*9*

 

தன் கரத்தில் முகம் புதைத்து கதறுபவளை என்ன சொல்லி எப்படி சமாதானப்படுத்துவது என்று புரியாமல் மலைத்த ரிச்சர்ட், அருந்ததியின் நிலையை உணர்ந்து அவளை சட்டென்று தேற்றும் வழியை தேடி மிகவும் கவலையுடன் சிந்தனைகளை மேற்கொண்டான்.

“அருந்ததிம்மா!” என்று அவளை மெல்ல எழுப்ப, “என்… என்னை… எங்கே… எங்கேயாவது ஒரு நல்ல பாதுகாப்பான ஆசிரமத்தில் உங்களால் சேர்த்து விட முடியுமா? ப்ளீஸ்…” என நிமிர மறுத்து தொடரும் கேவல்களுக்கிடையே கெஞ்சினாள் அச்சிறுமி.

அதிர்ந்தவன், “ஏன்… உனக்கு என் மேல் நம்பிக்கை இல்லையா? என்னுடன் தங்குவதற்கு பயமாக இருக்கிறதா?” என விவரிக்க இயலாத அவமான உணர்வுடன் அவசரமாக வினவினான்.

“ஐயோ… இல்லை… நீங்கள் ரொம்ப நல்லவர் என்பது உங்கள் நண்பனை அடித்து விரட்டியதிலேயே தெரிந்துவிட்டது. ஆனால்… ஆனால்… நா… நான்…” என வெடித்து அழுதவள், “நான் உங்களுடன் இங்கே இருப்பது உங்களுக்கு தான் அசிங்கம்!” என்று கூனிக் குறுகினாள்.

கோபத்தில் முகம் சிவந்தவன் பட்டென்று வலுக்கட்டாயமாக அவள் முகத்தை தன்னை நோக்கி நிமிர்த்தினான்.

“இங்கே பார்… முதலில் இந்த இடத்தை விட்டு எழுந்து போய் முகம் கழுவிக்கொண்டு வா, போ!” என்று அவளை எழுப்பி பாத்ரூமை நோக்கி இழுத்து சென்று விட்டான்.

அவன் செயலில் ஒருகணம் திகைத்து விழித்தபடி நின்றிருந்தவளை அதட்டினான் ரிச்சர்ட்.

“என்ன வேடிக்கை? சொன்னதை செய் போ!”

எதையும் யோசிக்க இயலாது அவன் சொல்லுக்கு கட்டுப்பட்டவள் வாஷ்ரூமிற்குள் நுழைந்துக் கொண்டாள்.

சில நிமிடங்களில் வெளியே வர, ரிச்சர்ட் அறையில் இல்லை. குழப்பத்துடன் விழிகளை சுழல விட்டவள் முகத்தை துடைத்தபடி யோசனையில் ஆழ்ந்தாள்.

சற்று முன்னர் ராக்கேஷிடம் சிக்கிக் கொண்டு தவித்தது நினைவு வந்து உடலில் மின்னதிர்வுடன் கூடிய ஒரு நடுக்கத்தை பிரசவித்தது.

அப்பொழுது அறையின் உள்ளே வேகமாக வந்த ரிச்சர்ட் எதுவும் பேசாமல் அருந்ததியின் கரம்பற்றி இழுத்துக் கொண்டு கடகடவென்று மாடியேறினான். ஒன்றையும் புரிந்துக் கொள்ள இயலாமல் மிரண்டவளின் நாவு பயத்தில் அசைய மறுத்து மேலண்ணத்தில் ஒட்டிக்கொண்டது.

மாடியின் வலதுபுறம் இருந்த ஒரு அறையின் கதவை திறந்தவன் அவளை இழுத்து சென்று நிறுத்திய இடத்தை கண்டதும் இமைக்க மறந்தாள் அருந்ததி.

அவள் நின்ற இடத்திற்கு நேரெதிரே உள்ள சுவரில் ரிச்சர்டின் தாய், தந்தையின் உருவப்படம் மாட்டப்பட்டு ஜெபமாலைகள் அணிவிக்கப்பட்டிருந்தன. எப்பொழுதும் வீடு முழுவதும் வடிவு தான் சுத்தம் செய்வாள் என்றாலும் அவளுக்கு இந்த அறையில் அனுமதி இல்லை என்பது பரிமளம் பாட்டியின் மூலம் அவள் அறிந்த விஷயம்.

தன் பெற்றோரின் அறைக்குள் வெளிமனிதர் யாரையும் அனுமதிக்காமல் அதை பூஜையறையாக ரிச்சர்ட் பாவித்து வருவது அவளுக்கும் நன்றாக தெரியும். தினமும் இங்கே வந்து தான் கர்த்தரிடம் அவன் தனது பிரார்த்தனையில் ஈடுபடுவான் என்பதும் அவள் அறிந்த ஒன்றே.

‘இப்பொழுது என்னை எதற்காக இங்கே அழைத்து வந்திருக்கிறார்?’ என்று புரியாமல் அவன் முகம் பார்த்தாள்.

தனது பெற்றோரின் நிழற்படம் முன்பிருந்த பெரிய மெழுகுவர்த்திகளை ஒவ்வொன்றாக ஏற்றியவன், இருகரம் கோர்த்து விழிகளை இறுக்க மூடி சில நிமிடங்களுக்கு தீவிர பிரார்த்தனையில் ஈடுபட்டான்.

பின் தன்னை பிரமிப்புடன் பார்த்துக் கொண்டிருந்த அருந்ததியிடம் திரும்பியவன் அவள் விழிகளை நேராகப் பார்த்து பேசத் துவங்கினான்.

“இங்கே பார்… நான் கிறிஸ்டியன் என்றாலும் ஒருசில ஹிண்டு கஸ்டம்ஸை ரசிப்பவன் அன்ட் ஆல்ஸோ மதிப்பவன். இப்பொழுது இதை ஏன் இங்கு சொல்கிறேன் என்றால் உங்கள் சமூகத்தின் வட இந்திய கலாச்சாரத்தில் சகோதரி, சகோதரர் ஒற்றுமையையும், பாசத்தையும் மேம்படுத்தி காண்பிக்கவென்று ரக்ஷாபந்தன் என்கிற திருவிழாவை அனைத்து இந்து குடும்பங்களிலும் முக்கிய விழாவாக உற்சாகமாக கொண்டாடுவார்கள். அதில் சகோதரன் கரத்தில் சகோதரி ராக்கி எனும் கயிறு கட்டி பதிலுக்கு பரிசு பெற்றுக் கொள்வது வழக்கம். அதையே இங்கு சற்று மாற்றி என் அம்மா இறுதியாக தன் வாழ்நாளில் என்னுடைய ஒன்பதாவது பிறந்தநாளின் பொழுது எனக்கு பரிசளித்து அணிவித்த இந்த பிரேஸ்லெட்டை உன்னை மனப்பூர்வமாக என் சகோதரியாக ஏற்றுக்கொள்வதற்கு அச்சாரமாக உன் கையில் போட்டுவிடப் போகிறேன். இதை என்றும் நீ கழற்றவே கூடாது, அதேபோல் இது உன் கரத்தில் இருக்கும் ஒவ்வொரு நிமிடமும் உனக்கென்று ஒரு அண்ணன் இந்த உலகில் உனக்காக வாழ்ந்துக் கொண்டிருக்கிறான் என்பதை மனதின் ஓரம் நீ எப்பொழுதும் உறுதியாக பதிய வைத்துக் கொள்ள வேண்டும்!” என்றபடி அருந்ததியின் கரத்தில் தனது தங்க பிரேஸ்லெட்டை அணிவித்தான் ரிச்சர்ட்.

அவன் செயலில் மெய்சிலிர்த்தவளின் நெஞ்சம் கலங்கி, விழிகள் நீர் முத்தை கோர்த்தது.

தலைக்கவிழ்ந்திருந்தவளின் முகத்தை நிமிர்த்தியவன், “இந்த நொடி முதல் நீ என் தங்கை. இந்த வீட்டில் இந்த அம்மா, அப்பாவின் வழியில் தோன்றியவள். உனக்கென்று வேறெந்த குடும்பமோ, அசிங்கமோ ஒன்றும் கிடையாது. புரிகிறதா? நான் உன்னுடைய சகோதரன், உன் வாழ்வில் இனி நடக்கவிருக்கும் எந்தவொரு விஷயமும் என்னை தாண்டி தான் உன்னை நெருங்கும். அது முற்றிலும் நல்லதாகவே நடக்க வேண்டி இறைவனை பிரார்த்திப்போம்!” என்று அவளோடு தன் தாய், தந்தை முன் மண்டியிட்டான்.

“அம்மா! இந்த உலகில் இவள் உங்கள் வயிற்றில் ஜனனம் எடுக்காவிட்டாலும், இன்றிலிருந்து இவளை உங்கள் மகளாக ஏற்று ஆசிர்வதியுங்கள். இவள் மனதிலிருக்கும் துன்பங்கள் அனைத்தையும் நீக்கி இவளுக்கு நல்லதொரு வாழ்வை அமைத்துக் கொடுக்க எனக்கும் நல்ல வாய்ப்பை நல்குவீராக!”

அவனை போல் முறையாக பிரார்த்திக்க தெரியாவிட்டாலும், இருகரம் கோர்த்து அவர்கள் முன் மண்டியிட்டு உள்ளத்தளவில் தன் வேதனையை அவர்களிடத்தில் சமர்ப்பித்தாள் அச்சிறுமி.

ரிச்சர்ட் எழவும் அவனுடன் வேகமாக எழுந்தவளிடம் திரும்பியவன், “அருந்ததி… இன்றிலிருந்து இதுதான் உன்னுடைய அறை. அதாவது நம்முடைய அப்பா, அம்மாவின் அறை தான் இது…” என்றதும் பாய்ந்து இடைவெட்டினாள் அவள்.

“இல்லை வேண்டாம்… இங்கே வேண்டாம். இங்கே எப்படி நான்… இதை நீங்கள் பூஜையறையாக பாவிக்கிறீர்கள். நான் கீழேயே தங்கிக் கொள்கிறேன் அந்த அறையே வசதியாக தான் உள்ளது!” என்று அவசரமாக மறுத்தாள்.

“அது சரிப்படாது… ஒன்று உன் மனதில் இந்த வீட்டுப்பெண் என்கிற உணர்வை அந்த அறை பதியவிடாது. மற்றொன்று இங்கே தங்கினால் அம்மா, அப்பாவின் எண்ண அலைகளால் சூழப்பட்டு உன்னுடைய தாழ்வு மனப்பான்மை, தனிமையுணர்வு மற்றும் அச்சம் எல்லாம் குறையும். இந்த வீட்டில் உனக்கு ஒரு குடும்ப சூழ்நிலையை தான் என்னால் அமைத்து தர இயலாது. அட்லீஸ்ட்… அப்பா, அம்மாவின் அறையில் தங்க வைப்பதின் மூலம் அந்த மனப்பான்மையை மனதளவிலாவது கொண்டு வரலாம். ஒருவேளை அவர்கள் உயிரோடு இருந்திருந்தால் நிச்சயம் இதை வரவேற்க தான் செய்வார்கள். அதனால் நீ இங்கே தான் தங்குகிறாய், அதில் எந்த மாற்றுக்கருத்திற்கும் இடமில்லை. இட்ஸ் பைனல்… ஓகே?”

அருந்ததி சொல்வதறியாது தடுமாறி நிற்க, அவள் கரம்பற்றி அழைத்து சென்று அங்கிருந்த சோபாவில் தனக்கருகில் அமர வைத்தவன் அவளிடம் கனிவுடன் பேச ஆரம்பித்தான்.

“நீ ஏன் இப்படி இருக்கிறாய்டா? ராக்கேஷை நான் வீட்டிற்கு அழைத்து வந்தப்பொழுதே அவன் மோசமான நடத்தையுள்ளவன் என்னிடமே தவறாக நடக்க முயற்சித்தான், இங்கே தங்க அனுமதிக்காதீர்கள் என்று ஒரு வார்த்தை என்னிடம் சொல்லியிருக்கலாம் அல்லவா? நீயாக வந்து என்னிடம் சொல்லவில்லை என்றாலும் பரவாயில்லை, நான் வந்து பேசினேனே அப்பொழுதாவது சொல்லியிருக்கலாமே… அப்படியொரு மோசமான நிமிடங்கள் உனக்கு நேராமல் நான் தடுத்திருப்பேனே!” என்றான் ரிச்சர்ட் வேதனையோடு.

சட்டென்று சிவந்த முகத்தில் நாசி விரிந்து இதழ்கள் துடித்து கன்னங்களில் நீர் வழிந்தது.

“எனக்கு யாரை நம்புவதென்றே தெரியவில்லை, யாரைப் பார்த்தாலும் சந்தேகமாகவும், பயமாகவும் தான் இருந்தது. உங்களை பார்த்தால் கூட யாருமில்லாமல் தனியாக வாழ்கிறீர்கள் என்று முதலில் ரொம்பவும் பயமாக தான் உணர்ந்தேன். அப்புறமாக நீங்கள் எப்பொழுதுமே என்னை தவறாக ஒரு பார்வை பார்த்ததில்லை என்பது புரிந்ததால் கொஞ்சம் பயம் குறைந்தது. ஆனால்… ஆனால்… அந்த…” என்றவள் நிறுத்தி எச்சிலுடன் வார்த்தைகளையும் சேர்த்து விழுங்கி, “உங்களுடன் வீட்டிற்கு வரவும் எனக்கு ரொம்பவும் நடுக்கமாகி விட்டது!” என விழிகளில் வழியும் நீரை துடைத்தாள்.

அவளின் மெலிந்த கரத்தை ஆதரவாக பற்றி அழுத்தினான் ரிச்சர்ட்.

“அவங்க… அவங்கம்மா… என்னுடைய ஸ்கூல் டீச்சர், எங்கள் வீடு இருந்த தெருவில் தான் குடியிருந்தார்கள். அதனால் தான் அம்மா இறந்தபின் ஒரு அவசரத்திற்கு உதவிகேட்டு மிஸ் வீட்டிற்கு அவர்களை பார்க்க சென்றேன். ஆனால் அவர்கள் ஊரிலில்லை எனவும் எனக்கு என்ன செய்வதென்று தெரியாமல் தான் அண்ணா என அழைத்து உதவி கேட்டேன்!” என்று மடமடவென்று கொட்டிய நீரை துடைத்தபடி விசும்பியவளை ஆறுதல்படுத்த வார்த்தைகளின்றி திண்டாடிப் போனான் அருகில் அமர்ந்திருந்தவன்.

“ஒரே தெருவில் அதுவும் மிஸ் வீட்டில் வளர்ந்த ஆளே தவறாக நடக்கும் பொழுது, இவ்வளவு பெரிய வீட்டில் தனியாக வசதியாக வாழ்கின்ற உங்கள் மீது எனக்கு நம்பிக்கை வரவில்லை!” என்றவள் பின் மெல்லிய குரலில், “சாரி…” என்றாள் தலையை மேலும் கவிழ்த்துக்கொண்டு.

சற்றே இறுக்கம் குறைய மெல்ல முறுவலித்தவன், “பரவாயில்லை விடு… நீ என்ன செய்வாய்? உன் சூழ்நிலை அப்படி… அண்ணா என்று அழைத்தவனே பேடியாக மாறும்பொழுது உனக்கும் தான் என்ன தோன்றும்?” என்றான் வெறுப்போடு.

“ம்… அந்த சொல்லின் மீது மிகுந்த மரியாதை வைத்திருந்தேன். வெகுவாக நம்பவும் செய்து தான் மிஸ் வரும்வரை அங்கே தங்கலாம் என்றும் முடிவு செய்தேன். ஆனால் அப்படியொரு கீழ்தரமான எண்ணம் தெரிந்ததும் எனக்கு மிகவும் நடுக்கமாகி விட்டது. எந்த உறவின் பெயரை சொல்லி யாரிடம் உதவி நாடுவதென்றே தெரியவில்லை. அங்கிருந்து தப்பித்து ஓடிவரும்பொழுது நள்ளிரவு நேரம் ரோட்டில் ஆள் நடமாட்டமே இல்லை. ஆங்காங்கே ஒரு சில இடங்களில் ஆண்கள் மட்டுமே இருக்கவும் யாரை நம்பியும் உதவி கேட்கப் பயந்துக்கொண்டு ஒரு பெரிய குப்பை தொட்டியின் பின்புறம் பதுங்கிக் கொண்டேன். தாங்க முடியாத நாற்றத்தில் குடலை பிரட்டினாலும், சுள்ளெறும்பு கடித்தாலும் வலியை பொறுத்துக் கொண்டு விடியும்வரை அங்கேயே மறைந்திருந்தேன். விடியும் வேளையில் அங்கே குப்பைகள் கொட்ட வந்த பரிமளம் பாட்டி தான் என்னை பார்த்து இங்கே என்ன செய்கிறாய் என சந்தேகத்துடன் விசாரித்தார். நானும் என்னை பற்றிய முழு உண்மையை மறைத்து அப்பா, அம்மா இல்லை என்று மட்டும் சொன்னேன். மீதி விவரம் தெரிந்தால் மற்றவர்கள் மாதிரி என்னை ஒதுக்கி விடுவார்களோ என்று பயமாக இருந்தது. அங்கே நான் ஏன் வந்து ஒளிந்திருந்தேன் என தெரியவும், ஹும்… பெண் பிள்ளைகளுக்கு இந்த நாட்டிலே பாதுகாப்பு என்பதே இல்லாமல் போயிற்று என்று புலம்பிவிட்டு, என்னுடன் வருகிறாயா? என்னால் படிக்க வைக்கவெல்லாம் முடியாது வீட்டு வேலை தான் செய்ய வேண்டும் என்றார்கள். எனக்கும் சில கசப்பான அனுபவங்களால் பள்ளி செல்வதில் விருப்பமில்லை, எங்கேயாவது ஒரு இடத்தில் பாதுகாப்பாக, உயிருள்ள வரை முடங்கிக் கொண்டு இருந்தாலே போதும் என தோன்றியதால் உடனே சம்மதித்து இங்கே வந்து விட்டேன். பாட்டி சொல்வதை வைத்து நீங்கள் நல்லவர் என புரிந்தாலும் உங்களை பார்த்தால் பயமாக தான் இருந்தது. அதனாலேயே உங்கள் முன் வெளியில் வரமாட்டேன், பாட்டிக்கு உடல்நிலை சரியில்லாத பொழுது காபி எடுத்துக்கொண்டு வரவே பிடிக்கவில்லை என்றாலும் அவர்களின் சொல்லை மீற வழியின்றி வந்தேன். இரவு உணவுக்கு உங்களை அழைக்க வந்தப்பொழுது தான் மிகவும் கஷ்டமாக இருந்தது. உங்களை என்ன சொல்லி அழைப்பதென்று தெரியவில்லை, நீங்கள் வயதானவராக இல்லாமல் சிறுவயதாக இருந்ததால் பணியாட்கள் மாதிரி சார் என்று எல்லாம் அழைக்கப் பிடிக்கவில்லை. அண்ணா… என அழைக்க ஆசையாக தான் இருந்தது. ஆனால் பழைய சம்பவம் மனதை பாதித்ததால் அதை சொல்லி அழைக்கவும் அச்சமாக இருந்தது!” என்று கவலையுடன் மொழிந்தாள் அருந்ததி.

அவள் நிலையுணர்ந்து லேசாக பெருமூச்செரிந்தவன் அடுத்து, “சரி… இப்பொழுது?” என சிறு எதிர்பார்ப்புடன் வினவினான்.

பளிச்சென்று நிமிர்ந்தவளின் முகத்தில் தெளிவு உதயமாக, “இனிமேல் எதற்காகவும் தயங்க மாட்டேன், அதுமட்டுமின்றி நீங்கள் என்னுடைய அண்ணன் என யார் கேட்டாலும் தைரியமாகவும் சொல்வேன்!” என்றவளின் விழிகளில் நம்பிக்கை ஒளியோடு உணர்ச்சி வேகத்தில் ஆனந்த கண்ணீரும் கோர்த்தது.

இதழ்கள் புன்னகையில் விரிந்ததற்கு மாறாக ரிச்சர்டுக்கும் விழிகள் கலங்க அவளை தோளோடு அணைத்து, “குட் அன்ட் தாங்க் யூ!” என்று நிறைவாக முணுமுணுத்தான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *