திருமதி: அ

 

நாலாபுறமும் அடைக்கப்பட்டிருக்கும் அந்த நிசப்த அறையை இருள் சூழ்ந்திருக்க, பெயருக்கென்று இரவு விளக்கும் எரிந்துகொண்டிருக்க, அந்த நிசப்தத்தை கலைக்கவென அலறியது அந்த ஒலிக்கடிகை. வழக்கமான ஒன்றாயினும் முதல்முறை போலவே பதறியடித்து ஒலிக்கடிகையின் தலையில் ஒரு தட்டு தட்டி அமர்த்தினாள்.

 

கண் இமைகள் பிரியாமல் அடம்பிடிக்க, மனமோ இன்னும் ஒரு ஐந்து நிமிடம் மட்டும் உறங்கிக்கொள்கிறேனே என்று அவகாசம் கேட்டது. மூளையும் அலுப்பில் தன் கடினத்தை குறைத்துக்கொள்ள, போர்வையை இழுத்து தலை வரை போர்த்திக்கொண்டு தன் உறக்கத்தை தொடர்ந்தாள் சக்தி. சக்தி ஈஸ்வர்… 

 

சக்தியும், சிவனும் போல அத்தனை அம்சம் பொருந்திய இத்தம்பதியர் காதல் மழையில் நனைகிறார்களோ இல்லையோ தங்களின் பெரிய குடும்பத்தை கையாளும் பொருட்டு தினமும் பொறுப்புக் கடலில் மூழ்கி முத்தெடுக்க முயற்சித்துக் கொண்டிருக்கிறார்கள். 

 

நாளொரு வேலை பொழுதொரு சொந்தபந்தங்களின் வருகை என அவ்வீடே கலைகட்டி இருக்கும். ஐம்பதுகளில் துவங்கி  மளமளவென வளர்ந்துவிட்ட மக்கள் தொகையில் இவர்கள் குடும்பத்தின் பங்கு அதிகம். ஈஸ்வர் குடும்பம் துவங்கி சக்தி குடும்பம் வரை ஒருசேர பல தாத்தா, பாட்டிகள், பெரியப்பா, சித்தப்பா, அத்தை, பெரியம்மா, சித்தி, மாமா, கொழுந்தன், கொழுந்தியாள், அண்ணன், தம்பி, தங்கை, அவர்களின் வாரிசுகள் என்று அனைத்து உறவுமே நெருங்கிய உறவாகி அருகருகே சில நிமிட பயணத் தொலைவில் இருக்க தினமும் யாரேனும் வீட்டிற்கு வந்துவிடுவர். அதுவே அவ்வீட்டை எப்போதும் ஒருவித உயிர்ப்புடன் வைத்திருக்கும். தனிமை என்ற சொல்லே அவ்வீட்டின் அகராதியில் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

 

“சக்தி மணி நாலு… அலாரம் அடிச்சி ஐந்து நிமிடம் ஆகிட்டு. இன்னும் விழிக்கலையா?” என்ற ஈஸ்வரின் மெலிந்த ஓசை மனைவியின் செவியைத் தீண்டியது. லேசாக போர்வைக்கு உள்ளேயே உருண்டவள் நத்தை ஓட்டை பிரித்துக்கொண்டு வெளியே வருவது போல் மெல்ல தலையை போர்வையிலிருந்து விளக்கி வெளிவந்தாள். எழுந்தமர்ந்து இரவு உடையை நேர்த்தியாய் சீர் செய்தவள், கைகளை பரபரவென தேய்த்து குளிர்சாதனப் பெட்டியில் இருந்து வந்த குளுமையை ஈடுசெய்து கொண்டு, விரிந்திருந்த தன் கூந்தலை அள்ளி முடிந்து கொண்டையிட்டாள். கைகள் அதன் வேலையை செய்து கொண்டிருக்க விழிகள் தன் அருகில் ஆழ்ந்த நித்திரையில் இருக்கும் தன் இரு முத்துக்களை பாசத்துடன் வருடியது. குனிந்து தன் இரு புதல்வருக்கும் நெற்றியில் முத்தத்தை வைத்துவிட்டு நிமிரப்போகும் நேரம் மறுபக்கம் படுத்திருந்த ஈஸ்வர் அவள் கைகளை தன் கட்டுக்குள் கொண்டுவந்திருந்தான்.

 

“பசங்களுக்கு மட்டும் தானா? பசங்க அப்பாவுக்கு கிடையாதா?”

 

“ஷ்… பசங்களை நடுவுல வச்சிக்கிட்டு என்ன பேச்சு இது? இன்னும் நேரம் ஆகல தூங்குங்க…” என்று அவனை கத்தரிக்க முற்பட்ட,

 

“நான் பேசல… ஆனால் நீ கொடுத்துட்டு வேலை செய்ய போ.” என்று வியாபாரம் பேசினான்.

 

“காலையிலேயே சார் சரியில்லையே…”

 

“ஏய்… ஒரு வாரம் ஆச்சு ஒரு கிஸ் கூட கொடுக்கல நீ…” கணவன் புகார் பத்திரம் வாசிக்க,

 

“நீங்களும் தான் கொடுக்கல…” என்று அவளும் பதில் பேசினாள்.

 

“அதான் இப்போ கேக்குறேன்… இந்த ஒரு வாரம் தான் எவ்வளவு அலைச்சல்?… எல்லா வேலையும் முடித்தவுடன் அக்கடான்னு படுக்கத் தான் தோணுது.” என்றவன் அங்கலாய்க்க,

 

“அதே மாதிரி இப்போதும் சமத்தா படுப்பீங்களாம்…” என்று கொஞ்சும் குரலில் கிசுகிசுத்தவள் லேசாக எம்பி அவன் நெற்றியில் இதழ் ஒற்றி எடுத்தாள். அவனும் கடனேதும் வைக்காது அவள் நெற்றியிலும் கன்னத்திலும் வட்டியோடு செலுத்த, அவனின் ஏக்கப் பேச்சு இப்போது புரிந்தது பெண்ணவளுக்கு… அவன் கேட்டுவிட்டான் இவள் கேட்கவில்லை அதுவே வேறுபாடு… மற்றபடி உணர்வுகள் ஒரே கோட்டில் தான் பயணித்தன.

 

“இன்னைக்கு லஞ்ச்கு புலாவ் செஞ்சுக்கொடு.” என்று வேண்டியவன் சக்தியை விடுத்து தன் மூத்த மகன் சதீஸ் அருகில் படுத்துக்கொண்டான்.

 

அவன் வேண்டலில் மனைவியின் முகம் உவப்பை தத்தெடுத்தது. அவன் எப்போது கடைசியாக தனக்காக எதுவும் வேண்டினான் என்று நினைவை தட்டி எழுப்ப அது அவர்களின் முதல் புதல்வன் உதயமாக காத்திருந்த பொழுதை நினைவுப் படுத்தியது. அவள் வளைகாப்பு வரை தான் அவனுக்கென தனியாக மெனெக்கெட்டு செய்யும் வேலைகளை ஏவியது. அதன் பின்னான நாட்கள் பெற்றோராய் பொறுப்புகள் கூட காலம் அசுர வேகத்தில் அவர்களை இழுத்துச் சென்றது. 

 

அவனை பார்த்து புன்னகை சிந்திய சக்தி தன் அருகில் இருந்த ஒரு வயது இளைய மகன் அகில் கீழே விழுந்துவிடாமல் இருக்க தலையணை சுவர் கட்டிவிட்டு சத்தமின்றி எழுந்து தன் காலைக்கடன்களை முடித்துக் கொண்டு வெளியேறினாள்.

 

கூடத்திற்கு வந்து விடிவிளக்கை ஒளிர்ப்பித்தவள், சாவியை எடுத்துக்கொண்டு வாசல் தெளிக்க சென்றாள். கும்மிருட்டை கிழித்துக் கொண்டு வெளிச்சத்தை கொடுத்துக்கொண்டிருந்த தெருவிளக்குகளின் ஒளியில் அந்த காலனி முழுதும் ஒரு நோட்டம் விட்டாள். நேற்று தான் அந்த புதிய பகட்டு வில்லாக்கள் அடங்கிய காலனிக்கு குடி பெயர்ந்தனர். அந்த காலனியே புதிதாக உருவானதால் அங்கு வில்லா வாங்கி குடிபெயர்ந்திருக்கும் அனைவருமே முன்பின் தெரியாதவர்கள் தான். பக்கத்தில் இருப்பவர்களையாவது தெரிந்து கொள்ள வேண்டும் என்று மனதில் குறித்துக்கொண்டு அந்த பிரம்ம முகூர்த்த நேரத்தில் யாருமற்ற தெருவில் தன் வீட்டு 

வாசல் பெருக்கி, கோலமிட்டாள். 

 

“எழுந்திட்டியா சக்தி… அலைச்சல்ல  தூங்கிடுவியோன்னு நினைச்சேன்…” என்று அந்த நிசப்த வேளையை கலைக்க வந்தார் அவள் மாமியார்.

 

“வேலை இருக்குல்ல அத்தை… அதுவும் இல்லாமல் எப்போதும் இந்த நேரத்திற்கு எழுந்து பழக்கம் தானே…” என்றபடியே கோலப்பொடியை ஒதுங்க வைத்துவிட்டு உள்ளே நுழைந்தாள்.

 

“சரி சரி… காபி போட்டு வை நான் குளிச்சிட்டு வந்துறேன்… வெளி கதவு திறந்திருக்கவும் இங்க வந்துட்டேன்.”

 

ம் போட்டவள் சமையலறை சென்று காபி போட ஏற்பாடு செய்துவிட்டு அங்கு நேற்று இரவே வேலையாள் கழுவி காய வைத்த பாத்திரங்களை அதன் இடத்தில் அடுக்கினாள். பல வருடங்களாய் செய்யும் பழக்கப்பட்ட வேலை என்பதால் அனாசியமாக அனைத்தையும் கனக்கச்சிதமாக செய்தாள். அவள் பிறந்த வீடும் பெரிதல்லவா அங்கேயே இதெல்லாம் பழக்கப்பட்ட ஒன்று தான். அதனால் வேலையெல்லாம் அவளுக்கு பெரிதாய் தெரியவில்லை.

 

மணமணக்க சூடான காபியை ஒரு கோப்பையில் ஊற்றி எடுத்துக் கொண்டவள், தன் மூத்த மகனின் டைரியை எடுத்துக்கொண்டு உணவு மேசையில் அமர்ந்து அவனுக்கு கொடுக்கப்பட்ட வீட்டுப்பாடங்கள் மற்றும் ப்ராஜெக்ட் செய்து விட்டானா என்று சரி பார்த்தாள். முதல் நாள் மாலை அவனின் கல்வி விஷயங்களை இப்போது கவனித்துக் கொள்வது ஈஸ்வரின் தங்கை தான். அவர்களின் ஒற்றை வயது கடைக்குட்டிக்கு அண்ணன் எப்போதுடா படிக்க உட்காருவான் நாம் எப்போது கிழிக்கலாம் என்று காத்திருப்பவன் ஆகையால் கல்லூரியில் படிக்கும் ஈஸ்வரின் தங்கை சுகன்யா தான் சதீஷின் படிப்பு விஷயங்களை கவனித்துக் கொள்வது. சக்தி காலை வேளையில் காபி அருந்திக் கொண்டே அதை சரிபார்த்து விடுவாள்.

 

“எல்.கே.ஜி படிக்கிற பையனுக்கு தினமும் எவ்வளவு வீட்டுப் பாடம் கொடுக்குறாங்க பாரேன்…” 

 

“ஆமா அத்தை. முன்னமாதிரி எல்லாம் இப்போ இல்லை. சின்ன வயசுலேயே பெரிய ஆளா வந்துடணும்னு எல்லோரும் விருப்பப்படுறாங்க… இப்போதெல்லாம் விருப்பம் இல்லைனாலும் இதெல்லாம் செஞ்சு தான் ஆகணும்னு ஒரு வித அழுத்தம் சமுதாயத்தில் இருக்கு… இது போதாதென்று பசங்களை ஏதாவது ஒரு எக்ஸ்ட்ரா கிளாசில் சேர்த்து விட்டுறாங்க.”

 

“ஆசை தான் எல்லாத்துக்கும் காரணம் சக்தி. ஒரு விஷயத்தை குழந்தை பிடிச்சி செஞ்சா அதையே செய்ய விட்டுறனும்… இல்லையா பசங்கள ஊக்கப்படுத்தி அவர்களுக்கு என்ன விருப்பம்னு தெரிஞ்சிக்கணும். அதை விடுத்து பாட்டும், டான்சும் தான் பெரிது என்பது போல பலர் சேர்த்து விட்டுறாங்க… நம்ம சதீசை ஏன் எந்த கிளாஸ்ளையும் சேர்க்கலேன்னு உங்க மாமாவே கேக்குறாங்க…” என்று தன் கணவர் பற்றி மாமியார் குறைபடிக்க வாய்க்குள்ளேயே சிரித்துக்கொண்டாள் சக்தி. இந்த அதிகாலை நேரம் இவர்கள் இருவருக்கு மட்டுமே உரியது. பொதுவான விஷயம் முதல் கேலிப் பேச்சு வரை அனைத்தும் பேசுவர் எவர் தொந்தரவுமின்றி.

 

“இப்போது  வீட்டுக்கு ஒரு பொறியாளர் மாதிரி இன்னும் சில வருடங்களில் வீட்டுக்கு ஒரு டான்சர், சிங்கர் இருப்பாங்க…” என்று கிளுக்கிச் சிரித்தாள் சக்தி.

 

“அப்படிதான் நடக்கும் போலிருக்கு… அதைவிட்டுத் தள்ளு… இன்னைக்கு என்ன மதிய சமை…” என்று அவர் கேட்டு முடிக்கும் முன்பே பதிலை சொன்னாள் சக்தி.

 

“புலாவ் செய்யலாம் அத்தை. எல்லாருக்கும் ஒரு சேஞ்சா இருக்கும்…”

 

“இன்னைக்கு வெள்ளிக்கிழமை சக்தி. இஞ்சி, பூண்டு சேர்க்க மாட்டோம் மறந்துட்டியா? அதுவும் இல்லாம மாமாக்கு இதெல்லாம் பிடிக்காது…” என்றுவிட சக்தியின் முகம் சுணங்கிவிட்டது. பல வருடங்கள் கழித்து கணவன் விருப்பப்பட்டு கேட்டதை மறுப்பதா… 

 

“அவருக்கு, சதீஸ்க்கு, ரவி தம்பி அப்புறம் சுகன்யாவுக்கு மட்டும் செஞ்சு கொடுக்கலாம் அத்தை. செஞ்சதும் நான் அடுப்பெல்லாம் சுத்தம் பண்ணிட்டு நமக்கும், பாட்டி, தாத்தாவுக்கும் எப்போதும் போல சமையல் செய்திடுறேன்… காலையிலேயே சாம்பார் வைச்சுட்டா மாமாக்கும் லன்ச் கொடுத்துடலாம்…” 

 

“நீ சொல்ற இரண்டையும் தவிர்த்து டிபன் வேற செய்யணும். எத்தனை செய்வ சக்தி அதெல்லாம் வேண்டாம்…”

 

“நீங்க எப்போதும் போல காய் மட்டும் நறுக்கி கொடுங்க… நான் செஞ்சுடுவேன்…” 

 

“ஒரு முடிவு பண்ணிட்டா யார் பேச்சையும் கேட்க மாட்டியே… நீ மதிய சமையலை பாரு நான் டிபன் செஞ்சுடுறேன்… அந்த கரெண்ட் அடுப்பை மட்டும் எனக்கு ஆன் பண்ணி கொடுத்துடு. என்னவோ அது மட்டும் எனக்கு பிடிபடவே மாட்டிங்குது…” என்று அவள் மாமியார் புலம்ப, மாமியாரும் மருமகளும் சேர்ந்து சமையலறையில் பம்பரமாய் சுழல ஆரம்பித்தனர். அவர்கள் விடியல் நான்கு மணிக்கே துவங்கிவிடும். வீட்டில் இவள், தாத்தா, பாட்டி, மாமியார் மற்றும் அகில் தவிர்த்து மற்ற ஐவருமே ஒவ்வொருவராய் ஏழு மணிக்கு மேல் முறையே வேலைக்கும், கல்லூரிக்கும், பள்ளிக்கும் செல்வதால் இவர்கள் நான்கு மணிக்கு எழுந்தால் தான் எல்லாம் ஒழுங்காய் நடக்கும். நான்கு தலைமுறை ஒன்றாய் வாழும் பெரிய குடும்பமல்லவா… 

 

ஐந்து மணிக்கு மேல் ஒவ்வொருவராய் எழுந்து வர, அவர்களுக்கு குடிக்க காபி தனியாக, மாமனாருக்கும், தாத்தாவுக்கும் டீ என்று அலுக்காமல் அவள் போட, அவர்களே சமையலறை வந்து வாங்கிச் சென்றனர்.

 

“என்ன அண்ணி இன்னைக்கு கிட்சன் டி-நகர் மாதிரி இவ்வளவு பரபரப்பா இருக்கு?” அவனுக்கான காபியை வாங்கிக்கொண்டு அங்கேயே நின்று அருந்திய ரவி கேட்க, 

 

“இன்னைக்கு மதியத்துக்கு ரெண்டு சமையல் அதான். இந்தா இந்த காபியை போய் உங்க அண்ணனுக்கு கொடுத்துட்டு சதீஷை எழுப்பிவிட சொல்லு…” என்று அடுப்பில் ஏதோ செய்துகொண்டே ஒரு கப்பை ரவி புறம் நகர்த்தி சொல்லியவள் வியர்வை வழிய நிற்பதை பார்த்து அதை அப்படியே ரவி தன்  அண்ணனிடமும் அந்த செய்தியை கடத்தி விட்டான்.

 

“அண்ணிக்கு இன்னைக்கு அவ்வளவு வேலை அண்ணா, அதனால சதீஷை நீயே எழுப்பி கிளப்பி விடுவியாம்…”

 

“ஏன் வருத்திக்கிறா… இன்னைக்கு எதுவும் விசேஷமா?” என்று சந்தேகம் எழுப்பினான் ஈஸ்வர்.

 

“தெரில… ஏதோ ரெண்டு சமையல்னு சொல்லிட்டு இருந்தாங்க…” என்று ரவி சொல்லிவிட்டு போக ஈஸ்வரே சமையலறை சென்றான்.

 

“சக்தி ஏன் இப்படி வியர்க்க விறுவிறுக்க வேலை செய்ற? சுகன்யாவை துணைக்கு கூப்பிடுக்க வேண்டியது தானே…”

 

அவனை திரும்பியும் பாராது வேகமாய் குக்கரை திறந்தவள் புலாவை கிண்டி ருசி பார்த்துக் கொண்டே, “அதெல்லாம் ஒன்னும் இல்லை. இவ்வளவு நேரம் அத்தை கூட இருந்து உதவி செஞ்சிட்டு தான் போறாங்க… குழம்பு மட்டும் இறக்கிட்டா வேலை முடிஞ்சிடும்…”

 

“சரி பார்த்து செய்… அப்புறம் சொல்ல மறந்துட்டேன்… இன்னைக்கு ஜி.எம்முடன் மீட்டிங் இருக்கு மதியம் எனக்கு லன்ச் வேண்டாம்.” என்று சாதாரணமாய் கூறவும் சக்தியின் கைகளிலிருந்து தெறித்தது கரண்டி, விழிகளில் தெறித்தது அதிர்ச்சியும், ஏமாற்றமும். இப்படி மாங்குமாங்கென்று இவன் கேட்டான் என்று செய்தால் இப்போது வந்து வேண்டாம் என்கிறான். இவ்வளவு வேலை செய்தும் மனதில் இருந்த மாசற்ற இலகுத் தன்மை, சோர்வின்மை ஒரே நொடியில் மாறி சோர்வை கொடுத்தது.

 

பெண்களுக்கு சிறு விஷயத்திலும் உணர்வுக் குவியல் படர்ந்து கிடக்க, ஆண்கள் பலநேரம் அதை கண்டுகொள்வதும் இல்லை, கண்டுகொண்டாலும் அசட்டையாக புறந்தள்ளி விடுகின்றனர்.

 

“இதை காலையில் புலாவ் வேணும்னு கேட்கும் போது நியாபகம் இல்லையா? நீங்க கேட்டிங்கனு ஆசை ஆசையா செய்து வைத்திருக்கிறேன்… இப்போ வந்து சொல்ல மறந்துட்டேனு சுலபமா சொல்றீங்க…” என்று அடிக்குரலில் சக்தி சீற, அவன் உதட்டை கடித்துக்கொண்டு மானசீகமாக தலையில் அடித்துக் கொண்டான்.

 

“மதியம் தான் வேண்டாம்னு சொன்னேன். இப்போ காலையில வை சாப்பிடுறேன்…” அவன் டேமேஜ் கண்ட்ரோல் செய்ய முயல அதை இனம்காண முடியாத வெகுளி அல்லவே அவள்… 

 

“ஒன்னும் வேண்டாம்… போங்க இங்கிருந்து…” அவ்வளவு வேகம் அவள் வார்த்தைகளில். கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாத நிலையில் இருந்தாள் காரிகை. ஒரு சின்ன விஷயமாய் இது தெரிந்தாலும் அதை முனைப்புடன், காதலுடன் அவனுக்காக என்று பல நாட்கள் கழித்து செய்து, கடைசியில் அது ஏமாற்றத்தில் முடிய மனம் சுணங்கி அவளை உக்கிரமாக்கியது. ஒரு விதத்தில் அவனின் உரிமையான காதலை செயல்களின் வழியே அவள் எதிர்பார்த்திருந்ததும் அதில் வெளிப்பட்டே இருந்தது. இருவராலும் அதை இனம் காணத் தான் முடியவில்லை.

 

அவளை நெருங்கி சமாதானம் செய்ய முற்பட, “அண்ணி…” என்று அந்த நேரம் அவனின் தங்கை குறுக்கிட்டாள். கூட்டுக்குடும்பத்தில் இந்த குறுக்கீடு எல்லாம் சகஜம் என்பது புரிந்திருந்தது போல ஈஸ்வர் அப்படியே நகர்ந்து விட்டான்.

 

“அகில பார்க்க போனேன் உங்க போன் அடிச்சிட்டே இருந்தது. இந்தாங்க அண்ணி…” என்று சக்தியின் போனை நீட்டினாள் சுகன்யா.

 

அதை வாங்கி தன் தோழி என்றவுடன் அட்டென்ட் செய்தவள், “சொல்லுடி…”

 

“நீ தான் சொல்லணும் எப்போ வரேன்னு…”

 

“எங்க?”

 

“அஜி ரிசெப்ஷனுக்கு….”

 

“அச்சோ மறந்தே போய்ட்டேன்டி… வீட்டுல கூட இன்னும் கேக்கலடி…”

 

“நீ இன்னும் பழைய பஞ்சாங்கமா வீட்டையே கட்டிட்டு தான் கடைசி வரை அழப்போற சக்தி… சொல்லிட்டு வந்தா பத்தாதா… பர்மிஷன் கேட்டு தான் ஒவ்வொன்னும் செய்யணுமா என்ன…? முன்னேயும் நம்ம பிரண்ட்ஸ் கல்யாணம் எதுக்குமே வரல… அஜி நம்ம க்ளோஸ் பிரென்ட்… இதுக்கு தான் சீக்கிரம் கல்யாணத்துக்கு ஓகே சொல்லாதேன்னு அப்போவே சொன்னோம். நீ தான் கேக்கல… படிச்சி முடிச்சவுடனேயே வேலைக்கு கூட முயற்சி செய்யாம உடனே கல்யாணம் பண்ணி இப்போ பாரு எல்லாத்துக்கும் உங்க இன்லாஸை டிபெண்ட் செய்ய வேண்டியதிருக்கு… அவங்க உங்கிட்ட அனுமதி கேட்டுட்டா இருக்காங்க… போடி… இருபத்தைந்து வயதில் ரெண்டு பசங்கனு ஆன்ட்டி ஆகிட்ட…” என்று நண்பியின் நலவிரும்பியாய் சக்தியின் சுமூக வீட்டுச் சூழலை உணராது, பெரிய கூட்டுக்குடும்பம் அதில் தான் இருந்தால் எவ்வளவு சிரமப்படுவோம் அதே போலத்தான் சக்தியும் என்று அவளை அந்த வீட்டுச் சூழலில் பொருத்தி அவளே சக்தி கஷ்டப்படுவாள் என்று மனதில் முடிவு செய்து சொல்ல அது நொடிப்பொழுதில் மனப்பிசக்கை சக்தியினுள் ஏற்படுத்தியது.

 

நல்லதொரு பல்கலைக்கழகம் உடைய இது போன்றதொரு தேவையற்று மூக்கை நுழைப்பதும், வார்த்தைகளுமே போதுமானது.

 

“நா வரேன் நீ போனை வை…” என்று கடுப்புடன் மொழிந்தவள் அடுப்பை அணைத்துவிட்டு சதீஷையும், அகிலையும் தேடிப் போனாள். அறைக்குள் செல்வதற்கு முன் தன் மாமியாரிடம் உணவு எடுத்து வைக்கச் சொல்லவும் மறக்கவில்லை.

 

“சதீஸ் எழுந்திரு… அகில்…” என்று அறைக்குள் நுழைந்தவள் படுக்கையில் தனித்திருந்த அகிலை தூக்கி மடியில் போட்டுக்கொண்டு அவன் நெஞ்சை மெல்ல தடவிவிட்டாள். தன் குட்டிக் கண்களை கசக்கி கண் விழித்த அகில் தன் அன்னையை பார்த்த களிப்பில் அம்மா என்று கூவிக்கொண்டே மெல்ல அவள் தோள் பற்றி எழுந்து அவள் கன்னங்களை எச்சில் படுத்தினான்.

 

“அகில் குட்டிக்கு பசிக்குதா?” கொஞ்சிக்கொண்டே அவளும் அவனை அணைத்து முத்தமிட,

 

“அம்மா நானு… நானு…” என்று ஈஸ்வர் கையிலிருந்து துள்ளிக் குதித்து சக்தி கழுத்தை கட்டிக்கொண்டான் சதீஸ். மகன்களின் இந்த பாச மழையில் நனைந்தவள் இவர்களை பெற்றதால் ஆன்ட்டி ஆகிட்ட என்று சொன்ன தோழி மீது கட்டுக்கடங்கா கோபம் வந்ததோடு அவளை கண்டிக்காமல் விட்ட தன் மீதும் சினம் வந்தது.

 

“அப்பாவ யாருமே கண்டுக்க மாட்டீங்கிறிங்க…” என்று கேலி கலந்த வருத்தத்துடன் கூறியதோடு நில்லாமல் சக்தியையும் சேர்த்து மூவரையும் தன்னுடன் அணைத்துக் கொண்டான் ஈஸ்வர்.

 

“விடுங்க… போங்க உங்க ஜி.எம்  கூடவே லன்ச் டேட் போங்க…” என்று சக்தியும் மூக்கை உறிஞ்சினாள். 

 

“நீ அனுமதி கொடுத்தாலும் இல்லைனாலும் இன்னைக்கு அதான் நடக்கப்போகிறது…” 

 

“என்னவோ பண்ணுங்க… இனிமே அதை செஞ்சு கொடு இதை செஞ்சு கொடுன்னு என்கிட்ட வந்து நிக்காதீங்க…”

 

“சரி கேக்கல…” என்று அவன் சரணடைந்ததும்,

 

“இன்னைக்கு நான் என் பிரெண்ட் மேரேஜ் ரிசெப்ஷன்கு போறேன்.” என்று தகவல் சொன்னாள்.

 

“வேண்டாம்.” என்று உடனே அவன் மறுக்க அவன் அணைப்பில் அடங்கியிருந்த கோபம் கட்டவிழ்ந்தது.

 

கட்டுக்கடங்காத நேசம் செலுத்திய ஒருவர் நாம் எதிர்பார்த்ததை வழங்கவில்லை என்றால் ஒரே நொடியில் ஊடல் வரவும், மனவருத்தம் வரவும் காதல் அகராதியில் அதிக வாய்ப்பிருக்கிறது. அதுவே நிகழ்ந்தேறியது.

 

“அது என்ன நான் எங்க போகணும்னு கேட்டாலும் வேண்டாம்னு சொல்றீங்க? இதற்கு முன் நடந்த என் பிரெண்ட்ஸ் மேரேஜ் எதற்குமே நான் போனது இல்லை.” எங்கோ உறங்கிக்கொண்டிருந்த அந்த தோழியின் வார்த்தைகள் நன்றாக வேலை செய்தது.

 

“ஷ்… பசங்க இருக்காங்க… நாம சாயங்காலம் பேசலாம்.” என்று இழுத்து பிடித்த நிதானத்தில் கூற,

 

“சாயங்காலம் தான் ரிசெப்ஷன் இருக்கு, போயிட்டு வந்துறேன் அப்புறம் பேசலாம்.” என்றாள் விட்டேத்தியாய்.

 

“இன்னைக்கு பாட்டியை டாக்டர்ட்ட கூட்டிட்டு போகணும்…” ஏதோ காரணம் கண்டுபிடித்த நிம்மதி அவனிடமோ!

 

“அதெல்லாம் ரவி பாத்துப்பான் நான் இருந்து என்ன செய்யப் போறேன்…”

 

“சதீஸ்?”

 

“சுகன்யா பார்த்துப்பா,”

 

“சக்தி ஒருமுறை சொன்னா புரியாதா உனக்கு. நான் தான் போகக் கூடாதுனு சொல்றேன்ல… அப்புறம் என்ன போகணும் போகணும்னு பிடிவாதம் பிடிக்கிற…” என்று அவன் குரல் உயர்த்திட,

 

“நான் உங்களை வெளில போகக்கூடாதுனு சொன்னா நீங்க பேசாம இருப்பீங்களா? நான் மட்டுமே ஏன் கேக்கணும்.”

 

“நீ சொல்லி நான் எப்போ கேட்கல? அதைவிடு இவ்ளோ நாள் நான் சொல்றதை கேட்டுட்டு தானே இருந்த…” 

 

அவளுக்கே அவனின் இந்த மறுப்பு இன்று ஏன் சினத்தை தூண்டுகிறது என்று விளங்கவில்லை. தோழியின் வார்த்தைகளின் பலனா?! அல்லது ஹார்மோன் செய்யும் மாற்றங்களா?

 

“அதான் நல்லா மிளகா அரைக்கிறீங்க…”

 

“சக்தீதீ…”

 

“ச்ச… நிம்மதியா ஒரு விழாக்கு கூட போக எனக்கு உரிமையில்லை… காலம் பூரா உங்க குடும்பத்துக்கு சேவகம் செய்யணும்னு நினைக்கிறீங்க…”

 

அவனும் ஏன் போகக்கூடாது என்று சொல்லவில்லை; அவளும் கேட்கவில்லை. தங்கள் வாதங்களை மட்டுமே முன்வைத்து காரணத்தை அறிய விழையவில்லை.

 

இவர்களின் இந்த சண்டையில் அகில் சத்தம் போட்டு அழுக வீடே அவர்களின் அறை வாயிலில்… சதீஸ் பயந்துபோய் அறை வாயிலுக்கு சென்று குடும்பத்துடன் நின்று கொண்டான்.

 

“வாயை மூடு சக்தி… சும்மா நீயா ஏதாவது கற்பனை பண்ணிக்கிட்டு பிரச்சனை பண்ணாத. நான் ஏதோ உன்னை அடக்கி வீட்டுக்குள்ள வச்சிருக்கிற மாதிரி இருக்கு உன் பேச்சு…” அவனின் குரலும் கிஞ்சித்தும் கம்மியாய் ஒலிக்கவில்லை.

 

“அதான உண்மை. கல்யாணமாகி நாலு வருஷத்தில் எங்க கூட்டிட்டு போய் இருக்கீங்க… இல்லை என்னை தான் எங்க போகவிட்டு இருக்கீங்க? அம்மா வீட்டுக்கு கூட சதீஸ் பிறந்தப்போது போய் தங்குனது… வீட்ல நான் இல்லனா எல்லோருக்கும் சிரமம்னு நான் என் வீட்ல கூட தங்குனது இல்லை…”

 

“அப்போ இது யார் வீடு?” இடக்காய் வந்தது ஈஸ்வரின் கேள்வி. பதிலாய் ஜிப் போட்டது போல் மூடிக்கொண்டது சக்தியின் இதழ்கள். இதற்கு என்ன பதில் சொன்னாலும் அவள் மீது தானே  எதிர் கேள்வி பாயும்!?

 

“இவ்வளவு நேரம் தாம் தூம்னு குதிச்ச இப்போ பேசு… ச்ச… நிம்மதியா காலையில கிளம்ப விடுறீயா?”

 

அறை வாயிலில் இருந்தாலும் கணவன் மனைவி சண்டையினுள் எப்படி குறுக்கிடுவது என்று அமைதி காத்தனர் வீட்டினர். ஆனால் அவர்கள் அனைவரையும் தங்கள் அறை வாயிலில் பார்த்த சக்திக்கு தான் அவமானமாய் போய்விட்டது. வீட்டினர் முன்னர் திட்டிவிட்டான் என்று உரக்க உரைத்த மூளை அவளும் அவனை சாடினாள் என்பதும் எளிதில் மறந்து போனது.

 

‛எல்லாத்துக்கும் இவர் தான் காரணம். எல்லோர் முன்னாடியும் என்னை கண்டபடி பேசி… எப்படி இனிமே எல்லோர் முகத்திலும் முழிப்பது…  ச்ச… இதுவே என் அப்பாவா இருந்தா எல்லார் முன்னாடியும் இப்படி பேசி இருப்பாரா?… இன்னைக்கு ஒரு நாள் வெளில போனும்னு நினைச்சத்தை கூட என்னால நிறைவேற்றிக் கொள்ள முடியவில்லை. அவள் சொன்னது போலவே,

 

திருமதி ஆவதற்கு பதில் செல்வியாகவே இருந்திருக்கலாம்…’ 

 

நான்கு வருட தாம்பத்ய வாழ்க்கையில் முதல் பிணக்கு. மனக்கசப்பு. 

 

★★★

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *