*2*​

 

தானாக வந்த வாய்ப்பை விடாமல் உடும்பாக பற்றிக் கொண்ட சதானந்தம், தன் மகனை எப்படி வழிக்கு கொண்டு வருவது என்று திட்டமிட ஆரம்பித்தார்.

சும்மாவே திருமணம் எல்லாம் செய்துக் கொள்ள மாட்டேன் என்று அடம்பிடித்து சுற்றிக் கொண்டிருப்பவனிடம், பெண்ணைப் பற்றிய விவரம் சொன்னால் அவ்வளவு தான் வானத்துக்கும், பூமிக்குமாக குதியோ குதி என்று குதித்து அந்த பெண்ணின் குடும்பத்தையே ஓட வைத்து விடுவான்.

பெண்ணைப் பற்றி பிரச்சினையில்லை, அவள் நம் பக்கம் ஸ்ட்ராங்காக தான் இருக்கிறாள். ஆனால் அவள் குடும்பத்தையும் பார்க்க வேண்டுமே…

என் வாழ்வில் நடந்த தவறு கிருஷின் வாழ்க்கையில் தொடராமல் இருக்க வேண்டும். என்னை போல் பெண்ணை மட்டும் அவள் குடும்பத்திலிருந்து தனியாக பிரித்து அழைத்து வந்து விடக் கூடாது. இத்தனை நாள் தான் குடும்பம் என்றால் என்ன? உறவு முறைகளின் விவரம் என்று ஒன்றும் தெரியாமல் வளர்ந்து விட்டான். இனியாவது பந்தப் பாசங்களை பற்றி அவன் தெரிந்துக் கொள்ள வேண்டும் என்று பெருமூச்சு விட்டார் அவர்.

பிஸினஸ் பிஸினஸ் என்று நான் சுற்றித் திரியும் பொழுது குழந்தையை கவனித்துக் கொள்ளவென்று நம்பிக்கையான உறவு அருகே இருந்திருந்தால், அவனை நான் இப்படி வளர்த்திருக்கவே தேவையில்லையே…

ஒவ்வொரு நாளும் கூட இருந்து கவனித்துக் கொள்ள முடியாது என்று தானே அவனிடம் பெண்களை பற்றி அவ்வாறு தவறாக திரித்துக் கூறினேன்.

என் தந்தையை போல் அல்லாமல் என் மகன் ஒழுக்கத்தில் ஸ்ரீராமனாக வளர வேண்டும் என்று நான் செய்தது பூமராங்காக திரும்பி அவனை விஸ்வாமித்திரராக மாற்றி என் கரங்களில் ஒப்படைத்து விட்டதே விதி என்று நொந்துப் போனார்.

அந்தப் பெண்ணை பற்றிய விவரம் தெரிந்ததிலிருந்து, ஊண், உறக்கமின்றி இருபத்திநான்கு மணி நேரமும் அவளை எப்படி கிருஷுக்கு மனைவியாக்கி இந்த வீட்டிற்கு மருமகளாக அழைத்து வருவது என்ற எண்ணங்களிலேயே எந்நேரமும் உழன்றுக் கொண்டிருந்தார் அவர்.

இந்நிலையில் சாய்கிருஷ் ஐரோப்பா நாடுகளுக்கு ஒரு மாதம் சுற்றுப் பயணம் மேற்கொள்ள அனைத்து ஏற்பாடுகளையும் செய்திருந்தான். நாளை இரவு ப்ளைட், அவன் கிளம்ப வேண்டும் என்ற நிலை வந்தது.

அவ்வாய்ப்பை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள முடிவு செய்தார் சதா. அவன் கிளம்ப வேண்டிய நாளன்று, தன் அலுவலகத்துக்கு கூட செல்லாமல் வேண்டுமென்றே அவன் பார்க்க காலையிலிருந்து லிவிங் ரூமிலேயே முகத்தில் வருத்தத்தை பூசிக் கொண்டு சோர்வாக அமர்ந்திருந்தார்.

இதற்கும், அதற்கும் தன் வேலையில் கவனமாக போய் வந்துக் கொண்டிருந்த கிருஷ், மதியம் தான் தன் தந்தையை நன்றாக கவனித்தான்.

“ஹாய் டாட்! என்ன இன்று ஆபிஸ் போகவில்லையா? வீட்டிலிருக்கிறீர்கள்… உடல்நிலை எதுவும் சரியில்லையா என்ன?” என்று அருகில் அமர்ந்து கவலையுடன் அவரின் நெற்றியில் கை வைத்துப் பார்த்தான்.

“ப்ச்… உடம்புக்கு என்ன? அதெல்லாம் நன்றாக தான் இருக்கிறது. மனது தான் சரியில்லை…” என்றார் சோகமாக.

“மனதா…?” என்று ஒரு நிமிடம் அவர் முகத்தை பார்த்தவன், “அப்பொழுது சரி, நான் கூட ஹெல்த் பிராப்ளம் என்றால் ஹாஸ்பிடல் எதுவும் போக வேண்டுமோ ஹெல்ப் செய்யலாம் என்று பார்த்தேன். ப்ச்… மனது தானே… அதற்கு நான் என்ன செய்ய முடியும்? நீங்களே ஏதாவது பார்த்து செய்துக் கொள்ளுங்கள்!” என்று அசால்டாக கூறி விட்டு தன் அறையை நோக்கி நடக்க ஆரம்பித்தான் அவன்.

அவன் செயலில் ஒரு நொடி திகைத்தவர், ‘அடேய் பாவி… ரொம்ப நன்றாக வளர்த்தியிருக்கேன்டா உன்னை!’ என்று மனதினுள் சலித்துக் கொண்டு, “இதற்கும் உன்னால் மட்டும் தான் உதவ முடியும்!” என்று வேகமாக உரக்க கூறினார்.

‘எங்கே அவன் அறைக்குள் புகுந்து கொள்ளப் போகிறான் என்கிற அவசரம் வேறு…’

நெற்றி சுருங்க அவரை திரும்பி பார்த்தவன், “நானா?” என்று ஒற்றை வார்த்தையில் கேள்வி எழுப்பினான்.

“ஆமாம்… பிரச்சினையே உன்னால் தான் என்கிற பொழுது, நீதானே அதை தீர்க்க முயல வேண்டும்!” என்றார் அவனை நேராக நோக்கி.

“இப்பொழுது என்ன சொல்ல வருகிறீர்கள் நீங்கள்… இதுவரை என்னை பற்றி எந்த புகாராவது உங்களிடம் வருகின்ற அளவுக்கு நான் நடந்துக் கொண்டிருக்கின்றேனா கூறுங்கள்? பிறகு எப்படி உங்கள் மனக் கவலைக்கு என்னை பொறுப்பாளியாக்குகிறீர்கள்?” என்று நிதானமாக கேட்டான் கிருஷ்.

‘வந்திருக்கிறதுடா மகனே… வந்திருக்கிறது… ஆனால் அதைப் பற்றி பேசினால் நீ உஷாராகி விடுவாய், அதன் பிறகு என் திட்டம் வெற்றிப் பெறாது. ஸோ… உன் வழிக்கே வந்து உன்னை சிக்க வைக்கின்றேன்!’ என்று மனதிற்குள் சூளுரைத்தவர், எதிரில் தன்னை ஸ்கேன் செய்தபடி நின்றுக் கொண்டிருக்கும் மகனிடம் பேசினார்.

“உன்னை பற்றி புகார் எதுவும் வரவில்லை. ஆனால் மற்றவர் உன்னை குறித்து கேலிப் பேசி கேவலமாக எண்ணமிடுவதை தான் என்னால் காது கொண்டு கேட்க முடியவில்லை!” என்றார் குரல் கமற, அவன் இரக்கத்தை தூண்ட விழிகளை வேறு அடிக்கடி சிமிட்டி சிமிட்டி கலங்க வைக்க முற்பட்டார்.

புருவங்கள் முடிச்சிட நின்றவன், “அப்படியென்ன பேசுகிறார்கள்?” என்று அவரை ஆழ்ந்துப் பார்த்தான்.

“அது…” என இழுத்தபடி சுற்றும்முற்றும் பார்த்தவர், அவன் கரத்தை பிடித்து இழுத்துக் கொண்டு வேகமாக தன்னறைக்குச் சென்றார்.

வேலைக்காரர்கள் யார் காதிலேயும் விழுந்து விடக் கூடாதாம்…

தன் தந்தையின் செய்கையில் குழம்பியவன், ‘இவருக்கு திடீரென்று என்னவாயிற்று? ஏன் இன்று இவ்வாறு ஓவராக ரியாக்ட் பண்றார்?’ என்று அவருடன் நடந்தான்.

அறைக்குள் நுழைந்ததும் கதவை தாளிட்டவர், “அதை எப்படிடா என் வாயால் நான் சொல்லுவேன்? நினைக்கும் பொழுதே நெஞ்சமெல்லாம் பதறுகிறது!” என்றார் முகம் சுணங்க.

“ப்ச்… டாட்… அப்படி என்ன தான் சொன்னார்கள் என்று சொல்லப் போகிறீர்களா… இல்லையா?” என்றான் எரிச்சலுடன்.

‘ஐய்யையோ… கொஞ்சம் ஓவராக்ட் பண்ணிட்டோமோ, பொறுமையில்லாதவன்… சொல்ல வருவதை கேட்காமல் போய்விடப் போகிறான்!’ என்று அவசரமாக விவரத்தை கூறினார்.

“என்ன?” என்று அதிர்ந்தவன், கோபத்தில் முகம் சிவந்தான்.

“டேமிட்… யார் அப்படி சொன்னது? எவ்வளவு தைரியம் இருந்தால் என்னைப் பற்றி அப்படி குறை கூறியிருப்பார்கள்? என்னை அவர்களிடம் அழைத்துப் போங்கள், உண்டு இல்லையென்று செய்து விடுகின்றேன் நான்!” என்றான் கிருஷ் ஆக்ரோசமாக.

“ஆமாம்டா… ஒவ்வொருவரிடமும் போய் உன்னால் சண்டையிட்டுக் கொண்டிருக்க முடியுமா? காதுபட விழுந்தது இது, நமக்கு பின்னால் இன்னும் என்னென்ன பேசுகிறார்களோ… அனைவரின் பின்னும் போய் நாம் விளக்கம் கொடுத்துக் கொண்டிருக்க முடியுமா?” என்று அவனை முறைத்தார்.

“அதற்காக என்னை பற்றி குறை கூறியவர்களை எதுவும் செய்யாமல் சும்மா விடச் சொல்கிறீர்களா?” என்று சினந்தான்.

“அவர்களை நான் ஒன்றும் சும்மா விடச் சொல்லவில்லை, நம் செயலால் அவர்கள் வாயை அடைக்க வேண்டும் என்று தான் சொல்கிறேன்!” என்றார் சதா வார்த்தைகளில் அழுத்தம் கொடுத்து.

“எப்படி?” என்று கேட்டான் புரியாமல்.

‘அப்படி கேள்டா மகனே… இதற்காக தானே காது, மூக்கு என்று இத்தனையையும் சுற்றி வருகிறேன்!’ என்று குஷியானவர், “உடனடியாக நீ திருமணம் செய்துக் கொள்ள வேண்டும்!” என்று மெல்ல வார்த்தைகளில் வலு ஏற்றினார்.

“வாட்!” என்று பலமாக அதிர்ந்தவன், “என்ன பேசுகிறோம் என்று தெரிந்து தான் பேசுகிறீர்களா?” என்று டென்ஷனாக இதற்கும், அதற்கும் சில அடி தூரம் நடந்தான்.

“டாட்! இனி ஒரு தடவை இதைப் பற்றி என்னிடம் பேச முயற்சிக்காதீர்கள்!” என்று அவரை கடுப்புடன் பார்த்தான்.

“சரிடா விடு பேசவில்லை. இந்த வயதான காலத்தில், இவனுடைய மகன் ஆண்பிள்ளையே இல்லை… அதனால் தான் பெண்களை ஏறெடுத்தும் பார்க்க மாட்டேன் என்கிறான், திருமணமும் செய்யாமல் இருக்கின்றான் என்று பலர் கூற கேட்டு என் இதயம் வெடித்து சாகின்றேன் நான். அப்பொழுது என் தொல்லை எதுவும் இன்றி நீ தனிக்காட்டு ராஜாவாக சந்தோசமாக இரு, யாரும் உன்னை எதுவும் கேட்க மாட்டார்கள். ஆனால் ஊரே உன் பின்னால் நின்று கைக் கொட்டி சிரிக்கும்!” என்று மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்கப் பேசியவர் தளர்ந்துப் போய் சோபாவில் அமர்ந்தார்.

பதற்றத்தோடு அவரை நெருங்கிய கிருஷ், “ஏன் இவ்வளவு இமோஷனலாக பிஹேவ் செய்கிறீர்கள்? கன்ட்ரோல் யுவர்செல்ஃப்!” என்று அவர் நெஞ்சை தடவிக் கொடுத்தான், முகம் கலங்கியிருந்தது.

அதைக் கண்டவர் தன் பிடியை மேலும் இறுக்கினார், “நான் என்னடா செய்வேன்? உனக்காக தான்டா நான் உயிர் வாழ்வதே, எனக்கிருப்பது நீ ஒருவன் தானே… அப்படிப்பட்ட என் மகனை ஒருவர் குறைக் கூறுவதா?” என்றார் கண்கள் கலங்க.

“அதற்காக… அதற்காக வாணலிக்கு பயந்து அடுப்பில் விழச் சொல்கிறீர்களா?” என்றான் க்ருஷ் தவிப்போடு.

“இல்லைடாம்மா… நான் சொல்வதை ஏன் புரிந்துக் கொள்ள மாட்டேன் என்கிறாய்? பெண்கள் அனைவரும் தீயவர்கள் இல்லைடா… சிறு வயதில் முதிர்ச்சி இல்லாததால் உனக்கு அதை பகுத்தறிய தெரியாது என்பதால் தான்டா நான் அவ்வாறு தவறாக கூறி வளர்த்தேன். மற்றபடி நம் நாட்டில் சிறந்த பெண்கள் எத்தனையோ பேர் இருக்கிறார்கள்மா… நம் வீட்டுப் பெண்கள் கூட அப்படித்தான்டா உன் கொள்ளுப் பாட்டி, பாட்டி, அம்மா அனைவரும் மிகவும் நல்லவர்களே. உனக்கென்று நான் பார்க்கின்ற பெண் நிச்சயம் குணத்தில் வைரமாக தான் ஜொலிப்பாள். நம் வீட்டின் பாரம்பர்யத்திற்கு ஏற்றவளை தான் இந்த வீட்டிற்கு மருமகளாக நான் அழைத்து வருவேன். தயவுசெய்து என் பேச்சை நீ நம்பு!” என்று கெஞ்சினார்.

கம்பீரமான தன் தந்தையின் கெஞ்சல் அவன் மனதை பாதிக்க, “ஆனால்… எப்படி டாட்? இதுவரை எந்தப் பெண்ணையும் என்னோடு இணைத்து நான் எண்ணிப் பார்த்ததே இல்லை அப்படி இருக்கும்பொழுது…” என்று முதலில் தடுமாறியவன்,

“ம்ஹும்… இல்லை… என்னால் முடியாது, நான் திருமணம் எல்லாம் செய்துக் கொள்ள மாட்டேன். இந்தப் பேச்சை இத்தோடு விட்டு விடுங்கள், நான் கிளம்புகிறேன்!” என மீண்டும் தன் நிலையில் உறுதியாகி முகம் இறுக கதவை நோக்கி நடந்தான்.

“சரி… இறுதியாக இதையும் கேட்டு விட்டே போ… உன் சுற்றுப் பயணம் முடிந்து நீ சென்னை திரும்பும் பொழுது உன்னை வரவேற்க இந்த வீடு தான் இருக்கும். நான் உயிருடன் இருக்க மாட்டேன்!” என்றார் சதா உறுதியாக.

“டாட்!” என்று கூச்சலிட்டான் கிருஷ்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *