*15*

 

“என்ன அண்ணா பிரச்சினை? எனக்காக எதுவும் வருந்திக் கொண்டு தயங்காதீர்கள், உண்மையை சொல்லுங்கள்!” என்று வற்புறுத்தினாள் அருந்ததி.

“ஹும்… என்ன தான் வருத்தம் என்றாலும் எவ்வளவு தான் தயங்கினாலும் உன்னிடம் இதை நான் சொல்லி தான் ஆக வேண்டும்!” என்றான் ரிச்சர்ட் விரக்தியுடன்.

அவள் குழப்பத்துடன் இமைக்காது அவன் முகத்தையே பார்த்திருக்க, அவனோ சுவற்றை வெறித்த வண்ணம் சில நாட்களாக தான் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளை காரண காரியத்தோடு விளக்கினான்.

அதைக் கேட்டவளின் முகம் ஏமாற்றத்திலும், ஏக்கத்திலும் சுருங்கி விழுந்து விட, சில நிமிடங்களே என்றாலும் அவனுடன் இணைந்து தானும் அதற்காக வருந்தியவள் சட்டென்று சுதாரித்து நிமிர்ந்து அவன் முகத்தை கூர்ந்துப் பார்த்தாள்.

வேதனையின் சுவடுகள் படர்ந்திருக்க தன் கம்பீரத்தையும், கலையையும் தொலைத்திருந்தவனின் முகம் இவள் மனதை தெளிவாக்க உதவியது.

இவ்வீட்டிலிருந்து தன்னை அநாதையாக விடுதிக்கு அனுப்ப சற்றும் விருப்பமில்லாமல் காலத்தின் கட்டாயத்தால் ரிச்சர்ட் செய்திருக்கின்ற ஏற்பாடுகளை தானே மனமுவந்து ஏற்றுக் கொள்ள தயாரானாள் அருந்ததி.

“அண்ணா… இதில் எனக்கு ஒன்றும் பிரச்சினை இல்லை, நான் விடுதிக்கு செல்கிறேன். என்றைக்கு கிளம்ப வேண்டும்?” என்றவள் அமைதியாக கேட்டதும் விலுக்கென்று திரும்பியவன் அவளை பலமாக முறைத்தான்.

“அப்பொழுது அவ்வளவு தான் உன்னுடைய பாசம் இல்லை? எப்பொழுதுடா இவன் இப்படி சொல்வான் இங்கிருந்து கிளம்பலாம் என்று இருந்திருக்கிறாய் அப்படித்தானே?” என்றான் வெடுக்கென்று.

அவளும் சிறுபெண் தானே என்ன செய்வாள்? அவனுக்காக என்று தன்னை கட்டுப்படுத்திக் கொண்டிருந்தவள் மளமளவென்று கண்ணீர் உகுக்க ஆரம்பித்தாள்.

“ஏய்… அருந்ததி!” என பதறி அவள் முகம் தாங்கினான் ரிச்சர்ட்.

“நான் அப்படிப்பட்டவள் என்றா நீங்கள் நினைக்கிறீர்கள்? நானாக கேட்டப் பொழுது கூட என்னை ஆசிரமத்தில் சேர்த்து விட மறுத்து உங்களுக்கு தங்கையாக நான் இங்கே தான் தங்க வேண்டும் என்று ஆரம்பத்தில் சொன்ன நீங்களே இப்படிப்பட்ட முடிவெடுத்திருக்கிறீர்கள் என்றால் இப்பிரச்சினை குறித்து எத்தனை தூரம் எல்லாவற்றையும் ஆலோசித்து இருப்பீர்கள். நீங்களே வேறுவழியில்லாமல் வேதனையோடு எடுத்த முடிவு என்பது தான் உங்கள் முகத்தை பார்த்தாலே தெரிகிறதே… பிறகு நான் எப்படி அதை மறுத்து உங்களை கஷ்டப்படுத்த முடியும்?” என்று வினவியவளின் உதடுகள் துடித்து நாசி விரிந்தது.

“அருந்ததிம்மா…” என்றவன் வேதனையோடு அவளை தன் தோளில் ஆதரவாக சாய்த்துக் கொண்டான்.

“ஐ ஆம் சாரிடா… உனக்கு கொடுத்த வாக்கை என்னால் காப்பாற்ற இயலாமல் போயிற்று!” என்றான் குரல் கரகரக்க.

“இப்பொழுது மட்டும் என்னண்ணா… எங்கே இருந்தாலும் நான் உங்கள் பொறுப்பில் தானே இருக்கப் போகிறேன்!” என்று அவனுக்கு ஆறுதல் கூறினாள் அருந்ததி.

“ப்ச்… என்ன இருந்தாலும் ஒரே வீட்டில் தினமும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டு ஒன்றாக வசிப்பது போல் வருமா?” என்றான் வெறுப்புடன்.

வராது தான்… அவளுக்கும் புரியத்தான் செய்தது. ஆனால் என்ன செய்ய முடியும்?

அண்ணனை தனக்காக தன் வாழ்விற்காக எதுவும் பார்க்க வேண்டாம் என்று சொல்ல நினைத்தாலும் இதில் அவர் வாழ்வும் தானே அடங்கி இருக்கிறது.

தன்னுடைய குடும்ப பிண்ணனி தெரிந்த எவரும் தன்னை திருமணம் செய்துக்கொள்ள முன்வர மாட்டார்கள். ஒருவேளை அப்படியே தெரியாமல் எவராவது முன் வந்தாலும் என்னால் அவர்களை ஏமாற்றவும் முடியாது, உண்மையையும் சொல்ல முடியாது. விவரம் சொன்னால் இருக்கின்ற மரியாதை மறைந்து தவறான கண்ணோட்டமும், எண்ணப்போக்கும் தான் தோன்றும். அதற்கு அப்படிப்பட்ட திருமணமே இல்லாமல் நிம்மதியாக இவருடைய தங்கையாகவே கௌரவமாக இருந்து விட்டுப் போகலாம்.

இதை ரிச்சர்டிடம் சொல்லி இவள் ஹாஸ்டலில் சேர்வதை தவிர்க்கலாம். ஆனால் அடுத்து இந்தப் பிரச்சினை அவருடைய வாழ்வையும் தானே பாதிக்கும். இப்படிப்பட்ட பெண்ணுக்கு உதவுகிறீர்களா… இப்படிப்பட்டவளை உங்களுடன் வீட்டில் தங்க வைத்திருக்கிறீர்களா என்று அவரை தவறாகப் புரிந்துக்கொண்டு யாரும் திருமணம் செய்ய மறுத்தால் என்ன செய்வது? அல்லது வசதி வாய்ப்புகளுக்காக முன்வந்து அப்படியே திருமணமே செய்துக் கொண்டாலும் அவர்களுடைய இல்லற வாழ்வில் தன்னை காட்டி இகழ்ந்து பேசினால் அவர் மரியாதையும் தானே சேர்ந்து கெட்டுப் போகும் என்று அந்த எண்ணத்தை கை விட்டாள்.

இப்படியே இருவரும் அடுத்தவரின் நலனுக்காக என்று மற்றவர் தங்கள் வருத்தத்தையும், வேதனையையும் மறைத்து அவரவர் வழியில் தனியாக வாழ்க்கை பாதையில் காலடி எடுத்து வைத்தனர்.

அருந்ததி பள்ளி நாட்களில் பள்ளி விடுதியிலும், விடுமுறை நாட்களில் ரிச்சர்டுக்கு தெரிந்த கிறுஸ்துவ ஆசிரமம் ஒன்றிலும் தங்குவதற்கு ஏற்பாடுகள் செய்திருந்தான் அவன்.

அவனுடைய தாத்தா காலத்திலிருந்தே அவர்கள் குடும்பம் நன்கொடை வழங்கி வரும் ஆசிரமம் என்பதால் அவனின் சூழ்நிலை கருதி நிரந்தரமாக அல்லாது இப்படி பகுதி நேரமாக தங்குவதற்கும் தனி சலுகையாக ஒத்துக் கொண்டார்கள்.

இப்படி பிரிந்திருக்கின்ற காலத்திலும் அவளை தனித்து விடாமல் அலைபேசியில் தினமும் தொடர்பில் இருந்தான் அவன்.

அருந்ததிக்கு என்று தனி கைபேசி, தனக்கும் அவளுக்கும் மட்டுமே என பிரத்யேகமான தனி எண்கள். எந்த நேரத்திலும் அவள் தன்னை நேரடியாக தொடர்பு கொண்டு பேசுமளவிற்கு வசதிவாய்ப்புகள் என்று செய்து கொடுத்திருந்தான். தினமும் மறவாமல் வீடியோ சேட்டிங்கில் பேசுபவன் மாதம் ஒருமுறை அவள் தங்கியிருக்கின்ற வளாகத்திற்கு நேரில் சென்று அவளோடு ஒருமணி நேரம் அளவளாவி மகிழ்வான்.

தாங்கள் பாசத்தில் திளைக்கும் அந்த ஒற்றை நாளை எதிர்நோக்கி இருவருமே மாதம் முழுவதும் காத்திருப்பர்.

காலச்சக்கரம் உருண்டோட அருந்ததியின் வாழ்க்கை பள்ளி விடுதியில் இருந்து கல்லூரி விடுதிக்கு என்று மாறியது.

இதற்கிடையில் ராக்கேஷிடம் விட்ட சவாலின் பொழுது மனதிலே தான் எடுத்த சபதத்தை சற்றே தளர்த்தி மாற்றி அமைக்கலாமா என்று அவ்வப்பொழுது சிந்தனையில் ஆழ்ந்தான் ரிச்சர்ட்.

அது வேறொன்றும் இல்லை, அருந்ததிக்கு மணம் முடித்தப் பின் தான் இவன் திருமணம் புரிந்துக் கொள்ள வேண்டும் என்று எண்ணியிருந்தான். ஆனால் தற்பொழுது நிலவும் சூழலில் தனக்கேற்ற பெண்ணாக தேடி முதலில் தான் திருமணம் முடித்து அருந்ததியை வீட்டிற்கு அழைத்துக் கொண்டால் என்ன என்பது தான் அது.

நிச்சயம் அருந்ததியை ஒரு நல்லவன் கையில் தான் ஒப்படைப்பான் என்றாலும் எதிர்காலத்தில் வரவிருக்கும் அவளுடைய புகுந்த வீட்டினர் தங்கள் உறவை எப்படி எடுத்துக் கொள்வார்களோ அல்லது போலி கௌரவம் கருதி துண்டிக்க நினைப்பார்களோ என அவனுக்கு கொஞ்சம் கவலையாகவும் இருந்தது.

அதனால் இயன்ற வரை அவளை தன்னுடைய வீட்டில் தங்க வைத்து மகிழ்ச்சியான சூழ்நிலையை அமைத்து கொடுக்க எண்ணினான்.

இப்படி திருமணம், பெண் என்று யோசித்த நொடி அவன் நினைவில் முதலில் வந்து போனது அவனுடைய கல்லூரி தோழி ஒருவள் தான். படிக்கின்ற காலம் வரை தோழியாக மட்டுமே இருந்தவள், சில ஆண்டுகளுக்கு முன்பு தான் தன் நேசத்தை அவனிடம் தெரிவித்தாள். ஆடிட்டர் ஒருவரின் மகளான அவள் அவனிடம் தன் விருப்பத்தை தெரிவித்து திருமணம் குறித்து பேச, அப்பொழுது இருந்த குழப்பத்தில் அதை நாசுக்காக மறுத்தவனுக்கு இப்பொழுது அவளை தொடர்பு கொண்டால் என்ன என்று தோன்றிற்று.

அவனுடைய அழைப்பிற்கு மறுப்பின்றி அந்த நட்சத்திர ஹோட்டலின் முகப்பில் புன்னகையுடன் வந்திறங்கியவளை கண்டு இவன் ஆர்வமுடன் சென்று வரவேற்க அவள் முகத்தில் வெற்றிப் புன்னகை அரும்பியது.

சற்று நேரம் பொதுவாக பேசிக் கொண்டிருந்து விட்டு திருமணத்தை எப்பொழுது வைத்துக் கொள்ளலாம் என்று ஒருவித எதிர்பார்ப்புடன் வினவினாள் அவள். அவனுக்கும் அவளை பிடிக்கும் என்றாலும் நேசம் என்றெல்லாம் உணர்வில் எந்த மாற்றமும் நிகழவில்லை.

சிறிய தயக்கத்தின் பின்னே தன் மனதை அவளுக்கு தெளிவாக எடுத்துரைத்தான் ரிச்சர்ட். அதுவரை இருந்த கலை மறைந்து அவள் முகம் லேசாக மங்கவும் வேகமாக அருந்ததியின் சூழ்நிலை தங்கள் இருவரின் ஆத்மார்த்தமான அன்பு என அவசரமாக விளக்கினான்.

சில நிமிடங்களுக்கு தன் கைவிரல்களை நன்கு ஆராய்ந்து அவனுடைய இதயத்துடிப்பை ஏற்றியவள் மெல்ல நிமிர்ந்து வருத்தத்துடன் முறுவலிக்கவும் இவனுக்கு ஏமாற்றமாக இருந்தது.

“நீ… நீயும் எங்களை சந்தேகிக்கிறாயா?” என்றான் வேதனையோடு.

“ச்சேச்சே…” என்று வேகமாக அதை மறுத்தவள், “அந்த பெண்ணை பற்றி தெரியவில்லை என்றாலும் உன்னை பற்றி எனக்கு நன்றாக தெரியுமே!” என்றாள் பதிலாக.

“அப்புறம் என்ன?” என்றான் எதிர்பார்ப்போடு.

“ரிச்சர்ட்… இது பிராக்டிக்கலி ரொம்ப கஷ்டம்ப்பா. நீ அவளுக்கு பினான்ஷியலா எத்தனை செலவுகள் செய்தாலும் நான் அதை கண்டிப்பாக தட்டிக் கேட்க மாட்டேன். ஏன் நானே கூட இன்னும் வசதிகளை அவளுக்கு பெருக்கி தரலாமே என்று ஆலோசனை கூறுவேன். ஏனெனில் அது என்வரை மட்டுமே சம்பந்தப்பட்டது அடுத்தவருக்கு தெரியவும் போவதில்லை தெரிந்தாலும் நான் அதை சமாளித்து விடுவேன். ஆனால் இது அப்படியில்லைம்மா… அவளை வீட்டோடு வைத்துக் கொண்டால், ஏன் எதற்கென்று பல கேள்விகள் பல இடங்களில் இருந்து கிளம்பும். அவற்றிற்கெல்லாம் என்னால் பொறுமையாக பதில் சொல்லிக் கொண்டிருக்க முடியாது. அப்படியே சொன்னாலும் என் மனதிலும் ஒருநாள் சலிப்பு வந்து தான் தீரும். அந்த நேரம் என் கோபமோ, வருத்தமோ நிச்சயம் உன்னையோ அந்த பெண்ணையோ தான் பதம் பார்க்கும் அது நம் உறவிற்குள் உள்ள ஆரோக்கியத்தை கெடுத்து விரிசலை உண்டு பண்ணும். இக்கால தலைமுறை என இதை நான் ஏற்றுக் கொண்டாலும் என் குடும்பத்தினர் அனுமதிக்க மாட்டார்கள். ஏற்கனவே மதம் மாறி விரும்புகிறேன் என லேசான தயக்கம் இருந்தாலும் என் மகிழ்ச்சிக்காக என்று ஒத்துழைப்பு தரும் அவர்களின் எண்ணங்களுக்கு நான் உரிய மரியாதை கொடுத்து தான் ஆக வேண்டும். ஸோ… ப்ளீஸ்… இனி நீதான் சொல்ல வேண்டும்!”

“நான் சொல்வதற்கு எதுவுமில்லை!” என தீர்மானமாக கூறியவன், “என்னால் அவளை விட்டுத் தரமுடியாது. உன் மனதை அலைபாய வைத்ததற்கும், எதிர்ப்பார்ப்பை அதிகமாக்கியதற்கும் என்னை மன்னித்து விடு!” என்றான் அவள் விழி பாராமல் அமைதியாக.

மெல்லிய பெருமூச்சொன்றை வெளியேற்றியவள், “இட்ஸ் ஓகே… ஐ அன்டர்ஸ்டார்ன்ட் யுவர் ஃபீலிங்ஸ். எதிர்காலத்தில் உன் எண்ணங்களுக்கு ஏற்றப் பெண்ணாக வாழ்க்கை துணை அமைவதற்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள். நாம் என்றும் நண்பர்களாகவே இருந்து விடுவோம்!” என அவன் கரம்பற்றி அழுத்தி விடைப்பெற்றாள்.

தன் குணம் முழுவதும் புரிந்த இவளே இதை மறுக்கும் பொழுது வேற்றுப் பெண்களிடம் எப்படி ஆதரவு கிடைக்கும் என்கிற பரிதவிப்பு ஒருபுறமும், ஒவ்வொரு பெண்ணிடமும் சென்று தான் இதை விளக்குவதா என்கிற தயக்கம் மறுபுறமும் என தடுமாறியவன் மீண்டும் திருமண எண்ணத்தை கைவிட்டான்.

இது புரியாமல் அவன் தங்கைக்கும் இந்த அறிவுபூர்வமான சிந்தனை தோன்ற வீட்டிற்கு செல்ல வேண்டி ஆசையுடன் அவனிடம் இதை பகிர்ந்தாள். தனக்கு நேர்ந்துள்ள சிக்கல் தெரிந்தால் தன்னால் தான் என வருந்தி அவனிடமிருந்து ஒதுங்கப் பார்ப்பாள் என்று லாவகமாக அதை மறைத்தான் அவள் அண்ணன்.

எனக்கு மனைவியாக வரப்போகிறவள் பற்றி எனக்கென்று சில எதிர்ப்பார்ப்புகள் இருக்கிறதும்மா, அத்தகைய தகுதிகளோடு என்று பெண் கிடைக்கிறாளோ அன்று தான் எனக்கு திருமணம் என்று முடித்துவிட்டான் ரிச்சர்ட். இதற்குமேல் அருந்ததி என்ன சொல்ல… எதுவும் பேச இயலாது வருத்தத்துடன் ஊமையாகி விட்டாள்.

இப்படியே வருடங்கள் கடக்க முதுகலை பட்டப்படிப்பின் இறுதிநாட்களில் இருந்தாள் அவள். பள்ளி நாட்களிலேயே தன் வாழ்வின் சொந்த அனுபவத்தின் மூலம் தனக்கு திருமணம் என்பதெல்லாம் வேண்டாம் என முடிவெடுத்திருந்தவள் அதை அண்ணனிடம் சொல்லப் போய் நன்றாக வாங்கி கட்டிக்கொண்டாள்.

இதுதான் நிதர்சனம் என புரியாத அவனிடம் அதற்கு மேல் தன் எண்ணத்தை தெரிவிக்காது மறைத்து சமூகசிந்தனை மற்றும் சமூகசேவைகளின் பால் தன் கவனத்தை திசை திருப்ப ஆரம்பித்தாள். அதற்கு உகந்த படிப்பாக தான் மருத்துவத்துடன் இணைந்து சிறந்த முறையில் செயல்பட்டு வரும் உளவியல் துறை படிப்பை மேற்கொண்டாள்.

ரிச்சர்ட் என்கிற மனதநேயம் மிக்க மனிதனின் அறிமுகம் தனக்கு கிடைத்ததால் தன் வாழ்வு சீரழிந்து விடாமல் காப்பாற்றப்பட்டது. அப்படி அல்லாமல் எத்தனையோ சிறுவர், சிறுமிகள், பெண்கள் அத்தகைய ஆபத்தில் சிக்கி சின்னாபின்னமாகி மீண்டு அன்றாட வாழ்வை நடத்த இயலாமல் திணறுகிறார்களே… அப்படிப்பட்ட அவர்களுக்கான மீட்பு வழியை தேடிக்கொடுக்க வேண்டிய வேலையை தான் மேற்கொள்ள வேண்டும் என்கிற எண்ணத்திலேயே அந்த படிப்பை தேர்ந்தெடுத்திருந்தாள்.

 


 

“அச்சோ… அண்ணா, ஒன்றும் பிராப்ளம் இல்லை. டே டைம் தான்… சேஃப் ஆன பிளேஸ் தான்… சிட்டியுடைய ஹார்ட் என்றே சொல்லலாம், ஸோ… டோன்ட் வொர்ரி. நான் ஸ்கூட்டியிலேயே பத்திரமாக போய்விட்டு இரண்டு மணி நேரத்தில் ஹாஸ்டலுக்கு திரும்பி விடுவேன். எந்த வண்டியும் அனுப்ப வேண்டாம், ஹாங்… ஹாங்… பங்ஷன் முடிந்து கிளம்பும் பொழுதும் போன் பண்றேன். ஹாஸ்டலுக்கு போய் சேர்ந்ததும் திரும்ப போன் பண்றேன். ஓகே? பை!” என்று முகம் முழுவதும் நிலைத்தப் புன்னகையுடன் அலைபேசியை அணைத்தாள் இருபத்திமூன்று வயது யுவதி அருந்ததி.

தன்னுடன் பயிலும் தோழி ஒருவளின் சகோதரனுடைய ரிசப்ஷனுக்கு செல்ல வேண்டி கிளம்பியவள் தான் ரிச்சர்ட்டின் பல்வேறு உத்திரவுகளில் ஒன்றான புதிதாக வெளியிடங்களுக்கு செல்ல வேண்டி வந்தால் தன்னிடம் அறிவிக்காமல் எங்கேயும் செல்லக் கூடாது என்கிற அன்பு கட்டளையை ஏற்று அவனிடம் விவரம் தெரிவித்து கிளம்பியது.

அவளுக்கு என்ன தான் தற்காப்பு கலைகளை கற்றுக் கொடுத்து மனதைரியத்தை வளர்த்து விட்டிருந்தாலும் பெண்ணை பெற்றவர்களுக்கே உரிய இயல்பான அடிவயிற்றில் நெருப்பை கட்டிக் கொண்டிருப்பது போல் என்பார்களே அதைவிட ஒருபடி மேலான நிலைமையில் இருப்பான் ரிச்சர்ட்.

ஒன்று… வயதின் முதிர்ச்சியின்மை, இரண்டாவது… அருந்ததியின் நிலைக்குறித்த கவலை.

தனது ஸ்கூட்டியை அந்த நட்சத்திர ஹோட்டலின் வளாகத்தில் நிறுத்திவிட்டு தன் தோழியை சந்தித்து வாழ்த்து தெரிவித்து மணமக்களுக்கு பரிசளித்து அவர்களுடன் இணைந்து புகைப்படம் எடுக்கும் வரை எல்லாமே நன்றாக தான் சென்றது. மேடையில் நின்ற அந்த தருணத்தில் வேண்டாதவனின் பார்வையில் அவள் விழுந்து விட, விதி அவளைப் பார்த்து எக்காளமிட்டு சிரித்ததா அல்லது மர்மப்புன்னகையை சிந்தியதா என்பது அதற்கே வெளிச்சம்.

தோழியிடம் விடைப்பெற்று கீழிறங்கி அரங்கின் ஓர் மூலையில் நடந்துக் கொண்டிருந்த மெல்லிசை கச்சேரியை ரசித்த வண்ணம் ஒரு ஓரமாக அமர்ந்திருந்தவளை சில நிமிடங்களில் கையில் குளிர்பானங்கள் அடங்கிய ட்ரேயை தாங்கிய சிப்பந்தி ஒருவன் கலைத்தான்.

“மேடம்… டிரிங்ஸ்!”

“ஓ… தாங்க் யூ!” என்ற சின்ன முறுவலுடன் எடுத்தவள் எவ்வித தயக்கமும் இன்றி அதை உதட்டில் வைத்தாள்.

அடுத்த ஐந்து நிமிடங்களில் லேசாக தலைசுற்றுவது போல் இருக்கவும் அதை உதறியவள் மெல்ல தன்னை நிலைப்படுத்த முயன்றாள். ஆனால் வேண்டுமென்றே மயக்கமருந்தை கலந்துக் கொடுத்த பானத்தை அருந்தியவளுக்கு மயக்கம் தெளிந்து விடுமா என்ன?

நிமிடங்கள் கரைய கரைய தன் நிலை குறித்து லேசாக சந்தேகம் கொண்டவளுக்கு யாரோ திட்டமிட்டு செய்த சதி அது என்பது மெதுவாக புரிந்தது. இதயம் படபடவென்று அடித்துக் கொள்ள, உடல் அச்சத்தில் வியர்க்க தொடங்கியது. இதைச் செய்தவர் யாராக இருக்கும் என தெரிந்துக் கொள்ள முயன்று தோற்றவள் அவர்கள் எண்ணத்தை ஜெயிக்க விடக்கூடாது என்று வேகமாக அங்கிருந்து கிளம்ப முயன்றாள்.

இரண்டடி எடுத்து வைக்கும் முன்னே தேகம் தள்ளாட பதற்றத்தில் வியர்த்து சில்லிட்டு நடுங்கிய கரங்களை சமாளித்து மொபைலை எடுத்து உடனடியாக அண்ணனுக்கு தன் நிலையை தெரிவிக்க முயன்றாள்.

அந்தோ பரிதாபம்… கைபேசியும் அவளை விட்டு கைநழுவி தரையில் வீழ்ந்தது.

அடுத்த அடி எடுத்து வைக்க இயலாது தள்ளாடியவளால் எப்படி அந்த போனை குனிந்து தரையில் இருந்து எடுக்க முடியும்?

கண்ணெதிரே பூச்சிகள் பறக்க இமைகளை மூட விடாமல் போராடிக் கொண்டிருந்தவளை ஆழ்ந்து நோக்கியபடி எதிரே வந்துக் கொண்டிருந்த அந்த இளைஞன் தன் காலடியில் தரையில் வீழ்ந்தும் சிதறாமல் வீற்றிருந்த அலைபேசியை குனிந்து கையில் எடுத்தான்.

அதை எதையும் காணும் நிலையில் இல்லாமல் தள்ளாடியவளின் அருகே நின்றவன் மொபைலை காதுக்கு கொடுத்தான்.

“ஹலோ… ஹலோ…” என எதிர்முனையில் பதறிய குரலுக்கு நிதானமாக, “ஹலோ!” என்று திருப்பி பதிலளித்தான் அவன்.

“ஹலோ…” என்று முதலில் தயங்கிய குரல் அடுத்த நொடி படமெடுக்கும் நாகமாக சீறியது, “ஏய்… யார்டா நீ? உனக்கு எப்படி இந்த போன் கிடைத்தது?” என்றான் ரிச்சர்ட் ஆவேசமாக.

“ரொம்ப நல்ல மரியாதை… எதிரே ஒருவள் போனை கூட கையில் பிடிக்க முடியாமல் தள்ளாடியபடி தரையில் போட்டு விட்டாளே, என்னவோ ஏதோ என உதவ வந்தால்… எனக்கு இது தேவை தான்!” என்றான் புதியவன் நக்கலாக.

“என்ன?” என்று அதிர்ந்தவன் ஒன்றும் புரியாமல் குழம்பி, “நீங்கள் எங்கே இருக்கிறீர்கள்? உங்கள் எதிரில் தள்ளாடும் பெண் என்றால்… அவள் என் தங்கையா?” என்றான் பதற்றத்துடன்.

“அது எனக்கு தெரியாது!” என்று உதடுகளை பிதுக்கியவன் தானிருக்கும் இடத்தை தெரிவித்தான்.

“ஓ… நோ… அவள் என் சிஸ்டர் அருந்ததி தான். அவளுக்கு என்னவாயிற்று? கடவுளே… நான் உடனே கிளம்பி வருகிறேன். அதுவரை நீங்கள் அவளை கொஞ்சம் கவனமாகப் பார்த்து கொள்ள முடியுமா? ப்ளீஸ்… நான் அவள் தோழியிடமும் உடனே விவரம் தெரிவிக்கிறேன்!” என்று கெஞ்சினான்.

அவன் பதற்றம் உணர்ந்து குரலில் அதுவரை இருந்த அலட்சியம் மாறி இவனும் பொறுப்பாக பதிலளித்தான்.

“ஷ்யூர்… நோ பிராப்ஸ், பார்த்து வாங்க. நாங்கள் இங்கேயே வெயிட் பண்றோம்!”

“ஓ… தாங்க்ஸ் அ லாட்!” என்றவனின் குரலில் வெளிப்பட்ட மூச்சிரைப்பு அவன் கிளம்பிவிட்டதை உணர்த்த, இவனும் ஒரு பையுடன் அலைபேசியை அணைத்து பாக்கெட்டினுள் போட்டான்.

அதற்குள் எதிரில் நின்றவள் கைகளால் துழாவி காற்றிலே வாத்தியம் இசைக்க முயல, அவளை கீழே விழாமல் தாங்கி நிறுத்தினான் அவன். அவளோ அதற்கு இணங்க மறுத்து அவனை விலக்க முயன்று தோற்றுக் கொண்டிருந்தாள்.

“ஹேய்… யா… யாய் நீ? குயி… குயிதில் எதி கல… கந்தாய்?” என அவன் சட்டையை பற்றியபடி குளறியவளின் பேச்சைக் கேட்டு முதலில் புன்னகை வந்தாலும் அடுத்து வேதனையில் முகம் இறுகியது.

மீண்டும் அலைபேசி அலற அலுப்புடன் குனிந்து பார்த்தால் அவளுடையதில் இருந்து என புரிய வேகமாக வெளியே எடுத்தான்.

“ஸாரி… நான் வந்து கொண்டிருக்கிறேன், ஜஸ்ட்… பிப்டீன் மினிட்ஸ். நான் ரிச்சர்ட்… நீங்கள்?”

“ஐ ஆம் கருண் சித்தார்த்!” என்றான் இவன் நிதானமாக.

(யாருப்பா இந்த கருண் சித்தார்த்? கண்டுப்பிடிங்க… எல்லாம் நமக்கு தெரிந்தவர் தான்.)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *