*8*

 

“என்னடா அப்படியே ஷாக் ஆகி நிற்கிறாய்? சிறுவயது பெண் என்கவும் என்னிடமிருந்து மறைத்து நீ மட்டும் அனுபவிக்க வேண்டும் என்று நினைத்து விட்டாயோ… ஆனால் உனக்கு விஷயமே தெரியவில்லை, இவள் உன்னிடம் வருவதற்கு முன்பே என்னிடம் சிக்கியவள். என்னவொன்று சின்னப்பெண் தானே என்று சுதாரிப்பாக இல்லாமல் இருந்து விட்டேன், ஏமாந்த நேரமாகப் பார்த்து என் கையை கடித்துவிட்டு ஓடிவந்து விட்டாள். அதனால் தான் எனக்கு முன்பாக நீ முந்தி விட்டாய், இட்ஸ் ஓகே… பரவாயில்லை, இவள் என்ன காதலியா? நீ முதல் நான் முதல் என சண்டைப் போடுவதற்கு… இவள் ஒரு வேசி தானே… ஷ்… ஆ…” என்று கத்தியவனின் உதட்டிலிருந்து ரத்தம் வழிய ஆரம்பித்தது.

அவளை தன்னுடைய தங்கை என வெளிப்படையாக யாரிடமும் பகிரா விட்டாலும் அந்த எண்ணத்தை தன் நெஞ்சிலே உரமேற்றி அடைக்காத்து வந்திருந்தவனுக்கு கைகள் கட்டப்பட்ட நிலையில் அவளை கண்டவுடனேயே உடலும், உள்ளமும் ஒருசேர தீப்பற்றி எரிய ஆரம்பித்திருந்தது. மேலும் பள்ளி செல்கின்ற வயதில் உள்ள சிறுபிள்ளையென்று பாராமல் அருந்ததியை தன்னுடன் இணைத்துப் பேசியது மட்டுமின்றி அவளை வேசியென்று ராக்கேஷ் குறிப்பிடவும் ஆக்ரோஷத்தின் உச்சாணிக்கு சென்ற ரிச்சர்ட் கண்மண் தெரியாமல் அவனை அடித்து துவைக்க ஆரம்பித்தான்.

“யூ… ராஸ்கல்… ப்ளடி பிட்ச்… பொறுக்கி நாயே… உனக்கு எவ்வளவு தைரியமிருந்தால்… என் முன்னாலேயே என் வீட்டுப்பெண்ணை கேவலமான முறையில் மதிப்பிட்டுப் பேசுவாய்? அதுவும்… அவளை கட்டிப்போட்டு…” என்றவனுக்கு உணர்ச்சி வேகத்தில் அதற்கு மேல் வார்த்தைகள் பிரசவிக்க மறுக்க, விழிகள் கலங்க தன் இயலாமையை அவன் மேல் சரமாறியாக இடியாக இறக்கினான் ரிச்சர்ட்.

அரைகுறையாக இருந்த போதை தன் நண்பனின் மரண அடியில் தெளிய துவங்க, சொகுசு வாழ்க்கைக்குப் பழகி மேலும் அனுபவிக்க பேராசைக் கொண்டவன் தாங்க முடியாத வலியில் அவனிடமிருந்து விடுபட அலறியபடி போராட துவங்கினான்.

“ஏய்… ரிச்சர்ட்… என்ன செய்கிறாய்? ஆ… என்னை விடு, உஷ்… ஆ… ஏய்… என்னை ஏன்டா இப்படி அடிக்கிறாய்? அம்மா… ஆ… விடுடா…”

தன் கண்முன்னே நடப்பதை திகைப்புடன் கண்டுக்கொண்டிருந்த அருந்ததிக்குள் ரிச்சர்டின் வருகையும், அவனுடைய செயல்களும் பெரும் நிம்மதியை தோற்றுவித்தன. அவருடைய நண்பன் போல் அவர் தப்பானவர் இல்லை என்கிற எண்ணமே அவளுடைய அழுகையை அடக்கி இதயத்தை உணர்ச்சியின் பிடியில் சிக்கலிட்டு தேம்ப வைத்தது.

“உன்னை விடுவதா? ராஸ்கல்… கொல்லாமல் விடமாட்டேன்டா உன்னை… உனக்கு எவ்வளவு திமிர் இருக்க வேண்டும்? நண்பன் என நம்பி வீட்டினுள் அனுமதித்தால், என் வீட்டுப் பெண்ணிடமே நீ… த்தூ…” என்று அவன் முகத்திலேயே ஆவேசமாக எச்சிலை காறி உமிழ்ந்தான்.

“டேய்… ச்சீய்…” என அருவருப்பில் முகத்தை துடைத்தபடி ரிச்சர்டை தடுத்து ஒரே தள்ளாக தூர தள்ளிய ராக்கேஷ் அவனை எரித்து விடுவதைப் போல் முறைத்துப் பார்த்தான்.

“செய்வதையெல்லாம் செய்து விட்டு என்னை என்னடா முறைக்கிறாய்?” என ரிச்சர்ட் மீண்டும் எகிற, அவனை வீம்புடன் தடுத்து நிறுத்தினான் ராக்கேஷ்.

“கேவலம் ஒரு வேசியி…”

“ராக்கேஷ்… போதும் நிறுத்து, என்னை மேலும் மிருகமாக்காதே!”

“ஏன்டா… இத்தனை வருட நட்பை விட, நேற்று வந்த இந்த…”

“வேண்டாம்… இதற்கு மேல் நீ எதுவும் வாயையே திறக்க வேண்டாம், உயிர் மீது ஆசையிருந்தால் இந்த கணமே என் வீட்டை விட்டு வெளியே போய்விடு!” என்று ரௌத்திரமாய் மாறி வாயிலை நோக்கி கை காட்டினான் ரிச்சர்ட்.

“நான் ஏன்டா போக வேண்டும் இதுபோன்ற ஜென்மத்திற்கு எல்லாம் உன் வீட்டில் இடமிருக்கிறது எனக்கில்லையா?” என்றான் அவன் ஆவேசமாக.

ராக்கேஷின் மனதிலும், புத்தியிலும் தன்னை குறித்த நிலை என்னவென்று தெரியுமாதலால் அருந்ததியிடமிருந்து அடக்கப்பட்ட விம்மல் ஒன்று வேகமாக வெடித்து கிளம்பியது.

அதுவரை ராக்கேஷை விழிகளால் எரித்துக் கொண்டிருந்தவன் அவளின் நிலையுணர்ந்து விரைந்து அவளை நெருங்கினான். அருகே அமர்ந்து சொல்லொண்ணா வேதனையோடு அவளுடைய கை கட்டுக்களை அவிழ்த்தவன் வாயில் அடைக்கப்பட்டு இருந்த துவாலையையும் எடுத்தான். அவன் முகத்தை நிமிர்ந்துப் பார்க்க திராணியற்று தலைக்கவிழ்ந்திருந்தவளின் கன்னங்களை நனைத்திருந்த நீரை மென்மையாக துடைத்தவனை கண்டு வெறி ஏறியது ராக்கேஷிற்கு.

“என்னடா ரொம்ப தான் உத்தமனாக நாடகமாடுகிறாய்? இவளிடம் உனக்கிருக்கின்ற உறவைப் பற்றி நீ சொல்லாவிட்டாலும் எனக்கு தெரியாது என்று நினைத்தாயா?” என உதாசீனமாக வினவினான்.

சற்றே மட்டுப்பட்டிருந்த சினம் ராக்கேஷின் வார்த்தைகளால் மீண்டும் தலைத்தூக்க வேகமாக எழுந்து வந்து அவன் சட்டையை கொத்தாகப் பிடித்தவன், “என்னடா தெரியும் உனக்கு? ஹாங்… என்ன தெரியும் உனக்கு? என்னுடன் பிறந்து வளரா விட்டாலும் அவளை என் தங்கையாக தான்டா பார்க்கிறேன். என்னுடைய வீட்டிற்கு வந்து என் தங்கையிடமே தவறாக நடக்க முயற்சித்ததும் இல்லாமல் என் முன்னாலேயே அவளை தரக்குறைவாக வேறுப் பேசுகிறாயா?” என்று அவனைப் போட்டு பலமாக உலுக்கினான்.

“ஹேய்… போதும் நிறுத்துடா உன் நாடகத்தை…” என்றவாறு அவன் கையை தட்டி விட்டவன், “என்ன நீ சொல்வதையெல்லாம் நம்பி ஏமாந்து விட்டுச் செல்ல என்னை என்ன கேனையன் என்று நினைத்தாயா? இவருக்கு அவள் தங்கையாம் இதை நான் நம்ப வேண்டுமாம், இவள் கூடத்தான் அன்று என்னை அண்ணா என அழைத்தாள் அதற்காக… இவள் எனக்கு தங்கை ஆகிவிடுவாளா?” என்று ஏளனமாக வினவினான் ராக்கேஷ்.

“என்ன?” என்று அவனை அதிர்ச்சியோடு ஏறிட்ட ரிச்சர்ட், “உன்னை இவள் அண்ணா என அழைத்தாளா… மனிதனாடா நீ? எந்த உறவின் பெயரை சொல்லி உன்னை நாடி வந்த சின்னப்பெண்ணை இந்த கோணத்தில் பார்க்கிறாயேடா… இது எவ்வளவு பெரிய துரோகம்? உன் நடவடிக்கையால் அந்த குழந்தையின் மனம் என்ன பாடுப்பட்டிருக்கும் என கொஞ்சமேனும் யோசித்துப் பார்த்தாயா?” என்று ஓய்ந்துப் போய் வினவினான்.

அவன் அலட்சியத்துடன் திரும்பிக் கொள்ள, தன் நிலையை எண்ணி முகத்தை மூடியபடி கதறி அழ ஆரம்பித்தாள் அப்பேதைப் பெண். அதைக்கண்டு இவன் உடல் விறைத்தாலும், அவளை நெருங்கி சமாதானப்படுத்த முயலாமல் ராக்கேஷை விரட்டியடிக்க முயன்றான்.

அவன் கரம்பற்றி தரதரவென்று வீட்டிற்கு வெளியே இழுத்து செல்ல முயன்றவனிடம் வரமறுத்து முரண்டுப் பிடித்து வரவேற்பறையிலேயே அழுத்தமாக நின்றான் ராக்கேஷ்.

“நீ என்ன காரணம் சொன்னாலும் சரி, அந்த வே…” என்றவனை முடிக்க விடாமல் வெறிக்கொண்டு மாறி மாறி கன்னங்களில் அறைய ஆரம்பித்தான் ரிச்சர்ட்.

“அந்த சின்னப்பிள்ளையை இனியும் அப்படி சொல்லாதேடா… அப்படி நினைக்காதே…” என்றவாறு அவன் தடுக்க முயன்று தோற்க தோற்க இவன் மீண்டும் மீண்டும் அடித்தான்.

ஒரு கட்டத்திற்கு மேல் அவனுடைய அடியை தாங்க இயலாது ஓய்ந்துப்போய் தரையில் விழுந்தவன் அப்பொழுதும் தன் புலம்பலை நிறுத்தவில்லை.

“நீ எத்தனை சொன்னாலும் சரி, அடித்தாலும் சரி உண்மை மாறப் போவதில்லை. அவள் வேசியின் மகள் தான் என்பதை உன்னால் மாற்ற முடியாது. இவளால் உனக்கு கேவலம் தான் வந்து சேரும், அன்று நீ என் வார்த்தைகளை நினைத்துப் பார்ப்பாய்!” என்று அவனுக்கு சவால் விட்டான் ராக்கேஷ்.

ஒரு கணம் அருந்ததியின் ரிஷிமூலம் அறிந்து அதிர்ந்து நின்றவன் அடுத்த நொடி அவளின் மெல்லிய விசும்பல் ஒலி கேட்டு தன்னை சுதாரித்தான்.

“அவளுடைய பிறப்போ, வளர்ப்போ எது எப்படிப்பட்டதாக இருந்தாலும் சரி, அவளுக்கு ஒரு நல்ல ஆரோக்கியமான வாழ்வை என்னால் அமைத்து தரமுடியும்!” என்று பதிலுக்கு அவனிடம் திரும்ப சவால் விட்டான்.

தட்டுத்தடுமாறி எழுந்து நின்றவன், “ஹக்… ஆரோக்கியமான வாழ்வுதானே… திருமண வாழ்வு இல்லையே? அது நிச்சயமாக உன்னால் முடியாது. இப்படிப்பட்டவளை எவனும்…” என்று இகழ்ந்து கூறியவனின் காலரைப் பற்றி தனக்கருகில் இழுத்தான் ரிச்சர்ட்.

“இத்தனை கொடுத்தும் புத்தி வரவில்லையே உனக்கு… சற்றும் மிதப்பு குறையாமல் தானே பேசிக் கொண்டிருக்கிறாய்?” என பல்லிடுக்கில் வார்த்தைகளை துப்பினான்.

“ஹும்… சரி விடுடா, நான் திருந்தி விட்டேன். இப்பொழுது மட்டும் எல்லாம் சரியாகி விட்டதா? என்னை நான் மாற்றிக் கொண்டாலும் அவள் நிலை என்றும் மாறப்போவதில்லை. நீ என்ன முயன்றாலும் அவளை குடும்ப குத்துவிளக்காக உன்னால் மாற்றவே முடியாது!” என்று ஏளனமாக கூறியவன் அவன் கையை எடுத்துவிட்டு மாடிப்படிகளில் ஏறினான்.

‘இல்லை… நான் விடமாட்டேன், எத்தனை தடங்கல்கள், சோதனைகள் வந்தாலும் சரி அவளுக்கு ஒரு நல்ல வாழ்வை அமைத்துக் கொடுக்கும் வரை என் வாழ்வில் திருமணம் என்ற பேச்சிற்கே இடமில்லை!’ என தனக்குள் சூளுரைத்தான் ரிச்சர்ட்.

அடுத்த பத்தாவது நிமிடத்தில் தன் உடல் வீக்கங்கள் ஓரளவு வெளியே தெரியாதவாறு தன்னை திருத்திக் கொண்டு கீழே இறங்கியவன் கல்லென முகம் இறுகியிருக்க புருவங்கள் நெறிய நின்றிருந்த நண்பன் அருகில் தயக்கத்துடன் வந்து நின்றான்.

“ரிச்… ம்க்கும்…” என்று லேசாக தொண்டையை செறுமியவன், “ரிச்சர்ட்!” என மெதுவாக அழைத்தான்.

முகத்தை சுளித்தபடி தன்னிடம் திரும்பியவனை தடுமாற்றத்துடன் ஏறிட்டவன், “என்னை ஏதாவது ஒரு நல்ல லாட்ஜில் டிராப் பண்ண முடியுமா? பகல் என்றால் நானே போய் விடுவேன்…” என்று பதவிசாக இழுத்தான்.

அவனை அலட்சியத்துடன் ஏறிட்டவன், “நள்ளிரவானால் மட்டும் என்ன? உன்னை போன்ற தெரு நாய்களுக்கு எல்லாம் பகல், இரவு என்பதெல்லாம் ஒரே பொழுது தான் எந்த ஆபத்தும் நேராது. அறையின் உள்ளே அமர்ந்திருக்கிறதே ஒரு அப்பாவி ஜீவன், அதுபோன்ற அபலைகளுக்கு தான் உன் போன்ற கொடூரர்களால் பகலில் கூட ஆபத்து நேரிடும்!” என்று இளக்காரமாக பதிலளித்தான்.

அவமானத்தில் முகம் சிவந்தவன் அவனை லேசாக முறைத்துவிட்டு கதவை திறந்து வெளியே நடந்தான். கேட்டில் இருந்த செக்யூரிட்டி அந்நேரத்தில் அங்கே ராக்கேஷை கண்டு குழம்பி தயக்கத்துடன் திரும்பி வீட்டினுள் பார்க்க, ரிச்சர்ட் அவனிடம் இன்முகமாக கட்டை விரலை உயர்த்தி காண்பித்தான்.

ராக்கேஷ் வெளியேறியதும் செக்யூரிட்டி கேட்டை பூட்ட, பெரும் நிம்மதியுடன் வீட்டின் கதவை பூட்டியவன் சோர்வாக அங்கிருந்த சோபா ஒன்றில் தொப்பென்று விழுந்தான்.

இரு கைகளாலும் தலைமுடியை அழுந்தக் கோதி பின்னால் சாய்ந்து விழி மூடிக்கொண்டவனுக்கு சற்று முன்பு நடந்த சம்பவங்கள் மனத்திரையினில் ஓடி பெரும் உளைச்சலை தந்தது.

அருந்ததி சில மாதங்களுக்கு முன்பு பரிமளம் பாட்டியுடன் வந்த அறிமுகப்படலத்தை நினைவுக் கூர்ந்தவன், ‘அப்பொழுது அவள் பாட்டியின் உறவினள் இல்லையா?’அவளை சுற்றி என்ன நடக்கிறது என்றே புரியவில்லையே… அவளோ எதற்கெடுத்தாலும் பயந்து நடுங்குகின்றாள், இவனோ அவளை… ப்ச்…’ என்று முகத்தை அழுந்த மூடி தன்னை ஆசுவாசப்படுத்தினான்.

ராக்கேஷ் அவளை இழிவுப்படுத்தி கூறிய வார்த்தைகள் அவன் நெஞ்சில் நெருஞ்சி முள்ளாக மாறி குத்திக் கிழித்தது. அதுபோன்ற சொற்களை கற்பனையில் கூட அவனால் அச்சிறுப்பெண்ணிடம் இணைத்துப் பார்க்க முடியவில்லை. உடலும், மனமும் அமைதியற்று பரபரவென்று அலைபாய்ந்தது.

‘ஐயோ… இதை கேட்கின்ற எனக்கே இப்படி இதயம் வெடிக்கின்றதே, இத்தனை நாட்களாக மனதில் இந்த வேதனையை போட்டு உளப்பிக் கொண்டிருக்கும் அந்த குழந்தையின் நிலை…’

வேகமாக எழுந்து அவளை நாடிச் சென்றவன், காய்ந்த சருகாய் தொட்டால் உதிர்ந்து விடுவாளோ என்பது போல் சுவரோரம் தன் உடலை குறுக்கி முடங்கிக் கொண்டு அமர்ந்திருந்தவளின் எதிரில் சென்று அமர்ந்தான்.

அவன் வந்திருக்கும் அரவம் உணர்ந்தும் தனக்குள் ஒடுங்கியபடி அவனிடம் நிமிராமல் தலைக் குனிந்திருந்தவளின் நிலையுணர்ந்து வேதனை அடைந்தவன் சட்டென்று அவள் கால்களை பற்றி மன்னிப்பு வேண்டினான்.

“என்னை மன்னித்து விடும்மா… இன்று உன்னுடைய இந்த மோசமான நிலைமைக்கு நானும் ஒரு காரணமாகி விட்டேன்!” என்றான் குரல் கரகரக்க.

அவனுடைய கரங்கள் தன் காலை தீண்டவும் பெரும் அதிர்வுடன் நிமிர்ந்து அவன் கரம்பற்றி பதறி தடுத்தவள், அதிலேயே முகம் புதைத்து தேம்பி தேம்பி அழ ஆரம்பித்தாள்.


 

ஹாய் சகோக்களே!

இந்த இடத்தில் இக்கதையின் கூற்றை உங்களுக்கு தெளிவுப்படுத்தினால் சரியாக இருக்கும் என்று நினைக்கிறேன். இன்றைய சமுதாயத்தில் குறிப்பிட்ட விகித்தனர் அது மூத்தவர்களோ அல்லது இளையவர்களோ, உறவினர்களோ அல்லது நட்புக்களோ யாராக இருந்தாலும் வயதுவரம்பின்றி பெண்ணினத்தை பார்க்கும் பார்வையே மிகவும் கீழ்த்தரமாக மாறியிருக்கிறது.

சிறு குழந்தைகள் முதல் வயது முதிர்ந்த பெண்கள் வரை அவர்களுடைய வக்கிர புத்திக்கு பரிதாபமாக இலக்காகிறார்கள். சிலர் தள்ளி நின்று தங்களை வெளிப்படுத்திக் கொள்ளாமல் மறைமுகமாக குறுந்தகவல்களிலும், சோசையல் மீடியாக்களிலும் அவர்களின் வக்கிரத்தை வெளிப்படுத்துகிறார்கள் என்றால் இன்னும் சிலர் நேரிடையாகவே தங்கள் எண்ணத்தை சிறிதும் அச்சமின்றி வெளியிடுகின்றனர். நம் சமுதாயமும், சட்டமும் அந்த அழகில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது, ஹும்…

சமுதாயத்தையும், கல்விமுறையையும் குற்றம் சொல்வதை தவிர்த்து சற்றே யோசித்துப் பார்த்தால், நாம் புலம்புவதால் மட்டும் இங்கே என்ன மாற்றம் நிகழ்ந்து விடப்போகிறது? ஒன்றுமில்லை… படிப்பவர்கள் படித்து விட்டு செல்வார்கள், ரிசல்ட் என்னவோ பூஜ்யம் தான். அதற்கு மாறாக இப்படி செய்தால் ஒருவேளை ஒரு மாற்றம் கொண்டு வரமுடியுமோ என்று சிந்தித்ததின் உபயம் தான் இது.

நம்மால் நாட்டை தான் மாற்ற முடியாது, வீட்டை தாராளமாக மாற்ற முடியும் அல்லவா? ஒரு பொறுப்பான தாயாய், தந்தையாய் இருந்து எதிர்கால சந்ததியினருக்கு ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்க முயலுவோம்.

ஒற்றைப் பிள்ளையாய் பிறந்து வளர்பவர்கள் தான் ஒழுக்க சீர்கேட்டில் ஈடுபடுவார்கள் என்றில்லை, உடன்பிறப்புகளுடன் பிறந்து வளரும் சில தறுதலைகளும் இவ்வாறான செயல்களில் ஈடுபட தான் செய்கிறது.

இதற்கு முழுமுதற் காரணம், அவர்களுக்கு நாம் பயிற்றுவிக்க மறந்துப் போன மனிதம் என்கிற உன்னத மொழி தான். அடிப்படையில் இரக்க குணம் உள்ள எவனும், எவளும் எந்த உயிருக்கும், உணர்வுகளுக்கும் தீங்கிழைக்க விளைய மாட்டார்.

நம் குழந்தைகளுக்கு படிப்பு, பாட்டு, நடனம், விளையாட்டு பல வித்தைகள் என கற்றுக்கொள்ள அனுப்புவதை விட்டு முதலில் அவர்களுடைய மனதில் இரக்க குணத்தை வளர்த்துங்கள். அனுதினமும் நாட்டில் நடக்கின்ற பல குற்றங்களை சிறுவயது முதலே அவர்களுக்கு தெரியப்படுத்துங்கள். அதில் வரும் குற்றப்பின்னனியின் கொடூரங்களை தவிர்த்து அதில் பலியாகும் உயிர்களின் வேதனையை அவர்களை உணரச் செய்யுங்கள். அந்த அப்பாவிகளின் பிரிவால் வாடும் குடும்பங்களின் நிலையை விளக்கமாக எடுத்துக் கூறி அவர்களின் இரக்க குணத்தை தூண்டுங்கள். (இரக்கத்தை தான் தூண்ட சொன்னேனே தவிர ஏமாளியாக இருக்க கூடாது என்பதையும் தெளிவுப்படுத்தி விடுங்கள்).

நம் வீட்டில் மனிதத்தை தழைத்தோங்க செய்தாலே பெருமளவு குற்றம் குறைய வாய்ப்பிருக்கிறது. குழந்தைகளிடம் தினமும் மனம் விட்டு பேசுங்கள் அவர்களையும் திரும்ப பேச வையுங்கள். ஒவ்வொரு வளர்ச்சியிலும் பெற்றோர் ஆகிய நம்முடைய கவனிப்பும், எச்சரிக்கையும் மிகவும் அவசியமானதாகும்.

பெண் பிள்ளையானால் நட்பு பாராட்டி சமூகத்தில் நடக்கின்ற குற்றங்கள் குறித்து அவர்களை எச்சரித்து வைப்பதிலும், ஆண் பிள்ளையானாலும் அதே நட்பு பாராட்டி வளர்த்து பிறர் உணர்வுகளை மதிக்க கற்றுக் கொடுக்க வேண்டும். (அப்கோர்ஸ்… ஹஹா… இது பெண் குழந்தைகளுக்கும் பொருந்தும்.)

எது எப்படியோ… ஆகமொத்தம் முதலில் நம் வீட்டை திருத்தி ஒரு மாற்றம் கொண்டு வருவோம்பா. நம் பிள்ளைகளுக்கு பல வித்தைகளையும், விஞ்ஞானத்தையும் சொல்லிக் கொடுக்கிறோமோ இல்லையோ பிற உயிர்களிடத்தில் இரக்கத்தை வளரச் செய்வோம்.

2 thoughts on “Poojaiketra Poovithu 8 – Deepababu”

  1. Superb ud deepa. Unga ezhuthu nadai migavum pidichirukkuma . Iyalbaga irukku unga kadhaigal. Neenga sollvathu migavum sari. Kuzhanthaigal idam pesinale pala ketta visayangalai thavirkkalam. Intha story kku Daily ud unndama . Kindle la eppo poduveenga

  2. Thanks a lot sis 😍 Kandippa, nam pillaigaluku nalla kalviyodu siranthathoru vazhkai kalviyaiyum parents katru kodukka vendum. Arivai mattum pattai theeti viduvathal manitha unarvugalai, panbugalai katruk kolla vaaipillamal yethirkalathil yetho oru vithathil bathika padugirrargal. Readers response poruthu weekly twice or thrice ud poduvathu than plan. Na already muditha yennudaiya 10th novel ithu. Daily ud poda naan ready but readers illai. 😀 Kindle la book potutu methuvaaka than podanum ipothaiku chance illai. 🙂

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *