*40*

 

சட்டென்று தோன்றிய எரிச்சலுடன் லேசாக முகத்தை சுளித்த அட்சயா தன் அம்மாவை ஓரவிழியில் முறைத்துக் கொண்டே, “என் மாமா போன்ற நல்ல மனிதன் கிடைத்தால் நானா வேண்டாமென்று சொல்லப் போகிறேன்? அவரை போல் முதலில் ஒருவன் கிடைக்கட்டும், பிறகு நான் என் திருமணத்தை பற்றி யோசித்துக் கொள்கிறேன்!” என்றாள் அலட்சியமாக.

அம்மா போன்ற பெண் தான் வேண்டும் என வேண்டுகோள் வைத்து காலத்திற்கும் பிரம்மச்சாரியாய் தனிமையில் வாழ்ந்து வரும் விநாயகப் பெருமான் போன்று தானும் எப்படியும் சாதித்து விடலாம் என்று கனவு கோட்டை கட்டினாள்.

“இப்படி பேசினால் எப்படிடி? உன் அத்தை மிகவும் பொறுமைசாலி என்பதால் மாமாவும் அதற்கேற்றவாறு அமைந்தான். உன்னை போன்ற அடம்பிடித்த கழுதைக்கு எல்லாம் உன் வழியில் சென்று உன்னை அடக்குபவனாக தான் வர வேண்டும்!” என்று வழக்கமான தாயாய் கமலா அதட்ட, இக்கால மகளாகிய அவள் மட்டும் அமைதியடைந்து விடுவாளா என்ன? அட்சயா வாயை திறக்கும் முன்னர் சித்தார்த் வேகமாக முந்திக் கொண்டான்.

“ஏய்… அம்மாவும், பெண்ணும் முதலில் உங்களின் சண்டையை கொஞ்சம் நிறுத்துங்கள். வீட்டிற்கு வந்திருக்கின்ற எங்களை பேச விடாமல் நீங்களே சண்டையிட்டு கொள்கிறீர்கள்!” என்று கண்களை உருட்டினான்.

அதில் அட்சயாவின் முகம் மெல்லமாக இளக, தன் தாயிடம் தர்க்கம் செய்வதை விடுத்து மாமனிடம் ஆர்வமாய் திரும்பி கவனத்தை செலுத்திய பொழுது அவனருகில் அமர்ந்து இருக்கும் சிந்துவின் நமட்டுச் சிரிப்பை கவனித்து அவள் பேசியதன் உட்கருத்தை தனக்குள் ஆராய்ந்தபடி தான் எதையும் சமாளிக்க தயார் என்பது போல வேகமாக நிமிர்ந்து அமர்ந்தாள்.

“அவர்கள் எப்பொழுதும் அப்படித்தான் திருத்த முடியாது, நீ சொல்ல வந்ததை சொல்லப்பா!” என்று சித்துவிடம் விசாரித்தார் பார்வதி.

“அது அத்தை… நேற்று கருணுக்காக அருந்ததியை பெண் கேட்டு ரிச்சர்ட்டை சந்தித்துப் பேசினோம். அவளுடைய படிப்பும் முடிந்து விட்டதால் நம் விருப்பத்தை கூறி அவர்களின் சம்மதத்தை கேட்டோம். ரிச்சர்டுக்கும் ரொம்ப சந்தோசம், நம் குடும்பத்தில் பெண் கொடுக்க அவனுக்கு பரம திருப்தி!” என்று சந்தோசமாக முறுவலித்தான்.

“பின்னே… நம் வீட்டில் வந்து வாழ அந்தப் பெண் கொடுத்து வைத்திருக்க வேண்டாமா?” என்றார் பார்வதி பெருமையாக.

‘ஓ… கருணுடைய கல்யாண விஷயமா? இதற்கெற்கு இந்த அத்தை தேவையில்லாமல் என்னை வம்புக்கு இழுத்தார்களோ தெரியவில்லை…’ என தன்னை சற்று ஆசுவாசப்படுத்திக் கொண்டாள் அட்சயா.

“ஆனாலும் மாமா அந்தப் பெண் அருந்ததி ரொம்பவும் சாதுவாக தெரிந்தாளே… இந்த கொரில்லாவை திருமணம் செய்துக் கொண்டு அவள் எப்படியெல்லாம் அல்லாடப் போகிறாளோ தெரியவில்லை, பாவம்…” என இழுத்து கன்னத்தில் கையூன்றி போலியாக பரிதாபப்பட்டாள் அட்சயா.

“வாயாடி உன்னை…” என்று கமலா கை ஓங்க அதை தடுத்து பிடித்த சிந்துஜா, “அதற்கென்னடி செல்லம்… இனிமேல் உன் கொரில்லாவை எப்படியெல்லாம் சமாளிக்க வேண்டும் என்று அருந்ததிக்கு நீ நன்றாக கற்றுக் கொடுத்து விடு. தட்ஸ் ஆல் பிராப்ளம் சால்வ்ட்!” என்று தோள்களை குலுக்கினாள்.

“யா… வெல் செட், யூ ஆர் ரைட் அத்தை. அப்படியே செய்து விடுவோம், இனிமேல் என் ஓய்வு நேரம் முழுவதும் நம் வீட்டில் தான். அங்கே வந்து அவனுக்கு எதிராக அருந்ததியை நன்றாக ட்ரெயின் அப் செய்து விடுகிறேன்!” என்று அவளை தோளோடு அணைத்து கண்சிமிட்டினாள்.

“அந்த சிரமமே உனக்கு வேண்டாம் பேபி… அவளே உன் வீட்டில் தானே இருக்கப் போகிறாள். நீ தினமும் வேண்டுகிற தினுசில் விதவிதமாய் உன் போர்க்கலையை அவளுக்கு கற்றுக் கொடு!” என்ற சிந்து அதற்குமேல் தன்னை கட்டுப்படுத்த முடியாமல் சட்டென்று நகைத்து விட, சித்துவிற்கும் நகை அரும்பியது.

‘தன் வீட்டில் அவள் இருப்பாளா?’ என்று அட்சயா புருவம் சுருக்க, “என்னய்யா நடக்கிறது இங்கே? எனக்கு ஒன்றும் புரியவில்லை!” என உதடு பிதுக்கினாள் கமலா.

“எனக்கு புரிந்து விட்டது… தன்யா போலவே திருமணம் வரை அருந்ததி இங்கே இருக்கப் போகிறாள். அது விஷயமாக தான் நீங்கள் இருவரும் பேச வந்திருக்கிறீர்கள். கரெக்டா அத்தை?” என உற்சாகமாக தம்ஸ்அப் காட்டினாள் அட்சயா.

ம்ஹும்… என்று தன் காதணிகள் அசைந்தாட வேகமாக தலையசைத்து மறுத்த சிந்து அவளுடைய விரலை தலைகீழாக்கி, “ரொம்ப தப்பு!” என்றாள்.

“இல்லையே… நீங்கள் சொல்லியதன் அர்த்தம் அதுபோல தானே வருகிறது!” என்று நெற்றியை சுருக்கி வேறு திசைகளில் சிந்தனையை விரட்டினாள் பெண்.

“ஆஹாங்… எல்லாமே தவறு, நான் சொன்னதன் அர்த்தமும் அது இல்லை. நாங்கள் பேச வந்த விஷயமும் அது இல்லை!” என அழகாக முறுவலித்தாள்.

“ஏய்… உங்கள் கேமை விட்டு விட்டு எனக்கு நேரடியாக பதில் சொல் நீ!” என்று அதட்டினாள் கமலா.

“ஓகேக்கா… கண்டிப்பாக சொல்கிறேன்!” என சீரியசானவள், “நாங்கள் அருந்ததி திருமணம் பற்றிப் பேசும் பொழுது ரிச்சர்ட் மூலம் அவளுடைய கடந்த காலம் தெரிய வந்தது!” என்று அவன் தங்களிடம் கூறிய அனைத்து விவரங்களையும் கூறினாள்.

“அடக்கடவுளே… அந்த சின்ன வயதில் இந்தப் பெண் அவ்வளவு கஷ்டங்களை அனுபவித்தாளா? பாவம்… ஏதோ அந்தப் பையன் கண்களில் விழவும் இந்த அளவிற்கு காப்பாற்றிக் கொண்டு வந்து விட்டான். மிகவும் நல்லகுணம் உள்ள பையனாக தான் தெரிகிறான், அப்படியே உன்னை சின்ன வயதில் பார்த்தது போல் தோன்றுகிறது சித்தார்த்!” என்று நெகிழ்ச்சியுடன் கூறினார் பார்வதி.

“ஆமாம்மா… அவர்களை பற்றிய விவரங்களை அறிந்தப் பிறகு எனக்கும் அதேதான் தோன்றியது. அவனுடைய குணமும், பொறுப்பும் அப்படியே இவரை என் கண் முன்னால் நிறுத்தியது!” என்று முறுவலித்தாள் சிந்துஜா.

அருந்ததியின் கதையை கேட்டு அவளுக்காக வருந்திய அட்சயாவின் மனதில் ரிச்சர்டின் மீது மெல்லிய மதிப்பு ஏறிய அதேநேரம் பாட்டியும், அத்தையும் அவனை தன் மாமாவோடு ஒப்பிட்டுப் பேசியது அவளுக்கு பிள்ளையார் கதையை நினைவூட்டி மனதில் சின்ன நெருடலை ஏற்படுத்தியது.

“பரவாயில்லை… ரொம்பவும் சின்ன வயதிலேயே தனியாக இருந்தும் அருந்ததி விஷயத்தில் மிகவும் பொறுப்பாக நடந்திருக்கிறான் ரிச்சர்ட்!” என்று பாராட்டினாள் கமலா.

அட்சயாவிடம் இருந்து எதுவும் வெளிவருமா என சித்து அவளை எதிர்பார்ப்புடன் பார்க்க, அவளோ கவனமாக தன் கைவிரல் நகங்களை ஆராய்ந்துக் கொண்டிருந்தாள். அதை தன் மனைவியிடம் கண்ஜாடை காட்டியவன் விஷயத்தை ஆரம்பிக்குமாறு இமைகளை ஒருமுறை அழுந்த மூடித்திறந்தான்.

“அப்புறம் அக்கா… அவனுடைய குடும்பம் மற்றும் தொழில் என அவனோடு பொதுவாக பேசிக் கொண்டிருக்கும் பொழுது தான் எனக்கு மனதில் பெரிய நெருடல் தோன்றியது!”

நிமிர்ந்த அட்சயா விழிகளை கூர்மையாக்கி தன் அத்தையிடம் ஆராயும் பார்வை பார்க்க, “அப்படியா என்னம்மா அது?” என வினவினாள் கமலா.

“ரிச்சர்டுக்கு இப்பொழுது முப்பத்திமூன்று வயதாகிறது. ஏன்பா நீ இத்தனை வருடங்களாக திருமணம் செய்துக் கொள்ளவில்லை? சரியான பருவத்தில் திருமணம் முடித்திருந்தால் அருந்ததியை உன்னோடு உங்கள் வீட்டில் தங்க வைப்பதில் எந்தவித சங்கடமும் நேர்ந்திருக்காதே என்று கேட்டதற்கு அவனளித்த பதில் என் இதயத்தை உருக்கி விட்டது!” என்று அவன் தரப்பு கவலையை எடுத்துரைத்த சிந்துஜா கவனமாக அட்சயாவிடம் பார்வையை திருப்பாமல் இருந்தாள்.

காரணம்… அதை அவள் கணவன் தன் வேலையாக பொறுப்பேற்று கொண்டு அட்சயாவின் ஒவ்வொரு அசைவுகளையும் ஆழ்ந்துக் கவனித்து கொண்டிருந்தான்.

முதலில் அவள் விழிகளில் அவன் மீது நன்மதிப்பு ஏறியதும், பிறகு கவனமாக அவள் அதை தவிர்த்ததும், தற்பொழுது லேசான வியப்புடன் தன் அத்தையின் பேச்சை கேட்பதும் என மாற்றி மாற்றி தன்னுடைய பாவனையை அழகாக முகத்தில் வெளிப்படுத்திக் கொண்டு இருந்தாள் அவள்.

“ஓ…” என்ற கமலாவிற்கு அடுத்து பேச்சு எழவில்லை, மனதில் மெல்லிய குழப்ப மேகம் சூழத் துவங்கியது.

பார்வதிக்கு ஏதோ புரிவதுப் போல் இருக்க ஆர்வத்துடன் சிந்துவை கவனிக்க ஆரம்பித்தார்.

“அவன் வயதும், தனிமையும் என் மனதை உறுத்த முதலில் அவனுடைய திருமணத்தை முடித்துவிட்டு தான் கருண், அருந்ததி திருமணம் என்று உறுதியாக கூறிவிட்டேன். ரிச்சர்ட்டோ அதெல்லாம் இல்லை, முதலில் அவர்களுக்கு முடித்து விடலாம் என்று தன்னால் முடிந்த மட்டும் என்னிடம் விவாதித்துப் பார்த்தான். விட்டு விடுவேனா நான்? கடைசிவரை ஒத்துக்கொள்ளவே இல்லை. அவனுக்கு தான் உடனடி திருமணம் என்று பிடிவாதமாக இருந்தேன். நான் செய்தது சரிதானே அக்கா?”

“ம்… ஆமாம் ஆமாம்!” என்ற கமலாவிற்கு தன் மகளை குறித்து மனதில் ஏக்கம் எழுந்தது.

“பிறகு அவனுக்கு பிடித்த மாதிரியான பெண்ணாக தேட வேண்டுமே என்று அவனுடைய எதிர்பார்ப்புகள் குறித்து விசாரித்தோம். அவன் ஒரே வரியில் முடித்துவிட்டான், எனக்கு நல்ல கலகலப்பான பெண்ணோடு உங்கள் குடும்பம் போன்று எங்களிடம் உரிமையெடுத்து பழகும் குடும்பமாகவும் வேண்டுமென்றான். எங்கள் இருவருக்கும் உடனே பளிச்சென்று அட்சயாவும், நம் வீடும் தான் தோன்றியது!” என்று புன்னகைத்தாள்.

“சிந்து…” என்ற நெகிழ்வான அழைப்புடன் கமலாவின் விழிகள் கலங்கத் துவங்க, “ஷ்… அக்கா… என்ன இது? எங்களுக்கு மட்டும் நம் பெண் மீது அக்கறை இல்லையா என்ன?” என்று அவள் கரத்தை பாசத்துடன் பிடித்துக் கொண்டாள்.

அட்சயாவின் முகம் பொலிவிழந்து இறுகத் துவங்க தன் விழிகளை துடைத்துக் கொண்ட கமலா, “சரி அதற்கு ரிச்சர்ட் என்ன சொன்னான்… ஷ்… சாரி சொன்னார்?” என்றாள் ஆவலுடன்.

“ஓ… மாப்பிள்ளை மரியாதையா?” என்று நகைத்த சிந்து, “என்ன சொல்வான்? நம் வீட்டு விசேஷத்தில் இவளும், கருணும் அடித்த லூட்டியை தான் நேரில் பார்த்தவன் ஆயிற்றே… பிடிக்காமல் போகுமா என்ன? அவனுக்கு இவளை திருமணம் செய்துக் கொள்வதில் பரிபூரண சம்மதம். ஆனால் அட்சயா மற்றும் உங்கள் அனைவரின் விருப்பமும் இதில் மிக முக்கியம் என்று எங்களை தூது அனுப்பி இருக்கிறான்!” என்றாள்.

“கடவுளே… எங்களின் இத்தனை வருட காத்திருப்பிற்கு நல்ல வாழ்க்கையாக தான் என் பேத்திக்கு கை காண்பித்திருக்கிறாய் அப்பா நீ, உனக்கு கோடான கோடி நன்றிகள்!” என பார்வதி கையெடுத்து கும்பிட்டார்.

“அவளை என்ன கேட்பது? இதுவரை கேட்டதே போதும் போதும் என்றாகிவிட்டது. இதற்கு மேலும் அவள் இஷ்டத்திற்கு விட நான் தயாராக இல்லை. பார்த்தாய் அல்லவா? எனக்கும் பிடித்துவிட்டது, அத்தைக்கும் பிடித்துவிட்டது. உன் அண்ணாவும் இவள் வாழ்க்கையை எண்ணி தான் எப்பொழுதும் கவலைப்படுவார். ஸோ… எங்கள் அனைவருக்குமே இதில் சம்மதம் தான் பேசி முடித்துவிடலாம்!” என்றாள் கமலா வேகமாக.

“நோ… நோ… அது தப்புக்கா. வாழப் போகின்றவள் இவள், இவளுடைய விருப்பம் தான் இதில் மிக முக்கியம்!” என்று மறுத்த சிந்து அட்சயாவிடம் திரும்பி அவள் கையை பற்றிக் கொண்டு, “இங்கே பாருடா… ரிச்சர்டை எங்கள் அனைவருக்குமே பிடித்து இருக்கிறது, விசாரித்தவரை மிகவும் நல்லப்பையனாக இருக்கிறான். நீ அவனை திருமணம் செய்துக் கொண்டால் ஒன்றுக்குள் ஒன்று உறவாக நமக்குள் எந்தப் பிரிவுமின்றி நாம் அனைவரும் ஒரே குடும்பமாக மகிழ்ச்சியுடன் வாழலாம். ரிச்சர்டும் அதைத்தான் ஆசையுடன் எதிர்பார்க்கிறான், எனக்கும், மாமாவிற்கும் கூட அதுதான் ஆசை. நன்றாக யோசித்து நல்ல முடிவாக எடு. உனக்கு எதுவும் பிரச்சினை என்று ஏதாவது நீ கருதினால் அதை ரிச்சர்டிடம் வெளிப்படையாக பேசி தெரிந்துக்கொள். இது அவனுடைய கார்ட், உன்னிடம் கொடுக்க சொன்னான்!” என்று அவள் கரங்களில் அவனுடைய விசிட்டிங் கார்டை அழுத்தினாள்.

“இங்கே பார் டாலி… எதையும் நல்ல விதமாக யோசித்து முடிவெடுக்க வேண்டும். உன்னுடைய வீண் வறட்டுப் பிடிவாதத்தால் முரண்டுப் பிடிக்க எண்ணாதே, எனக்கு தெரிந்து நீ என்னை மாதிரி வேண்டிய பையனாக இவன் ஒருவன் தான் தெரிகிறான். அவனை மணந்துக் கொண்டால் உன் வாழ்க்கை நிச்சயமாக நலமாக இருக்கும். என்ன புரிகிறதா?” என உம்மென்று தலைக்குனிந்து அமர்ந்திருந்தவளின் முகத்தை நிமிர்த்தினான் சித்தார்த்.

உள்ளுக்குள் மிகுந்த வெறுப்பு மண்டினாலும் வேறுவழியின்றி அவனிடம் அமைதியாக தலையாட்டினாள் அட்சயா.

“குட்! அப்புறம் நீ…” என தன் தோழியிடம் திரும்பியவன், “சும்மா… நொய்நொய் என்று அவளை போட்டுப் பிடுங்கி எடுக்காதே. அவள் மிகவும் புத்திசாலிப் பெண், இந்த விஷயத்தில் நன்றாக யோசித்து நல்ல முடிவாக தான் எடுப்பாள். அதனால் எதற்கெடுத்தாலும் அவளிடம் கடுப்படிப்பதை விட்டு விட்டு அவளுக்கு வேண்டுகிற அவகாசம் கொடு. நான் நாட்கணக்கில் தான் சொல்கிறேன்…” என நிறுத்தி மருமகளையும் எச்சரித்து விட்டு எழுந்தான் அவன்.

“சரி, சீனு வந்தவுடன் அவரிடமும் விஷயத்தை கூறுங்கள். கூடிய விரைவில் எல்லாம் நல்லதாகவே நடக்கும் என காத்திருப்போம். ஓகே பை!” என்றவன் அட்சயாவை தோளோடு அணைத்து, “ஆல் தி பெஸ்ட் டா தங்கம்! உனக்கு என்ன சங்கடம் என்றாலும் மாமாவுக்கு கால் பண்ணு என்ன?” என்றான்.

லேசாக முகம் தெளிந்தவள், “சரி மாமா!” என முறுவலித்தாள்.

அதைக் கண்டு நிம்மதியுற்ற சிந்து, “டேக் கேர்டா பை!” என அவள் கன்னம் தட்டிவிட்டு கிளம்பினாள்.

“ம்… பை அத்தை!” என அவளுடன் வாயிலுக்கு நடந்தவள், அவர்கள் கிளம்பியவுடன் வேகமாக சென்று தன் அறைக்குள் அடைந்துக் கொண்டாள்.

வாயில் கதவை சாற்றிவிட்டு வந்த மூத்தப் பெண்கள் இருவரும் அவளின் மூடிய அறைக்கதவை கண்டு மெல்லிய பெருமூச்சொன்றை வெளியேற்றிவிட்டு சீனுவின் வருகைக்காக காத்திருக்க ஆரம்பித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *