*12*

 

“உங்களுக்கும் புரிந்திருக்கும், தனியே எதுவும் சொல்ல தேவையில்லை என நினைக்கிறேன். இவள் என் தங்கை என்கிற நினைவை என்றும் மனதில் வைத்துக் கொண்டு அதற்கேற்ப நடந்துக் கொள்ளுங்கள். இவள் சின்னப்பெண் என்பதால் கொஞ்சம் முன்னே பின்னே எதையும் கேட்கத் தயங்குவாள் அதைக் கண்டுக்கொள்ளாது அவளுக்கு தேவையானதை நீங்கள் தான் கேட்டு செய்து தர வேண்டும்!” என்று வடிவு, கந்தனிடம் முதலாளி மிடுக்குடன் நிமிர்வாக கூறினான் ரிச்சர்ட்.

அருந்ததியின் மேல் வடிவு தம்பதியினருக்கு மலையளவு காழ்ப்புணர்ச்சி தோன்றினாலும் சம்பளம் தரும் மனிதனிடம் எதையும் எதிர்த்து பேச முடியாது அரைமனதாக சரியென்று சம்மதித்தனர்.

அவள் மீது அநாதைப் பெண் என்கிற மெல்லிய பரிதாபம் கொண்டிருந்த வடிவிற்கு கூட தற்பொழுது ஏற்பட்டுள்ள தலைகீழ் மாற்றம் லேசான வெறுப்பை கொடுத்தது.

தாங்கள் இன்னும் அதே கீழ்நிலையில் இருக்க நேற்று வந்த சிறுபெண்ணுக்கு முதலாளிக்கு சமமான உரிமையா என்று உள்ளம் வெகுவாக காய்ந்தது. இருந்தும் ஒன்றும் செய்ய இயலாது அமைதியாக நின்றாள். வீட்டுப் பெண்களின் அடாவடியான அதிகாரம், குறுக்கீடுகள் எதுவும் இல்லாத, மேலும் வேலை செய்வதற்கும் இப்படியொரு பாதுகாப்பான வீடு எங்கு தேடினாலும் கிடைக்காது என்பதால் அனுசரித்து செல்வது தான் நல்லது என்பதை தன் அனுபவத்தின் மூலம் உணர்ந்திருந்தாள் அவள்.

“அப்புறம் நீங்கள் எங்களுக்காக எதுவும் சமைக்க வேண்டாம், நாங்கள் வெளியே செல்கிறோம். ஏற்கனவே சமைக்க ஆரம்பித்து விட்டீர்கள் என்றால் சமைத்ததை அப்படியே உங்கள் வீட்டிற்கு எடுத்து சென்று விடுங்கள்!” என்றவன் அவ்வளவு நேரமாக தடுமாற்றத்துடனும், படபடப்புடனும் தன்னருகில் நின்றிருந்த அருந்ததியை அழைத்துக் கொண்டு வேகமாக வெளியேறினான்.

எங்கேயும், எதிலும் தயங்கி தயங்கி உடன் நின்றவளை விளையாட்டாக பேசிப் பேசியே இயல்புக்கு மீட்டவன், அவளுக்கு தேவையானவற்றை வாங்கி குவிக்க ஆரம்பித்தான். அவளுக்கு மறுக்கின்ற வாய்ப்பே கொடுக்கவில்லை, எந்தவொரு பாசமான அண்ணனும் தன்னுடைய தங்கையை தனக்கு கீழாக வைத்திருக்க நினைக்க மாட்டான் என ஒரே போடாக முடித்து விட்டான்.

யோசித்தவளுக்கும் அதுவே சரியென்று தோன்ற அதன்பிறகு எதுவும் தடுக்காமல் அவனுடைய தேர்விற்கு விட்டு விட்டாள். விவரம் அறிந்த நாள் முதலாக வீட்டுச்சிறையில் அடைப்பட்டுக் கிடந்தவளுக்கு முதன் முறையாக அண்ணனின் அரவணைப்பில் சிறகை விரித்து பாதுகாப்பாக ஊரை சுற்றி வந்ததில் அத்தனை மகிழ்வாக உணர்ந்தாள்.

அதன்பின் வந்த நாட்களில் அவளின் படிப்பிற்கும், பொது அறிவிற்கும் தேவையான புத்தகங்களை எடுத்தும், வாங்கியும் கொடுத்தவன் தினமும் தவறாமல் இரவு வேளையில் அவளுடன் அமர்ந்து அதில் தேவையான ஆலோசனைகளை வழங்கி அவளின் படிக்கும் ஆர்வத்தை தூண்டினான்.

ஒரு மாதம் கடந்த நிலையில் அந்த வீட்டுடனும், ரிச்சர்ட் உடனும் தயக்கமின்றி இயல்பாக பழகும் அளவிற்கு ஒன்றினாள் அருந்ததி. அவளை பள்ளியில் சேர்த்த வேண்டிய நாளும் நெருங்கியதால் அதற்கு தேவையானவற்றை ஏற்பாடு செய்தான் ரிச்சர்ட். நல்லதொரு பள்ளியில் அருந்ததியை சிறப்பாக நுழைமுக தேர்வு எழுத வைத்து நேரடியாக ஏழாம் வகுப்பில் சேர்த்து விட்டான்.

அந்த ஆண்டிற்கான வகுப்புகள் தொடங்க இன்னும் மூன்று மாதங்கள் கால அவகாசம் இருந்ததால் அதுவரை உள்ள காலத்தை அவளுக்கு உபயோகமானதாக மாற்ற தற்காப்பு கலை வகுப்பு மற்றும் பெர்சனாலிட்டி டெவலப்மென்ட் வகுப்புகள் போன்றவற்றில் கலந்துக் கொள்ள வைத்தான். தன் தொழிலை விட்டு எந்நேரமும் அவள் உடன் செல்ல முடியாது என்பதால் சிறந்த பாதுகாப்பு ஏஜன்சி ஒன்றின் மூலம் அருந்ததிக்கு சரியான பெண் பாதுகாவலரை ஏற்பாடு செய்தான். பகல் வேளையில் அவளை பாதுகாப்பாக பயிற்சி வகுப்புகளுக்கு அழைத்து சென்று அவை முடிந்ததும் வீட்டில் கொண்டு வந்து விடுகின்ற வேலையை அவர் செவ்வனே மேற்கொண்டார்.

அவ்வப்பொழுது பொழுதுபோக்கிற்காக அவளை வெளியில் அழைத்து செல்லவும் மறக்கவில்லை அவன். அப்படியொரு சூழ்நிலையில் தான் நண்பன் ஒருவன் வீட்டு திருமணத்தில் கலந்துக் கொள்ள வேண்டி முதல்நாள் மாலை ரிசப்ஷனுக்கு அருந்ததியை அழைத்து சென்றான் ரிச்சர்ட்.

அவளும் குதூகலமாக தன் சகோதரன் புதிதாக வாங்கி வந்திருந்த அரைக்கையுடன் கூடிய பேபி பிங்க் லாங் ஃபிராக் உடுத்தி அதற்கு தோதான நவநாகரீக அணிகலன்களை அணிந்து அழகுற தலைவாரி வானில் இருந்து இறங்கிய டீனேஜ் தேவதையாக கிளம்பி நின்றாள்.

தானும் கிளம்பி அறையை விட்டு வெளியே வந்தவன் தங்கையின் அழகை கண்டு வியந்து, “ஹேய்… வாவ்… ரியலி சூப்பர்ப்டா, பார்பி டால், சின்ட்ரெல்லா மாதிரி அழகாக இருக்கிறீர்கள். எங்கே ஃபிரெஷ்ஷாக ஒரு போட்டோ எடுத்துக் கொள்வோம்!” என அவளை முதலில் சிங்கிளாக எடுத்தவன் பின் தானும் அவளுடன் நின்று செல்ஃபி எடுத்துக் கொண்டான்.

ஆவலுடன் அதை எட்டிப் பார்த்தவள், “ஹை… சூப்பராக இருக்கிறது அண்ணா!” என்றாள் கண்கள் ஒளிர பெரும் மகிழ்ச்சியுடன்.

நிழற்படத்தை தானும் ஆசையாக ரசித்தவன், “ம்… ஆமாம், முதலில் இதை போகும் வழியில் பிரின்ட் அன்ட் லேமினேஷனுக்கு கொடுத்து செல்லலாம். நம் வீட்டு ஹாலில் இதை மாட்ட வேண்டும், இத்தனை நாட்களாக வெளிப்பட்ட புன்னகையை விட உன்னுடைய இன்றைய புன்னகை தான் நல்ல பளிச்சென்று இருக்கிறது!” என்று பாராட்ட வேறு செய்தான்.

“ஆங்… அதற்கு இன்னொரு காரணம் இந்த டிரஸ் தான். இதை போட்டதும் நான் ரொம்ப அழகாக இருப்பது போல் எனக்கே தோன்றுகிறது!” என்று முறுவலித்தாள் சிறுமி.

“ஆஹான்… சரி வா கிளம்பலாம் நேரமாகிறது!” என்று புன்னகையுடன் அவள் தலையை லேசாக தட்டியவன் கரம்பற்றி வெளியே அழைத்து சென்றான்.

ரிச்சர்ட் உடன் காரில் பயணிக்கும் வரை புதிதாக விசேஷ வைபவத்திற்கு செல்கின்ற குதூகலத்தில் இருந்தவளுக்கு அவன் காரை சென்று நிறுத்திய இடத்தை கண்டதும் சற்றே மிரட்சி தோன்றியது.

அங்கிருந்த படோபடமும், அலைமோதும் கூட்டமும் அவளுக்குள் அச்சத்தை விளைவிக்க மருளும் விழிகளால் சுற்றுப்புறத்தை ஆராய்ந்தாள்.

காரை விட்டிறங்கிய ரிச்சர்ட் மறுபுறம் அருந்ததி இறங்காமல் உள்ளே அமர்ந்திருப்பதை கண்டு அவளிடம் குனிந்து கேலி செய்தான்.

“ஹேய் பேபி… தூங்கி விட்டாயா என்ன? ரிசப்ஷன் ஹால் வந்து விட்டது இறங்கு!”

“அண்ணா… நான் காரிலேயே உட்கார்ந்து இருக்கிறேன். நீங்கள் போய் வாருங்கள், நான் வரவில்லை எனக்கு பயமாக இருக்கிறது!”

“என்ன? ப்ச்… நான் பக்கத்தில் இருக்கும் பொழுது உனக்கென்ன பயம், பேசாமல் இறங்கி வா. பிறகு எப்பொழுது தான் வெளியாட்களிடம் தைரியமாக பேசிப் பழகுவாய்? ம்… இறங்கு!”

“ஆனால் அண்ணா… ப்ளீஸ்…” என கெஞ்சியவளிடம் இவன் தீர்மானமாக மறுத்தான்.

“இதில் எல்லாம் நோ காம்ப்ரமைஸ் அருந்ததிம்மா… பெர்சனாலிட்டி டெவலப்மென்ட்டில் இதுவும் தான் அடக்கம் வா!” என அவன் விடாப்பிடியாக அழைக்கவும் வேறு வழியின்றி தயக்கத்துடன் இறங்கினாள் அவள்.

அவனருகில் வந்து நின்றவள், “என்னை விட்டு எங்கும் போக மாட்டீர்கள் இல்லை?” என்றாள் பயத்தோடு.

“ம்ஹும்… நான் எங்கே போகப் போகிறேன்? பயப்படாமல் வா!” என்று அரங்கினுள் அழைத்து சென்றான்.

தன்னோடு ஒண்டியபடி நடப்பவளை கண்டு விசனம் கொண்டாலும், சரி போகப் போக தானே பழகுவாள். இனி இதுபோன்ற விசேஷத்திற்கு மறவாமல் இவளை நிச்சயம் அழைத்து வர வேண்டும் என்று எண்ணிக் கொண்டான்.

எதிர்பட்ட நண்பர்களிடமும், அவர்கள் குடும்பத்தினரிடமும் தன் தங்கையென அருந்ததியை பெருமையுடன் அறிமுகப்படுத்தினான்.

தன்னிடம் இன்முகத்துடனும், ஆர்ப்பாட்டமாகவும் பேசுபவர்களிடம் திரும்பி பதிலளிக்க முடியாமல் திணறியவளின் கரம்பற்றி ஆதரவாக அழுத்தியவன், “சாரி கைஸ்… இவள் கொஞ்சம் ரிசர்வ்டு டைப். இத்தனை நாட்களாக வெளியிடங்களுக்கு அதிகம் செல்லாமல் ஸ்கூல் ஹாஸ்டலிலேயே இருந்து வந்தவள் என்பதால் கொஞ்சம் தயங்குகிறாள். சின்னப்பெண் தானே போகப் போக சரியாகி விடுவாள்!” என்று நண்பர்களிடம் சமாளித்தான்.

சூழ இருந்தோர் அதை ஏற்றுக்கொள்ள, ஒரு நண்பனின் அன்னை மட்டும் சந்தேகம் எழுப்பினார்.

“தங்கை… என்றால் எப்படிப்பா?”

அனைவரின் பார்வையும் தன்மீது கேள்வியாக படர லேசாக தொண்டையை செருமியவன், “தூரத்து உறவு ஆன்ட்டி, பாட்டியின் உறவுப்பெண். சிறு வயதிலேயே அம்மாவை இழந்து விட்டவள் என்பதால் ஹாஸ்டலில் விட்டிருந்தனர். சமீபத்தில் இவள் தந்தையும் இறந்து விட்டார், உறவினன் என்கிற முறையில் துக்கம் விசாரிக்க சென்றிருந்தப் பொழுது தான் இவளை ஆதரிக்க நெருங்கிய உறவு முறையில் உள்ளவர்கள் யாரும் தயாராக இல்லை என்பது தெரிய வந்தது. சரி நானும் அப்பா, அம்மா இல்லாமல் தனியாக தான் இருக்கிறேன், இவளுக்கும் யாருமில்லை என்பதால் ஒருவருக்கொருவர் சப்போர்ட்டாக இருக்கலாம் என எங்கள் வீட்டிற்கு அழைத்து வந்து விட்டேன்!” என்று சரளமாக அடித்து விட்டவனை சிறு வியப்புடன் ஏறிட்டாள் அருந்ததி.

ஓ… என்றவர் அடுத்த சந்தேகமாக, “நீ கிறிஸ்டியன் இந்தப் பெண் பெயரென்ன?” என்று வினவியவரை கண்டு ஏளனமாக இதழை வளைத்தான் ரிச்சர்ட்.

“அருந்ததி… ஹிந்து, இதெல்லாம் ஒரு விஷயமா ஆன்ட்டி? பள்ளியில் படிக்கின்ற சிறு பிள்ளைகளுக்கு கூட தெரியும், நம் சொந்தப் பூமியின் மூதாதையர்கள் அனைவரும் இந்துக்கள் தான். ஒவ்வொரு ஆட்சி மாற்றத்தின் பொழுது ஏற்படும் தலைமையை பொறுத்து அவரவர் விருப்பப்படி வேறு வேறு மதங்களை பின்பற்ற ஆரம்பித்தனர். அந்த வகையில் ஆங்கிலேயர் ஆட்சியின் முடிவின்பொழுது என் தாத்தா கிருஸ்துவ மதத்தின் பால் ஈர்க்கப்பட்டு மாறிவிட்டார். இவர்கள் குடும்பத்தினர் மாறவில்லை அவ்வளவு தான்!” என்று அலட்சியமாக தோள்களை குலுக்கினான்.

சற்றே அசடுவழிந்த அப்பெண்மணி குறிப்பிட்ட மாதர் சங்கத்தின் தலைவியும் கூட என்பதால் சற்று பொறுமையாக விளக்கிக் கொண்டிருந்தான் ரிச்சர்ட்.

“பாப்பா என்ன படிக்கிறாள்?” என அடுத்த விசாரணையை தொடங்கினார் பிரமிளா.

உள்ளூர தோன்ற தொடங்கிய சலிப்பை மறைத்து, “ஏழாம் வகுப்பு செல்லப் போகிறாள்!” என்று புன்னகையுடன் பதிலளித்தான்.

தன் நண்பனின் பார்வையையும், பொறுமையையும் லேசாக உணர்ந்த அவருடைய மகன் மெதுவாக தன் அன்னையை அருந்ததியிடம் இருந்து திசை திருப்பி வேறு மார்க்கமாக அழைத்து சென்றான்.

உஃப்… என்று நீண்டதொரு பெருமூச்சொன்றை வெளியேற்றியவனின் புறம் லேசாக சாய்ந்து கிசுகிசுத்தாள் அருந்ததி.

“இதற்கு தான் நான் உள்ளே வரவில்லை என்று சொன்னேன்!”

அவளிடம் திரும்பி அழுத்தமாக ஒரு பார்வை பார்த்தவன், “எத்தனை காலங்கள் கடந்து என்று நீ வெளியில் வந்தாலும் இதை சந்தித்து தான் ஆக வேண்டும். இப்பொழுதே சூட்டோடு சூடாக இதை தெளிவுப்படுத்துவது தான் நல்லது!” என்று விளக்கினான்.

புரிந்துக் கொண்டதற்கு அடையாளமாக மையமாக தலையசைத்தவளை மேடைக்கு அழைத்து சென்றான். அத்தனை நேரமாக கிடைத்த அனுபவத்திலும், ரிச்சர்டின் துணைக் கொண்டும் மற்றவரிடத்தில் சிறப்பாக நடந்துக் கொண்டாள் அருந்ததி.

 


“அண்ணா… இது சரியாக இருக்கிறதா பாருங்கள்!” என்றபடி தன்னருகில் வந்து அமர்ந்தவளிடம் திரும்பியவன், “ஒரு நிமிடம்டா!” என்று விட்டு தான் டைப் செய்து கொண்டிருந்த மெயிலை உரியவருக்கு அனுப்பி விட்டு லேப்டாப்பை அருகில் மெத்தையில் கிடத்தினான்.

“என்ன இது?” என்றவாறு அவள் கையில் இருந்த நோட்புக்கை வாங்கினான்.

“நீங்கள் போன வாரம் வாங்கி வந்த ஷர்மா அவருடைய மேத்ஸ் புக்கில் உள்ள ஒரு பிராப்ளம் இது. நேற்று தவறாக பதில் வந்தது என்று உங்களிடம் சந்தேகம் கேட்டதற்கு சொல்லிக் கொடுத்தீர்களே… அதில் வேறொரு சம் போட்டிருக்கிறேன். இதை சரியாக போட்டிருக்கிறேனா?” என்றாள் சந்தேகத்துடன்.

தன் கையில் உள்ளதில் விழிகளை ஓட்டி சரி பார்த்தவனின் இதழ்களில் மெல்ல முறுவல் அரும்பியது.

“ரொம்ப சரி!” என்று பரவசத்தில் அவள் கன்னம் கிள்ளியவன், அவளின் கரம்பற்றி குலுக்கி பாராட்டவும் மறக்கவில்லை.

“சரி ஓகே… இதுவரை படித்தது போதும். என் வேலையும் முடிந்துவிட்டது, இன்றைக்கு நைட் எங்கேயாவது டின்னருக்கு வெளியில் போகலாமா?”

ஓ… என்று வேகமாக மலர்ச்சியுடன் தலையாட்ட சென்றவள் சட்டென்று தயங்கி, “ஆனால் அண்ணா… வடிவு ஆன்ட்டி சமைத்துக் கொண்டிருக்கிறார்கள் என நினைக்கிறேன்!” என்றாள் கவலையுடன்.

“அதனால் என்ன பரவாயில்லை, அதை அவர்கள் வீட்டிற்கு எடுத்து செல்லட்டும்!”

“இவ்வளவு தூரம் வந்து இதற்காகவா செய்தேன் என அவர்கள் சலித்துக் கொண்டால் என்ன செய்வது?” என்று கைகளை பிசைந்தாள்.

“அருந்ததி… இங்கே பார், இதுபோன்ற ஒன்றுமில்லாத சின்ன விஷயத்திற்கு எல்லாம் முக்கியத்துவம் அளித்து கவலைப்பட்டோம் என்றால் இந்த உலகில் நாம் சந்தோசமாக வாழ முடியாது. நாம் என்ன அடிக்கடியா இதுபோன்று அவர்களுக்கு தொந்திரவு கொடுக்கிறோம் என்றாவது தானே… அதுவும் இல்லாமல் எனக்கும் வேலை எப்பொழுது முடியும் என தெரியாமல் உணவை பற்றி முடிவெடுக்க முடியவில்லை. அதனால் தேவையில்லாத கவலையை விடு அவர்களிடம் நான் சொல்லிக் கொள்கிறேன். நீ போய் கிளம்பு!” என்று அவளை அனுப்பி வைத்தான் ரிச்சர்ட்.

ரெப்ரெஷ் செய்து ஆலிவ் கீரின் டீ சர்டும், ஷேடட் ப்ளூ ஜீன்ஸும் அணிந்து கிளம்பியவன் கார் சாவியை எடுத்த நேரம் பேன்ட் பாக்கெட்டிலிருந்த அலைபேசி இன்னிசைத்தது.

அறை விளக்கை அணைத்து விட்டு கதவடைத்து வெளியேறியபடி மொபைலை கையில் எடுத்து டிஸ்ப்ளேவை ஆன் செய்தவன் அதில் தெரிந்த அன்னோன் நம்பர் கண்டு புருவம் சுருக்கினான்.

2 thoughts on “Poojaiketra Poovithu 12 – Deepababu”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *