*4*

 

ஒருவாறு பரிமளம் பாட்டியின் உடலை எடுத்துக் கொண்டு அவருடைய மருமகன்கள் வீட்டை விட்டு வெளியேறவும், தலைமுடியை அழுந்தக் கோதிய ரிச்சர்ட் பெருமூச்சொன்றை வெளியேற்றிவிட்டு வாயிலைப் பார்த்தபடி நின்றான்.

“சார்!” என்றபடி தன்னெதிரே வந்து தயக்கத்துடன் நின்ற வேலைக்காரி வடிவை பார்த்து நெற்றியை சுருக்கியவன், என்ன என்பது போல் அவளிடம் விழிகளாலேயே கேள்வி எழுப்பினான்.

பாட்டியின் விஷயம் கேள்விப்பட்டதும் கணவனை அழைத்துக் கொண்டு அவர் உடலுக்கு மரியாதை செலுத்த வேண்டி வந்திருந்தாள் வடிவு.

“இல்லை… பாட்டி வீட்டிலேயே இறந்து விட்டார் என்பதால் உடலை எடுத்து சென்றப் பின் அவர் வைக்கப்பட்டிருந்த வீட்டை துடைத்து விட்டு வீட்டில் உள்ளவர்கள் தலைக்கு குளிக்க வேண்டும் என பெரியவர்கள் சொல்வார்கள்!” என்று மென்று விழுங்கினாள்.

ம்… என்று இழுத்தவனுக்கும் தன் தாத்தாவின் இழப்பின் பொழுது அவள் சொல்வதுப் போல உறவுகளும், நட்புக்களும் இருந்து அனைத்தையும் செய்தது நினைவு வந்தது.

“சரி இன்றே வீட்டை கிளீன் பண்ணிடுங்க, நாளைக்கு எதுவும் செய்ய தேவையில்லை. அப்புறம் அருந்ததியிடம் சொல்லி அவளையும் தலைக்கு குளிக்க சொல்லி விடுங்கள்!” என்றபடி மாடிக்கு ஏறினான் ரிச்சர்ட்.

அருந்ததியிடம் சென்றவள் அவளை ஆறுதல்படுத்தி குளிக்க அனுப்பி வைத்து விட்டு வீட்டை சுத்தம் செய்ய ஆரம்பித்தாள்.

தனது வேலைகளை முடித்துவிட்டு வீட்டிற்கு கிளம்ப தயாராக நின்றிருந்த வடிவு, கந்தனிடம் வந்த ரிச்சர்ட், “என்ன வேலை முடிந்து விட்டதா? சரி கிளம்புங்கள்!” என்றவன், “ஒரு நிமிடம்…” என அவசரமாக அவர்களை தடுத்து நிறுத்தினான்.

“என்ன சார்?”

“உங்களுக்கு தெரிந்து பொறுப்பாக வீட்டையும் கவனித்துக் கொண்டு சமையலும் செய்வது போல் நடுத்தர வயதில் சமையல்காரம்மா யாரும் இருக்கிறார்களா? ஏஜென்சியில் சொன்னால் சுலபமாக ஆள் கிடைக்கும், ஆனால் நம்பகத்தன்மை எந்தளவிற்கு இருக்கும் என்பதற்கு எந்த உத்திரவாதமும் கிடையாது. நீங்களும் இங்கே சில வருடங்களாக நன்றாக தான் வேலை செய்துக் கொண்டிருக்கிறீர்கள். உங்களுக்கு தெரிந்த நட்புவட்டத்தில் யாராவது நம்பகமான ஆட்களாக இருந்தால் சொல்லுங்களேன். முக்கியமாக முழுநேரமும் வீட்டில் இருந்து கவனித்துக் கொள்வது போல் ஆள் வேண்டும். ஏனெனில் வீட்டில் ஒரு சின்னப்பெண் வேறு தனியாக இருக்கிறாள் அவளுக்கும் கட்டாயம் பாதுகாப்பு தேவை!”

வடிவின் விழிகள் தன் முதலாளியை மரியாதையுடன் நோக்க மாறாக கணவனோ தன் சின்னப் புத்தியை வெளிப்படுத்தினான்.

“சமையலுக்கு ஒன்றும் பிரச்சினை இல்லை சார், நம் வடிவே நன்றாக சமைக்கும். பரிமளம் அம்மா இருந்ததால் நாங்கள் அதில் அவ்வளவாக தலையிடவில்லை. நம் வீடு அடுத்த ஏரியாவில் தான் இருக்கிறது சார். அதனால் காலை, இரவு என்று வந்து இரண்டு வேலையும் அவளே சமைத்து விடுவாள். ஆனால் தங்குவதற்கு மட்டும் முடியாது, ஸ்கூலுக்கு போகிற எங்கள் பிள்ளைகளை வேறு பார்க்க வேண்டும். இந்த வருடம் பெரியவன் வேறு பத்தாவது பொது பரீட்சை எழுதுகிறான். ஏன் இந்த பெண்ணைப் பற்றியெல்லாம் யோசித்து தேவையில்லாமல் உங்கள் நேரத்தை வீணாக்குகிறீர்கள் நீங்கள்? பாட்டியோடு அநாதையாக வந்தவள் தானே ஏதோ ஒரு அநாதை ஆசிரமத்தில் சொல்லி சேர்த்துவிட்டு விடுங்கள். நமக்கெதற்கு தேவையில்லாத தலைவலி?” என்று கணஅக்கறையாக அறிவுரை வழங்கியவனிடம் ஏளனப்பார்வை ஒன்றை வீசியவன் வடிவிடம் திரும்பினான்.

“உங்களுக்கு ஒன்றும் இங்கே சமைப்பதில் எதுவும் பிரச்சினை இல்லையே?”

“அதெல்லாம் இல்லை சார்… என்ன மாதிரி சமைக்க வேண்டும் என்று சொல்லி விட்டால் நான் அதற்கேற்ப சமைத்து விடுவேன்!” என்றாள் அவள் பவ்யமாக.

“ம்… சரி சொல்கிறேன், வேறொரு ஆள் நிரந்தரமாக ஏற்பாடு செய்யும் வரை நீங்களே இங்கு தற்காலிகமாக சமைத்து விடுங்கள்!” என்று நறுக்கு தெறித்தார் போல் கூறினான் அவன்.

“சரி சார்… இப்பொழுது என்ன சமைக்கட்டும்?”

“இல்லை… இன்றைக்கு எதுவும் வேண்டாம், நான் வெளியில் வாங்கிக் கொள்கிறேன். நாளையில் இருந்து செய்ய துவங்குங்கள் போதும்!” என்று விட்டு இத்தோடு விஷயம் முடிந்தது அவ்வளவு தான் நீங்கள் கிளம்பலாம் என்பது போல் சென்று டிவியை ஆன் செய்தபடி சோபாவின் மீது கால் மேல் கால் போட்டு அமர்ந்தான் ரிச்சர்ட்.

முதலாளி தனது பேச்சை கவனமாக தவிர்த்ததை கண்டு விழித்தபடி நின்றிருந்த தன்னுடைய கணவனின் நிலையை எண்ணி தனக்குள் நமட்டு சிரிப்பு சிரித்துக் கொண்ட வடிவு அவனை இழுத்துக் கொண்டு வெளியேறினாள்.

இலக்கில்லாமல் சற்றுநேரம் சேனல்களை மேய்ந்துவிட்டு கைகளை உயர்த்தி சோம்பல் முறித்தவன், ‘ப்ச்… என்ன இது ஒரே அலுப்பாக இருக்கிறது? சரி முதலில் டிபன் வாங்கி வந்து சாப்பிட்டுவிட்டு ஓய்வெடுப்போம். காலையில் நேரமாக எழுந்து பரிமளம் பாட்டியின் இறுதிசடங்கிற்கு வேறு செல்ல வேண்டும். இந்தப் பெண்ணும் வேறு மதியத்திலிருந்து பட்டினி கிடக்கிறாள்!’ என்று வேகமாக எழுந்தான்.

வாங்கி வந்த உணவை டேபிளில் வைத்துவிட்டு, அருந்ததியை அழைக்க அவளது அறைக்கு சென்றான்.

மதியத்திலிருந்து ஏற்பட்ட அதிக மன உளைச்சலில் உடல் வெகுவாக தளர்ந்திருக்க துவண்ட கொடியாக சுவற்றோடு சாய்ந்து கண்களை மூடி அமர்ந்திருந்தாள் அவள். ஈரக் கூந்தலை அரை வட்டமாக தன்னை சுற்றி விரித்து போட்டு உலர விட்டிருந்தவளை கண்டு கனிவுப் பிறந்தது.

“அருந்ததி!”

விழிகளில் தீயை மூட்டியது போன்றதொரு தகிப்பு எழ, “ம்…” என்று மெதுவாக இமைகளை பிரித்தாள் பெண்.

செக்க சிவந்திருந்த விழிகள் இரண்டும் அவளுடைய உடல் அலுப்பையும், மன வேதனையையும் எடுத்துரைக்க, “வா சாப்பிடலாம்!” என்று அழைத்தான் ரிச்சர்ட்.

முகத்தில் தயக்கமும், கவலையும் ஒன்றோடொன்று போட்டிப் போட, “இல்லை… வேண்டாம்!” என மெல்லிய குரலில் மொழிந்துவிட்டு விழிகளை தாழ்த்திக் கொண்டாள்.

“இங்கே பாரும்மா… இன்று நடந்த சம்பவத்தால் இருவருக்குமே மனதில் மிகப்பெரிய அயர்வு இருக்கிறது. இந்த நேரத்தில் தேவையில்லாது பிடிவாதம் பிடிக்காமல் தயவுசெய்து வந்து சாப்பிடு!”

“இல்லை… எனக்கு…”

“ப்ச்… அருந்ததி!”

அவனிடம் எதிர்ப்பு தெரிவிக்கும் திராணியற்று தயக்கத்துடன் நிமிர்ந்தவள் மெல்ல கால்கள் பின்ன தடுமாற்றத்துடன் எழுந்து நின்றாள்.

அடர்ந்து விரிந்திருந்த கருநிற சுருள் கூந்தலில் பாதி முகத்தை மறைத்தபடி சரிந்து முன்னே வந்து விழ அதன் அழகை ஆசையாக ரசித்தவன், “சரி தலையில் ஏதாவது ஹேர்பேன்டை போட்டுவிட்டு வா, சாப்பிடும் பொழுது பாதி முடி முன்னால் வந்து விழும் போல தெரிகிறது!” என்று அறிவுறுத்தி விட்டு சென்றான்.

சேரில் அமர்ந்து அவளுக்கு ஒரு பாக்ஸை பிரித்து வைத்துவிட்டு அவன் தன்னதை பிரிக்க, அருந்ததி எதிரே வந்து அமைதியாக நின்றாள்.

“ம்… உட்கார்ந்து சாப்பிடு!” என்று அவளிடம் சேரை காண்பித்தபடி பாக்ஸை நகர்த்தினான்.

அவளோ உட்காராமல் அமைதியாக தலைக்குனிந்தபடி நிற்க, “என்னம்மா?” என்று கனிவுடன் விசாரித்தான்.

“நான் போய் உள்ளே சாப்பிடவா?” என்றவளை அவன் ஆழ்ந்துப் பார்க்க, அவளுடைய விழிகள் தரையில் அலைபாய்ந்தது.

மெல்ல இதழ்களில் முறுவல் பூக்க, “சரி போ!” என்றதும் வேகமாக விழிகளை உயர்த்தி அவனை நன்றியுடன் நோக்கியவள், தனது உணவை எடுத்துக் கொண்டு அறைக்கு சென்றாள்.

“பட்… மீதம் வைக்காமல் ஒழுங்காக சாப்பிட வேண்டும் இல்லையென்றால் நான் வந்து ஊட்டி விடுகிற மாதிரி ஆகிவிடும்!” என்று ரிச்சர்ட் போலியாக மிரட்டவும் அரண்டு விழித்தவள் மிச்சம் வைக்க மாட்டேன் என்பது போல் மறுப்பாக தலையசைத்து விட்டு விரைந்து மறைந்து விட்டாள்.

மனதில் ஏதோ ஒருவித நிறைவு தோன்ற தன் உணவை நிதானமாக முடித்தவன் அவனது அறைக்கு செல்லாமல் அவளுக்காக லிவிங் ரூமில் காத்திருக்க ஆரம்பித்தான்.

பரிமளம் பாட்டி முதன் முதலாக அருந்ததியை இவனது இல்லத்திற்கு அழைத்து வந்து அப்பா, அம்மாவை இழந்துவிட்ட யாருமற்ற அநாதை இவள் என்று இவனிடம் என்றைக்கு அவளை அறிமுகப்படுத்தினாரோ அன்றிலிருந்தே தன்னைப் போன்றே உலகில் யாருமற்ற ஒரு ஜீவன் என அவளின் பால் அவன் மனம் உருகத் தொடங்கி விட்டது.

ஆனால் புது இடம், புது ஆட்கள் என்பதால் அவள் தயங்கி ஒதுங்கி இருக்கவும் சின்னப்பெண் அவளுடைய மனதில் எந்தவித வருத்தமும் தோன்றிவிடக் கூடாது இயல்பாக இருக்கட்டும் என்று இவனும் அவளிடம் எதையும் வற்புறுத்தாமல் விட்டு விட்டான்.

அவளை காணும் பொழுதெல்லாம் இருவரின் நிலையும் ஒன்றே என்கிற எண்ணம் அவ்வப்பொழுது உதித்து, தாங்கள் ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகள் என்பது போன்ற பிரமை வலுவாகி அவனையும் அறியாமலேயே அவனுடைய மனதில் அவளை தன் தங்கையாக, தன் வீட்டுப் பெண்ணாக உருவகப்படுத்த தொடங்கி இருந்தான் ரிச்சர்ட்.

அருந்ததி நன்றாகப் பேசி பழகியிருந்தால் அது உடனடியாக வெளிப்பட்டிருக்குமோ என்னவோ அவள் ஒதுங்கி ஒதுங்கி இருக்கவும் அந்த எண்ணமும் அவனுடைய ஆழ்மனதில் ஒருபுறம் ஒதுங்கி இருந்தது. அதனால் தானோ என்னவோ மற்றவர்கள் அவளை பற்றி எதுவும் குறைக் கூறி உதாசீனமாக தாழ்த்திப் பேசினால் என் வீட்டுப் பெண்ணை அவர்கள் எப்படி குறைக் கூறலாம் என்று அவனுடைய மனம் கொந்தளிக்க ஆரம்பித்து விடுகிறது.

உணவை முடித்தவள் டப்பாவை குப்பையில் போடவென்று அறையை விட்டு வெளியே வர, “கை கழுவிவிட்டு இங்கே வா!” என்று அழைத்தான்.

இனி இந்த வீட்டில் இவர்கள் இருவர் மட்டும் தான் என்பதால் இவளை இப்படியே ஒதுங்கி இருக்க விடக்கூடாது சில விஷயங்களை தெளிவாகப் பேசிவிட வேண்டும் என்று முடிவு செய்திருந்தான் ரிச்சர்ட்.

“ம்… உட்கார்!” என்று எதிரே கை காட்ட, அவளோ வழக்கம் போல் தயங்கியபடி அப்படியே நின்றாள்.

“நீ எப்பொழுதுமே இப்படி தானா பெரியவர்கள் சொல் பேச்சையே என்றுமே கேட்க மாட்டாயா?” என சலிப்புடன் வினவினான் நாயகன்.

அவன் சொல்லில் திகைத்து விழித்த அருந்ததி பட்டென்று அவனெதிரே இருந்த ஒற்றை சோபாவின் நுணியில் பட்டும்படாமல் அமர்ந்தாள்.

“இங்கே பார், நீ இன்னமும் பழைய மாதிரி அப்படியே அறைக்குள் ஒளிந்து ஒளிந்து இருக்க வேண்டும் என்று நினைக்காதே. முன்பாவது உனக்கு ஏதாவது தேவையென்றால் பாட்டி என்னிடம் வந்து பேசுவார்கள், இப்பொழுது அவர்களும் இல்லை. இனி நீதான் எதையும் நேரடியாகப் பேச வேண்டும். என்ன புரிகிறதா? அப்புறம்… வீட்டு வேலை செய்ய வருவார்களே வடிவு, அவர்களையே சிறிது நாளைக்கு நமக்கு காலையிலும், மாலையிலும் சமைக்க சொல்லி விட்டேன்…”

“ஏன் எனக்கும் ஓரளவுக்கு சமைக்கத் தெரியும் பாட்டியிடம் கற்றுக் கொண்டேன். தினமும் சமைக்க சமைக்க இன்னும் நன்றாகப் பழகி விடுவேன். நானே சமைத்து விடுறேனே சும்மா தானே இருக்கிறேன்!” என்று வேகமாக அவனை இடைமறித்தாள் அருந்ததி.

முதலில் பாட்டியின் இழப்பை நினைத்து, அடுத்து இந்த வீட்டில் தனது நிலை என்ன என்று மிகவும் கவலையில் ஆழ்ந்து இருந்தவளுக்கு ரிச்சர்டின் அணுகுமுறை மெல்லிய நம்பிக்கை தீபத்தை ஏற்றி வைக்க மெதுவாக தனது கூட்டிலிருந்து வெளிவர முயன்றாள் அவள்.

அவளையே அசையாது நோக்கி குற்றவுணர்வில் தலைக்குனிய செய்துவிட்டு, “எத்தனை சொன்னாலும் உன் மண்டையில் ஏறவே ஏறாதா? படிக்கிற வயதில் இருக்கின்ற பிள்ளை மறுபடியும் மறுபடியும் சமைக்கிறேன், வீட்டு வேலை செய்கிறேன் என உளறிக் கொண்டிருக்கிறாய். தட்டிக் கேட்க ஆளில்லை உன் இஷ்டத்திற்கு நடந்துக் கொள்ளலாம் என்று எண்ணி விட்டாயோ… அதற்கெல்லாம் இங்கே இடமில்லை, நான் அனுமதிக்கவும் மாட்டேன்!” என்று சூடாகப் பேசியவன், அவள் முகம் வாடி விழுந்ததைக் கண்டு ஒருகணம் நிதானித்துப் பேச்சை மாற்றினான்.

“ம்… இதை சொல்ல மறந்து விட்டேனே, வடிவால் சமைப்பதற்காக மட்டும் என்று தற்காலிகமாக உணவு வேளையில் மட்டுமே வந்து செல்ல இயலும். அதனால் உன்னுடைய துணைக்காக என்று வேறொரு பெண்மணியை நிரந்தரமாக ஏற்பாடு செய்யும் வரை தனிமையில் இருக்கும் பொழுது மட்டும் கொஞ்சம் ஜாக்கிரதையாக இருந்துக்கொள் என்னம்மா?” என்று ரிச்சர்ட் கரிசனத்துடன் கூற, அவனை குழப்பத்துடன் பார்த்தாள் அருந்ததி.

பெற்றவளை இழந்து அநாதையாக பாட்டியின் துணையோடு இங்கே வந்தவளுக்கு அவ்வீட்டில் தெரிந்த பிரமாண்டமும், குடும்பம் ஏதுமற்று தனித்தீவாக தனிமையில் வாழ்ந்து வந்த ரிச்சர்டும் மிகவும் அச்சுறுத்த தான் செய்தார்கள். பாட்டியின் உடல்நிலை நன்றாக இருந்தவரை அவன் முன்னே வந்து நிற்க மாட்டாள், அவனுடைய முகத்தை கூட ஏறிட்டுப் பார்க்க மாட்டாள். அவன் ஓர் ஆண்மகன் என்கிற பிம்பம் மட்டுமே அவனை விட்டு அவளை ஒதுங்கி இருக்க செய்ய போதுமானதாக இருந்தது.

தன் வாழ்வில் ஏற்பட்ட சிலபல கசப்பான அனுபவங்களால் ஆண்களை பார்த்தாலே அவளுக்கு பயமாக தான் இருந்தது. உள்ளத்தில் ஒரு படபடப்பு, உடலில் ஒரு நடுக்கம் என அவர்கள் முன்னே வெளிவருவதை அவள் சுத்தமாக விரும்புவதில்லை.

ரிச்சர்டிடமும் அதையே கடைப்பிடித்து வந்தவளுக்கு நேற்றிலிருந்து அவன் தன்னிடம் எதையுமே நேர்பார்வையாக, தெளிவாகப் பேசுவது மற்றும் தன்னுடைய நலனில் அவன் காட்டும் அக்கறை என ஒவ்வொன்றும் சற்றே அசைத்துப் பார்க்க செய்தது.

இருந்தாலும்… முன்பின் அறிமுகம் இல்லாத தங்கள் வீட்டு வேலைக்காரியுடன் வந்த எனக்காக என்று இவர் இவ்வளவு யோசிக்கிறாரே உண்மையில் நல்லவராக தான் இருப்பாரோ என்கிற ஏக்கம் எழும்பொழுதே, அல்லது… ஒருவேளை நம்மிடம் எதுவும் நடிக்கிறாரா என்கிற பயமும் கூடவே அக்குழந்தை பெண்ணுக்குள் பயங்கரமாக எழுந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *