*19*

 

அறையின் வெளியிலிருந்த காரிடாரில் உள்ள சேரில் சாய்கிருஷ் அமர்ந்திருக்க, சுகந்தி பழரசம் எடுத்து வந்து அவனிடம் கொடுத்தார்.

லேசான தயக்கத்திற்கு பின் அதை எடுத்துக் கொண்டவனைப் பார்த்து, அவருக்கும் சங்கடமாக தான் இருந்தது. இருவரில் யார் மீது தவறு என்று தெரியாத நிலையில், யாரையும் ஆதரித்துப் பேச முடியாது.

உள்ளே சென்று கேசவனிடம் கொடுத்தவர் சுஹாவின் அருகில் அமர்ந்து அவளிடம் டம்ளரை நீட்டினாள்.

மறுபேச்சின்றி வாங்கி குடித்து முடித்தவள் அவர் தோளில் சாய்ந்துக் கொண்டாள். அவள் தலைமுடியை மென்மையாக வருடிக் கொடுத்தவர் உச்சியில் இதழ் பதித்தார்.

மௌனமே அங்கு குடியிருந்தது, யாரும் யாருடனும் பேசிக் கொள்ளவில்லை. சுகந்தியை பொறுத்தவரை கணவன் மனைவிக்கு இடையே எழும் பிரச்சனையில், அந்நியரின் தலையீடு அது பெற்றவர்களாக இருந்தாலும் இருக்க கூடாது என எண்ணுபவர்.

சுஹாவும் சளைத்தவள் இல்லை… தன்மானத்திலும், ரோசத்திலும் கைத்தேர்ந்தவள். கிருஷை தான் திருமணம் செய்துக் கொள்வேன் என்ற பேச்சை ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை அவனுக்கும், அவளுக்கும் இடையே என்ன பிரச்சினை நடந்தது என்று அவள் வாயைத் திறந்ததே இல்லை. யாரென்று சற்றும் அறிமுகமில்லாத ஒருவனுக்கு தன் பெண்ணை திருமணம் செய்து கொடுக்க அவளைப் பெற்றவர்களுக்கு அச்சமாக தான் இருந்தது. காதல் என்றாலும் ஏதோ ஒரு வகையில் பரவாயில்லை என்று ஏற்றுக் கொள்ளலாம், அதுவும் இல்லை ஆனால் அவனைத் தவிர வேறு எவரையும் நான் திருமணம் செய்து கொள்ள மாட்டேன் என அடம்பிடிப்பவளை என்னவென்று தான் செய்வது என்று குழம்பிய நேரத்தில் தான் சதா வந்து தீர்க்கமாக பேசி அவள் வாழ்விற்கு நான் பொறுப்பு என முடித்து வைத்தார்.

இப்பொழுதும் அப்படித்தான் உம்மென்று அமர்ந்திருந்தாளே தவிர எதுவும் பேசவில்லை.

“சரி மணி தான் ஏழாகப் போகிறதே… நைட்டுக்கு டிபன் எதுவும் செய்யட்டுமா கிச்சனில் என்ன இருக்கிறது? வா போகலாம்!” என்று சுஹாவை அழைத்துக் கொண்டு கேசவனிடம் கண் ஜாடை காட்டிவிட்டு கீழே சென்றார் சுகந்தி.

அவரும் அதைப் புரிந்துக் கொண்டு, கிருஷிடம் சென்று சதா எங்கே என்று விசாரித்தபடி பொதுவாக பேசிக் கொண்டிருந்தார்.

சப்பாத்தியும், குருமாவும் செய்து டைனிங்கில் எடுத்து வைத்து விட்டு, “சரி போய் அப்பாவையும், தம்பியையும் சாப்பிட அழைத்து வா!” என்று சுஹாவிடம் கூறினார் சுகந்தி.

முகத்தை சுருக்கியவள், “நீங்கள் போய் கூப்பிடுங்கள், நான் தண்ணீர் எடுத்து வைக்கின்றேன்!” என்று உள்ளே புகுந்து கொண்டாள்.

மறுப்பாக தலையசைத்தபடி ஹும்… என்று பெருமூச்சு விட்டவர் மாடிக்குச் சென்றால் அங்கே கேசவன் மட்டும் தனியாக அமர்ந்திருந்தார்.

“தம்பி எங்கே?”

“ம்… அவர் போன் வந்தது என்று பேசிக் கொண்டிருக்கிறார்!”

“சரி… சாப்பிட்டு முடித்த பின் நாம் வீட்டிற்கு கிளம்பலாம்!”

“என்ன இப்பொழுதேவா? அவர்கள் இருவரும் இன்னும் பேசிக் கொள்ளவேயில்லையே, சுஹாவும் உர்ரென்றே இருக்கிறாள்!”

“அதையெல்லாம் பார்த்தால் ஆகுமா? நாம் இருவரும் இங்கே இருக்கும் வரை கண்டிப்பாக அவர்கள் பேசிக் கொள்ள மாட்டார்கள். நாம் கிளம்பலாம், அவர்களுக்குள் முட்டி மோதிக் கொண்டு வரட்டும். கணவன், மனைவி என்றால் அப்படிதான் சிறு சிறு சச்சரவுகள் வரத் தான் செய்யும். ஏன் நமக்குள் வந்ததில்லை?” என்றார் சுகந்தி கேள்வியாக.

“ஏன் வந்ததில்லை? அது வருமே மாதத்துக்கு இரு முறை… அதிலும் பாதி நேரம் நானாக தான் வந்து பேச வேண்டும், நீ பேசமாட்டாய்!” என்றார் கேசவன் குறையாக.

“ம்… நன்றாக யோசித்துச் சொல்லுங்கள், தவறு யார் மீது இருக்கும் பொழுது நான் அப்படி நடந்துக் கொள்வேன்!” என்றார் அவரை செல்லமாக முறைத்தபடி.

“ஹிஹி… சரி சரி விடு, மாப்பிள்ளை வந்து விட்டார் வா சாப்பிடப் போகலாம்!” என்று லேசாக அசடு வழிந்தார் அவர்.

மடமடவென்று விரைவாக சாப்பிட்டு முடித்த சுஹா, “சரி நான் தூங்கப் போகிறேன், எனக்கு தூக்கம் வருகிறது!” என்று விட்டு மற்றவரின் பதிலை எதிர்பாராமல் மாடியேறினாள்.

கிருஷ் அவள் புறம் ஒருமுறை பார்வையை செலுத்தி விட்டு, தலைக்குனிந்தபடி சாப்பிட ஆரம்பித்தான்.

அனைத்தையும் ஒதுங்க வைத்து விட்டு கிருஷிடம் வந்த சுகந்தி, “சரி தம்பி அப்பொழுது நாங்கள் வீட்டிற்கு கிளம்புகிறோம்!” என்றார்.

அதைக்கேட்டு திடுக்கிட்டவன், “என்ன கிளம்புகிறீர்களா எங்கள் இருவரையும் தனியாக விட்டு விட்டா?” என்றான் படபடத்தபடி.

“இதிலென்ன இருக்கின்றது நீங்கள் இருவரும் குழந்தைகளா என்ன? இவ்வளவு பெரியவர்களாகி திருமணம் முடித்திருக்கிறீர்கள்… பிறகென்ன?” என்றார் கேலியாக.

“அதில்லை அத்தை… அவள் இன்னும் என் மீது கோபமாக இருக்கிறாளே?” என்றான் தயக்கத்துடன்.

மெல்லப் புன்னகைத்தவர், “இருக்கட்டும் அரசியலில் இதெல்லாம் சாதாரணமப்பா… என்பது போல் குடும்பஸ்தனாகி விட்டால் இதெல்லாம் பழகிக்க தான் வேண்டும். என்ன பிரச்சினை என்பதை பேசித் தெரிந்து கொள்ளுங்கள், அவள் சொல்லும் வரை விடாதீர்கள். அதற்கான உரிமை உங்களுக்கு முழுதாக இருக்கிறது. நடப்பவை எல்லாமே புதுசாக இருப்பதால் இவ்வளவு பதறுகிறீர்கள், வாழ்க்கையில் இதெல்லாம் அனுபவப் பாடம் என்று கற்றுக் கொள்ள முயற்சியுங்கள். இன்னும் எவ்வளவோ இருக்கிறது… முன்பு மாதிரி நீங்கள் தனி மனிதர் இல்லை, உங்கள் பெண்டாட்டியின் மனநிலையினை பொறுத்து தான் உங்களின் சந்தோசம் இருக்கும், அதுமாதிரி தான் அவளுக்கும். தைரியமாக இருங்கள், எப்பொழுதும் அவள் தவறான முடிவுக்கு போகவே மாட்டாள், அதேபோல் என்றும் உங்களை விட்டு பிரியவும் மாட்டாள்!” என்றார் தெளிவாக.

பளிச்சென்று மலர்ந்தவன், “தாங்க்ஸ் அத்தை!” என்றான் அவர் கைகளை பற்றிக்கொண்டு.

அவன் கைகளை அழுத்தியவர், “ஒன்றை மட்டும் நன்றாக நினைவில் வைத்துக் கொள்ளுங்கள் சுஹா மட்டும் தான் எங்களுக்கு மகள் என்றில்லை, என்று அவள் கழுத்தில் தாலி கட்டினீர்களோ… அன்றிலிருந்து நீங்களும் எனக்கு மகன் தான்!” என்றார் கனிவாக.

“ஆமாம் மாப்பிள்ளை… அதோடு நானும் உங்களுக்கு அப்பா தான்!” என்று வேகமாக சைட் கேப்பில் உள்ளே நுழைந்தார் கேசவன்.

அதைக்கேட்டு சிரித்தவனிடம், “சரி பார்த்துக் கொள்ளுங்கள், ஒரு சில விஷயங்களில் அவளுக்குப் பிடிவாதம் ஜாஸ்தி. இனிமேலாவது ஒருவரையொருவர் புரிந்துக் கொள்ள முயற்சி செய்யுங்கள்!” என்று விடைப்பெற்றனர்.

அவர்கள் சென்றதும் கதவை தாளிட்ட கிருஷ், லேசான படபடப்புடன் சுஹா தங்கியிருந்த அறைக்குச் சென்றான்.

விழிகளை இறுக்க மூடி கட்டிலில் படுத்திருந்தவளை நெருங்கியவனுக்கு அவள் உறங்கவில்லை என்பது நன்றாகவே தெரிந்தது. கண்ணின் கருமணிகள் ஒரு இடத்தில் நிலையாக இல்லாமல் இதற்கும், அதற்கும் நர்த்தனமாடிக் கொண்டிருந்தது.

ஒரு நிமிடம் அமைதியாக நின்றவன் பின் மெல்ல, “சுஹா…” என்று அழைத்தான்.

அவளிடம் அசைவில்லை, ஆனால் முகம் யோசனையில் சுருங்கியது.

‘இப்பொழுது இவன் எதற்கு இங்கே வந்து நிற்கின்றான்? எல்லாம் இந்த அம்மாவின் வேலையாக தான் இருக்கும், போய் அவளிடம் பேசு விடாதே என்று அனுப்பி இருப்பார்கள். ச்சே…’ என்று எரிச்சலடைந்தாள்.

அவள் பதிலின்றி இருக்கவும் மீண்டும் அழைத்தபடி அவள் கரத்தினை தொட்டான் கிருஷ். சட்டென்று விழித்தவள், வேகமாக அவன் கரத்தை தட்டிவிட்டபடி எழுந்து அமர்ந்தாள்.

“இந்த தொட்டுப் பேசுகின்ற வேலையெல்லாம் என்னிடம் வைத்துக் கொள்ளாதீர்கள். இன்னொரு முறை என்னை தொட்டீர்கள் என்றால் நான் மனுஷியாகவே இருக்க மாட்டேன்!” என்று எகிறினாள் சுஹா.

அவன் அவளையே பரிதாபமாக பார்க்க, “என்ன இதெல்லாம் உங்கள் மாமியாரின் வேலையா? முதலில் நீங்கள் வெளியே செல்லுங்கள், அவர்களை வரச் சொல்லுங்கள்!” என்றாள் முகத்தை இறுக்கியபடி.

“இல்லை… அவர்கள் இருவரும் வீட்டிற்கு சென்று விட்டார்கள்!” என்றான் மெல்ல.

“என்ன?” என்று திகைத்தவள், “ச்சே…” என்றவாறு முகத்தை திருப்பிக் கொண்டாள்.

சில நிமிடங்கள் அங்கே அமைதி நிலவியது. சுஹாவிடம் எப்படி பேச்சை ஆரம்பிப்பது என்று புரியாமல் கிருஷ் தடுமாறிக் கொண்டிருக்க, அவளோ அவன் முகத்தை பார்க்கப் பிடிக்காமல் இறுகிப் போய் அமர்ந்திருந்தாள்.

“சுஹா… வந்து… ஆக்ட்சுவலி வைபவை பார்த்ததால் உண்டான பழைய நினைவுகளின் தாக்கத்தால் தான் நான் அவ்வாறு கோபமாக நடந்துக் கொண்டேன். ப்ளீஸ் ஐ ஆம் சாரி… இனி அது மாதிரி சிட்சுவேசன் வராமல் கண்டிப்பாக கவனமாக நடந்துக் கொள்கிறேன்!” என்று மன்றாடினான் கிருஷ்.

“வராமல் பார்த்துக் கொள்வீர்களா? ஹும்… இனி வருவதற்கும் நடப்பதற்கும் என்ன பாக்கி இருக்கிறது?” என்று முதலில் சலித்தவள் பின்பு பாம்பாக மாறி சீறினாள், “அங்கே லிஃப்டில் என்ன நடந்தது என்று தெரியுமா? என் பக்கத்தில் நின்ற ஒரு தெருப்பொறுக்கி நாய், கூட்டம் அதிகமாக இருப்பதை பயன்படுத்திக் கொண்டு என் இடுப்பைத் தடவினான். ஐயோ… கண்டவனுடைய கரம் என் மேல் படுகிறதே என்று பதறிப் போய் உங்களை பிடித்துக் கொண்டு நெருங்கி நின்றால், அவர்களின் முன்னாலேயே நீங்கள் என்னை அசிங்கப்படுத்துவீர்கள்… ஹாங்?” என்று கோபத்தில் முகம் சிவக்க கேள்வி எழுப்பினாள்.

இதை சற்றும் எதிர்பார்க்காத கிருஷ் பலமாக அதிர்ந்தான். சுவாஹனா… என்று அவன் தொண்டையில் இருந்து எழுந்த வார்த்தைகளின் ஒலி அவன் இதழை விட்டு வெளி வராமலேயே மீண்டும் உள்ளே திரும்பியது. அந்த நேரத்தில் அவள் எப்படி துடித்திருப்பாள் என்பதை உணர்ந்து அவன் நெஞ்சம் பதறியது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *