*20*​

 

அந்த நினைவுகளின் பாதிப்பால் திடீரென்று வெறிப்பிடித்த மாதிரி வேகமாக எழுந்து வந்து கிருஷின் சர்ட் காலரை பிடித்த சுஹா, “ஏன்டா அப்படி செய்தாய்? என்னை ஏன்டா அத்தனை பேர் முன்னால் அப்படி அசிங்கப்படுத்தினாய்? உன்னை புருஷன் என்று நம்பித்தானே உன்னிடம் பாதுகாப்பை நாடினேன். அப்புறம் ஏன்டா என்னை அப்படி தட்டிவிட்டு கேவலமாக திட்டினாய்? நான் என்ன உன்னிடம் சரசமாடவா தொட்டேன்? நான் உனக்கு என்னடா பாவம் செய்தேன்? ஏன்டா ஒவ்வொரு முறையும் என்னை இப்படி அவமானப்படுத்துகிறாய்? அனைவர் முன்னும் நான் எவ்வளவு கவுரமாக வாழ்ந்தவள் தெரியுமா? உன்னை தவிர அனைவரும் என்னை தலையில் தூக்கி வைத்து கொண்டாடுவார்கள். எனக்கென்று ஒரு கோட்பாடு வைத்துக் கொண்டு எந்த இடத்திலும் எந்தச் சூழ்நிலையிலும் நெறிமுறை தவறாமல் ஒழுக்கத்தோடு தலைநிமிர்ந்து வாழ்ந்து வந்தவள் நான். என்னை இப்படி அசிங்கப்படுத்தி விட்டாயே… ஐயோ… நீ அப்படி சொன்னதும், என்னை தொட்டவன் எப்படி கேவலமாக பார்த்தான் தெரியுமா? கடவுளே… அப்படியே செத்துப் போய்விடலாமா என்றிருந்தது!” என்று கதறி அழுதாள்.

அவளுடைய சொற்கள் ஒவ்வொன்றும் கிருஷின் இதயத்தை வாள் கொண்டு அறுப்பது போல் துடிதுடித்துப் போனான் அவன்.

ஆக்ரோஷத்தின் உச்சியில் இருந்த சுஹா கிருஷை வாய்க்கு வாய் ‘டா’ போட்டுப் பேசிக் கொண்டிருக்கிறோம் என்பதை உணரும் மனநிலையில் இல்லை, வேதனையில் இருந்த அவனும் தன்னை அவள் மரியாதை குறைவாகப் பேசுகிறாளே என்றெல்லாம் வருந்தவில்லை.

“ஐ ஆம் சாரிம்மா… ரியலி சாரி, உன்னுடைய துன்பத்தை புரிந்துக் கொள்ளாமல் முட்டாள்தனமாக அவ்வாறு நடந்துக் கொண்டேன். அந்த நேரத்தில் நீ எவ்வளவு ஃபீல் செய்திருப்பாய் என்று எனக்கு புரிகிறது. தயவுசெய்து என்னை மன்னித்து விடும்மா, ப்ளீஸ்…” என்று சுஹாவின் கரங்களை பற்றிக் கொண்டு கெஞ்சினான் கிருஷ்.

அவனை உதறித் தள்ளினாள் அவள், “செய்வதையெல்லாம் செய்து விட்டு இப்பொழுது அதற்காக மன்றாடுகிறீர்களா? இந்த நாலு சுவற்றுக்குள் நீங்கள் கேட்கும் மன்னிப்பு… அந்த லிஃப்டில் இருந்தவர்கள் முன்னால் நான் பட்ட அவமானத்தை தீர்த்து விடுமா சொல்லுங்கள்? மாட்டேன்… ஐ ஹேட் யூ… ஐ ஹேட் யூ ஃப்ரம் பாட்டம் ஆஃப் மை ஹார்ட்!” என்றாள் முழு வெறுப்போடு.

“அப்படிச் சொல்லாதேடா ப்ளீஸ்… நான் வேண்டுமென்றே அப்படிச் செய்யவில்லை. தயவுசெய்து இந்த ஒரு முறை எனக்கு வாய்ப்பு கொடும்மா, என்னை நான் திருத்திக் கொள்கிறேன். பட் வெறுக்கிறேன் என்று மட்டும் சொல்லாதே… என்னால் அதை தாங்கிக் கொள்ள முடியவில்லை. ஏற்கனவே என் அடி மனதில் உன் மீது உண்டான காதலை நம்பாமல் பைத்தியகாரத்தனமாய் அதை மாயை என்று நம்பிக் கொண்டிருந்தேன். ஆனால் எப்பொழுது உன்னை காணாமல் தவித்தேனோ… அப்பொழுது தான் என் மனமே எனக்கு துலாபாரமாய் விளங்கியது. நீ இல்லாமல் என்னால் நிச்சயமாக உயிர் வாழவே முடியாது… ப்ளீஸ் பிலீவ் மீ… ஐ லவ் யூ டா!” என்று அவள் கால்களில் மண்டியிட்டான் கிருஷ்.

ஒருகணம் திகைத்தவள் மறுகணம் வெகுண்டாள், “காதலா… காதல் என்றால் என்ன அர்த்தம் என்று தெரியுமா? காதலிக்கும் பெண்ணை மற்றவர் முன் விட்டுக்கொடுக்கவோ… அவமானப்படுத்தவோ எந்தக் காதலனின் நெஞ்சமும் துணியாது, ஆனால் நீங்கள்…” என்று நிறுத்தியவள், “என்னவோ பெரியதாக காதல் என்று அளக்குறீர்களே என்னைப் பற்றி என்ன தெரியும் உங்களுக்கு வரிசையாக சொல்லுங்கள் பார்க்கலாம்? ஆனால் என்னிடம் உங்களை பற்றிக் கேட்டால் ஆதி முதல் அந்தம் வரை அனைத்தும் சொல்வேன் தெரியுமா? ஏனென்றால் உங்களை மனதார காதலித்தேன் நான், குறித்துக் கொள்ளுங்கள்… காதலிக்கிறேன் இல்லை காலை வரை காதலித்தேன் அவ்வளவு தான். திருமணமான இந்த ஒரு மாதத்தில் உங்கள் குணங்களை புரிந்துக் கொண்டு, ஒருவர் மனதை கஷ்டப்படுத்தவென்று எதுவுமே நீங்கள் வேண்டுமென்றே செய்வதில்லை, தன்னையுமறியாமல் சிறுபிள்ளைத்தனமாக நடந்துக் கொள்கிறீர்கள் என்று உங்களை எவ்வளவு ரசித்திருக்கிறேன் தெரியுமா? என்னை வெறுக்கின்ற உங்களிடம் நீங்களாக மனம் மாறும் வரை என் காதலை தெரிவிக்க கூடாது என்ற முடிவோடு இருந்தேன். ஹும்… அதற்குள் எனக்கு நல்லப் பாடம் கற்றுக் கொடுத்து விட்டீர்கள், எந்த காலத்திலும் உங்களை நம்பக் கூடாது என்று. போதும்… இதற்கு மேல் எனக்கெதுவும் வேண்டாம், நான் எதிர்பார்க்கவும் மாட்டேன். தாலிக் கட்டிக்கொண்ட பாவத்திற்காக உயிர் வாழும் வரை இந்த வீட்டில் உங்கள் மனைவியாக பெயரளவுக்கு வாழ்ந்து விட்டுப் போகின்றேன், அதுவும் எதற்காக என்றால் என்னை பற்றி யார் எந்தக் குறைச் சொன்னாலும் எனக்கு பிடிக்காது. எங்கே இருந்தாலும் எனக்கென்று இருக்கின்ற மதிப்பு குறையாமல் தான் நான் வாழ்வேன்!” என்றாள் சுஹா நிமிர்வுடன்.

மழை பெய்து ஓய்ந்ததுப் போல் படபடவென்று அவள் பேசிய வார்த்தைகளில், அவள் தன்னை காதலித்திருக்கின்றாள் என்பதை தவிர மற்றது எதுவும் கிருஷின் கருத்தில் பதியவேயில்லை. அப்படியே பிரமைப் பிடித்தது போல் நின்றிருந்தான் அவன்.

‘அவளும் என்னை காதலித்தாளா? கடவுளே! எவ்வளவு பெரிய சொர்க்கத்தை என் அலட்சியத்தால் இழந்து விட்டு நிற்கின்றேன். கோபத்தில் சாற்றிய அவளின் மனக்கதவை மீண்டும் எனக்காக திறக்கவே மாட்டாளா?’ என்று ஏக்கத்துடன் நிமிர்ந்து அவளை ஏறிட்டான்.

புருவத்தை நெறித்தபடி நின்றிருந்தவளை கண்டவன் மெல்ல எழுந்தான்.

சுஹா… என பேச ஆரம்பிப்பதற்குள், “நீங்கள் போகிறீர்களா… இல்லை நான் வெளியில் போகட்டுமா?” என்று அவனை தடுத்துக் கேள்வி எழுப்பினாள்.

வேதனையோடு அவள் முகத்தையே சில நொடிகள் பார்த்தவன், “நானே போகின்றேன்!” என்று வெளியேறும் முன் சற்றுத் தயங்கி நின்றான்.

“என்ன?” என்றாள் சுஹா அதிகாரமாக.

“இல்லை… என்னை விட்டு எங்கும் போய்விட மாட்டாயே?” என்றான் விழிகளில் அச்சத்தோடு.

“ஹும்…” என ஏளனமாக இதழை வளைத்தவள், “மாட்டேன்… உங்களுக்காக இல்லை, எனக்காக என் கௌரவத்திற்காக!” என்றாள் மிடுக்குடன்.

எதற்காக என்றாலும் சரி அவள் தன்னை விட்டுப் பிரிய மாட்டாள் என்பதே அவன் மனதை நிம்மதியடையச் செய்ய, முகம் தெளிந்தவன், “குட்நைட்!” என மெல்ல முணுமுணுத்தான்.

காது கேளாதவள் போல் சென்று கட்டிலில் விழுந்தாள் சுஹா, மெல்லிய பெருமூச்சுடன் தன்னறைக்குச் சென்றான் கிருஷ்.

ஒரு மாதமாக அவளுடன் பகிர்ந்துக் கொண்ட அறை இன்று தனிமை என்னும் சாத்தானாய் மாறி அவன் மனதை கலங்கச் செய்தது.

திருமணமான முதலிரவு முதல், நேற்றைய இரவு வரை அவன் தனியாக உறங்கியதேயில்லை. இருவரும் பேசிக் கொள்கிறார்களோ இல்லை சண்டைப் போடுகிறார்களோ… ஒரே அறையில் தங்கியிருந்தது அவர்களுக்குள் தங்களையுமறியாமல் ஒரு நல்ல இணக்கத்தை உருவாக்கியிருந்தது. இன்று அது அத்தனையும் கனவாய் கலைந்துப் போனது போல் தோன்றி அவனுக்கு வலிக்கச் செய்தது.

கோகுலாஷ்டமி அன்று தங்களுக்குள் ஏற்பட்ட நெருக்கத்தை நினைத்துப் பார்த்தான். தன்னை குழந்தையாய் பாவித்து அவள் செய்த ஒவ்வொன்றும் நினைவில் ஆடியது. பண்டிகையின் பொழுது மேற்கொள்ளும் பூஜை முறைகள், அதன் தொடர்பான கதைகள் என ஒவ்வொன்றாய் விளக்கியதும், பலங்காரங்கள் செய்யும் பொழுது வாசனைப் பிடித்தவாறு இவன் நாவில் உமிழ்நீர் ஊறக் கண்டதும் சிரித்தபடி கடவுளுக்கு தனியாக பிரசாதம் செய்தவற்றில் எடுத்து வைத்துவிட்டு, பிரஷ்ஷாக அவனுக்கு சுடச்சுட சாப்பிட எடுத்துக் கொடுத்ததும், இத்தனை செய்தவளின் காதலை சிறிதும் புரிந்துக் கொள்ள ஏன் நான் முயற்சிக்கவேயில்லை? என்று கண் கலங்கினான்.

சுஹாவிடம் சண்டையிட்ட தருணங்கள் ஒவ்வொன்றும் நினைவிற்கு வந்தது. தான் சண்டைக்கோழியாய் சிலிர்த்தெழும் பொழுதெல்லாம் அவள் அதை அலட்சியமாய் தலையில் தட்டி தன்னை உட்கார வைப்பதும், கோபத்தில் அமைதியாக இருந்தால் தன்னிடம் வம்பிழுத்துப் பேச வைப்பதுமாக எந்நேரமும் அவனை சீண்டிக் கொண்டே தான் இருப்பாள். இன்றோ அவளின் ஒதுக்கம் அவனை நிலைகுலையச் செய்தது. எவ்வளவு மனமுடைந்திருந்தால், இந்தளவுக்கு என்னிடம் வெறுப்பாக நடந்துக் கொண்டிருப்பாள்!’ என்று துவண்டவன் மெல்ல கட்டிலில் அவள் படுத்துறங்கும் பக்கமாக தரையில் மண்டியிட்டு அமர்ந்தான்.

மெத்தையில் தலைசாய்த்து விழிகளை மூடிக் கொண்டவன், சுஹாவுடன் தனக்கு ஏற்பட்ட அனுபவங்களை தங்களின் முதல் சந்திப்பு முதற்கொண்டு அசைப்போட ஆரம்பித்தான்.

எப்பொழுதும் சுதந்திரமாக பறவையைப் போல் தன்னிஷ்டத்திற்கு சுற்றித் திரிவது தான் சாய்கிருஷின் இயற்கை குணம்.

அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவோ, தடைச் சொல்லவோ யாரும் இருந்தது இல்லை. எந்த நேரத்தில் என்ன செய்வான்? எப்படி நடந்துக் கொள்வான்? என யாராலும் கணிக்க முடியாது. ஆனாலும் மனதால் கூட யாருக்கும் தீங்கிழைக்க நினைக்க மாட்டான்.

இப்படியெல்லாம் யாருக்கும் கெடுதல் நினைக்காமல் தன் போக்கிற்கு சுற்றிக் கொண்டிருந்தவனின் வாழ்விலும் ஒரு வில்லன் இருந்தான். வில்லன் என்றால் அவனை அழிக்க வேண்டும், அவன் குடும்பத்தை அழிக்க வேண்டும் என்று எண்ணும் பயங்கரமானவன் இல்லை.

அநேகமாக இந்தப் பூவுலகில் மனிதர்களாய் பிறந்த அனைவரின் மனதிலும் அடுத்தவரின் வளர்ச்சியைக் கண்டு உண்டாகும் போட்டிப் பொறாமை தான் அவனுக்கும் கிருஷின் மேல் இருந்தது.

அவரவரின் குணநலன்களையும், ஆளுமையையும் பொறுத்து தங்களின் புகைச்சலுக்கு காரணமானவர்களுக்கு சிறியதாகவோ அல்லது பெரியதாகவோ பாதிப்புகள் ஏற்படும் அளவுக்கு தொல்லைகள் கொடுப்பர் நம் மக்கள்.

இங்கே நம் சாய்கிருஷின் எதிரியான மகேஷின் குணம் எப்படி என்றால், எப்படியாவது எதையாவது செய்து கிருஷுக்கு தலைக்குனிவை ஏற்படுத்த வேண்டும் அவ்வளவு தான் என்று கங்கணம் கட்டிக்கொண்டு அலைவான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *