*11*

 

“அக்கம்பக்கத்தில் வெளியாட்கள் யாரிடமும் பேசி பழக்கமில்லாததால் அம்மா இறந்த செய்தியை யாரிடம் சொல்வது என்ன செய்வது என ஒன்றும் புரியவில்லை. ஆனால் ஒன்று மட்டும் தெளிவாகப் புரிந்தது, அம்மாவின் உடலை அந்த வீட்டில் இருந்து எடுத்து சென்று விட்டால் அடுத்து என் கதி என்ன என்பதே பெரிய கேள்விக்குறியாக எழுந்து என்னை அழுத்தியது. அடுத்து… அடுத்து… என்று மனம் அலைபாய பயத்தோடு அம்மாவின் முகத்தையே பார்த்தபடி விடிய விடிய அமர்ந்திருந்தேன். காலையில் வீட்டு வேலைக்கு வந்தவள் தான் விஷயம் புரிந்து அதிர்ச்சியாகி அந்த வீட்டு சொந்தக்காரருக்கு தகவல் கொடுத்தாள். விஷயம் தெரிந்து வந்த ஆள் என்னை கண்ட மேனிக்கு திட்டினார். இறந்து போன தகவலை கூட உன்னால் சொல்ல முடியாதா? என்று அதட்டியவர் அடுத்தடுத்த வேலைகளை கடகடவென்று செய்ய ஆரம்பித்தார். நடப்பதில் எதிலும் கலந்துக் கொள்ளவும் முடியாமல், தடுக்கவும் இயலாமல் அச்சத்துடன் பார்த்திருந்தேன். எல்லாம் முடிந்தப் பிறகு நேராக என்னிடம் வந்தவர், ஒருவழியாக என்னை பிடித்த பீடை போய் சேர்ந்து விட்டது. நீயும் இன்று இரவுக்குள் இங்கிருந்து உனக்கு தேவையானதை எடுத்துக் கொண்டு எங்கேயாவது போய்விடு. நாளை காலை ஆட்களை அழைத்து வந்து வீட்டை இடிக்கப் போகிறேன் என முறைத்து விட்டு கிளம்பி போனார். எனக்கு அழுகை அழுகையாக வந்தாலும் வேறுவழி இல்லை என்பது புரிந்ததால் ரொம்ப யோசித்து எந்த வழியும் புலப்படாமல் உஷா மிஸ்ஸால் மட்டும் தான் எனக்கு உதவ முடியும் என நினைத்தேன். அதனால் அவரிடம் உதவி கேட்டு ஏதாவதொரு அனாதை ஆசிரமத்தில் சேர்த்து விட சொல்லலாம் என்று தோன்றவும் தான் கொஞ்சம் நிம்மதியாக இருந்தது. வேறு யாரையும் தெரியாததால் அவரை மட்டுமே நம்பி இரவு ஏழு மணிக்கு என்னுடைய ஸ்கூல் பேக் மற்றும் துணிகள் அடங்கிய பெரிய பேக் மட்டும் எடுத்துக்கொண்டு அவர் வீட்டிற்கு சென்றேன். இருந்த கவலையில் அவர் ஊரில் இல்லை என்பதும் மறந்து விட்டது. வீட்டிற்கு போய் கதவை தட்டினால் உங்கள் நண்… ஷ்… இல்லை… அவங்க பையன் தான் கதவை திறந்தான்!” என நாக்கை கடித்து விட்டு வேகமாக அருந்ததி மாற்றுவதை கண்டு புன்னகை அரும்ப செல்லமாக அவள் காதை திருகினான் ரிச்சர்ட்.

அவனிடம் திரும்பி லேசாக முறுவலித்தவள் பின் சோகமாகி, “அப்புறம் தான் உங்களுக்கு தெரியுமே… நான் இன்னாருடைய பெண் என தெரிந்ததால் என்னை கேவலமாக நினைத்து தவறாகவும் நடந்துக்கொள்ள பார்க்கவும் தான் தப்பிக்க வழி தேடி கையை கடித்துவிட்டு ஓடிவந்து விட்டேன்!” என்று அலுப்புடன் முடித்தாள்.

“ம்… சரி பாஸ்ட் ஈஸ் பாஸ்ட், எல்லாவற்றையும் விட்டுத் தள்ளு இனி நம் வாழ்க்கை புதியதாக புதிய பரிமானத்தில் பயணிக்கப் போகிறது. அதில் நாம் இருவர் மட்டும் தான், நமக்கான வாழ்க்கையை நிம்மதியாக வாழ்வோம். நல்லதொரு பள்ளியாக விசாரித்தறிந்து உன்னை அங்கே சேர்த்து விடுகிறேன் நன்றாக படி. உனக்கு எந்த ஒரு பிரச்சனை என்றாலும் தயங்காமல், தாமதப்படுத்தாமல் நீ என்னிடம் சொல்ல வேண்டும். அது தான் நீ என்னுடைய சகோதரத்துவத்தை எந்தளவிற்கு மனதார ஏற்றுக் கொண்டுள்ளாய் என்பதை எனக்கு காட்டும் அளவீடு!” என்று தங்கள் உறவின் முக்கியத்துவத்தை அவள் மனதில் ஏற்றி வைத்தான்.

சம்மதமாக தலையாட்டியவளின் தலையை மென்மையாக வருடியவன் எழுந்தவாறே, “சரி… இனிமேலாவது உன்னை பொறுப்பாக கவனித்துக் கொள்ள இந்த அண்ணன் இருக்கிறான் என நிம்மதியாக படுத்து தூங்கு!” என்று அவள் கன்னம் தட்டியவன் விலக முயல, வேகமாக அவன் கரம்பற்றி தடுத்து நிறுத்தினாள் அருந்ததி.

“என்னம்மா?”

“தாங்க்ஸ் அண்ணா!” என்றாள் பெண் விழிகள் கலங்க.

“ச்சீய் லூசு… இதற்கெதற்கு தாங்க்ஸ்? நான் ஒன்றும் இதை சமூக சேவையாக எண்ணி செய்யவில்லை. இதில் பக்காவாக என் சுயநலமும் தான் அடங்கி இருக்கிறது!” என்றான் அவன் தீவிரமான முகபாவத்துடன்.

அவள் புருவம் சுருக்க, “இந்த உலகில் எனக்கென்று யாருமில்லாத அநாதை நான் என்கிற எண்ணம் தோன்ற வாய்ப்பில்லாமல் இனி வீட்டிற்கு வந்தால் எனக்காக என் குட்டி தங்கை காத்திருப்பாள் என்கிற சந்தோஷம் தோன்றுமில்லை…” என்கவும் அருந்ததி வேகமாய் முகம் மலர்ந்தாள்.

பளிச்சென்று புன்னகைத்தவளை கண்டு மனம் நிறைய, “ஓகே குட்நைட்!” என்று முறுவலித்து விட்டு வெளியேறினான் ரிச்சர்ட்.

கடந்த சில மாதங்களாக அண்ணன் என்ற சொல்லை எண்ணி எந்தளவிற்கு மனம் கசந்தாளோ அதைவிட அதிகமாக இன்று அந்த வார்த்தை தித்திப்பை தந்தது.

“அண்ணா… ரிச்சர்ட் அண்ணா…” என தனக்கு தானே சொல்லிப் பார்த்துக் கொண்டவளுக்கு உள்ளத்தில் உற்சாகம் பீறிட்டது.

மறுநாள் காலை விடியலில் மிகுந்த புத்துணர்வோடு எழுந்தவளுக்கு இதுநாள் வரை இல்லாத மாற்றமாக மனதில் பெரும் அமைதி நிலவியது.

இதற்கெல்லாம் காரணம் அண்ணா தான் என நன்றியோடு நினைத்தவள் நிமிர்ந்து அவன் பெற்றோரின் புகைப்படத்தை நோக்கினாள்.

ஏதோ நினைத்தவளாக எழுந்து குளித்து வந்தவள் அவர்கள் படத்தின் முன் மண்டியிட்டு தன் உடன்பிறவா தமையனுக்காக பிரார்த்தனை செய்ய ஆரம்பித்தாள்.

“நான் வேண்டுவதெல்லாம் ஒன்றே ஒன்று தான் அண்ணாவை ஆரோக்கியமாகவும், நல்லபடியாகவும் வைத்து இருங்கள் தன்னால் நான் நன்றாக இருப்பேன்!” என்றாள் அருந்ததி மலர்ச்சியோடு.

கதவை திறந்து வெளியே வந்தவள், ரிச்சர்ட்டின் அறைக்கதவு இன்னும் திறக்கப்படாததை கண்டு தட்டி அழைக்கலாமா அல்லது தொந்திரவாக இருக்குமா, இப்பொழுது தானே மணி ஆறாகிறது என லேசாக தயங்கி நின்றாள்.

அவன் கேட்டுக் கொண்டது போல் உரிமையெடுத்து பழக ஆசை தான் என்றாலும், அதை முதல் நாளே செய்ய தயங்கி கீழிறங்கி தோட்டத்திற்கு சென்றாள்.

சற்று நேரம் தோட்டத்தை சுற்றி சுற்றி உலா வந்தவளுக்கு இதுவரை இல்லாத விதமாக அந்த இடமே மிக அழகாக தோன்றியது.

‘இனி உங்களை போல தான் என் வாழ்வும் அழகாக மலர்ந்திருக்கும்!’ என அங்கே பூத்திருந்த சிகப்பு ரோஜாக்களிடம் ஆசையாக கதை பேசியவளின் விழிகளில் பட்டாம்பூச்சி விழ ஆவலுடன் அதனருகில் சென்றாள்.

ம்… என்று இடையில் கை வைத்தவள், ‘இரு… உன்னை மட்டும் விட்டு விடுவேனா… இனி அறைக்குள் அடைப்பட்டுக் கிடக்காமல் உன்னை போல தான் வெளியுலகில் நான் சுதந்திரமாக பறக்கப் போகிறேன்!’ என உற்சாகமாக நடையில் இளம் துள்ளலுடன் குதித்துக் கொண்டு நடந்தாள்.

சூரியனாரின் ஆதிக்கம் அதிகரிக்கவும் அண்ணா எழுந்து விடுவார் என்று கிச்சனுக்கு விரைந்தவள் ஃப்ரிட்ஜில் இருந்து பாலை எடுத்து வைத்து அவனுக்கு காபி கலக்க வேண்டி டிகாஷன் தயாரிக்க ஆரம்பித்தாள்.

“அருந்ததி!” என்ற அழைப்புடன் ரிச்சர்ட் கதவை தட்டும் ஓசை கேட்கவும் வேகமாக வெளியே வந்தவள், மேலே பார்த்து அண்ணா என குரல் கொடுத்தாள்.

மாடியில் இருந்தவன் திரும்பி கீழே எட்டிப் பார்த்து, “ஹேய்… குட்மார்னிங்! அதற்குள் எழுந்து விட்டாயா?” என்றபடி மடமடவென்று கீழே இறங்கினான்.

“ம்… குட்மார்னிங், நான் ஐந்து மணிக்கே எழுந்து விட்டேன்!” என்று அழகாக முறுவலித்தாள்.

“என்ன ஐந்து மணிக்கேவா… உன்னை நன்றாக தூங்கு என்று தானே நான் சொன்னேன்?” என போலியாக முறைத்தான்.

“நான் என்னண்ணா செய்யட்டும்? நானும் எப்படி எப்படியோ கண்களை இறுக்க மூடி கூட முயற்சி செய்துப் பார்த்தேன், ஆனால் தூக்கம் தான் வரவில்லை!” என்றாள் அவள் பரிதாபமாக.

“ஹஹா… புது அறை என்பதாலா?”

“ஆங்… இல்லை… புது அண்ணன் கிடைத்ததால்…” என்று கண்கள் ஒளிர நகைத்தவள், அவன் ஆச்சரியத்தில் விழிகளை விரிக்கவும் வெட்கம் கொண்டு, “நான் காபி எடுத்து வருகிறேன்!” என உள்ளே ஓடினாள்.

முகமும், மனமும் ஒன்றாக மலர அவளை புன்னகையோடு பின் தொடர்ந்தவன், “சரி காபி மட்டும் கொடு, நாம் இருவரும் வெளியே சென்று சாப்பிடலாம். அப்படியே உனக்கு கொஞ்சம் ஆடைகளும், புத்தகங்களும் பர்சேஸ் செய்ய வேண்டும். வடிவு வந்தால் வீட்டு வேலைகளை மட்டும் முடித்து விட்டு கிளம்பட்டும்!” என்றபடி அவள் நீட்டிய கப்பை வாங்கி நிதானமாக பருக ஆரம்பித்தான்.

“ஆனால் அண்ணா… இப்பொழுது அதற்கு என்ன அவசரம்? உங்களுக்கு வேலை இருக்கும் இல்லை… நாம் ஞாயிற்றுக்கிழமை போகலாமே!”

“இல்லைடாம்மா… அன்று ஒரு முக்கியமான பிஸினஸ் மீட்டிங் இருக்கிறது. இன்றைக்கு கொஞ்சம் ஃபீரி தான் பார்த்துக் கொள்ளலாம் ஒன்றும் பிரச்சினை இல்லை, நீ கிளம்பு!” என்றவன் சட்டென்று நினைவு வந்தவனாக, “ஓ… உனக்கு… சரி, எல்லாம் வாங்கி விடுவோம். நான் தயாராகி வருகிறேன்!” என வேகமாக அவனது அறைக்கு சென்றான்.

சில நிமிடங்களில் வடிவும் அவள் கணவனும் வேலைக்கு வர, அவர்களிடம் தான் எப்படி சொல்வது என தயக்கம் கொண்டு மெதுவாக ஹாலுக்கு சென்றவள் சோபாவில் அமர்ந்து படிக்கின்ற பாவனையில் அங்கிருந்த அன்றைய தினசரி ஒன்றை கையில் எடுத்துக் கொண்டாள்.

அதைக் கண்டு முகத்தை சுளித்த வடிவின் கணவன், “இந்த அநாதைக்கு வந்த வாழ்வை பார்த்தாயா? வீட்டு வேலை செய்வதை விட்டு விட்டு ஜம்பமாக முதலாளிக்கு சமமாக உட்கார்ந்து பேப்பர் படிக்கிறது!” என்று அவள் காதில் கிசுகிசுத்தான்.

திரும்பி அவனை முறைத்தவள், “அவர் காதில் மட்டும் நீ சொன்னது விழுந்தால் உன் சீட்டை கிழித்து விடுவார்!” என்று எச்சரித்தவளுக்கும் உள்ளூர சற்று உறுத்த தான் செய்தது.

‘என்ன இருந்தாலும் வசதியற்ற அநாதைப்பெண் தானே… சின்ன சின்ன வேலைகள் கூடவா இவள் செய்யக் கூடாது!’ என்ற பொறாமை தோன்றியது.

தன்னை குறித்து தான் அவர்கள் தங்களுக்குள் எதையோ முணுமுணுக்கிறார்கள் என புரியவும் அதுவரை இருந்த உற்சாகம் மறைந்து அருந்ததியின் மனதில் சிறிய சஞ்சலம் தோன்றியது.

அண்ணா என்னை தங்கையாக ஏற்றுக்கொண்டது எங்கள் இருவரையும் பொறுத்தவரை மிகவும் மகிழ்ச்சியான ஏற்புடைய விஷயம் தான். ஆனால்… இந்த உலகம்… இந்த சமூகம்… இவர்கள் என்ன சொல்வார்கள்? எங்கள் உறவை அங்கீகரிப்பார்களா? என்கிற அச்சம் மெல்ல எட்டிப் பார்த்தது.

தனக்குள் ஆலோசனையில் இறங்கி இருந்தவள் சுற்றுப்புறத்தை கவனிக்கவில்லை. அதற்குள் வடிவும், கந்தனும் வழக்கமாக தாங்கள் செய்யும் வேலைகளை மடமடவென்று கவனிக்க ஆரம்பித்திருந்தனர்.

வெளியே செல்தற்காக தயாராகி கிளம்பி கீழே வந்த ரிச்சர்ட் வடிவு சமையல் அறையில் உருட்டிக் கொண்டிருப்பதை கண்டு குழம்பி அருந்ததியிடம் வந்தான்.

“என்னம்மா வடிவிடம் சமைக்க வேண்டாம் என நீ சொல்லவில்லையா?”

“ஆங்… அண்ணா… அது…” என எழுந்தவள் திருதிருவென்று விழித்தாள்.

சற்று முன் இருந்த பொலிவு மறைந்து அவள் முகத்தில் இருள் படர்ந்திருப்பதை கவனித்தவன் என்னவென்று யோசித்தான்.

“அதற்குள் என்னவாயிற்று டல்லாக இருக்கிறாய்? வடிவு ஏதாவது சொன்னார்களா?”

“ஐயோ… இல்லைண்ணா, நான் தான் எதுவும் சொல்லவில்லை!” என்று விழிகளை தாழ்த்தினாள் பெண்.

“ஏன்?” என்றான் புரியாமல்.

“நான்… நான் எப்படி? நான் சொன்னால் அவர்கள் கேட்பார்களா?” என்றாள் தயக்கத்துடன்.

புருவங்கள் முடிச்சியிட அவள் முகத்தை சற்றே கூர்ந்தவன் எதையோ யோசித்து விட்டு, வா என அவள் கரம்பற்றி அழைத்து சென்றான்.

நட்ட நடு ஹாலில் அவளை நிற்க வைத்துவிட்டு, “வடிவு!” என சத்தமாக அழைத்தான்.

சார்… என ஒடி வந்தவளிடம் திரும்பியவன், “இப்பொழுதே போய் உங்கள் கணவரையும், கேட்டில் இருக்கின்ற செக்யூரிட்டியையும் இங்கே அழைத்து வாருங்கள்!” என்று உத்திரவிட்டான்.

எதற்காக என்று குழம்பியவள், அருகில் கைகளை பிசைந்துக் கொண்டு நிற்கும் சிறுமியை ஒரு பார்வை பார்த்து விட்டு விரைந்து வெளியே சென்றாள்.

தன்னெதிரே குழுமியிருந்த மூவரையும் தீர்க்கமாக பார்த்தவன் அருந்ததியின் கரம்பற்றி தன்னருகில் இழுத்து நிறுத்தி, “இன்று முதல் இவள் என் தங்கை, ஒரு தாய் வயிற்றில் பிறக்கவில்லை என்றாலும் இவள் எனக்கு உடன்பிறந்த தங்கை தான். இந்த வீட்டில் எனக்கிருக்கின்ற அத்தனை அதிகாரமும், உரிமையும் இவளுக்கும் இருக்கிறது. புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன், இனி இங்கிருப்பவர்கள் இவளிடம் எந்தவொரு வேலையையும் ஏவக் கூடாது, அதே நேரம் இவள் கேட்கும் வசதிகளை எந்தக் காரணம் கொண்டும் மறுக்காமல் உடனடியாக செய்து தர வேண்டும். அதைவிட முக்கியம்…” என்றபடி செக்யூரிட்டியிடம் திரும்பியவன், “இவளின் பாதுகாப்பில் எப்பொழுதும் எந்த ஒரு காம்ப்ரமைஸும் இருக்க கூடாது. இந்த வீட்டிற்கு தரும் பாதுகாப்பை விட ஒரு படி மேலாக தான் இவளுக்கு வழங்க வேண்டும். என்னுடைய உத்திரவின்றி ஒரு ஈ, காகம் கூட இந்த வீட்டிற்குள் நுழையக் கூடாது. அன்டர்ஸ்டார்ன்ட்?” என்றான் அழுத்தமாக.

“ஷ்யூர் சார்!” என்றவன் தலைவணங்க, “ஓகே… யூ கேன் கோ!” என்று அவனை வெளியேற்றியவன், பிரமிப்பா அல்லது பொருமலா என இனம் காண முடியாத பார்வை வீச்சொன்றை அருந்ததியின் புறம் செலுத்திக் கொண்டிருந்த வடிவு தம்பதியரிடம் திரும்பினான் ரிச்சர்ட்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *