*29*

 

“சரி வா நாமும் கீழே போகலாம், இங்கே இருந்து என்ன செய்யப் போகிறோம்?” என அருந்ததியை அழைத்துக் கொண்டு லிவிங் ரூமிற்கு வந்தான் ரிச்சர்ட்.

சரியாக அந்நேரத்திற்கு உணவும் வந்து சேர அவர்களை அப்படியே அழைத்துப் போய் உணவு அறையில் அமர வைத்து விட்டான் தருண். தன்யா மற்றவர்களையும் உடன் அமர வைத்து உணவு பரிமாற லேசான முகச்சுளிப்புடன் இருந்த அட்சயா எவரிடமும் பார்வையை உயர்த்தாமல் அமைதியாக சாப்பிட்டாள்.

அருகே அமர்ந்திருந்த கருண் அவளிடம் எதையோ தொணதொணத்து கொண்டே இருக்க சலிப்புடன் அவனை ஏறிட்டவள், அடங்கு என்பது போல் பார்வையாலே அவனை அதட்டினாள்.

“சிடுமூஞ்சி… சிடுமூஞ்சி…” என அவள் மட்டும் கேட்க முணுமுணுத்தவன் சின்ன சிலுப்பலுடன் திரும்பிக் கொண்டான்.

அதைக்கண்டு இதழ் மலர துடித்தாலும் இழுத்து பிடித்த கோபத்துடன் வீம்பாக இருந்தாள்.

அனைவரிடமும் இன்முகத்துடன் விடைப்பெற்ற ரிச்சர்ட் கவனமாக அட்சயாவை தவிர்த்து விட்டு அருந்ததியுடன் வெளியேறினான்.

அதைக் கவனித்திருந்த கருண், “அடுப்பில் இருந்து இறக்கிய கொதிக்கின்ற பாலை தெரியாமல் குடித்து ஒருமுறை சுட்டுக்கொண்ட பூனை பிறகு கறந்த பசும்பாலை கூட சுடும் என்று எண்ணி பயப்படுமாம். அதைப் போல தான் நீயும் நடந்து கொள்கிறாய்!” என அவளிடம் ரகசியம் பேசிவிட்டு குழந்தைகளிடம் சென்றான்.

இவனை… என பல்லைக் கடித்தவள், அவனிடம் சண்டைப் போடும் ஆர்வம் இல்லாமல் சித்துவிடம் சென்று நேராக நின்றாள்.

“மாமா… நானும் கிளம்புகிறேன், ஊரிலிருந்து கொண்டு வந்த லக்கேஜை அப்படியே வீட்டில் எறிந்து விட்டு ஓடி வந்து விட்டேன். இனி போய் தான் எல்லாவற்றையும் ஒதுங்க வைக்க வேண்டும். நாளை முதல் மீண்டும் மருத்துவனைக்கு செல்ல சரியாக இருக்கும்!”

“ஓ… சரிடா, கிளம்பு. அம்மா வருத்தப்படுகின்ற விஷயத்தையும் கொஞ்சம் யோசித்து நல்ல முடிவாக எடு. ஆங்… அப்புறம் உங்கள் எல்லோரிடமும் ஒரு விஷயம் சொல்ல வேண்டும். நம் கருண் தன் மனதிற்கு பிடித்த ஒரு பெண்ணை தனக்கு வாழ்க்கை துணையாக தேர்ந்தெடுத்துள்ளான்!” என்று அனைவரையும் பார்த்து புன்னகையுடன் விவரம் கூறினான்.

அதுவரை இருந்த வெறுப்பும், விரக்தியும் விடைப்பெற்று ஆர்வம் தலைத்தூக்க, “அப்படியா? அந்த டாங்கி என்னிடம் சொல்லவே இல்லை பாருங்கள்… யாரு மாமா பெண்?” என்றாள் அட்சயா ஆவலே உருவாக.

“எல்லாம் உங்களுக்கு அறிமுகமானவள் தான், சற்று முன்னர் விடைப்பெற்று சென்றாளே… அதே அருந்ததி தான்!”

மனதில் உருவாகும் ஏமாற்ற அலையை முகத்திற்கு பரவாமல் தடுத்தவளுக்கு, ‘அப்பொழுது இனிமேல் அவளுடைய சகோதரன் என்கிற முறையில் ரிச்சர்டையும் அவ்வப்பொழுது சந்திக்க நேரிடுமோ?’ என்ற நினைவே எரிச்சலை உண்டாக்கியது.

“ஓ… பார்க்க நல்லப்பெண்ணாக தான் தெரிகிறாள், குடும்பமெல்லாம் எப்படி?” என விசாரித்தார் பார்வதி.

“அதுதான் கொஞ்சம் குழப்பமாக இருக்கிறது அத்தை. அண்ணன் கிருஸ்டியன், தங்கை இந்து. எந்தவொரு உறவின் அரவணைப்பிலும் வளராமல் தான் மட்டும் ஒற்றைப் பிள்ளையாய் வளர்ந்தவன் என்று அவன் வாயாலேயே தன் மனதின் ஏக்கத்தை எங்களிடம் பகிர்ந்தான். பிறகு அருந்ததி எப்படி உறவு என ஒன்றும் புரியவில்லை, தங்களை பற்றிய விளக்கத்தை கொடுக்க அவனுடைய மனம் விரும்பவில்லை என்பது புரிந்ததால் நானும் கேட்காமல் விட்டு விட்டேன்!”

அனைவரும் யோசனையோடு நிற்க, “அதனால் தான் அம்மா, இதை கொஞ்சம் தள்ளிப்போட சொல்லி இருக்கிறேன். இன்னும் ஒரு இரண்டு வாரத்தில் அவளுக்கு எக்ஸாம்ஸ் எல்லாம் முடிந்து கல்லூரி படிப்பையும் முடித்து விடுவாள். அதன்பிறகு ரிச்சர்டிடம் இதைப்பற்றி விவரமாக பேசலாம் என்றிருக்கிறோம்!” என்றாள் சிந்துஜா தீவிரமாக.

“ம்… நீ சொல்றதும் சரிதான்மா, எல்லாம் நல்லபடியாக நடக்கும் கவலைப்படாதீர்கள்!” என வாழ்த்து தெரிவித்து விட்டு அவருடைய குடும்பத்தினர் கிளம்பி சென்றனர்.

அதன்பிறகு வந்த நாட்கள் அந்த குடும்பத்தினருக்கு ஒவ்வொரு விதத்தில் கழிந்தது. சித்துவும், சிந்துவும் தங்களுக்குள் ரிச்சர்ட், அருந்ததி குறித்து பலவிதமாக அலசி ஆராய்ந்து, அவள் எந்த நிலையில் இருந்தாலும் சரி அவளை எப்பாடுப்பட்டாவது தங்கள் வீட்டிற்கு மருமகளாக கொண்டு வந்துவிட வேண்டும் என உறுதியாக இருந்தனர்.

தருணும், தன்யாவும் அவர்கள் மீது நம்பிக்கை வைத்து அவளை தங்கள் வீட்டுப்பெண்ணாக வரவேற்க ஆவலுடன் காத்திருந்தனர்.

கருண் ரிச்சர்டிடம் ஒருமுறை வாய்விடப் பார்த்து சுதாரித்துக் கொண்டதால் அப்பேச்சை விடுத்து அவனுடனான நட்பின் ஆழத்தை அதிகரிக்க அடுத்து என்ன செய்யலாம் என யோசிக்கும் பொழுது தான் ரிசப்ஷன் அன்று அருந்ததி மயங்கி விழுந்தது அவன் நினைவிற்கு வந்தது.

உடனே பரபரவென்று நண்பனை அலைபேசியில் பிடித்தவன், தன் நிலையை எடுத்து சொல்லி அவனுடைய திருமண ரிசப்ஷன் வீடியோ பதிவினை கேட்டான். அவனும் அதை ஏற்றுக்கொண்டு பென்டிரைவில் காபி எடுத்து வைக்கிறேன் வந்து வாங்கிக் கொள் என அனுமதித்தான்.

மீண்டும் அருந்ததியை சந்திக்க வாய்ப்பு கிடைத்ததை எண்ணி உற்சாகமாக ஆர்ப்பரித்தவன், பென்டிரைவ்வை வாங்கிக் கொண்டு ரிச்சர்டின் வீட்டிற்கு செல்லும் பொழுது தான், ‘அடச்சே… அவள் ஹாஸ்டலில் தானே இருப்பாள்!’ என மெலிதாக ஏமாந்தான்.

தன் இல்லத்திற்கு வந்த கருணை ஆவலுடன் வரவேற்ற ரிச்சர்ட், அவன் முகம் தொங்கிக் கிடப்பதை குழப்பத்துடன் கவனித்து பின் அவனுடைய நிலையுணர்ந்து லேசாக நகைத்தான்.

“என்னப்பா ரொம்ப டல்லாக தெரிகிறாய் வரவேற்பில் எதுவும் குறை வைத்து விட்டேனா?” என்றான் கிண்டலாக.

‘அட ஏன்பா நீ வேற… நானே இதை சாக்காக வைத்து அப்படியே என் பப்ளியை பார்த்து விடலாம் என்று பார்த்தேன்!’ என உள்ளுக்குள் அலுத்தான் கருண்.

“அதெல்லாம் எதுவுமில்லையே நான் நார்மலாக தான் இருக்கிறேன்!” என்று தோள்களை குலுக்கினான்.

“ஆஹாங்… சரி வா!” என அழைத்து சென்று சோபாவில் அமர வைத்தவன், “ஒரு பேச்சிலர் வீட்டிற்கு நேரங்கெட்ட நேரத்தில் வருகை புரிந்தால் அவன் ப்ரிஜ்ஜில் எந்த குளிர்பானங்களை சேமித்து வைத்திருக்கிறானோ அதைத்தான் தர முடியும்!” என்றவாறு பாட்டிலில் அடைக்கப்பட்டிருந்த ஆப்பிள் ஜியூஸை இரண்டு டம்ளர்களில் ஊற்றி அவனிடம் ஒன்றை நீட்டினான்.

அவன் பேசுவதை உள்வாங்கியபடி, “தாங்க் யூ!” என சின்ன முறுவலிப்புடன் டம்ளரை வாங்கிக் கொண்டவன் யோசனையோடு வீட்டை அளவெடுத்தான்.

“உங்களிடம் ஒன்று கேட்கலாமா?” என்றபடி தன்னிடம் திரும்பியவனை ஆழ்ந்து நோக்கிய ரிச்சர்ட், ம்… என்று தலையசைத்தான்.

“இவ்வளவு பெரிய வீட்டில் நீங்கள் ஏன் தனியாக இருக்க வேண்டும்? அருந்ததி உங்கள் தங்கை தானே அவளை உங்களுடனேயே தங்க வைத்துக் கொள்ளலாம் அல்லவா? நீங்கள் வெளியூர் செல்ல நேரிடும் பொழுது மட்டும் மாற்று ஏற்பாடுகள் செய்துக் கொள்ளலாமே… எதற்காக இருவரும் ஆளுக்கொரு திசையில் தனிமையில் வசிக்க வேண்டும்!” என்று வினவினான் கருண்.

சில நொடிகளுக்கு தன் கையில் இருந்ததை வெறித்தவன் பின் அவனிடம் நிமிர்ந்து, “அது எங்கள் தலையெழுத்து!” என்று விரக்தியாய் உதட்டை வளைத்தான்.

‘என்ன பிரச்சனை?’ என கேட்க வாயெடுத்தவனுக்கு நான்கு தினங்களுக்கு முன் ரிச்சர்ட் தன் வீட்டில் வருந்தியது நினைவிற்கு வர, “அருந்ததி உங்கள் உடன்பிறந்த தங்கை இல்லையா? அன்று கூட நீங்கள் ஒற்றை பிள்ளையாய் வளர்ந்ததாக…” என்று விசாரிக்க ஆரம்பித்த கருண் எதிரிலிருந்தவன் சோர்வாக பின்னால் சாயவும் இடையில் நிறுத்திக் கொண்டான்.

“ம்… அவள் என்னுடன் பிறக்கவில்லை என்றாலும் என் உடன்பிறப்பாக தான் எண்ணுகிறேன். ஒருவருக்கொருவர் ஆறுதலாக ஒரே வீட்டில் வசிக்க தான் இருவருக்கும் ஆசை என்றாலும் சமூகத்திற்கும், அதை சார்ந்தவர்களின் தரங்கெட்ட பேச்சிற்கும் பயந்து தான் நாங்கள் பிரிந்து இருப்பது. எனக்காக இல்லையென்றாலும் நாளை இன்னொரு வீட்டில் வாழப்போகின்ற பெண்ணிற்கு எந்த அவப்பெயரும் வந்துவிடக் கூடாது என்பதில் நான் கவனமாக இருக்கிறேன்!”

“யூ டோன்ட் வொர்ரி… எங்கள் வீட்டில் யாரும் அம்மாதிரி எல்லாம் தவறாக எண்ண மாட்டார்கள்!” என்றான் கருண் வேகமாக.

உள்ளுக்குள் பெரும் நிம்மதி பூத்து உவகை துள்ளினாலும் அதை அடக்கியவன் விழிகள் மின்ன, “என்ன?” என்று அப்பாவியாய் முகத்தில் வியப்பை வெளிப்படுத்தினான்.

“அது… ஆங்… எங்கள் வீட்டில் யாரும் உங்களை தவறாக நினைக்க மாட்டார்கள் என சொல்ல வந்தேன்!”

‘அதைத்தான் நானும் விரும்புகிறேன்!’ என்றெண்ணியவன், “அப்புறம் ரிசப்ஷன் வீடியோ கொண்டு வந்திருக்கிறாயா?” என்று பேச்சை மாற்றினான்.

“இதோ… ” என பென்டிரைவ்வை பாக்கெட்டிலிருந்து எடுத்தவன், “அருந்ததியும் வந்தால் தானே யார் என்ன என்று சந்தேகிக்கும் நபரை கண்டுப்பிடிக்க நமக்கு வசதியாக இருக்கும்!” என்றான்.

லேசாக புருவம் சுருக்கியவன், “இல்லை கருண்… அவளுக்கு எக்ஸாம்ஸ் போயிட்டிருக்கு, இதற்காக எல்லாம் தொந்திரவு செய்ய வேண்டாம். என்னால் முடியவில்லை என்றால் பிறகு பார்த்துக் கொள்ளலாம்!” என்றான்.

முகம் பளிச்சென்று ஒளிர, “ஓ… ஆமாம் ஆமாம் அதுவும் சரிதான். இன்னும் ஒரு வாரத்தில் முடிந்துவிடும் இல்லை?” என்று தனக்குள் முனகிக் கொண்டான்.

பொங்கும் சிரிப்பை மறைக்க இயலாது வெளியிட்டபடி லாப்டாப்பிடம் குனிந்து பென்டிரைவ்வை சொருகிய ரிச்சர்டிற்கு, அனைத்தும் நன்றாக நடக்க வேண்டும் என்கிற கவலையும் உடன் பிறந்தது.

‘அருந்ததியை எப்படியாவது இவன் குடும்பத்தில் இணைத்து விட்டால் போதும், காலத்திற்கும் நிம்மதியான நல்ல ஆரோக்கியமான வாழ்வு வாழ்வாள்!’

வீடியோ ஓட ஆரம்பிக்க அதை கண்ணுற்றபடி ரிச்சர்டிடம் விசாரித்தான் கருண்.

“உங்களுக்கு முப்பத்திமூன்று வயதாகிறது என சொன்னீர்கள் இல்லை… தருண் அண்ணாவை விட ஒரு வயது தான் குறைவு. ஏன் நீங்கள் இன்னும் திருமணம் செய்துக் கொள்ளவில்லை? இத்தனைக்கும் வசதி, அழகு, படிப்பு, சம்பாத்தியம் என அனைத்தும் இருக்கும் பொழுது எதற்காக இந்த தாமதம்? இட்ஸ் ப்யூர்லி பெர்சனல், எனக்கு பதிலளிக்க விருப்பமில்லை என்றால் விட்டு விடுங்கள் பரவாயில்லை, நோ ப்ராப்ளம்!”

மெல்ல முறுவலித்தவன், “கருண்… உன்னிடம் நிறைய விஷயங்களை மனம் விட்டு பகிர்ந்து கொள்ள எனக்கு ஆசை தான். ஆனால் அதற்கான சரியான சூழல் இன்னும் அமையவில்லை என்பதால் ஒரே வரியில் முடித்து விடுகிறேன். அருந்ததியின் திருமணம் முடிந்தப் பிறகு தான் நான் மணம் புரிய வேண்டும் என்கிற குறிக்கோளில் உறுதியாக இருக்கிறேன். இதை அவளிடம் ஒருபோதும் சொல்லி விடாதே, தெரிந்தால் வருந்துவாள்!” என்றான்.

இதை எதற்காக இவன் தன்னிடம் சொல்கிறான் என புரியாமல் குழம்பினான் அவன்.

“ஆங்… இங்கே பார், அருந்ததி வந்து விட்டாள். இனி கவனமாக பார்க்க வேண்டும், உனக்கு யார் மீதாவது சந்தேகம் தோன்றினால் சொல்!” என்றபடி தன் பார்வையை கூர்மையாக்கினான் ரிச்சர்ட்.

அவள் புன்னகை முகமாக மேடையேறி மணமக்களுக்கு பரிசளிப்பது, தோழியுடன் இணைந்து புகைப்படம் எடுத்துக் கொள்வது, பின்பு மேடையை விட்டு இறங்குவது என்பது வரை மட்டுமே அவளுடைய பதிவு இருந்தது. கருணுடைய பிம்பமோ நிமிடத்திற்கும் குறைவாக வந்துப் போனது. அவன் தான் உள்ளே நுழையும் பொழுதே அருந்ததிக்காக என ஓரமாக ஒதுங்கி அமர்ந்து விட்டானே, பிறகும் அவளை ரிச்சர்டுடன் அனுப்பி வைத்துவிட்டு வேகமாக ஓடிவந்து நிகழ்ச்சியில் தான் கலந்து கொண்டதற்கு அடையாளமாக மணமக்களுடன் ஒரு புகைப்படம் மட்டும் எடுத்துக் கொண்டு கிளம்பி விட்டான்.

இரண்டு மூன்று முறை திரும்ப திரும்ப ரீவைன்ட் செய்துப் பார்த்தும் சந்தேகிக்கும்படியாக எவருடைய நடவடிக்கைகளும் வித்தியாசமாக தெரியவில்லை எனவும் பெரியவனுக்கு ஏமாற்றமாக இருந்தது.

“கருண் அங்கே இருந்த உனக்கும் யார் மீதும் சந்தேகம் தோன்றவில்லையா?”

நெற்றியின் ரேகைகள் முடிச்சிட அவனிடம் திரும்பியவன் சட்டென்று, “ஒரு நிமிடம்!” என்று மீண்டும் திரையில் பார்வையை பதித்தான்.

சில குறிப்பிட்ட நிமிடங்களை திரும்ப ஓட விட்டவன், “இந்த ஆளைப் பாருங்களேன்… கொஞ்ச நேரமாக வேறெந்த திசையிலும் திரும்பாமல் ஒரே பக்கமாக வெறித்துப் பார்ப்பதை போல் தோன்றவில்லை?” என்று ரிச்சர்டிடம் சுட்டிக்காட்டி வினவினான்.

“ஆமாம்… ஆனால் அதற்கு என்ன? அவர் மீது எதுவும் உனக்கு சந்தேகம் தோன்றுகிறதா கருண்?”

“ம்… முதலில் இல்லை, ஆனால் அன்று நீங்கள் சொன்னதை வைத்து யோசிக்கும் பொழுது இந்த ஆள் மீது எனக்கு கொஞ்சம் சந்தேகமாக தான் இருக்கிறது!” என்றான் கருண்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *