*2*

 

“என்ன உலக அதிசயமாக இன்று நீ காபி எடுத்து வந்திருக்கிறாய் பாட்டி எங்கே?” என்று வினவினான் ரிச்சர்ட்.

சட்டென்று பிறந்த பதட்டத்தில் முகமெங்கும் சூடாகி சிவந்ததற்கு மாறாக சில்லிட்டிருந்த விரல்களால் கையில் இருந்த ட்ரேயை இறுக்கியவள், “பாட்டிக்கு உடம்பு முடியவில்லை, படுத்திருக்கிறார்கள்?” என்றாள் மெல்லிய குரலில்.

“ஏன் என்னவாயிற்று காலையில் கூட நன்றாக தானே இருந்தார்கள்?” என்றான் திகைப்புடன்.

“இல்லை… மதியத்திலிருந்து தான் இப்படி…” என மென்று விழுங்கினாள் அருந்ததி.

ஓ… என்றபடி அவன் எழுந்து அருகில் வரவும் மிரண்டு இரண்டடி பின்னே வைத்தவளை புருவம் முடிச்சிடப் பார்த்தவன், அவள் ஒதுங்கி நின்றிருந்த வழியில் யோசனையோடு வெளியேறினான்.

அச்சத்தில் எகிறிய இதய துடிப்பை சமமாக்க நடுங்கும் உடலோடு கதவின் மேல் சாய்ந்து மெல்ல தன்னை சமன்படுத்தினாள் அச்சிறுமி. தொண்டையில் எதுவோ அடைத்து நாசி விரிய விழிகள் கலங்கப் பார்க்கவும் வேகமாக எச்சிலை கூட்டி அதனுடன் தன்னுள் துடித்த உணர்வையும் விழுங்கியவள் ரிச்சர்ட் பாட்டியின் அறைக்கு சென்றிருப்பதை கவனித்து விட்டு வேகமாக சமையலறைக்குள் புகுந்துக் கொண்டாள்.

போர்வைக்குள் முடங்கியிருந்த பரிமளத்தை கண்டவன், ‘உறங்குகிறாரா அல்லது விழித்திருக்கிறாரா?’ என குழம்பி அருந்ததியிடம் விசாரிக்க எண்ணி திரும்பி பார்க்க அவளை காணவில்லை.

‘இவள் என் பின்னோடு வரவில்லையா?’ என்றெண்ணியபடி திரும்பியவன் மெல்ல, “பாட்டி!” என்றழைக்க, ம்… என மெதுவாக முனகியபடி போர்வையை விலக்கினார் பரிமளம்.

நெருப்பு பந்தாக எரிந்த விழிகளை சிரமப்பட்டு சோர்வுடன் பிரித்தவர், ரிச்சர்ட்டை கண்டவுடன் மெல்ல எழ முயன்றார்.

“ப்ச்… என்ன செய்கிறீர்கள்? எழ வேண்டாம், படுத்துக் கொள்ளுங்கள். என்னவாயிற்று… என்ன தொந்திரவு செய்கிறது?”

“ஒன்றுமில்லைப்பா… கொஞ்சம் ஜுரம் தான் கஷாயம் குடித்திருக்கிறேன் தூங்கி எழுந்தால் சரியாகப் போய்விடும்!”

“என்ன நீங்கள்… அப்படியெல்லாம் கேர்லெஸ்ஸாக இருக்க வேண்டாம், மெதுவாக எழுந்திருக்கப் பாருங்கள் ஹாஸ்பிடல் போகலாம்!” என வற்புறுத்தினான் ரிச்சர்ட்.

“அச்சோ… இல்லைப்பா, இது வழக்கமாக வருவது தான் கஷாயத்திற்கே சரியாகிவிடும். நாளை ஜுரம் குறையவில்லை என்றால் வேண்டுமானால் டாக்டரை பார்க்கலாம். நீங்கள் போய் உங்கள் வேலையை பாருங்கள், அதுவே நள்ளிரவு வரை பார்ப்பீர்கள். இதில் என் தொந்திரவு வேறு எதற்கு?” என்று லேசாக செறுமியபடி மறுத்தார் பரிமளம்.

“சொன்னால் கேட்க மாட்டீர்களே… சரி எதுவும் ஜுரம் அதிகமானால் அருந்ததியிடம் சொல்லி அனுப்புங்கள்!” என்று விட்டு தன் வேலையை தொடர சென்றான் ரிச்சர்ட்.

‘ம்… ரொம்பவும் நல்லப்பிள்ளை, எஜமான் வேலைக்காரி என்கிற எந்த பேதமும் பார்க்காமல் தன் குடும்பத்து ஆட்கள் போல எவ்வளவு அக்கறையுடன் நடந்துக் கொள்கிறார். இந்த தம்பியோட தங்க மனதிற்கு நல்லப்பெண் மனைவியாக அமைந்து மகிழ்ச்சியுடன் நீடுழி வாழ வேண்டும்!’ என்று உளமாற வாழ்த்தி விட்டு கண்களை மூடினார்.

பாட்டியிடம் விவரம் கேட்டு இரவு உணவை தயாரித்த அருந்ததி தயக்கத்துடன் ரிச்சர்டை உணவருந்த அழைக்க அவனது அறைக்கு சென்றாள்.

திறந்திருந்த கதவருகே வாயிலில் தேங்கி நின்றவள் விரல் கொண்டு கதவை தட்ட கையை உயர்த்தி விட்டு சின்ன சிந்தனையுடன் கீழே இறக்கினாள்.

‘கதவு திறந்து தானே இருக்கிறது எதற்காக தட்டுகிறாய் கூப்பிட முடியாதா என சத்தமிட்டால் என்ன செய்வது?’ என்று கைகளை பிசைந்தாள்.

தொண்டைக்குழியில் குமிழியிட்ட சார் என்ற வார்த்தையை வெளிதள்ள முயன்றப்பொழுது அவள் விழிகளில் வேதனை தோன்றியது. தன்னுள் புதைந்துக் கிடந்த துன்பங்களை எல்லாம் ஒவ்வொன்றாக நினைவுச்சக்கரம் கொண்டு அவள் மீட்டெடுத்துக் கொண்டிருக்க, எதையோ எடுக்க வேண்டி திரும்பிய ரிச்சர்ட் வாசலில் சிலையென சமைந்திருந்து வேறு லோகத்தில் சஞ்சரித்திருந்தவளை வினோதமாக பார்த்தான்.

“அருந்ததி!”

திடுக்கிட்டு திரும்பியவள், ஆங்… என விழித்தாள்.

மெல்ல முறுவலித்தவன், “என்ன நின்றுக் கொண்டே தூங்குகிறாயா?” என கேலி செய்தான்.

“இல்லை… அது… உங்களை சாப்பிடுவற்காக அழைக்க வந்தேன்!” என்றவள் அவன் பதிலை கூட எதிர்பாராமல் தகவலை தெரிவித்து விட்டேன் என் கடமை முடிந்தது என்கிற ரீதியில் நில்லாமல் ஓடிப் போனாள்.

‘ஒரு நிமிடம் நின்றுக் கூட பதிலைப் பெறாமல் அதென்ன மரியாதை இன்றி ஓடுவது?’ என அவனையும் மீறி சட்டென்று சுயகௌரவம் தலைத்தூக்கி பார்க்க லேசாக நெற்றியை சுருக்கியவனுக்கு மெல்ல உதட்டில் புன்னகை அரும்பியது.

‘ப்ச்… பாவம், சின்னப்பெண் தானே… ஏதாவது சொல்லப்போய் தான் வீட்டில் பணிப்புரியும் வேலைக்காரப் பெண் என்கிற எண்ணம் எதுவும் மனதில் பதிந்து விடப்போகிறது வேண்டாம்!’ என்று விட்டு விட்டான்.

கீழிறங்கி டைனிங்கிற்கு வந்தவன், ‘என்னை சாப்பிட வரச்சொல்லி விட்டு இவள் எங்கே ஆளைக் காணவில்லை?’ என்று எண்ணமிட்டபடி அமரும்பொழுதே வேகமாக பிளேட்டை கொண்டு வந்து அவன் முன் வைத்தவள் அதில் சப்பாத்திகளை பரிமாறினாள்.

அதைக் கண்ட ரிச்சர்ட்டிற்கு மெல்லிய சங்கடம் தோன்றியது.

ஒரு சின்னப்பெண் தனக்கு வேலை செய்ய தான் அமர்ந்து சாப்பிடுவதா என தடுமாறியவன். “நீ சாப்பிட்டாயா… இல்லை தானே நீயும் உட்கார்ந்து சாப்பிடு!” என்க திகைத்து விழித்தவள் வேகமாக அதை மறுத்தாள்.

“இல்லை வேண்டாம்… நான் இன்னும் நேரம் கழித்து தான் சாப்பிடுவேன்!” என்றவள் விரைந்து கிச்சனுக்குள் நுழைந்துக் கொண்டாள்.

ப்ச்… என அலுப்புடன் தலையை அசைத்தவன், “இவளை எல்லாம் என்ன தான் செய்வதோ… ஒழுங்காக நின்றுக் கூட பதில் அளிப்பதில்லை!” என்று முனகியபடி உண்ண ஆரம்பித்தான்.

எங்கிருந்து தான் பார்த்தளோ… அல்லது எப்படி தான் அறிந்தாளோ… அவனுடைய தட்டு காலியாகும் நேரம் சரியாக எதிரில் வந்து மீண்டும் ஒரு சப்பாத்தியை தட்டில் வைத்தாள். அதை தொடாது அவன் அவளையே கூர்ந்து பார்க்க திகிலுடன் அவனை பார்த்து மலங்க மலங்க விழித்தாள் அருந்ததி.

உள்ளம் வெதும்பியவன் அதன் பிறகு விழிகளை திருப்பிக் கொண்டு அமைதியாக தனது உணவை தொடர்ந்தான்.

லேசாக தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டவளும் வழக்கமான வழக்கமாக சமையலறைக்குள் பதுங்கிக் கொண்டாள். தீவிர சிந்தனையில் ஆழ்ந்தவன் ஒரு முடிவோடு எழுந்து கை அலம்பி விட்டு அவளிடம் பேசச் சென்றான்.

தளர்வாக சுவரில் சாய்ந்திருந்தபடி தான் அணிந்திருந்த சுடியின் ஷாலை விரல்களில் சுற்றிக்கொண்டு நேர்ப்பார்வையாய் இலக்கின்றி வெறித்திருந்தவள் ரிச்சர்ட் லேசாக தொண்டையை செறுமவும் படபடப்புடன் நேராக நிமிர்ந்து நின்றாள்.

விழிகள் மிரட்சியுடன் கீழே இங்குமங்கும் அலைபாய பேதைமை நிறைந்த குழந்தை முகத்துடன் நின்றிருந்தவளை கண்டு இதயம் உருக பரிதாபம் தோன்றியது.

“ஆமாம்… இங்கே ஒளிந்துக் கொண்டு என்ன செய்கிறாய் நீ? ஹைட் அண்ட் சீக் எதுவும் விளையாடுகிறாயா?” என்று கிண்டலாக வினவினான்.

அவளோ அவனை நிமிர்ந்தும் பாராமல் தான் கேட்டுக் கொண்டிருப்பதற்கு அறிகுறியாக இன்னும் சற்று தலையை உயர்த்தினாள் அவ்வளவே.

அதில் லேசாக கடுப்படைந்தவன், “அருந்ததி… உன் மனதில் என்ன நினைத்துக் கொண்டிருக்கிறாய் நீ? நானும் போனால் போகிறது சின்னப்பெண்ணாயிற்றே… இந்த வயதில் இத்தனை துன்பத்தை சுமந்துக் கொண்டிருக்கிறாளே என கொஞ்சம் விட்டுப் பிடிக்கலாம் என்று பொறுத்துப் போனால் நீ ரொம்பவும் தான் என் பொறுமையை சோதிக்கின்றாய். நீ இங்கே வந்து எத்தனை மாதங்கள் ஆயிற்று… இன்னும் என்னிடம் உனக்கென்ன பயம்? எதற்கெடுத்தாலும் ஒளிந்துக் கொள்வது, கேட்பதற்கு ஒழுங்காக பதிலளிக்காமல் அரைகுறையாக ஓடி வருவது இதெல்லாம் நல்லப் பழக்கமா என்ன? புது இடம் சற்று பழகட்டும் என உன்னை அப்படியே விட்டது தவறாகப் போயிற்று?” என்று அவன் கடிந்துக் கொள்ளவும், தலை தரைக்குள் தான் புதையப் போகிறதோ எனும் அளவுக்கு தன்னுள் பொங்கும் உணர்வுகளை மறைத்து கழுத்தொடிய குனிந்திருந்தாள் அருந்ததி.

அதில் ஒன்றும் தெரிந்துக் கொள்ள முடியாதவன் அவளை மேலும் அதட்டினான், “இங்கே பார்… நிமிர்ந்து நேராக இப்பொழுது என் முகத்தை பார்க்கிறாய் நீ!” என்றான்.

அவன் அதட்டலுக்கு செவி சாய்த்து மிகவும் பிரம்மப்ரயத்தனம் செய்து தன்னுடைய விழிகளை அவனிடம் உயர்த்தியவளின் கன்னங்களில் நீர் வழிந்து உருண்டோடியது.

அதிர்ந்தவன், “காட்… ஏய்… இப்பொழுது எதற்காக அழுகிறாய்மா? நான் உன் நல்லதற்காக தான் பேசிக் கொண்டிருக்கிறேன் புரிந்துக்கொள்!” என்றான் தன்னை அவளுக்கும் உணர்த்தும் பொருட்டு வேகமாக.

அவளோ விழிகளை மீண்டும் தழைத்துக் கொண்டாளே தவிர வேறெந்த பிரதிபலிப்பையும்  காட்டவில்லை.

லேசாக பெருமூசெரிந்தவன், “ஓகே… உன்னை அழ வைக்க வேண்டும் என்பது என் நோக்கமில்லை, நான் சொல்ல வந்ததை சொல்லி விடுகிறேன். அடுத்த கல்வி ஆண்டில் இருந்து நீ பள்ளிக்கு செல்கிறாய்?” என்றதும் பளிச்சென்று அதிவேகமாக நிமிர்ந்தவள், “இல்லை… வேண்டாம்!” என தன் அழுகை மறந்து பதறியடித்து மறுத்தாள்.

“என்ன வேண்டாம்? நான் உன்னுடைய அபிப்பிராயத்தை கேட்கவில்லை, என்னுடைய முடிவை தான் சொன்னேன். உனக்கு என்ன வயதாகி விட்டதென்று படிக்கின்ற வயதில் படிக்காமல் வீட்டு வேலை செய்துக் கொண்டிருக்கிறாய் நீ? சரி வந்த புதிதில் கட்டாயப்படுத்த வேண்டாம் என்று தான் கொஞ்சம் விட்டுப் பிடித்தேன். ஏற்கனவே இடையில் வந்ததால் இந்த ஓர் கல்வியாண்டு அப்படியே வீணாகி விட்டது. உனக்கு படிப்பு சரியாக வரவில்லை என்றாலும் சரி, ஆர்வம் இல்லையென்றாலும் சரி நீ படித்து தான் ஆக வேண்டும்…”

“இல்லை… நான் ஸ்கூல்க்கு எல்லாம் போக மாட்டேன், எனக்கு படிப்பதில் துளியும் ஆர்வமில்லை. நான் பாட்டியுடன் வீட்டிலேயே வேலை செய்துக் கொண்டு இருந்து விடுவேன்!” என்று அதுவரை இல்லாத விதமாக திடத்துடன் மொழிந்தாள் அருந்ததி.

அதை வியப்புடன் கவனித்தாலும் தன் பிடியை விட்டுக் கொடுக்காது, “அதெல்லாம் எனக்கு தெரியாது… நீ பள்ளிக்கு செல்கிறாய் அவ்வளவு தான் விஷயம் முடிந்தது. பாட்டியுடன் வீட்டில் இருக்கிறாளாம், உன்னை யார் விட்டார்கள்? குழந்தைகள் சட்டப்படி பதினாறு வயது வரை எந்த இடத்திலேயும் அவர்களை வேலை செய்ய அனுமதிக்க கூடாது தெரியுமா? ஒரு கம்பெனியின் முதலாளி ஆகிய நான் அதை அனுமதிப்பேன் என்று நீ நினைத்தாயா… இன்னும் இரண்டு மாதத்தில் அடுத்த ஆண்டுக்கான அட்மிசன் தொடங்கி விடும், அதில் உன்னை சேர்த்து விடுகிறேன். ஆமாம்… உன்னுடைய பழைய பள்ளியின் டி.சி. எதுவும் வைத்திருக்கிறாயா?” என்று ரிச்சர்ட் வினவ சட்டென்று அவள் முகத்தில் மெல்லிய வெளிச்சம் பரவியது.

“என்னிடம் எதுவும் இல்லை, அதை எல்லாம் நான் வாங்கவில்லை!” என்றாள் பெருமையாக.

முகத்தில் இளநகை பரவ கேலியாக உதட்டை வளைத்தவன், “நோ ப்ராப்ளம்… அதை நான் பார்த்துக் கொள்கிறேன். நான் சொன்னால் உடனே எந்த கேள்வியும் கேட்காமல் உனக்கு கண்டிப்பாக சீட் கொடுத்து விடுவார்கள், சோ… டோன்ட் வொர்ரி!” என்று புன்னகைத்தான்.

மீண்டும் தவிக்க ஆரம்பித்தவள், “இல்லை… மாட்டேன்… நான் போக மாட்டேன்!” என்று மறுத்து கரகரவென்று கண்ணீர் உகுக்க ஆரம்பித்தாள்.

“சாரி… நீ என்ன காரணம் சொன்னாலும் சரி படிக்கின்ற வயதில் நீ படித்து தான் ஆக வேண்டும். அட்லீஸ்ட்… பள்ளி இறுதி வரை நீ படிக்கிறாய், அதற்கு பிறகு அப்பொழுதுள்ள சூழ்நிலையை பொறுத்து கல்லூரியை பற்றி முடிவு செய்துக் கொள்ளலாம். படிப்பதற்கு எதற்காக நீ இவ்வளவு பயப்படுகிறாய்? உன்னை யாரும் இங்கே ஸ்டேட் பர்ஸ்ட் வா, டிஸ்ட்ரிக்ட் பர்ஸ்ட் வா என்று எதுவும் கட்டாயப்படுத்தவில்லை, ஜஸ்ட்… உன் பொது அறிவும், உலக அறிவும் வளரும் அளவுக்கு நீ கற்றுக்கொண்டால் போதும். படிப்பு என்பது வேலைக்கு சென்று சம்பாதிப்பதற்காக மட்டும் என்றில்லை, உன்னுள் இருக்கும் தன்னம்பிக்கையும், திடத்தையும் அது வெகுவாக வளர்க்கும். எப்பொழுது பார் எதற்கெடுத்தாலும் பயந்துக் கொண்டு அழுகிறாய் அல்லவா… அதையெல்லாம் மாற்றி உனக்குள் ஒரு சுயமதிப்பு பெருகும் புரிகிறதா? புரியவில்லை என்றாலும் சரி நீ பள்ளிக்கு செல்ல தான் வேண்டும்?” என்று தீர்மானமாக மொழிந்து விட்டு அங்கிருந்து வெளியேறினான் ரிச்சர்ட்.

‘எனக்கு எந்தப் பொது அறிவும் வேண்டாம், தன்னம்பிக்கையும் வேண்டாம். எல்லாம் நான் கற்றுக்கொண்ட வரை போதும்!’ என்று தன் தலையை இரு கைகளாலும் இறுகப் பிடித்தபடி தரையில் சரிந்தமர்ந்து ஓசையின்றி விம்ம ஆரம்பித்தாள் அருந்ததி.

2 thoughts on “Poojaiketra Poovithu 2 – Deepababu”

  1. Super and nice update,arunthathi ya richart Padikka soilvathu mega arumiyani 👌👌👌👍👍👍waiting next update🍁🍁🍁🍁 in tha story 1st update padikkala 1st,update evaru Padikka 🏃🏃🏃

    1. Thanks dr 😍 mele address bar la iruka intha link la 2 yenbathai 1 yendru simple ah maatrunga antha page open aagidum.
      For eg : poojaiketra-poovithu-2-deepababu ithil poojaiketra-poovithu-1-deepababu ivvaaru venungira chap no maatri padikalam.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *