*12*

 

 

தன்னருகில் அமைதியாய் கையை பிசைந்துக் கொண்டு நிற்கும் மருமகளைப் பார்த்தவர் விழியை கூர்மையாக்கி கேள்வியாய் என்னவென்று பார்வையாலே வேண்ட, குந்தவை ஒருநொடி தயங்கிப் பின்,

“என் மேல உங்களுக்கு வருத்தம் இருக்குமுன்னு புரியுது… ஒரே வீட்டில் இருந்துகிட்டு உங்களை நெருங்க நான் தயங்குறதும், என்னை பார்த்து நீங்க ஒதுங்கிப் போறதும் சரியாப்படல. நாம இப்படி இருக்குறதால நம்ம வீடு வீடாவே இருக்காதோன்னு தோணுது. அப்பாவோட ஈமைச் சடங்கிலிருந்து தான் உங்களுக்கு என் மேல வருத்தம் வந்திருக்கும். மாமாவிடம் சொன்னதே தான் உங்ககிட்டேயும் சொல்றேன், உங்களை மதிக்காம செய்யணும்னு எதுவும் செய்யல. எனக்கு அந்த நேரம் அதுதான் சரினு தோணுச்சு. செஞ்சிட்டேன். மற்றபடி உங்களை தர்மசங்கடத்தில் நிற்க வைத்து குடும்பத்திற்கு அவப்பெயர் வாங்கிக் தரணும்னு எண்ணமில்லை. அதோட அது அவமரியாதையா பார்க்கப்படுவதற்கான வாய்ப்பு இருக்குனும் தெரியல. 

எல்லோருக்குமே கண்ணோட்டம் வேற தானே… அப்போ என்னோட எண்ணம் முழுதும் என் அப்பா தான். என் அப்பாவுக்கு செய்ய நான் யாரைக் கேட்கணும்னு எண்ணம். அது தப்புனு கூட நீங்க நினைக்கலாம். ஆனால் என் அப்பாவுக்கு பெண்ணா என்னோட உரிமையை கேட்பதில் எந்த தப்பும் தெரியல எனக்கு. இந்த பழைய பழக்கங்களை எல்லாம் மறந்து கொஞ்ச நேரம் ஒருவருடைய மனைவி, மருமகள், தாய் என்பதை ஒதுக்கி வைத்துவிட்டு உங்கள பெத்தவங்களுக்கு பெண்ணா மட்டும் நினைச்சுப் பாருங்க… என்னோட எண்ணம் சரினு உங்களுக்கே புரியும். இவள் என்ன அதிகப்பிரசங்கித்தனமாய் பேசுறானு உங்களுக்குத் தோணுச்சுனாலும் ஒரு பிரச்னையுமில்லை. அது உங்களோட பார்வை. நான் இப்படியே வளர்ந்துட்டேன். எனக்கு சரினு படுறதை பட்டுனு பேசிடுவேன்.”

வெளிப்பூச்சின்றி உள்ளதை உள்ளபடியே எனக்கு தோன்றவில்லை என்ற அவளது வெளிப்படையான பேச்சில் வியந்து மலைப்பாய் நின்றுகொண்டிருந்தார் நீலா. பெரும்பாலும் தன் மேல் தவறில்லை என்றே நிரூபிக்க முற்படும் மனம். இங்கோ குந்தவை வெளிப்படையாய் பேச அவருக்கும் தன் எண்ணங்களை வெளிப்படுத்த தயக்கமிருக்கவில்லை. அவளது பேச்சை உள்வாங்கி ஒரு முடிவுக்கு வந்தவராய்,

“அதுதான் உன்கிட்ட இருக்குற பிரச்சனை.” என்று குறுக்கிட்டார் நீலா.

அமைதியாய் தன்னை பேசவிட்டு வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தவர் திடுமென மறுப்பாய் குறுக்கிட திகைத்து பின் குழப்பத்துடன் பார்த்தாள் குந்தவை.

“உணர்ச்சியின் பிடியில் உனக்கு சரினு படுறதை நீ வெளிப்படுத்துற விதம் அவசரகதியில் தான் இருக்கு. எனக்கு பிடிக்கல நீ செய்யாத, எனக்கு சரியா பட்டுது அதுதான் செஞ்சேன்னு நீ சொல்றது உன்னோட தனித்தன்மையா இருக்கலாம் ஆனால் இதையே நீ குடும்பத்தில் புகுத்தும் போது தான் பிரச்சனையும், அகங்காரமும் தலைதூக்கும். வெளி உலகத்தில் மட்டுமில்லை குடும்பத்தில் இக்கட்டுக்கள் வரும்போது இதுபோன்று தைரியமா முடிவெடுக்கும் குணம் கைகொடுக்கும். அதுவே ஒன்னுக்குள்ள ஒன்னா இருக்கும்போது இவள் எப்படி எங்களை அடக்கி மொத்த குடும்பத்துக்கும் சேர்த்து முடிவெடுக்கலாம், தான்தோன்றித்தனமா செயல்படலாம்னு எங்களுக்குத் தோன்றுவதும் இயல்பு தானே?” என்று நீலா கேள்வியாய் நிறுத்த,

“நான் யாரையும் அடக்கணும் முடக்கணும்னு நினைச்சதில்லை. என் வரையில் நான் சரியா இருக்கேன்.” என்று உடனே மறுத்தாள் குந்தவை.

“அதே தான் மத்தவங்களுக்கும். எல்லோருமே தன்னோட முடிவுகள் சரியா இருக்கும் என்ற நம்பிக்கையில் ஒரே நேரத்தில் தன்னோட எண்ணங்களை வெளிப்படுத்தும் போது அது சஞ்சலத்துக்கு வழிகொடுத்துடுது.” என்று நிறுத்தியவர் ஆழமூச்செடுத்து குந்தவைக்கு சொன்னதை தனக்குத்தானே மனதிற்குள் சொல்லிக்கொண்டார்.

நாமாக ஆராய்ந்து சில விஷயங்களை உணருவது ஒருவகையேனில் மற்றவரிடம் உரையாடும் போதோ, அடுத்தவர்களின் மனசஞ்சலங்களை தீர்க்கும் போதோ நம்மையே அறியாமல் வரும் புரிதல்கள் நமக்கே பாடமாக அமைந்துவிடும்.

“நம்மோட பிரச்சனை இப்போ அதுதான்…” என்றாள் குந்தவை.

“இல்லை… அதில்லை இப்போ சஞ்சலம்… உன் உரிமைக்காக நீ போராடியதை நான் எதுவும் குறை சொல்லல… ஆனால் நீ ஏன் அப்படி சொன்ன?”

“எப்படி?” புருவங்கள் ஏறி இறங்கியது குந்தவைக்கு.

“காலையில் என் பையன் சொன்னானே சிட்டியில் இருக்கனும், உனக்கு பிடிச்ச வேலை தான் அவன் பார்க்கணும்னு நீ சொன்னதா… அதெப்படி நீ சொல்லலாம்?” 

ஆரம்பத்திலிருந்தே அவர் பயந்தது இதற்குத் தானே? மகன் பார்த்த முதல் நாளிலிருந்தே குந்தவையின் மீதிருக்கும் அன்பை வெளிப்படுத்திக் கொண்டே இருக்க, எங்கே அவன் தன் கைமீறி தன்னை விட்டுச் சென்றுவிடுவானோ என்ற அச்சம் தான் குந்தவை மீது இனம்காண முடியாத விருப்பமின்மையாய் மாறியது. அதை எப்படி வெளிப்படுத்த, தெளிப்படுத்திக்கொள்ள என புரியாமல் மனம்போன போக்கில் ஐயத்தை மனதில் சுமந்துகொண்டே தான் சுற்றினார். இப்போது குந்தவையே இப்படி துணிந்து முன்வந்து பேச அனைத்தையும் கேட்டுவிட வேண்டுமென்ற எண்ணம் நீலாவிடம். சிலரின் சாமர்த்திய பேச்சு பேசாமல் அமைதியாய் இருப்பவர்களையும் பேச வைத்துவிடும். குந்தவை அந்த ரகம். குழைவாய் பேசாமல் துணிவாய், தெளிவாய் பேசுவதே அவளின் பலமாய் நின்று அவளைக் காத்தது.

நீலாவின் மனதை உறுத்திக் கொண்டிருந்தது அப்பட்டமாய் தெரிந்துவிட, மெலிதாய் சிரித்துக் கொண்டாள் குந்தவை, “ஆனால் உங்க பையன் ஒத்துக்கல அத்தை. என் அக்காவோட வாழ்க்கையில் என்ன ஆச்சுன்னு உங்களுக்கே தெரியும். அப்படியிருக்கும் போது என்னையும் ஒரு விவசாய குடும்பத்தில் கட்டிக்கொடுக்க நினைத்தால் என்னோட எண்ணங்கள் எப்படியிருக்கும்னு நீங்களே சொல்லுங்க? என் இடத்தில திவ்யா அண்ணி இருந்திருந்தால் இதற்கு நீங்க சம்மதிப்பீங்களா?” என்று கேட்க நீலாவின் தலை தானாய் மறுப்பாய் அசைந்தது.

தான் கடத்த நினைத்த செய்தி சரியாய் சென்றுவிட்ட திருப்தியில் பொலிவுடன் மேலும் தொடர்ந்தாள் குந்தவை, “அதுதான் என்னுடைய நிபந்தனைக்களுக்கு காரணம். உங்க பையன்கிட்ட கல்யாணத்திற்கு முன்ன பொண்ணு பார்த்துட்டு போனவுடனேயே இந்த சம்மந்தம் சரிவராதுன்னு சொன்னேன். அவர்தான் கேட்கல… அவருக்கு என்னையும் விடமனமில்லை. உங்களை விட்டு இந்த மண்ணைவிட்டு வரவும் மனமில்லை.” 

செவி மடுத்தவருக்கும், செய்தி சொன்னவளுக்கும் அதிலிருந்த செய்தி அப்படியொரு ஆனந்தத்தை கொடுத்தது. 

“அவன் அப்படித்தான்… வெட்டியா சுத்துவானே ஒழிய பாசத்துக்கு பஞ்சமில்லை.” என்ற அந்த தாயின் மனநிலை முற்றிலும் மாறியிருந்தது.

“மகனை விட்டுக்கொடுக்க மனசு வரல…” என்று தளர்வாய் குந்தவை சுவரில் சாய, 

“நான் ஏன் விட்டுக்கொடுக்கணும்? என் மகன் எனக்கு உசத்தித்தான்.” என்று சிலிர்த்துக்கொண்டே காய்கறிகளை நறுக்கினார் நீலா.

குந்தவை இதற்கு மேல் என்ன என்பது போல நிற்க அவளை ஒருமுறை நிமிர்ந்து பார்த்தவர் காய்களை நறுக்குவதில் கவனம் பதித்து, “அவன் வேற இடத்துக்கு வர ஒத்துக்கல சரி… நீ இன்னும் என்ன நினைக்குற?”

முக்கால்கிணறு தாண்டிய பின்னர் முழுதையும் தாண்டிவிடலாமே என்ற எண்ணம் இருவருக்குமே… 

“நான் நினைக்குறதுக்கு இதில் இனி ஒன்னும் இல்லை. என்னோட வாழ்க்கை கிராமத்தில் அமையக்கூடாதுனு நினைச்சது எல்லாமே வானதிக்காகத் தான். அவள் பட்ட வேதனையை பார்த்ததிலேயே கண்டிப்பா இப்படியொரு வாழ்க்கையை தேர்ந்தெடுக்கக் கூடாதுனு முடிவு பண்ணேன். அதற்கு வலு சேர்க்கிற மாதிரி கிராமத்தில் வசதி, வருவாய், வளர்ச்சி வாய்ப்புகள் எல்லாம் கம்மியா தானே இருக்கு. இங்கிருந்து நான் வேலைக்கு போகணும்னா கூட எனக்கிருக்கும் வேலை வாய்ப்புகள் ரொம்ப கம்மி. இருப்பதில் ஏதோவொன்றில் சேர்ந்து சகித்துக்கொண்டு போகவேண்டும். இதுவே நகரம் என்றால் எனக்காக வாய்ப்புகள் கொட்டிக்கிடக்கும். 

பணம் வாழ்க்கையைத் தீர்மானிக்காது தான்… ஆனால் அதே பணத்தை கொண்டுதான் நம்மோட அடுத்த தலைமுறையை கட்டமைக்கணும் எனும்போது நாம ஓடித்தானே ஆகணும். அறிவழகனும், அறிவழகியும் எனக்கும் பசங்க தான். நம்ம பசங்க எதிர்காலத்திற்கு நாம தானே ஓடணும்…” 

அவள் வார்த்தைக்கு பின்னிருக்கும் ஒவ்வொன்றிலும் வானதி தான் இருந்தாலே ஒழிய எங்கும் பொறுப்புகளுக்கு பயந்து தன்னலனுக்காக மகனை அவள் விருப்புக்கு இழுப்பவள் போல நீலாவுக்குத் தெரியவில்லை. அதிலேயே தானாய் இறுக்கங்கள் இளைத்து இலகுவாகிவிட மகனின் உறுதியில், மருமகளின் தெளிவில் ஐயங்கள் தரைதட்டியது.

“நீ இவ்வளவு யோசிச்சு குழப்பிக்கணும்னு அவசியமில்லை குந்தவை. எல்லாமே ஏதோவொரு கணக்கில் தான் நடந்துட்டு இருக்கு. அதுக்கு தெரியும் உன்னை எங்க கொண்டுவரனும்னு. இயற்கை எப்படி தன்னைத்தானே தகவமைத்துக் கொள்கிறதோ அதேமாதிரி ஒவ்வொருவருக்கும் தன்னைத்தானே செதுக்கிக் கொள்ளும் ஆற்றல் இருக்கு. நகரத்தில் வாழ்ந்தால் தான் வெற்றி என்றால் எப்போதோ கிராமங்களும் வயல்களும் கூடாகியிருக்கும். உன்கிட்ட இருக்குற திறமையே உனக்கான வழியை ஏற்படுத்தி நெடுதூரம் அழைச்சிட்டு போகும். அதைவிட்டுட்டு இல்லாததை நினைச்சு மருகிகிட்டே இருந்தால் அந்த எதிர்மறை எண்ணமே உன்னை நேர்மறையா சிந்திக்க விடாது. எல்லாம் நல்லதுக்கேன்னு நினைச்சிக்கோ. நிச்சயம் அந்த எண்ணமே உன்னோட குறிக்கோளை அடைய வைக்கும். எண்ணங்களுக்கு சக்தி அதிகம். அதால உன்னை உயர்த்தவும் முடியும் வீழ்த்தவும் முடியும்.”

“இன்னொன்னு சொல்றேன் தப்பா நினைக்காத… உன் அக்கா ஒரே இடத்தில் தயங்கி நிக்குற மாதிரி நீயும் எதிர்பார்த்த இடத்தில் வாழ்க்கை அமையலைனு தேங்கிடாத… தேங்கிய குட்டையைவிட பாய்ந்தோடும் நதிக்குத் தான் பவுசு… ஏதோ எனக்குத் தெரிஞ்சதை சொல்லிட்டேன். இதை மனசுல ஏத்திக்கிறதும் ஏத்திக்காததும் உன்னோட விருப்பம். அதோட இன்னைக்கு சிகரெட் மொத்தத்தையும் கொளுத்தி அவன் செய்த தப்பை பன்மடங்காக்குற மாதிரி நீயும் செய்யாத. எது செஞ்சாலும் நிதானம் அவசியம்.”

நீலாவின் பேச்சில் குந்தவைக்கும் வியப்பு தான். இவ்வளவு நேர்மறையாக அவருக்கு பேசத் தெரியும் என்பதே அவளுக்கு அப்போது தான் புரிந்தது. இதுக்காகவா இவ்வளவு யோசித்தோம் என்ற எண்ணம் கூட அவளை அசட்டையாய் உணர வைத்தது.

“என்ன மசமசன்னு என் வாயை பார்த்துட்டு நிக்குற? பரீட்சை வருதுன்னு சொன்ன தானே? போய் படி.” என்று விரட்ட வேறு செய்ய, குந்தவை மெச்சுதலாய் ஒருபார்வை வீசி, அடுத்ததை துவங்கினாள்.

“இல்லை… உங்ககிட்ட சொல்லாம பரீட்சை முடியும் வரை அங்கேயே தங்கிறேன்னு முடிவு செய்ததில் உங்களுக்கு வருத்தம் தானே?”

“ஆமா வருத்தம் இருந்தது… ஆனால் நான் சொன்ன உடனேயே கிளம்பி வந்துட்டியே… முடிந்ததை பற்றி இனி யோசிக்க வேண்டாம்…” என்று முடித்துக்கொள்ள, குந்தவைக்கு அப்பாடா என்றிருந்தது. இதோடு முடிந்தது என்று குந்தவை சென்றுவிட நீலாவிடம் எஞ்சியது யோசனை மட்டுமே…

இரண்டொரு நாள் கழித்து யோசித்து வைத்திருந்ததை கணவரிடம் பகிர்ந்துகொள்ள நீலாவின் மனமாற்றத்தில் மனிதருக்கு மகிழ்ச்சியே.

“நிசமாத்தான் சொல்றியா?”

“நான் என்னைக்கு பொய் பேசியிருக்கேன்? நல்லா யோசித்து தான் சொல்றேன்… தச்சன் இங்கிருந்து நகரமாட்டான்னு அவளே சொன்ன பிறகு எனக்கு வேற என்ன கவலை இருக்கப்போகுது… அவள் படிப்பு முடிஞ்சதும் மேல என்ன பண்ணனும் அவங்க முடிவு பண்ணிக்கிட்டும். நாம நம்ம பங்குக்கு ஏதாவது முடிஞ்சதை செய்யணும். அவள் மனசு முழுக்க அவ அக்கா, அக்கா புள்ளைங்க பற்றிய கவலை தான் இருக்கு. இப்போ தான் திருமணத்திற்கு நிதியுதவி எல்லாம் கொடுக்குறாங்களே. அடுத்த தெருவில் இருக்கும் நாச்சி கூட அவள் பொண்ணு கல்யாணம் முடிஞ்சதும் இருபத்தைந்தாயிரம் பணமும் மாங்கல்யத்திற்கு நாலு கிராம் தங்கமும் வாங்குனா… அதுமாதிரி குந்தவை திருமணத்திற்கும் வாங்க முடியுமான்னு பார்த்து அதை வாங்கி அவள் குடும்பத்துக்கே கொடுக்க ஏற்பாடு பண்ணுங்க.” என்க அன்பரசன் மெச்சுதலாய் ஒரு பார்வை பார்த்தார்.

“நீ இவ்வளவு மாறுவேன்னு நினைக்கவே இல்லை.”

“ஏன்? இதுக்கு முன்னே நான் கொடுமைக்கார மாமியாரா இருந்தேனாக்கும்?” என்று நீலா கழுத்தை வெட்ட, 

“உன் மாமியார் உனக்கு கொடுமைக்காரங்களா தெரிஞ்சிருந்தா அப்போ நீயும் அப்படித்தான்… ரெண்டு பேருக்கும் எந்த வித்தியாசமும் இருக்குற மாதிரி தெரியல.” என்று கொளுத்தி போட்டுவிட்டு கைகளை கண்களுக்கு மறைவாக்கி படுத்துவிட, அவரையே விளங்காப் பார்வை பார்த்துவைத்து எகிறினார் நீலா.

“என்ன சொல்ல வரீங்க இப்போ? உங்கம்மா கொடுமை பண்றாங்கனு நான் எப்போ சொன்னேன்?” 

“நீ இப்போ நினைக்குற மாதிரி தான் முப்பத்தஞ்சி வருடம் முன்ன அவங்க நினைச்சிருப்பாங்க… நீங்க ரெண்டு பேரும் ஒரே மாதிரிதான் இருக்கீங்க.”

“நான் அவங்களை எதுவுமே சொன்னதில்லை. நீங்களா சிண்டு முடிஞ்சிவிடாதீங்க…” என்ற நீலா சலித்துக்கொண்டு அப்பேச்சை நிறுத்திவிட்டார்.

“என்ன அமைதியாகிட்ட?”

“எனக்கு எதுக்கு வம்பு? நான் ஏதோ பேசுனா நீங்க அதை எங்கேயோ கொண்டு போறீங்க… நான் சொன்னதை முடிஞ்சா செய்யுங்க இல்லைன்னா நான் என் பையனை கேட்டுப்பேன்.” என்று சீண்டிவிட, இரண்டு நாளில் அனைத்து தகவல்களையும் சேகரித்து வந்தார் அன்பரசன்.

“குந்தவை உன் அக்கா கல்யாணத்திற்கு உதவித்தொகை வாங்குனீங்களா? உனக்கு அதை பற்றி ஏதாவது தெரியுமா?” அன்றிரவே வேலை முடித்துவிட்டு இரவு உணவருந்தும் சமயத்தில் பேச்சை துவங்கினார் அன்பரசன்.

“இல்லையே மாமா எதுக்கு கேட்குறீங்க?”

“ஒரு வீட்டில் ஒரு பெண்ணுக்குத் தான் திருமண உதவித்தொகை கொடுப்பாங்கலாம். வானதிக்கு வாங்கலேன்னா உங்க கல்யாணத்திற்கு வாங்கிடலாமே… உனக்கு கிடைக்க வாய்ப்பிருக்கும் போது நாம ஏன் அதை விடனும்? உன்னோட போட்டோ, பன்னிரெண்டாம் வகுப்புச் சான்றிதழ், கல்யாண பத்திரிக்கை, கோவிலில் உங்க திருமணத்தை பதிந்ததற்கான சான்றும் கொடுத்தாங்க. அதையும் விண்ணப்பத்தோடு இணைச்சு செய்ய வேண்டியதை செஞ்சு உன் வீட்டுக்கு வாங்கிக் கொடுத்திடலாமே… டேய் நாளைக்கு குந்தவையை மாயவரம் அழைச்சிட்டு போய் என்ன செய்யணுமோ எல்லாம் செஞ்சிடு.” மருமகளிடம் விவரம் தெரிவித்துவிட்டு மகனிடம் கட்டளை பிறப்பிக்க, அவன் சோம்பலாய் பார்த்துவைத்தான்.

“ஏன் அங்க வரை போகணும்? இங்கேயே வாங்கிக்கலாமே?” என்ற தச்சனின் குரலில் உடலின் சோர்வு அப்பட்டமாய் வெளிப்பட்டது.

“இங்கே வாங்க முடியாது. பெண்ணோட ஊர் எதுவோ அங்க தான் வாங்க முடியும். நாளைக்கு ரெண்டு பேரும் போயிட்டு வந்துருங்க. குந்தவை வீட்டிலும் அலைய முடியாது அதனால கேட்கும் போதே தெளிவா கேட்டு என்னனென்ன நகல் கொடுக்கணும்னா எல்லாத்தையும் பிழை இல்லாம கொடுத்துட்டு வாங்க.” அன்பரசன் பதிலில் உச்சுகொட்டினான் தச்சன்.

சற்றுமுன் தான் திருச்சி வரை வண்டியிலேயே சென்று திவ்யாவை வீட்டில் விட்டுவிட்டு பின் வயலுக்கு தண்ணீர் பாய்ச்சிவிட்டு வந்தான். எப்போதுமே அவள் இங்கு வந்தால் தச்சன் தான் அழைத்துச் சென்று விட்டுவருவான். முன்பு வேறு வேலை எதுவும் இல்லாததால் அவ்வளவு பெரிதாய் தெரியவில்லை. இப்போதோ தினமும் வேலை வேலை என்று வயலில் கிடந்து காய, புதிதாய் முளைத்திருக்கும் பொறுப்புகளும் அவனை தன்னுள் சுருட்டிக் கொண்டிருந்தது. சொல்வதை விட செயல் என்றுமே சற்று கடினம் தானே… என்னால் முடியும் என்று எளிதாய் வாய்ச்சவடால் விடலாம். இறுதிவரை அதை செய்து முடிப்பதற்குள் இக்கட்டுகளும் அனுபவங்களும் பாடங்களாய் மாறத் தானே செய்யும்.

“என்னடா முழிக்குற? போயிட்டு வந்திடு…”

“சும்மா போயிட்டு போயிட்டு வான்னு நீங்க நினைச்ச நேரத்துக்கு எல்லாம் போக முடியாது. ரெண்டு நாள் முன்னாடி தான் ஹால்டிக்கெட் வாங்க போயிட்டு வந்தோம். குந்தவைக்கும் இன்னும் ரெண்டு நாளில் பரீட்சை இருக்கு. அவளை கூட்டிட்டு இப்போ அலையச் சொல்றியா? அவள் பரீட்சை எல்லாம் முடியட்டும். அப்புறம் பார்த்துக்கலாம்.” என்றான் தரையில் படுத்து சோம்பல் முறித்தபடியே…

அன்பரசன் குந்தவையை பார்க்க அவள் தச்சன் முகம் பார்த்து அமர்ந்திருந்தாள்.

“என்ன அமைதியா இருக்க குந்தவை?”

“இல்லங்க மாமா, பொறுமையாவே போயிக்கலாம்.”

“சொல்றதை சொல்லியாச்சு. அப்புறம் உங்க விருப்பம்.” என்று பேச்சுக்கள் முடிந்துவிட, மறுநாள் காலையே அந்த விஷயத்தையே முடிக்கக் கிளம்பினான் தச்சன்.

“உன் வீட்டுக்கு போன் பண்ணி என்னென்ன செராக்ஸ் வேணுமோ அதை எடுத்துவைக்க சொல்லிடு குந்தவை.”

கண்ணாடி முன்னின்று ஈரச்சிகையை துண்டால் துடைத்துக்கொண்டே தச்சன் அவளிடம் செய்தி சொல்ல, புரியாமல் விழித்தாள் குந்தவை.

“எதுக்கு இப்போவே? வீட்டுக்கு போகும்போது நானே எடுத்து வச்சிடுறேன்.”

“நீ எப்போ போறது இந்த காரியத்தை எப்போ முடிக்கிறது? நீ படி… நான் இன்னைக்கே அங்கே போய் தேவையானது எல்லாத்தையும் வாங்கிட்டு வரேன். எப்படியும் உன்னோட கையெழுத்து கேட்பாங்க… சும்மா சும்மா அலைய முடியாதே… பாதி வேலையை நான் முடிச்சிடுறேன். கையெழுத்து போட்டு கொடுக்க வேண்டியது எல்லாத்தையும் ஆபீசில் கொடுத்து நீ மீதி வேலையை முடிச்சிடு.” பேசிக்கொண்டே துண்டை மெத்தையில் வீசியவன் சட்டையை எடுத்து மாட்ட, அவன் முன்னே வந்து நின்றாள் குந்தவை.

“இல்லை வேண்டாம். உங்களுக்கு எதுக்கு அலைச்சல்? நாளை மறுநாள் எக்ஸாமுக்கு நான் அங்க போகத்தானே போறேன். அப்போ இந்த வேலையை முடிச்சிடுறேன்.”

“எதுக்கு இப்போ சீன் போடுற? இதை உடனே முடிக்கணும்னு தானே உனக்குள்ள நினைப்பு ஓடிட்டு இருக்கு? சீக்கிரம் பணம் கிடைச்சா வீட்டுக்கு உதவியா இருக்கும்னு தோணுது தானே?” என்று கேள்வியாய் பார்க்க மலர்ச்சியுடன் அவனை நெருங்கி அவன் கையை தட்டிவிட்டு அவளே அவனது பொத்தான்களை அதன் துளையில் விட்டிழுத்து மூடினாள்.

“நீ எப்போ இவ்வளவு பொறுப்பா… என் மனசை படிக்குற புருஷ்ஷா மாறின?” என்று கேலியாய் ராகம் இழுக்க, இடையில் கரம் கொடுத்து அவளை தன்னோடு இழுத்துக் கொண்டான் தச்சன்.

“உன் மனசை அப்படியே படிச்சிட்டாலும்… உன் முகத்திலேயே எல்லாம் எழுதி ஒட்டியிருக்குடி… நேற்றே பார்த்தேனே நான் அப்புறம் பார்த்துக்கலாம்னு இழுக்கவுமே உன் முகம் போன போக்கை… ஏதோ இந்த கல் நெஞ்சத்திலேயும் உன்னோட அப்பாவி புருஷன் மேல கொஞ்சம் ஈரம் இருந்திருக்கு… அதுதான் மேடம் பம்மிட்டீங்க… இல்லைனா என் சட்டையை பிடிச்சு வாடான்னு என்னையும் இழுத்துட்டு தானே போயிருப்ப?”

“இப்போவும் உன் சட்டையை பிடிச்சி தான் இருக்கேன்.” என்று அவன் சட்டையை பிடித்திழுத்து நகைத்தாள் குந்தவை.

மலர்ந்த முகத்துடன் அகலமாய் சிரித்தவன், “எதையோ ஒன்னை பிடிச்சா சரிதான்.” என்று அவள் இடையில் அழுத்தம் கொடுக்க, அவனது விரல்கள் செய்யும் சேட்டையில் நெளிந்தவள் அவன் நெஞ்சத்திலேயே பட்டென்று வலியாமல் அடித்தவள், “அங்கேயும் இங்கேயும் அலைஞ்சிட்டே இருக்கீயே… உனக்கு இங்க வேலை இல்லையா? மாமா முழு நேரமும் வேலை வேலைனு வயலில் தான் இருக்காங்க. ஆனால் நீ நினைச்ச நேரத்துக்கு வெளில கிளம்புற, வீட்டுக்கு வர…”

“அதெல்லாம் நான் பார்த்துக்கிறேன்… குணா இருக்கான். நான் இல்லாதபோது அவன் பார்த்துப்பான்.” என்று அலட்சியமாகவே பதில் வந்தது அவளது வினாவிற்கு.

“அவங்க பார்த்துப்பாங்கன்னா? சும்மா பார்த்துப்பாங்களா?” என்று சந்தேகத்தோடு குந்தவை இழுக்க தச்சனின் முகம் மாறியது.

“சும்மானா? என்ன சொல்ல வர நீ?”

“லாபம் நஷ்டம் எல்லாம் எப்படி பங்கு போட்டுப்பீங்கனு கேட்டேன்?” என்று நேரே கேட்டுவிட, அவளது கேள்வியில் சட்டென சினம் பிறந்து தன் சட்டையிலிருந்த அவள் கரத்தை தட்டிவிட்டான் தச்சன்.

“கொஞ்சம் இடம் கொடுத்தா போதுமே உடனே எங்களோட நட்பை கழற்றிவிட வச்சிடுவீங்களே… இந்த பொண்ணுங்க சொல்ற எல்லாத்துக்கும் தலையாட்டுனா அவளுக பண்ற முதல் வேலையே அவன் நண்பர்களை பிரிச்சிடுவாங்கன்னு சொல்றது சரியாத்தான் இருக்கு. இதுவரை நீ சொன்னது எல்லாமே என்னோட தனிப்பட்டது அதனால் நான் மாத்திக்கிட்டேன். ஆனால் எல்லா விஷயத்திலும் அப்படியே இருக்க மாட்டேன் குந்தவை. உன்னோட விஷயத்தில் நான் என்னைக்குமே தலையிட்டது இல்லை ஆனால் நான் எது செஞ்சாலும் அதில குறை கண்டுபிடிக்குறதிலேயே நீ குறியா இருக்க…”

“அதென்ன பொண்ணுங்கன்னு எள்ளலா சொல்ற? நீ செய்றது சரியா இருந்தா நான் ஏன் குறை கண்டுபிடிக்க போறேன்? உனக்கு உதவி பண்றதில் தப்பில்லை ஆனால் உழைப்பை கொட்டுற இடத்தில் அதற்கான ஊதியத்தை கொடுக்கணும். உன் வசதிக்கு அவங்களை வேலை வாங்கிட்டு லாபம் எல்லாத்தையும் நீயே எடுத்துக்கிட்டா அது சரியா இருக்காது.” 

கருத்து வேறுபாடுகள் அதிகரிக்க, ஓசையும் எகிறியது.

“அவன் பணம் காசை பார்த்து வேலை செய்யல… எனக்காக செய்யுறான்… நீ சொல்ற மாதிரி முதலாளியா இருந்து அவனுக்கு ஊதியம் கொடுத்து அவனோட நட்பை கலங்கப்படுத்த முடியாது. நீ உன் லிமிட்டோட நிறுத்திக்கோ… இதில் தலையிடாத.”

“உன்னை யாரு இப்போ முதலாளியா இருக்கச் சொன்னா? பார்ட்னரா இருக்க வேண்டியது தானே? அவங்களை உன் இஷ்டத்துக்கு வேலை வாங்குவியா? நீ நினைச்ச நேரத்துக்கு வெளில போவது அவங்களால தானே? அதற்கான மதிப்பை கொடுக்கணும். இன்னைக்கு இல்லையென்றாலும் என்றைக்காவது ஒருநாள் இதில் பிரச்சனை வர வாய்ப்பிருக்கு. அவங்க வீட்டில் எவ்வளவு நாளுக்கு இப்படி பிரெண்டுக்கு வேலை செய்வதை எல்லாம் ஒத்துப்பாங்க? அவங்களோட உழைப்பையும், நேரத்தை நாம சுரண்டுனதா இருக்கக்கூடாது.”

“ப்ச்… போடி… தினம் ஏதாவது பிரச்சனையை இழுத்து விடுறதுலேயே குறியா இருக்க… எப்படி கிளம்புனேன் இப்போ எப்படி டென்ஷன் ஆக்கிவிட்டுட்ட…” என்று கத்தியவன் வேகமாய் வெளியேற, அவன் கைபிடித்து நிறுத்தினாள் குந்தவை.

“டென்ஷனோட வீட்டிலிருந்து கிளம்பாத…”

“சொல்றதை எல்லாம் சொல்லிட்டு அப்புறமென்ன?” என்று முகத்தை திருப்பிக்கொண்டு நிற்க, முன்னது மறந்து அவளுக்குமே இந்த பேச்சை வேறு நேரத்தில் எடுத்திருக்கலாம் என்றே தோன்றியது.

“என்னடி அமைதியா இருக்க? ஒரு முத்தமாவது கொடுத்து சமாதானப்படுத்துவேன்னு பார்த்தேன்.” என்றவனின் பாவனை இப்போது முற்றிலும் மாறியிருந்தது. 

ஆச்சர்யமாய் அவனை பார்த்தவள் கணப்பொழுதில் அவனின் விளையாட்டை உணர்ந்து, “கேடிடா நீ…” என்றவளின் விரல்கள் அவனது கன்னத்தை செல்லமாய் தட்டியது.

“அப்படியிருந்தும் இந்த ஸ்ட்ரிக்ட் ஆபீசரை கரெக்ட் பண்ண முடியலையே…” என்று வழிந்துக்கொண்டு நின்றான் தச்சன்.

“பேச்சை பாரு… வளவளக்காம சீக்கிரம் போயிட்டு வா… நான் அம்மாகிட்ட எல்லாத்தையும் எடுத்துவைக்க சொல்றேன்.” 

“அடியேயே முத்தம் கேட்டேன்டி… கண்டுக்காம இருக்க?”

“கேக்குறது கிடைக்கேலன்னா கொடுத்துட்டு போக வேண்டியது தானே?” என்று அலட்சியமாய் சொல்வது போல பாவனை செய்ய, அவள் கன்னம் கிள்ளியவன் துரிதமாய் அவள் கன்னத்தை ஈரப்படுத்திவிட்டு, “நீதான்டி கேடி…” 

“உன்கூட இருந்து இதுகூட கத்துக்கலேன்னா எப்படி… சரி மசமசன்னு நிக்காம கிளம்பு…. நான் சொன்னதையும் யோசி…” என்று சொல்லியே அனுப்ப, அது அவன் கருத்தில் பதிந்ததா என்பது சந்தேகமே. 

அனைவரிடமும் சொல்லிக்கொண்டு கிளம்பியவன் வேலை முடித்து திரும்ப வரும்போது வானதியும் பிள்ளைகளோடும் தான் வந்தான். அவனது கைகளில் அறிவழகன் பாந்தமாய் பொருந்தி இருக்க, ஒன்றும் புரியாமல் பதற்றத்துடன் அவர்களை நெருங்கினாள் குந்தவை. அதற்கு முன் நீலா தச்சனை நெருங்கி,

“என்னடா இது? சொல்லாம கொள்ளாம கூட்டிட்டு வந்திருக்க? அவங்க எப்படி உன்கூட அனுப்புனாங்க?” என்று நீலா கேட்டபோது கூட,

“பசங்களுக்கு முதல்ல குடிக்க ஏதாவது தயார் பண்ணு. எல்லாத்தையும் அப்புறம் சொல்றேன். இன்னும் கொஞ்ச நாளுக்கு அவங்க இங்கத் தான்.” என்ற தச்சனின் பதிலில் திருப்தி ஏற்படவில்லை அவருக்கு. 

குந்தவையை பார்த்தபோது தோன்றிய அதே சஞ்சலம் மனதிற்குள் மீண்டும் ஏற்பட சிறிது நாட்களுக்கு என்று நுழைந்திருப்பவள் இனிவரும் காலம் முழுதும் நிரந்தரமாய் இங்கேயே தங்கும் நிலை வரும்போது என்ன செய்வாரோ? இளகிய நெஞ்சம் மீண்டும் இறுகிவிடுமோ என்னவோ… 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *