தச்சனின் திருமகள் – 1

 

“தென்னாடுடைய சிவனே போற்றி! 

எந்நாட்டவருக்கும் இறைவா போற்றி!”

 

     என்ற பக்தி கானத்தை ஒருவர் துவங்க, அவர் வழியே அனைவரும் அந்த எம்பெருமானை துதித்து முழங்க, அந்த நகர் முழுதும் சிவனின் நாமம் அதிர்வை ஏற்படுத்தி மக்களின் மனசஞ்சலங்களை இறக்கி வைத்து, நம்பிக்கையுடன் தங்களின் குறைகளை வேண்டலாய் குவிக்கும் இடமாக மாறியிருந்தது. சிறியவர், பெரியவர், ஏழை, பணக்காரர் என்ற எந்த பாகுபாடுமின்றி அனைவரின் சிரமும், கரமும் ஒருசேர மேலெழும்பி பூரணகும்ப கலசத்தில் விழி பதிய, பண்பாடு மாறாமால் பலவித வேத மந்திரங்கள் சமஸ்கிருதத்திலும், தமிழிலும் ஓதப்பட, கங்கை, யமுனை மற்றும் காவிரியிலிருந்து எடுத்து வரப்பட்ட புனித நீர் அனைத்து விமானத்திலும் இருந்த தங்க மூலாம் பூசப்பட்ட செப்பு கலசத்தின் மீது ஒரே நேரத்தில் ஊற்றப்பட்டு குடமுழுக்கு இனிதே நிறைவேறியது. தொடர்ந்து தீபாராதனை காட்டப்பட, கண்களை மூடி முழுமனதுடன் தங்கள் குறைகளை கொட்டி, நல்லதை எதிர்நோக்கி வேண்டலாய் வைக்க, பக்தி வாடை அவ்விடத்தை நிறைத்தது. 

 

உலகையே வியக்கவைக்கும் கட்டடக் கலையை தாங்கி, கலை அம்சத்துடன் நம்முடைய பண்பாட்டையும் அழகுற விளித்து, நம் முன்னோர்களின் அறிவியல் ஞானத்தையும் பறைசாற்றி கம்பீரமாக ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக உயர்ந்து நிற்கும் பிரசித்தி பெற்ற தஞ்சை பெருவுடையார் கோவிலில் இருபத்திமூன்று ஆண்டுகளுக்கு பிறகு நடக்கும் கோலாகலம் அனைவரின் வதனத்திலும் பிரதிபலித்தது. நெற்களஞ்சியமான தஞ்சை என்றாலே நினைவு வரும் பெரிய கோவிலும், அதைக் கட்டிய மாமன்னன் இராசராச சோழனும் தானாக ஒவ்வொரு தமிழர் மனதிலும் கர்வத்தை விதைக்க, அதே கர்வத்துடன் அங்கு குழுமியிருந்த மக்கள் மேலிருந்து தெளிக்கப்பட்ட புனித நீரை சிரம் தாழ்த்தி ஏற்றுக் கொண்டனர்.

 

தங்களின் கடமையை சில நொடிகள் மட்டுமே நிறுத்தி வைத்து, தரிசனம் செய்தவுடனேயே காவலர்கள் மீண்டும் பணியில் முழுஈடுபாட்டுடன் பக்தர்களுக்கு வழி காட்ட துவங்கியிருந்தனர்.

 

குடமுழுக்கு நிறைவடைந்தவுடன் அனைவரும் முண்டியடித்து எம்பெருமானை முதலில் தரிசிக்க உள்ளே நுழைய முற்பட, அவர்களை ஒழுங்குபடுத்தி வரிசையில் செல்ல வைத்திருந்தனர் காவலர்கள். பெருங்கூட்டம் கோவிலின் உட்புற சன்னத்திக்கு செல்ல, ஒருசிலர் கூட்டத்திற்கு பயந்து வெளிப்பிரகாரத்திலேயே தேங்கிவிட்டனர்.

 

அப்படி தேங்கி நின்ற நீலா அருகில் இருந்த தன் மகனின் கையை சுரண்டி, “இவ்வளவு தூரம் வந்துட்டு ஈசனை பார்க்காம போனா எப்படி? நாமளே கிராமத்திலிருந்து எப்போதாவது தான் இங்கே வரோம், வா தச்சா போகலாம்.” என்க, 

 

அவன் விழிகளோ அதிருப்தியுடன் எதிரே இருந்த கூட்டத்தின் கணத்தை கணக்கிட்டுக் கொண்டிருந்தது.

 

“இந்த தள்ளுமுள்ளுல சாமி கும்பிடனும்னு அவசியம் இல்லை. இப்படியே தரிசனம் பண்ணிட்டு கிளம்புவோம். இன்னோரு நாள் வந்து சாமி தரிசனம் செஞ்சிக்கலாம்.” என்றான் அவனோ அசுவாரசியமாய்.

 

அவனின் ஆர்வமின்மையில் நீலாவின் முகம் சுருங்கிவிட, பாவமாய் மறுபுறம் நிற்கும் தன் கணவரை பார்த்தார் அவர்.

 

“இப்போ எதற்கு என்னை பார்க்குற? உன் ஆசை புள்ளை எதையாவது மறுத்தால் தான் என் நினைவே வருது உனக்கு.” என்று முறுக்கிக் கொண்டார் நீலாவின் கணவர் அன்பரசன்.

 

“இப்போ எதற்கு இந்த சீன் போடுற? இந்த தள்ளுமுள்ளில் உள்ளே போய் சாமிகிட்ட பெருசா என்ன வேண்டிட போற… என் புள்ளைக்கு நல்ல புத்தியை குடுன்னு கேட்ப… அதற்கு என்கிட்டேயே சிபாரிசுக்கு வர… அதான் இந்த நீலாவதியை கட்டிக்கிட்ட புண்ணியவான் கூட்டிட்டு போக தயாரா இருக்காரே, அவர் கூட போ… நான் அப்படியே வெளில சுத்திட்டு இருக்கேன். நிறைய கடையெல்லாம் போட்டு இருக்காங்க…” என்று கண்களில் குறும்பு மின்ன பார்வையை சுழற்றி விரட்டினான் தச்சன்.

 

அவனை முறைத்த அன்பரசனோ, “ஆமா இவர் அப்படியே அம்மாக்கு கடையில் எதையாவது வாங்கி கொடுக்குற மாதிரி தான்… பொம்பளை புள்ளைங்க வாங்குற வளையல், மணி கடைக்கு போக வேண்டியது, அம்மாக்கு வாங்குறேன் தங்கைக்கு வாங்குறேன்னு அங்க வர பொண்ணுங்ககிட்ட கடலை போட வேண்டியது. நீ வேணா பாரு, இவனை அடக்கி ஆளுர ஆளுமையான பொண்ணு தான் அவனுக்கு வாக்கப்பட்டு வரப்போறா… அப்போ இருக்குடா கச்சேரி உனக்கு.” என்று நீலாவையும், தச்சனையும் ஒருசேர பார்த்து எச்சரிக்க, மேல்சட்டையின் பின்புறம் கழுத்து காலரில் சொருகியிருந்த கூலர்ஸை எடுத்து மாட்டிய தச்சன்,

 

“சாபம் கொடுக்குறாராம்… சாபம். உங்க சாபத்தை புத்தியில மறக்காம குறித்து வச்சிக்கோ, என்னை எவளாலும் அடக்க முடியாது, நான் யாருக்கும் அடங்க மாட்டேன். எனக்கு பிடிச்சதை தான் செய்வேன்.” என்று அழுத்தமாய் பேசிவைத்தான் அவன்.

 

“கோவிலுக்கு வந்துருக்கோம்னு கொஞ்சமாவது நினைவு இருக்கா உங்க ரெண்டு பேருக்கும்… இங்கேயும் வந்து சும்மா தொணதொணன்னு பேசிட்டு இருக்கீங்க.” என்று இருவரையும் ஒருசேர திட்டியவர் தச்சனிடம் திரும்பி, “குருடன் மாதிரி இந்த கருப்பு கண்ணாடியை போடாதேன்னு சொன்னால் கேட்குறதே கிடையாது அப்பப்போ மாட்டிட்டு சுத்த வேண்டியது… முதலில் அதை கழட்டு தச்சா…” என்றவர் தன் கையோடு அதை தச்சனிடமிருந்து கழற்றி தன் கணவர் சட்டை பையில் மாட்டிவிட்டார் நீலா.

 

“இதெல்லாம் உனக்கே அநியாயமா தெரியல? என்னை குருடன்னு சொல்லிட்டு அதே கண்ணாடியை ஜம்பமா உன் வீட்டுக்காரர் சட்டைப்பையில் வைக்குற… வயசானாலும் அவர் மட்டும் அப்படியே ஸ்டைலா இருக்கனும் ஆனால் நான் மட்டும் ரெண்டு லிட்டர் தேங்காய் எண்ணையை தலையில் ஊற்றி, நல்லா வழித்து சீவி, பட்டை போட்டு இளிச்சவாயன் மாதிரி சுத்தணும். உன் வீட்டுக்காரரும் அதற்கு தோதாய் பழங்காலத்துக்கும் பழங்காலத்துப் பெயரை எனக்கு வச்சிட்டாரு ஆனால் அவர் பெயரைப் பாரு.. அன்பரசன்.” என்று நீட்டிமுழங்கி அன்னையிடம் பொரிந்தான் தச்சன்.

 

“கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை… இவன் பெயருக்கு பின்னாடி பெரிய வரலாறே இருக்கு. அதெல்லாம் தெரிந்து கொள்வதில்லை.” என்று இடம் பொருள் ஏவலை கவனியாமல் அன்பரசன் தன் நினைவுகளுக்குள் மூழ்க, அவர் வதனத்தில் தனிப்பொலிவு வந்தது.

 

“ஏழு வருடங்களில் சிவ பக்தரான இராசராசன் எகிப்தியரின் பிரமீடுகள் போன்ற கூர்மையான முனை கொண்ட கோபுரத்தை 190 அடி உயரத்திற்கு கட்டியது உலக அதிசயம் தான். வடக்கே புவனேஸ்வரத்தில் லிங்க ராஜா கோவில்தான் அந்த காலத்தில் உயரமானதாக இருந்தது. ஆனால் அதைவிட இக்கோபுரத்தை உயரமாக அமைத்தது இந்த சோழ மன்னன் தான். பெரிய விசாலமான பிரகாரம், 30க்கும் மேற்பட்ட கோவில்களை உள்ளடக்கிய இந்த பிரம்மாண்டத்தில் அக்காலத்தில் 400 நடன கலைஞர்கள், 50 சிவமறை ஓதுவார்கள் நாள்தோறும் பணியில் இருப்பார்களாம். அப்படிப்பட்ட பிரம்மாண்டத்தின் கட்டுமானத்தை சாத்தியமாக்கியது இராசராசன் என்றாலும் இந்த அதிசயத்தை நிறுவ யுக்திகள் வகுத்து, திட்டம் தீட்டி அதை செயல்படுத்திக் காண்பித்த கலை நிபுணரும், தலைமைச் சிற்பியும் தான் இந்த குஞ்சரமல்லன் பெருந்தச்சனும் , நித்த வினோத பெருந்தச்சனும். அவர்களின் கைவண்ணத்தில் பிரமித்து உனக்கு வைத்த பெயர் தான் பெருந்தச்சன்.” என்றவரின் கலாரசனை மகனுடைய எண்ணங்களுடன் ஒத்துப்போகவில்லை. அதுவே அவர்களிடத்தில் நிறுவப்படாதா இடைவெளியை வகுத்திருந்தது.

 

“நீ தான் மெச்சிக்கணும் என்னோட பெயர் காரணத்தை. தச்சன்னா ஆசாரியான்னு எல்லோரும் என்னைதானே கேலி பேசுறாங்க… அதெல்லாம் உனக்கு எங்க தெரியப் போகுது…” என்று தச்சனும் முகத்தை காட்ட, நீலா இவர்களுக்கு இடையில் நிற்பதற்கு நாமே உள்ளே சென்று விடலாம் என்று கூட்டத்துடன் கலந்து பெருவுடையாரை தரிசிக்க உள்ளே சென்றுவிட, அவரை கவனியாமல் தங்களின் சண்டையில் மும்முரமாயினர் நீலாவதியின் ஆசைக்கணவரும், செல்ல மகனும்… 

 

“லாரி, ரயில் போன்ற போக்குவரத்து வசதிகள், கிரேன் போன்ற அமைப்புகள், இன்றைய எளிதான கட்டட அமைப்பு முறைகள் என்று அன்றைக்கு எதுவும் இல்லாத நிலையிலும் இக்கோபுர கட்டியிருக்காங்க… அதோடு இந்த தஞ்சை மண் விவசாயத்திற்கே உரிய மண்ணு. இங்கே பாறையெல்லாம் கிடையாது. ஆனால் இந்த கோயிலின் பீடம் மட்டுமே 200 டன். வேறு ஊர்களிலிருந்து கொண்டுவந்து இங்கே அடுக்கி அழகா வடிவமைத்து இருக்காங்க. எவ்வளவு பெரிய விஷயம் அதெல்லாம்.” என்று அவர் அறிந்து வியந்தவற்றை மகனுக்கு தக்க சமயத்தில் கடத்த முயல, அவனோ காதை தேய்த்துக்கொண்டு பஞ்சு எடுத்துவந்திருக்கலாமோ என்று தான் யோசித்துக் கொண்டிருந்தான். 

 

அதை அறியாத அன்பரசன் பார்வை மொத்தமும் அவர் எதிரில் கம்பீரமாய் எந்த போருக்கும், எந்த படைக்கும் அஞ்சாமல் அசையாமல் ஆயிரம் வருடங்களுக்கு மேலாக உயர்ந்து நிற்கும் பெரிய கோவிலின் மீதே இருந்தது.

 

ஏனோ தீராக்காதல் அக்கோவிலின் மீது, சோழர்களின் மீது, அவர்களின் வீரம் மற்றும் பற்றின் மீது… அதன் பொருட்டே மகனுக்கு அதன் சார்ந்த அதிகம் வெளியில் தெரியாத பெயரை சூட்டியிருக்க, அவர் பெயர் வைத்த அழகை கண்ட நீலா அடுத்து பிறந்த மகளுக்கு திவ்யா என்று அடம்பிடித்து பெயர்சூட்டிவிட்டார். அன்னை தனக்கு அப்படி செய்யவில்லையே என்ற கடுப்பு தச்சனுக்கு விபரம் தெரிந்த நாள் முதலே உண்டு… 

 

“சிவனின் மீதான பற்றோடு மொழிப்பற்றையும் இந்த கோவில் தாங்கி நிக்குது. கோயிலில் உள்ள சிவலிங்கத்தின் உயரம் 12 அடி நம்ம தமிழின் உயிர் எழுத்துக்கள் 12. சிவலிங்கத்தின் பீடத்தின் உயரம் 18 அடி, தமிழின் மெய் எழுத்துக்கள் 18. கோவில் கோபுரத்தின் உயரம் 216 அடி, தமிழின் உயிர் மெய் எழுத்துக்கள் 216. சிவலிங்கத்திற்கும் நந்திக்கும் உள்ள இடைவெளி 247 அடி, தமிழின் மொழியின் மொத்த எழுத்துக்கள் 247. மொழி மீதும், கடவுள் மீதும் எவ்வளவு பக்தி இருந்தால் இப்படி ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து செதுக்கி இருப்பாங்க…” என்று சிலாகித்து அன்பரசன் பேச, அதை உள்வாங்கிக் கொள்ளும் அளவிற்கு பொறுமை இல்லை அவனுக்கு.

 

“கோவிலை சைட் அடிச்சது போதும்… நீலாவதி உள்ளே போயிடுச்சு. போங்க துணைக்கு.” என்று அன்பரசனை நினைவுகளில் இருந்து கலைக்க, அவனை முறைத்துவிட்டு மனைவியை தேடிப்போனார் அன்பரசன். இவனும் அங்கிருந்து மெல்ல நகர்ந்தான்.

 

“டேய் மச்சான் எங்க இருக்க நீ?” பார்வை கூட்டத்தை அளவெடுக்க, கால்கள் கடைகள் இருக்கும் இடம் நோக்கி நடைபோட்டது.

 

“பஞ்சுமிட்டாய் கடையில்.” என்ற நண்பனிடமிருந்து பதில் வர, தலையில் அடித்துக்கொண்டான் தச்சன், “மானத்தை வாங்குற குணா.”

 

“அக்கா வந்துருக்கு. குட்டியும் வந்துருக்காடா, அவளுக்குத் தான் வாங்கிக் கொடுத்துட்டு இருக்கேன்.” என்று குணா பதில் கூற,

 

“விளங்கிடும்… சீக்கிரம் குட்டியை அக்காகிட்ட விட்டுட்டு வா, இந்த வீதியை சுத்தி ஒரு ரவுண்ட் அடிச்சிட்டு வருவோம்.” என்று கட்டளையிட்டு விட்டு இணைப்பை துண்டித்தவன் பார்வை அங்கிருந்த கடைகள் மீது மேம்போக்காக உலாவியது… ஆங்காங்கு சற்று அழகாய் தெரிந்த காரிகைகள் மீது அதிக நேரம் பார்வை நிலைத்து பின் மீண்டதோ என்னவோ!

 

*** 

 

“பளார்…” என்ற ஓசையின் அதிர்வில் அங்கிருந்த அனைவருமே திரும்பப் பார்த்தனர்.

 

பள்ளி சீருடையில் இருந்த சிறுமியொருத்தி பயத்தில் சற்று நடுங்கினாலும் அவளது கரம் என்னவோ தன் எதிரில் இருந்தவன் கன்னத்தை பதம் பார்த்திருந்தது.

 

“இதை முன்னாடியே செய்திருந்தால் இத்தனை நாள் உன் பின்னால் வந்து உனக்கு தொல்லை கொடுக்கும் துணிச்சல் இவனுக்கு வந்திருக்குமா?” அதிகாரமும், ஆளுமையும் போட்டி போட்டுக்கொண்டு அவளின் குரலிலும் உடல்மொழியிலும் வெளிப்பட, அவளின் கரத்தை பிடித்து அவளை பின்னே இழுக்க முயன்று கொண்டிருந்தாள் அவளது தோழி நித்யா, “நமக்கு எதுக்கு வம்பு? நீ வாடி நாம போவோம்… அந்த பொண்ணோட வீட்டில் பார்த்துப்பாங்க.”

 

நித்யாவின் பிடியை உதறியவள், “இப்படி எல்லோரும் ஒதுங்க ஒதுங்கத்தான் இவனுங்களுக்கு எகத்தாளம் கூடிப்போச்சு. டேய் என்ன படிக்குற நீ?” அடிவாங்கி நின்று கொண்டிருந்தவனை பார்த்து கேள்வி எழுப்பினாள் அவள்.

 

இவளின் அதிகாரக் குரலில் சற்று பம்மியவன், “நீங்க எதுக்கு அதெல்லாம் கேட்குறீங்க?” என்று எதிர்கேள்வி எழுப்ப, இதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த மற்றொரு பெண் முன்னே வந்தார்.

 

“செய்யுற தப்பை எல்லாம் செஞ்சிட்டு அந்த பொண்ணையே கேள்வி கேட்குற. படிக்குற வயதில் படிக்காம ஊர் சுத்திட்டு பொண்ணுங்ககிட்ட வம்பு செய்துட்டு இருக்க. இவனை எல்லாம் போலீசில் பிடித்து கொடுக்கணும்.” என்று சத்தம் போட பதறிவிட்டான் அவன்.

 

“அந்த பொண்ணு பார்க்க நல்லா இருந்துச்சு சும்மா பார்த்தேன், போலீஸ் எல்லாம் வேண்டாம்.”

 

“பொண்ணுங்க என்ன காட்சிப் பொருளா அழகா இருக்குனு நின்று நிதானமா நீங்க பார்க்கறதுக்கு? போலீசிடம் சொல்லி தோளை உரிச்சிடுவேன்…நான் கேட்ட கேள்விக்கு இன்னும் நீ பதிலே சொல்லல… என்ன படிக்குற நீ?”

 

“பாலிடெக்னிக் செகண்ட் இயர் அக்கா. நீங்க போலீசிடம் எல்லாம் சொல்லாதீங்க. வீட்டுக்கு தெரிஞ்சாவெளுத்துடுவாங்க. இனி இதுமாதிரி செய்ய மாட்டேன் அக்கா. இந்த முறை மன்னிச்சிடுங்க,” என்று அவளிடம் இறைஞ்சினான் அவன். கூட்டம் அதிகம் சேர்வது போல இருக்க, யாரிடமும் உதைவாங்க தெம்பில்லை அவனுக்கு.

 

“அந்த பயம் இருந்திருந்தால் இப்படித் தான் இந்த பொண்ணையே ஒருவாரமா தொடர்ந்து வந்திருப்பாயா? போலீஸ் என்றதும் மட்டும் இப்படி பம்முர… உன்னை எப்படி நம்புவது?” என்று நம்பாமல் அவனை முறைத்தாள் அவள்.

 

“அக்கா அக்கா ப்ளீஸ்… நீங்க என்னை நம்பலாம். நான் இனி இந்த பொண்ணு இருக்குற பக்கமே இல்லையில்லை யாரையுமே இப்படி தொந்தரவு செய்ய மாட்டேன்.”

 

“உன் பெயர், உன் அப்பா, அம்மா பெயர், நம்பர் எல்லாம் கொடுத்துட்டு போ. இனி ஒருதரம் இந்த பொண்ணுக்கு உன்னால் பிரச்சனை வந்தால் போலீஸ் லாக்அப் தான்,” என்று அவனை மிரட்டியவள் அவனிடமிருந்து அவனைப் பற்றிய எல்லா தகவல்களையும் வாங்கிவிட்டு தான் அனுப்பினாள். கூட்டமும் மெல்ல கலைந்தது.

 

அவன் சென்ற பின்பு இப்போது முறைப்பு பள்ளிச்சசீருடையில் இருந்தவள் மீது பாய்ந்தது.

 

“ஒரு வாரமா உன் பின்னாலே வந்து உனக்கு அசவுகரியம் கொடுக்குறான் நீயும் அமைதியா ஒதுங்கி ஒதுங்கி போற? அவனை எதிர்த்து என்னடான்னு கேட்க வேண்டாம்? இதுமாதிரி பொண்ணுங்க பயந்து பயந்து ஒதுங்கிப் போகிறதால் தான் அவனுங்க தறிகெட்டு என்ன வேண்டுமென்றாலும் செய்யலாம்னு பொண்ணுங்க பின்னாடி சுத்துறானுங்க… இப்போ நான் சொன்னதால அவனை அடிச்ச… நாளையே அவன் திரும்ப உன் பின்னாடி வந்தா என்ன செய்யுவ?” என்று கேட்க, அந்த சிறுமி அழுதே விட்டாள்.

 

“நீங்க சொன்னதாலத் தான் அடிச்சேன். இப்போ என்னக்கா இப்படி கேட்குறீங்க?”

 

“நீ அந்த பொண்ணுக்கு உதவி செய்றேன்னு நினைத்தால் இக்கட்டில் மாட்டிவிட்டுருவ போலிருக்கே… நாளைக்கே இந்த பிரச்சனையால் அந்த பொண்ணு வீட்டில் படிப்பை நிறுத்திட்டா என்ன செய்வ?” துவக்கத்தில் இருந்தே இந்த களீபரத்தை பார்த்துக் கொண்டிருந்த மற்றொரு பெண் இவளைக் கேட்க,

 

“பிரச்சனை வரும்னு அமைதியாக போக ஆரம்பித்தால் நம்மை திரும்ப அடுப்பங்கரைக்கு அனுப்பிடுவாங்க அக்கா. நமக்கு இடைஞ்சல் கொடுத்தால் எதிர்த்து நிற்கணும். நம்மோட விருப்பத்திற்கு மாறாக எதுவும் நடந்தால் வெற்றி தோல்வியை பற்றி யோசிக்காது எதிர்ப்பு தெரிவிக்கணும். நம்முடைய மறுப்பை அழுத்தமா பதிவு செய்யணும். அப்படி ஒவ்வொருவரும் செய்ய ஆரம்பித்தால் என்றாவது ஒருநாள் நிச்சயம் நம் குரலுக்கு செவி சாய்ப்பாங்க. 

 

இதோ இன்னைக்கு அடிச்சதும் பம்முனானே அதே மாதிரி இந்த பொண்ணு முதல் நாளே அவனை முறைத்திருந்தால் கூட அவளது எதிர்ப்பு அவனிடத்தில் பதிவு செய்யப்பட்டிருக்கும். அதை விட்டுவிட்டு எல்லாவற்றிற்கும் பயந்து ஒடுங்கினால் நம்மை அடக்கிவிடலாம் என்ற ஆணவம் வந்துவிடும். அடக்கும் வழியை அவர்களுக்கு நாமே வெளிச்சம் போட்டு காண்பித்துவிட்டு பின் நம்மை அடக்குறாங்கன்னு புலம்பி ஒரு பயனும் இல்லை. முடிந்த வரை முயற்சி செய்யணும் இல்லையா நமக்கு நெருக்கமானவர்களிடம் பிரச்சனையை பகிர்ந்து தீர்வு கண்டுபிடிக்கலாம். பயத்தின் பின்னால் ஒளிந்தால் எதுவும் கிடைக்காது.” என்று தெளிவாக பேசிவளுக்கும் பலவீனம் என்ற ஒன்று இருக்கிறதே… 

 

அவளுக்கு மட்டுமா இவ்வுலகில் பிறப்பெடுத்த ஒவ்வொரு உயிரினத்திற்கும் ஏதாவது பலம் இருப்பது போல பலவீனமும் இருக்கத்தான் செய்கிறது. அந்த பலவீனத்திற்கு இடம்கொடுத்தால் பலம் கூட பலமிழந்துவிடும் என்று புரியத்தான் நேரமெடுக்கிறது.

 

“நான் இனிமே தைரியமா இருக்கேன் அக்கா.” என்றாள் அச்சிறுமி இடைபுகுந்து. 

 

மென்முறுவல் பூத்தவள், “என்ன படிக்குற?” 

 

“பத்தாவது அக்கா.” என்று பதில் கூறினாள் அவள்.

 

“இனி பயப்படாம எதிர்த்து நிற்கணும். உனக்கு உடன்பாடில்லைனு நீ வெளிப்படையா காட்டினால் குறைந்தது ஒரு சதவிகித பேராவது உன்னை நெருங்க மாட்டாங்க.” என்றவள் மேலும் சிலபல அறிவுரைகளை வழங்கிவிட்டு தன் கல்லூரி பேருந்திற்காக காத்திருந்தாள்.

 

***

 

“கூட்டமா இருந்திருக்குமே தரிசனம் சிறப்பா கிடைச்சுதா?” 

 

மூவரும் வீட்டில் நுழைந்ததுமே கேள்வியே வரவேற்ப்பாய் வந்தது.

 

“கொஞ்சம் தள்ளுமுள்ளா தான் இருந்தது ஆனால் எனக்கு நிறைவான தரிசனம் கிடைச்சுது.” என்று நீலா பதில் கூறிவிட்டு நடுமுத்தத்தில் கால்களை நீட்டி முதுகை தூணில் சாய்த்து ஓய்வாய் அமர்ந்தார்.

 

“அதென்ன உனக்கு மட்டும் நிறைவான தரிசனம்?” அடுத்த கொக்கி போட்டார் அவரது மாமியார்.

 

“வழக்கம் போல உங்க பேரனும் அவரும் சண்டை போட்டுட்டு இருந்தாங்க, இது சரிப்பட்டு வராதுன்னு நான் மட்டும் பார்த்துட்டு வந்தேன். நீங்க வராததும் நல்லதா போச்சு, முதியவர்களுக்கு தனிவழினு போட்டுட்டு எல்லோரையும் அந்த வழியிலே விட்டாங்க. எங்க திரும்பினாலும் தலை தான் தெரிந்தது, காற்றுகூட சிரமப்பட்டு தான் உள்ளே நுழைஞ்சிருக்கும்.” என்று நீலா கூறவும், தன் அருகிலேயே வைத்திருந்த தண்ணி சொம்பை அவரிடம் நீட்டி, “வந்ததும் காலை நீட்டி உட்கார்ந்துட வேண்டியது. வெயிலில் களைச்சு போய் வந்திருக்காங்க என் புள்ளையும், பேரனும் தண்ணி கொடுக்கணும்னு தோணல…” மாமியார் வாடை மெலிதாய் எட்டிப்பார்த்தது அவரிடம்.

 

“எனக்கு இப்போ தண்ணி வேண்டாம், தச்சனுக்கும் வேண்டாம்னு நினைக்கிறன். வரும் போதே பன்னீர் குடிச்சிட்டு தான் வந்தோம்.” மனைவியை விட்டுக்கொடுக்காமல் அதே சமயம் தாயை எதிர்த்தும் பேசாமல் மனைவிக்கு சிபாரிசு செய்தார் அன்பரசன். இது அவ்வப்போது நடக்கிற கூத்து தான் என்றாலும் எப்போதும் போலவே தந்தையை கேலிப்பார்வை பார்த்தான் தச்சன். (பன்னீர் – உலர் ரோஜாப்பூவினில் இருந்து பிரித்தெடுக்கப்படும் சாரோடு சர்க்கரை கலவை சேர்த்து தயாரிக்கப்படும் பானம்)

 

“ஆமா கிழவி வரும்போது நல்லா சில்லுனு ஆளுக்கு ஒரு பன்னீர் குடிச்சிட்டு தான் வந்தோம். அதான் வீட்டுக்கு வந்தாச்சே, இப்போ நான் கிளம்பவா அம்மா?” என்று நீலாவைப் பார்த்தான் தச்சன். அவர் தானே கோவிலுக்கு சென்றுவிட்டு நேரே வீட்டிற்கு தான் வரவேண்டும், அதன் பிறகு வேண்டுமென்றால் வேறெங்கும் சென்றுகொள் என்று வீடு வரை இழுத்து வந்திருந்தார்.

 

“நைட் சீக்கிரம் சாப்பிட வந்துடு தச்சா… ரொம்ப நேரம் வெளியில் சுத்தாத, நேரத்துக்கு வீட்டுக்கு வந்துடு.” என்று வழமையாய் சொல்லும் அதே செய்தியை சொல்ல, தலையாட்டிவிட்டு வெளியேறியவன் பைக்கில் பறந்தான் என்று தான் சொல்ல வேண்டும்.

 

“நீ சொல்லக்கூடாதா நீலா… எவ்வளவு வேகமா போறான் பாரு… எப்போ தான் மாறாப் போறானோ…” தச்சன் அதிவேகமாய் வண்டியை கிளப்பிய சத்தம் உள்ளே முத்தம் வரை கேட்க, அக்கறையுடன் மனைவியிடம் மகன் நலம் வேண்டினார் அவர்.

 

“இளரத்தம் அப்படித்தான் இருப்பான் அரசு. குடும்பம் ஆகிட்டா எல்லாம் தானா அடங்கிடும்.” என்று மாமியார் சொல்வதை கேட்டதும் ஏதோ நினைவு வந்தவராய் கணவர் புறம் திரும்பிய நீலா, “நம்ம திவ்யா மாமியார் சொந்தத்தில் ரெண்டு மூணு பொண்ணு இருப்பதா சொன்னாங்க. யாரு என்னனு விசாரிங்க. தச்சனுக்கும் ஒத்துவந்தா பார்ப்போமே…”

 

“அதற்குள் அவனுக்கு பொண்ணு பார்க்கணுமா? இன்னும் ஒரு வருஷம் போகட்டுமே…” என்று இழுத்தார் அன்பரசன்.

 

“இந்த ஆவணி வந்தா இருபத்தேழு முடிஞ்சிடும். இப்போ பார்க்க ஆரம்பித்தால் சரியா இருக்கும். இன்றைக்கே நல்ல நாள் தான். போன் போட்டு மாப்பிள்ளையிடம் விசாரியுங்க.” என்று நீலா உந்த, அன்பரசன் அதற்கு மேல் மறுக்கவில்லை.

 

மாப்பிள்ளைக்கு அழைத்து பேச, அவர் வேறொருவர் எண் கொடுத்து பேசச் சொல்ல, அடுத்த பத்தாவது நிமிடத்திலேயே அந்த வீட்டின் மருமகளை முடிவு செய்துவிட்டார் அன்பரசன்.

 

காரணம் ஒன்றே ஒன்று தான்… பெயர். அவளது பெயர் குந்தவை. அவர் பிரமித்து ரசிக்கும் சோழ வம்சத்தின் தன்னிகரற்ற பெண்களில் குறிப்பாய் ராசராசனின் தமக்கை பெயரும், அவரது மகள் பெயரும் குந்தவையே… 

***

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *