*14*

 

பிரமிளாவின் ஆலோசனையால் மிகவும் மன உளைச்சலுக்கு ஆளான ரிச்சர்ட் அதற்கு மேலும் அங்கே அமர்ந்திருக்க முடியாமல் வேகமாக எழுந்தவன், “நான் வருகிறேன் ஆன்ட்டி… நீங்கள் சொன்ன விஷயத்தை யோசித்துப் பார்க்கிறேன்!” என்று விட்டு அவர் பதிலளிக்க வாய்ப்பு கொடுக்காமல் விறுவிறுவென்று வெளியேறினான்.

அலுவலகம் செல்ல விருப்பமில்லாமல் வீட்டிற்கு சென்றாலும் அருந்ததியின் கேள்விகளுக்கு பதில் சொல்ல நேரிடும் என்று காரை நேராக ஆள் அரவமற்ற ஈ.சி.ஆர் பீச்சிற்கு விட்டவன் காலம் காலமாக கரையோடு சங்கமித்து உறவாட தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கும் கடல் அலையை பசி, தாக உணர்வின்றி அசையாது வெறிக்க துவங்கினான்.

இதயத்தை நிச்சலனமாக வைத்துக் கொள்ள வெகுவாக போராடியவனுக்கு வெற்றி தான் கிட்டவில்லை. அருந்ததியும், தானும் அடுத்து பிரிந்தாக வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுவதை எண்ணி மனம் வெதும்பியவன் இதை தவிர வேறு மார்க்கமே இல்லை என்கிற நிலையை தங்களுக்கு உருவாக்கி தந்த உலகை நினைத்து உள்ளம் கொதித்தான்.

இதுநாள் வரை உள்ள தனிமை மறைந்து இப்பொழுது தான் இருவரும் சந்தோசமாக வாழ ஆரம்பித்தோம். அதற்குள் இப்படி ஓர் சூழ்நிலையா? உனக்கென்று இந்த அண்ணன் இருக்கின்றான் என்ற நம்பிக்கையில் இனி கவலை மறந்து எப்பொழுதும் மகிழ்ச்சியுடன் இருக்க வேண்டுமென்று அவளிடம் சொல்லி சில மாதங்கள் கூட ஆகவில்லை அதற்குள் … என ஆத்திரம் கொண்டவன் வேகமாக எதிரே இருந்த ஸ்டீரியங்கில் ஓங்கி குத்தினான்.

‘ஏன்… ஏன் எங்களுக்கு மட்டும் இப்படி ஓர் நிலைமை? இந்த விவரங்களை நான் எப்படி அந்த சின்னப்பெண்ணிடம் சொல்வேன்? இதுநாள் வரை உள்ள துன்பம் மறைந்து இனி என் பாதுகாப்பிலும், அரவணைப்பிலும் சுதந்திரமாக சுற்றி வந்து சந்தோசமாக வாழ்வோம் என்று நம்பினாளே, ஐயோ… மீண்டும் அவளை தனிமை எனும் கொடிய சாத்தானிடம் தள்ளிவிடச் சொல்கிறதே இந்த சமூகம், நான் என்ன செய்வேன்?’ என அரற்ற ஆரம்பித்தான்.

இருட்ட தொடங்கிய வேளையில் தன் உள்ளச் சோர்வை மறைத்து வீட்டிற்கு வண்டியை விட்டவன் அயர்வுடன் இறங்கி நாலடி எடுத்து வைத்திருப்பான் ஆவலுடன் எதிரே ஓடி வந்த அருந்ததி அவன் கையிலிருந்த லேப்டாப் பேகை வேகமாக வாங்கிக் கொண்டாள்.

“ஹாய் அண்ணா! இன்றைக்கு எதுவும் மீட்டிங் இருந்ததா என்ன இவ்வளவு நேரம் ஆயிற்று?” என அக்கறையாக வினவினாள்.

“ம்… ஆமாம்மா, கொஞ்சம் வேலையும் அதிகம்!”

“ஓ… உங்கள் முகத்தை பார்த்தாலே தெரிகிறது ரொம்ப டல்லாக இருக்கிறீர்கள்!”

எதுவும் கூறாமல் அமைதியாக படியேற முயன்றவன் சட்டென்று நினைவு வந்தவனாக நின்று அவளிடம் திரும்பி, “நீ சாப்பிட்டாயா?” என்று கேட்டான்.

“இல்லைண்ணா… உங்களுடன் சாப்பிடலாம் என்று காத்திருக்கிறேன்!”

“ப்ச்… நேரம் ஒன்பதை தாண்டப் போகிறது ஒழுங்காக நேரத்திற்கு சாப்பிடுவதற்கென்ன?” என்று அதட்டியவனிடம், “போங்க அண்ணா… இருப்பதே இரண்டே பேர், ஆளுக்கொரு நேரம் தனியாக சாப்பிட்டால் நல்லாவே இருக்காது போரடிக்கும்!” என்று மூக்கை சுளித்தாள் அவள்.

துக்கம் நெஞ்சை அடைக்க, “ஓகே நான் போய் பிரெஷ்அப் ஆகி வருகிறேன்!” என்று மடமடவென்று மேலேறினான்.

அறையின் கதவில் கை வைக்கும் பொழுது, “சரி நான் அதற்குள் டிபனை டேபிளில் எடுத்து வைக்கிறேன்!” என்ற குரல் கீழிருந்து ஒலிக்க கதவை மூடியவன் ஆதரவு தேடி அதன்மீது தளர்ந்து சாய்ந்தான்.

சில நிமிடங்களில் தன்னை சுதாரித்தவன் தனக்காக காத்திருப்பவளை மேலும் பட்டினி போட விரும்பாமல் தன் மனநிலையை மாற்ற குளியலறைக்குள் புகுந்துக் கொண்டான்.

சில்லென்ற விழுந்த குளிர்ந்த நீர் மேனியை தீண்டி மனதை சமன்படுத்த குளித்து முடித்தவன் துவாலையை கொண்டு தன்னுடல் ஈரத்தோடு மனபாரத்தையும் தற்காலிகமாக துடைத்தெறிந்தான்.

தெளிந்த முகத்துடன் கீழே இறங்கி வந்தவனை கண்டு அவள் பளிச்சென்று புன்னகைக்க தானும் அதை திருப்பியவன் அன்றைய நாள் அவளுக்கு எப்படி போனது என பொதுவாக விசாரித்தபடி அவளுடன் உணவருந்த ஆரம்பித்தான்.

‘அவளுக்கென்று தான் ஒரு தெளிவான முடிவெடுக்கும் வரை தன்னுடைய மனக்குழப்பத்தை வெளிப்படுத்தி அவளையும் சஞ்சலம் எனும் சித்திரவதைக்கு உள்ளாக்க வேண்டாம். ஒன்றாக இருக்கும் வரையாவது அவளை எப்பொழுதும் மலர்ச்சியோடு வைத்துக் கொள்ள வேண்டும்!’ என தீர்மானித்தான் ரிச்சர்ட்.

உணவை முடித்த பின் வழமையான பழக்கங்களில் ஒன்றான சற்று நேரம் இயற்கை காற்றையும், இரவின் குளுமையையும் ரசித்தபடி தோட்டத்தில் நடைப்பயில ஆரம்பித்தார்கள்.

அந்த நேரத்தை சுவாரசியமாக ஆக்கவென்றே இருவருக்கும் பிடித்த விஷயங்கள், பொழுதுப்போக்குகள் என அலசுவார்கள். ரிச்சர்ட் வெளியிடங்களுக்கு, வெளிநாட்டிற்கு சென்று வந்த அனுபவங்கள் குறித்தும் அவனிடம் ஆர்வமாக கேட்டு தெரிந்துக் கொள்வாள் அருந்ததி.

கை மறைவில் நாசுக்காக கொட்டாவி ஒன்றை வெளியேற்றியவன், “தூங்கப் போகலாமாடா?” என்று அவளிடம் கேள்வி எழுப்பினான்.

“ஆங்… ஓகேண்ணா, உங்களுக்கு வேலை அதிகம் என்று வேறு சொன்னீர்களே குட்நைட்!” என குழந்தையாக முறுவலித்தாள்.

கனிவுடன் அவள் கன்னம் தட்டியவன் பின் மெல்ல தயக்கத்துடன் விரல்களை விலக்கிக் கொண்டான்.

தனக்குள் வெடித்த பெருமூச்சை ஓசையின்றி வெளியேற்றியவன் அவளிடம் திரும்பி, “ம்… குட்நைட், நீயும் உள்ளே வா. இந்நேரத்திற்கு இங்கே தனியாக நிற்காதே!” என அவளையும் வீட்டினுள் அழைத்து சென்றான்.

அயர்வுடன் படுக்கையில் விழுந்தவனை உறக்கம் தான் தழுவ மறுத்து விலகி ஓடிச் சென்றது. புருவம் சுருங்கியிருக்க நேரெதிரே வெறித்தபடி யோசனையிலிருந்தவன் நள்ளிரவு வேளை தாண்டும் நேரம் தன்னை மறந்து உறக்கத்தில் ஆழ்ந்தான்.

தொடர்ந்து வந்த நாட்களில் ஏற்கனவே அருந்ததியை சேர்த்திருந்த பள்ளிக்கு சென்று அங்குள்ள போர்டிங் வசதிகளை பற்றிக் கேட்டறிந்தவன் அவளை அப்பிரிவில் சேர்த்து விட்டான்.

விடுமுறை நாட்களில் என்கிற பெரிய கேள்விக்குறி அவன் முன்னே எழ, அந்த நாட்களில் உள்ளூரிலேயே அவள் தங்குவதற்கான மாற்று ஏற்பாடுகளை சற்றும் விருப்பமின்றி வேதனையோடு செய்தவன் வீட்டிற்கு திரும்பி தன் அறையில் மெல்ல விரக்தியோடு ஓய்ந்தமர்ந்திருந்தான்.

“அண்ணா! இன்றைக்கு நீங்கள் ஃபிரியா?” என்றபடி தயக்கத்துடன் அவனெதிரே வந்து நின்றாள் அருந்ததி.

என்ன கேட்க வருகிறாள் என்று புரியாமல், “ஏன்மா?” என நெற்றியை சுருக்கினான் ரிச்சர்ட்.

“இல்லை… போன வாரம் ஏதோ ஒரு அனிமேடட் மூவி புதிதாக வந்திருக்கிறது மிகவும் நன்றாக இருக்கிறதாம், பார்க்கலாமா என்று கேட்டீர்களே மறந்து விட்டீர்களா?” என்றாள் அப்பாவியாக.

அக்குழந்தையின் எதிர்பார்ப்பை கண்டு இவளை தனியே வெளியில் அனுப்ப போகிறோமே என உள்ளுக்குள் பரிதவித்தவன் தன்னை சமாளித்து இன்று பார்க்கலாம் எனவும் அல்லியாய் மலர்ந்தவள் சரி நான் டிவியை ஆன் செய்கிறேன் என துள்ளலுடன் ஓடினாள்.

படம் என்னவோ ஆர்வத்தை தூண்டும் விதமாக நன்றாக தான் இருந்தது. ஆனால் மனநிம்மதியை இழந்து தவிப்பவனால் தான் அதில் ஒன்ற முடியவில்லை.

கைகளை பின்னுக்கு கோர்த்து கட்டிலில் சாய்ந்தமர்ந்திருந்தவன் எவ்வித விகல்பமுமின்றி தன்னருகில் குழந்தையாய் படத்தில் வரும் காட்சிகளை கண்டு குதூகலித்தபடி மெத்தையில் அமர்ந்திருந்தவளையே இமைக்காது நோக்கினான்.

‘இந்த சிறுமியை என்னுடன் இணைத்து நாவில் நரம்பில்லாமல் மோசமாக பேசுவார்கள் என்ற ஒரே காரணத்திற்காக பயந்துக் கொண்டு இவளை வீட்டிலிருந்து விரட்டியடிக்க பார்க்கிறேனே… இது தெரிய வரும்பொழுது இவளின் நிலை எப்படி இருக்கும்? நிச்சயம் வேதனையடைவாள். இந்த உலகில் சகோதர உறவை பறைசாற்றிக் கூட ஒரு ஆணும், பெண்ணும் கௌரவமாக ஒரே வீட்டில் வசிக்க முடியாதென்பது எவ்வளவு கொடுமையான துரதிர்ஷ்டமான விஷயம்!’

அத்தனையையும் தகர்த்தெறிந்து ஒன்றாக வசித்தால் தான் என்ன என்கிற வெறி எழும்பொழுதே அடுத்து அருந்ததியின் எதிர்கால வாழ்வை எண்ணி கவலையும் இரட்டை குழந்தையாய் உடன்பிறந்தது.

“படம் ரொம்ப ஜாலியாகப் போயிற்று இல்லையா அண்ணா?” என்ற குரல் இடையிடவும் திடுக்கிட்டு விழித்தான் ரிச்சர்ட்.

“ஆங்… ஆமாம்… ஆமாம், நன்றாக இருந்தது!” என்று அவசரமாக கூறி சமாளித்தவனை விசித்திரமாக நோக்கினாள் அருந்ததி.

அவள் முகத்தை நேருக்கு நேர் பார்க்க இயலாமல் தடுமாறியவன், “சரி சாப்பிடப் போகலாமா? எனக்கு பசிக்கிறது!” என்று எழுந்து வேகமாக அறையை விட்டு வெளியே சென்றான்.

பொதுவாகவே சரியான வழிக்காட்டுதலோ ஆதரவோ இன்றி தனிமையில் வளரும் குழந்தைகள் தங்களை தாங்களாகவே மேம்படுத்திக்கொள்ளவோ அல்லது தற்காத்துக் கொள்வதற்காகவோ என்னவோ சற்று புத்தி சாதுர்யத்துடன் வளருவார்கள்.

அருந்ததியும் அதற்கு விதிவிலக்கல்ல!

கடந்த சில நாட்களாகவே தன் உடன்பிறவா சகோதரன் ஏதோ வேதனையில் சுற்றிக் கொண்டிருக்கிறானோ என்கிற சந்தேகம் அவளுக்கு எழ தான் செய்தது. தன்னிடம் அதை மறைத்து அவன் சிரித்துப் பேசினாலும் அவனையும் மீறி அவன் விழிகளில் படரும் கவலையை அவள் கவனித்து தான் வந்தாள்.

அது என்னவாக இருக்கும் என குழம்பினாலும் சிறுபிள்ளையான தன்னால் எப்படி அவனுடைய கவலையை போக்க முடியும் என்று எண்ணி அவனுக்காக இவளும் வருத்தம் கொண்டாள்.

அதற்கு மறுநாள் அலுவல் முடிந்து வீடு திரும்பியதும் அருந்ததியிடம் எதையோ சொல்ல அருகில் வந்து விட்டு முடியாமல் தடுமாறியபடி விலகிச் சென்றான் ரிச்சர்ட். யோசனையோடு அவனை பின்தொடர்ந்தவள் அவனருகில் செல்லாமல் மறைந்திருந்து அவனை கவனித்தாள்.

எதையோ மனதில் போட்டு தனக்குள் உளப்பிக் கொண்டு அலைபாய்ந்தபடி இதற்கும் அதற்கும் அறையில் நடைப்பயின்று கொண்டிருந்தான் அவன்.

கைகளை கோர்ப்பதும் பிரிப்பதுமாக இருந்தவனின் உடல் சட்டென்று விறைப்புற சிவந்த முகத்துடன் ஆக்ரோஷமாக கை முஷ்டியை இறுக்கி எதிரே இருந்த சுவற்றில் அவன் ஓங்கி குத்தப் போக அதைக் கண்டு அதிர்ந்தவள் வேகமாக ஓடோடி சென்று ரிச்சர்ட்டின் கரம்பற்றி தடுத்தாள்.

“அண்ணா… என்ன செய்கிறீர்கள்?”

திகைப்புடன் திரும்பியவன், “அருந்ததி!” என்று முணுமுணுக்க, அவனை கையோடு அழைத்து வந்து கட்டிலில் அமர வைத்தவள் தானும் எதிரே அமர்ந்தாள்.

தன்னுடைய வாழ்நாளில் இத்தனை ஆண்டு காலத்தில் எத்தனையோ மனிதர்களையும், பெரிய தொழிலதிபர்களையும் நேருக்கு நேர் நிமிர்வுடன் சந்தித்து எதையுமே சரியாக கணித்து வெற்றியுடன் செயல்பட்டு வந்தவனால் இன்று தன்னெதிரே தன்னையே ஆழ்ந்து பார்த்தபடி அமர்ந்திருக்கும் சிறுமியை ஏறிட்டுப் பார்க்க முடியாமல் தலைக்குனிந்திருந்தான் ரிச்சர்ட்.

இதுவரை அவனுடைய பிரச்சினை என்னவாக இருக்கும் என்று குழம்பி தவித்த அருந்ததிக்கு சற்று முன்னர் தன்னிடம் பேச முடியாமல் அவன் தடுமாறியதையும் தற்பொழுது தன் முகம் காண அவன் தயங்குவதையும் வைத்து பிரச்சனையின் மூலமே தான் தான் என மெல்லப் புரிந்துப் போயிற்று.

“அண்ணா!” என அழைத்து தன் பிடியில் இருந்த அவன் கரத்தை மெதுவாக அழுத்தினாள்.

தயக்கத்துடன் தன்னை நோக்கியவனை கண்டு மென்மையாக முறுவலித்தவள், “கொஞ்ச நாளாகவே நீங்கள் மனதில் எதையோ போட்டு மிகவும் குழம்பிக் கொண்டிருக்கிறீர்கள் என்று எனக்கு புரிந்தது. அதை உங்களிடம் விசாரிக்க எண்ணினாலும் சின்னப்பெண்ணான என்னால் எப்படி உங்களுக்கு உதவ முடியும் என நினைத்து தான் வருத்தத்துடன் அமைதியாக ஒதுங்கி இருந்தேன். ஆனால் பிரச்சினையின் மூலமே நான் தான் என்னால் மட்டும் தான் அதை தீர்க்க முடியும் என்பது இப்பொழுது தெளிவாகப் புரிகிறது!” என்றாள் அமைதியாக.

“அருந்ததி!” என்றழைத்து அவள் புத்தி கூர்மையை எண்ணி வியக்கும் அதேவேளையில் அவளுடைய பிரிவை உணர்ந்து அவன் விழிகளில் கரகரவென்று நீரும் பெருகியது.

“அண்ணா…” என பதறியவள், “என்னை கோழையாக அழக்கூடாது என்று சொன்ன நீங்கள் அழுவதற்கு நான் காரணமாகி விட்டேனா?” என தானும் கண்கலங்கினாள்.

வேகமாக அவளது வாயை பொத்தி, “சத்தியமாக இதற்கு காரணம் நீ இல்லைம்மா… இந்த பாவப்பட்ட உலகில் இப்படிப்பட்ட சமூகத்தில் நாம் பிறந்த பாவம் தான் என்னை இந்த சூழ்நிலைக்கு தள்ளி இருக்கிறது!” என்றான் வேதனையுடன்.

அவன் முகத்தை கூர்ந்தவள் விரைவாக தன் கண்களை துடைத்துக் கொண்டு அவனை தேற்றினாள்.

“எப்படிப்பட்ட உலகில் பிறந்திருந்தாலும் உங்களை போன்ற அண்ணனை எனக்கு கொடுத்த இந்த பூமித்தாய்க்கு நான் நிச்சயம் நன்றி தான் கூறுவேன். இத்தனை நாட்கள் அனுபவித்த துன்பம் போதும் என உங்களிடம் என்னை சேர்ப்பித்திருக்கிறார்கள் அல்லவா?” என்று புன்னகைத்தாள்.

இதழ்களுக்கு இடையே கசந்த முறுவலொன்றை வெளியிட்டவனை கண்டு நெற்றியை சுருக்கியவளுக்கு அப்பொழுது தான் தற்பொழுதைய பிரச்சினை இன்னும் வெளியே வரவில்லை என்பது தாமதமாக உறைத்தது.


அடுத்த அத்தியாயத்தில் இருந்து கதையின் போக்கு மாறி சுவாரஸ்யமாக நகரும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *