*41*

 

தனது அறைக்குள் நுழைந்த அட்சயா கையில் இருந்த ரிச்சர்டின் கார்டை கோபமாக வீசியெறிந்து விட்டு நெஞ்சில் பொருமலுடன் நடக்க ஆரம்பித்தாள்.

‘வர வர அனைவரும் என்னை ரொம்ப தான் கார்னர் செய்கிறார்கள்… இவர்களிடம் ஒத்துழைக்க மறுத்து எதிர்த்து பேசுகிறேன் என்று இந்த அம்மா கைகேயி மந்திரை போல சதி செய்து மாமா மூலம் என்னை மடக்கப் பார்க்கிறார்கள்!’

சில அடி தூரம் நடந்தவளின் மூளையில் திடீரென்று அதிமுக்கியமான கேள்வி ஒன்று பிறக்க, ‘ஏன் எனக்கு திருமண ஆசையே தோன்ற மாட்டேன் என்கிறது?’ என்ற யோசனையுடன் நிலைக்கண்ணாடியின் முன் சென்று நின்று தன்னை மேலிருந்து கீழ்வரை ஆராய்ந்தாள்.

மாநிற தேகமென்றாலும் உடற்பயிற்சியின் உபயத்தால் ஐந்தடி உயரத்தில் அதற்கேற்ற அளவான உடலோடு பார்ப்போரை கவரும் வண்ணம் இருந்தாள். முப்பதை நெருங்கப் போகிறாள் என்கிற எண்ணமே பார்க்கும் எவருக்கும் தோன்றாது.

முழுநிலா போன்ற வட்ட முகம், பிறைநிலா போன்ற நெற்றி, வில்லென வளைந்த புருவங்கள், துறுதுறுவென்று அலையும் அகன்ற கெண்டை விழிகள். கூர் நாசி, லிப்கேரில் மினுமினுக்கும் வடிவான இதழ்கள்… சட்டென்று தலையை குலுக்கி விட்டுக் கொண்டவள் வேகமாக அங்கிருந்து நகர்ந்து படுக்கையில் அமர்ந்தாள்.

‘ச்சீய்… என்ன இது புது பழக்கம்? என்னை நானே கண்ணாடியில் இப்படி வெறித்துப் பார்க்கின்றேன்!’

தன்னை அலங்கரித்து கொள்வதில் கூட என்றும் அவள் பெரியதாக ஆர்வம் காட்டியதில்லை. பார்ப்பதற்கு எவர் கண்ணையும் உறுத்தாதபடி கௌரவமாக உடையணிய வேண்டும் என எப்பொழுதும் தனக்கு பிடித்தமான காட்டன் சல்வார், குர்தி வகைகளை மட்டுமே அணிபவள் கைகளில் அடங்க மறுக்கும் கறுத்து அடர்ந்து விரிந்திருந்த கூந்தல் சுருள்களை சிம்பிளாக ஏதோவொரு க்ளிப்பிலோ, ஹேர் பான்டிலோ அடக்கி விடுவாள். அவ்வளவு தான் தனக்கான அலங்காரத்திற்கு என்று அவள் செலவிடும் நேரம். என்றாவது அம்மாவோ, பாட்டியோ சத்தம் போட்டால் புடவை, பின்னல், ஒற்றை ரோஜா என அவர்களை சற்று சமாதானப்படுத்துவாள்.

இன்று தன் மாமா, அத்தையின் வரவால் அவள் மனதில் பெரும் குழப்பம் எழுந்தது. தனது இத்தனை ஆண்டுகால பிடிவாதத்தை பொறுமையாக எண்ணிப் பார்த்தாள். அவளுடைய காரணம் அவளுக்கே சற்று வறட்டு பிடிவாதமாக தான் தோன்றியது.

மனதை முழுவதும் பாதிக்காத ஒருவனுக்காகவா நான் இவ்வாறு எல்லாம் நடந்துக் கொள்கிறேன்?

இல்லையே… அவன் கூறிய காரணம் தான் என் முசுட்டுத்தனத்தை தூண்டிவிட்டு விட்டதே தவிர அவன் முகம் கூட எனக்கு கிட்டத்தட்ட மறந்துவிட்டது. ப்ச்… பணக்காரன் என்றால் மட்டும் கோபம் வருகிறது. முட்டாள்தனம் தான் இருந்தாலும்… என்று கால்களை மடக்கி அதில் தாடையை பதித்து நேர்எதிரே கண்ணாடியில் தெரிந்த தன் பிம்பத்தை கூர்ந்தாள்.

இதில் இருந்து தப்பிக்க ஒரே வழி அந்த ரிச்சர்ட்டை பிடிப்பது தான்… இவனுக்கு எதற்காக இந்த வேண்டாத வீண் வேலை? உலகில் கலகலவென்று பழகும் பெண்களுக்கா பஞ்சம்? என்னை போய் பிடித்திருக்கிறது என்று சொல்லி இப்படி மாட்டிவிட்டு விட்டானே…

அருந்ததி விஷயத்தில் எல்லோர் மனதிலும் அவன் ஒரு தியாகி போல உருவகப்படுத்தப்பட்டு விட்டான். அவன் நல்லவன், வல்லவன் என்று எப்படியாவது அவனிடம் என்னை மாட்டிவிட வேண்டுமென்று அனைவரும் பரபரக்கிறார்கள் என விரல் நகம் கடித்தாள்.

நான் சொன்னது ஏதாவது யாருக்காவது ஞாபகம் இருக்கிறதா? என் மனதில் பாதிப்பு ஏற்படுத்தாதவனை நான் திருமணம் செய்துக் கொள்ள மாட்டேன் என்று சொன்னேனே… அதைப்பற்றிய கவலை யாருக்குமே இல்லை என முகத்தை சுளித்தபடி கவிழ்ந்து படுத்தவள் அடுத்து என்ன செய்வது என்று புரியாமல் இரு கைகளாலும் தலையை இறுகப் பற்றிக் கொண்டாள்.

அட்சயாவின் ரத்த நாளங்கள் முழுவதும் சூடேறி கொதிக்க ஆரம்பித்தது. எவ்வளவு யோசித்தும் ரிச்சர்டிடம் எதுவும் குறைக்காண முடியவில்லை. அப்படி ஏதாவது இருந்தாலாவது அதைக் காரணம் காட்டி திருமணத்தை தடுக்கலாம் என்று உருண்டு புரண்டவள் மீண்டும் எழுந்தமர்ந்தாள்.

அவகாசம் நாட்கணக்கில் குறைந்து, கெடுபிடிகள் அதிகமானது எல்லாம் அவனால் தான் என முகம் சிவந்தவள், அவனை… என்று பல்லைக் கடித்தபடி அவனுடைய கார்டை சுற்றுமுற்றும் தேட எதிரில் உள்ள நாற்காலிக்கு அடியில் அது சமத்தாக கிடந்தது.

கட்டிலிலிருந்து இறங்கி சென்று அதை எடுத்தவள் ரிச்சர்டின் மொபைல் நம்பரை தனது அலைபேசியில் ஃபீட் செய்தாள். டயல் செய்யும் முன் சற்றே புருவம் சுருங்க நிமிர்ந்து நேரம் பார்த்தாள்.

மணி பதினொன்றாக இன்னும் பத்து நிமிடங்களே பாக்கி… இதழ் கடித்தவளின் புருவங்கள் அடுத்த நொடி வீம்புடன் நெறிந்தது. என் தூக்கத்தை கெடுத்தவனின் தூக்கத்தை பதிலுக்கு கெடுக்காமல் விடக்கூடாது என உடனடியாக டயல் செய்தாள்.

அவன் எடுக்க எப்படியும் தாமதாகும் என இவள் அலட்சியமாய் நினைத்திருக்க, ஒரே ரிங்கில் எடுத்து ஹலோ என்ற தனது கம்பீரமான குரலால் இவளை திணறடித்தான் ரிச்சர்ட்.

தன் வாழ்நாளில் அட்சயா இதுவரை உணராத சிறுபடபடப்பு, சட்டென்று அவளுடைய நெஞ்சத்தை சூழ பேசுவதறியாது தடுமாறினாள் அவள்.

முன்தினமே சித்துவிடம் அட்சயாவின் அலைபேசி எண்ணை தனியாக வாங்கி தனது கைபேசியில் பதிவு செய்து வைத்திருந்த ரிச்சர்ட் அவளின் அமைதியில் குழம்பிப் போனான்.

“ஹலோ… சாரி, நீங்கள் பேசுவது எதுவும் எனக்கு சுத்தமாக காதில் விழவில்லை!” என்றான்.

விஷயம் கேள்விப்பட்டவுடன் அவளிடமிருந்து நிச்சயம் அழைப்பு வரும் என எதிர்பார்த்து காத்திருந்தவனுக்கு அவளுடைய அமைதி வியப்பை உண்டாக்கியது. கால்லை பிக்கப் செய்த மறுநிமிடம் படபட பட்டாசாய் பொரியப் போகிறாள் என்று நினைத்திருக்க அவள் அமைதியாக இருந்தது ஒருவேளை லைன் சரியில்லையோ என்கிற சந்தேகத்தை இவனுக்கு தோற்றுவித்து விட்டது.

அவன் குரலில் தன்னை மீட்ட அட்சயாவின் இதழ்கள் இளக்காரமாய் வளைந்தன.

‘ஹும்… நான் இன்னும் பேசவேயில்லை, அதற்குள் அவனுக்கு காது வேறு கேட்கவில்லையாம்!’

“நான் இன்னும் பேசவே ஆரம்பிக்கவில்லை!”

“என்ன?” என்று தேவைக்கதிகமாக வியந்தவன், “நிஜமாகவா? என்னால் நம்பவே முடியவில்லை. உன்னால் இந்த அளவிற்கு பேசாமல் அமைதியாக இருக்க முடியுமா என்ன?” என்றான் ஆச்சர்யமாக.

அடுத்த நொடி, “என்ன?” என்று அவள் அதட்ட லேசாக நகைத்தவன், “ஆமாம்… நாம் இருவரும் பேசி முடிப்பதற்குள் எத்தனை முறை என்ன என்கிற வார்த்தையை சொல்லப் போகிறோம் என ஏதாவது போட்டி நடக்கிறதா என்ன? மாற்றி மாற்றி அதையே சொல்கிறோம், பார்… இப்பொழுது கூட நான் மீண்டும் சொல்லி விட்டேன்!” என முறுவலித்தான்.

“எனக்கு சுத்தமாக சிரிப்பு வரவில்லை!” என்று உதட்டை பிதுக்கினாள் அட்சயா.

“ஆஹான்… அப்படியென்றால் உனக்கு ரசனையில்லை என்று அர்த்தம்!” என்றான் ரிச்சர்ட் மேலும் இதழ்கள் விரிய.

“ஹும்… அப்படிப்பட்ட ரசனையே எனக்கு தேவையில்லை!”

‘ஹப்பா… மீண்டும் பழையபடி இந்த வாயடிக்கிறாள்… நடுவில் ஏதாவது ஞாபகமறதி வந்திருக்குமோ!’ என தனக்குள் ஆராய்ச்சி நடத்தியவன், “ஓகே… சாய்ஸ் ஈஸ் யுவர்ஸ்!” என்று சமாதானமானான்.

ரிச்சர்டிடம் இருந்து வந்த சாய்ஸ் ஈஸ் யுவர்ஸ் என்கிற வார்த்தைகள், தான் பேச வேண்டியதை அட்சயாவிற்கு நினைவூட்ட சிலிர்த்துக் கொண்டு நிமிர்ந்து அமர்ந்தவள் அவனிடம் படபடவென்று பேசினாள்.

“ஆமாம்… யாரை கேட்டு என்னை திருமணம் செய்து கொள்ள சம்மதம் என்று மாமா, அத்தையிடம் நீங்கள் சொன்னீர்கள்?” என்றாள் கோபமாக.

“யாரை கேட்க வேண்டும்?” என்றான் இவன் திருப்பி நிதானமாக.

“என்னை கேட்க வேண்டும்!” என்றாள் இவள் வேகமாக.

“ஓஹோ… அவர்கள் என் விருப்பத்தை பற்றி என்னிடம் கேட்கும் பொழுது, நான் ஏன் உன்னை கேட்டு பதிலளிக்க வேண்டும்?”

ஒருகணம் அவன் பேசும் மொழி அறியாது ஞே… என விழித்தவள், “என்ன?” என்று குழப்பத்துடன் வினவினாள்.

“என்ன புரியவில்லையா? சரி தெளிவாகவே கேட்கிறேன். அவர்கள் என் விருப்பத்தை தானே கேட்டார்கள்?”

“ஆமாம்…”

“அப்பொழுது நான் என் மனதிலிருப்பதை சொல்ல வேண்டுமா அல்லது உன்னை கேட்டு பதில் சொல்ல வேண்டுமா?”

“உங்கள் மனதிலிருப்பதை தான் சொல்ல வேண்டும்!”

“ஹாங்… அதைதானே நானும் சொன்னேன். இதில் நீ ஏன் என்னை கோபித்துக் கொள்கிறாய்?” என்று மடக்கினான்.

அவனுடைய பதிலில் திகைத்தவள் பலமுறை ஆராய்ந்தும் அவன் சொல்லில் எதுவும் தவறு இருப்பதாக இவளுக்கு தோன்றவில்லை. மூளை தன் செயல்திறனை இழந்து மழுங்கியிருப்பது போன்ற உருவகமே அவளுக்கு தோன்றிவிட்டது.

‘நோ… அதெப்படி? நான் பலவற்றை யோசித்து அவன் மீது தவறு என்று தானே கோபம் கொண்டு அழைத்தேன். பிறகெப்படி அவன் செய்தது அனைத்தும் தவறே இல்லையென்று நியாயமாகும்?’

“இல்லை… நீங்கள் என்னவோ என்னை குழப்ப பார்க்கிறீர்கள்!” என்று வேகமாக அவனிடம் மறுத்தாள்.

தலைக்கு மேல் வலது கரத்தை மடக்கி வாகாக பின்னால் சாய்ந்து அமர்ந்தவன், “என்னம்மா… இவ்வளவு தெளிவாக விளக்கி உன் வாயினாலேயே உனக்கு உண்மையை புரிய வைத்திருக்கிறேன். அப்புறமும் நான் உன்னை குழப்ப பார்க்கிறேன் என்று சொன்னால் என்ன அர்த்தம்?” என்று வினவினான்.

சில நொடிகள் அமைதி காத்தவளுக்கு அவன் கூற்றில் பொய் இருப்பதாக தெரியவில்லை. தேவையில்லாமல் அநாவசியமாக ஏன்டா அவனுக்கு போன் செய்தோம் என்று தான் தோன்றியது.

“என்ன அமைதியாகி விட்டாய்?”

“வேறென்ன செய்ய சொல்கிறீர்கள்? நான் பேச வந்த விஷயமே தவறு என்பது போலல்லவா நீங்கள் பேசுகிறீர்கள். அத்தை, மாமா பேசும் பொழுது ஒரே வார்த்தையில் இல்லை… எனக்கு விருப்பமில்லை, வேறுப் பெண் பார்க்கலாம் என்று நீங்கள் சொல்லி இருந்தால் எனக்கு இந்த டென்ஷன் மிச்சம் அல்லவா?” என்றாள் மெல்ல எட்டிப் பார்க்கும் சினத்தோடு.

“நான் சொன்னதையே புரிந்துக் கொள்ளாமல் நீ மீண்டும் மீண்டும் உன் விருப்பத்தையும், என் விருப்பத்தையும் போட்டு குழப்பிக் கொள்கிறாய். சரி அதைவிடு, எனக்கு இதற்கு பதில் சொல்!” என்று ஆரம்பித்தவனின் இடையில் புகுந்தவள், “எதற்கு?” என்றாள்.

உஃப் என்ற பெருமூச்சொன்றை ஓசையின்றி வெளியேற்றியவன், “என் விருப்பம் கேட்கும் பொழுது நான் உன் விருப்பத்தை பதிலாக சொல்லியிருக்க வேண்டும் என்று நீ சொன்னாயே அது எதற்காக?” என்று தெளிவாக கேட்டு அவளை குழப்பி விட்டான்.

“ஹைய்யோ… எனக்கு தலையை பிய்த்து கொள்கிறது. நான் என்ன கேட்க வந்தேன், எதற்காக உங்களுக்கு போன் செய்தேன் என்பதே எனக்கு மறந்து விடும் போலிருக்கிறது!” என்று புலம்பினாள் அட்சயா.

எனக்கும் அதுதானே வேண்டும் என தனக்குள் எண்ணிக் கொண்டவன், “சரி சொல் நீ எதற்காக அழைத்தாய்?” என்று விவரம் கேட்டான்.

“மை காட்… மறுபடியும் முதலில் இருந்தா?” என அலுப்புடன் சரிந்து படுத்தவள், “நீங்கள் ஏன் என்னை பிடித்திருக்கிறது என்று சொன்னீர்கள்? உங்களை நான் திருமணம் செய்து கொண்டே ஆகவேண்டும் என வீட்டில் என்னை ரொம்ப கம்பெல் பண்ணுகிறார்கள், எனக்கு பிடிக்கவில்லை!” என முணுமுணுத்து கண்களை சோர்வுடன் மூடிக் கொண்டாள்.

“ஏன்?” என்றான் ரிச்சர்ட் மெதுவாக.

“ஏனென்றால்… எனக்கு பிடிக்கவில்லை அவ்வளவு தான்!” என புருவம் சுளித்தபடி பட்டென்று பதிலளித்தாள்.

“ஓ… அப்பொழுது என்னை பிடிக்கவில்லை என்கிறாயா?” என அமைதியாக வினவினான்.

அவன் கேள்வியில் திடுக்கிட்டு விழிகளை திறந்தவள், ‘இவன் என்ன கேட்கிறான்? நான் இவ்வளவு நேரமாக இவனை பிடிக்கவில்லை என்றா சொல்லிக் கொண்டிருக்கிறேன்… இல்லையே!’ என்று தடுமாறினாள்.

“எதுவென்றாலும் பரவாயில்லை அட்சயா… ஓப்பனாக பேசிவிடலாம். என்னை பிடிக்கவில்லை என்பதால் தான் ஏன் அப்படி கூறினீர்கள் என்று நீ என்னிடம் சண்டைப் போடுகிறாயா?”

“இல்லை… நான் எனக்கு திருமணம் தான் பிடிக்கவில்லை என்று சொன்னேன்!”

லேசாக மனதில் நிம்மதி பூக்க, “ஆஹான்… பட்… எனக்கு புரியவில்லை. திருமணம் பிடிக்கவில்லை என்றால் என்ன அர்த்தம்?” என்று சந்தேகம் கேட்டான்.

“என்ன புரியவில்லை? தெளிவாக தமிழில் தானே சொல்கிறேன், நீங்கள் தமிழர் தானே?” என்று நக்கலாக கேட்டாள் அட்சயா.

“அதெல்லாம் தெளிவாக புரிகிறது, நீ என்ன சொல்ல விளைகிறாய் என்பதும் புரிந்துவிட்டது. அதாவது நான் உன்னை திருமணம் செய்துக் கொள்ள விருப்பமில்லை என்று சொல்லியிருந்தால் நீ இந்த இக்கட்டில் இருந்து தப்பித்திருப்பாய் என்கிறாய் அப்படித்தானே?”

“எக்ஸாட்லி… அப்பாடி… அதுவே தான்!” என ஓய்ந்துப் போய் பெருமூச்சு விட்டாள்.

“ஓஹோ… சரி, இந்த உலகில் நான் ஒருவன் தான் ஆண்பிள்ளையா வேறு ஆண்களே இல்லையா? நான் மறுத்தால் என்னை ஒதுக்கி தள்ளிவிட்டு உன் வீட்டில் வேறு மாப்பிள்ளை பார்க்க மாட்டார்களா?”

“ஆங்… பார்ப்பார்கள் தான், ஆனால் உங்களை போல் அனைவருக்கும் பிடித்த ஆளாக அமைவதற்கு ரொம்ப நாளாகும்…”

“நாள் ஆனால்… நீ போய் அதற்குள் கன்னியாஸ்திரி ஆகிவிடுவாயா?” என்றான் ரிச்சர்ட் இடையிட்டு நக்கலாக.

“என்ன? இப்படி பேசுவதற்கு உங்களுக்கு எவ்வளவு திமிர் இருக்க வேண்டும்?” என்று கொதித்தெழுந்தாள் அட்சயா.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *