*21*

 

இந்தப் புகைச்சல் அவர்களின் சிறு வயது முதலே தொடர்ந்து கொண்டிருக்கின்றது, கிருஷுக்கு முதலில் பள்ளித் தோழனாக தான் அறிமுகமானான் மகேஷ். ஆனால் புது மாணவனாக ட்ரான்ஸ்பரில் அந்தப் பள்ளியில் சேர்ந்தவனுக்கு, அங்கே கிருஷின் மீது மாணவர்கள் முதற்கொண்டு பள்ளி தாளாளர் வரை அனைவருக்குமே தனிப்பட்ட கிரேஸ் இருப்பதைக் கண்டு வயிறு எரிந்தது.

அவனை விட உயரம் அதிகம் இருப்பதாலும், திறமையினாலும் பள்ளியின் பாஸ்கெட் பால் டீம் கேப்டனாக கிருஷ் தான் இருந்தான். அவன் விளையாட்டுக்கு ரசிகர்கள் இருக்கிறார்களோ இல்லையோ அவன் விளையாடும் அழகை பருகுவதற்கென்றே ஒரு பெண்கள் கூட்டமே இருந்தது. கிருஷின் பார்வை தான் பெண்கள் மீது விழாதே தவிர, பள்ளியில் உடன் பயிலும் அநேக பெண்களின் பார்வை அவன் மீது தான் இருக்கும்.

கல்வியிலும் முதல்நிலை, அந்தஸ்திலும் குறைச் சொல்ல வழியில்லை என்று அனைத்துமே அவனின் உயர்வை குறிப்பிடும் விதமாக அவனுக்கு சாதகமாகவே இருக்கவும், மகேஷின் பொருமல் அதிகரிக்கத் தொடங்கியது. அவனை மற்றவர் முன் எப்படியாவது தலைக்குனிய வைக்க வேண்டும் என்று வழி தேடித் தவியாய் தவித்தான்.

இந்நிலையில் கடவுளாக பார்த்து அவனுக்கு ஒரு பொன்னான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தார். உடல்நிலை சரியில்லாமல் இரண்டு நாட்கள் பள்ளிக்கு விடுப்பு எடுத்திருந்த கிருஷ், மூன்றாம் நாள் திரும்பிய போது மிகவும் மெலிந்திருந்தான். அனைவரும் பரிதாபப்பட்டு விசாரிக்கும் பொழுது தான் கிருஷுக்கு தந்தையை தவிர வேறு எந்த உறவும் இல்லை என்பது மகேஷுக்கு தெரிய வந்தது.

கிருஷின் அப்பாவும் பிஸினஸ் டீலிங் ஒன்றிற்காக வெளிநாடு சென்று விட, இவனை பார்த்துக் கொள்ள கூட ஆளில்லாமல் ஹாஸ்பிடலில் தனியாக வேலையாளுடன் ட்ரீட்மென்ட் எடுத்து வந்திருக்கிறான் என்பது தெரிந்தவுடன், அதை தனக்கு சாதமாக்கிக் கொண்டு கிருஷை எண்ணி பரிதாபப்படுவது போல் கேலி செய்ய ஆரம்பித்தான் மகேஷ்.

“ஐயோ பாவம்… என்ன வசதி இருந்து என்ன பிரயோஜனம்? உடம்பு முடியவில்லை என்றால் பார்த்துக் கொள்ள கூட ஆளில்லாமல் அனாதையாக இருக்கின்றானே!” என்று சோகமாக முகத்தை வைத்தபடி கூறினான்.

அதைக்கேட்டு திகைத்த கிருஷ் வேகமாக, “நான் ஒன்றும் அனாதை இல்லை எனக்கு என் அப்பா இருக்கிறார்!” என்றான் எரிச்சலுடன்.

“இருந்து என்ன பிரயோஜனம்? உனக்கு ஒரு துயரம் எனும் பொழுது உடன் இருந்து பார்த்துக் கொள்ளவில்லையே? நாளை நீ இறந்தால் கூட உன் அப்பா வரும் வரை உன் வீட்டில் உன்னை அனாதைப் பிணமாக தான் போட்டு வைத்திருப்பர் வேலைக்காரர்கள்!” என்றான் மகேஷ் அவனைக் குத்திவிடும் வெறியோடு.

அனாதை என்ற சொல்லையே தாங்க முடியாமல் கொதித்துக் கொண்டிருந்த கிருஷ், மகேஷ் அவனை அனாதைப் பிணம் என்று வேறு கூறவும் அவனை கொல்லும் வெறியோடு அவன் மேல் சீறிப் பாய்ந்தான்.

பதிலுக்கு மகேஷ் அவனிடம் சண்டையிட்டபடி இன்னும் கேவலமாக பேச பூசல் முற்றிய நிலையில் ஆசிரியர்கள் வந்து இருவரையும் சமாதானப்படுத்தி பிரித்து விட்டு மகேஷை கடுமையாக கண்டித்தனர்.

அதுமுதல் இருவரும் வெளிப்படையாகவே கீரியும், பாம்பும் போல அனுதினமும் பார்வையால் வெட்டிக் கொள்ள ஆரம்பித்தனர். யாரையும் சீண்டிப் பார்க்க நினைக்காத கிருஷ், மகேஷை மட்டும் விடக் கூடாது என்கிற வெறியில், அடிக்கடி அவனைச் சீண்டி தன் வெற்றியை அவனுக்கெதிராக நிலைநாட்டி இளக்காரமாக பார்ப்பான். இந்நிலை அவர்களுக்கிடையில் கல்லூரிக்காலம் வரையிலும் தொடர்ந்து கொண்டிருந்தது.

பிஜி முடித்தப் பிறகு கிருஷ்ஷும், அவன் தோழனான வைபவ்வும் டிப்ளமோவில் ஒரு வருட கோர்ஸ்களோ அல்லது ஆறு மாத கோர்ஸ்களோ என ஏதாவது ஒரு படிப்பை ஒன்று முடிந்தால் மற்றொன்று என கல்லூரியிலோ இல்லை பல்கலைக்கழகங்களிலோ பொழுதுப் போக்கிற்காக தொடர்ந்துக் கொண்டிருந்தனர்.

அவர்களை விடாமல் மகேஷும் துரத்திக் கொண்டிருந்தான், போகின்ற இடங்களிலெல்லாம் அவனுக்கென்று ஆமாம் சாமி போட ஒரு காக்கா கூட்டத்தை எலும்பு துண்டுகள் போட்டு தயார் செய்து வைத்திருப்பான் அவன்.

அப்படித்தான் ஒரு கல்லூரியில் ஆறுமாத கோர்ஸ் ஒன்றில் சேர்ந்து பயின்றுக் கொண்டிருக்கும் பொழுது தான் முதன் முதலாக சுவாஹனாவை பார்த்தான் சாய்கிருஷ்.

பார்த்தான் என்றால் தானாக பார்க்கவில்லை. அவனை பார்க்க வைத்தான் மகேஷ்.

மகேஷின் கூட்டத்திலிருந்த ஒருவனுக்கு சுவாஹனாவை பற்றி நன்றாகத் தெரியும், பிஜியில் ஒன்றாக தான் அவளுடன் கல்லூரியில் பயின்றிருந்தான் அவன். தன் நண்பன் ஒருவன் அவளை தன் தோழியாக்க முயல்வதைக் கண்டவன் நீ தலைகீழாக நின்றாலும் அவளெல்லாம் உனக்கு மசியமாட்டாள், வேறு ஏதாவது ஆளைப்பார் என்றான். அதைக்கேட்டுக் கொண்டிருந்த மகேஷ் அவன் சொல்லை அலட்சியப்படுத்தினான். ஒவ்வொருவருக்கும் ஒரு விலை உண்டு அவள் என்ன பெரிய இவளா? கண்டிப்பாக அவளை சாய்க்க முடியும் என்றான். அதை திட்டவட்டமாக மறுத்த அவனுடைய நண்பன் அவளுடைய கோட்பாடுகளைச் சொல்லி, கட்டாயம் தன் உயிரே போனாலும் அதைவிட்டு அவள் வெளியே வரமாட்டாள் என ஆணித்தரமாகச் சொன்னான்.

மகேஷின் மூளையில் அந்த சொற்கள் திரும்பத் திரும்ப எதிரொலித்து கிருஷுக்கு எதிராக செயல்பட வியூகம் வகுக்க ஆரம்பித்தது.

திட்டம் உருவானதும் அதைச் செயல்படுத்த எண்ணியவன், ஒரு நாள் கிருஷின் வழியில் குறுக்கே நின்று அவனைப் பார்த்து நக்கலாக சிரித்தான்.

அவனைக் கண்டு புருவம் சுளித்தவன், துஷ்டனைக் கண்டால் தூர விலகு என்னும் பழமொழிக்கேற்ப விலகிச் செல்ல முயன்றான்.

“ஏய்… என்னப்பா? உன்னிடம் பேச வேண்டும் என்று அருகில் வந்தால், நீ பாட்டுக்கு என்னை கண்டுக்கொள்ளாமல் விலகிச் சென்றால் என்ன அர்த்தம்?” என கேட்டான் மகேஷ்.

“ம்… பேச விரும்பவில்லை என்று அர்த்தம்!” என்றபடி தன் வேகத்தைக் குறைக்காமல் மேலே நடந்தான்.

“சரி… எனக்கு இந்த சந்தேகத்தை மட்டும் தீர்த்துவிட்டுப் போ!” என்றான் விஷமமாக.

தனக்கெதிராக எதற்கோ இவன் அடிப்போடுகிறான் என்று மனதிலே தோன்ற, “நான் ஒன்றும் லெக்ட்சரர் இல்லை உன் சந்தேகத்தை தீர்க்க…” என்றான் கிருஷ் அலட்சியமாக.

“பாடத்தில் சந்தேகம் என்றால் அவர்களிடம் கேட்கலாம், உன்னை பற்றிய சந்தேகம் என்றால் உன்னிடம் தானே கேட்க முடியும்?” என அவனை விடாமல் தொடர்ந்தான் மகேஷ்.

இயல்பிலேயே பொறுமைக்கும், நம் கிருஷுக்கும் ஏணி வைத்தால் கூட எட்டாது, இதில் மகேஷ் வேறு விடாமல் நைநைநை என்று பின் தொடரவும், இவன் தன்னை விடவே மாட்டானா? என எரிச்சலடைந்தான்.

“ஏய்… இப்பொழுது உனக்கு என்ன வேண்டும்?” என்றான் கடுப்புடன்.

‘இது தான் வேண்டும், நான் பேசுவதை நீ காது கொடுத்து கேட்க வேண்டும்!’ என்று மனதில் எண்ணமிட்டவன், “நீ ஆண்பிள்ளையா இல்லையா என எனக்கு உடனடியாக தெரிய வேண்டும்?” என்றான் முகத்தை சீரியஸாக வைத்துக் கொண்டு.

கிருஷ்ஷின் முகத்தில் செந்நிற இரத்தம் பாய ஆத்திரத்தில் கை முஷ்டிகளை இறுக்கியபடி, பல்லைக் கடித்தான்.

“இங்கே பார்! இதற்கு நீ என்னை கோபித்து கொள்ளக் கூடாது. மற்றவர்கள் மனதில் கேள்வி எழும் அளவுக்கு நடந்துக் கொள்பவன் நீதான்… எந்தப் பெண்ணையும் திரும்பிப் பார்க்காமல், பேசாமல் ஒதுக்கி வைப்பதால் அவர்களும் அப்படித்தான் பேசிக் கொள்கிறார்களாம். என்னை முறைத்தால் நான் என்னப்பா செய்வேன்? உனக்கும், எனக்கும் ஆயிரம் பிரச்சினைகள் இருக்கலாம்…அதற்காக இதிலெல்லாம் குறைக் கூறியிருக்கின்றேனா?” என்று உத்தமனாக கேட்டான்.

“சரி உலக வாழ்க்கையை வெறுக்கின்ற சாமியார் என்றும் உன்னை ஏற்றுக்கொள்ள முடியாது. பகட்டாகவும், தெனாவெட்டாகவும் திரிகிறாய்… பெண்களை மட்டும் தான் ஒதுக்குகிறாய் என்பதால் அப்படித்தான் பேசச் செய்வார்கள்!”

கிருஷ் எதுவும் பேசாமல் கடுகடுவென்று நின்றிருக்க, “அவர்களின் சந்தேகத்தை தீர்க்க உனக்காகவென்று அவர்களிடம் பேசி ஒரு சவால் விட்டு வந்திருக்கிறேன். நான் சொல்கின்ற விஷயத்தை மட்டும் ஒரு வாரத்தில் நீ நடத்திக் காண்பித்து விட்டாய் என்றால் அவர்கள் அனைவர் முகத்திலும் நீ கரியைப் பூசி விடலாம். என்ன சவாலை ஏற்றுக் கொள்ள தயாரா?” என்று விடாமல் கேட்டான்.

கிருஷுக்கோ மகேஷை நம்புவதற்கு மனமில்லாமல் சந்தேகமாகவே இருந்தது, ‘இவன் எதிலோ நம்மை சிக்க வைக்கப் பார்க்கிறானோ… எப்படி? சரி எவ்வளவு தூரம் தான் அளக்கின்றான் என கேட்டுத் தான் பார்ப்போம்!’ என்று அசட்டையாக முடிவெடுத்தான்.

அவனை நேராகப் பார்த்தவன், “என்ன?” என்று எடுப்பாக வினவினான்.

“நம் கோர்ஸில் சுவாஹனா என்று ஒரு பெண் நம்முடன் தான் பயில்கிறாள். அவள் மிகவும் நல்லப் பெண்ணாம், யாரையும் திரும்பி கூட பார்க்க மாட்டாளாம் உன்னைப்போல்…” என்று நிறுத்தியவன், “அவளை இன்னும் ஒரு வாரத்திற்குள் நீ ஐ லவ் யூ சொல்ல வைக்க வேண்டும். அதுவும் நீங்கள் சீரியஸாக கூட லவ் பண்ண வேண்டாம் சும்மா விளையாட்டுக்கு தான், இந்த விவரங்களை கூட நீ அவளிடம் முழுமையாக சொல்லிக் கொள்ளலாம் ஒன்றும் பிரச்சினையில்லை. ஆனால் அவளை எங்களிடம் அழைத்து வந்து, எங்கள் கண் முன்னே நீங்கள் இருவரும் ஒருவருக்கொருவர் ஐ லவ் யூ சொல்லிக் கொள்ள வேண்டும். இது சும்மா ராகிங் மாதிரி தான் உன்னுடைய கொள்கைக்கும் சரி, அவளுடைய கொள்கைக்கும் சரி இதில் ஒரு பிரச்சினையும் வராது. இட்ஸ் ஸோ ஈஸி அன்ட் சிம்பிள்… என்ன சொல்கிறாய்?” என்றான் மகேஷ் விடாப்பிடியாக.

அவன் கூறியதையெல்லாம் நினைத்துப் பார்த்தால் தனக்கும் சரி, அந்தப் பெண்ணுக்கும் சரி எந்தவித பாதிப்பும் இருப்பது போல் தோன்றவில்லை கிருஷுக்கு. சும்மா நாடகத்தில், படத்தில் வருவது போல் இதை செய்தால் தான் என்ன? என்று நெற்றிச் சுருங்க சிந்தித்தான்.

“என்னப்பா இவ்வளவு நேரம் யோசிக்கின்றாய்? இதில் என்ன பிரச்சினை உனக்கு இவ்வளவு தூரம் வசதியாகச் சொல்கிறேன்? இல்லையென்றால் ஒன்று செய் என் நண்பர்கள் முன் வந்து, நான் இந்தச் சவாலில் தோற்று விட்டேன் என்று ஒத்துக்கொள்!” என அவனை நன்றாக கொம்பு சீவி விட்டான் மகேஷ்.

சுஹாவை பற்றி சரி வர தெரியாமல், எதிலேயுமே தோற்க விரும்பாத கிருஷ் அதிலும் குறிப்பாக மகேஷிடம் என்பதால் அந்தச் சவாலை அலட்சியமாக ஏற்றுக் கொண்டான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *