*30*

 

கருண் சொல்ல வருவதை புரிந்துக்கொள்ள முடியாமல் அவனை குழப்பத்துடன் ஏறிட்டான் ரிச்சர்ட்.

“புரியவில்லையா… இந்த ஆள் ஒரே பக்கமாக பார்த்துக் கொண்டிருக்கிறாரே அங்கே தான் நானும், அருந்ததியும் முதலில் நின்றிருந்தோம். அவளை அழைத்து சென்று ஓரிடத்தில் அமர வைப்பதற்கு இவரை தான் உதவிக்கு அழைத்தேன். ஆனால் மனிதர் அருகில் வருவதற்கு அவ்வளவு யோசித்தார் வந்தவரும் பிறகு விட்டால் போதும் என்கிற ரீதியில் வேகமாக விலகி ஓடிவிட்டார். அப்பொழுதே எனக்கு அது சற்று வித்தியாசமாக தெரிந்தாலும் சந்தேகம் தோன்றவில்லை. யாரையும் சட்டென்று அப்படி அலட்சியப்படுத்தி விடக்கூடாது என நீங்கள் அன்று கூறியிருந்ததால் ஒருவேளை இவராக இருக்குமோ என்கிற உறுத்தல் தற்பொழுது தோன்றுகிறது!” என்றான் கருண் விளக்கமாக.

ம்… என்றபடி திரையில் தெரிந்த மனிதரை கூர்ந்தவாறு லேசாக பின்னால் சரிந்து தாடையை தடவிய ரிச்சி, சட்டென்று நேராக அமர்ந்து அதை ஸ்க்ரீன்ஷாட் எடுத்தான்.

“எனக்கும் இந்த மனிதரை யாரென்று அடையாளம் தெரியவில்லை கருண், ஒருவேளை அருந்ததிக்கு அறிமுகமானவரா என கேட்கலாம். ஆம் என்றால் இந்த ஆளுடைய பின்புலம் பற்றி விசாரித்து என்ன ஏதுவென்று காரணமறிந்து எச்சரித்து வைக்க வேண்டும். அப்படி இவர் இல்லையென்றால்… வேறு யார் அந்த சம்பவத்திற்கு காரணம் என தீர விசாரித்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்!” என்றபடி தனது அலைபேசியில் அருந்ததியின் நம்பரை டயல் செய்தான்.

மறுமுனையில் அவள் பிக்கப் செய்யவும், “ஹலோ அருந்ததி…” என விளித்தான்.

“ஆங்… அண்ணா சொல்லுங்கள்!”

“நான் உன்னுடைய வாட்ஸ்அப்பிற்கு ஒரு புகைப்படம் அனுப்புகிறேன். அவரை எதுவும் உனக்கு முன்பே தெரியுமா என கொஞ்சம் பார்த்து சொல்!” என்று லைனை கட்செய்தவன் அவளுடைய எண்ணிற்கு அந்த ஸ்க்ரீன்ஷாடை அனுப்பினான்.

நிமிடங்கள் கடந்ததே தவிர அவளிடமிருந்து அழைப்பு வரவில்லை எனவும் சந்தேகம் கொண்டு அவளுக்கு கால் செய்தால் எடுத்தவள் மெல்ல அண்ணா என முனகினாள்.

அவளின் குரல் பேதத்தை வைத்தே பதிலை ஊகித்தறிந்தவன், “யார் அந்த ஆள்?” என்றான் நேரிடையாக.

ரிச்சர்டின் முகத்தில் வெளிப்பட்ட ஆக்ரோஷத்தையும், கடுகடுப்பையும் கண்டு திரையில் உள்ள மனிதன் தான் பிரச்சினைக்கு காரணமானவன் என புரிந்துக் கொண்டான் கருண்.

“அது அண்ணா… அந்த ஆள்…” என்றவளின் குரலில் கரகரப்பை உணர்ந்தவன் தன் வார்த்தைகளில் இயல்பை தருவித்து நிதானமாக விசாரித்தான்.

“சரி இதற்கு பதில் சொல், அவனை உனக்கு ஏற்கனவே தெரியும் அல்லவா?”

“ம்…”

“எங்கே சந்தித்தாய்?”

“———————–“

“பதில் சொல்லாமல் அமைதியாக இருந்தால் என்னம்மா அர்த்தம்? அவன் என்ன செய்தான் என்று தெரியுமா?”

“ம்… போட்டோ பேக்ரவுன்ட் பார்த்தாலே புரிகிறது. அப்பொழுது அன்று அந்த ஆள் தான் எனக்கு மயக்க மருந்து கலந்து கொடுத்ததா?”

“திருத்திக் கொள்… மயக்க மருந்து இல்லை தூக்க மாத்திரை. டாக்டர் சொன்னதை வைத்து அதுபோன்ற மாத்திரைகளை உட்கொள்ளும் வயதினரை கொண்டு அலசும் பொழுது இந்த ஆள் மீது தான் வலுவாக சந்தேகம் தோன்றியது, அதற்கேற்ப நீயும் அதை உறுதிப்படுத்துகிறாய். சரி சொல்… உனக்கு எப்படி அவனை தெரியும்? எதற்காக அவன் இப்படி செய்ய துணிந்தான்?”

“அது… காரணம் புரியவில்லை அண்ணா, ஆனால் அந்த ஆள்…” என தயங்கியவள், “அந்த ஆளுடைய வீட்டில் தான் நானும், அம்மாவும் இருந்தோம்!” என்று சிறு குரலில் உரைத்தவளின் வார்த்தைகளில் தெரிந்த வெறுமை மனதை பாரமாக்க சில நொடிகள் அமைதியாக இருந்தவன் நிமிர்ந்து எதிரில் உள்ளவனை பார்த்தான்.

ரிச்சர்டின் பேச்சை தீவிரமாக கவனித்துக் கொண்டிருந்த கருண் நிமிர்ந்து அமர்ந்தான்.

“சரி எப்படியும் இதை பற்றித் தெளிவாக பேசி முடிக்கும் வரை உன்னால் நிச்சயம் படிப்பில் கவனத்தை செலுத்த முடியாது. நான் கிளம்பி நேரில் வருகிறேன், விரிவாக பேசலாம்!” என்று அருந்ததியிடம் தெரிவித்துவிட்டு அழைப்பை துண்டித்தவன் பேச்சை ஆரம்பிக்கும் முன் கருண் எழுந்துக் கொண்டான்.

“சரி நீங்கள் சென்று அவளிடம் பிரச்சினை என்னவென்று தெளிவாக விசாரித்து அறிந்துக் கொள்ளுங்கள். நான் கிளம்புகிறேன்!”

அவன் கரம்பற்றி குலுக்கிய ரிச்சர்ட், “தாங்க்ஸ் கருண்… இத்தனை தூரம் மெனக்கெட்டு உதவுகின்ற உன்னை கிளம்ப சொல்கின்ற தர்மசங்கடத்திலிருந்து என்னை காப்பாற்றி விட்டாய்!” என்று புன்னகைத்தான்.

“ஓ… இதற்கு இப்படி கூட மரியாதை சாயம் பூசி மெழுகலாமா?” என்றான் கருண் நக்கலாக.

“ஹேய்… ப்ளீஸ் அன்டர்ஸ்டார்ன்ட், நான்…”

“சரி சரி எந்த விளக்கமும் தேவையில்லை, அதுதான் வந்தவுடனேயே சூழ்நிலை அது இது என்று கூறி விட்டீர்களே… அப்புறம் என்ன? நீங்கள் போய் அவளை பாருங்கள், நான் எதுவும் தவறாக எண்ணவில்லை!” என்று முறுவலித்தவனை தோளோடு அணைத்து தன் நன்றியை வெளிப்படுத்தினான் ரிச்சர்ட்.

அருந்ததியின் விடுதிக்கு சென்று அவளை அழைத்துக் கொண்டு கிளம்பிய ரிச்சர்ட் ஆள் ஆரவமற்ற ஒரு சாலையில் சென்று காரை ஓரமாக நிறுத்தினான். பொது இடங்களில் தனிமையில் என்றாலும் இதுபோன்ற விஷயங்களை அலசுவது பாதுகாப்பானது இல்லை என்று எண்ணினான் அவன்.

“ம்… சொல், கிட்டத்தட்ட பத்து வருடங்கள் கழித்து எங்கிருந்து வந்தான் அந்த ஆள்? அதுவும் வந்தவன் இந்த வயதில் எதற்காக இது போன்றதொரு கேவலமான வேலையில் ஈடுபடுகிறான்? ஓ… உனக்கும் அது தெரியவில்லை என்றாய் அப்படித்தானே?”

மறுப்பாய் தலையசைத்தவள், “இல்லை அண்ணா, இப்பொழுது வேறொரு சந்தேகம் தோன்றுகிறது. அதுவுமில்லாமல் அந்த ஆளை அதன் பிறகு நான் பள்ளியில் சந்தித்தேன்!” என்றாள் தயக்கத்துடன்.

“பள்ளியிலா… எப்பொழுது? நீ என்னிடம் சொல்லவேயில்லை!” என்று திகைப்புடன் வினவியவனின் புருவங்கள் சுருங்கியது.

“அது அநாவசியமானது என்று நினைத்தேன் அண்ணா, நான் பதினொன்றாம் வகுப்பு படிக்கும் பொழுது ஒருநாள் யதேச்சையாக அவரை பள்ளியில் பார்த்தேன்!” என்றவள் கடந்த காலத்திற்கு சென்றாள்.

அந்த கல்வியாண்டு தொடங்கி இரண்டு மாதங்கள் முடிந்திருந்த நிலையில், முதல் டேர்ம் பரீட்சை முடிவிற்கான பேரன்ட்ஸ் டீச்சர்ஸ் மீட்டிங் அன்று பள்ளியில் நடந்துக் கொண்டிருந்தது.

பள்ளியின் தாளாளர் மற்றும் முதல்வருக்கு ரிச்சர்ட் நன்கு அறிமுகமானவன் என்பதால் அவனுடைய சூழ்நிலை கருதி என்றுமே அவனை இவ்வாறான சந்திப்பிற்கு அவர்கள் எதிர்பார்ப்பதில்லை. அதற்கேற்ப அருந்ததியும் கல்வியிலும், ஒழுக்கத்திலும் சிறந்த மாணவியாக விளங்கியதால் தன் வசதியை பொருத்து தனிப்பட்ட முறையில் என்றேனும் பள்ளிக்கு வந்து அவளின் விவரங்களை கேட்டறிந்துக் கொள்வான் அவன்.

கிட்டத்தட்ட மீட்டிங் முடிகிற தருவாயில் பெரும்பாலான பெற்றோர்கள் கிளம்பிச் செல்லும் வேளையில் தன் பெண்ணுடன் பள்ளி வளாகத்திற்குள் அவசரமாக நுழைந்தார் கணபதிராம்.

நேரமாகி விட்டதே என வேகவேகமாக சென்று மீராவின் வகுப்பாசிரியை சந்தித்து பெயருக்கு விவரங்களை பெற்றுக் கொண்டவர் வெளியே வரும்பொழுது தான் தூரத்தில் அருந்ததியை கண்டார்.

‘இவள் எங்கே இப்பேர்ப்பட்ட வசதியான பள்ளியில் படிக்கிறாள்?’ என வியந்தவர் அவளிடம் பேச வேண்டி, தான் வாஷ்ரூம் சென்று வருவதாக மகளிடம் தெரிவித்துவிட்டு அருந்ததியை தேடிச் சென்றார்.

பள்ளி வெறிச்சோடி இருக்க மீட்டிங் தான் முடிந்து விட்டதே தானும் விடுதிக்கு செல்லலாம் என்று நடந்துக் கொண்டிருந்தவள் சட்டென்று தன் முன்வந்து வழியை மறித்து நின்ற மனிதரை நிமிர்ந்துப் பார்த்தாள்.

எதிரில் நின்றிருந்தவரை கண்டு லேசான வியப்பு ஏற்பட தன்னை வெறுத்து ஒதுக்கிய மனிதரிடம் தான் என்ன பேசுவது என ஒன்றும் புரியாமல் அமைதியாக நின்றாள் அருந்ததி.

“என்ன திருடனுக்கு தேள் கொட்டியது போல் திருதிருவென்று விழித்துக் கொண்டு நிற்கிறாய்?” என்றார் கணபதி அலட்சியமாக.

அவர் பேச வருவது புரியாமல் அவருடைய முகத்தையே சலனமின்றி பார்த்திருந்தாள் அவள்.

“இந்நேரத்திற்கு எங்கேயாவது அநாதை ஆசிரமத்தில் சேர்ந்திருப்பாய் அல்லது யார் கையிலாவது சிக்கி மோசமானதொரு வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருப்பாய் என்று நினைத்தேன். நீ என்னடாவென்றால் இவ்வளவு கௌரவமானதொரு பள்ளியில் உயர்வாக படித்துக் கொண்டிருக்கிறாய். உன் அம்மாவை விட நீ சாமர்த்தியசாலியாக இருப்பாய் போலிருக்கிறதே!” என்று ஏளனமாக இகழ்ந்துரைத்தார்.

தன் அம்மாவுடன் தன்னை எந்த அர்த்தத்தில் ஒப்பிட்டுப் பேசுகிறார் என புரிந்து முகம் சிவந்தவள் அவரை வெறுப்புடன் ஏறிட்டு, “உங்களை மாதிரி மோசமான ஆட்கள் இருக்கின்ற உலகத்தில் தான் என் அண்ணன் போன்ற நல்ல குணமுள்ளவர்களும் இருக்கிறார்கள். மனிதாபிமானமிக்க அவருடைய தயவில் தான் எனக்கு இதுபோன்ற கௌரவமானதொரு வாழ்க்கை கிடைத்தது. இல்லையென்றால் நீங்கள் சொல்வது போலத்தான்…” என்றவளுக்கு அதற்கு மேல் வார்த்தைகள் பிரசவிக்க மறுத்து அந்நாளைய நினைவில் தொண்டை அடைத்து விழிநீர் பெருக துடித்தது.

தன்னை துச்சமாக எண்ணி கேவலமாக பார்க்கும் மனிதர் முன் தன் கண்ணீரை வெளிப்படுத்தி விடக்கூடாது என வேகமாக விலகி நடக்க முயன்றவளை கோபமாக தடுத்தார் கணபதி.

“அப்பொழுது என்னடி சொல்ல வருகிறாய் நீ? உன்னுடைய அம்மாவுக்கும், உனக்கும் தங்க இடம் கொடுத்து, சோறுப் போட்டு ஒவ்வொன்றிற்கும் தேவைமீறி செலவு செய்த நான் மோசமானவனா?” என்று எகிறினார்.

‘ஹும்… அதை எதற்கு செய்தீர்கள் என்று உங்கள் மனசாட்சியை கேட்டுப் பாருங்கள்!’ என ஏளனமாக எண்ணமிட்டவள் அதை வெளியில் சொல்ல விருப்பமில்லாமல், “எந்த சுயலாபமும் இல்லாமல் நல்ல எண்ணத்துடன் என்னை படிக்க வைக்கும் என் அண்ணனோடு ஒப்பிடுகையில் நீங்கள் மோசமானவர் தான்!” என்றாள் பெண் நிமிர்வோடு.

விழிகள் சிவக்க அவளை எரித்து விடுவதை போல் பார்த்தவர், “ஏன்டி சொல்ல மாட்டாய்? உன் அம்மாவை போலவே தானே உன்னுடைய புத்தியும் இருக்கும். எவனுடன் ஒண்டிக்கொண்டு திரிகிறீர்களோ அவனைத்தானே உயர்த்தி பேசுவீர்கள்!” என்றார் வெறியோடு.

அதிர்ந்து விழித்தவள் சுற்றிலும் அவசரமாக விழிகளை ஓட்டிவிட்டு, “மரியாதையாகப் பேசுங்கள்… என் அம்மாவை போல் நானில்லை. அவர்கள் வயிற்றில் பிறந்த பாவத்திற்காக என்னை அசிங்கமாக பேசுவதோடு நிறுத்திக் கொள்ளுங்கள். அண்ணாவை பற்றி எதைச் சொல்லவும் உங்களுக்கு அருகதையில்லை!” என்று இவளும் எடுத்தெறிந்துப் பேசினாள்.

பிடிக்காதவள் என்றாலும் அத்தனை வருடக்காலம் தன் கண்முன்னே வளர்ந்த சின்னப்பெண் என்கிற இரக்கம் கூட இல்லாமல் அநாதையாக வீட்டை விட்டு விரட்டியவர் பேசுகின்ற பேச்சைப் பார் என அவளுக்கும் ஆத்திரம் பெருகியது.

“என்னை அவமானப்படுத்துகிற அளவிற்கு நீ வளர்ந்து விட்டாயாடி? உன்னை என்ன செய்கிறேன் பார், இப்பொழுதே இங்கிருக்கும் அத்தனைப்பேர் முன்னாடியும் நீ ஒரு வைப்பாட்டியின் பெண் என சொல்லப் போகிறேன் இரு!” என கணபதி விறுவிறுவென்று நடக்க, அருந்ததி விக்கித்து நின்றாள்.

ரிச்சர்டின் தயவால் சில ஆண்டுகளாக தனக்கு கிடைத்த கௌரவமான வாழ்க்கை மீண்டும் இவரால் பாழ்பட்டு போகப் போவதை எண்ணி அஞ்சியவள் அவரை விட அதிவிரைவாக சென்று அவர் முன் வழிமறித்து நின்றாள்.

“என்ன? வேண்டாம் என்று எதுவும் கெஞ்சப் போகிறாயா… நீ என்ன சொன்னாலும் சரி உன்னை அவமானப்படுத்தாமல் நான் விடமாட்டேன்!” என்றார் திமிராக.

“ஹும்… நான் ஏன் கெஞ்சப் போகிறேன்? உங்களை போன்ற ஆட்களிடம் கெஞ்சினாலும் எந்தப் பலனும் ஏற்படாது என்பது நான் வாழ்க்கையில் கற்றுக்கொண்ட ஒரு அனுபவப் பாடம். அதை நான் நிச்சயமாக செய்ய மாட்டேன்!” என்றாள் அருந்ததி அலட்சியமாக.

“பின்னே?”

அவரை நேராகப் பார்த்தவள், “வாழ்க்கையில் பல அடிகள் பட்டு என்னை நானே உறுதியாக மாற்றிக் கொண்டிருக்கிறேன் நான். என்னை அவமானப்படுத்த முயன்றால் உங்களை சும்மா விடமாட்டேன். நீங்கள் இந்த பள்ளிக்கு வந்ததிலிருந்தே உங்கள் பிள்ளைகளும் இங்கே தான் படிக்கிறார்கள் என்பது நன்றாக தெரிகிறது. அவர்கள் நண்பர்களிடமும், பள்ளி முழுவதும் உங்களை பற்றிய விவரங்களை நான் தெரிவிப்பேன். குடும்பம், மனைவி, பிள்ளைகளை விடுத்து வேறொரு பெண்ணை ஆசைக்கு தேடிச்சென்ற ஆள் தான் இவர்களுடைய தந்தை என உங்களுடன் சேர்த்து அவர்களையும் அவமானப்படுத்துவேன். அதன்பிறகு இந்தப் பள்ளியில் என்னை போலவே அவர்களும் அசிங்கப்பட்டு நிற்கட்டும்!” என்று அவரிடம் நிமிர்வாக சொன்னாலும் உள்ளுக்குள்ளே அவளுக்கு பெரும் உதறல் தான்.

அடுத்து அவர் வேறெதாவது எதிர்த்துப் பேசினால் அதற்கு தன்னிடம் தகுந்த பதிலிருக்குமா என்பது தெரியாமல் தன்னுடைய நடுக்கத்தை மறைத்து பரிதவிப்புடன் நின்றிருந்தாள் அருந்ததி.

திடீரென்று தங்களுடைய வாக்குவாதத்தில் அவள் பிள்ளைகளை உள்ளே இழுத்து விடவும் உண்மையில் கொஞ்சம் அதிர்ந்து தான் போனார் கணபதிராம். தன்னை அப்பா என்று அழைத்து தன்னிடமும், அவள் தாயிடமும் வாங்கி கட்டிக்கொண்டு பயந்து ஒதுங்கி சென்ற சிறுமியா இவள் என்றிருந்தது அவருக்கு. இவளால் தன் பெண்ணிற்கு பள்ளியில் எந்த அவமானமும் நேர்ந்து விடக்கூடாது என்கிற கவலையில் அவளை அப்படியே விட்டுச்செல்ல விருப்பமில்லை என்றாலும் வேறுவழியின்றி ஆத்திரத்துடன் விலகிச் சென்றார் அவர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *