*42*

 

“ஹேய்… எதற்காக உனக்கு இவ்வளவு கோபம் வருகிறது? நான் எதையுமே வேண்டுமென்றே கேட்கவில்லை, உன்னுடைய திட்டத்தை தெரிந்துக் கொள்ளலாம் என்று தான் விவரம் கேட்கிறேன். திருமணத்தை தள்ளிப் போடுவதால் நீ எப்படி லாபமடைவாய் என்று யோசித்ததன் விளைவு தான் அந்த கேள்வி!” என ரிச்சர்ட் விளக்கவும் சற்றே அமைதியானாள் அட்சயா.

“லாபம் எப்படியா? முதல் விஷயம் திருமணம் தள்ளிப் போகும்…”

தனக்குள் ஊற்றெடுக்கும் நகையை அடக்கியபடி, “ம்… இரண்டாவது?” என அக்கறையாக கதை கேட்டான்.

“இரண்டாவது… நீங்கள் கேலி செய்தது போலெல்லாம் நான் கன்னியாஸ்திரி ஆகி விடமாட்டேன்…”

“நான் தான் கேலி செய்யவில்லை என்று சொல்லி விட்டேனே, ஆங்… சரி அப்புறம்?” என்றான் இடையிட்டு.

“நீங்கள் சொன்னாலும் நான் நம்பமாட்டேன், நீங்கள் கேட்டது அப்படித்தான்!” என்று எரிச்சலுடன் மொழிந்தாள் அட்சயா.

‘யப்பா… இவள் வாயை மட்டும் என்றைக்குமே அடக்க முடியாது என்பதற்கு இதுவே நல்ல சான்று!’ என இடவலமாய் தலையசைத்த ரிச்சர்டிற்கு ஆனாலும் அவளுடன் பேசுவது சுவாரசியமாக தான் தோன்றியது.

“சரி அதைவிடு, நீ கதையை சொல்லு!”

“என்ன கதையா?” என்று அட்சயா எகிறவும் தான் நாக்கை கடித்த ரிச்சர்ட், ஐயோ… என தலையில் கை வைத்துக் கொண்டான்.

“யூ இடியட்… நான்… நான் என்ன கதையா சொல்கிறேன்? முதலில் இருந்தே உங்கள் பேச்சு சரியில்லை!” என பட்டென்று லைனை கட் செய்து விட்டாள்.

“ஏய்… இல்லை…” என்ற இவனுடைய மறுப்பு அவளை சென்றடையவே இல்லை.

‘மை காட்… ரிச்சர்ட் உனக்கு அவளிடம் எப்படி பேச வேண்டும் என்பது கூட சரியாக தெரியமாட்டேன் என்கிறது எப்படி தான் அவளை காலம் முழுக்க சமாளிக்கப் போகிறாயோ தெரியவில்லை?’ என தவிப்புடன் தலைமுடியை அழுந்தக் கோதியவன், சில நொடிகளை மட்டும் கரைத்து விட்டு அவளுக்கு அழைப்பு விடுத்தான்.

முழு ரிங் போய் கட்டானதே தவிர அவள் எடுக்கவில்லை. எதிர்ப்பார்த்தது தான் என பெருமூச்சு விட்டவன், இருந்தாலும் எப்படி அமைதியாக இருப்பது என மீண்டும் முயன்றான்.

இம்முறை உடனே எடுத்து, “ஹலோ!” என்றாள்.

“அட்சயா… நான்…!”

“ஹைய்யோ… இது உங்கள் நம்பரா? சேவ் பண்ணி வைக்காததால் வேறு யாரோ திரும்ப திரும்ப ட்ரை செய்கிறார்களே… எதுவும் முக்கியமான விஷயமோ என்று உடனே எடுத்து விட்டேன். முதலில் உங்கள் நம்பரை பிளாக் பண்ண வேண்டும்!” என அவள் படபடக்க, திகைத்தான் ரிச்சர்ட்.

ஆனால் அதெல்லாம் ஓரிரு நொடிகள் தான் அவளை சமாளிக்க வேண்டுமே என மின்னல் வேகத்தில் யோசித்தவன், “பிளாக் பண்ணு… நாளை காலை விடிந்ததும் முதல் வேலையாக கிளம்பி நேராக வந்து உன் வீட்டிலேயே உன்னை சந்திக்கிறேன்!” என்று அறிவித்தான்.

“எ… என்ன? என்… என் வீட்டிற்கு வருவீர்களா?” என்று திணறினாள் அட்சயா.

‘அப்பா… முதல் முறையாக திக்குகிறாள் விடாதே ரிச்சர்ட், அப்படியே பிடித்துக் கொள்!’

“ஆமாம்… பின்னே நான் வேறென்ன செய்வது? உன்னுடன் பேச வேண்டுமென்றால் நான் உன் வீட்டிற்கு தானே வந்து ஆக வேண்டும், இல்லை… ஹாஸ்பிடல் ஓகேவா?” என்று கூலாக கேட்டான்.

“என்ன விளையாடுகிறீர்களா நீங்கள்?” என்றாள் இவள் கோபமாக.

“இல்லை… சீரியசாக பேசுகிறேன். எனக்கு உன்னுடன் பேச வேண்டும் அது போனில் என்றாலும் சரி அல்லது நேரில் என்றாலும் சரி!”

“ஏன்? நீங்கள் ஏன் என்னுடன் பேச வேண்டும்?”

“நீ எதற்காக எனக்கு கால் செய்தாய்?” எனவும் கப்சிப்பென்று அமைதியானாள்.

“பதில் சொல்!” என்றான் அதிகாரமாக.

உள்ளே தோன்றும் புகைச்சலை வெளியேற்ற இயலாமல், “நான்… நான் திருமணம் வேண்டாமென்று பேசுவதற்காக அழைத்தேன்!” என்றாள் எடுப்பாக.

“ம்… எனக்கும் அப்படித்தான், திருமணம் வேண்டுமென்று பேசுவதற்காக உன்னிடம் பேச முயல்கிறேன்!”

‘திருமணம் வேண்டுமா?’ என ஒரு கணம் வாயை பிளந்தவள், ‘நான் வேண்டாம் வேண்டாமென்று இத்தனை தூரம் சொல்கிறேன், இந்த லூசுபக்கி என்ன திருமணம் வேண்டும் என்கிறான்?’ என்று புருவம் சுளித்தாள்.

“என்ன சத்தத்தையே காணோம்?”

உடனே வெகுண்டவள், “நீங்கள் என்ன உங்கள் இஷ்டத்திற்கு பேசுகிறீர்கள்? நான் திருமணம் வேண்டாமென்று சொல்கிறேன்…” என ஆரம்பிக்கும் பொழுதே இவன் இடையிட்டு, “நான் வேண்டுமென்று சொல்கிறேன் அவ்வளவு தான்!” என்று முடித்தான்.

“என்ன மாற்றி மாற்றிப் பேசுகிறீர்கள்? முதலில் சரி என்பது போல பேசினீர்களே…”

“ஆமாம்… முதல் தடவை பேசும் பொழுதே உனக்கு பிடிக்காததை பேசி கோபப்படுத்த வேண்டாமென்று நினைத்தேன். நீதான் எதைப் பேசினாலும் கோபப்படுகிறாய், அப்புறம் எதற்கு சம்பிரதாயம் பார்த்துக் கொண்டு!” என்றான் ரிச்சர்ட் அசட்டையாக.

ஒரு கணம் குழம்பியவள் தலையை உலுக்கி கொண்டு, “இப்பொழுது இறுதியாக என்ன தான் சொல்கிறீர்கள்?” என்றாள் முகத்தை சுளித்தபடி.

“அதாவது… என்னுடைய தெளிவான பதிலை எதிர்பார்க்கிறாய் அப்படித்தானே?”

“ஆமாம்ம்ம்ம்!” என அளக்கதிகமாகவே வார்த்தையை அழுத்தினாள்.

“ஓகே… தெளிவாக சொல்கிறேன், நன்றாக கேட்டுக்கொள். ஆனால் மறுபடியும் மறுபடியும் என்னிடம் நீ கேட்க கூடாது!”

‘என்ன ஓவராக தான் அலட்டுகிறான்?’ என உதட்டை சுழித்து பழித்தாள்.

“என்ன?” என்று குரல் கொடுத்தான்.

‘ஷ்… அப்பா சாமி…’ என பெருமூச்சு விட்டவள், “சரி!” என்றாள்.

“ம்…” என்றவனுக்கு அதுவரை இருந்த கம்பீரம் தொலைந்து லேசான தயக்கம் பிறக்க, “என்ன இப்பொழுது நீங்கள் அமைதியாகி விட்டீர்கள்?” என்றாள் அட்சயா நக்கலாக.

“ம்?” என்று விட்டு கமறிய தன் குரலை மெல்ல செறுமி சரி செய்தவன், “ஐ லவ் யூ!” என்றான் சாதாரணமாக தன்னை மீறிப் பிறந்த ரகசிய முறுவலுடன்.

‘என்னது லவ்வா?’ என அதிர்ந்து விழிகளை விரித்தவள் அவனுடைய சொல்லை மீறி, “என்ன?” என்று கூவினாள்.

“ப்ச்… நான் மறுபடியும் கேட்க கூடாது என்று சொன்னேன் அல்லவா?” என ரிச்சர்ட் அதட்ட, “அடச்சை…” என்று அவள் வாய்க்குள் முனகுவது இங்கே அவன் செவிகளில் தெளிவாக விழுந்து மனதில் உல்லாசத்தை தோற்றுவித்தது.

‘ஐயோ… என்ன இவன் பொசுக்கென்று ஐ லவ் யூ சொல்லி விட்டான்? இப்பொழுது நான் என்ன செய்வது?’ என தனக்குள் புலம்பியவள் தன்னை காதலிக்கிறேன் என்று பேத்திக் கொண்டு தன் பின்னால் கல்லூரியில் சுற்றியவனை நினைவடுக்கில் மீட்டு அந்த கோபத்தையும் ஒட்டுமொத்தமாக சேர்த்து இங்கே இவனிடம் எகிறலாம் என பலவிதமாக முயன்றாள்.

ஆனால் இவள் அந்த சம்பவங்களுக்கு உரிய முக்கியத்துவம் கொடுக்காமல் வைத்திருந்ததாலோ என்னவோ தற்பொழுது அதை நினைத்து பார்த்தால் எந்தவிதமான எதிர்மறை உணர்வும் சுத்தமாக தோன்றவில்லை.

‘அடக் கடவுளே… அவனிடம் முன்பு சாதாரணமாக தோன்றிய கோபம் கூட இப்பொழுது வரமாட்டேன் என்கிறதே… அவனை ஏதாவது திட்டுடி, வீணாய் போனவளே… அவன் நிச்சயம் உன்னை தப்பாக நினைக்கப் போகிறான்!’ என்று தனக்குள் நொந்தபடி பதட்டமாய் இதற்கும் அதற்கும் நடக்க ஆரம்பித்தாள்.

நிமிடங்கள் கரைந்தும் இருபக்கமும் அமைதியே நிலவ சுதாரித்த அட்சயா தன் நடைப்பயிற்சியை தற்காலிகமாக நிறுத்தி விட்டு, “ஹலோ!” என மெல்ல குரல் கொடுத்தாள்.

அடுத்த நொடி அவனிடமிருந்து பதிலுக்கு பிறந்த ஹலோவில் தன் இதயத்துடிப்பு எகிறுவதை உணர்ந்தவள் அதை சமன்படுத்த மெல்ல கட்டிலில் அமர்ந்தாள்.

“நீங்கள் இன்னும் லைனை கட் செய்யவில்லையா?”

“எப்படி கட் பண்ண முடியும்? நாம் இன்னும் பேசி முடிக்கவில்லையே…”

“இன்னும் என்ன இருக்கிறது பேசுவதற்கு?” என்று கேட்டவளின் மைன்ட் வாய்ஸோ, ‘அதுதான் நீ பேச வேண்டியதை எல்லாம் நன்றாக பேசி விட்டாயேடா!’ என அலுத்துக் கொண்டது.

“அப்பொழுது உனக்கு ஓகேவா?” என்று மெதுவாக கேட்டான் ரிச்சர்ட்.

“எ… என்ன ஓகே?” எனறாள் மீண்டும் உள்ளூர பிறந்த படபடப்புடன்.

“நான் சொன்னதற்கு நீ எதுவும் மறுப்பு சொல்லவில்லையே… இனி பேசுவதற்கு என்ன இருக்கிறது என்று கேட்டதால் ஒருவேளை பதில் தயாராகி விட்டது போலிருக்கிறது என பதில் கேட்கிறேன்!”

“ம்ஹும்…” என அவசரமாக மறுத்து தலையசைத்தாள் அட்சயா.

“எதற்கு ம்ஹும்?”

“எல்லாவற்றிற்கும் ம்ஹும் தான்… நான் கல்யாணமே வேண்டாம் என்கிறேன், நீங்கள் என்னடாவென்றால் கூலாக ஐ லவ் யூ சொல்கிறீர்கள்?” என்று மீண்டும் முருங்கை மரம் ஏற ஆரம்பித்தாள்.

‘ஆஹா… மறுபடியும் ஃபுல் பார்முக்கு வருகிறாளே…’

“லுக் அட்சயா… நீ மீண்டும் மீண்டும் பேசினதையே பேசிக் கொண்டிருக்கிறாய், ஐ ஃபீல் டயர்ட் நவ். என் வரை இதுதான் பதில், நான் தெளிவாக இருக்கிறேன். எனக்கு உன்னை பிடித்து இருக்கிறது திருமணம் செய்துக் கொள்ள ஆசைப்படுகிறேன். இதற்கு மேல் உன் தரப்பு விவாதமாக நீ எதையும் நியாயப்படுத்தி எனக்கு திருப்தி அளிக்கின்ற வகையில் கூறினால் நான் நிச்சயமாக எவ்வித மறுப்பும் சொல்லாமல் அதை அப்படியே ஏற்றுக் கொள்கிறேன். அப்படியில்லை என்றால்…” என நிறுத்தி ஒரு ஆழ்ந்த நெடிய மூச்சை வெளியேற்றியவன், “இந்த திருமணத்தை நிறுத்துவதில் நான் உனக்கு எவ்விதத்திலும் உதவ முடியாது. நன்றாக யோசித்து முடிவெடு, நீ எப்பொழுது வேண்டுமென்றாலும் என்னை கான்டாக்ட் பண்ணலாம் அது அலைபேசியில் என்றாலும் சரி அல்லது நேரில் என்றாலும் சரி. ஓகே… குட்நைட்!” என தொடர்பை துண்டித்தான்.

‘என்ன ஆளாளுக்கு என்னை நன்றாக யோசிக்க சொல்கிறார்கள்?’ என்று பல்லைக் கடித்தவள் மொபைலை தூக்கி எறிந்து விட்டு தலையணையில் மூச்சு முட்டும்படி முகம் புதைத்து அதோடு தன் ஆத்திரத்தையும் புதைக்கப் பார்த்தாள்.

இங்கே ரிச்சர்டின் மனநிலை என்னவென்று அவனுக்கே புரியவில்லை… ஏதோ ஒரு வேகத்தில் பதிலுக்கு பதில் என பேசும் பொழுதே சட்டென்று பேச்சோடு பேச்சாக அவளிடம் காதலையும் சொல்லி விட்டான். சற்று நேரம் அவள் அமைதியாக இருந்தது ஒருப்பக்கம் நம்பிக்கையை தோற்றுவிக்கும் பொழுதே சடாரென்று மறுக்கவும் ஆரம்பித்து விட்டாள் அவள். மேலும் எதையாவது பேசி இருவருக்கும் ஏதாவது மனத்தாங்கல் ஆகிவிடப் போகிறது என்று தான் வேகமாக பாதியில் பேச்சை கத்தரித்து விட்டான். பார்ப்போம்… இன்று பேசியதற்கான ரிசல்ட் எந்த திசையில் இருந்து எப்படி வருகிறது என்று என தளர்ந்து படுத்தான்.

இரண்டு நாட்களாக தூக்கி வைத்த முகத்துடன் சுற்றுபவளிடம் எதையும் கேட்க தயங்கி கொண்டே வீட்டில் உள்ளோர் அமைதி காக்க அட்சயாவிற்கு தான் உள்ளும், புறமும் ஏனென்று தெரியாமல் ஒருவித எரிச்சலாகவே இருந்தது.

எவர் கூறியது போலவும் அவளுக்கு யோசிக்கவே பிடிக்கவில்லை, யோசித்தால் நியாய தராசு அவன் பக்கம் தான் சாய்கிறது. அனைவருமே… ஏன் அவனுமே கூட இத்திருமணத்திற்கு எதிராக கேட்கும் எந்த ஒரு வேலிட் பாயின்டும் அவளிடம் சிக்க மாட்டேன் என்கிறது. இதில் இன்னொன்று அவளுக்கு தன் மீதே கடுப்பை வரவழைப்பது என்னவென்றால் எத்தனை முயன்றாலும் அவன் மீது வெறுப்பிற்கு பதில் கோபம் மட்டும் தான் அவளுக்கு வருகிறது.

***

“மேடம்!”

“ம்… என்ன அவ்வளவு தானா முடிந்துவிட்டதா? இனி யாருமில்லை என்றால் நாம் உணவருந்த கிளம்பலாம்!” என்று தனது உதவியாளரிடம் வினவினாள் அட்சயா.

நேரம் மதியம் ஒன்று நாற்பது.

“இல்லை மேடம்… இன்னும் ஒருவர் இருக்கிறார் ரொம்பவும் வித்தியாசமாக!” என்றாள் அவள் நமட்டுச் சிரிப்போடு.

தன் வேலையில் கவனமாக இருந்தவள், “என்ன வித்தியாசம்? இதுவரை கேள்விப்படாத வியாதியோடு எதுவும் வந்திருக்கிறாரா?” என்றாள் அட்சயா கேலியாக.

“அதெல்லாம் இல்லை… சாதாரண விஷயம் தான். ஆனால் மனிதர் அரைமணி நேரமாக அறை முன் அமர்ந்துக் கொண்டு தனக்கு பின்னால் வந்தவர்கள் அனைவரையும் முன்னால் அனுப்பி கொண்டிருக்கிறார். ஏன் சார் நீங்கள் ஸ்கேன் பண்ண வேண்டாமா நேரமாகவில்லையா என்றால், பரவாயில்லை எனக்கு நேரமிருக்கிறது வந்திருப்பவர்களில் அவசரமானவர்கள் முதலில் பார்த்து செல்லட்டும் என்கிறார். சும்மாவே நம் மக்கள் எதற்கும் முந்த நினைப்பவர்கள் இதில் மட்டும் சும்மா இருப்பார்களா என்ன? உடனே எல்லாம் முதலில் வந்து பார்த்து சென்று விட்டனர்!” என்றாள் நகைச்சுவையாக.

“ம்… ம்… சரி அவரை வரச்சொல்லுங்கள். அவர் பெயரென்ன என்ன கம்ப்ளைன்ட்?” என்று அதை பதிவேற்றம் செய்ய அட்டவனையை தயார் செய்தாள்.

“பெயர் ரிச்சர்ட், பிரச்சினை…” என அவள் சொல்வதற்குள் அவளுடைய கையில் இருந்த பைலை வேகமாக பிடுங்கிய அட்சயா பதற்றத்துடன் விழிகளை அதில் ஓடவிட்டாள்.

ரிச்சர்டின் பெயரும், வயதும் அவன் தான் என்பதை உறுதிப்படுத்த, சிறுநீரகத்தில் கல் உருவாகியிருக்க வாய்ப்புள்ளது என்கிற மருத்துவரின் அறிக்கையை படிக்கவும் தான் உண்மையை உணர்ந்தாள்.

அவனுடைய நிதானமும், அறிக்கையும் அவன் உடல்நிலையை படம் போட்டு காட்ட, “இடியட்!” என்று முணுமுணுத்தவள், காட்… தற்பொழுது எதிரில் இருப்பவளை எப்படி சமாளிப்பது என இதழை கடித்தாள்.

அட்சயாவின் பதற்றம் கண்டு குழம்பியவள், “என்ன மேடம்?” என்று விசாரித்தாள்.

“ஆங்… ஒன்றுமில்லை, அவரை உள்ளே வரச்சொல்லுங்கள்!” என்று கைப்பிடியில் பைலை இறுக்கினாள்.

அவள் முகத்தை விழிகளால் அளந்தபடி கதவை நோக்கி நகர்ந்தவளை இடையில் நிறுத்தியவள், “அப்புறம்… நீங்கள்… ம்… நீங்கள் உணவருந்த செல்லுங்கள். நான் இங்கே பார்த்து கொள்கிறேன்!” என்றாள் விழிகளை மானிட்டரில் அலைய விட்டபடி.

“ஆனால் ரிப்போர்ட் எழுத வேண்டுமே…”

“ம்… நானே எழுதிக் கொள்கிறேன்!” என்று அடுத்து பைலில் பார்வையை நிலைநிறுத்திக் கொண்டாள்.

“பட் மேடம்… பேஷன்டை மானிட்டர் செய்யும் பொழுது எப்படி நீங்களே ரிப்போர்ட் எழுத முடியும்?”

“ப்ச்… சிஸ்டர், அதை நான் பார்த்துக் கொள்கிறேன். நீங்கள் முதலில் கிளம்புங்கள்!” என்றாள் அட்சயா சலிப்போடு.

“அவரை உள்ளே அனுப்பிவிட்டு தானே நான் கிளம்ப வேண்டும்?” என்று செவிலியர் தலைசரித்து வினவ, இவள் விறைப்புடன் நிமிர்ந்து அமர்ந்து அவளை நேராக நோக்கினாள்.

“இதோ கிளம்பி விட்டேன்!” என்று அவள் வெளியேறவும், “பாஸ்டர்ட்… மானத்தை வாங்கி விட்டான்!” என பல்லைக் கடித்தபடி தன்னெதிரே இருந்த டேபிளை மெல்ல குத்தினாள் அட்சயா.

2 thoughts on “Poojaiketra Poovithu 42 – Deepababu”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *