*22*

 

சுவாஹனா… தனக்கென்று சில பல கொள்கைகளை வகுத்துக் கொண்டு அதற்குள்ளே வாழ்பவள், எதற்காகவும் தன்னை காம்ப்ரமைஸ் செய்துக் கொள்ள மாட்டாள்.

காதல் என்ற அற்புதமான உணர்வை மிகவும் ரசிப்பவள், அதே சமயம் தற்காலத்தில் காதல் என்ற சாயத்தை பூசிக் கொண்டு ஒழுங்கீனமாக நடந்துக் கொள்ளும் மக்களை வெறுப்பவள்.

எந்த ஒரு விஷயத்தையும் அவள் மேல் யாரும் திணித்து விட முடியாது, அது பெற்றவர்களாகவே இருந்தாலும். வளர வளர அவளுடைய கொள்கைகள், பிடிப்புகள் எதுவும் அவளுக்கு ஆபத்து விளைவிக்காததாகவும், அவளை கௌரவப்படுத்துவதாகவும் இருந்ததால், அவளுடைய விஷயத்தில் தங்களின் குறுக்கீடு எதுவும் இல்லாமல் சுதந்திரமாக விட்டனர் பெற்றோர்.

தனக்கென்று வர இருக்கும் எதிர்கால கணவனுக்காக தன் உடல், உள்ளம், ஆன்மா, எண்ணங்கள் என அனைத்தையும் தூய்மையாக வைத்துக் கொண்டு மிகுந்த எதிர்பார்ப்புடன் தன்னவனுக்காக காத்திருப்பவள். நடைமுறை வாழ்வில் இது மிகுந்த சவாலான விஷயம் என்றாலும், தன்னைச் சுற்றிப் போட்டுக் கொண்ட வட்டத்தில் விடாப்பிடியாக வீறு நடைப்புரிந்தாள்.

தன் திருமணம் தொடர்பாக நிறைய கனவுகள் வைத்திருந்தாள். பெற்றோர் பார்க்கின்ற மாப்பிள்ளை தான் என்றாலும் பார்க்கின்ற முதல் பார்வையிலேயே தானும் தன்னவனும் புவி ஈர்ப்பு விசை போல ஈர்க்கப்பட்டு ஒன்றுக்குள் ஒன்றாக கரைய வேண்டும் என ஆவல் கொண்டிருந்தாள்.

இப்படிப்பட்டவளின் வாழ்வில் தான் நம் நாயகன், தன் சவாலுக்காக காதல் நாடகம் அரங்கேற்ற அவளிடம் பேச்சு வார்த்தை நடத்த திட்டமிட்டிருந்தான்.

கல்லூரி நேரம் முடிந்து வீட்டிற்குச் செல்ல, தன் ஸ்கூட்டியை நோக்கி பார்க்கிங் அருகே தனிமையில் சென்றுக் கொண்டிருந்தாள் சுவாஹனா.

முதல் நாள் முழுவதும் பிறர் கவனத்தை கவராமல் சுஹாவையும் அவள் நடவடிக்கைகளையும் கண்காணித்துக் கொண்டிருந்தான் கிருஷ்.

பார்த்த முதல் பார்வையிலேயே மற்றப் பெண்களிடம் இருந்து தனித்து தெரிந்த அவளிடம் ஏதோ ஒருவித ஈர்ப்பு அவனுக்கு ஏற்படத் தான் செய்தது.

நீண்டக் கூந்தலும், குழி விழும் கன்னங்களும் மற்றவரிடம் அவள் நாசுக்காக சிரித்துப் பேசி பழகுவதும் சில நிமிடங்கள் தான் என்றாலும் அவனை ரசிக்கச் செய்தன. இதுவரை எந்தப் பெண்ணாலும் பாதிப்புக்கு உள்ளாகாத அவனுடைய நெஞ்சம் அவளை கண்டு முதன் முறையாக தடுமாறியது.

திடுக்கிட்டவன் விரைவாக தன் தந்தையின் சொற்களை மந்திரம் ஜெபிப்பது போல் மனதிற்குள் கொண்டு வந்து அந்த உணர்வுகளை அரும்பிலேயே கிள்ளி எறிந்தான்.

சுஹாவை வேகமாக பின் தொடர்ந்தவன் சுற்றிலும் யாரும் இல்லை என்பதை உறுதி செய்துக் கொண்டு அவளோடு பேச ஆரம்பித்தான்.

“ஹாய்!”

தன்னிடமா பேசுகிறார்கள் என்ற யோசனையோடு திரும்பிய சுஹா, சாய்கிருஷ் அங்கே நிற்க கண்டு குழம்பினாள்.

‘இவன் எதற்கு இங்கே நிற்கின்றான்? நான் கேள்விப்பட்ட வரையிலும், பார்த்த வரையிலும் இவனை பற்றி அனைவரும் ஆஹா ஓஹோவென்று தானே புகழ்கிறார்கள். பின்பு ஏன் என்னிடம் பேச முயல்கிறான்? ஏதாவது பிரச்சனையாக இருக்குமோ?’

“சொல்லுங்கள்!”

“ஆக்ட்சுவலி… உன்னிடம் ஒரு முக்கியமான விஷயம் பேச வேண்டும்!” என்றான் அவளை நேராகப் பார்த்து.

அவன் விழிகளில் எந்த அலைபுறுதலும் இல்லாததால், மற்ற ஆண்களை போல் வழிவதற்கு வரவில்லை என்றெண்ணியவள், ம்… என்று சம்மதமாக பார்த்தாள்.

“ஒரு சின்னப் பிரச்சினை, என்னவென்றால் நேற்று என்னிடம் ஒருவன் சவால் விட்டிருக்கின்றான். அதாவது நீயும், நானும் ஜஸ்ட் ராகிங் போல் சும்மா நடிப்புக்காக தான்… அவன் முன்னே நம் காதலை சொல்லி பரிமாறிக் கொள்ள வேண்டுமாம். எதுவுமே உண்மையில்லை… நாம் இருவரும் நிஜமாகவே காதலிக்கப் போவதெல்லாம் இல்லை, அவர்கள் முன் ஜஸ்ட் ஐ லவ் யூ மட்டும் சொல்லிக் கொள்ளப் போகிறோம், அவ்வளவு தான். அதன் பிறகு நமக்கு எந்த ஒரு பிரச்சனையுமில்லை. நான் உன் வழியில் குறுக்கிடுவேனோ என்றெண்ணி நீ பயப்பட வேண்டாம். இது போன்ற காதல், கத்திரிக்காய் இதிலெல்லாம் எனக்கு துளியும் நம்பிக்கையில்லை. சோ… இதில் உனக்கு எதுவும் ஆட்சேபனை இருக்காது என நினைக்கிறேன், நாளை ஈவ்னிங் நீ ஃபிரியா… அவர்கள் முன் சென்று சொல்லி விடலாமா?” என்று சுஹாவிடம் தன் திட்டத்தை அழகாக விவரித்து தெளிவாக வினவினான் கிருஷ்.

தன் காதுகளையே நம்ப இயலாமல் இமைக்க மறந்து அவன் முகத்தையே கூர்ந்துப் பார்த்தாள் அவள்.

‘இப்பொழுது இவன் என்ன சொன்னான்? என் காதில் விழுந்தது எல்லாம் உண்மையாக இவன் கூறிய வார்த்தைகள் தானா? இல்லை… என் மூளையில் வேறு ஏதாவது ஓடிக் கொண்டிருக்கிறதா? இவன் என்ன பேசுகிறான் என்பதையே என்னால் உணரக் கூட முடியவில்லையா?’ என குழப்பத்துடன் நின்றாள்.

“ஏய்… என்ன? பதில் சொல்லாமல் என் முகத்தையே அப்படி பார்த்துக் கொண்டு நிற்கின்றாய்!” என்று அவள் விழிகள் முன்னே சொடக்கிட்டான் சாய்கிருஷ்.

தன் சிந்தனையிலிருந்து திடுக்கிட்டு விழித்தவள், “சாரி… இல்லை… நீங்கள் கூறியது எதுவும் எனக்கு தெளிவாகப் புரியவில்லை!” என்றாள் சுஹா மெல்ல.

“ஓ காட்! எவ்வளவு கஷ்டப்பட்டு தெளிவாக நீளமாகப் பேசினேன். நீ என்னடாவென்றால் சிம்பிளாக புரியவில்லை என்கிறாய்? ப்ச்…” என்று சலித்தவன், “ஆமாம்… நீ தமிழ் தானே?” என சட்டென்று தோன்றிய சந்தேகத்தோடு கேட்டான்.

அவள் ஆமோதிப்பாக தலையாட்ட, கிருஷ் மீண்டும் தன் திட்டத்தை விவரமாக எடுத்துரைத்தான்.

தன் காதுகள் தான் சரியாக கேட்கவில்லையோ என அவளுக்குள் ஏற்பட்ட சந்தேகத்தை, அப்படியெல்லாம் இல்லை அது தெளிவாக தான் கேட்கின்றது என்று தன் பேச்சால் உறுதிப்படுத்தியவனைக் கண்டு சுறுசுறுவென்று ஆத்திரம் பெருகியது சுஹாவிற்கு.

‘என்ன மனிதன் இவன்? கூலாக வா சினிமாவுக்கு போகலாம் என்கிற ரீதியில், வா நாம் காதலிப்பது போல் அவர்கள் முன்னே நடிப்பிற்காக சொல்லலாம் என்கிறான். மேடை நாடகத்தில் காதலிப்பது போல் நடிக்க இது என்ன கல்ட்சுரல்ஸா? உண்மையிலேயே இவனுக்கு மூளை என்பதெல்லாம் இருக்கின்றதா? அப்படியே இருந்தாலும் அது வேலை செய்கிறதா? என்னிடம் இதைச் சொல்ல இவனுக்கு எவ்வளவு திமிர் இருக்க வேண்டும்? நோ… கத்தக் கூடாது. அவன் எப்படி அசால்ட்டு ஆறுமுகம் போல் பேசினானோ அதே போல் தான் நாமும் அவனுக்கு பதிலடி கொடுக்க வேண்டும்!’ என முடிவு செய்தாள்.

“சாரி… ம்… மிஸ்டர். சாய்கிருஷ் தானே?” என கேட்டாள்.

“ஆமாம்!” என்றான் நிமிர்வுடன்.

பெயர் சொல்லி தன்னை அறிமுகப்படுத்திக் கொள்ள வேண்டும் என்கிற அடிப்படை உணர்வு கூட இல்லாமல் தன் எண்ணமே கர்மமாக, காதலிப்பது போல் நடிக்கலாம் வா என்கிறது ஜந்து… என்று அவனை மனதிற்குள்ளே நிந்தித்தாள் சுஹா.

அவன் விழிகளை நேராகப் பார்த்தவள், “சாரி… நீங்கள் என்னை தவறாகப் புரிந்துக் கொண்டுள்ளீர்கள் என்று எண்ணுகிறேன். எனக்கு நடிக்கவெல்லாம் வராது, சோ… பெட்டர் நீங்கள் உங்களுக்கு தகுந்த மாதிரி வேறு பெண்ணைப் பாருங்கள்!” என்று புன்னகையுடன் அமைதியாக கூறி விட்டு தன் ஸ்கூட்டியை நெருங்கினாள்.

‘வேறு பெண்ணா?’ என்று விழித்த கிருஷ் வேகமாக அவளை நெருங்கி, “ஏய்… சவாலே உன்னை லவ் யூ சொல்ல வைக்க வேண்டும் என்பது தான்!” என அவன் சொல்லி முடிக்கவில்லை, வெகுண்டாள் சுஹா.

“யூ டாமிட்… உங்களுக்கு எவ்வளவு திமிர் இருந்தால் என்னிடமே இதைச் சொல்வீர்கள்? யாரை கேட்டு என்னை வைத்து சவால் விட்டீர்கள், மரியாதை கெட்டு விடும் ஜாக்கிரதை. ஏதோ பெண்கள் விஷயத்தில் நீங்கள் ரொம்ப ஜெனியூன் என்று கேள்விப்பட்டதால் தான் நின்றுப் பேசிக் கொண்டிருக்கிறேன் இல்லை நடப்பதே வேற… இதற்கு மேல் என்னை தொந்திரவு செய்ய நினைத்தீர்கள் என்றால் நன்றாக இருக்காது சொல்லி விட்டேன்!” என படபடவென்று பொரிந்து விட்டு வண்டியை ஸ்டார்ட் செய்து கிளம்பி போய் விட்டாள் சுஹா.

‘என்ன இவள்… இதற்குப் போய் இவ்வளவு திட்டுகிறாள்?’ என நடிகர் சந்தானம் ஸ்டைலில் நினைத்தவன், இது ஒரு பிரச்சினையே இல்லை என்று அவளுக்கு எப்படி இதைப் புரிய வைப்பது என்று யோசித்தான்.

ஒவ்வொரு நாளும் அவள் பின்னே சென்று இவன் பேச முயற்சி செய்ய, அவளோ அவனை முறைத்தபடி முறுக்கிக் கொண்டு விலகிச் சென்றாள்.

‘அட… ச்சீ… இதென்ன இப்படி அசிங்கப்படுத்துகிறாள்? அப்படி இவள் பின்னால் நான் போக வேண்டுமென்று எனக்கென்ன தலையெழுத்து?’ என எரிச்சலடைந்து சுஹாவை பின் தொடராமல் அமைதிக் காக்க ஆரம்பித்தான் கிருஷ்.

நாளையோடு அவன் சவாலுக்கான கெடு முடிகிறது என்ற நிலையில், மகேஷ் அவனை கலாய்க்க ஆரம்பித்தான்.

“என்னப்பா முடியவில்லை என ஒதுங்கி விட்டாயா?” என்று வினவிப் பரிகாசமாக சிரித்தான்.

கிருஷ் இறுக்கமாக இருக்க, “எனக்கு தெரியும்டா, உன்னால் முடியாது என்று… நீ ஒரு ரோபாட் போன்ற ஜடம், எந்த ஃபீலிங்ஸும் இல்லாதவன். உன்னை எல்லாம் பெண்கள் ஜஸ்ட் ரசிப்பார்களே தவிர, காதலிக்க எல்லாம் மாட்டார்கள். காதலிப்பது என்ன…நடிக்க கூட ஒருவள் எந்த அளவுக்கு யோசிக்கின்றாள் என்று பார்த்தாய் அல்லவா? இனிமேலாவது பெரிய இவன் மாதிரி அலட்டாமல் அடங்கி இரு!” என்று அவன் தன்மானத்தை சீண்டினான் மகேஷ்.

“ஏய்…” என்று அவன் சட்டையை கொத்தாகப் பற்றிய கிருஷ், “வேண்டாம் மகேஷ்… என் பொறுமையை நீ மிகவும் சோதிக்கின்றாய். இது உனக்கு நல்லதில்லை… நான் அமைதியாக ஒதுங்கிப் போகின்றேன் என்று ஓவராக துள்ளாதே!” என கொந்தளித்தான்.

“என்னடா செய்வாய்? ஒரு பெண்ணை நடிப்புக்கு கூட லவ் யூ சொல்ல வைக்க வக்கில்லை, வந்து விட்டான் என்னிடம் சண்டைப் போட…” என்று ஏளனம் செய்தான் அவன்.

“மகேஷ்…” என கழுத்து நரம்புகள் புடைக்க கத்தினான் கிருஷ்.

“என்னடா கத்துகிறாய்? சரி இப்பொழுது கூட சமாதானத்துக்கு வருகிறேன் நாளை மாலை வரை நேரம் இருக்கிறது. அவளை உன்னிடம் எப்படியாவது லவ் யூ சொல்ல வை, உன்னை ஒரு ஆண்பிள்ளை என நான் ஒத்துக் கொள்கின்றேன்!” என்று தன் சட்டையிலிருந்து அவன் கையை பிரித்தெடுத்த மகேஷ், விழிகள் சிவப்பேற தன்னை முறைத்தவனை அலட்சியப்படுத்தி விட்டுச் சென்றான்.

அந்த ஆக்ரோஷம் முழுவதும் சுஹாவிடம் திரும்பியது கிருஷுக்கு, ‘அவள் மனதில் தன்னை என்ன பெரிய இவள் என்று நினைத்துக் கொண்டிருக்கின்றாளா? சும்மா நடிப்புக்காக பொய் சொல்வதற்கு கூட என்னவோ தன் கற்பே பறி போய்விடும் என்கிற ரீதியில் அலட்டுகிறாள்!’ என்று அவளுடனான மறுநாளைய சந்திப்பிற்காக புலியென உறுமிக் கொண்டிருந்தான் அவன்.

அன்றைய மதியம் சுவாஹனா தங்கள் கல்வி நிறுவன வளாகத்தில் வண்டியை நிறுத்தி இறங்கினாளோ இல்லையோ, அவளை வேங்கையென எதிர்கொண்டான் சாய்கிருஷ்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *