*13*

 

யாருடைய நம்பர் இது என்ற யோசனையோடு ஸ்வைப் செய்து காதில் வைத்தவன், “ஹலோ!” என்ற மறுநிமிடம் எதிர்முனையில் வேகமாக பதிலளித்த குரலை கேட்டு லேசாக முகத்தை சுளித்தான் நாயகன்.

“ஆங்… ரிச்சர்ட், நான் பிரமிளா ஆன்ட்டி பேசுகிறேன்ப்பா!”

வரவழைக்கப்பட்ட மெல்லிய புன்னகையோடு, “சொல்லுங்கள் ஆன்ட்டி… நன்றாக இருக்கிறீர்களா? சாய் எப்படி இருக்கிறான்?” என்று பொதுப்படையாக நலம் விசாரித்தான்.

“நாங்கள் நன்றாக இருக்கிறோம்ப்பா… நீ எப்படி இருக்கிறாய்?”

“ம்… ஃபைன் ஆன்ட்டி!” என்றவன் தன்னறையில் இருந்து கிளம்பி வெளியே வந்த அருந்ததியிடம் கண்ணசைவில் நடக்க சொல்லி விட்டு தானும் உடன் நடந்தான்.

“உன்னிடம் கொஞ்சம் பேச வேண்டுமே… ரொம்பவும் முக்கியமான விஷயம்!”

அவன் பார்வை அருகில் நடந்த அருந்ததியின் மேல் மெதுவாக படிய, “எதைப்பற்றி?” என ஒற்றை வார்த்தையில் விசாரித்தான்.

“உன்னுடன் இருக்கின்ற அந்தப் பெண்ணைப் பற்றி…” என்றவரை சற்றே சலிப்புடன் இடைமறித்தான்.

“அதைப்பற்றி பேச எதுவும் இருப்பதாக எனக்கு தோன்றவில்லை!” என்று அவசர அலட்சியமாய் பதில் கூறினான்.

“நோ… நிறைய இருக்கிறது, பங்ஷனில் இருந்து வந்ததிலிருந்து நானும் சாயிடம் இதைப்பற்றி சொல்லி உன்னிடம் பேச வேண்டும் என சொல்லிக் கொண்டே இருக்கிறேன். அவனோ தள்ளிப்போட்டுக் கொண்டே இருந்தான். அதனால் தான் பார்த்தேன், அங்கிள் மூலமாக உன் நம்பரை வாங்கிப் பேசுகிறேன்!” என்றவர் மேலும் தான் பேச வேண்டிய கட்டாய சூழ்நிலையை சற்று மேற்கோளிட்டு விளக்கினார்.

முகத்தில் எரிச்சல் பரவாமல் இருக்க வெகுவாக போராடியவன் எதுவும் பதிலளிக்காமல் காரை திறந்து ஏறி அமர்ந்தான். மறுபுறம் அருந்ததி ஏறிக்கொள்ள வண்டியை ஸ்டார்ட் செய்யாமல் எதிரில் சூனியத்தை வெறித்தபடி அவர் கூறுவதை கடனே என்று கேட்டுக் கொண்டிருந்தான் ரிச்சர்ட்.

“ம்… சரி, நாளை வீட்டிற்கு வருகிறேன்!” என்று லைனை கட் செய்து மொபைலை டேஷ் போர்டில் எறிந்தவன் இறுகிய முகத்துடன் சாவியை திருப்ப லேசான ஜர்க்குடன் வண்டி கிளம்பியது.

அவனிடம் திரும்பியவளின் விழிகளில் லேசான கவலை படர, “எதுவும் பிரச்சினையா அண்ணா?” என்றாள் மெதுவாக.

“ம்… இல்லைம்மா!” என்றவன் வேகமாக முகத்தை இயல்பாக்கினான்.

“நாம் வேண்டுமென்றால் இன்னொரு நாள் வெளியில் சாப்பிடப் போகலாமா?” என்று மேலும் தயங்கினாள் சிறுமி.

“அதெல்லாம் ஒன்றும் வேண்டாம், கிளம்பியாயிற்று அல்லவா போகலாம். சரி… அன்றைக்கு அம்மாவோட கலெக்ஷன்ஸ் என்று பழைய மெலோடி பாடல்கள் அடங்கிய பென்டிரைவ் ஒன்று கொடுத்தேனே, அதை கேட்டுப் பார்த்தாயா பாடல்கள் எல்லாம் எப்படி இருந்தது பிடித்ததா?” என பேச்சை மாற்றினான் ரிச்சர்ட்.

“ஓ… ரொம்ப நல்லா இருந்ததுண்ணா, அப்படியே கேட்க கேட்க மனது அவ்வளவு ரிலாக்ஸ் ஆனது…” என்று ஆர்வமாக பேசத் தொடங்கியவளை சின்ன முறுவலோடு கவனிக்க ஆரம்பித்தான்.
.
.

மறுநாள் காலை சற்றும் விருப்பமில்லாமல் தன் நண்பன் சாய் வீட்டிற்கு கிளம்பி சென்ற ரிச்சர்ட் போர்டிக்கோவில் காரை நிறுத்தி விட்டு வாசலுக்கு விரைய அவனை ஆவலுடன் எதிர்கொண்டார் பிரமிளா.

“வாப்பா… வா, லைட்டாக டிபன் சாப்பிடுவாய்!”

“இல்லை ஆன்ட்டி… வரும்பொழுது வீட்டில் சாப்பிட்டு விட்டு தான் வந்தேன்!” என்றான் சுரத்தில்லாமல்.

அவன் முகத்தை கூர்ந்தவர், “நான் கூறிய விஷயம் உனக்கு பிடிக்கவில்லை என்று புரிகிறது, அதற்காக…” என ஆரம்பிக்கும் முன்னே வேகமாக தடுத்தான் ரிச்சர்ட்.

“ஆமாம் ஆன்ட்டி… நீங்கள் கூறுவதில் எனக்கு சற்றும் விருப்பமில்லை. வேறுவழியின்றி மரியாதை நிமித்தமாக தான் நான் வந்தேன்!” என்றான் அப்பட்டமாய் எரிச்சலை முகத்தில் காட்டி.

“ஹஹா… பயங்கர சூடாக தான் வந்திருக்கிறாய் போலிருக்கிறது, சரி முதலில் கூலாக எதையாவது குடி சற்று டென்ஷன் குறையும். ஸ்டீபன்… இரண்டு மெலன் ஜியூஸ்!” என்று சமையலறை நோக்கி குரல் கொடுத்தார்.

“அதெல்லாம் எதுவும் வேண்டாம்…” என வீம்பாக மறுத்தவனை அதட்டினார் பிரமிளா.

“என்னடா ரொம்ப தான் அலட்டுகிறாய்? வீட்டிற்கு வந்த பையனிற்கு ஒன்றும் தராமல் விடமுடியுமா?”

“ப்ச்… சரி. அப்புறம் நீங்கள் சொன்னதுப் போலெல்லாம் அவளை என்னால் ஹாஸ்டலுக்கு தனியாக அனுப்பி படிக்க வைக்க முடியாது!” என்றான் கறாராக.

“உன்னிடம் தான் நான் போனிலேயே விவரம் சொன்னேனே பிறகு ஏன் இப்படி வீம்பு பிடிக்கிறாய்?”

“என்ன சொன்னீர்கள்? என்னால் சட்டப்படி அவளை என் தங்கையாக ஏற்று என்னுடைய வீட்டில் வைத்துக் கொள்ள முடியாது என்றீர்கள். பரவாயில்லை, எனக்கு எந்த சட்ட அனுமதியும் தேவையில்லை அவளை நானே பார்த்துக் கொள்வேன். அருந்ததியை தேடியோ அல்லது அவளை தங்கள் பொறுப்பில் ஏற்றுக்கொள்ளவென்று யாரும் முன்வந்து என்மீது கேஸ் போட மாட்டார்கள். அப்புறம் என்ன பிரச்சனை?” என்று அலட்சியமாக வினவினான்.

“பிரச்சினை அதுமட்டுமில்லைப்பா…”

“மேடம்!” என்று தன் முன்னே நீண்ட டிரேயை வாங்கியவர் அவனை தலையசைத்து அனுப்பிவிட்டு ரிச்சர்டிடம் ஒரு டம்ளரை எடுத்து கொடுத்து விட்டு தானும் ஒன்றை எடுத்துக் கொண்டார்.

எதிரில் இருப்பவனிடம் பிரச்சினையை எப்படி புரியவைப்பது என தனக்குள் ஒருமுறை ஆலோசித்தபடி ஜியூசை குடிக்க ஆரம்பித்தார். எப்பொழுதுடா இவருடைய பிடுங்கலில் இருந்து கிளம்புவோம் என்றெண்ணியவன் போல ஒரே மூச்சில் டம்ளரை காலி செய்தான் அவன்.

அதைக்கண்டு பரிகாசமாக நகைத்தவர், “பெரியவர்கள் சொல்வதை கேட்க வேண்டுமென்றால் அவ்வளவு சலிப்பாக இருக்கிறது இந்த காலப் பிள்ளைகளுக்கு!” என அவனிடம் புருவம் உயர்த்தினார்.

லேசாக அசடுவழிந்தவன் சின்னப் புன்னகையின் பின் அதை சமாளித்து, “நான் தான் சொல்கிறேனே ஆன்ட்டி… இத்தனை ஆண்டுகளாக தான் நானும் சரி, அவளும் சரி யாருமற்ற அநாதையாக வீட்டிலும், அவள் ஹாஸ்டலிலும் என தனியாக நாட்களை கடத்தினோம். இதற்கு மேலாவது ஒருவருக்கொருவர் ஆறுதலாக தனிமை துயரை விரட்டி மகிழ்ச்சியுடன் ஒரே வீட்டில் வசிக்கலாம் என்று பார்த்தால் நீங்கள் இப்படி தடை சொல்கிறீர்களே…” என அவரை குற்றஞ்சாட்டினான்.

“அது அப்படியில்லைம்மா… சின்னஞ்சிறு குழந்தை அது ஆணோ, பெண்ணோ எந்த குழந்தையாக இருந்தாலும் பெண்ணின் துணையின்றி தனி மனிதனாக வாழும் எந்த ஒரு ஆணுக்கும் சட்டப்படி தத்து கொடுக்க மாட்டார்கள். அவன் எவ்வளவு பெரிய மகானாகவும், உத்தம ஆத்மாவாக இருந்தாலும் சரி. வாழ்க்கை துணைவியின் பிரெஷன்ஸ் இல்லாமல் சிறு குழந்தையை கூட தத்தெடுக்க முடியாது என்கிற பொழுது நீ எப்படி உன்னுடன் வயதுப்பெண்ணை வைத்துக் காப்பாற்ற முடியும் என அசட்டு துணிச்சலுடன் பேசிக் கொண்டிருக்கிறாய்? அதுவும் நீயும் ஒன்றும் குடும்பத்தை தாங்கி நிறுத்தும் வயதையுடைய பொறுப்பான குடும்பத் தலைவன் இல்லை, தற்பொழுது தான் இருபத்திமூன்று வயதை அடைந்திருப்பவன். உனக்கே திருமண வயது வரவில்லை எனும்பொழுது எந்த அனுபவமும் இல்லாத உன்னால் எப்படி அச்சிறுமியை நன்றாக பேண முடியும்?” என்றார் சற்றே அழுத்தமாக.

முகம் சிவந்தவன், “அப்பொழுது நான் பொறுப்பில்லாதவன், அவளை என்னுடன் வைத்து காப்பாற்ற இயலாது என்கிறீர்களா?” என்றான் வேகமாக.

“நீ ஏன் நான் சொல்ல வருவதை புரிந்துக் கொள்ள முயற்சி செய்யாமல், உன் பிடியிலேயே விதாண்டவதமாக நிற்கிறாய்? நீ பொறுப்பானவன் என்பது வேறு அவளை உன் பொறுப்பில் எடுத்துக் கொள்வதென்பது வேறு. இரண்டிற்கும் இடையில் பெரிய வித்தியாசம் உள்ளது. இவ்வளவு பேசுகிறாயே… பெண்பிள்ளையாக இருக்கின்ற அவள் இன்னும் வளர வளர எத்தனை விஷயங்களை கவனத்தில் கொண்டு அவளை கவனமாக காக்க வேண்டும் என்று உனக்கு தெரியுமா?”

“தெரியும்… எல்லாம் எனக்கு நன்றாகவே தெரியும், அதற்கெல்லாம் நான் தயாராக தான் இருக்கிறேன்!” என்றான் இவனும் விடாமல் நிமிர்வுடன்.

அவனையே ஆயாசமாக பார்த்தவர், “சரிப்பா உன்னால் ரொம்பவே நன்றாக முடியுமப்பா… அவளை கண்ணுக்குள் வைத்து காப்பாற்றுவாய் எல்லாம் சரி. ஓகே… நான் தடை சொல்லவில்லை, உன்னிடம் கேட்கின்ற சில கேள்விகளுக்கு மட்டும் எனக்கு விடை கொடு!” என அவனை நேராக நோக்கினார்.

அவரை அலட்சியத்துடன் ஏறிட்டவன், “கேளுங்கள்!” என்றான்.

அவனைப் பொறுத்தவரை தன் தங்கையாக ஏற்றுக்கொண்டவளை எக்காரணத்தை கொண்டும் தன்னை விட்டு பிரிய அனுமதிக்க கூடாது.

“வாய்க்கு வாய் அவளை உன்னொடு வைத்து பார்த்துக் கொள்வேன்… பார்த்துக் கொள்வேன் என்று சவடால் விடுகிறாயே, எத்தனை நாட்களுக்கு, மாதங்களுக்கு அல்லது வருடங்களுக்கு இல்லை வாழ்நாள் முழுவதுமா?” என்று ஏளனமாக வினவினார் பிரமிளா.

அதுவரை அவரிடம் சற்றே எரிச்சலாகவும், அசுவாரசியமாகவும் பேசிக் கொண்டிருந்தவன் அவரின் திடீர் கிடுக்குப்பிடியில் திகைத்து அமைதியானான்.

“ஸீ… இதை நான் ஒரு அம்மாவின் ஸ்தானத்தில் இருந்து உங்கள் இருவரின் நல்லதற்காகவும் தான் சொல்கிறேன். அந்த சின்னப்பெண்ணை நீ என்ன தான் உன் தங்கையாக ஏற்று… இருக்கும் வசதியாலும், ஆளுமையாலும் சட்டத்தை வளைத்து உன்னுடனே வைத்து வளர்த்தாலும் நாளை உனக்கோ அவளுக்கோ திருமணம் எனும் நிலை வரும்பொழுது உங்களை சுற்றி இருக்கும் சுற்றத்தாரும், சமூகத்தினரும் எதிர்வரவிருக்கும் உங்கள் இருவரின் வருங்கால துணைகளின் குடும்பங்களும் இதை எவ்வாறு ஏற்று விமர்சிப்பார்கள் என்று உனக்கு ஏதாவது புரிகிறதா?”

அவரின் அடுத்தடுத்த கேள்வியில் தடுமாறிய ரிச்சர்ட், ‘ஏன் எங்களின் உறவை பற்றி உரியவர்களுக்கு எங்களால் தகுந்த விளக்கம் தரமுடியாதா என்ன?’ என்று குழம்பினான்.

‘அப்படி எத்தனை பேருக்கு தருவாய்? அப்படியே அவர்கள் ஏற்றுக்கொண்டாலும், எதிர்கால இல்லற வாழ்வில் அருந்ததியிடம் இதைப்பற்றி விமர்சித்து அவளின் புகுந்த வீட்டினர் எதுவும் தகராறு செய்ய மாட்டார்கள் என்று என்ன நிச்சயம்?’ என கவலையுடன் உள்ளம் வினா எழுப்பியது.

‘அதுவும் இல்லாமல்… அருந்ததியின் பிறப்பு…’ என்கிற எண்ணம் பிறக்கும் பொழுதே மனதின் ஒரு மூலையில் இருந்து ராக்கேஷின் குரல் கொக்கரித்து கிளம்பியது.

‘உன்னால் அவளுக்கு ஆரோக்கியமான வாழ்வுதான் அளிக்க முடியுமே தவிர திருமண வாழ்வு என்பதெல்லாம் கனவிலும் நடக்காது. இப்படிப்பட்ட பிறப்பை கொண்டவளை எவனும் திருமணம் செய்துக் கொள்ள மாட்டான்!’

இதயத்தில் மெல்லிய பதற்றம் கிளம்பி உடல் முழுவதும் வெம்மையை பரப்பி கை, கால்கள் சில்லிட மேனியில் வியர்வையை அரும்ப செய்தது.

‘இவர்கள் சொல்வது ஒரு வகையில் சரி தானே… சாதாரணப் பெண்களுக்கே இதுபோன்றெல்லாம் சங்கடங்கள் வரும் என்றால் அருந்ததிக்கு…?’

அவ்வளவு நேரமாக இருந்த துடிப்பு மறைந்து தன்னிடம் எதிர்வாதம் செய்யாமல் அமைதியாக இருந்தவனை யோசனையோடு ஏறிட்டவர், ரிச்சர்ட் என்று அழைத்தார்.

ஆங்… என நிமிர்ந்தவனிடம், “இப்பொழுதாவது நீயும், அந்த பெண்ணும் எந்த சூழ்நிலையில் இருக்கிறீர்கள்… நான் ஏன் உன்னிடம் இத்தனை தூரம் விவாதிக்கிறேன் என்று புரிகிறதா?” என அவனை நிதானமாக வினவினார்.

பதிலின்றி தரையை வெறித்தவனின் மனதில் பெரும் விரக்தி தோன்றிற்று.

‘இப்பொழுது கூட இவரிடம் மேலும் விவாதித்து அவளை என்னோடேயே வீட்டில் வைத்துக் கொள்ள முடியும். ஆனால் சாதாரண குடும்பத்து பெண்ணாக இருந்தால்… அருந்ததியின் மறுபக்கம் முழுவதும் விவரமாக தெரிந்த நானே மேலும் அவள் வாழ்வை எப்படி இப்படியொரு நெருக்கடியில் தள்ள முடியும்? அண்ணன், தங்கை என நாங்கள் இருவர் மட்டும் ஆசையாகவும், பாசமாகவும் பறைசாற்றிக் கொண்டால் போதுமா? அந்த தெருப்பொறுக்கி நாய் போன்றே வீணான பழி சுமற்றி எங்கள் உறவை கொச்சைப்படுத்தி பேசவென்றே அவனை போன்ற எத்தனை பிறவிகள் இந்த பாழாய் போன ஊர், உலகில் காத்து கிடக்கிறதோ…’ என்று வேதனைக் கொண்டான்.

“ஏய்… இதற்கெதற்கு இவ்வளவு அப்செட் ஆகிறாய்? இப்பொழுது என்ன நீயே அவளுக்கு கார்டியனாக இருந்து அவளை நல்ல போர்டிங் ஸ்கூலில் சேர்த்து நன்றாக படிக்க வை. உன் வீட்டிற்கு அழைத்து வந்து தங்க வைக்க முடியாவிட்டாலும் நீ அவ்வப்பொழுது நேரில் சென்று அவளைப் பார்த்து வா. யாருமில்லை என்கிற உணர்வு இல்லாமல் அதுவே உங்கள் இருவருக்கும் பெரிய ஆறுதலாக இருக்கும் அல்லவா?” என பெரிய தீர்வு கண்ட தோரணையில் பெருமையுடன் முறுவலித்தார் பிரமிளா.

‘யானை பசிக்கு சோளப்பொரி போல தினமும் நாங்கள் மற்றவரின் முகம் பார்த்து மகிழ்ச்சியுடன் அளவளாவி ஒரே வீட்டில் எங்கள் அன்பை பரிமாறி வசிப்பதற்கு ஈடாகுமா அது?’ என்று மனதில் மலையளவு வெறுப்பு மூண்டது.

‘ப்ச்… இவரை கோபித்து என்ன பயன்? வயதின் அனுபவம் காரணமாக உலகின் யதார்த்தத்தை சொல்கிறார் இவர்!’ என்று சோர்வுடன் எழுந்தான் ரிச்சர்ட்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *