*16*

 

என்ன கருண் யாரென்று தெரிகிறதா? எஸ்… அவனே தான். ஓகே… இனி தொடரும் அத்தியாயங்களில் நம் ரிச்சர்ட், அருந்ததியோடு, “நானொரு சிந்து!” குடும்பத்தின் எவர்க்ரீன் ஸ்டார்ஸ் சித்தார்த், சிந்து, தருண், தன்யா அவர்களது வாரிசுகளும் வந்து கலக்கப் போகிறார்கள் 😍😍😍.


“ஓ… ஓகே மிஸ்டர்.கருண், இதோ இன்னும் பத்து நிமிடங்களில் அங்கே இருப்பேன்!” என மொபைலை ஸ்வைப் செய்து டாஷ் போர்டில் போட்டான் ரிச்சர்ட்.

‘கிளம்பும் பொழுது ஒரு பிரச்சனையும் இல்லை என சொல்லி சென்றவளுக்கு அரைமணி நேரத்தில் என்ன நடந்திருக்கும்? போனை கூட கையில் பிடிக்க முடியாமல் தள்ளாடுகிறாள் என்றால்… ஒருவேளை அங்கே பங்ஷனில் ஏதாவது குளிர்பானம் குடித்திருப்பாளோ அதில் மயக்கமருந்து போல ஏதாவது கலந்து கொடுத்திருப்பார்களோ… காட்… யாராக இருக்கும்? என்ன திட்டம்?’ என சட்டென்று உண்டான பரபரப்பில் டென்ஷனாக பிடறியை தடவியபடி ஸ்டீரியங்கை வளைத்தான்.

இங்கே நம் அருந்ததியோ, “ஹே… விது… நீய்… ஏன்ன… விது… என்… செய… விது…” என்று உளறிக் கொண்டே கருணின் சட்டையை பிடித்து இழுத்தாள்.

“உஷ்… ஏய்… ஏய்…” என்று அவள் கரத்தை தடுத்து தனக்குள் அடக்கியவன் அரைகுறை மயக்கத்தில் தன் மேல் முழுதாக சரிந்து நின்றவளின் தேகத்தை மெல்ல நகர்த்தி அவளை ஒரு இடத்தில் அமர வைக்க சுற்றிலும் விழிகளை சுழற்றினான்.

சற்று தள்ளி அரங்கின் ஒருபுறம் முழுவதும் காலியாக இருக்க, இவளை அங்கே ஓரமாக அமைதியாக அமர வைப்பது தான் இப்பொழுதைக்கு சரியாக இருக்கும் என அவள் இடையில் கரம்கொடுத்து மெதுவாக அவளை அழைத்து செல்ல முயன்றான்.

அந்த மயக்க நிலையிலும் ஒரு ஆடவனின் கரம் தன்னை தீண்டவும் விலுக்கென்று அதிர்ந்து விழுந்தவள், “நோ… எயை… விது…” என்று அவனிடமிருந்து விலக வெகுவாகப் போராடினாள்.

“ஹேய்… உன்னை ஒன்றும் செய்யவில்லை, அப்படி ஓரமாக உட்காரலாம் வா!” என்று பொறுமையாக விளக்கினான் கருண்.

“இயை… நா… எங்யும் வய மாதேன்… நீ… எனமோ… மாதேன்…” என மறுத்து அடம்பிடித்தாள் அவள்.

“அம்மா… தாயே… எவ்வளவு நேரம் தான் உன் பாரத்தை தாங்கிக் கொண்டு நான் நிற்பது. என் முதுகு ஒடிந்து விடும் போலிருக்கிறது. ஒழுங்காக வா, உன் அண்ணன் வரும் வரை அப்படி உட்காரலாம்!”

அண்ணன் என்கிற வார்த்தையை கேட்டதுமே, “அணா… அணா… போனும்…” என அழ ஆரம்பித்தாள் அருந்ததி.

அவள் சுய நினைவை இழக்க ஆரம்பிக்கும் பொழுது தனக்கு ஏதோ ஆபத்து வரப்போகிறது என்பதை உணர்ந்து அண்ணனின் உதவியை நாடி எதிர்ப்பார்த்து இருந்ததாலோ என்னவோ அதன் பிறகு வந்த கருணின் பேச்சோ, செயலோ எதுவும் அவளுக்கு புரிபடவில்லை. அவன் தன்னிடம் தவறாக நடக்க முயல்கிறான் என்கிற எண்ணத்திலேயே அவனிடமிருந்து தப்பித்து எப்படியாவது தன் அண்ணனிடம் பாதுகாப்பாக சென்று விட வேண்டும் என பரிதவிக்க ஆரம்பித்தாள் பெண்.

“ஐயோ… அழ வேறு ஆரம்பிக்கிறாளே, பார்க்கிறவர்கள் என்னை தானே தவறாக எண்ணுவார்கள். ஒரே இடத்தில் நின்றுக் கொண்டிருப்பதே மற்றவர்கள் பார்வையை கவரும் வண்ணம் இருக்கிறது. இதில் இவள் அழுதால் வேறு நான் அப்புறம் மானம் எனும் கப்பலில் தான் பயணிக்க வேண்டும்!” என்று புலம்பியபடி யாரிடமாவது உதவி கேட்கலாமா என கருண் விழிகளை திருப்ப அவரவர் அடுத்தவரோடு தீவிரமான உரையாடலில் ஈடுபட்டிருந்தனர்.

உரக்க அழைத்து கூட்டத்தை சேர்த்து விடக்கூடாதே என இதழை கடித்தபடி குழம்பியவன் தன் மேல் முழுமையாக சரிந்தவளை தாங்கி முகத்தை நிமிர்த்த முற்றிலுமாக மயக்கத்தில் வீழ்ந்திருந்தாள் அருந்ததி.

“சுத்தம்… முழுவதும் மயங்கி விட்டாளே!” என்று பதறியவன் அவள் கன்னத்தை தட்டியபடி தவிப்புடன் உதவியை எதிர்நோக்கி திரும்ப, கண நேரத்தில் பார்வையில் விழுந்தார்
அந்த மனிதர்.

அவனுடைய போராட்டத்தை தள்ளி நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த மனிதரை கண்டு எரிச்சல் வெடித்துக் கிளம்பினாலும் அதை மறைத்து அமைதியாக அவரை கையசைத்து கூப்பிட்டான் கருண்.

அவரோ அப்பொழுது தான் மும்முரமாக யாரையோ சுற்றும்முற்றும் பார்வையால் தேடுவதைப் போல் பாவ்லா செய்ய அதில் கடுப்படைந்தவன், “யோவ்… உன்னை தான் வாய்யா…” என வாய்க்குள் முணுமுணுத்தபடி மீண்டும் அவரை சுட்டு விரலால் சுட்டிக் காட்டி அருகே வருமாறு சைகையில் அழைத்தான்.

அந்த ஆளோ திருதிருவென்று விழித்தபடி மேலும் தயங்கி நின்றவர் அடுத்து கருணின் முறைப்பை கண்டு வேகமாக அருகில் வந்தார்.

“என்ன சார் சும்மா வேடிக்கை பார்த்துக் கொண்டு நிற்கிறீர்களே… இவர்களுக்கு கொஞ்சம் உடம்பு முடியவில்லை மயங்கி விட்டார்கள். இவங்களுடைய அண்ணனுக்கு போன் செய்து விட்டேன் வந்து கொண்டிருக்கிறார், அதுவரை இப்படி உட்கார வைக்க கொஞ்சம் ஹெல்ப் பண்ணுங்கள் ப்ளீஸ்…” என்றவாறு அவரின் உதவியோடு அருந்ததியை அங்கிருந்த சேரில் அமர வைத்தான்.

அதற்குள் வியர்த்து விறுவிறுத்துப் போனவர், “சரி அவ்வளவு தானே நான் போகிறேன், கிளம்ப வேண்டும்!” என்று அவன் பதிலை கூட நின்றுக் கேட்காமல் அவசர அவசரமாக அங்கிருந்து ஓடினார்.

நெற்றியை சுருக்கியவன் அவர் சென்ற திசையை புரியாது பார்க்க, இந்த பக்கம் அருந்ததி அவன் மடியை நோக்கி சரிந்து விழ ஆரம்பித்தாள். சட்டென்று அவளை தாங்கி தன் தோளில் சாய்த்துக் கொண்டவன் லேசாக உடலை நெளித்தவாறே பெருமூச்சொன்றை வெளியேற்றினான்.

‘யப்பா… இந்த சினிமாவில் நடிக்கிறவனெல்லாம் எப்படி தான் நாயகிகளை தூக்கி ஊஞ்சல் ஆட்டுவதைப் போலவும், தோளில் தூக்கி கொண்டும் டான்ஸ் ஆடுகிறானுங்களோ… நம்மால் கொஞ்ச நேரம் இவளை நம்மேல் தாங்கி நிற்க வைக்க முடியவில்லை!’ என்று தலையை உதறிக் கொண்டான்.

அத்தனை நெருக்கத்தில் தன் தோள் சாய்ந்திருந்தவளின் நிலவு முகத்தை ரசிக்க தோன்றாமல், ‘ஆமாம்… இவளுடைய அண்ணன் இவள் தோழி யாரிடமோ விவரம் சொல்லி உதவிக்கு அனுப்புகிறேன் என சொன்னானே, எங்கே அவளையும் காணவில்லை. அவள் வந்தாலாவது இவளை ஒப்படைத்து விட்டு கிளம்பலாம் என்று பார்த்தால் அவளும் வருகிற மாதிரி தெரியவில்லை. நான் வேறு கிளம்ப வேண்டுமே… இல்லையென்றால் தாமதமாக செல்வதற்கு வேறு என் செல்ல ராட்சசி என்னை ஒருவழியாக்கி விடுவாளே…’ என புலம்ப ஆரம்பித்தான் கருண்.

இவளை தேடிக்கொண்டு இங்கே யாராவது சுற்றிக் கொண்டிருக்கிறார்களா என்று இவன் ஹாலை அலசத்துவங்க அதேநேரம் உள்ளே நுழைந்த ரிச்சர்ட் இவர்களை விழிகளால் தேடி அலசத் துவங்கினான்.

தேடியவனின் பார்வையில் கருணும் அவன் மேல் சாய்ந்திருந்த அருந்ததியும் விழுந்தனர். வேகமாக அவர்களை நோக்கி ஒரு எட்டு எடுத்து வைத்தவன் சற்றே நிதானித்து நின்று இருவரையும் அதிவிரைவாக ஆராய்ந்தான்.

அருந்ததி எந்த ஒரு மோசமான நிலைமைக்கும் ஆளாகாமல் சுகமாக இருப்பது போல் தோன்ற, கருணோ தன்னருகில் மயங்கி இருப்பவளின் புறம் சற்றும் பார்வையை செலுத்தாமல் சுற்றிலும் எதையோ வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பதை கண்டு நிம்மதி அடைந்தவனுக்கு அவன் மேல் நன்மதிப்பு பிறந்தது.

“மிஸ்டர். கருண் சித்தார்த்?” என்று வினவியபடி தன்னெதிரே நிற்பவனை கண்டு புருவம் சுளித்து அண்ணார்ந்து நோக்கியவன், “ஓ… ரிச்சர்ட்!” என்றான் புரிந்து.

“ம்… எஸ்!” என்று அறிமுக முறுவலை செலுத்தியவனுக்கு பதில் முறுவலை கூட திருப்பாமல், “நல்லவேளை… வந்தீர்கள், இவள் பிரெண்ட் யாரையோ அனுப்புகிறேன் என சொன்னீர்கள் அவளும் வரவில்லை நீங்களும் தாமதமாகவும் எனக்கு டென்ஷனாகி விட்டது. சரி சரி இவளை பிடியுங்கள், நீங்களே அழைத்து சென்று விடுவீர்களா? ஆனால் கொஞ்சம் பார்த்து தான் பிடிக்க வேண்டும் இல்லையென்றால் சரிந்து விழுகிறாள்!” என ரிச்சர்ட் பேச வாய்ப்பளிக்காமல் படபடவென்று பேசிச் சென்றான் கருண்.

அவனுக்கு எவ்வாறு தான் பதிலளிப்பது என புரியாமல் சில நொடிகள் தடுமாறிய ரிச்சர்ட், “ஓ… சாரி, ரூட் டைவர்ட் ஆகி வந்ததால் கொஞ்சம் தாமதமாகி விட்டது, தாங்க் யூ ஸோ மச். இந்த உதவியை என்றும் நான் மறக்க மாட்டேன். அப்புறம்… ஆங்… இவளை நானே அழைத்து சென்று விடுவேன் ஒன்றும் பிரச்சினை இல்லை!” என்று சமாளித்தவாறு அருந்ததியை அவனிடமிருந்து பிரித்து மெல்ல தூக்கினான்.

சற்று சிரமப்பட்டு அவளை தன் தோள் வளைவுக்குள் கொண்டு வந்து தாங்கிப் பிடித்து நின்றவனை கவனித்தவாறே தன் தோள்களை ஒருமுறை விரித்தும் குறுக்கியும் சரி செய்தபடி எழுந்த கருண் அவனுக்கு உதவுவதாக முன்வந்து பதிலாக ஒரு விநோதப் பார்வையை பரிசாக பெற்றுக் கொண்டான்.

“கொஞ்சம் கஷ்டம் தான்… ஆள் பார்க்க தான் ஒல்லியாக இருப்பது போல் தெரிகிறது. ஆனால் சரி… வெயிட், என் ஒருபக்க தோளே இற்றுப் போய்விட்டது. அநேகமாக போன்(bone) வெயிட் அதிகமாக இருக்கும் என்று நினைக்கிறேன். உங்கள் ஒருவரால் முடியாது, நேரம் ஆனது ஆகிவிட்டது நான் இருந்து உங்களுக்கு உதவி விட்டே கிளம்புகிறேன். பாவம்… நீங்களும் என்ன செய்வீர்கள்?” என்று முன்னே வந்தவனை ஏற இறங்க பார்த்தவனின் முகத்தில் மெல்லிய ஏளனம் பரவியது.

“உங்களுக்கு தெரியுமா கருண்? எனக்கு பள்ளி பாடங்களிலேயே வந்து இருக்கிறது. மனிதன் விழித்திருக்கும் நிலையில் உள்ள உடல் எடையை விட ஆழ்ந்த உறக்கம் மற்றும் மயங்கிய நிலையில் இருக்கும் பொழுது அவன் உடல் எடை அதிகமாக இருக்குமாம்!”

“ஷ்… ஆங்… எஸ் எஸ், ஞாபகம் வந்து விட்டது, மறந்து விட்டேன்!” என லேசாக அசடுவழிந்து விட்டு, “அதையெல்லாம் நான் அவ்வப்பொழுது மறந்து விடுவேன், என் அப்பாவும், அண்ணாவும் தான் இதில் எல்லாம் தெளிவாக இருக்கும் புத்தகப் புழுக்கள். நான் என் அம்மா மாதிரி!” என்று பல்லைக் காண்பித்தான் கருண்.

அதைக்கண்டு அவனையும் மீறி இதழ்கள் புன்னகையை பூக்க, “எனிவேஸ்… ஒன்ஸ் அகைன் தாங்க்ஸ் அ லாட் கருண். பை!” என்றவாறு ரிச்சர்ட் திரும்ப அவனை வேகமாக தடுத்தான் கருண்.

“என்ன நீங்கள்… இப்பொழுது இவளை எப்படி கீழே பார்க்கிங் வரைக்கும் அழைத்து செல்வீர்கள்?” என்று மடக்கினான்.

‘ஓ… காட்! இப்பொழுது என்னடா வேண்டும் உனக்கு? தொணதொணவென்று பேசியே படுத்துகிறாயே?’

“என்ன அப்படி பார்க்கிறீர்கள்? வாங்க… நான் ஒரு பக்கம் பிடித்துக் கொள்கிறேன்!” என்றவாறு அருந்ததியின் ஒருபுறம் சென்று அவளை தன் தோள் தாங்கினான்.

“நீங்கள் நேரமாகிறது கிளம்ப வேண்டும் என்று சொன்னீர்களே?” என்றான் ரிச்சர்ட் குழப்பத்துடன்.

“ஆமாம்… சொன்னேன் தான். அதற்காக என்ன செய்வது? இத்தனை தூரம் உதவி விட்டு பாதியில் விட்டுச் சென்றால் நன்றாகவா இருக்கிறது? அதுவும் இல்லாமல் இதை போய் என் வீட்டில் சொன்னேன் என்றால் இப்படி தான் அரைகுறை வேலை செய்வாயா என்று என் குடும்பமே சுற்றி உட்கார்ந்து எனக்கு கிளாஸ் எடுக்கும். அதையெல்லாம் அனுபவிப்பதற்கு தாமதமாக செல்வதே மேல்!” என்றபடி தன்னுடன் நடந்தவனை கண்டு விழிகளில் சுவாரஸ்யம் பிறக்க, ‘ஃபன்னி கய்!’ என தனக்குள் ரசனையாக முணுமுணுத்தான் ரிச்சர்ட்.

தனது காரின் பின் பகுதியில் மெதுவாக அருந்ததியை படுக்க வைத்து விட்டு கதவை சாற்றிய ரிச்சர்ட், கருணின் கரம்பற்றி குழுக்கி மீண்டும் தன் நன்றியை தெரிவித்தான்.

“என்ன இது ஒரு உதவிக்கு எத்தனை தடவை தான் நீங்கள் நன்றி சொல்வீர்கள்?”

“இல்லை… நீங்கள் செய்திருக்கும் உதவி அப்படி…” என்றவன் சட்டென்று புருவம் சுருங்க அவனை பரபரப்புடன் ஏறிட்டான்.

“ஆமாம்… இவள் மயக்கமடையும் பொழுது உங்களிடம் ஏதாவது சொன்னாளா? நன்றாக ஆரோக்கியமாக கிளம்பி வந்த பெண்ணிற்கு எதற்காக திடீரென்று மயக்கம் வந்தது?” என்று படபடத்தவனின் நிலைப்புரிந்து தானும் குழப்பத்துடன் யோசித்தான் கருண்.

“நிச்சயம் இங்கே எதையோ குடித்து தான் இவளுக்கு மயக்கம் வந்திருக்கிறது. இவள் ஏதாவது சொன்னாளா அல்லது சந்தேகப்படும்படி யாரையாவது நீங்கள் பார்த்தீர்களா? கொஞ்சம் யோசித்துப் பாருங்களேன் ப்ளீஸ்… ஏனெனில் இது இத்தோடு முடிந்து விடுகிற விஷயம் இல்லை. இன்று முயன்றவன் உங்களால் அது தோல்வி அடையவும் நாளை மீண்டும் முயல மாட்டான் என்பதற்கு என்ன உத்திரவாதம் இருக்கிறது? நாளைப் பின்னே இவளுக்கு எந்த ஆபத்தும்…” என்று பரிதவித்தவனின் கரம்பற்றி அழுத்தி சமாதானப்படுத்தினான் கருண்.

“ஒன்றும் டென்ஷனாகாதீர்கள்… பங்ஷன் வீடியோ கிளிப்பிங்ஸை வாங்கி கவனமாக ஆராய்ந்துப் பார்த்து ஆளை கண்டுப்பிடித்து பிரச்சினையை சரி செய்து விடலாம். சந்தேகப்படும்படியாக…” என்று தாடையை தடவியபடி யோசித்தவனின் நினைவடுக்கில் அந்த நடுத்தர வயது மனிதர் வந்து போனார்.

கருணையே இமைக்காது கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்த ரிச்சர்ட், அவன் நெற்றி லேசாக சுருங்கவும் பரபரப்புற்று, “என்ன யார் மீதாவது சந்தேகம் எழுகிறதா? இங்கே இருக்கிறானா அவன்?” என்று உள்ளிருந்து கிளம்பிய கோபத்தோடு கழுத்து நரம்பு புடைக்க வினவினான்.

“இல்லையில்லை… அந்த ஆள் கொஞ்சம் வயதான ஆள், ஒரு மாதிரி திருதிருவென்று விழித்துக் கொண்டிருந்தார் அவ்வளவு தான்!” என்றான் இவன் சுலபமாக.

“நோ… நோ… அப்படியெல்லாம் நம்பி யாரையும் விட்டு விடமுடியாது. சந்தேகம் என்றால் எல்லாவற்றையும் தான் நாம் ஆராய வேண்டும். இப்பொழுது எல்லாம் இதுபோன்ற வயதான கழிசடைகள் கூட இம்மாதிரி ஈனச் செயல்களில் ஈடுபடுகின்றனர்!” என்று அருவருப்பில் முகம் சுளித்தான் நாயகன்.

“ம்… ம்… வேலிட் பாயின்ட் தான். ஓகே… ஒன்று செய்யுங்கள், உங்கள் கார்டை கொடுங்கள். இது என் கல்லூரி தோழனின் திருமண ரிசப்ஷன் தான், அடுத்த வாரம் அவனிடம் பங்ஷன் வீடியோவை பென்டிரைவில் வாங்கி வருகிறேன். அதை வைத்து சந்தேகிக்கும் நபரை பிடித்து விடலாம், இப்பொழுது உங்கள் தங்கையை முதலில் பாருங்கள். அவள் மயக்கம் போட்டு வேறு வெகு நேரம் ஆகிவிட்டது!” என்று அவனுக்கு அறிவுறுத்தினான் கருண்.

“ஆங்… சரி!” என்ற ரிச்சர்டும் தன் கார்டை அவனிடம் கொடுத்து பதிலாக அவன் கார்டை பெற்றுக் கொண்டு அவசரமாக கை குழுக்கி விடைப்பெற்று கிளம்பினான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *