*10*

 

கைகளில் காபி கப்போடு கதவைத் திறந்த சுவாஹனா, சாய்கிருஷின் குழம்பிய முகத்தை கண்டு உள்ளுக்குள் நகைத்தாள்.

“இந்தாடா செல்லம் காபி!” என்று அவனிடம் நீட்டினாள்.

பல்லைக் கடித்தவன், “ஏய்… இங்கே பாருடி… சும்மா சும்மா ‘டா’ போட்டு பேசினாய் என்றால் பல்லை தட்டி கையில் கொடுத்து விடுவேன் ஜாக்கிரதை!” என்று விழிகளை உருட்டினான்.

“ஆங்… நீங்கள் மட்டும் டீ சொல்லலாமா?” என எதிர்கேள்வி கேட்டு உதட்டை சுழித்தாள் சுஹா.

“நான் உன்னை விட நான்கு வயது பெரியவன்டி!” என்றான் கிருஷ் அலட்டலாக.

“ம்க்கும்… ஏழெட்டு வயது வித்தியாசம் உள்ள தம்பதியர்களே டா, டீ போட்டு தான் பேசுகிறார்கள். நான்கு வயதிற்கு இந்த அலட்டல், கரன்ட் ட்ரென்ட் தெரிந்தால் தானே… ஒன்றுமே தெரிவதில்லை!” என்று அவன் கையில் காபியை கொடுத்து விட்டு அசால்டாக சென்று கட்டிலில் அமர்ந்தாள் சுஹா.

‘இவள் என்ன சொல்கிறாள்? இது உண்மையா என்ன… இல்லை என்னை எதுவும் ஏமாற்றப் பார்க்கிறாளா?’ என்று புருவம் சுருக்கியபடி அவளை நோட்டமிட்டவாறே காபியை அருந்தினான்.

“என்ன?” என்று வினவியபடி அவனைப் பார்த்து கண்சிமிட்டினாள் அவள்.

‘ஏய்… இவள் என்ன இப்படியெல்லாம் செய்கிறாள்? சொன்ன மாதிரியே மேனகை வேலையெல்லாம் செய்கிறாள் போலிருக்கிறதே… இவளிடம் எப்பொழுதும் கவனமாக இருக்க வேண்டும். ஆனால் இந்த விஸ்வாமித்திரர் மேனகையிடம் எந்த விஷயத்தில் ஏமாந்தார் என்று தெரியவில்லையே… அதைப் பற்றிய விவரம் தெரிந்தாலாவது அதில் கூடுதல் கவனமாக இருக்கலாம். யாரிடம் கேட்டு தெரிந்து கொள்வது? இவளிடம் கேட்டாலும் வேண்டுமென்றே உண்மையை சொல்லாமல் திசை திருப்பி விடுவாள்!’ என தீவிரமாக சிந்தித்தான்.

“எவ்வளவு நேரமாகடா இந்த ஒரு கப் காபியை குடிப்பாய்?” என்று கேஷுவலாக அருகில் வந்தவளின் கரம் பற்றி சுழற்றி இழுத்தான் கிருஷ்.

அவன் இழுத்த வேகத்தில் அவனுடைய நெஞ்சிலேயே தன் முதுகு மோத விழுந்தாள் சுஹா.

“இங்கே பாருடி… என் பொறுமைக்கும் ஓர் எல்லை உண்டு, இப்படியே அனைவர் முன்னும் ‘டா’ போட்டு அழைத்து கொண்டிருந்தாய் என்றால் என்ன செய்வேன் என்று எனக்கே தெரியாது!” என்று எச்சரித்தான் அவன்.

அண்ணார்ந்து அவன் விழிகளையே நோக்கியவள், “என்ன செய்வீர்கள்?” என்று கிசுகிசுத்தாள்.

அவள் பேச்சிலும், பார்வையிலும் சட்டென்று திகைத்தவன் அப்பொழுது தான் சுஹாவின் மேனி தன் மேல் முழுமையாக சாய்ந்திருப்பதை உணர்ந்தான்.

இதயம் தடதடக்க விரைவாக அவளை நேராக நிறுத்தியவனின் முகத்திலுள்ள பதட்டத்தை கவனித்தவள் சரி இப்பொழுது இது போதும் என்று எண்ணியவளாய், “சரி… ஓகே என்ன இருந்தாலும் என் கணவனின் கௌரவம் இனி என் சம்பந்தபட்டது. அதனால் தனிமையில் மட்டும் ‘டா’ போட்டு கொள்கிறேன், மற்றவர் முன் மரியாதையாக பேசுகிறேன். ஓகே?” என்று சமரசத்திற்கு இறங்கி வந்தாள்.

முகத்தை சுளித்தவன் மொபைலை கையில் எடுக்க, வேகமாக அதனை அவனிடமிருந்து பிடுங்கினாள் சுஹா.

“ஏய்… உனக்கு இப்பொழுது என்னடி வேண்டும்?” என்று எரிச்சலுடன் கேட்டான் கிருஷ்.

“என்ன கேட்டாலும் தருவீர்களா?” என்று தலைசாய்த்து கொஞ்சும் குரலில் கேட்டாள்.

“ம்… கைகேயி லெவலுக்கு திங் பண்ணாதே, நான் ஒன்றும் தசரதன் இல்லை நீ கேட்பதை கொடுத்து விட்டு விழிப்பதற்கு. ஹும்…” என்று தலையை அலட்சியமாக சிலுப்பினான்.

“ஹேய்… ராமாயணமெல்லாம் தெரியுமா உங்களுக்கு?” என்று ஆச்சரியமாக கேட்டாள்.

“ஏன் தெரியாது… அது தான் சினிமாவே இருக்கின்றதே!” என்றவனை வினோதமாக பார்த்தாள் அவள்.

“அப்பா… எப்பொழுது பார் சினிமாவே பார்த்து கொண்டிருப்பீர்களா? நிறைய படங்களிலிருந்து எடுத்துக்காட்டு சொல்கிறீர்கள்? ஒரே போராக இருக்காது…” என்று சலிப்புடன் வினவினாள்.

பேச்சு சுவாரஸியத்திலிருந்த அவளிடம் இருந்து மெல்ல மொபைலை வாங்கியவன் அதை ஓப்பன் செய்தவாறு, “பின்னே… வேறு என்ன செய்ய சொல்கிறாய்? அப்பாவுக்கு பிஸினஸ் கமிட்மென்ட்ஸ் அதிகம், அதனால் பெரும்பாலும் வீட்டில் நான் மட்டும் தான் தனியாக இருப்பேன். ஒன்று வீடியோ கேம்ஸ் விளையாடுவேன் இல்லை ஏதாவது சினிமா பார்ப்பேன் அதுவும் போரடித்தால் புக்ஸ் படித்து கொண்டிருப்பேன்!” என்று அசுவாரஸியமாக கூறியவனையே இமைக்காது பார்த்தாள் சுஹா.

‘இவன் உண்மையிலேயே பாவம் தான்… சிறு வயதில் தனிமை என்பது எவ்வளவு கொடுமையான விஷயம்? பள்ளி விட்டு வந்ததுமே முதல் வேலையாக அன்று நடந்ததை அம்மாவிடம் ஒப்புவிக்கவில்லை என்றால் எனக்கு தூக்கமே வராதே… அதே போல் எனக்கு விருப்பானதை செய்ய, என்னுடன் விளையாட என்று அப்பா, அம்மா இருவருமே எவ்வளவு போட்டி போடுவார்கள். ஆனால் இவனுக்கு அது மாதிரி எதுவும் ஏக்கங்களோ, ஏமாற்றங்களோ இருப்பது போல் தெரியவில்லையே… இவ்வளவு கூலாக சொல்கிறான்!’

“ஏய்… என் முகத்தில் என்ன படமா ஓடுகிறது அப்படி பார்க்கிறாய்?” என்று அவள் முன் தன் கைகளை ஆட்டினான் கிருஷ்.

ஆங்… என்றவள் உடனே சுதாரித்து, “ஒன்றுமில்லை… யோசித்து கொண்டிருந்தேன்!” என்றாள்.

புருவம் சுருக்கியவன், “எதைப் பற்றி?” என்றான்.

அவனைப் பற்றி என்று சொன்னால் ஆத்திரம் கொள்ள போகிறான் என நினைத்தவள், “இத்தனை படங்கள் பார்த்தவருக்கு விஸ்வாமித்திரர் கதை தெரியவில்லையே என்று யோசித்தேன்!” என்று புன்னகைத்தபடி சமாளித்தாள்.

அது அவனுக்கு வசதியாக போய்விட, “விஸ்வாமித்திரர் பற்றி படம் இருக்கிறதா என்ன? அது என்ன படம்? எந்த வருடம் வந்தது?” என ஆர்வத்துடன் அடுக்கடுக்காக வினவினான்.

அவனுடைய அதிகப்படியான ஆர்வம் அவளுக்கு சந்தேகத்தை தூண்ட, “எதற்கு இவ்வளவு வேகம்?” என்று கண்களை இடுக்கினாள்.

‘அய்யோ… அவளுக்கு சந்தேகம் வந்து விட்டது போல…’ என்று தடுமாறியவன், “சும்மா தான் தெரிந்து கொள்ள கேட்டேன்!” என அலட்சியமாக தோள்களை குலுக்கினான்.

“ஆஹான்… ஆனால் எனக்கென்னவோ உங்களை பார்த்தால் சந்தேகமாக இருக்கின்றது நான் சொல்ல மாட்டேன்!” என்று காதுகளில் அணிந்திருந்த ஜிமிக்கிகள் ஆட மறுத்து தலையசைத்தாள்.

தன்னையுமறியாமல் அதன் ஆட்டத்தை ரசித்த கிருஷ் சுதாரித்து, “சொல்லா விட்டால் போ!” என்றான்.

ஆனால் அவன் மனதோ, படம் இருக்கின்றது என்பது தெரிந்து விட்டது இனி கூகுளில் பார்த்தால் போகிறது என்று அசைப்போட்டது.

“ஹேய்… என்னிடமிருந்து எப்பொழுது மொபைலை வாங்கினீர்கள்? இங்கே கொடுங்கள், போய் முதலில் குளியுங்கள்!” என்று பிடுங்கியவள் அவனை கிளப்ப முயன்றாள்.

“என்ன இப்பொழுதேவா? மணி எட்டு தானே ஆகிறது. நான் ஒன்பது மணிக்கு மேல் தான் குளிப்பேன்!” என்று அவளிடமிருந்து மொபைலை பறிக்க முயன்றான் அவன்.

“ஒரு நிமிடம்… ஒரு நிமிடம், நான் சொல்வதை முதலில் கொஞ்சம் காது கொடுத்து கேளுங்கள். பத்து மணிக்கெல்லாம் மறுவீடு சம்பிரதாயத்திற்காக நாம் இருவரும் எங்கள் வீட்டிற்கு கிளம்பி போக வேண்டும். அதனால் சீக்கிரம் போய் கிளம்புங்கள்!” என்று கைகளை பின்னாடி மறைத்தவாறு வேக வேகமாக பேசினாள்.

“என்ன உன் வீட்டிற்கா? அங்கெல்லாம் நான் வர மாட்டேன். யார் வீட்டிற்கும் போய் பழக்கமில்லை எனக்கு, அதனால் வேண்டாம். எதுவென்றாலும் இங்கேயே செய்ய சொல்லு!” என்று அதட்டலாக கூறியவனை கடுப்புடன் பார்த்தாள் சுஹா.

“இது தான்டா உன்னிடம் எனக்கு பிடிப்பதில்லை, இப்படி சிறுபிள்ளைத்தனமாக அடம் பிடித்தால் என்ன செய்வது?” என்று இடையில் கை வைத்து முறைத்தாள்.

“ஏய்… நான் எப்படி உன் வீட்டிற்கு வர முடியும்? எனக்கு அங்கே வர பிடிக்கவில்லை. நீ தான் ஏற்கனவே சொல்லியிருக்கிறாயே அங்கே ஒரு கூட்டமே இருக்கிறது எப்பொழுது பார் சத்தம் போட்டு விளையாடுவார்கள் என்று… அப்புறம் எதற்கு என்னை வரச் சொல்லுகிறாய், வேண்டுமென்றே பழி வாங்க பார்க்கிறாய் தானே?” என்று எரிச்சலுடன் கேட்டான் கிருஷ்.

“ஓ காட்! நாளை என் பிள்ளையை எப்படி சமாளிப்பது என்று நான் திணறவே தேவையிருக்காது போல, அது தான் இப்பொழுதே உங்களிடம் ஒவ்வொரு விஷயத்திற்கும் இவ்வளவு சிரமப்படுகிறேனே… இதுவே எனக்கு நல்ல ட்ரைனிங் ஆகி விடும் போலிருக்கிறது!” என்று பேச்சு வாக்கில் பேசிக் கொண்டே சென்றவள் சொல்லின் இறுதியில் தான் தன் பேச்சின் அர்த்தம் புரிந்து நிறுத்தி திருதிருவென விழித்தாள்.

அதுவரை அவள் தன்னை சம்மதிக்க வைக்க லொடலொடவென்று எதையோ பேசுகிறாள் என்று அலட்சியமாய் கவனிக்காமல் இருந்த க்ருஷ், அவளின் பேச்சு தடைப்பட்டு விழிக்கவும் தான் அதன் உட்பொருளை ஆராய்ந்தான்.

சுஹா விழிப்பதற்கான காரணம் புரிந்ததும் அவளைப் போலவே அவனும் விழித்தான்.

‘பிள்ளையா… இவளுக்கும் எனக்குமா?’

முதல் நாள், சம்பிரதாயம் என்ற பெயரில் உறவுப் பெண்கள் தன்னிடம் குழந்தைக்காக சம்மதம் கேட்டது அவன் நினைவில் அலைமோதியது.

“சாரி… சாரி… பேச்சுவாக்கில் ஏதோ ஒரு ஃப்ளோவில் வந்து விட்டது. சரி அதை விடுங்கள், இன்று ஒரு நாள் தான் நாளை இங்கே வந்து விடலாம். நீங்கள் அங்கே இருக்கும் வரை தம்பி, தங்கையிடம் சொல்லி வீட்டருகே யாரும் விளையாட வேண்டாம் என்று சொல்லி வைத்து விடுகிறேன். கண்டிப்பாக உங்களுக்கு எந்த தொந்திரவும் இல்லாமல் நான் பார்த்து கொள்கிறேன். ப்ளீஸ்… ப்ளீஸ்… நீங்கள் வர மறுத்தால் அப்பா, அம்மா மிகவும் வருத்தப்படுவார்கள்!” என்று கெஞ்சினாள்.

அதற்கு மேல் அவளிடம் ஏனோ அவனுக்கு மறுக்க தோன்றவில்லை, சம்மதமாக தலையாட்டி வைத்தான்.

“ஓ தாங்க் யூ… தாங்க் யூ!” என பளீரென்று மலர்ந்தவள், “சரி நீங்கள் சீக்கிரம் குளித்து கிளம்புங்கள், நான் போய் மற்ற வேலை ஏதாவது இருக்கின்றதா என பார்த்து வருகிறேன்!” என்று துள்ளலுடன் வெளியேறினாள்.

கிருஷ்ஷோ பிரமைப் பிடித்தது போல் அமர்ந்திருந்தான்.

தனக்குள் என்ன நடக்கிறது, தான் என்ன செய்கிறோம்? என்று அவனால் புரிந்து கொள்ள இயலவில்லை. ஆனால் ஒன்று மட்டும் தெளிவாக புரிந்தது தான் தன் கட்டுப்பாட்டில் இல்லாமல் தான்தோன்றித்தனமாக நடந்து கொள்வது போல் தோன்றியது.

எப்பொழுது மணமேடையில் அவளை கல்யாணப் பெண்ணாக பார்த்தேனோ? அந்த நொடியிலிருந்து தனக்குள் இருக்கும் கம்பீரம் தொலைந்து புதிய கிருஷ் பிறந்திருப்பது போல் அவனுக்கு தோன்றியது.

‘திருமணத்தையும், அவளையும் மலையளவு வெறுத்திருந்தவன் எப்படி அவளிடம் இவ்வளவு இயல்பாக உரையாடும் அளவுக்கு முன்னேறியிருக்கிறேன்?’ என்று தலையை உலுக்கி கொண்டான்.

‘நோ… அவள் என்னை என்னவோ செய்யப் பார்க்கிறாள், என்னை முழுமையாக அவள் கட்டுப்பாட்டிற்கு கொண்டு செல்ல பார்க்கிறாள். அவள் சொல்லும் எதற்கும் சம்மதிக்காது அவளை முழு அளவில் எதிர்க்க வேண்டும் என்று முடிவெடுத்தவன், சரி… இந்த ஒரு தடவை பாவம் அவள் அப்பா, அம்மாவிற்காக போய் வரலாம்!’ என்று எழுந்தான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *