*3*

 

மறுநாள் நண்பகலில் பரிமளம் பாட்டிக்கு உடம்பு முடியவில்லை என்பதால் தன்னால் எதுவும் மென்று சாப்பிட முடியாது அரிசி கஞ்சி மட்டும் செய்து விடு என அருந்ததியிடம் சொல்லி விட்டார்.

அவளும் அவரிடம் பக்குவம் கேட்டு, இருப்பதே இரண்டே பேர் தானும் அதையே குடித்துக் கொள்ளலாம் என அரிசியை வாணலியில் இட்டு பொன்னிறமாக வறுக்க ஆரம்பித்தாள்.

ரிச்சர்ட் காலை உணவை முடித்துவிட்டு கம்பெனிக்கு சென்றான் என்றால் மீண்டும் இரவில் தான் வீடு திரும்புவான். மதிய இடைவெளியில் வீட்டில் ஏதாவது முக்கியமான டாக்குமென்ட்ஸ் எடுக்க வேண்டியிருந்தால் மட்டும் வீட்டிற்கு வருவான். அந்த நேரத்திலும் வயதான பாட்டியை தொந்திரவுக் செய்ய கூடாது என்று வெளியிலேயே உணவை முடித்துக் கொள்வான்.

அந்த வீட்டில் அவனை தவிர உடன் தங்கியிருப்பது பரிமளம் பாட்டி மற்றும் அருந்ததி தான். வீடு மற்றும் தோட்ட வேலைக்கென்று தம்பதியர் இருவர் காலை பத்து மணிக்கு வந்து மடமடவென்று அனைத்தையும் சுத்தம் செய்து விட்டு துணியை அலசி உலர்த்தி என ஒரு மணி நேரத்தில் தங்கள் வேலையை முடித்துக்கொண்டு வெளியேறி விடுவர். வாயிலில் இரண்டு ஷிப்டாக மாற்றி மாற்றி காவலுக்கு இருக்கும் பாதுகாவலர்களும் வீட்டில் இருந்தே தங்கள் உணவை எடுத்து வந்து விடுவார்கள். அவர்களுக்கு இருவேளை தேநீர் அளிப்பது மட்டும் தான் பரிமளம் பாட்டியின் வேலை. தன் வீட்டில் வேலைப் பார்க்கும் பணிப்பெண் என்றாலும் அவரும் வயதான மனுஷி மிகவும் தொந்திரவு கொடுக்க கூடாது என்பதில் கவனமாக இருப்பவன் ரிச்சர்ட்.

பாட்டிக்கும் பையன் இல்லை, வெளியூரில் வசிக்கும் இரண்டு மகள்கள் மட்டும் தான் என்பதால் அவர்களுக்கு திருமணம் முடித்த கையோடு இங்கேயே நிரந்தரமாக வந்து தங்கி விட்டார். எதுவும் பண்டிகை, விசேஷம் என்றால் மட்டும் ஊர் பக்கம் போய் வருவார்.

வறுத்த அரிசியை நிறைய தண்ணீர் விட்டு குக்கரில் வைத்தவள் அதனுடன் நான்கு பூண்டு பல்,சிறிது வெந்தயம், சீரகம் என சேர்த்து மூடி வைத்தாள்.

கைகள் தன் போக்கில் வேலை செய்தாலும் மனம் முழுவதும் முன்தினம் ரிச்சர்ட் பேசியதிலேயே உழன்றுக் கொண்டிருந்தது. தன்னை பள்ளியில் சேர்க்க விடாமல் அவரை தடுப்பது எப்படி? தனக்கு படிப்பில் துளியும் ஆர்வம் இல்லையென்று சொல்லியாகி விட்டது. இருந்தும் அதைமீறி அடுத்தாண்டு நீ ஏழாம் வகுப்பில் சேர்ந்து படிக்கிறாய் அவ்வளவு தான் என முடித்து விட்டாரே என்று கவலையில் ஆழ்ந்தாள் அருந்ததி.

குக்கர் விசிலடிக்கவும் திடுக்கிட்டு விழித்தவள் அதை அணைத்து விட்டு சோர்வுடன் தரையில் சரிந்தமர்ந்து ஆதரவு தேடி முழங்கால்களில் முகம் புதைத்துக் கொண்டாள். மனதில் தன் வாழ்வை குறித்த கழிவிரக்கமும், சுயபச்சாதாபமும் ஒருங்கே தோன்றியது. தன்னந்தனியே அதையெல்லாம் அசைப்போட்டபடி விழிகளில் வழியும் நீரை துடைக்க தோன்றாது சற்று நேரம் சுவரை வெறித்திருந்தாள்.

பின்பே நினைவு வந்தவளாக வேகமாக எழுந்தவள் இரு கன்னங்களையும் அழுந்த துடைத்து விட்டு, குக்கரை திறந்து வெந்த கஞ்சியை பாத்திரத்தில் ஊற்றி அதில் சிறிது பால் கலந்து ஆற்றிவிட்டு பரிமளத்திற்காக டம்ளரில் ஊற்றிக்கொண்டு எடுத்து சென்றாள்.

அறைக்கதவு திறந்திருக்க பாட்டி ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தார். அவர் அருகில் அமர்ந்து பாட்டி என அழைத்து அவருடைய கையை தொட்டவுடனேயே இவள் விழிகளில் பீதி பரவியது.

மூச்சுக்காற்று சீரற்று வேக வேகமாக வெளியேற ஆரம்பிக்க, இதயம் தடதடத்து லேசாக அடைப்பது போல் இருந்தது. குப்பென்று உடல் சூடாகி வியர்வையை உற்பத்தி செய்ய துவங்க, தன் எண்ணம் சரிதானா என்பதை உறுதி செய்துக் கொள்ள நடுங்கும் விரல்களால் அவர் சுவாசத்தை ஆராய்ந்தாள்.

சுவாசம் இல்லை… ஓய்ந்துப் போய் தன் கரங்களை இழுத்துக் கொண்டவளுக்கு கடந்த இரண்டு மாத காலமாக அவர் தனக்கு அளித்த பாதுகாப்பு கண் முன்னே நிழலாடியது. மீண்டும் சுழற்சி முறையில் அநாதையாக தான் பாதுகாப்பற்ற சூழலில் ஆரம்ப புள்ளியில் திரும்ப வந்து நிற்பது அவளுள் பீதியை கிளப்பியது.

அன்று என்னை பெற்றவள் விட்டுச் சென்றப்பொழுதும் அடுத்து என்ன… என்ன? என்று இதே நிலைதான். எனக்கு மட்டும் ஏன் இப்படியொரு வாழ்வு? அவளின் உத்திரவு இல்லாமலேயே விழிகள் நீரைப் பொழிந்தது. பாட்டியின் முகத்தை பார்த்து விக்கியவளுக்கு தான் அவருக்காக அழுகிறோமா அல்லது தனக்காக அழுகிறோமா என தெரியவில்லை.

வேதனையிலும், கவலையிலும் உடல் சில்லிட்டு வெடவெடக்க துவங்க, அடுத்து என்ன செய்வது என்று அவளுக்கு புரியவில்லை. சற்று முன்னர் வரை பள்ளிக்கு செல்வதை எப்படி தவிர்ப்பது என அஞ்சிக் கொண்டிருந்தவளுக்கு தற்பொழுது இனி இந்த வீட்டில் தான் மட்டும் எப்படி ரிச்சர்ட் உடன் தனிமையில் இருப்பது என்ற பேரச்சம் மலையாக எழுந்து அவளை ஆட்கொண்டது.

பற்கள் தந்தியடிக்க சுவரோடு ஒண்டியபடி விழிகள் கொட்ட கொட்ட பரிமளத்தின் முகத்தை பார்த்தபடி மாலை வரை அப்படியே ஒடுங்கிப் போய் அமர்ந்திருந்தாள் அருந்ததி.

வழக்கமாக மாலை ஐந்து மணிக்கு கிடைத்துவிடும் தேநீரும், சிற்றுண்டியும் ஆறை தாண்டியும் வரும் அறிகுறி தெரியவில்லை எனவும் தலையை சொரிந்த வாயிற் காப்பாளர் தேநீர் கேட்க வேண்டி கதவின் அருகே வந்து குரல் கொடுத்தார்.

“பாட்டி!”

அவருடைய குரலுக்கு பதில் வராமல் நிசப்தமே குடிக்கொண்டிருக்கவும் குழம்பிப் போய், “பாப்பா!” என்று இம்முறை அருந்ததியை அழைத்தார்.

பளிச்சென்று வெடித்த மெல்லிய விசும்பல் ஒலி அவருக்கு திகைப்பை உண்டாக்க வீட்டிற்குள் செல்லக் கூடாது என்கிற ஆணையை மீறி வேகமாக உள்ளே விரைந்தார்.

அறையில் பரிமளம் அசையாது படுத்திருக்க, அருந்ததி சுவரோரம் ஒண்டி நடுங்குவதிலேயே விஷயத்தை ஓரளவு புரிந்துக் கொண்டவர், “ஐயோ… எப்பொழுதும்மா… எப்படி?” என்று பதறிவிட்டு அச்சிறுப்பெண்ணிடம் இருந்து பதிலைப் பெறுவது கடினம் என்பதை உணர்ந்து வேகமாக தன்னுடைய அலைபேசியை எடுத்து ரிச்சர்டை அழைத்தார்.

பின்னிரவு வரை வேலை தேங்கியிருக்க விவரம் தெரிந்தவுடன் அதையெல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு பதறியடித்து கிளம்பியவன், செக்யூரிட்டி சொன்னதை வைத்து எவ்வளவு நேரம் ஆனதோ தெரியவில்லையே என வரும் வழியிலேயே பரிமளம் பாட்டியின் குடும்பத்தாருக்கும் தகவலை தெரிவித்து விட்டான்.

காரை நிறுத்தி விட்டு பதற்றமாக உள்ளே ஓடிவந்தவன் முதலில் பார்த்தது அருந்ததியை தான். ஜீவனே இல்லாமல் வெறித்தப் பார்வையுடன் அமர்ந்திருந்தவளை கண்டு மலைப்புடன் நின்றான்.

அவன் எதிர்பார்த்திருந்தது தான் அனைத்தையும் இழந்து பற்றுக்கோலாக பாட்டியை மட்டுமே பற்றிக் கொண்டிருப்பவளின் நிலையை எண்ணி தான் அவனுக்கு கவலையும், பதற்றமும் முளைத்திருந்தது. லேசாக பெருமூச்செரிந்தவன் திரும்பி பாட்டியை பார்க்க அவருடைய ஆழ்துயில் அவனுக்கு வருத்தத்தை தோற்றுவித்தது.

அடுத்து அவன் அருந்ததியை நெருங்க அவள் முகத்தில் லேசான பதற்றம் தோன்றியது. அதை அலட்சியம் செய்து அவளருகில் சென்றவன் மென்குரலில் விசாரித்தான்.

“எப்படி… என்னவாயிற்று, இப்படி தனியாக அமர்ந்திருப்பதற்கு பதில் எனக்கு தகவல் தெரிவித்திருக்கலாம் அல்லவா?” என்று கனிவுடன் கேட்க, அவள் விழிகளில் தான் அவன் தெரிந்தானே தவிர உணர்வில் பதியவில்லை.

‘எப்பொழுது… என்னவாயிற்று? மரம் மாதிரி இப்படி உட்கார்ந்து இருக்கிறாய், தகவல் தெரிவிக்க தெரியாதா என்ன?’ என்று எரிந்து விழுந்த குரல் செவியில் மோத, இதழ் பிதுங்கி விழிகள் ஊற்றெடுத்தது.

தன் வினாவிற்கு தான் அழுகிறாள் என தவறாக அர்த்தம் கொண்டவன் அவள் கரம்பற்றி அழுத்தி, “ஷ்… சரி… இட்ஸ் ஓகே, எப்பொழுது என்று மட்டும் சொல்!” என்று அமைதிப்படுத்தினான்.

அவனிடமிருந்து சுவாதீனமாக தனது கரத்தை இழுத்துக் கொண்டவள், “ம… மதி… மதியம் கஞ்சி… கொண்டு…” என்றவள் நாசி விரிய திக்க, “சரி சரி ரிலாக்ஸ், போதும்!” என்று அவசரமாக எழுந்து வெளியே சென்றான்.

தேவையான ஏற்பாடுகளுக்கு எல்லாம் உத்திரவிட்டு வந்தவன், அப்பொழுது தான் பரிமளத்தின் அருகில் கஞ்சி டம்ளர் இருப்பதை கண்டான். யோசனையோடு அருந்ததியை ஏறிட்டவன் ஓய்ந்திருந்தவளின் தோற்றத்தை வைத்தே அவள் எதுவும் உண்டிருக்க மாட்டாள் என உணர்ந்து டைனிங் ரூமிற்கு சென்று பிரிட்ஜில் இருந்த பழச்சாறு பாக்கெட் ஒன்றை எடுத்து வந்தான்.

அதில் ஒட்டியிருந்த ஸ்டிராவை போட்டு அவளிடம் நீட்ட தலையசைத்து மறுத்தபடி குனிந்துக் கொண்டாள் அவள்.

“இங்கே பார்… பாட்டி இறந்தது மிகவும் வருத்தத்திற்குரிய விஷயம் தான். அதற்காக நாம் என்ன செய்ய முடியும் சொல்? பிடிவாதம் பிடிக்காமல் கொஞ்சமேனும் குடி!” என்று வற்புறுத்தினான் ரிச்சர்ட்.

“எனக்கு வேண்டாம்!” என மீண்டும் மெல்லிய குரலில் மறுத்தாள்.

“அருந்ததி!” என்ற லேசான அதட்டல் பிறக்கவும் மிரட்சியுடன் அவனிடம் விழிகளை உயர்த்தினாள்.

“நீயாக குடிக்கிறாயா அல்லது நான் ஊட்டி விடட்டுமா?” என்க, பதறியடித்து அவன் கையில் இருந்ததை பறித்துக் கொண்டாள் பெண்.

“ம்… குட்!” என்றபடி அவளுக்கு தனிமை கொடுத்து வெளியேறினான்.

நடுங்கும் இதழ்களுக்கு இடையே சிரமப்பட்டு ஸ்டிராவை பொருத்தியவள் மெதுவாக உறிஞ்ச ஆரம்பித்தாள்.

அடுத்த இரண்டு மணி நேரத்தில் பரிமளம் பாட்டியின் மருமகன்கள் அங்கு வந்து சேர, நடந்ததற்கு வருத்தம் தெரிவித்து அவரை அவர்களிடம் ஒப்படைக்க முயன்றான் ரிச்சர்ட்.

நன்றி செலுத்துவதற்கு மாறாக அவர்களோ எகிறினர், “என்ன சார் இது? மதியம் இறந்து விட்டார் என்கிறீர்கள், இவ்வளவு தாமதமாக தகவலை தெரிவிக்கிறீர்கள்!” என்று முறைத்தனர்.

“அதற்கு என்ன செய்ய முடியும்? அவருடன் யாராவது இருந்திருந்தால் நிச்சயம் உடனே தகவலை தெரிவித்திருப்போம். இது யாருமே எதிர்பாராத ஒரு நிகழ்வு, அந்த நேரத்தில் இந்த சின்னப்பெண் மட்டும் தான் வீட்டில் இருந்தாள். அவளுக்கு என்ன தெரியும்?” என்று விளக்க முயன்றவனை இடையிட்டான் பெரிய மருமகன்.

“ஏன் தெரியாது… பதிமூன்று வயதாகிறது, ஒருவர் இறந்து விட்டால் தகவல் தெரிவிக்க வேண்டும் என்பது கூட தெரியாதா? அப்படியே ஒன்றும் தெரியாத கையில் தவழ்கின்ற பச்சைப்பிள்ளையா அது?” என்று அவன் எடுத்தெறிந்துப் பேசவும் ரிச்சர்டுக்கு சினம் பெருகியது.

“என்ன பேசுகிறீர்கள் நீங்கள்? பாட்டியின் இழப்பை பார்த்து அந்த சின்னப்பெண்ணே என்ன செய்வதென்றே தெரியாமல் மிகவும் பயந்து போய் அழுதுக் கொண்டிருந்தாள்…”

“ஆமாம்… ஆமாம்… அப்படியே சொந்தப் பேத்தி பாருங்கள், தன்னை விட்டு இறந்து போய் விட்டாரே என்று பயந்து நடுங்கி ஒன்றும் புரியாமல் விழிப்பதற்கு. என் பெண்ணே தன் பாட்டியை நினைத்து அழுதாலும் சொந்தக்காரர்களுக்கு எல்லாம் தகவல் கூறிக்கொண்டு இருக்கிறது. இவளால் உங்களுக்கு ஒரு போன் பண்ண முடியவில்லையாம்மா?” என்று ஏளனமாக வினவினான் சின்னவன்.

முகம் சிவக்க, “லுக்… அதெல்லாம் அவரவர் மனதை பொறுத்தது. சுற்றி அரவணைக்க உங்கள் குடும்பத்தினர் அனைவருடனும் இருக்கின்ற பெண்ணை விட யாருமற்று அநாதரவாக தன்னந்தனிமையில் நிற்கின்ற பெண்ணிற்கே அந்த பாட்டியின் இழப்பு மிக அதிக பாதிப்பை கொடுத்திருக்கிறது. இது உங்களுக்கு அநாவசியமானது தகவலை தெரிவித்து விட்டோம், ஃப்ரீஸர் பாக்ஸில் உடலை வைத்தாகிற்று வாசலில் அமரர் ஊர்தியும் தயாராக நிற்கிறது நீங்கள் கிளம்பலாம். பாட்டியின் சம்பள விவகாரத்தை நான் நாளை அங்கே வந்து பேசிக் கொள்கிறேன்!” என்று உத்திரவிட்டான் ரிச்சர்ட்.

“இவர் பெரிய முதலாளி என்றால் இவர் சொல்வதெற்கெல்லாம் நாங்கள் அடிப்பணிந்தாக வேண்டுமா? மதியமே சொல்லியிருந்தால் இந்நேரம் அனைத்து காரியங்களையும் முடித்து அக்கடாவென்று உட்கார்ந்து இருக்கலாம். அதை விட்டுவிட்டு இப்பொழுது பிணத்தை நடுவீட்டில் போட்டு வைத்து உறங்காமல் அதற்கு விடிய விடிய காவல் வேறு இருக்க வேண்டும்!” என்று தங்களுக்குள் முனகியபடி இருவரும் பரிமளத்தின் உடலை எடுக்க செல்ல, மிகுந்த அருவருப்புடன் அவர்களை நோக்கினான் நாயகன்.

வெளியே பேசுவதெல்லாம் காதில் விழ உணர்வின்றி அசையாது அமர்ந்திருந்தவள் அறைக்குள்ளே வந்து தன்னை லேசாக முறைத்தபடி பாட்டியின் உடலை அவர்கள் எடுத்து செல்லவும் அதுவரை சற்றே மட்டுப்பட்டிருந்த அச்சம் மீண்டும் தலைதூக்க பதற்றத்துடன் தன் எதிர்காலத்தை எண்ணி பரிதவிக்க ஆரம்பித்தாள் அருந்ததி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *