*18*

 

புயலென வீட்டின் உள்ளே விரைந்த சாய்கிருஷ், ஒரு நப்பாசையில் முதலில் தன் அறைக்கு தான் ஓடிச் சென்று பார்த்தான்.

சுஹா அங்கே இல்லை என்றதுமே அவன் மனம் மிகவும் துவண்டு போனது, தன் மேல் அவள் எல்லையில்லா கோபத்தில் இருக்கின்றாள் என்பது புரிந்தது.

வேக வேகமாக ஒவ்வொரு அறையாக திறந்து பார்த்தான், எதிலும் அவள் இல்லாமல் இருக்கவும் மீண்டும் அவனை பதற்றம் பீடித்துக் கொண்டது.

அடுத்த அறையை திறக்க முயல, அது உள்ளே தாளிடப்பட்டிருந்தது.

நிம்மதியடைந்தவன், “சுவாஹனா…” என்று கதவைத் தட்டி மெல்ல அழைத்தான்.

எந்த எதிரொலியும் இல்லாமல் அறையினுள் நிசப்தம் நிலவியது. உள்ளே இருக்கின்றாளா இல்லையா… என்று குழம்பியவன், சுவாஹனா என உரக்க அழைத்துப் பார்த்தான்.

மீண்டும் அமைதியே நிலவ, ஏதாவது விபரீத முடிவு எடுத்து விட்டாளா… என்று நடுங்கியவன், “ஏய் சுஹா… கதவை திற, ப்ளீஸ்மா… வெளியே வந்து என்னை திட்டு, அடி என்ன வேண்டுமென்றாலும் செய். ஆனால் தயவுசெய்து குரல் கொடும்மா… கதவை திற எனக்கு பயமாக இருக்கிறது!” என படபடவென்று கதவைத் தட்டினான்.

அழுது அழுது ஓய்ந்து போயிருந்த சுஹா தன்னையுமறியாமல் மெல்ல கண்ணயர்ந்திருந்தாள்.

கிருஷ் படபடவென்று கதவை தட்டியதால் லேசாக உணர்வு திரும்பியவளுக்கு அவனுடைய குரல் முதலில் கிணற்றுக்குள்ளிருந்து கேட்பது போல் தான் கேட்டது.

மெதுவாக விழிகளை மூடி மூடி திறந்தவள் தள்ளாடியவண்ணம் எழுந்து கதவில் சாய்ந்து அமர்ந்தாள்.

வெகுவாக அழுததாலும், உணவு உட்கொள்ளாததாலும் உடலில் தெம்பில்லாமல் சோர்வுடன் இருந்தவளுக்கு மெல்ல கிருஷின் குரல் தெளிவாக கேட்க ஆரம்பித்தது.

“சுவாஹனா… ப்ளீஸ் கதவை திறயேன், நீ என்ன சொன்னாலும் நான் கேட்கின்றேன். ஆனால் கதவை மட்டும் திறந்து விடு ப்ளீஸ்… உனக்கு என் மேல் என்ன கோபமென்றாலும் அதை என்னிடம் காட்டு. தயவுசெய்து கதவை திற, உன்னை கெஞ்சிக் கேட்கின்றேன்!” என கலங்கிய குரலோடு மீண்டும் மீண்டும் பழைய வார்த்தைகளையே கூறி கெஞ்ச ஆரம்பித்தான் கிருஷ்.

அவனுடைய பேச்சுக்கள் காதில் விழவும் தெம்பில்லாத நிலையிலும் ஆவேசமும், ஆங்காரமும் பெருகியது சுஹாவிற்கு. கிருஷ் தன்னை மாலில் அவமானப்படுத்திய விதம் கண் முன்னே நிழற்படமாய் ஓட வெறியுடன் தரையை ஓங்கி குத்தினாள்.

விழிகளிலிருந்து மீண்டும் சூடாக நீர் பெருகி வழிந்தது. இதழ் கடித்து வேதனையுடன் ஓசையின்றி மறுபடியும் தேம்பி தேம்பி அழ ஆரம்பித்தாள் அவள். ஆனால் அவனுக்கு பதிலளிக்க வேண்டும் என்ற எண்ணம் மட்டும் அவளுக்கு கிஞ்சித்தும் தோன்றவில்லை.

மறுபுறமோ சுஹா பதிலின்றி தொடர்ந்து அமைதியாக இருக்கவும் கிருஷ் மிரண்டு நடுநடுங்கிப் போனான்.

பெரும்பான்மையான நேரம் சினிமாக்களை பார்த்தே வளர்ந்து வந்திருந்த அவனுடைய கற்பனையில் ஏதேதோ காட்சிகள் தோன்றி அவனை திகிலடைய வைத்தது.

கை, கால்கள் சில்லிட நடுக்கத்துடன் தரையில் சரிந்து அமர்ந்தவன் மனதில் சுஹாவை சுற்றியே எண்ணங்கள் சுழன்று கொண்டிருந்தது. மூளை மரத்து போய் கதவோடு ஒண்டி அமர்ந்திருந்தவனை அவனுடைய மொபைல் அழைத்தது.

அதை எடுக்க கூட தோன்றாமல் அறையின் கதவையே வெறித்து கொண்டிருந்தான் அவன். இரண்டு, மூன்று முறை இடைவிடாமல் அடுத்தடுத்து தொடர்ந்து அழைப்புகள் வரவும் மெல்ல விழிகளை அசைத்தவன் நடுங்கும் கரங்களால் மொபைலை எடுத்துப் பார்த்தான்.

கேசவன்… சுஹாவின் தந்தை!!

உணர்வுகள் பொங்கி வெடிக்க கால்லை பிக்கப் செய்தவன் அவரிடம் கதறி அழ ஆரம்பித்தான்.

“மாமா… மாமா… சுஹா கத… கதவையே திற… திறக்க மாட்டேன் என்கிறாள். என… எனக்கு… எனக்கென்னவோ மிகவும் பய… பயமாக இரு… இருக்கிறது…” என மூச்சு விடவே சிரமப்பட்டு கொண்டு கிருஷ் திணறி திணறிப் பேசவும் அந்த புறமிருந்த கேசவன் பலமாக அதிர்ந்து போனார்.

“மாப்பிள்ளை… மாப்பிள்ளை… இங்கே பாருங்கள், நான் சொல்வதை முதலில் கொஞ்சம் அமைதியாக கேளுங்கள். அவளுக்கு ஒன்றும் ஆகியிருக்காது நீங்கள் தைரியமாக இருங்கள், அசதியில் கொஞ்சம் தூங்கியிருப்பாளாக இருக்கும். இதோ… உடனே கிளம்பி இப்பொழுதே நாங்கள் அங்கே வருகிறோம் பயப்படாதீர்கள்!” என்றார் அவசர அவசரமாக.

“ஆங்… சரி சீக்.. சீக்… கிரம் சீக்கிரம் வாருங்கள்!” என்றான் அடைத்த குரலில்.

“இதோ கிளம்பிவிட்டேன்!” என்று லைனை கட் செய்தார் அவர்.

அப்படியே மொபைலை கீழே போட்டவன் கதவில் சாய்ந்துக் கொண்டு கண்கள் மூடி சுஹா… சுஹா என்று அரற்ற ஆரம்பித்தான்.

இதுவரை விவரம் தெரிந்த நாளிலிருந்தே இது போன்ற சண்டை, சச்சரவுகளோ, இழப்புகளோ எதையும் சிறு அளவில் கூட பார்த்து அறியாமல் வளர்ந்தவனுக்கு அப்பொழுதிருக்கும் சூழ்நிலையை சற்றும் தாங்கி கொள்ள முடியவில்லை.

“கடவுளே… எனக்கு என் சுஹா வேண்டும், அவளில்லாமல் என்னால் ஒரு நிமிடம் கூட வாழ முடியாது. ப்ளீஸ்… இனி நான் அவளிடம் எதற்கும் சண்டைப் போட மாட்டேன், கத்த மாட்டேன். அவள் என்ன சொன்னாலும் கேட்கின்றேன், ஆனால் தயவுசெய்து அவளை என்னிடம் கொடுத்து விடு!” என்று குழந்தையாக மாறி மெல்லிய குரலில் பிதற்ற ஆரம்பித்தான் கிருஷ்.

இவை அனைத்தையுமே கதவின் மறுபுறம் இருந்து கேட்டுக் கொண்டிருந்த சுஹா கல்லாக இறுகி சமைந்திருந்தாள். அவன் பால் அவளுக்கு சற்றும் மனம் இறங்கவில்லை, அவனுடைய செயலே திரும்ப திரும்ப மனதினில் ஓடி அவளை ஆக்ரோஷம் குறையாமல் பார்த்துக் கொண்டது.

சரியாக நாற்பத்தைந்தாவது நிமிடத்தில் கிருஷின் எதிரே நின்ற கேசவன், சுகந்தி தம்பதியனர் அவனுடைய நிலையை கண்டு அதிர்ந்து போயினர்.

‘ஐயோ… இவன் ஏன் இப்படி புயலில் சிக்கிய மலராக அலைக்கழிந்துப் போய் அமர்ந்திருக்கின்றான்?’

“மாப்பிள்ளை!” என்று கேசவன் மெல்ல அவன் தோளை தொட,

அவர்களை கண்டு குதித்து எழுந்தவன், “வந்துவிட்டீர்களா… முதலில் அவளை கதவை திறக்க சொல்லுங்கள். நான் அவளை பார்க்க வேண்டும், எனக்கு பயமாக இருக்கிறது!” என மீண்டும் பிதற்ற ஆரம்பித்தான்.

தன் சுய உணர்விலேயே இல்லாமல் அவன் புலம்ப ஆரம்பித்தது அவர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியது.

“இங்கே என்னை பாருங்கள், ரிலாக்ஸ்… ரிலாக்ஸ்… சுஹா இப்பொழுது கதவை திறந்து விடுவாள் பாருங்கள்!” என்று அவன் முதுகை தடவியவாறு ஆறுதல்படுத்த முயன்றார் கேசவன்.

“இல்லை… அவள் திறக்கவே மாட்டேன் என்கிறாள்!” என்றான் கிருஷ் விம்மி வெடித்த கேவல்களுக்கிடையே.

அதைக்கண்டு சுகந்தியின் தாயுள்ளம் துடித்துப் போனது, ‘ஐயோ… என்ன பெண் இவள்? இவனுடைய குழந்தை உள்ளத்தை புரிந்துக் கொள்ளாமல் எதற்கு இப்படி அடாவடித்தனம் செய்து கொண்டிருக்கிறாள்? அவன் மேல் ஆயிரம் தவறுகள் இருந்தாலும் இப்படியா சிந்தை கலங்கும் அளவுக்கு கல்லாக உள்ளே அமர்ந்திருப்பது?’ என சினம் கொண்டார்.

வேகமாக கதவருகே சென்றவர், “ஏய் சுஹா… ஒழுங்கு மரியாதையாக கதவைத் திறடி. இப்பொழுது மட்டும் நீ கதவை திறக்கவில்லை நான் என்ன செய்வேன் என்று எனக்கே தெரியாது!” என்று படபடவென்று தட்டினார்.

கேசவனை விட்டு விலகி கதவருகே வந்த கிருஷ், உயிரை கையில் பிடித்துக் கொண்டு அவளின் தரிசனத்துக்காக காத்திருந்தான்.

தன் அம்மாவின் குரல் கேட்டதும், இதற்கு மேல் தாமதிக்க முடியாது என்றுணர்ந்த சுஹா மெல்ல எழுந்து கதவைத் திறந்தாள்.

அடுத்த நொடி உள்ளே நுழைந்த சுகந்தி சுஹாவின் கன்னத்தில் ஓங்கி பளாரென்று ஓர் அறை விட்டார்.

சுஹா தலைக்குனிந்தபடி அமைதியாக நிற்க, கேசவன் சற்று திடுக்கிட்டாலும் கிருஷின் நிலையை பார்த்திருந்ததால் பேச்சின்றி அமைதிக் காத்தார். அவராலும் அவளுடைய செயலை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

கிருஷ் தான் பதறிப் போனான் வேகமாக அருகில் வந்தவன், “ஏன்… ஏன் அவளை அடிக்கிறீர்கள்? தவறெல்லாம் என் மீது தான். நான் தான் அவளுக்கு பிடிக்காத ஏதோ ஒன்றை செய்து விட்டேன். அடிக்க வேண்டுமென்றால் என்னை அடியுங்கள்!” என்றான் சுகந்தியின் கரத்தை பிடித்து இழுத்து.

“என் அம்மா என்னை அடிக்கிறார்கள் என்னவோ செய்கிறார்கள்… இதில் உங்களுக்கென்ன வந்தது நீங்கள் வெளியே போங்கள்!” என்று கோபத்தில் எடுத்தெறிந்துப் பேசினாள் சுஹா.

“சுஹா…” என்று அவளை அதட்டிய சுகந்தி, “தான் என்ன தவறு செய்தோம் என்பதை கூட புரிந்துக் கொள்ள முடியாத ஒரு மனிதனையா நீ இவ்வளவு நேரமாக தண்டித்துக் கொண்டிருந்தாய்?” என்று ஆத்திரத்துடன் வினவினார்.

“ஆமாம்… ஆமாம்… உங்கள் மருமகனுக்கு வாயில் விரல் வைத்தால் கூட கடிக்கத் தெரியாது அப்படியே தொட்டிலில் போட்டு தாலாட்டுங்கள்!” என்று அவளும் பதிலுக்கு எகிறினாள்.

அவளிடம் சுகந்தி கோபமாக எதையோ பேச வாய் திறக்க, “சுகந்தி!” என்று அவரை அடக்கினார் கேசவன்.

புருவத்தை நெறித்தபடி அவர் அவரிடம் திரும்ப, விழிகளாலேயே இருவரையும் சுட்டிக் காட்டினார் அவர்.

அப்பொழுது தான் சுஹாவின் முகத்தை கவனித்த சுகந்தி அவளும் வெகுநேரமாக அழுதழுது ஓய்ந்து போயிருக்கின்றாள் என்பதை புரிந்துக் கொண்டார்.

லேசாக பெருமூச்சு விட்டவர், “சரி நான் போய் அனைவருக்கும் குடிக்க ஏதாவது எடுத்து வருகிறேன்!” என்று வெளியேறினார்.

கிருஷ் ஏக்கத்துடன் சுஹாவின் அருகில் செல்ல, “மரியாதையாக இந்த அறையை விட்டு வெளியே போங்கள்… எனக்கு உங்களை பார்க்க பிடிக்கவில்லை!” என்று வாயிலை நோக்கி கை காட்டினாள் அவள்.

“சுஹாம்மா…” என்று கேசவன் எதையோ சொல்ல முயல அதை தடுத்தாள் அவள்.

“அப்பா ப்ளீஸ்… என்ன நடந்ததென்று தெரியாமல் அம்மாவை போலவே நீங்களும் என் மேல் கோபப்படவோ, என்னை சமாதானப்படுத்தவோ முயலாதீர்கள்!” என்றாள் கண்டிப்புடன்.

“அதற்கில்லைம்மா… பேசினால் தானே பிரச்சினை என்னவென்று புரியும்?” என்றார் அமைதியாக.

“இல்லைப்பா… எதையும் நான் புரிந்துக் கொள்ள வேண்டிய அவசியமில்லை. முதலில் அவரை வெளியில் போகச் சொல்லுங்கள்!” என்றாள் சுஹா கெடுபிடியாக.

அழுதழுது இமைகள் வீங்கியிருந்த அவள் முகத்தை வேதனையோடு பார்த்தவன், “பரவாயில்லை மாமா… நான் வெளியே போகின்றேன்!” என்று சோர்வாக அறையை விட்டு வெளியேறினான் கிருஷ்.

அவன் முதுகை வெறுப்புடன் பார்த்தவள் முகத்தை திருப்பிக் கொண்டாள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *