*5*

 

“என்ன அமைதியாக இருக்கிறாய் ஒன்றும் பிரச்சினை இல்லை அல்லவா மேனேஜ் பண்ணிக்க முடியும் தானே?” என்று தன் சிந்தனையில் ஆழ்ந்திருந்தவளை கலைத்தான் ரிச்சர்ட்.

ம்… என்ற முனகலுடன் அருந்ததி தலையசைக்க, “குட்… எதுவென்றாலும் பயப்படாதே, உடனே என்னிடம் வந்து சொல். கம்பெனிக்கு சென்று விட்டேன் என்றால் லேன்ட் லைனில் கூப்பிடு என்ன? ஒவ்வொரு விஷயத்திலேயும் யோசித்து யோசித்து தயங்கிக் கொண்டே இருந்தால் இந்த உலகில் நாம் வாழ முடியாது. வெளியுலகில் உள்ளவர்கள் நிம்மதியாக வாழவும் விடமாட்டார்கள், நம் தயக்கத்தை அவர்களுக்கு சாதகமாக பயன்படுத்தி கொள்வார்கள். என்னடாம்மா புரிகிறதா? சரி போய் தூங்கு. நானும் அறைக்கு செல்கிறேன், காலையில் பாட்டியின் இறுதி சடங்கிற்கு வேறு செல்ல வேண்டும்!” என்றவாறு எழுந்து மாடிப்பக்கமாக செல்ல திரும்பியவன் யோசனையோடு அவளிடம் திரும்பினான்.

“நீ எதுவும் என்னுடன் அங்கே பாட்டியை பார்க்க வர வேண்டும் என்று எண்ணுகிறாயா?”

திகைத்து விழித்தவள் வேகமாக மறுத்து தலையசைத்தாள்.

“ம்… அதுவும் சரி தான், வந்திருந்த ஆட்களைப் பார்த்தாலும் நல்லவிதமாக தெரியவில்லை. எதையுமே யோசித்துப் பார்க்காமல் முட்டாள்தனமாக வாய்க்கு வந்ததை பேசுகிறார்கள். ஓகே குட்நைட்!” என்று விட்டு தன்னறைக்கு சென்றான் ரிச்சர்ட்.

மேலேறிச் செல்லும் அவனையே சில நொடிகள் அசையாது பார்த்திருந்தவள் பின் மெல்லிய பெருமூச்சுடன் தனது அறைக்கு சென்று கதவை தாளிட்டாள்.

அறை சுத்தமாக துடைக்கப்பட்டு வெறிச்சோடி இருந்தது. மெதுவாக சென்று கட்டிலில் அமர்ந்தவளுக்கு முன்தினம் இரவு பாட்டியுடன் உறங்கியது நினைவு வந்து துக்கத்தில் தொண்டையடைத்து விழிகள் கலங்கியது. இரண்டு ஒற்றை படுக்கை கட்டில்கள் மூலைக்கொன்றாக போடப்பட்டிருக்க, பரிமளம் தனக்கு உறக்கம் வருகின்ற வரை அருந்ததியிடம் வளவளவென்று தன் சொந்தக்கதை சோகக்கதை என தன்னுடைய குடும்பம், பிள்ளைகள் என்று ஏதாவது குற்றம்குறை கூறிக் கொண்டிருப்பார். அவர் பேசுவதையெல்லாம் அமைதியாக தனக்குள் உள்வாங்கி கொள்பவள் மறந்தும் அவரிடம் தன்னை பற்றி எதையும் வெளிப்படுத்த மாட்டாள். அவருக்கும் அவர் கவலை தான் பெரியதாக இருக்குமே தவிர இவளிடம் அவ்வளவாக எதையும் விசாரிக்க மாட்டார். அப்படி மீறிக் கேட்டாலும் அவள் பட்டும்படாமல் பதிலளிக்கவும் தனக்கெதற்கு அவள் கதை என்பது போல் அலட்சியமாக விட்டுவிட்டார்.

மெத்தையில் சரிந்து தன்னை குறுக்கிப் படுத்துக் கொண்டவளுக்கு அப்பொழுது தான் உடலின் அலுப்பே தெரிந்தது. எரியும் விழிகளை சோர்வுடன் மூடிக்கொண்டவள் சற்று நேரத்திற்கெல்லாம் தன்னை மறந்து துயிலில் ஆழ்ந்தாள்.

அதிகமாக அழுதிருந்ததில் மெலிதாக மூச்சடைக்க, உதடுகள் பிளந்து அயர்ந்து உறங்கிக் கொண்டிருந்தவளை லேசாக கதவு தட்டப்படும் ஒலி கலைத்தது. எங்கோ என்னவோ என்கிற எண்ணத்தில் மறுபுறம் வாகாக திரும்பி படுத்துக் கொண்டாள் சிறுமி.

இம்முறை அருந்ததி என்ற அழைப்புடன் மீண்டும் கதவு சற்று பலமாக தட்டப்படவும் விலுக்கென்று தூக்கிவாரிப் போட திடுக்கிட்டு விழித்தவள் வேகமாக எழுந்தமர்ந்தாள். சிறுபெண் என்பதால் நள்ளிரவில் கலைக்கப்பட்ட உறக்கம் அவளின் இதயத்துடிப்பை லேசாக எகிறச் செய்திருந்தது.

படபடவென்று அடித்துக் கொள்ளும் நெஞ்சை கை வைத்து அழுத்தியபடி அச்சத்தில் உறைந்துப் போய் அமர்ந்திருந்தவளுக்கு மெல்ல சுய உணர்வு திரும்ப மிரட்சியோடு அறையின் இருட்டில் சுற்றும்முற்றும் திரும்பி பார்த்தாள் பெண். தன்னுடைய தனிமையும், அநாதரவ நிலையும் மூளையில் பூதாகரமாக உறைக்க திகிலோடு கதவை நோக்கினாள்.

“அருந்ததி!”

இரவு தூங்கப் போவதற்கு முன்பு நன்றாக தானே மிகவும் நல்லவர் போல பேசிச் சென்றார். இப்பொழுது எதற்காக இந்த நேரத்தில் வந்து கதவை தட்டுகிறார்? ஏதேதோ அபாயகரமான சிந்தனைகள் எண்ணத்தில் தோன்றி மறைய மெல்ல கட்டிலை விட்டுக் கீழிறங்கியவள் அவனுக்கு பதிலளிக்காமல் கால்கள் வெடவெடவென்று நடுங்கி துவள சுவரோடு ஒன்றியபடி நின்றாள்.

மாறாக வெளியில் இருந்தவனுக்கோ அவளின் நிலையை எண்ணி மிகவும் கவலையாகிப் போனது. இரவு தன்னறையில் சென்றுப் படுத்தவனுக்கு உடலில் இருந்த அயர்வு அளவிற்கு கண்களில் உறக்கம் தழுவவில்லை. மனதின் ஓரம் அருந்ததியின் நினைவுகள் நெருஞ்சி முள்ளாய் உறுத்தி அவனை உறங்க விடாமல் செய்தது.

‘சின்னப்பெண் பாவம்… அடுத்தடுத்து இழப்புகளை சந்தித்து என்ன நிலைமையில் இருக்கிறாளோ தெரியவில்லையே… தனியாக வேறு விட்டு விட்டோமே!’ என்று அவனுக்கு கவலையாக இருந்தது.

அதனால் தான் அவள் நலமாக இருக்கிறாளா என்பதை தெரிந்துக் கொள்ள நள்ளிரவில் வந்து கதவை தட்டிக் கொண்டிருக்கிறான் பையன். முதலில் அவளின் உறக்கம் கெட்டு விடுமோ என சற்றே தயங்கினான் தான். பிறகு ஒருவேளை அவள் ஏதாவது தவறான முடிவை எடுத்து விட்டால் என்ன செய்வது என்கிற பயம் அடிமனதில் திகிலூட்டி அவனை விரட்டியடிக்க நேராக வந்து தட்ட ஆரம்பித்து விட்டான்.

ஆனால் பாவம், தன்னுடைய ஆறுதல் தான் அவளை சிறிதளவேனும் தேற்றியிருக்கிறது என்கிற விவரம் அவனுக்கு தெரியாமல் போயிற்று.

“அருந்ததிமா… கொஞ்சம் கதவை திற!”

அவளோ வாயையே திறவாமல் இமைகள் கொட்டக் கொட்ட கதவையே அசையாது பார்த்தபடி சுவரோரம் படபடப்புடன் நின்றிருந்தாள்.

சில நிமிடங்களில் கதவை தட்டுவதை நிறுத்திவிட்டு அங்கிருந்து ரிச்சர்ட் விலகிச்செல்லும் அழுத்தமான காலடியோசை செவியில் விழவும் நிம்மதி பெருமூச்சுடன் மெதுவாக சென்று கட்டிலின் ஓரம் அமர்ந்தாள் அருந்ததி.

அடுத்த நிமிடம் அவளின் அறை ஜன்னல்கதவு படபடவென்று தட்டப்பட திடுக்கிட்டு திரும்பியவள், மருண்ட விழிகளுடன் அச்சத்தில் உலரும் நாவை சரிசெய்ய எச்சிலை கூட்டி விழுங்கினாள்.

“அருந்ததி!” என இம்முறை இன்னும் உரக்க அழைத்தான் ரிச்சர்ட்.

‘ஜன்னல் தானே… கதவு இல்லையே, திறந்து பதிலளிக்கலாமா? ஆனால் ஒருவேளை… கதவை திற என்று சொல்லி விட்டால் என்ன செய்வது?’ என கைகளைப் பிசைந்தாள்.

அவனுடைய சத்தம் கேட்டு வாயிலில் காவலுக்கு இருந்த செக்யூரிட்டியே அருகில் வந்து அவனிடம் என்ன பிரச்சினை என்று விசாரித்தான்.

“என்ன சார் எதுவும் பிரச்சினையா?”

காதுகளை தீட்டிக் கொண்டு அருந்ததி கவனமாக கேட்டிருக்க, வேலையாட்களிடம் வெளிப்படையாக தன் மனதை பகிர விருப்பமில்லாமல் ரிச்சர்ட் கூறிய சமாதான காரணம் இவளை சற்றே திருப்திப்படுத்தி ஜன்னலை திறக்கச் செய்தது.

“அதெல்லாம் ஒன்றுமில்லை… ஏதாவது கனவுக் கண்டாளா என்னவென்று தெரியவில்லை, சற்று முன்னர் பயங்கரமாக அலறினாள். அதுதான் பாட்டியின் நினைவாக எதுவும் தனிமையில் கத்தி பயந்துக் கொண்டிருக்கிறாளோ என்னவோ என பார்க்க வந்தேன். நீங்கள் போங்கள்!” என்று அவரை அவன் அனுப்பி வைக்க, இங்கே நம் அருந்ததி ஜன்னல் கதவை திறந்தாள்.

திறந்து தன்னை வெளிப்படுத்தியவளிடம், அவ்வளவு நேரமாக ஏன் திறக்கவில்லை என அவனால் கோபித்துக் கொள்ளவும் முடியவில்லை. நள்ளிரவில் அயர்ந்து தூங்குகிற பிள்ளையை வந்து எழுப்பிவிட்டு திறக்காததற்கு சண்டையா போட முடியும் என்று தனக்கு தானே அலுத்துக் கொண்டான்.

‘ஓ… இவர் சொல்வதுப்போல் ஒருவேளை நாம் தூக்கத்தில் கத்தியிருப்போமோ… இருந்தாலும் இருக்கும். கேட்டால் என்ன பதில் சொல்வது? பேசாமல்… அவர் கேட்பதற்கு முன்பு நாமே சொல்லி விடலாம்!’

“எதுவும் கெட்டக்கனவு வந்து கத்தினேனா என்ன என்று எனக்கு தெரியவில்லை!” என தான் கேட்பதற்கு முன்பாகவே அவசரமாக பதிலளித்து விட்டு பரிதாபமாக விழிக்கும் சிறுமியை கண்டு ரிச்சர்ட்டுக்கு புன்னகை அரும்பியது.

“நீ கத்தினாயா என்ன?”

ஆங்… என்று விழித்தவள், “நீங்கள் தானே சொன்னீர்கள்?” என குழப்பத்துடன் வினவினாள்.

“ம்… அவனை அனுப்ப வேண்டி பொய் சொன்னேன்!” என்றது தான் தாமதம், பொய்யா? என அவளின் மனம் மீண்டும் கூப்பாடு போட்டு தவிக்க ஆரம்பித்தது.

“எனக்கு தூக்கமே வரவில்லை, நீ வேறு பாட்டி ரூமில் தனியாக தூங்குகிறாயே… உனக்கு எதுவும் பயமாக இருந்தால் கூட தானாக வந்து என்னிடம் சொல்ல மாட்டாய். அதுதான் பத்திரமாக இருக்கிறாயா என்னவென்று பார்க்க வந்தேன்!” என்று தன் எண்ணத்தை சற்றே அவளுக்கேற்றவாறு மாற்றி கூறினான் ரிச்சர்ட்.

அகமும், புறமும் ஒருசேர நிம்மதியை தழுவிக் கொள்ள பளிச்சென்று அழகாக பதிலளித்தாள் அருந்ததி.

“பயமெல்லாம் ஒன்றும் இல்லை, கொஞ்சம் கஷ்டமாக இருந்தது அவ்வளவு தான் மற்றபடி நான் நன்றாக தூங்கி விட்டேன்!”

“அதுதான் தெளிவாக தெரிகிறதே… இந்த நேரத்தில் வீட்டிற்கு வெளியே வந்து கால் கடுக்க நான் நின்றுக் கொண்டிருக்கிறேனே!” என்று நக்கலாக கூறினான் ரிச்சர்ட்.

இதற்கு என்ன பதில் சொல்வது என அவள் குற்றவுணர்வில் தடுமாற, “சரி தூங்கு… நாளை உன் அறையில் முதலில் இன்டர்காம் கனெக்ஷனுக்கு ஏற்பாடு செய்ய வேண்டும்!” என்றபடி அவளின் அறை ஜன்னலை சாற்றிவிட்டு விலகிச் சென்றான்.

‘உண்மையில் இவர் நல்லவர் தான் போலிருக்கிறது!’ என்று முக்கால் கிணறை தாண்டினாள் அருந்ததி.

*******

பல்லாங்குழியில் எண்ணி எண்ணிப் போடும் முத்துக்களை போன்று நாட்காட்டியில் நாட்கள் மெதுவாக நகர, தானாக வலிய வந்து ரிச்சர்டிடம் பேசிப் பழகா விட்டாலும் அவன் வீட்டில் இருக்கின்ற நேரம் கூட புத்தகங்களை அடுக்குவது, உண்டு முடித்த குடித்த பாத்திரங்களை எடுத்து வைப்பது அலம்புவது என அறையை விட்டு வெளியே வந்து அவன்முன் நடமாடியபடி சின்ன சின்ன வேலைகளில் ஈடுபட்டாள் அருந்ததி.

சாப்பிட்டாயா, இன்று என்ன படித்தாய்? என ரிச்சர்ட் கேட்கின்ற கேள்விகளுக்கும் நின்று பதிலளிக்கப் பழகினாள். ஆம்… வீட்டிற்கு வரும் நியூஸ்பேப்பர் மற்றும் மேகஸைன்களை தினமும் கண்டிப்பாக படித்துப் பழக வேண்டும் என்று அவளுக்கு உத்திரவிட்டிருந்தான் அவன்.

அருந்ததிக்கு இன்னமும் பள்ளிக்கு செல்வதில் சற்றும் விருப்பமில்லை என்றாலும் இவனை விட்டால் தனக்கு இந்த உலகத்தில் வேறு கதியில்லை என்பதால் மனமேயின்றி அவன் சொல்லுக்கு கட்டுப்பட ஆரம்பித்தாள்.

வடிவு வேலைக்கு வருகின்ற நேரம் அவளுக்கு கொஞ்சம் உதவுவதை தவிர்த்து இவளுக்கும் மற்ற நேரங்களில் வேறு வேலை எதுவும் இல்லாததால் முழுநேர தனிமையை போக்கவென்று மெல்ல அதில் தன்னை புகுத்திக் கொண்டாள்.

அன்று வடிவின் பையனுக்கு ஏதோ உடம்பு முடியவில்லை என்பதால் தன்னால் இன்று வேலைக்கு வர இயலாது மறுநாள் வருகிறேன் என்று தன் கணவனிடம் அவள் தகவல் சொல்லி அனுப்பி இருந்தாள்.

‘பிரிஜ்ஜில் மாவு இருக்கிறது. சரி… தோசை, சட்னி தானே நாமே செய்து விடலாம்!’ என்று முடிவு செய்து ரிச்சர்டின் வருகைக்காக காத்திருந்தாள் அருந்ததி.

சற்று நேரத்திற்கு எல்லாம் அவனது கார் காம்பவுன்டில் நுழையும் ஓசை கேட்க, அறையில் இருந்து கிச்சனுக்கு விரைந்தவள் அவனுக்கு காபி போட வேண்டி பாலை காய்ச்சினாள்.

ரிச்சர்டுடன் வேறு யாரோ பேசிக்கொண்டே வரும் அரவம் கேட்கவும், யார் அது புதிதாக வருகிறார்கள் என புருவம் சுருங்க எட்டிப்பார்த்தவளின் விழிகள் அவனுடன் வந்தவனை கண்டு திகிலடைந்து மிரண்டுப் போனது.

அவனுடைய பார்வையில் விழுவதற்கு முன்பு வேகமாக தன்னை சமையலறைக்குள் மறைத்துக் கொண்டவளின் இதயம் தடதடவென்று அடித்து முகமெல்லாம் பயத்தில் வியர்த்து கொட்ட ஆரம்பித்தது. சில்லிட்டு நடுங்கும் விரல்களை ஒன்றோடொன்று கோர்த்து தன்னுள் வெடித்துக் கிளம்பும் உணர்வுகளை கட்டுப்படுத்த முயன்றாள் அவள். ஆனால் பாவம், அச்சிறுமியால் அதை செயல்படுத்த தான் முடியவில்லை.

“ம்… உட்கார். அப்புறம் நாளை காலையில் தானே இன்டர்வ்யூ?” என்று புதியவனிடம் வினவியபடி சோபாவில் அமர்ந்தான் ரிச்சர்ட்.

“ப்ச்… ஆமாம்பா, ஒரே எரிச்சலாக வருகிறது. படிப்பை முடித்து இரண்டு வருடங்களாகிறது இன்னும் வேலைக்கு செல்லாமல் சும்மா வீட்டிலேயே உட்கார்ந்து இருக்கிறாய் என அப்பாவும், அம்மாவும் சும்மா தொணதொணத்து கடுப்பைக் கிளப்புகிறார்கள்!” என்று முகத்தை அஷ்டகோணலாக சுளித்தான் அவன்.

“உன் பெற்றோர் சொல்வதில் என்ன தவறு இருக்கிறது… வேலைக்கு சென்றால் தான் உனக்கு பொறுப்பு வரும் என்று அவர்கள் நினைக்கின்றனர்!”

“ஆமாம்… இப்பொழுதே பொறுப்பு வந்து என்ன செய்யப் போகின்றேன் நான். எனக்கு என்ன நாளையே திருமணமா செய்து வைக்கப் போகிறார்கள்?”

“அடப்பாவி… இந்த வயதில் திருமணம் கேட்கிறதா உனக்கு?”

“ஏன் அதில் என்ன தவறு… உன் தாத்தா மாதிரி என் குடும்பத்தினர் எனக்கு என்ன பெரிதாக சொத்தா சேர்த்து வைத்திருக்கிறார்கள்? உன்னை போல நினைத்தபடி பல பெண்களுடன் உல்லாசமாகவும், சுலபமாகவும் வாழ்க்கையை கழிக்க… ஒவ்வொரு செலவுக்கும் அவர்களிடம் கணக்கு சொல்லி வாங்கி, பார்த்துப் பார்த்து செலவு செய்யும் என்னை மாதிரி பசங்களுக்கு தான் உடனடி திருமணம் அவசியம். உனக்கென்ன தினமும் ஒருவளை வீட்டிற்கு அழைத்து வந்தால் கூட தட்டிக் கேட்க ஆளில்லை!” என்று தன் இயலாமையை கூறுவது போல ரிச்சர்ட்டின் வசதி வாய்ப்புகள் குறித்து பொருமினான் அவன்.

அதுவரை இயல்பாக உரையாடிக் கொண்டிருந்த ரிச்சர்டின் முகம், அவனின் பேச்சைக் கேட்டு கறுத்து இறுகும் அதேவேளையில் அவனுடைய மறுபக்கத்தை அறிந்துக்கொண்ட அருந்ததியின் இதயம் பலமாக அதிர்ந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *