள் முகத்திற்கு உயர்த்த, அவள் விழிகள் அவனை சவாலுடன் எதிர்கொண்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *