*48*

 

“அத்தையாக இருக்கும்!” என்றபடி கைபேசியை எடுத்த கருண் சிந்துவிடமிருந்து அழைப்பு வரவும், “அட… அம்மா!” என்று வியந்தபடி ஸ்வைப் செய்து காதில் வைத்தான்.

“ம்மா…” என்று உற்சாகமாக அழைத்தவனுக்கு தெரியாதா? கமலாவின் மூலம் தன் வீட்டிற்கு தகவல் சென்றிருக்கும் என்பது.

“கண்ணா… நீ அத்தைக்கு விவரம் சொல்லி, அவர்கள் எங்களை அழைத்துப் பேசி, நாங்கள் பெரியவர்கள் அங்கே ரிச்சர்ட் வீட்டிற்கு வரலாம் என முடிவெடுத்து… அதை அவனுக்கும் அழைத்து தகவலும் கொடுத்து விட்டோம். ஆனால்… நீ இன்னும் இத்தனை நேரமாக என் மருமகளோடு தோட்டத்தில் தனியாக கடலை போட்டுக் கொண்டிருக்கிறாய். ம்?”

“அம்மா… இதையெல்லாம் நன்றாக மோப்பம் பிடித்து விடுங்கள் நீங்கள்!” என்று உதட்டை சுழித்தான் மகன்.

“டேய்… எனக்கு வேறு வேலை இல்லை? என் பிள்ளை எம்புட்டு பெரிய விஷயமெல்லாம் சர்வசாதாரணமாக முடித்து வைத்து விட்டானே என்று தலைகால் புரியாமல் மகிழ்ச்சியடைந்து, உடனே உன்னை பாராட்ட வேண்டும் என ரிச்சர்டிடம் கேட்டால்… ஆன்ட்டி, கருண் அருந்ததியோடு தோட்டத்தில் பேசிக் கொண்டிருக்கிறான் என்கிறான். அடப்பாவிகளா… மாப்பிள்ளையும், மச்சானும் ஆளுக்கொரு பக்கமாக இந்த வேலையை தான் செய்கிறீர்களா என எனக்கு ஒரே ஷாக்!” என்று அவள் உரிய ஏற்ற இறக்கத்துடன் கூற, அருகில் இருந்தவர்களின் நகையொலி இங்கே இவனுக்கு கேட்டது.

“ரொம்பவும் தான் அலட்டாதே கிழவி… பேரன், பேத்தி எடுத்தப் பின்னும் நீ உன் புருஷனோடு ரொமான்ஸ் பண்ணும் பொழுது, வயதுப்பிள்ளைகள் நாங்கள் செய்வதில் என்ன வந்து விடப் போகிறது?” என்று தன் அம்மாவிடம் காட்டும் வழக்கமான விளையாட்டு புத்தியில் கருண் ஒருமையில் பேச, சிந்துவின் குரலோடு சேர்த்து சித்துவின் குரலும் டேய்… என்கவும் தான் அவள் அழைப்பை ஸ்பீக்கர் மோடில் போட்டிருக்கிறாள் என்பதே இவனுக்கு புரிந்தது.

“ஐயோ அம்மா… என்னம்மா இப்படி செய்து விட்டீர்கள்? ஸ்பீக்கரில் போட்டிருக்கிறேன் என்று ஒரு வார்த்தை சொல்லி இருக்க மாட்டீர்கள்… இப்பொழுது உங்கள் ஹீரோ எனக்கு லெக்ட்சர் எடுக்க ஆரம்பித்து விடுவாரே!” என்று இவன் புலம்ப ஆரம்பிக்க, அதற்குள் சித்தார்த் தன் மனைவியிடம் இருந்து அலைபேசியை வாங்க முயல்வதை உணர்ந்துக் கொண்டவன், “ஓகேம்மா… பை, நேரில் பார்க்கலாம்!” என்று வேகமாக அணைத்து பாக்கெட்டில் போட்டுக் கொண்டான்.

கருண் சிந்துவிடம் வாயாடுவதை ஆர்வமாக பார்த்திருந்த அருந்ததி, ஐயோ… என்ன அம்மாவை இப்படி எல்லாம் சொல்கிறாரே… என்று பதறியவள், அடுத்து அவனுடைய புலம்பலை பார்த்து பரிதாபம் கொள்ளும் நேரம் அவன் பட்டென்று லைனை கட் செய்யவும் மலங்க விழித்தாள்.

“என்ன நீங்கள் பாட்டுக்கு அப்பா பேசுவதற்குள் அணைத்து விட்டீர்களே… அப்புறம் இதற்கும் சேர்த்து திட்டு வாங்கப் போகிறீர்கள்!” என்றாள் கவலையோடு.

உற்சாகமாக அவள் தோள்மீது கரம் போட்டு பேச துடித்த மனதை அடக்கியவன், “அப்பா அதற்கெல்லாம் கோபித்துக் கொள்ள மாட்டார் பப்ளி. என்னை பற்றி அவருக்கு தெரியும், அவரை பற்றி எனக்கும் தெரியும். எப்படியும் போனில் சத்தம் போட்டது போதாதென்று நேரில் பார்த்தாலும் டென்ஷனாகி எதையாவது சொல்லாமல் நிச்சயம் விடமாட்டார். ஸோ… அதை ஒட்டுமொத்தமாக நேரிலேயே வாங்கி கட்டிக் கொள்கிறேன். யு டோன்ட் வொர்ரி பேபி… இதெல்லாம் குடும்பக்கலை, உனக்கு எல்லாம் நான் சொல்லி தருகிறேன். வா முதலில் உள்ளே போகலாம் இன்னும் சற்று நேரத்தில் அனைவரும் இங்கே வருகிறார்கள்!” என்றபடி அவளுடன் வீட்டிற்குள் சென்றான்.

அடுத்து ரிச்சர்டின் வீட்டில் பெரியவர்கள் அனைவரும் ஒன்று கூடி கலந்தாலோசித்து அடுத்த பத்தாவது நாளில் திருமண தேதியை முடிவு செய்தனர்.

அட்சயாவிற்கு தான் அதற்குள்ளாகவா என சற்று படபடப்பாக இருந்தது. ரிச்சர்டிற்கோ அனைத்தும் மடமடவென்று நடப்பதில் ஏக சந்தோசம்.

அவள் எதிர்பார்த்திருந்தபடி மகள் சம்மதித்ததே போதும் என்று கமலா அவளிடம் எதுவும் கேட்டுக் கொள்ளாமல் திருமண வேலைகளில் வேகமாக இறங்கி விட்டாள், அவள் பயம் அவளுக்கு.

கண்ணிமைக்கும் நேரத்தில் நாட்கள் ஓடி ஒளிய, இரு முறைப்படியும் ரிச்சர்ட், அட்சயா திருமணம் இனிதே முடிந்தது.

ரிச்சர்டின் குடும்ப வழக்கப்படி கிருஸ்துவ முறையில் சர்ச்சில் மோதிரம் மாற்றிக் கொண்ட மணமக்கள் அடுத்து அட்சயாவின் வீட்டினருக்காக மாலை மாற்றி, மணமகன் கையால் அவள் கழுத்தில் தங்க சங்கிலியும் அணிவிக்கப்பட்டது.

***

“தன்யா… முடிந்து விட்டதா? இங்கே கொஞ்சம் வா, அடுத்து இவளை ரெடி பண்ணனும்!” என்று மருமகளுக்கு குரல் கொடுத்தாள் சிந்துஜா.

“ஆங்… இதோ வரேன் அத்தை!” என்று பதில் குரல் கொடுத்தவள் தன் கணவனிடம் எதையோ செய்ய சொல்லி உத்திரவிட்டு விட்டு வருவது இங்கே காதில் விழுந்தது.

திருமணமான முதல் நாள் என்பதால் பெரியவர்கள் இல்லாத வீட்டில் இளம் தலைமுறையினர் தடுமாறப் போகிறார்கள் என்று அட்சயாவோடு சிந்து, தருண், தன்யா துணையாக வந்திருந்தனர்.

சோபன இரவு அறைக்கான அலங்காரத்தில் ஈடுபட்டிருந்தவளை தான் சிந்து உதவிக்கென்று அழைத்தது.

அறைக்குள் வந்தவள் அட்சயாவின் முகத்தை பார்த்து லேசாக நகைத்தவண்ணம், “என்ன டாக்டரே… முகம் எதையோ தின்ற மாதிரி விழித்துக் கொண்டிருக்கிறது?” என்று கேலி செய்தாள்.

“ஏய் தனு…” என்று இவள் பல்லைக் கடிக்க, “சரி அது இருக்கட்டும், நீ இப்படி இப்படி தான் அறைக்கு வரவேண்டுமென்று, உன்னிடம் அண்ணா ஏதாவது தன் எதிர்பார்ப்பை சொல்லியிருக்கிறாரா… இருந்தால் சொல்லி விடும்மா, அவருக்கு பிடித்த மாதிரியே நான் அலங்காரம் செய்து விடுகிறேன். பாவம்… அவரை வேறு ஏமாற்ற வேண்டாம்!” என கண்ணடித்தாள்.

சட்டென்று எழுந்த அட்சயா, “உன்னை… ஏதோ கொஞ்சம் முன்னால் திருமணம் செய்துக் கொண்டு பிள்ளை பெற்ற திமிரில் தானே என்னை சீண்டி விளையாடுகிறாய் நீ!” என்று அவளை துரத்த ஆரம்பித்தாள்.

“ஏய்… வேண்டாம், எனக்கு ஒன்றும் பிரச்சினை இல்லை. நான் எவ்வளவு நேரம் என்றாலும் விளையாட தயார். ஆனால் அண்ணா தான் பாவம், உன்னை காணாமல் நொந்து நூடுல்ஸ் ஆகிவிடுவார்!” என்று மேலும் பேசியபடி தன்யா அறைக்குள் அங்குமிங்கும் ஓடினாள்.

சிந்து கேட்டிருந்த பூவை அப்பொழுது தான் எடுத்துக் கொண்டு அறைக்குள் வந்த அருந்ததி அவர்கள் இருவரும் ஓடிப்பிடித்து விளையாடுவதை கண்டு பிரமிப்புடன் நின்றாள்.

“ஷ்… ஏய்… இரண்டு பேரும் என்னிடம் உதை வாங்கப் போகிறீர்கள். அச்சு… அருந்ததி பூ கொண்டு வந்து விட்டாள் பார்… ஒழுங்காக இங்கே வந்து உட்கார்!”

“ஆமாம்… என்னை அடக்குங்கள், உங்கள் மருமகளை விட்டு விடுங்கள்!” என்று பழிப்பு காண்பித்தபடி அவள் வந்து அமர சின்ன முறுவலிப்போடு அவள் உச்சியில் முத்தமிட்டவள், “அவளை அடக்கத்தான் வீட்டில் பேரன், பேத்தி என்ற பெயரில் இரண்டு சிங்க குட்டிகளை வளர்த்து வருகிறேனே… அப்புறமென்ன? இனி அடுத்து உன்னையும், உன் மாமன் மகனையும் அடக்கத்தான் வாரிசுகள் வரவேண்டும்!” என்று கன்னத்தை கிள்ளினாள்.

“ப்ச்… போங்கள் அத்தை!” என சிணுங்கியவள் அருந்ததியிடம் திரும்பி, “நன்றாக கேட்டுக் கொண்டாயா… இவர்கள் எல்லாம் நம்மிடம் பேரன், பேத்தி எதிர்பார்ப்பது நம்மை அடக்கத்தான்!” என்று எடுத்துக் கொடுத்தாள்.

ம்… என்று இழுத்து பயப்பார்வை பார்த்த அருந்ததியின் அருகில் சென்ற தன்யா அவள் தோளில் கைப்போட்டு தன்னருகில் இழுத்துக் கொண்டு, “பேபிம்மாவை நீ ரொம்பவும் தான் பயமுறுத்தாதே அச்சு!” என்று அர்த்தத்துடன் பார்த்தாள்.

புரிந்துக் கொண்டவளும், “சரி சரி, ஆகின்ற வேலையைப் பார். சும்மா அதையும், இதையும் என்று போட்டுப் படுத்தாமல் சிம்பிளாக தலை வாரிவிடு!” என சீப்பை கையில் எடுத்தாள்.

“ஆமாம்… இது அவளுக்காகவா அல்லது உனக்காகவா?” என்று முணுமுணுத்தவாறு அவள் தலையை வார ஆரம்பித்த தன்யா, “ஆ… அவுச்… எருமை இப்படி கிள்ளுகிறாயே?” என பொரிந்தாள்.

“பின்னே… அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை ஆரிருள் உய்த்து விடும்! தெரியாதா?” என விழிகளை உருட்டினாள் அட்சயா.

“ஹேய்… தலையை திருப்பு!” என நகைத்தபடி அவளை திருப்பி விட்ட சிந்து, அருந்ததி கொடுத்த மல்லி, ஜாதி சரங்களை கவரில் இருந்து வெளியே எடுத்தாள்.

***

சற்றே சங்கோஜத்துடன் அறைக்குள் நுழைந்த அட்சயாவை நிதானமாக எதிர்கொண்ட ரிச்சர்ட் அவளிடம் இயல்பாக புன்னகைத்தான்.

தன்னை மீறி தோன்றிய தயக்கத்தை உதறி தள்ளி மெல்ல முறுவலித்தவள், அலங்கார கட்டிலின் மீது கிடந்த போட்டோ ஆல்பத்தை கண்டு குழம்பி அவனிடம் கேள்வியாக பார்வையை உயர்த்தினாள்.

“அம்மா, அப்பாவுடைய ஆல்பம் உன்னிடம் காண்பிக்க வேண்டுமென்று எடுத்து வைத்தேன்!” என்றவாறு அவள் கரம்பற்றி அழைத்து சென்று கட்டிலில் அமரவைத்து தானும் அருகில் அமர்ந்தான்.

‘ஆல்பம் பார்க்கின்ற நேரமா இது?’ என்ற குரல் உள்ளிருந்து நக்கலாக எதிரொலிக்க, அவளையும் மீறி இதழில் நாணப் புன்னகை ஒன்று தோன்றியது.

அவளுக்கு தன்னுடைய குடும்பத்தினரை ஒவ்வொருவராக அவன் ஆர்வத்துடன் அறிமுகப்படுத்த ஆரம்பிக்கவும், இவள் நெஞ்சம் உருகிப் போய் அவனிடத்தில் பரிவும், வாஞ்சையும் ஒருங்கே தோன்றியது. திருமணத்தில் இணையும் பொழுது இரு குடும்ப உறுப்பினர்களையும் நேரில் அறிமுகப்படுத்தி அவர்களோடு மகிழ்வுடன் கலந்துரையாடுவதற்கு பதில், தன்னிடம் அவர்களை புகைப்படங்களாக புகுத்த முனைபவனை கண்டு இயல்பிலேயே அழுத்தம் மிக்கவளுக்கு கூட தாய்மை சுரந்து கண்கள் கலங்கியது.

“இதைப் பார்த்தாயா அம்மா என்ன செய்கிறார்கள் என்று… எனக்கு தெரிந்து அவர்களும் உன்னை மாதிரி தான் துறுதுறுவென்று இருந்திருப்பார்கள் என நினைக்கிறேன். ஏனெனில் ஒரு சில விஷயங்களை பாட்டிக்கு தெரியாமல் அப்பாவின் துணைக்கொண்டு செய்துவிட்டு பின்னால் அவர்களிடம் நன்றாக வாங்கி கட்டிக் கொள்வதை நானே நேரில் பார்த்திருக்கிறேன். அப்படியே நீ உன் அம்மாவிடம் மாட்டுவது போல்…” என்று நிமிர்ந்தவனின் முகத்தில் புன்னகை தவழ்ந்தது.

அதைக் கண்டு இவள் இதயத்திலும் நிம்மதி பூக்க, தன்னுணர்வை மறைத்து இவளாலும் பதிலுக்கு முறுவலிக்க முடிந்தது. அதன்பிறகு இவளும் அவனுடன் ஆர்வமாக புகைப்படங்களை அலசினாள்.

“ஹஹா… இது நீங்களா? செம க்யூட்டாக இருக்கிறது!” என்று நகைத்தாள்.

“ஏய்… இதிலென்ன உனக்கு அவ்வளவு சிரிப்பு வேண்டியிருக்கிறது?” என்று அவளை போலியாக அதட்டினான் ரிச்சர்ட்.

“அப்புறம்… எப்பவும் கூலாக… எதற்கும் அலட்டிக் கொள்ளாமல் எடுப்பாக சுற்றிக் கொண்டிருப்பவர், இப்படி அம்மாவிடம் கோபித்துக் கொண்டு அவர்களை முறைத்தபடி உதட்டை பிதுக்கிக் கொண்டு நிற்கிறீர்களே!”

“ம்… பின்னே… ஐந்து வயது குழந்தை எப்படி நிற்குமாம்?”

“கண்டிப்பாக இப்படி தான் நிற்கும், சோ சுவீட்…” என்று புகைப்படத்தை கிள்ளிக் கொஞ்ச முயன்றவள், சட்டென்று ம்ஹும்… என தனக்கு தானே மறுப்பாக தலையசைத்துவிட்டு எதிரில் இருந்தவனின் உதட்டை விரல்களால் பிடித்து இழுத்து கொஞ்சினாள்.

இதை சற்றும் எதிர்பாராதவன் ஒருகணம் மின்சாரம் பாய்ந்தது போல் தடுமாறி விழிக்க, அட்சயாவோ தன்னியல்பு போல அடுத்த புகைப்படத்திற்கு தாவியிருந்தாள். அவளை பொறுத்தவரை கருணிடமோ அல்லது விதுவிடமோ உரிமையோடு விளையாடுவதை போல் விளையாடினாள் அவ்வளவே.

ஆனால் ரிச்சர்டிற்கு தான் ஹார்மோன்கள் தாறுமாறாக சுரக்க ஆரம்பித்தது. ஏற்கனவே இவனுடைய நடத்தையால் தனக்கு சஞ்சலம் எல்லாம் இல்லை, கோபம் மட்டும் உண்டு என்று அவள் சொல்லி இருந்ததால் அந்த விஷயத்தில் முதலடி எடுத்து வைக்கத் தயங்கிக் கொண்டிருந்தான். மனைவி மீது மலையளவு காதல் இருந்தாலும் தன்னை கட்டுப்படுத்திக் கொண்டு, அவளை தன்னிடம் இயல்பாக பழக வைக்கவென்று தான் ஆல்பத்தை கையில் எடுத்து அமர்ந்திருந்தான் அவன். அவனுடைய தர்மபத்தினியோ தன் செய்கையால் அவனை பெரும் சோதனைக்கு உள்ளாக்கினாள்.

தற்பொழுது அவனுடைய கவனமெல்லாம் அவள் முகத்தில் தாபத்துடன் குவிய, ஏக்கமாக பார்த்திருந்தவனின் புருவங்கள் மெல்ல யோசனையில் முடிச்சிட்டது.

“ஆமாம்… நான் பார்த்தவரையில் உன்னை அவ்வப்பொழுது பொட்டில்லாமல் பார்ப்பேனே… அது உன் நேச்சரா அல்லது மறந்து விடுவாயா?” என திடுமென்று வினவினான்.

ஆல்பத்தை திருப்பியபடி, “ம்… ஒருவகையில் அது என் நேச்சர் தான். நான் படித்தது எல்லாம் கான்வென்டில், சோ… வளையல் போடக்கூடாது, பெரிய தொங்கட்டான் போடக்கூடாது, பொட்டு பெரியதாக வைக்க கூடாது, கொலுசு அணியக் கூடாது. அப்புறம்… ஹாங்… பூ வைக்க கூடாது என்று இப்படி ஏகப்பட்ட கண்டிஷன்ஸ் இருக்கும். சின்ன வயதில் அதெல்லாமே போட வேண்டும் என எனக்கு செம ஆசையாக இருக்கும் என்பதால் பள்ளி மீது பயங்கர காண்டாகும். ஆனால் வளர வளர அது பழகியும் விட்டது, ஒருபக்கம் அதுவே பிடித்தும் விட்டது!” என்றாள் அவனை நிமிர்ந்தும் பாராமல்.

மீண்டும் அட்சயாவின் முகத்தை கூர்ந்தவன் அவள் நெற்றியிலிருந்த ஸ்டிக்கர் பொட்டை எடுத்தான்.

புருவம் சுருங்க நிமிர்ந்தவள், “என்ன?” என்றாள்.

“நம் வீட்டு வழக்கப்படி பொட்டு வைக்கத் தேவையில்லை. அம்மா போட்டோவை பார்த்தாய் அல்லவா?” என்க, அவள் மனதில் சின்ன நெருடல் எழுந்தது.

‘இவன் குடும்ப வழக்கம் என்றால் அதை நான் கட்டாயம் செய்தாக வேண்டுமா?’

தனக்குள் சிந்தனையில் தர்க்கம் செய்துக் கொண்டிருந்தவளை நெருங்கியவன் கிட்டத்தட்ட அணைக்க முயல்வது போல் இருகரங்களையும் பின்னால் கொண்டு செல்ல, அவன் முகத்தை மூச்சடைக்கப் பார்த்தாள் அட்சயா.

தன்யாவிடம் சண்டையிட்டு எந்த அலங்காரமும் வேண்டாம் இப்படி கிளிப் போட்டு பூ வைத்தால் போதும் என்று தன் அடர்ந்த கூந்தல் சுருள்களை அவள் அதனுள் அடக்கி வைத்திருக்க, அவனோ அதை விடுவித்து அவளின் முதுகில் படர விட்டான்.

உடல் முழுவதும் குப்பென்று பரவிய வெப்பம் அவளின் இதயத்துடிப்பை தாறுமாறாக்க, அவனோ அவள் முகத்தை ரசனையுடன் பார்த்தவன் அவள் கரம்பற்றி எழுப்பினான்.

சிலையென தன் இழுப்பிற்கு வந்தவளை அழைத்து சென்று ஆளுயர கண்ணாடியின் முன் நிறுத்தியவன் தன் முகத்தையே இமைக்காமல் பார்த்திருந்தவளின் கன்னத்தில் ஆட்காட்டி விரலை வைத்து திருப்பி கண்ணாடியை பார்க்கச் செய்தான்.

தனக்கு பின்னால் வெகு நெருக்கத்தில் அவன் நின்றிருக்க, அவளின் விழிகள் அவள் முகம் காண மறுத்தது.

“இப்பொழுது எப்படியிருக்கிறாள் என் காதல் மனைவி? உன்னை பார்த்த நாள் முதலாகவே மனதின் ஓரத்தில் ஓர் எண்ணம். உன் அடர்ந்த கூந்தலை இப்படி முழுவதுமாக படர விரித்து விட்டு அந்த கார்மேகங்களுங்கு இடையே உன் முகம் முழுநிலவாக ஜொலிப்பதைக் காண மிகவும் ஆவலுடன் காத்திருந்தேன்!”

சற்று முன்பிருந்த நெருடல் மறைந்து மனம் கணவனின் ரசனையிலும், காதலிலும் கட்டுண்டு மயங்கத் துவங்க, அவன் அடுத்த கட்டத்திற்கு தாவினான்.

“இத்தனை நாள் ஆசைக்கு வெகுமதியாக தழைய கட்டிய புடவையுடன் வேறு இந்த தரிசனம்…” என்றவனின் இடதுகரம் மென்மையாக அவள் இடையை மறைத்த புடவையின் மீது பட்டும்படாமல் வருட, அட்சயாவின் மூச்சுக்காற்று சீரற்று வெளியேறத் துவங்கியது.

“உனக்கு பூக்கள் பிடிக்குமா?” என்று வினவியவனின் முகம் அடுத்து அவள் பின்னந்தலையில் புதைந்து ஆழமாக மூச்செடுக்க, விரல்களை இறுக்க மூடிக்கொண்டு தன்னுணர்வோடு போராடினாள் அட்சயா.

“பட்… ஐ லைக் இட்!” என்று முணுமுணுத்தான்.

தொண்டையில் இருந்து எந்த ஒலியும் எழும்ப மறுத்து அவளிடம் தர்ணா செய்ய, ரிச்சர்ட்டின் கரம் மெல்ல கீழிறங்கி அவளின் கைவளையல்களை மெல்லமாக வருடியது. ஒன்றும் செய்யவில்லை அவன், வளையல்களை மட்டும் மெதுவே மேலேற்றி கீழே இறக்கி விட்டதிலேயே உடல் முழுவதும் சிலிர்த்து அடங்கி தவிக்கத் துவங்க, அதற்கு மேலும் தன்னை சமாளிக்க முடியாமல் திணறியவள் சட்டென்று திரும்பி அவனை இறுக கட்டிக்கொண்டாள்.

அவளை மேலும் தன்னோடு சேர்த்து இறுக்கிக் கொண்டவன் அவள் முகத்தை நிமிர்த்தி விழியோடு விழி உறவாடவிட்டு, “ஐ லவ் யூ அன்ட் ஐ மேட்லி நீட் யூ!” என்றான் தீராத தாபத்துடன்.

அதில் தெரிந்த காதல், ஏக்கம், மோகம் அனைத்தும் அவளை அசைத்துப் பார்க்க, மெல்ல எம்பியவள் விழி மூடி அவன் இதழோடு தன் இதழை பொருத்தி மென்மையாய் அழுத்தினாள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *