*28*

 

ரிச்சர்டின் பார்வை வீச்சில் நெற்றியை சுருக்கிய அட்சயா, என்ன என்பது போல் புருவங்களை மேலேற்றி கீழிறக்கினாள்.

சட்டென்று தன்னை சுதாரித்தவன், “சாரி ஒயிட் காலரோ எந்த வேலையோ… ஆனால் ஆகமொத்தம் உங்கள் அளவிற்கு எல்லாம் விளையாடுவதற்கு எனக்கு திறமை கிடையாது!” என்று அவளை விழியால் சீண்டி சின்னப் புன்னகையுடன் தோள்களை குலுக்கினான்.

அவனை சவாலாக நோக்கியவள், “ஓஹோஹோ… மறந்து விட்டேன் பாருங்கள். உங்களுக்கு விளையாடவெல்லாம் தெரியாது நடு ரோட்டில் நடந்துக் கொண்டே உடற்பயிற்சி செய்ய மட்டும் தான் தெரியும் இல்லை?” என்று அழகாக உதடுகளை விரித்தாள்.

‘அடிப்பாவி… எங்கே இருந்து எங்கே தாவி விட்டாள் இவள்?’ என மலைத்தான் ரிச்சர்ட்.

“என்ன சம்பந்தமே இல்லாமல் உளறுகிறாய் நீ?” என்று கண்களை சுருக்கினான் கருண்.

அதை நான் சொல்கிறேன் என்று வேகமாக ஆரம்பித்த ரிச்சி தன்னை கேலிப் புன்னகையோடு பார்த்துக் கொண்டிருந்தவளிடம் ஒருமுறை அவசரமாக பார்வையை வீசி விட்டு அன்று நடந்ததை விளக்கமாக கூறினான்.

“இதுதான் பிரச்சினை, கை வலியால் அப்படி சுழற்றி விட்டேன் என்று சொல்லியும் நம்பாமல் என்னிடம் ஒரே சண்டை. அன்று அவர்களை சமாதானப்படுத்துவதற்குள்…”

“இருங்கள்… இருங்கள்!” என அவனை தடுத்த கருண், “உங்களுக்கு என்ன வயதாகிறது?” என்று சம்பந்தமில்லாமல் திடீரென்று கேள்வி எழுப்பினான்.

இவன் என்ன செய்கிறான்? என அனைவரும் அதிருப்தியுரும் நேரம், “அட… ம்… சும்மா சொல்லுங்கள்!” என்று எதிரில் நின்றவனை வற்புறுத்தினான்.

“ஏன்? முப்பத்திமூன்று!” என்றான் ரிச்சர்ட் குழப்பத்துடன்.

அட்சயாவிற்கு விஷயம் புரிந்து லேசாக இதழைக் கடித்தாள்.

“கிட்டத்தட்ட என் அண்ணாவின் வயது அவள் உங்களை விட ஐந்து வயது சிறியவள், முன்பின் தெரியாதவர்களை போல மரியாதை கொடுத்து எல்லாம் பேசத் தேவையில்லை!” என்று அறிவுறுத்தினான் கருண்.

“இருந்தாலும் உங்கள் பிரெண்ட் எதுவும் தவறாக எடுத்துக் கொண்டால்…” என்று தோள்களை குலுக்கியவாறு அவள் முகத்தில் விழிகளை நிறுத்தினான்.

“ஆங்… ஆமாம் ஆமாம் கண்டிப்பாக, அவள் சரியான ராங்கி வேறு!” என்றவன் அவளுடைய டேய்… என்ற கூவலுக்கிடையே நாக்கை நீட்டி வெறுப்பேற்றினான்.

கொன்று விடுவேன் என அவள் விரல் நீட்டி எச்சரிக்க, “அப்பொழுது உன்னை அவர் ஒருமையில் அழைப்பதற்கு ஓகே சொல்லு!” என்றான் கருண்.

ரிச்சர்ட் எதிர்பார்ப்புடன் பார்த்திருக்க, “அவள் என்ன சொல்வது நீ அப்படியே கூப்பிடுப்பா!” என்று அனுமதி அளித்தார் கமலா.

அவளிடம் அவன் முறுவலித்த நேரம் கருண் மீண்டும் ஆரம்பித்தான், “ஹேய்… உனக்காவது கண்ணாமூச்சி ஆடத் தெரியுமா இல்லையா?” என்று அருந்ததியிடம் வினவினான்.

இவனுடன் விளையாட வேண்டுமா? என அரண்டவள், அவள் அண்ணனின் முழங்கையை பிடித்துக் கொண்டு, ம்ஹும்… என வேகமாக மறுத்து தலையசைத்தாள்.

“அச்சோ… உன்னை எல்லாம் வைத்துக் கொண்டு என்ன தான் செய்வதோ?” என்று அவன் அலுக்கவும் சுற்றிலும் அமைதி நிலவியது.

“உன்னையே நாங்கள் சமாளிக்கும் பொழுது அவளுக்கு என்னடா? உட்கார்ந்து விளையாடுவது போல் கேரம், செஸ் என்று ஏதாவது பார் போ!” என அவனை அதட்டி சூழ்நிலையை சமாளித்தாள் சிந்து.

அவனுடைய பேச்சு அங்கிருந்தவர்களின் மனதில் ஒவ்வொரு விதமாய் கேள்வி எழுப்பும் நேரத்தில் அதை சமயோசிதமாக மாற்றிய மனைவியை விழிகளில் மெச்சுதலுடன் நோக்கினான் சித்து.

“அப்பொழுது இந்த இரண்டு குட்டி சாத்தான்களையும் கீழேயே வைத்துக் கொள்ளுங்கள் எங்கள் விளையாட்டை கலைப்பார்கள்!” என்றவன் தன் வார்த்தைகளுக்கு தந்தை கை ஓங்கிக் கொண்டு வரவும் விரைவாக மாடிக்கு ஓடிவிட்டான்.

“உங்கள் சித்தப்பனுக்கு இருக்கும் வாய் இருக்கிறதே, நீங்கள் தாத்தாவிடம் வாங்கடா தங்கங்களா!” என்று அவர்களை அரவணைத்துக் கொண்டான்.

சற்று முன்னர் கமலாவும் தன் பெண்ணை பற்றி இவ்வாறு புலம்பியது நினைவிற்கு வந்து யோசனையில் ஆழ்ந்தான் ரிச்சர்ட்.

“உங்கள் இருவருக்கும் இன்னும் என்ன யோசனை? அதுதான் ஓடிப்பிடித்து விளையாடவில்லையே சீக்கிரம் வாருங்கள்!” என உதடுகள் கீழாக வளைய சிறு கேலியோடு அழைத்தாள் அட்சயா.

இதுங்களிடம் காலம் முழுக்க நன்றாக சிக்கிக் கொண்டு அவஸ்தைப்படப் போகிறோம் என்ற எண்ணம் உதிக்கும் பொழுதே ஆனால் அதுதான் வாழ்க்கைக்கும் சுவாரசியத்தை கொடுக்கப் போகிறது என்று மெல்ல முறுவலித்தபடி ஆர்வத்துடன் படியேற ஆரம்பித்தான் ரிச்சர்ட்.

அவன் பின்னே தயக்கத்துடன் அருந்ததி உள்ளே நுழைய கண்ட கருண், தான் எடுத்து வைத்திருந்த கேரம் போர்டின் மீது காயின்களை கொட்டிவிட்டு அவர்களிடம் பரபரவென்று வந்தான்.

“ம்… எல்லாம் ரெடி, நானும் அருந்ததியும் ஒரு செட். நீங்களும் அட்சயாவும் ஒரு செட் வாங்க!” என விளையாட அழைத்தான்.

இதை எதிர்ப்பார்த்திருந்த ரிச்சர்ட் தனக்குள் எழுந்த குறுகுறுப்பை அடக்கியவண்ணம் முகம் மாறாமல் அப்பாவியாக நின்றான்.

அருந்ததியோ, “இல்லை… இல்லை, நான் அண்ணா டீமில் இருக்கிறேன்!” என்று வேகமாக மறுத்தாள்.

“ப்ச்… உன் அண்ணா டீமில் விளையாடினாய் என்றால் நீ தோற்று தான் போவாய். அவருக்கு விளையாடவே தெரியாது, அதனால் நீ என் கூடவே இரு!” என்று அவளை கிட்டத்தட்ட அதட்டினான் கருண்.

‘அடப்பாவி… நீ அவளுக்கு ஹீரோ ஆகவேண்டும் என்பதற்காக என்னை ஏன்டா என் ஹீரோயின் முன்னால் ஜீரோ ஆக்குகிறாய்?’ என்று அவனை தடுக்க இயலாது உள்ளுக்குள் புலம்பி தவித்தான் ரிச்சர்ட்.

‘இவன் ஏன் எப்பொழுது பார் என்னை அவனிடம் கோர்த்து விடுகிறான்? வெளியாட்கள் யாரும் வந்தால் நாங்கள் இருவரும் தானே ஒரு டீம்மாக இருப்போம்!’ என மூளையை கசக்கிக் கொண்டிருந்த அட்சயா அடுத்து அவன் பேச்சில் திகைத்து சண்டைக்கு ஏறினாள்.

“டேய்… அப்பொழுது அவரோடு டீம் சேர்ந்து விளையாடி நான் தோற்க வேண்டுமா?” என பாய்ந்தாள்.

“ஏய்… இல்லை பேபி, நீ நன்றாக விளையாடுவாயே அதனால் தான் அப்படி டீம் பிரித்தேன்!” என அசடுவழிந்து சமாளித்தவாறு பல்லைக் காட்டினான் கருண்.

“ஹேய்… நிறுத்துங்கள் இரண்டு பேரும், என்னை என்ன ஒரேயடியாக மாக்கான் என்றே முடிவு கட்டிவிட்டீர்களா? சின்னப்பிள்ளை மாதிரி ஓடிப்பிடித்து விளையாட வரவில்லை என்று தான் மறுத்தேன். அதற்காக எனக்கு ஒன்றுமே தெரியாது என்கிற மாதிரி சீன் கிரியேட் செய்கிறீர்கள்!” என்று இருவரையும் ஒரு சேர முறைத்தான் ரிச்சி.

இதழ்களில் வெடிக்க துடித்த நகையை அடக்கியபடி, “ஓ… அப்பொழுது நீங்கள் இதில் டிஸ்டிரிக்ட் லெவல் ப்ளேயரோ?” என்று விழிகளை விரித்து அப்பாவியாய் வினவினாள்.

கண்களை ஒருமுறை சுருக்கி விரித்தவன் உதட்டில் உறைந்த புன்னகையுடன், “சேச்சே… ஜஸ்ட் நேஷனல் லெவல் ப்ளேயர் அவ்வளவு தான்!” என்று அலட்சியமாக தோள்களை குலுக்கினான்.

“வாட்… நிஜமாகவா?” என ஆர்வமாக அவனருகில் வந்தாள் பெண்.

அதை ரசித்தபடி, “ம்… எல்லாம் ஸ்கூல் லெவலோடு நின்று விட்டது. பிறகு மேற்படிப்பிற்காக அப்ராட் சென்றதும் இதில் கான்சன்ட்ரேட் செய்ய இயலாமல் போயிற்று. அப்புறம்… தாத்தாவின் காலம் முதல் இன்று வரை வழிவழியாக வளர்ந்து வருகின்ற எங்கள் கம்பனியை வளர்க்கவே எனக்கு நேரம் சரியாக இருக்கிறது. அப்படியே பொழுதுப்போக்கிற்கு நேரம் கிடைத்தாலும் இப்பொழுதெல்லாம் ஆர்வம் இருப்பதில்லை!” என்று முறுவலித்தான்.

சட்டென்று முகம் மாறியவள், “ஓஹோ… அப்பொழுது நீங்கள் என்ன செய்கிறீர்கள்?” என அமைதியாக விவரம் கேட்டாள்.

“ம்? ஓ… அதுதான் சொன்னேனே… எங்கள் கம்பெனியை பார்த்துக் கொள்கிறேன் என்று!”

“ஹும்… அதை கம்பெனியின் சேர்மன் என்று கூட இன்னும் கொஞ்சம் தெளிவாக சொல்லலாம்!” என ஏளனமாக இதழ்களை வளைத்தாள் அட்சயா.

முன்பும் அவன் தன்னை குறித்து லேசாக கோடிட்டு காண்பித்து இருந்தாலும் அந்த நேரம் அவனுடைய இழப்பும், தனிமையும் மட்டுமே அவளின் கவனத்தில் பதிந்து அவனுக்காக அனுதாபம் கொண்டு சற்று சகஜமாக பழகியவளுக்கு அவனின் உண்மை நிலை தற்பொழுது தெளிவாக மூளையில் உறைத்ததும் மனதில் வெறுப்பு மூண்டது.

அவளின் முகமாற்றத்திலும், வாக்கியத்திலும் குழப்படைந்த ரிச்சர்ட் என்னவாயிற்று என விசாரித்தான்.

“ஒன்றுமில்லை, சரி கருண் அவசியம் விளையாட வேண்டுமா என்ன? நான் மாமாவிடம் முக்கியமான விஷயம் பேச வேண்டும் அதனால் கீழே போகிறேன்!” என்று வெளியேற முயன்றவளை தடுத்தான் அவன்.

“ஏய் அச்சு… லூசு மாதிரி பிஹேவ் செய்யாதே, அப்பாவிடம் நீ மதியம் கூடப் பேசிக் கொள்ளலாம். ஒழுங்காக எங்களுடன் விளையாடு, நாங்கள் மூவர் மட்டும் எப்படி விளையாடுவது?”

“நான் போய் வேண்டுமென்றால் தன்யாவை அனுப்புகிறேன்!” என்றாள் அவள் பிடிவாதமாக.

“எக்ஸ்க்யூஸ்மி… இப்பொழுது என்ன பிரச்சனை? எதனால் நீ திடீரென்று கீழே போக வேண்டுமென்று அடம்பிடிக்கிறாய்?” என அழுத்தமாக வினவினான் ரிச்சர்ட்.

அவனை சற்றே எரிச்சலுடன் நோக்கியவள், “அதுதான் சொன்னேனே… என் மாமாவிடம்…” என்று ஆரம்பித்தவளை தடுத்து இகழ்ச்சியாக நோக்கினான் அவன்.

“அதை நம்புவதற்கு நான் ஒன்றும் முட்டாளில்லை!”

“ஓகே சார்… நீங்கள் மிகவும் புத்திசாலி தான் நான் ஒத்துக் கொள்கிறேன். ஆனால் அதேசமயம் உங்களிடம் விளக்கம் சொல்ல வேண்டும் என்று எனக்கு எந்த அவசியமுமில்லை. கருண் நான் கீழே போகிறேன்!” என வெடுக்கென்று பேசிவிட்டு அட்சயா மடமடவென்று வெளியேற, அவளை தடுக்க முயன்று தோற்ற கருண் ரிச்சர்டிடம் தர்மசங்கடத்துடன் திரும்பினான்.

சட்டென்று தன்னை அவள் எடுத்தெறிந்து பேசி உதாசீனப்படுத்தி சென்றதில் அதுவரை இருந்த சுமூகநிலை மாறி லேசான இறுக்கத்தை உணர்ந்தவன் சின்ன முகச்சுளிப்புடன் நின்றிருந்தான்.

“சாரி பாஸ்… நீங்கள் எதுவும் தவறாக எடுத்துக் கொள்ளாதீர்கள். அவள் கொஞ்சம் அப்படித்தான் அவ்வப்பொழுது முட்டாள்தனமாக நடந்துக் கொள்வாள். நல்லப்பெண் தான்… ஆனால் ஒருசில நேரம் எதையாவது பைத்தியகாரத்தனமாக செய்து விடுவாள். அதற்கு தான் அத்தையிடம் அவள் வாங்கி கட்டிக்கொள்வதும். ப்ளீஸ்… டிரை டூ அன்டர்ஸ்டார்ன்ட்…” என்று தவித்த கருணின் தோளில் தட்டிய ரிச்சர்ட், “இட்ஸ் ஓகே… கூல் மேன்… அவள் செய்ததற்காக நீங்கள் இவ்வளவு வருந்த வேண்டிய அவசியமில்லை!” என முறுவலித்தான்.

“இல்லை… நீங்கள் அவளையும் தவறாக எண்ணாதீர்கள், அவள்…”

“சரிப்பா… உங்கள் பிரெண்ட் மிகவும் நல்லவள் தான், ஏதோ டென்ஷனில் அப்படி செய்து விட்டாள் ஓகே?” என்று புன்னகைத்தான்.

“தாங்க்ஸ் பாஸ்… அப்புறம் அதென்ன அவளை மட்டும் ஒருமையில் பேச ஆரம்பித்து விட்டு என்னை இன்னும் மரியாதை கொடுத்து தள்ளி வைத்துப் பேசுகிறீர்கள்? நான் அவளை விட சின்னப் பையன்!”

“ஓகே டன்… ஆனால் நீயும் ஒன்றும் அவளுக்கு சளைத்தவனில்லை!”

“ஹிஹி… அதுதான் ஊரறிந்த ரகசியம் ஆயிற்றே!” என்றவன் இவர்கள் சம்பாஷனையில் கலந்துக்கொள்ளாமல் சற்று தள்ளி நின்று பால்கனியில் வெளியே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த அருந்ததியை பார்த்தான்.

“ம்… உங்களிடம் ஒன்று கேட்க வேண்டும்!” என்று லேசாக தயங்கினான் கருண்.

அவன் பார்வை அலைபாயும் திசைகளை கவனித்துக் கொண்டிருந்த ரிச்சர்ட், “ஓ… தாராளமாக கேட்கலாமே!” என்று தன் ரத்தநாளங்கள் எகிற அவனை தூண்டி விட்டான்.

‘இன்றே இதற்கொரு முடிவு கிடைத்து விடுமா?’

அதற்குள் சிந்துவின் அதட்டல் நினைவிற்கு வரவும், “ஒன்றுமில்லை… அருந்ததிக்கு எக்ஸாம்ஸ் எப்பொழுது முடிகிறது?” என வேகமாக கேள்வியை மாற்றி போட்டான் கருண்.

“என்ன?” என்று புருவம் சுருக்கியவன், “அடுத்த வாரம் ஆரம்பித்து அநேகமாக ஒரு வாரத்தில் முடிந்துவிடும். என்ன திடீரென்று சம்பந்தமில்லாத கேள்வி?” என்றான்.

“இல்லை… சும்மா தான். அப்பா, அம்மா உங்களிடம் ஏதோ பேச வேண்டுமென்று சொல்லிக் கொண்டிருந்தார்கள். நான் சாப்பாடு வந்து விட்டதா என சென்று பார்த்து வருகிறேன்!” என்று வாய்க்கு வந்த எதைஎதையோ உளறிக் கொட்டி கிளறி மூடி ஓடிப்போனான் கருண்.

அன்றைய நாளில் மூன்றாவது முறையாக, ‘யப்பா… இதுங்களை எல்லாம் எப்படி தான் சமாளிப்பதோ? அவள் என்னவோ நன்றாக பேசிக் கொண்டிருந்தவள் திடீரென்று சண்டையிட்டு ஓடுகிறாள். இவன் என்னடாவென்றால் சம்பந்தம் சம்பந்தமில்லாமல் உளறிவிட்டு ஓடுகிறான்!’ என்று தலையசைத்தான் ரிச்சர்ட்.

‘ஹேய்… வெயிட்… வெயிட்!’ என அவன் துண்டு துண்டாக கூறியதை எல்லாம் தனக்குள் சேர்த்து வைத்து ஆலோசித்துப் பார்த்தவன், ‘வாவ்… அப்பொழுது அருந்ததி குறித்து தன் விருப்பத்தை வீட்டில் தெரிவித்து விட்டானா கருண்? வீட்டிலுள்ளவர்கள் தான் அவள் பரீட்சை முடியட்டும் என அவனுடைய வேகத்திற்கு அணைப் போட்டு தடுத்துள்ளனரா? யெஸ்… அப்படி தான் இருக்க வேண்டும். அதனால் தான் அவன் அண்ணி முதற்கொண்டு அம்மா வரை இவளிடம் சற்றே வித்தியாசமாக உரிமையுடன் பழகுகிறார்கள் போலிருக்கிறது. பரவாயில்லை… பையன் படு ஸ்பீடாக தான் இருக்கிறான்!’ என தனக்குள் புன்னகைத்தான்.

“என்னண்ணா தனியாக சிரித்துக் கொண்டிருக்கிறீர்கள்?” என்று அருகில் வந்தாள் அருந்ததி.

“எல்லாம் இந்த வீட்டினரை நினைத்து தான், விளையாட வாங்க வாங்க என வற்புறுத்தி ஆயிரம் கேலி, கிண்டலுடன் நம்மை அழைத்து வந்து இங்கே இப்படி அம்போ என்று தனியாக விட்டுவிட்டு ஓடி விட்டார்கள் பார்!”

“அட ஆமாம்… அந்த அட்சயா அக்கா வேறு உங்களிடம் அப்படி பேசிவிட்டு போகவும், நீங்கள் இருவரும் என்னவோ தீவிரமாக பேசினீர்களா… அதுதான் நான் பால்கனிக்கு சென்று விட்டேன்!”

‘அவள் அக்கா இல்லைம்மா உனக்கு அண்ணி!’ என மனதிற்குள் அவளை திருத்தியவன், ‘கலகலவென்று சுற்றி வரும் அட்சயாவிடம் சம்திங் ராங்!’ என்ற முடிவிற்கு வந்தான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *